திருமதி
ராதா பாலு
அவர்கள்
வலைத்தளங்கள்:
” எண்ணத்தின் வண்ணங்கள் ”
” எண்ணத்தின் வண்ணங்கள் ”
http://radhabaloo.blogspot.com/
“அறுசுவைக் களஞ்சியம் ”
http://arusuvaikkalanjiyam.blogspot.com/
“ என் மன ஊஞ்சலில் “
http://enmanaoonjalil.blogspot.com/
மனம் திறந்து பேசுகிறார் !
போட்டியின் பொதுவான சிறப்பு அம்சங்கள் :
என்ன சொல்ல? எப்படிச் சொல்ல? எதைச் சொல்ல? சுவையான, புதுமையான, சுவாரசியமான போட்டி இது.
இதுவரை கதைகளை மட்டுமே படித்ததுண்டு: படித்த மறுகணம் அதைப் பற்றி மறந்ததும் உண்டு. என்னைப் போன்றே கதை படிக்கும் ஆர்வமுள்ளவர்களுடன் பேசும்போது அந்தக் கதையைப் பற்றி 'கதாநாயகி இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், முடிவு இப்படி இருந்திருக்கலாம்' என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை ஆதியோடு அந்தமாக அலசி ஆராய்ந்து அதிலுள்ள கதாபாத்திரங்களைப் பற்றியும், அவர்களின் நடைமுறை பற்றியும் விஸ்தாரமாக யோசித்து எழுதி, அதற்கு பரிசும் பெற்ற அனுபவம் இருக்கே...அது ரொம்ப புதுசு.
என்னைப் போன்ற கத்துக் குட்டிகளான புதிய பதிவர்களுக்கும் ஆர்வத்தை உண்டாக்கி தன் தளத்தின் பக்கம் இழுக்கும் திறமை பதிவரின் மிகச் சிறப்பான அம்சம்தானே! அவரது கதைகள் அனைவராலும் படிக்கப் படுவதோடு, அதற்கு விமரிசனம் எழுதுபவருக்கும் ஒரு வித்யாசமான எழுத்து அனுபவம் ஏற்படுகிறது.
இதில் நீங்கள் காட்டும் ஆர்வம் என்னை பிரமிக்க வைக்கிறது. பணிஓய்வு பெற்ற பின்பு வாய்க்கு ருசியாக சாப்பிட்டோமா, நன்றாக தூங்கி ரெஸ்ட் எடுத்தோமா, தொலைக்காட்சி மெகாசீரியல்களைப் பார்த்துக்கொண்டு ஜாலியாக என்ஜாய் பண்ணினோமா என்றில்லாமல் இப்படி ஒரு பெரிய பத்து மாத ப்ராஜெக்ட்டை எடுத்துக் கொண்டு அதில் எந்தத் தொய்வும், தவறும் இல்லாமல் நடத்தும் உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை...இல்லவே இல்லை!
உங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, கண் துஞ்சாது, பசி நோக்காது கடமையே கண்ணாக உழைக்கும் உங்களுக்கு ஒரு சல்யூட்! உங்கள் கதைகள் பலராலும் படிக்கப்படும், உங்கள் தளத்திற்கு வருகை புரிவோரின் எண்ணிக்கை உயரும் என்பதெல்லாம் விட இதற்காக திட்டமிட்டு, சிறப்பான ஒரு நடுவரைத் தேர்ந்தெடுத்து, அதையும் இரகசியமாக வைத்து, விமரிசனம் எழுதுவோருக்கு பரிசு கொடுப்பதுடன், நடுவரைக் கண்டு பிடிப்பவருக்கும் பரிசு...நீதிபதி தேர்ந்தெடுத்த கதைகளை சரியாக எழுதியவர்களுக்கு பரிசு....இது போதாதென்று ஒரு பெரிய விழா ....ஏன் கோபு சார், இதற்கென்று ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து விட்டீர்களோ?
ஆமாம்...நீங்கள் தூங்குவது உண்டா? இல்லையா? இத்தனை வேலைகளையும் எந்தத் தவறும் நேராமல் தனி ஒருவராக செய்து முடிக்கும் திறன் கொண்ட நீங்கள் ஒரு மாமனிதர் என்பதில் சந்தேகமே இல்லை.
தங்கள் கதைகள் பெரும்பாலானவர்களால் படிக்கப் பட வேண்டும் என்பது தங்கள் நோக்கமாக இருக்கலாம். ஒரு கதையைப் புத்தகத்தில் படித்தால் அடுத்த நிமிடம் மறந்து விடுவோம். இந்த விமரிசனப் போட்டியால் அந்தக் கதை பலராலும், பலமுறை படிக்கப்பட்டு ஒவ்வொருவரின் எண்ணத்திற்கும், அணுகுமுறைக்கும் தக்கவாறு விமரிசிக்கப் படுகிறது. (முதிர்ந்த பார்வையில் ஒரு விமரிசகருக்கு அந்த முதியோர் செய்தது சரி என்று தோன்ற, அடுத்தவருக்கு அது சரியில்லை எனத் தோன்றுகிறதே.)
உங்கள் கதைகள் பிறரால் படிக்கப்பட்டு, வித்யாசமாக விமரிசிக்கப் படுவதை தாங்கள் படித்து, அனுபவித்து ரசிக்க ஒரு நல்ல வாய்ப்பு.
பதிவுலகத்தையே உங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த புதுமையான, மிகச் சிறப்பான போட்டி இது. பல விமரிசனதாரர்களை உருவாக்கிய தங்களை பதிவுலக பிரம்மா எனலாம்!
அனைவரையும் உற்சாகப் படுத்தி எழுதத் தூண்டும் தங்களின் ஊக்குவிப்பை பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்.
இதில் என்னைக் கவர்ந்த அம்சங்கள்
உங்களின் கதைகள் பெரும்பாலும் மனித மனத்தின் பிரதிபலிப்புகளாக, மூட நம்பிக்கைகளை களைந்து எப்படி மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற சிறந்த கருத்துக்களை எடுத்துச் சொல்வதாக இருப்பதை அறியமுடிகிறது. ஒரு வாலிப வயது இளைஞன், திருமணத்திற்கு காத்திருக்கும் இளம்பெண், முதியவர், அலுவலக பணியாளர், சகுனம் பார்க்கும் பாட்டி....இப்படி ஒவ்வொருவரின் உள்ளத்திற்குள்ளும் சென்று வாழ்ந்து பார்த்து எழுதுவீர்களோ என்று நான் பிரமிப்பதுண்டு.
ஒரு சின்னப் புள்ளியான கருத்து....அதை வட்ட வடிவமாக கோணலில்லாத, பிசிறில்லாத அழகிய கோலமாக்கி படிப்பவரை மயங்க வைக்கும் செப்பிடு வித்தை கடவுள் தங்களுக்கு கொடுத்த வரம் போலும்!
பல கதைகள் இன்னும் மனதில் தங்கியிருக்கிறது. அத்துடன் அவற்றிற்கான ஆடும், பாடும், சிரிக்கும் படங்கள்! பல சமயங்களில் நான் கதை படிப்பதை நிறுத்திவிட்டு, தங்களின் படக் காட்சிகளை ரசிப்பதுண்டு!
புத்தகங்களில் கதைகளைப் படிக்கும்போது அதில் வரும் ஏதோ ஒரு சம்பவத்திற்கான படம் மட்டுமே இடம் பெற்றிருக்கும். ஆனால் தங்கள் கதைகளைப் 'படம் பார்த்தும் கதை சொல்'லலாம்! உயிரோட்டமான படங்களைப் போட்டு, கதைக்கே ஒரு உணர்வும், உயிரும் கொடுத்து விடுகிறீர்கள்! அவை பேசத்தான் இல்லை!
ஜனவரி மாதம் எதேச்சையாக தங்கள் தளத்தைப் பார்த்தபோதுதான் இந்தப் போட்டி பற்றிப் பார்த்தேன்.
நீங்கள் யார் என்று பார்த்த போது, 'அட...நம்ம ஊரு' என்று தெரிந்தது.
'சரி..விமரிசனம் எழுதிதான் பார்ப்போமே' என்ற ஆசை. (பரிசு வேற உண்டே!) இரண்டு, மூன்று கதைகளுக்கு பிறகு பரிசு அறிவிக்கப்பட 'ஓ' என்று குதூகலித்தது மனசு!
அதன்பின் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை காலை கதையைப் படித்த பிறகுதான் வேலையே ஓடும், மனசுக்குள் கதைக்கு எப்படி விமரிசனம் எழுதலாம் என்ற எண்ணத்துடன்!
என் ஐ-பேடில் கதையை ஒப்பன் செய்து கொண்டு, என் லேப்-டாப்பில் விமரிசனம் எழுதுவேன்! என் மகனும், மருமகளும் கூட என்னை கேலி செய்வார்கள் 'டெக் மம்மி' என்று!
என்ன செய்வது...இந்த வருடம் முழுதும் எனக்கு தொடர் பயணங்கள் இருந்ததால் எல்லா கதைகளுக்கும் விமரிசனம் எழுத முடியவில்லை. நீங்கள் கொடுத்த ஊக்கமும், உற்சாகமும்தான் என்னை எல்லாவற்றையும் தூரத் தள்ளிவிட்டு எழுத வைத்தது.
நடுவர் அவர்களின் தீர்ப்பு மிக சரியாக இருந்தது என்பதே என் கணிப்பு. பரிசு பெற்ற விமரிசனங்களைப் படித்தபோது அது நன்றாகவே தெரிந்தது. மேலும் அவ்வப்போது அவர் வழங்கிய அறிவுரைகளும், சிறப்பான விமரிசனம் எழுத உதவியது என்பதையும் மறுக்க முடியாது. நடுவர் விமரிசனம் எழுதுபவர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்த்திருக்கிறார் என்பது அவர் 'உண்மை சற்றே வெண்மை' கதைக்கு எழுதிய பின்னூட்டத்திலிருந்து புரிகிறது. இதோ அவற்றில் சில கீழே காட்டியுள்ளேன்:
//வழக்கம் போல 'எங்கோ படித்தது' விமரிசனக் குறிப்புகள் அற்புதம். இந்தப் பகுதிக்கு அந்த குறிப்புகள் ஓர் இலக்கிய அந்தஸ்த்தை கொடுப்பதும் தெரிகிறது. இன்னொன்றும் தெரிகிறது. பரிசு பெறும் விமரிசனக் கட்டுரையாளர்கள் இந்த குறிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மாதிரியும் தெரிகிறது.//
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல எப்படி விமரிசனம் எழுத வேண்டும் என்பதைக் குறிப்பாகக் கூறிய இவர்தான் நடுவர் என்று அப்பவே தெரியாமல் போச்சே!
//நடுவரின் கண்ணோட்டம் ஒரு சிக்கலான விஷயம். இந்த போட்டிக்கு 'ஒன் மேன் ஜட்ஜ்' மாதிரி ஒரே ஒருத்தர் நடுவராக இருப்பதால் எளிதில் அவர் கண்ணோட்டத்தையும் கொஞ்சம் சிரமப்பட்டால் கண்டு கொள்ளலாம் போலிருக்கு. அதனாலேயே அவரும் தன் அளவுகோல்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவும் தெரிகிறது; இது வரை அவர் தேர்ந்தெடுத்த விமரிசனக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்ததில் தெரிந்தது.//
ஆஹா!நடுவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் எவ்வளவு அழகாக விமரிசனங்களையே விமரிசித்து விட்டார்!
//இனி வர வர பரிசு பெற்றவர்களே மீண்டும் மீண்டும் பரிசு பெற்றாலும் அவர்களின் எழுத்துக்களிலேயே மெருகு கூடியிருப்பதும் தெரிகிறது. அவர்களும் ஒரே மாதிரி எழுதாமல் மாற்றி மாற்றி எழுதினால் விதவிதமான சோதனைகளை மேற்கொண்டால் இன்னும் சிறப்பாகி விடும்.//
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற சந்தோஷம்! அத்துடன் இன்னும் வித்யாசமாக எழுத வேண்டும் என்ற பொறுப்புணர்வு.
அவரது துலாக்கோல் பாரபட்சமாக செயல்படாது என்பது உறுதியாகத் தெரிகிறது.
-=-=-=-=-
-=-=-=-=-
பரிசுத் தொகையில் கிடைக்கும் திருப்தி பற்றி !
கரும்பு தின்னக் கூலி கொடுத்தால் கசக்குமா என்ன? அருமையான கதைகளையும் படிக்க வைத்து, என் மூளைக்கு கொஞ்சம் வேலையைக் கொடுத்து நான் எழுதிய விமரிசனங்களுக்கு பரிசுப் பணமும் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? நான் புத்தகங்களில் எழுதும் கட்டுரைகளுக்கு கிடைக்கும் பரிசுகளைவிட இந்தப் பரிசு எனக்கு மிக அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
அது மட்டுமா? போனஸ் பரிசு... தொடர் வெற்றிக்கு ஹேட்-ட்ரிக் பரிசு... சிறப்பு விழாவில் பரிசு... கொடுத்துக் கொண்டே இருப்பதில் உங்களுக்கு ஆசை அதிகமோ! இனி உங்களைப் 'பதிவுலகக் கர்ணன்' என்றும் சொல்லலாம்!
பரிசுத் தொகையைக் கணக்கிட்டு அவ்வப்போது அனுப்பி வைக்கும் முறைபற்றி:
நூறு சதவிகிதம் திருப்தி சார். ஒவ்வொருவருக்கும் தவறில்லாமல் கணக்கு பார்த்து, அவரவருக்கான தொகையை உடனுக்குடன் அனுப்பும் தங்கள் பொறுப்புணர்வு என்னை வியக்க வைக்கிறது. மொத்தத்தில் உங்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இந்தக் கதைகள், விமரிசனங்கள், கணக்குகள் பற்றி பிட்டுப் பிட்டு வைப்பீர்கள் என்று தோன்றுகிறது. தாங்கள் தரும் பரிசுப் பணத்தை பெறும்போது அக்கால மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்கிழி தந்தது போன்ற மனமகிழ்ச்சியை அனுபவிக்கிறது என் மனம்!
எனக்கு இதில் இதுவரை ஏற்பட்டுள்ள ஆர்வம் + அனுபவங்கள் :
ஜனவரி மாதம் நான் ஜெர்மனிக்கு என் மகன் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் பல தமிழ் இதழ்களில் பிரசுரமான என் கதை, கட்டுரைகளை என் ப்ளாகில் தொகுத்துக் கொண்டிருந்த போது மற்ற தளங்களை படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் தங்களின் தளம் பற்றி அறிந்தேன்.
அதுவரை தங்களின் எந்தக் கதையையும் நீங்கள் போட்டிக்கு போடும் முன்பு நான் படித்ததில்லை. அதன் பிறகே என் எழுத்தார்வம் தங்கள் கதைகளுக்கு விமரிசனம் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
முதலில் எழுதிய கதைகள் பரிசுக்கு தேர்வாகாமல் போக, நான் எழுதிய முறையைச் சற்று மாற்றி எழுத ஆரம்பித்தேன். இம்முறையும் பரிசு கிடைக்காவிட்டால் இனி இதில் பங்கு பெற வேண்டாம் என முடிவு எடுத்தபோதுதான், ஏழாவது கதையான 'ஆப்பிள் கன்னங்களும்.... அபூர்வ எண்ணங்களும்' என்ற கதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததை அறிந்து நான் வானத்தில் பறந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதன்பின் தொடர்ந்து சில வெற்றிகள்...அடிக்கடி சென்ற பயணங்களால் என்னால் தொடர்ச்சியாக எழுத முடியாத நிலை. பல நேரங்களில் என் விமரிசனம் வியாழன் இரவு 7.30 மணிக்குதான் தங்களை வந்தடையும் என்பது தாங்கள் அறிந்ததே! இருந்தும் அவ்வப்போது கிடைத்த நேரத்தில் நான் எழுதியவற்றிற்கு எனக்குக் கிடைத்த சில வெற்றிகள் எனக்கு ஜாக்பாட் என்றுதான் சொல்வேன். விமரிசனம் தேர்வாகாதபோது இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட அடுத்த கதையைப் பற்றி மேலும் எப்படி வித்யாசமாக எழுதலாம் என்று சிந்திப்பேன்.
வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளில்லை. இதில் அதிருப்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்படியோ இந்த பதிவுலகில் எதுவும் தெரியாத புதுமுகமான எனக்கும் இந்த போட்டியில் சில பரிசுகள் கிடைத்ததை மிகப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் எண்ணுகிறேன்.
ஒரு புகழ் பெற்ற, எழுத்தாளராகிய, பதிவுலகப் பிதாமகராகிய தாங்கள் நடத்திய போட்டியில் கலந்து கொண்டதே நான் செய்த பாக்கியம்.