என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 9 நவம்பர், 2011

ஏமாற்றாதே ! ... ஏமாறாதே !!











 ஏமாற்றாதே ! ... ஏமாறாதே ! 

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



காலை நேரம். தன் தள்ளாத வயதில், அந்தக்கிழவி தேங்காய் வியாபாரம் செய்ய, அந்தத் தெருவோரமாக, சாக்குப்பையை விரித்து, காய்களை சைஸ் வாரியாக அடுக்கி முடித்தாள்.  



வெய்யில் ஏறும் முன்பு காய்களை விற்றுவிட்டால் தேவலாம். வெய்யில் ஏற ஏற உடம்பில் ஒருவித படபடப்பு ஏற்பட்டு, படுத்துத்தூங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.



அந்த அரசமர பிள்ளையார் கோயில் அருகிலுள்ள பொதுக்குழாயில் குடிநீர் அருந்திவிட்டு, சற்றுநேரம் அந்தமரத்தடி மேடை நிழலிலேயே தலையை சாய்த்து விட்டு, பொழுது சாய்ந்ததும் வெய்யில்தாழ வீட்டுக்குச் சென்று விடுவது அவள் வழக்கம்.



இளம் வயதில் ஒண்டியாகவே நூற்று ஐம்பது காய்கள் வரை உள்ள பெரிய மூட்டையை, தலையில் சும்மாடு வைத்து சுமந்து வந்தவள் தான். இன்று வெறும் ஐம்பது காய்களைக்கூட தூக்க முடியாதபடி உடம்பு பலகீனமாகப் போய் விட்டது.



ஒரு காய் விற்றால் ஐம்பது காசு முதல் ஒன்னரை ரூபாய் வரை இலாபம் கிடைக்கும். பேரம் பேசுபவர்களின் சாமர்த்தியத்தைப் பொருத்து லாபம் கூடும் அல்லது குறையும். ஏதோ வயசான காலத்தில் தன்னால் முடிந்தவரை உழைத்து குடும்பத்திற்கு தன்னால் ஆன பண உதவி செய்யலாமே என்று நினைப்பவள்.



வரவர கண் பார்வையும் மங்கி வருகிறது. கணக்கு வழக்கும் புரிபடாமல் குழப்பம் ஏற்படுகிறது. அழுக்கு நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, எண்ணெயில் ஊறி பிசுக்கு ஏறிய நோட்டு பிரச்சனைகள் மட்டுமின்றி, இந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்து தொலைப்பதிலும் அந்தக் கிழவிக்கு மிகப்பெரிய தொல்லை.



“சாமீ .... வாங்க ... தேங்காய் வாங்கிட்டுப்போங்க” குரல் கொடுத்தாள்.



“தேங்காய் என்ன விலைம்மா?” வந்தவர் கேட்டார்.



“வாங்க சாமீ .... எடுத்துட்டுப்போங்க .... எவ்வளவு காய் வேணும்?”  



“முதலிலே காய் என்ன விலைன்னு சொல்லும்மா, நீ சொல்லும் விலையை வைத்துத்தான், நான் உங்கிட்ட தேங்காய் வாங்கலாமா வேண்டாமான்னு முடிவே செய்யணும்” என்றார்.



“பெரிய காய் ஏழு ரூபாய் சாமீ; சின்னக்காய் ஆறு ரூபாய்” என்றாள் கிழவி.



“விலையைச் சொல்லிக்கொடுத்தால் ஒரு பத்து பன்னிரெண்டு காய் எடுத்துக்கொள்வேன்” என்றார்.



“பன்னிரெண்டு காயாவே எடுத்துக்கோ சாமீ; மொத்தப் பணத்திலே ஒரு ரெண்டு ரூபாய் குறைச்சுக்கொடு சாமீ” என்றாள்.



“பெரியகாய் பன்னிரெண்டுக்கு எழுபது ரூபாய் வாங்கிக்கோ” என்றார்.



“கட்டாது சாமீ. ஒரு காய் விற்றால் நாலணா [25 பைசா] தான் கிடைக்கும்” என்றாள். 



அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, “மீதிப்பணம் கொடு” என்றார் அவசரமாக.



“ஆறே முக்கால் [Rs. 6.75 P] ரூபாய்ன்னா பன்னிரெண்டு காய்களுக்கு எவ்வளவு சாமீ ஆச்சு?” கிழவி கேட்டாள்.



“எண்பத்து ஒரு ரூபாய் ஆகுது. அவ்வளவெல்லாம் தர முடியாது. முடிவா ஆறரை ரூபாய்ன்னு போட்டுக்கோ. பன்னிரெண்டு காய்க்கு எழுபத்தெட்டு ரூபாய் எடுத்துண்டு, மீதி இருபத்திரண்டு ரூபாயைக்கொடு, நாழியாச்சு” என்றார். 



அவளும் சற்று நேரம் மனக்கணக்குப்போட்டு குழம்பி விட்டு, அவரிடம் இருபத்திரெண்டு ரூபாயைக் கொடுத்து விட்டு, ”கணக்கு சரியாப்போச்சா, சாமீ?” என்று ஒரு சந்தேகமும் கேட்டு விட்டு, அவர் கொடுத்த நூறு ரூபாய்த் தாளைப் பிரித்துப்பார்த்து விட்டு, மீதித்தேங்காய்களின் மேல், அந்த ரூபாய் நோட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, கண்ணில் ஒத்திக்கொண்டு, ”முதல் வியாபாரம் சாமீ” என்று சொல்லி விட்டு, தன் சுருக்குப்பையில் பணத்தைப்போட்டு இடுப்பில் சொருகிக்கொண்டாள்.



இது போன்ற டிப்டாப் ஆசாமிகளில் சிலர் மிகவும் அல்பமாக இருப்பார்கள். வண்டியில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பெரிய செருப்புக்கடைக்குப் போவார்கள். காலுக்குப் புத்தம் புதிய ஷூ வாங்குவார்கள். அதில் போட்டுள்ள விலையான ரூபாய் 2199.95 P வுடன் ஐந்து பைசா சேர்த்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாயாகக் கொடுத்து விட்டு, திருடனுக்குத் தேள் கொட்டியது போல, ஓசைப்படாமல் வருவார்கள். அங்கு பேரம் பேச மாட்டார்கள். பேசினாலும் ஒரு ரூபாய் கூட குறைத்து வாங்க முடியாது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.




அது போலவே பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. தப்பித்தவறி பேரம் பேசுபவர்களை ஒரு மாதிரியாக பட்டிக்காட்டான் என்பது போலப் பார்த்து பரிகாசம் செய்வார்கள்.



தெருவோரம் காய்கறி வியாபாரம் செய்யும், அதுவும் ஒருசில வயதானவர்களிடம் தான், பேரம் பேசுவார்கள், விலையைக் குறைப்பார்கள், அசந்தால் ஏதாவது ஒன்றை காசு கொடுக்காமல் கடத்தியும் வந்து விடுவார்கள். அதில் ஒரு அல்ப ஆசை இவர்களுக்கு.  




கீரை வகைகள், காய்கறிகள், கருவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் முதலியன விற்கும் தெருவோர ஏழை மற்றும் வயதான வியாபாரிகளிடம் தான் இவர்கள் பாச்சா பலிக்கும்.




அவர்களும் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள். 




நாலு அல்லது ஐந்து பேர்கள் உள்ள சிறிய குடும்பத்திற்கே காய்கறி வாங்க தினமும் 60 முதல் 100 ரூபாய் வரை தேவைப்படுகிறது. குழம்புத்தானுக்கு ஐந்து அல்லது ஆறு முருங்கைக்காய் வாங்கினாலே, அதற்கு மட்டுமே 15 அல்லது 20 ரூபாய் தேவைப்படுகிறது. என்ன செய்வது? எல்லாப்பொருட்களின் விலைகளுமே அடிக்கடி ஏறித்தான் வருகிறது.  




சொல்லப்போனால் இந்த காய்கறிகள் மட்டுமே, ஷேர் மார்க்கெட் போலவே,  சில சமயங்களில் ஏறினாலும் பலசமயங்களில் கிடுகிடுவென்று இறங்கி விடுவதும் உண்டு. விளைச்சல் அதிகமானால், வேறு வழியில்லாமல் அவற்றின் விலைகள் போட்டாபோட்டியில் குறைக்கப்படுவது உண்டு. விற்பனையாகாமல் தேங்கிவிட்டால் அழுகிவிடும் அபாயமும் உண்டு.  மற்ற பொருட்கள் அப்படியில்லை; ஏறினால் ஏறினது தான். இறங்கவே இறங்காது.




பார்க்க மனதிற்கு நிறைவாகவும்,காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 




ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்கும். பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார், அந்த வியாபாரியும். 





இன்று இந்தக்கிழவியிடம் தேங்காய் வாங்கியவர் ஒரு வேண்டுதலை நிறைவேற்றத்தான், அதுவும் கடவுளுக்காகவே வாங்கியுள்ளார்.  அந்த மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையடிவாரத்தில் உள்ள கீழ்பிள்ளையாருக்கு ஒன்றும், மலையைச்சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் உள்ள மற்ற பத்து பிள்ளையார்களுக்கு ஒவ்வொன்றும் என மொத்தம் 12 சதிர் தேங்காய்கள் அடிப்பதாக வேண்டுதல் செய்து கொண்டுள்ளார்.   



சதிர் தேங்காய் உடைக்கும் அவருடன் ஏழைச்சிறுவர்கள் ஒரு கும்பலாகப் போய், உடைபட்டுச் சிதறும் சதிர் தேங்காய்களை பொறுக்குவதில் தங்களுக்குள் முண்டியடித்து வந்தனர்.



கிழவியிடம் வாங்கிய அனைத்துக் காய்களும் மிகவும் அருமையாகவும்,  பளீரென்று வெளுப்பாகவும், நல்ல முற்றிய காய்களாகவும், தூள்தூளாக உடைந்து சிதறியதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.



அவரின் நெடுநாள் பிரார்த்தனை இன்று தான் ஒருவழியாக நிறைவேறியது. இந்தப்பிள்ளையார்களுக்கு சதிர் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு விளையாட்டு போல 10 வருஷங்கள் ஆகிவிட்டன.  திருச்சியிலுள்ள அந்த மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இண்டர்வ்யூவுக்கு வந்த போது வேண்டிக்கொண்டது.  



பிறகு அவருக்கு வேலை கிடைத்தும் அவசரமாக போபாலில் போய் வேலைக்குச் சேர வேண்டும் என்று உத்தரவு வந்ததால், வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை உடனே நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. 




இப்போது அவர் மீண்டும் திருச்சிக்கே பணி மாற்றத்தில் வந்தாகி விட்டது. இனியும் பிள்ளையாருக்கான பிரார்த்தனையை தாமதிக்கக்கூடாது என்று, இன்று பிரார்த்தனையை நிறைவேற்றக் கிளம்பி விட்டார்.   



’பத்து வருஷங்கள் முன்பே இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி இருக்கலாம். அப்போது தேங்காய் விலையும் மிகவும் மலிவு. பன்னிரெண்டு காய்களையும் சேர்த்து பன்னிரெண்டு ரூபாய்க்கோ அல்லது பதினெட்டு ரூபாய்க்கோ வாங்கி இருக்கலாம்;



இன்று சுளையாக எழுபத்தெட்டு ரூபாய்களை செலவழிக்க நேரிட்டு விட்டது. அநியாயமாக இப்படி ஒரு தேங்காயையே ஆறரை ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது; 



நான் புத்திசாலித்தனமாக அந்தக்கிழவியிடம் சுட்டு வந்த ஒரு காய் மட்டும் தான் லாபம். அதையும் சேர்த்துக் சராசரியாகக் கணக்குப் பார்த்தாலும், ஒரு காய் ஒன்று [78/13 = 6]ஆறு ரூபாய் வீதம் அடக்கம் ஆகிறது என்று, கடவுளுக்கு வேண்டிக்கொண்டதற்கு பலவிதமான லாப் நஷ்டக் கணக்குகள் பார்த்து, 12 காய்களையும் சதிர் காய்களாக அடித்து விட்டு, மீதியிருந்த ஒரே ஒரு தேங்காயுடன் வீட்டை அடைந்து, அதைத் தன் மனைவியிடம் கொடுத்தார்.



அதிகாலையிலேயே குளித்துவிட்டுப் புறப்பட்டுப் போனவர்; பசியோடு வருவாரே என்று அவசர அவசரமாக சமையலை முடித்து விட்ட அவரின் அன்பு மனைவி, தேங்காயை உடைத்துத் துருவிப் போட்டு விட்டால், சூடாக சாப்பாடு பரிமாறி விடலாம் என்று தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டாள்.



தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெய்யிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ள தன் கணவருக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டாள்.



”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது!! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பித்தாள்.



இதற்கிடையில் ஆசையுடன் வாயில் தான் ஊற்றிக்கொண்ட அழுகிய இளநீரை துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்ட அந்த ஆளு, ஒருவழியாக வாஷ்பேசின் வரை ஓடிச்சென்று துப்பிவிட்டு வாய் அலம்பிக்கொண்டு வந்தார்.



மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.




அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார்.   


-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-












10. "மகம்" நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் 
திருக்கோயில் 
[மாணிக்கவல்லி + 
மரகதவல்லி 
அம்மன்கள்] 

இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து 
நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., 
தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு 
உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., 
மினி பஸ்சில் சென்றால் கோயிலை
அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு .







10/27

34 கருத்துகள்:

  1. நல்ல கதை. மீள் பதிவு என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதை.அருமையான நடை.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. மனம் நிறைந்த நட்சத்திர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. முன்பே படித்த நினைவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் படித்தேன் ரசித்தேன் .

    பதிலளிநீக்கு
  6. //இந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் இரண்டுமே ஒரே மாதிரியாக இருந்து தொலைப்பதிலும் அந்தக் கிழவிக்கு மிகப்பெரிய தொல்லை.//
    இப்போது இன்னும் சிக்கலாகிவிட்டது. 50பைசா முதல் 5 ரூபாய்வரை ஒரே மாதிருயிருக்கின்றன.

    //2199.95 P வுடன் ஐந்து பைசா சேர்த்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாயாகக் கொடுத்து விட்டு,// இது சகஜமான விசயமாகிவிட்டது சார்.

    கைமேல் பலன் கிட்டிவிட்டது. நல்ல முடிவு சார். நன்றி

    பதிலளிநீக்கு
  7. மீண்டும் படிக்கத் தூண்டும் மீள்பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  8. அய்யா... ஒரு நாளைக்கு எத்தனை பதிவு... முடியல...

    பதிலளிநீக்கு
  9. மீண்டும் படித்து ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார்.

    அருமையான படிப்பினை.

    பதிலளிநீக்கு
  11. 10. "மகம்" நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
    சென்று வழிபட வேண்டிய கோயில்:
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர்
    திருக்கோயில்
    [மாணிக்கவல்லி +
    மரகதவல்லி
    அம்மன்கள்] /

    பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மீள்பதிவென்றாலும் மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப வாஸ்தவமான உண்மை. இதன் மூலம் இரண்டு பேரானும், ஏழைபாழைகளிடம் பேரம் பேசுவது குறைந்ததால் நீங்கள் எழுதிய பலன் கைமேல். நல்ல கதை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. கதையாசிரியரின் கைவண்ணத்தில் ஓவியம் மிளிர்கிறது.... அழகாக இருக்கிறது.... ஓவியம் வரைவதிலும் நம் கதையாசிரியர் எக்ஸ்பர்ட் என்பதை இதில் இருந்தே அறியமுடிகிறது. அதற்கு தனியாக என் மனம் கனிந்த அன்புவாழ்த்துகள் அண்ணா....( எல்லா துறைகளிலும் கால் பதிக்கும் திறமைசாலி என்பதில் எனக்கு மட்டற்ற சந்தோஷம் அண்ணா)

    கதையின் தலைப்பே அசத்தல்.... தலைப்பே நமக்கு பாடம் சொல்வது போல் எழுதி இருக்கிறார் கதையாசிரியர். ஏமாற்றாதே... நீ ஏமாற்றினால் ஏமாறும் சந்தர்ப்பத்திற்கு ஆளாவாய். அதனால் ஏமாற்றாதே... ஏமாற்றினால் ஏமாந்து போவாய் என்ற பாடத்துடன் கதை ஆரம்பிக்கிறது....

    ஏமாற்றுவோம் யாரிடம்? நம்மை விட வலிமை குன்றியவர்களிடம் நம் கைங்கர்யத்தைக்காட்டுவோம்... ஏமாறுவோம் எப்படி.?? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அதாவது திருடனுக்கு தேள் கொட்டினாற்போல.... ஏமாந்ததை வெளியில் சொன்னால் அதுவும் கேவலம் தானே நமக்கு... அதனால் நைசா வாய்ப்பொத்திக்கொண்டு அமைதியாக இருந்துவிடுவோம்.

    இந்த கதையில் ஹீரோ இல்லை... ஹீரோயின் தான். ஏழை.. வயதானக்காலத்தில் வயது 50 அல்லது 60 ஆனாலே இப்பெல்லாம் பெண்கள் மருமகள் வந்துவிட்டதால் உடல்நலத்தின் பலவீனங்களும் பற்பல நோய்கள் சுகர், பிபி இதெல்லாம் இருப்பதால் அதிகநேரம் நின்று வேலைகள் செய்ய இயலாது மருமகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கொள்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி மஞ்சு, வாங்கோ, வணக்கம்.

      //கதையாசிரியரின் கைவண்ணத்தில் ஓவியம் மிளிர்கிறது.... அழகாக இருக்கிறது.... ஓவியம் வரைவதிலும் நம் கதையாசிரியர் எக்ஸ்பர்ட் என்பதை இதில் இருந்தே அறியமுடிகிறது. அதற்கு தனியாக என் மனம் கனிந்த அன்புவாழ்த்துகள் அண்ணா....//

      அப்படியெல்லாம் ஒன்றும் எக்ஸ்பர்ட் இல்லை ... மஞ்சு.

      சிறுவயதிலிருந்தே, ஏதோ ஒருசில படங்களைப் பார்த்தால் எனக்கு Happy Mood இருந்தால் உடனே அதை வரைந்து வைத்துக் கொள்வேன். ஓவியங்களில் எனக்கு ஓர் தனி ஈடுபாடு + Concentration உண்டு.

      இதுவரை ஒரு நாலோ அல்லது ஐந்தோ பதிவுகளில் மட்டும், இதுபோல என் கையால் நானே வரைந்த படங்கள் இருக்கும்.

      மற்றபடி முறையாக நான் ஓவியம் கற்றதும் இல்லை. நான் வரைந்த ஓவியங்களை பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை. யாராவது விரும்பிக் கேட்டால் உடனே கொடுத்து விடுவேன்.

      //எல்லா துறைகளிலும் கால் பதிக்கும் திறமைசாலி என்பதில் எனக்கு மட்டற்ற சந்தோஷம் அண்ணா//

      எல்லாத் துறைகளிலும் நான் அரைகுறை தான் மஞ்சு.

      திறமைசாலி எல்லாம் இல்லை.

      மிகச்சாதாரணமானவன் தான்.

      இருப்பினும் என் தங்கை மஞ்சுவின் பாராட்டுக்களிலும், வாழ்த்துகளிலும் மனம் மகிழ்ந்து போகிறேன்.

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  15. ஆனால் ஒரு சில குடும்பத்தில் இந்த அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை. வாங்கி வந்த வரம் அப்படி. என்ன செய்யமுடியும். மருமகள் கண்டிப்பானவராக அமைந்து மகன் எதிர்த்து பேசமுடியாத நிலையில் அம்மாவுக்கும் சப்போர்ட் பண்ணி நல்லதை எடுத்துச்சொல்லமுடியாமல் போகும்போது அந்த முதுமை அம்மாக்கு தானே உழைத்து தன் வயிற்றை நிரப்பிக்கொள்ளும் கொடுமை.. நம் கதையின் ஹீரோயின் தேங்காய் விற்கும் பாட்டியின் நிலையும் அதுவாக தான் இருக்கும் என்பதை கதை படிக்கும்போதே உணரமுடிகிறது... இந்த முதுமைக்காலத்தில் வயிற்றுக்கும் சரியாக சாப்பிடமுடியாமல் வியாபாரமும் போணி ஆகாமல் குழாய் நீரை குடித்து தன் வயிற்றுப்பசியை தீர்த்துக்கொள்ளும் பாட்டி பாவம். அதுபோல நிறைய பேர் உண்டு நம் நாட்டில்...

    போணி ஆகலையே என்று நொந்துப்போய் உட்கார்ந்திருக்கும்போது டிப்டாப் ஆசாமி வந்து தேங்காயை பலவிதங்களிலும் சோதித்து பார்த்து தேங்காயை வாங்க விலைக்கேட்டு பாட்டி ( இந்த வயதான காலத்தில் உழைப்பதே பெரும்பாடு என்றால் கணக்குலயும் வீக்) பெரிய தேங்கா 7 ரூபாய் சின்னத்தேங்காய் 6 ரூபாய் என்று சொல்ல நம்ம ஆளு பத்து வருடங்களுக்கு முன்னாடி வேலைக்காக வேண்டிக்கொண்டதும் வேலை கிடைத்து உடனே போபாலுக்கு போனதால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் போனதால் 10 வருடங்கள் கழித்து ரொம்ப விலைக்கொடுத்து ( வேண்டுதல் என்று வந்துவிட்டால் அதற்கு விலை பார்ப்பது கூட தவறு என்ற உண்மை தெரியாமல் போச்சு நம்ம ஆளுக்கு ) வாங்குறேன்னு பொருமலோடு பாவம் பாட்டியையும் கறாராக பேசி பேரம் பேசி குறைத்து கூட ஒரு காயையும் லூட் அடித்துக்கொண்டு போய் வேண்டுதல் நிறைவேற்றிவிட்டாராம். ( பிள்ளையார் கண்டிப்பா கண்ணு குத்தப்போறார்னு தான் நினைத்தேன் ) ஸ்வாமி நல்லாத்தான் தண்டனை கொடுத்தார். 12 க்கு 13 எடுத்தது அந்த 12 ம் நல்ல தேங்காயா ஸ்வாமிக்கு கிடைச்சுட்டுது. தனக்குன்னு எடுத்த காய் அழுகிவிட்டது பாருங்கோ..

    ஏமாற்றி பிழைப்பதும் ஒரு பிழைப்பா... காசுலயும் அடிச்சு காயும் திருடினார். அல்பம் தான்....

    கதையாசிரியரின் சிறப்பு ஒவ்வொரு கதையிலும் வெளிபடுகிறது. கரெக்ட். இந்த கதையிலும் கதையாசிரியரே மக்கள் எங்கெங்கு பேரம் பேசாமல் வாய்ப்பொத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மிக துல்லியமாக செருப்புக்கடையிலும் ( பேட்டா ரேட் 5 பைசா குறைத்து) ஜவுளிக்கடையிலும் பெரிய பெரிய டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்லயும் சூப்பர் மார்க்கெட்டிலும் சொன்ன விலையை (ஃபிக்ஸட் ரேட்) காசு கொடுத்து பெறுவதையும்....

    எங்குங்கு பேசம் பேசுகிறார்கள் ஜனங்கள் என்று அதையும் துல்லியமாக சுட்டிக்காட்டி இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, காய்கறிகள் அதுவும் நடுத்தர வயது பெண்களிடமோ அல்லது வயது முதிர்ந்தவரிடமோ தான் இப்படி ஏமாற்றுவதும் என்பதையும் கனகச்சிதமாக கரெக்டாக சொல்லிவிட்டார் கதையாசிரியர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK to மஞ்சு...

      //கதையாசிரியரின் சிறப்பு ஒவ்வொரு கதையிலும் வெளிபடுகிறது. கரெக்ட். இந்த கதையிலும் கதையாசிரியரே மக்கள் எங்கெங்கு பேரம் பேசாமல் வாய்ப்பொத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மிக துல்லியமாக செருப்புக்கடையிலும் ( பேட்டா ரேட் 5 பைசா குறைத்து) ஜவுளிக்கடையிலும் பெரிய பெரிய டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்லயும் சூப்பர் மார்க்கெட்டிலும் சொன்ன விலையை (ஃபிக்ஸட் ரேட்) காசு கொடுத்து பெறுவதையும்....

      எங்குங்கு பேசம் பேசுகிறார்கள் ஜனங்கள் என்று அதையும் துல்லியமாக சுட்டிக்காட்டி இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, காய்கறிகள் அதுவும் நடுத்தர வயது பெண்களிடமோ அல்லது வயது முதிர்ந்தவரிடமோ தான் இப்படி ஏமாற்றுவதும் என்பதையும் கனகச்சிதமாக கரெக்டாக சொல்லிவிட்டார் கதையாசிரியர்... //

      புரிதலுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  16. கை ரி்க்‌ஷா ஓட்டுவோரிடம், தெருவோரம் உட்கார்ந்து பழங்கள் விற்கும் முதியோரிடம், தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போகும் காய்கறி விற்போரிடம் இப்படி சிலரிடம் பேசம் பேசாமல் அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கினால் தான் என்ன??

    இப்பெல்லாம் காய்கறிச்சங்கம் வந்துவிட்டதால் ஏமாற்றவும் முடிவதில்லை என்றும், நியாயவிலை கொடுத்து வாங்கி வந்து சமைத்து சாப்பிடுவதில் நமக்கும் ஒரு மனதிருப்தி ஏற்படும் என்பதை நச் நு அசத்தலாக உண்மையை சொல்லிவிட்டார் கதையாசிரியர்... உண்மையே....

    நம்மிடம் பொருட்கள் விற்போரும் மனசு திருப்தியோடு வீடு திரும்ப வேண்டாமா? மற்றவர் சிரமங்கள், உழைப்பு, சகாயம் இதெல்லாம் நாம் ஏமாற்றி வாங்கிக்கொண்டால் கண்டிப்பாக ஏமாறுவோம் என்று அழுத்தமாக சொன்ன கதைப்பகிர்வு ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது அண்ணா.. அன்பு வாழ்த்துகள்..

    இனி கதைகள் எழுதும்போது உங்க ஓவியங்களே வரவேண்டும் அண்ணா.. அது தான் என் விருப்பமும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK To மஞ்சு ....

      //நியாயவிலை கொடுத்து வாங்கி வந்து சமைத்து சாப்பிடுவதில் நமக்கும் ஒரு மனதிருப்தி ஏற்படும் என்பதை நச் னு அசத்தலாக உண்மையை சொல்லிவிட்டார் கதையாசிரியர்... உண்மையே......//

      //மற்றவர் சிரமங்கள், உழைப்பு, சகாயம் இதெல்லாம் நாம் ஏமாற்றி வாங்கிக்கொண்டால் கண்டிப்பாக ஏமாறுவோம் என்று அழுத்தமாக சொன்ன கதைப்பகிர்வு ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது அண்ணா.. அன்பு வாழ்த்துகள்..//

      பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      அந்தப்படத்திலுள்ள தேங்காய் விற்கும் பெண்மணியிடம் எவ்வளவு தேங்காய்கள் உள்ளனவோ அவ்வளவு வரிகள் பின்னூட்டமாகக் கொடுத்துள்ளீர்களே ! அடேங்கப்பா !! ;)

      //இனி கதைகள் எழுதும்போது உங்க ஓவியங்களே வரவேண்டும் அண்ணா.. அது தான் என் விருப்பமும்...//

      ஏற்கனவே நான் வெளியிட்டுள்ள கதைகள்/பதிவுகள் எல்லாவற்றிலும் மஞ்சுவின் பின்னூட்டம், முதலில் இடம் பெற வேண்டும்.

      அதன் பிறகே புதிதாக எழுதலாமா என நான் யோசிப்பேன். அதனால் எனக்கு மஞ்சுவின் இந்த அன்புக்கட்டளையால் எந்தக்கவலையும் இப்போதைக்கு இல்லை.

      அ ப் பா டி ..... ஒரே ஜாலி தான். ;)))))

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  17. ஏமாற்றுபவர்களுக்கு அதே வேலையா போச்சு. ஏமாறுபவர்களுக்குமு அதே வேலையா போச்சு.ஏமாற்றுபவர்கள் இருக்குமு வரை ஏமாறுபவர்களும் இருப்பாஙுக போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 10:53 AM

      //ஏமாற்றுபவர்களுக்கு அதே வேலையா போச்சு. ஏமாறுபவர்களுக்கும் அதே வேலையா போச்சு. ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருப்பாங்க போல//

      அதே, அதே. கரெக்டா சொல்லிட்டீங்கோ. மிக்க நன்றி.

      நீக்கு
  18. ஏமாற்றுபவர்களுக்கு இது போல் உடனே ஏதேனும் புத்தி தெளிவது போல் நடந்தால் சரி. இன்றும் இது போல் சில்லித்தனமாக இருப்பவர்கள் உண்டு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran May 23, 2015 at 7:34 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஏமாற்றுபவர்களுக்கு இது போல் உடனே ஏதேனும் புத்தி தெளிவது போல் நடந்தால் சரி. இன்றும் இது போல் சில்லித்தனமாக இருப்பவர்கள் உண்டு. பகிர்வுக்கு நன்றி.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      நீக்கு
  19. மீள் பதிவென்றாலும் மீண்டும் படித்தேன். கதையின் சுவை கருதி. வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு
  20. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    ”ஏமாற்றாதே! ... ஏமாறாதே !!” - தேங்காய்க் கதை:

    ஏழைகள் வயிற்றில் இது போல் தெரிந்தே அடிக்கும் பல கோட் சூட் ஆளுங்களும், பட்டுப்புடவை மாமிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சரியான எழுத்தடி... தங்களது இந்தக் கதை. கதைக்குள் ஒவ்வொரு வரியும், அதற்கேற்றவாறு எத்தனை விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்... இந்தக் கதையைப் படித்தபின் இது போன்ற அல்ப சந்தோஷிகள் நிச்சயம் மனம் திருந்துவார்கள். கதாசிரியர் மன எண்ணத்துக்கு ஒரு நல்ல விருந்து.... மற்றவர்களுக்கு...: மருந்து.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  21. யாரத்தா எதுக்கெல்லாதா ஏமாத்துவாங்களோ. இவங்கல்லா சாமிகிட்ட போயி எதுக்காக பேரம் பேசுராங்களோ.எனக்கு அதப்பண்ணு உனக்கு நா இதப்பண்ணுரேன்னுட்டு

    பதிலளிநீக்கு
  22. இதுவும் மீள் பதிவா. ஏமாற்றுவதும்தப்புதான். ஏமாறுவதும் தப்புதான். கடவுளிடமே பேரம்பேசுவது கேவலம் அந்த ஆண்டவன் எப்படியாவது புத்தி புகட்டிவிடுவார்.

    பதிலளிநீக்கு
  23. உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான்...ஏமாத்தினா ஏமாறுவான்...

    பதிலளிநீக்கு
  24. காட்சி அமைப்பும், தலைப்புக்கேற்ற கதையும் அற்புதம்!

    பதிலளிநீக்கு