என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

பூ பா ல ன்பூ பா ல ன்
[சிறுகதை]


By வை. கோபாலகிருஷ்ணன்


-oOo-

அந்தக் கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அந்தக் கிராமத்துக்காரராக இருந்த ஒருவர் இன்று மந்திரியாகி அந்தக் கிராமத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி வாரிவழங்க உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி சிறப்புச் சொற்பொழுவு ஆற்றப்போகிறார்.

எங்கும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. கட்சிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. சுவரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மரக்கிளைகளின் மின் விளக்குகள் கலர்கலராக தோரணம் போல் தொங்கவிடப்பட்டு ஜொலிக்கின்றன.

துப்புரவுத்தொழிலாளி பூபாலனுக்கு கடந்த நான்கு நாட்களாகவே சரியான வேலை. குனிந்து நிமிர்ந்து வீட்டைக் கூட்டுவதே நமக்கெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும் போது, ரோட்டையும் ஊரையும் கூட்டி சுத்தப்படுத்துவது என்றால் கேட்கவா வேண்டும்?

இருப்பினும் பூபாலனுக்கு இந்த அமைச்சர் ஐயாவுடன் சிறுவயது முதற்கொண்டே நல்ல அறிமுகமும் பழக்கமும் உண்டு. இன்று மாண்புமிகு மந்திரியாகியுள்ள அவரின் வருகை அவனுக்கே மனதில் ஒருவித மகிழ்ச்சியையும், செயலில் ஒரு வித எழுச்சியையும் உண்டாக்கி இருந்தது.

“செய்யும் தொழிலே தெய்வம், அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று இயற்கையாகவே உணர்ந்திருந்த பூபாலன் கிராமத்தின் பிரதான நுழை வாயிலிலிருந்து ஆரம்பித்து விழா நடைபெறும் மேடை வரை உள்ள, மண் சாலையை வழி நெடுக குப்பை ஏதும் இல்லாமல் சுத்தமாகக்கூட்டி, வெகு அழகாக வைத்திருந்தான்.

”மாண்புமிகு மந்திரி அவர்கள் வருகிறார். வந்து கொண்டே இருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்து விடுவார்” என ஒலிபெருக்கியில் கடந்த நான்கு மணி நேரமாகக் காட்டுக்கத்தலாகக் கத்திக்கொண்டே இருந்தனர். 


இடையிடையே கேட்பவர் காதுகளில் ரத்தம் வரவழைப்பது போல ஏதேதோ அர்த்தம் விளங்காத தற்கால சினிமாவில் வரும் புதுப்படப் பாடல்களும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன.  


மாண்புமிகு மந்திரியின் வருகையால் வழியெங்கும் இருபுறமும் காவலர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். 

போலீஸ் ஜீப்புகள் புடைசூழ, முன்னும் பின்னும் பலவித கார்கள் பவனிவர, அமைச்சர் விழா மேடையை, ஒருவழியாக நெருங்கி விட்டார்.


வேட்டுச்சத்தங்கள் முழங்கின. பத்தாயிரம் வாலா பட்டாசுகள் பல தொடர்ச்சியாகக் கொளுத்தப்பட்டன. அக்கம் பக்கத்து கிராம மக்களும், இந்தக்கிராம மக்களுமாக கூட்டம் முண்டியடித்து விழா மேடையை நெருங்கி விட்டனர். விழா மேடை மிகவும் சுறுசுறுப்பானது.

கட்சியின் முக்கியப்பிரமுகர்களும், தொண்டகளும், கிராமத்துப் பெரியவர்களுமாக மேடையேறி, மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் பல போர்த்தி, அமைச்சருக்கு மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர். 

அமைச்சர் பேசும் போது, சுற்றுச்சூழலை பேணிப்பாதுகாப்பது எப்படி என்பது பற்றி விரிவாக விளக்கமாக எடுத்துரைத்தார்.  தனது வருகைக்காக் கிராமத்தின் பிரதான சாலை, அழகு படுத்தப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்து, அதற்காக உழைத்த துப்புரவுப் பணியாளர்களை மேடைக்கு வருமாறு அழைத்தார். அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து கெளரவித்தார்.

நீண்ட நாட்களுக்குப்பின் தனது பால்ய நண்பனான பூபாலனைக் கண்ட அமைச்சர், அவனிடம் அன்புடன் நலம் விசாரித்து விட்டு, அவனுக்குத் தன் கையால் ஒரு பொன்னாடையைப் போர்த்திவிட்டு, தங்க மோதிரம் ஒன்று அவன் விரலில் மாட்டிவிட்டு, அவனைக்கட்டிப் பிடித்தவாறு, புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார்.

தனது கடின உழைப்புக்கு இன்று கிடைத்த பாராட்டு+அங்கீகாரத்தினாலும், தன்னை அமைச்சர் அவர்கள் இன்றும் மறக்காமல் நினைவில் வைத்துள்ளார் என்பதாலும் பூபாலன் மனம் நெகிழ்ந்து போனான். 

அமைச்சர் தனது சிறப்புரையில். “பூபாலன் போன்ற பொதுநல நோக்குள்ள கடின உழைப்பாளிகளைக் காண்பது அரிது. துப்புரவுத் தொழிலாளிகள், சமுதாயத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள். அவர்கள் பணி என்றுமே அத்யாவசியமானது; 

அவர்கள் மட்டும் இல்லாவிட்டாலோ, வேலை நிறுத்தம் செய்தாலோ, நம் தெருவே, ஊரே, நாடே, உலகமே நாறிவிடும். எங்குமே சுத்தமும் சுகாதாரமும் இல்லாவிட்டால் பல்வேறு நோய்கள் பரவி விடும்; 

இந்த துப்புரவுத் தொழிலாளர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்றும், அவர்கள் சேவை எப்போதும் நமக்கு அத்யாவசியத் தேவை என்றும், பொது மக்கள் உணர்ந்து, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தி, அவர்களுக்குத் தங்களால் முடிந்தவரை, அன்பும் ஆதரவும் அளித்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.     

”இன்று இந்த விழாவுக்காகச் செய்யப்பட்டுள்ள சுத்தமும் சுகாதாரமும் எங்கும் என்றும் எப்போதுமே இருக்குமாறு துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ந்து பொறுப்புடன் பணியாற்றிட வேண்டும். பொதுமக்களும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து உதவிட வேண்டும். அனைவருக்குமே சுற்றுப்புறச் சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்” என்று அமைச்சர் மேலும் விளக்கினார்.

விழா இனிதே நடைபெற்று முடிய, அமைச்சர் புறப்பட்டுச் சென்றதும், மக்கள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. துப்புரவுத்தொழிலாளி பூபாலனை ஒரு சிலர் பாராட்டினர். வாழ்த்தினர். அவனுக்கு இன்று ஏற்பட்ட அதிர்ஷ்டத்தை நினைத்து சிலர் வியந்தனர். மாண்புமிகு மந்திரி அவர்களால் பொது மேடையில் பாராட்டுப்பெறுவது என்றால் சும்மாவா ... என்ன? ஒரு சிலர் பொறாமை கூடப்பட்டனர். 

மறுநாள் செய்தித்தாள்களில் அமைச்சருடன் பூபாலன் படங்களும், பாராட்டுக்களும் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன. படங்களை அவனிடம் சுட்டிக்காட்டிய ஒருசிலரிடம் வெட்கத்துடன் ஒரு சிரிப்புச் சிரித்துக்கொண்டே, கைகட்டி ஒதுங்கி நின்று தன் கண்களால் நன்றி கூறினான். 

எழுதப் படிக்கத் தெரியாத பூபாலன், வழக்கம்போல் தன் கடமையே கண்ணாயிரமாக, விழா நடந்த மேடையைச் சுற்றிலும், தெருக்களிலும், மாலையிலிருந்து விழுந்திருந்த உதிரிப்பூக்களையும், பட்டாசுக் குப்பைகளையும், பாடுபட்டுத் தேடித்தேடி கூட்டிக் குவித்துக் கொண்டிருந்தான். 

என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திகளும் படங்களும்  வெளியிடப்பட்ட செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசிக்கியும் கிழித்தெறிந்தும், தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அதைத் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன்.     

-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
இந்தச்சிறுகதை வல்லமை மின் இதழில்
07.11.2011 அன்று வெளியிடப்பட்டது
Reference: http://www.vallamai.com/archives/10047/


25. பூரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:


அருள்மிகு திருவானேஷ்வர் 
திருக்கோயில் 
[காமாக்ஷி அம்மன்]

இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. 
தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சென்று, 
அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் 
ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் 
ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.25/27

38 கருத்துகள்:

 1. மானுட வாழ்வின் நிதர்சனமான உண்மை நிலையை கண்முன்னே காட்டுகிறது கதைஃ

  பதிலளிநீக்கு
 2. அனுபவம் தரும் செய்திகளே முக்கியத்துவம் பெறுகின்றன. பகிர்விற்கு நன்றி Sir.

  பதிலளிநீக்கு
 3. இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. வாழ்கையில் ஆழமாய்ப் பிணைந்திருக்கும் நிலையாமை எனும் தத்துவத்தையும் ரொம்ப நுணுக்கமாக விளக்கியிருக்கிறது. மிக மிக அருமை.

  பதிலளிநீக்கு
 4. கதை மிக அருமை

  பூபாலன் எதிர்பாரத விதமாய் மேடையில் பாராட்டு இல்லையா?

  பதிலளிநீக்கு
 5. நிதர்சனம்...

  நல்ல சிறுகதை...

  ரங்கநாதபுரம்... திருக்காட்டுப்பள்ளி நேமம் வரை சென்று இருக்கிறேன். ரங்கநாதபுரம் இது வரை சென்றதில்லை. பார்க்கலாம் எப்போது வாய்க்கிறது என்று...

  பதிலளிநீக்கு
 6. //நீண்ட நாட்களுக்குப்பின் தனது பால்ய நண்பனான பூபாலனைக் கண்ட அமைச்சர், அவனிடம் அன்புடன் நலம் விசாரித்து விட்டு, அவனுக்குத் தன் கையால் ஒரு பொன்னாடையைப் போர்த்திவிட்டு, தங்க மோதிரம் ஒன்று அவன் விரலில் மாட்டிவிட்டு, அவனைக்கட்டிப் பிடித்தவாறு, புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார்.//
  அமைச்சர், பதவியினால் 'ர்' விகுதி பெற்றார்! பால்ய நண்பன் பூபாலனோ இன்னும் 'ன்' விகுதியோடே இருக்கிறார்!!

  பதிலளிநீக்கு
 7. கதை நல்லா இருக்கு சார்....

  மற்ற நட்சத்திரப் பதிவுகளையும் பொறுமையாகப் படிக்கிறேன்...

  தமிழ்மணம் நட்சத்திரப் பதிவாளர் ஆனதற்கு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 8. வாழ்வின் நிதர்சனமான நிலைமையை சொல்லும் சிறுகதை

  பதிலளிநீக்கு
 9. அருமை அருமை
  வாழ்வின் நிதர்சனத்தைச் சொல்லிப் போகும்
  அருமையான கதை.வாழ்த்துக்கள்
  த.ம 6

  பதிலளிநீக்கு
 10. மலையாளத்தில் ஸ்ரீனிவாசன் நடித்த ஒரு வெற்றிப் படம் தமிழில் ரஜினி நடித்தும் தோல்வியைத் தழுவிய திரைபடக் கதை ஏனோ நினைவுக்கு வந்தது. படம் பெயர் நினைவில்லை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன். /

  நிதர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 12. பூரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:


  அருள்மிகு திருவானேஷ்வர்
  திருக்கோயில்
  [காமாக்ஷி அம்மன்/

  பயன் மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 13. கடைசி பகுதி மனதை தொட்டது .மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த என் சிறுகதைப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களைக் கூறி, பாராட்டி, சிறப்பித்துள்ள அனைவருக்கும் ”HAPPY இன்று முதல் HAPPY" என்ற என் பதிவினில் தனித்தனியே நன்றி கூறியுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

   என்றும் அன்புடன் தங்கள்,
   VGK

   நீக்கு
 14. அன்புள்ள வை.கோ sir,

  உங்களுடைய இந்தக்கதை மனதில் அழகிய உணர்வை எழுப்பியது.
  வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)

  கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html

  பதிலளிநீக்கு
 15. சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி சிறப்புச் சொற்பொழுவு ஆற்றப்போகிறார்.


  அவர் ஆற்றாமல் இருப்பதே சிறந்த சுற்றுசூழல் பாதுகாப்பு!

  பதிலளிநீக்கு
 16. Shakthiprabha said...
  //அன்புள்ள வை.கோ sir,

  உங்களுடைய இந்தக்கதை மனதில் அழகிய உணர்வை எழுப்பியது.
  வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)

  கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html//

  மிக்க நன்றி, ஷக்தி.
  தங்களின் இணைப்புக்கு நன்றி.
  அங்கும் வந்து பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.
  பிரியமுள்ள vgk

  பதிலளிநீக்கு
 17. இராஜராஜேஸ்வரி said...
  ***சுற்றுச்சூழலை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி சிறப்புச் சொற்பொழுவு ஆற்றப்போகிறார்.***


  //அவர் ஆற்றாமல் இருப்பதே சிறந்த சுற்றுசூழல் பாதுகாப்பு!//

  தங்கத் தலைவியாகிய தங்களின் ஒரு சொல் ... அடடா ... அருமையோ அருமை தான். மிக்க நன்றிகள், மேடம். பிரியத்துடன் vgk

  பதிலளிநீக்கு
 18. மிக அருமையான பதிவு, கோப்பு சார். எளிமை மனதை இளகவைக்கிறது.

  பதிலளிநீக்கு
 19. Mira said...
  //மிக அருமையான பதிவு, கோபு சார். எளிமை மனதை இளகவைக்கிறது//

  மிக்க நன்றி, மீரா.

  பதிலளிநீக்கு
 20. குடத்திலிட்ட விளக்கு போல உள்ள பூபாலன்கள் எத்தனையோ. அவர்களை பற்றி சிந்தித்து கதை எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள பட்டு, வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 21. // என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திகளும் படங்களும் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசிக்கியும் கிழித்தெறிந்தும், தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அதைத் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன். // - கரெக்ட்டா சொல்லிட்டிங்க சார்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உஷா அன்பரசு February 6, 2013 at 1:25 AM

   வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர்.

   ***** என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திகளும் படங்களும் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசிக்கியும் கிழித்தெறிந்தும், தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அதைத் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன்.*****

   // - கரெக்ட்டா சொல்லிட்டிங்க சார்..//

   ஆஆஆ எங்க டீச்சரே சொல்லிட்டாங்கோ. ”கரெக்டூஊஊஊ” என்று. அப்போ அது கரெக்டாத்தான் இருக்கும்.

   மிக்க நன்றி டீச்சர்.

   நீக்கு
 22. எழுதப் படிக்கத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வாழ்க்கை பாடம் அவசியம் கற்றிருத்தல் வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அகிலா May 27, 2013 at 1:21 AM

   வாங்கோ, வணக்கம்.

   //எழுதப் படிக்கத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வாழ்க்கை பாடம் அவசியம் கற்றிருத்தல் வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....அருமை...//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 23. தெருக்கூட்டும் அவனுக்கு மந்திரியால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால் மந்திரிக்கு இதனால் எவ்வளவோ ஆதாயம்.

  பதிலளிநீக்கு
 24. பரவால்லியே மந்திரியாக இருந்தா கூட பழய நட்பை மறக்காம எருந்திருக்காரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 20, 2015 at 6:30 PM

   //பரவாயில்லையே! மந்திரியாக இருந்தாக்கூட பழைய நட்பை மறக்காம இருந்திருக்காரே.//

   பூபாலன் போன்ற கீழ்த்தட்டு மக்களின் ஒட்டுமொத்த வோட்டைப் பெற்று ஆட்சியில் அமர இதெல்லாம் ஒரு ஸ்பெஷல் டெக்னிக்காக இருக்குமோ என்னவோ ! :)

   யாரு கண்டா ?

   நீக்கு
 25. இந்த மாதிரி பழசை மறக்காத மந்திரிகள் இப்ப இருப்பாங்களா?

  இருந்தாதான் மாதம் மும்மாரி பெய்யுமே.

  நாம இதையெல்லாம் கதையில படித்து தான் சந்தோஷப்படணும்.

  பதிலளிநீக்கு
 26. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  பூ பா லன்....!

  கடமையைக் கண் போன்று செய்பவர்களுக்கு புகழ் ஒரு பொருட்டே அல்ல. என்பதை பூ பா லன் அவர்களின் செயலின் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். துப்புரவைப் பற்றி சிறப்புறையாற்ற வந்த அமைச்சர் சென்றவுடன் சுத்தமாக செய்யப்பட்ட அந்த இடமே 'உதிர்ந்த ரோஜா இதழ்களாலும், வெடித்த பட்டாசுக் குப்பையாலும் மீண்டும் சுற்றுப்புறம் பாதிக்கப் பட்ட விதத்தை அழகாக படம் பிடித்தார்போல் எழுதி இருக்கும் நடை சிறப்பு.

  புகழைவிட ஆத்மத்ருப்தி தான் பெரிதென பூ பா லன் பாடம் சொல்லித் தருவதும் சிறப்பு.

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 27. மந்திரி கூட நல்லவராதா தெரியுது. பூபாலன் மந்திரியோட தண்பன்ற முறையில போட்டோ படம்லா புடிச்சிகிட்டாகூட மறு நாளே தன் தொளிலுக்கு வந்துபிட்டாரே.

  பதிலளிநீக்கு
 28. நட்பின் ஆழம் அருமையாக சொன்ன கதை. பூபாலன் மந்திரி இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள்தான்.

  பதிலளிநீக்கு
 29. பூபாலன்...கதை...சுற்றுச் சூழல் சுத்தத்திற்கு இசைத்த பூபாளம்...எளிமை...அருமை...

  பதிலளிநீக்கு
 30. அருமையான கதை, நட்பை மறக்கதா மந்திரி ஆச்சிரியம், ஒரு வேளை தான் அரசியலில் தொடர நட்பு உதவும் என்று இருக்குமோ,,,, என்ன செய்ய இப்படியும் சிந்திக்க தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran December 11, 2015 at 1:43 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான கதை, நட்பை மறக்கதா மந்திரி ஆச்சிரியம்,//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //ஒரு வேளை தான் அரசியலில் தொடர நட்பு உதவும் என்று இருக்குமோ,,,, என்ன செய்ய இப்படியும் சிந்திக்க தோன்றுகிறது.//

   சிறுகதை விமர்சனப்போட்டி-2014 இல் இந்தக்கதை இடம் பெற்றிருந்தது. தங்களைப்போன்ற இதே சிந்தனையில், பலரும் பலவித விமர்சனங்கள் எழுதியிருந்தார்கள். அவற்றில் ஒருசில விமர்சனங்கள் மட்டும் தேர்வாகி பரிசளிக்கப்பட்டன. அவ்வாறு பரிசளிக்கப்பட்ட விமர்சங்களையும், அன்றிருந்த தமிழக அரசியல் சூழ்நிலைகளால் மிகவும் EDIT செய்து வெளியிட நேர்ந்தது. அவற்றிற்கான இணைப்புகள்:

   http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-01-03-first-prize-winners.html - முதல் பரிசு (இருவருக்கு)

   http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-02-03-second-prize-winners.html - இரண்டாம் பரிசு (இருவருக்கு)

   http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-03-03-third-prize-winner.html - மூன்றாம் பரிசு (ஒருவருக்கு)

   இவையெல்லாம் சும்மா தங்கள் தகவலுக்காக மட்டுமே.

   - VGK

   நீக்கு
 31. //என்றாவது ஒரு நாள் தன்னைப் புகழ்ந்து வந்த செய்திகளும் படங்களும் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களும் கூட பழசாகி, பலராலும் பலவிதமாகப் பயன்படுத்தப்பட்டு, கசிக்கியும் கிழித்தெறிந்தும், தெருவுக்கு வந்துவிடும் என்பதையும், அதைத் தானே தன் கையால் கூட்டி, கடைசியில் குப்பைத் தொட்டியில் போட்டு, குப்பை லாரியில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்பதையும், தன் அனுபவத்தில் மிகவும் நன்றாகத் தெளிவாகவே தெரிந்து வைத்திருந்தான், பூபாலன். //
  அருமையான் முடிவு! அற்புதமான கதை!

  பதிலளிநீக்கு