லஞ்ச லாவண்யங்கள் !
[ஓர் கற்பனை]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வெற்றி வாகை சூடியது. ஸ்ரீ இராமதூதனும், ஸ்ரீ ராமபக்தனுமான ஹனுமார், தான் தன் அலுவல் நிமித்தமாக சஞ்சீவிமலையைப் பெயர்த்து எடுத்து வந்ததற்கான பயணச்செலவுகளைப் பட்டியலிட்டு, அயோத்யா நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கிறார். [His Claim of Traveling expenses is submitted]
ஸ்ரீ ஹனுமாருடைய பயணச்செலவுகளின் பட்டியலை சரிபார்த்து, பணப்பட்டுவாடா செய்ய பரிந்துரைக்க வேண்டிய குமாஸ்தா [CLERK], அதில் மூன்று விதமான ஆட்சேபணைகளை குறிப்பிட்டு, அந்தப் பயணச் செலவுக்கான T.A. Reimbursement Claim Bill ஐ, சுத்தி விட்டு, தன் மேலதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு போய் உள்ளார்.
அந்த குமாஸ்தா சுட்டிக்காட்டியுள்ள ஆட்சேபணைகள்:
[1] அப்போது முழுப்பொறுப்பு அதிகாரியாகவும், அயோத்தி ராஜாவாகவும் பதவி வகித்து வந்த பரதன் அவர்களிடம், முன் அனுமதி ஏதும் பெறாமல், ஸ்ரீ ஹனுமார் அவர்கள், இந்தப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
[He has not taken any prior permission from the Competent Authority for this Official Tour]
[2] கிரேடு "D" குட்டி அதிகாரியாக விளங்கிய ஸ்ரீ ஹனுமார், ஆகாய மார்க்கமாக அலுவலகப் பயணத்தினை மேற்கொள்ளவும், அந்தப்பயணச் செலவுகளைத் திரும்பப் பெறவும், அரசாங்க சட்டதிட்டங்களின்படி தகுதியற்றவராக உள்ளார்.
[He is not at all entitled to make Official Air Travels ].
[3] ஸ்ரீ ஹனுமாருக்குப் பணிக்கப்பட்டிருந்த வேலை, சஞ்சீவி மலையில் உள்ள ஒரே ஒரு சிறிய செடியினைப் பறித்துக்கொண்டு வருவது மட்டுமே. ஆனால் இவர் அவ்வாறு செய்யாமல், ஒரு மிகப்பெரிய சஞ்சீவி மலையையே அப்படியே பெயர்த்து எடுத்து வந்துள்ளார். இதனால் அவரின் ஆகாயப்பயணத்தில் ஏற்றி வந்துள்ள சரக்கின் எடை மிகவும் அதிகமாகியுள்ளது.
[Unauthorized Excess Baggage]
இவ்வாறெல்லாம் சொல்லி அந்த குமாஸ்தாவால் நிராகரிக்கப்பட்டது, ஸ்ரீ ஹனுமாரின் பயணப்பட்டியல்.
இது ராஜாவான ஸ்ரீ ராமரின் கவனத்திற்குச் சென்றது. இருப்பினும் தர்மத்தையே எப்போதும் அனுஷ்டிக்கும் ராஜாவான ஸ்ரீ இராமராலும் இந்த விஷயத்தில், தனது ஸ்பெஷல் பவர்களை உபயோகித்து ஸ்ரீ ஹனுமாருக்கு உதவி செய்ய முடியாது போனதால், ”இந்த முடிவினை தயவுசெய்து, முடிந்தால் மறுபரிசீலனை செய்யவும்” என்று அடிக்குறிப்பிட்டு [foot note - endorsement] அந்தத்தாளை திரும்ப அனுப்ப மட்டுமே ஸ்ரீ ராமரால் அன்று, முடிந்தது.
இதனையெல்லாம் கேள்விப்பட்டு மிகவும் வருந்திய ஜாம்பவான் [மிகப்பெரிய கரடி போன்ற அதிகாரி] அந்த சம்பந்தப்பட்ட குமாஸ்தாவை தனியாக அழைத்துச்சென்று, ஸ்ரீ ஹனுமாருக்கு, அவரின் இந்த அலுவலகப் பயணத்தினால் கிடைக்கும் தொகையில் ஒரு பத்து சதவீதத்தை அந்த குமாஸ்தாவுக்கு ஒதுக்கீடு செய்துவிடுவதாக வாக்களிக்கிறார்.
இதைக்கேட்டதும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்த அந்த குமாஸ்தா, தான் ஆட்சேபணை எழுப்பிய அந்த பயணப்பட்டியலைத் திரும்பப்பெற்று, கீழ்க்கண்டவாறு [Justifications for passing the Bill] அதில் எழுத ஆரம்பிக்கிறார்:
1] பரதன் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றிருந்தாலும், ஸ்ரீ ராமரின் பாதுகைகளே அப்போது இராஜாவாக எல்லோராலும் ஏற்கப்பட்டிருந்தது. அதனால் ராஜா என்ற பெயரில் அதிகாரம் ஏதும் இல்லாமலிருந்த பரதனிடம் பயணத்திற்கான, முன் அனுமதி பெறாதது, ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
[As a very Special Case, due to emergency situation]
2] மேலும் இதுபோன்ற ஒரு நெருக்கடியான அவசர வேலைகளின் நிமித்தம், தகுதியற்ற அதிகாரிகள் கூட ஆகாய மார்க்கத்தில் பறந்து சென்று வேலைகளை முடித்து வந்து, பிறகு சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளின் அனுமதி பெற்று, அந்தக் கணக்கினை நேர் செய்துகொள்ளலாம் என்ற விதிமுறைகள் உள்ளன. அது போன்ற சில முன்னுதாரணங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
[Further in an emergency, non-entitled officers can be authorized ex-post facto to Fly]
3] அதுபோலவே அதிக கனமுள்ள பொருளான ஒரு மிகப்பெரிய சஞ்சீவி மலையை ஸ்ரீ ஹனுமார் கொண்டுவந்ததிலும் ஓர் நியாயத்தினை உணர முடிகிறது. அவரால் கொண்டுவர பணிக்கப்பட்ட செடிக்கு பதிலாக வேறு ஏதோ ஒரு செடியினை தவறுதலாக அவர் கொண்டு வந்திருந்தால், அவர் மீண்டும் மிகச்சரியான செடியினை கொண்டுவர மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் பொன்னான நேரம் வீணாவதுடன், அவருக்கான அடுத்தடுத்த பயணச்செலவுகளையும் நாம் ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற தவறு ஏதும் நடப்பதற்கான சந்தர்ப்பம் இவரின் இந்தப்பயண விஷயத்தில், எப்படியோ தவிர்க்கப்பட்டுள்ளது.
[Also excess baggage is justified as bringing a wrong plant would have entailed multiple journeys with extra cost; hence bill may be paid ]
4] இந்த இவரின் பயணப்பட்டியல் செலவுத் தொகையினை முழுவதுமாக அனுமதிக்க நான் பரிந்துரைக்கிறேன்.
[The T.A. Claim Bill is Strongly Recommended for its Full Payment, accordingly]
கரடி ராஜா ஜாம்பவான் அவர்களின் ஆலோசனையைக் கேட்ட, அந்த குமாஸ்தா, மேலே சொன்னபடி மாற்றி எழுதி பரிந்துரைத்து கையெழுத்துப் போடுகிறார்.
அதன்படி ஸ்ரீ ஹனுமார் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகையில் பெரும்பகுதியான [ 90 சதவீதம்] பணமும் கிடைத்து விடுகிறது.
[ முற்றும் ]
லஞ்ச லாவண்யங்கள் !
இராமாயண காலத்திலிருந்தே துவங்கியிருக்கலாமோ?
[முழுவதும் கற்பனையான இந்த நிகழ்வு பற்றி, ஆங்கிலத்தில் ஓர் மின்னஞ்சல், இன்று காலையில் என் தோழி ஒருவரால், என்னுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
நகைச்சுவையாக இருப்பதாலும், பல அலுவலகங்களில் இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகத் தெரிவதாலும், அதை நான் தமிழாக்கம் செய்து இங்கு தங்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளேன்]
என்றும் அன்புடன் தங்கள்,
VGK