என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-6
ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை
நிறைவுப் பகுதி!
சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)

நூல் வெளியீட்டு விழா

நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்


PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only  
13) நந்தினி

டாக்டர் நந்தினி டவுனிலேயே பெரிய டாக்டர். கைராசிக்காரி என்று பெயர் பெற்றவள். திருமணம் குழந்தை என்று இல்லாமல் தன்னுடைய டாக்டர் வேலையையே திருமணம் செய்துகொண்ட மாதிரி வாழ்ந்து வந்தாள். 

“இதையெல்லாம் நம்பித்தானே இங்கு கொண்டு வந்து அட்மிட் செய்து சேர்த்தோம். பிரஸவத்துக்குக் கூட்டியாந்த என் பிள்ளையைக் கொன்னுட்டாங்க. இப்போ என் மாப்பிள்ளையும் தூக்குமாட்டி செத்துட்டாரு. கொலைகார பயலுவ. ஒழுங்கா கவனிக்கவே மாட்டானுவ. பெரிய டாக்டரம்மா வந்து ஒழுங்கான பதில் சொல்லாமல் நாங்கள் பாடியை வாங்கிக்கொள்ள மாட்டோம்”. பெண்ணை டெலிவரிக்குச் சேர்த்துள்ள அந்தப்பெண்ணின் அப்பா தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பிக்கிட்டு இருக்காரு.

அந்த ஆஸ்பத்தரி வாசலில் ஒரே அமளி. போராட்டம். கூச்சல் குழப்பம்.

எயிட்ஸ் நோய் பற்றிச் சொல்லும் மிக அருமையான விழிப்புணர்வுக் கதை இது.  தனக்கே உரிய தனிப்பாணியில் மிகவும் பிரமாதமாக எழுதியுள்ளார்கள், நம் ஹனி மேடம். என் ஸ்பெஷல் பாராட்டுகள், மேடம்.

இதில் வரும் பெரிய டாக்டர் நந்தினியின் கதா பாத்திரம் நம் நெஞ்சைவிட்டு நீங்காதது.

இந்தக்கதையை மிக அழகாக ஒலிவடிவில் கேட்க விரும்புவோர் இதோ இந்த இணைப்பினில் கேட்டு மகிழலாம்

https://soundcloud.com/sabalaksh/nanthini-story 

இந்தக்கதைக்குக் குரல் கொடுத்துள்ளவர், நம் ஹனி மேடத்தின் ஃபேஸ்புக்  தோழி திருமதி. சரஸ்வதி தியாகராஜன் அவர்கள். 

 14) கல்யாண முருங்கை

குழந்தை பாக்யமில்லாததோர்  தம்பதியினைப் பற்றிய மிகவும் அருமையானதோர் கதை .... அசத்தலான எழுத்து நடையில் எழுதியுள்ளார்கள். படிக்கப்படிக்க மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்த்திச் செல்லப்படுகிறது என்பது நமக்கும் நன்கு புரியவரும்.

திருமணத்திற்கு முன்பு அவள் கண்ட கனவுகள் வேறு. ஆனால் திருமணத்திற்குப்பின் சந்திக்க நேர்ந்த காட்சிகள் முற்றிலும் வேறுபட்டவை மட்டுமே. கூட்டுக்குடும்பம் என்ற கடலில் கலந்து, மாமனார், மாமியார், நாத்தனார்கள், கொழுந்தன்கள் என மற்றவர்களுக்காகவே பல்லாண்டுகள் உழைத்து வாழ்ந்த பின், அனைவரிடமிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைத்தபின், ஒருசிலரைத் தானே வலுக்கட்டாயமாக பிரித்தபின், அவர்கள் எல்லோரும் அவரவர்கள் வாழ்க்கையில் பூத்துக்குலுங்கி செழித்து சிறப்பாக தனிக்குடுத்தனம் இருப்பதைத் தன் கண்களால் காணும்போது,  தனக்கு என்று தன் வாழ்க்கையில் ஏதும் கிடைக்கவே இல்லை என்ற இவ்வாறான விரக்தி அவளுக்கு மேலிடுவதில் வியப்பேதும் இல்லைதான்.  

இவ்விதமாக மிகப்பொறுமையாக பல்லாண்டு தன் கணவன் + அவன் வீட்டாரின் நலங்களுக்காக மட்டுமே வாழ்க்கை நடத்தியபிறகு, கணவனிடமிருந்தும் விலக நினைத்து, கோர்ட்டில் விவாக ரத்துக்கும் மனுச் செய்துவிட்டு, தன் பிறந்த வீட்டினில் புகுந்துகொண்டிருக்கும் ஓர் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்ணின் கண்ணீர்க்கதை இது. 

மறுநாள் பொழுது நல்லபடியாக விடிந்துவிட்டால் போதும். கோர்ட்டாரால் ஒரு நல்ல தீர்ப்பு இவளுக்குச் சாதகமாகவே கிடைத்துவிடும். 

இருப்பினும் அதற்குள் அன்று இரவு நடந்தது என்ன? என்பதே கதையின் க்ளைமாக்ஸ் காட்சியில், சற்றும் எதிர்பாராத வண்ணம் மிகவும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது என்பதே இந்தக் கதையின் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. 

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

காத்திருந்து காத்திருந்து தனக்குக் குழந்தை பாக்கியமே இல்லை என்பது அவளுக்குப் பேரிடியாக இருந்தது. ‘இருசி மட்டை, மலடி’ என்ற சொற்களை அவ்வப்போது கேட்க நேர்ந்தது, தன் கணவனின் கையாலாகாத தனத்தால் என உறுதியாக நம்பத் துவங்கினாள். ஒருநாள் வார்த்தைகள் தடித்துச் சண்டை வந்தது. அது மேலும் அடிக்கடி தொடர்ந்து தெருவே கேட்கும் அளவுக்கு அதிகமானது. 

எவ்வளவுதான் ஒரு தன்மானமிக்க மனிதன் பொறுக்க முடியும். மனைவியை பளாரென்று ஓங்கி அறைந்துவிட்டு வெளியே சென்றவன் இரண்டு நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் தன் நண்பன் வீட்டில் தங்கிவிட்டான்.

வீங்கிய கன்னங்களோடு, பிள்ளைப்பேறும் இல்லாமல், தனியே இருக்கும் தன்மேல் துளிகூட அக்கறையும் இல்லாமல், எங்கோ  காணாமல் போய்விட்ட கணவன்கூட இனியும் வாழ்வதென்பது அவளுக்கு அர்த்தமற்றதாகத் தெரிந்தது.

திருமணமான சில நாட்களிலேயே, கட்டினவன் ஆம்பிள்ளையே இல்லை எனக் கோர்ட்டுக்கு இழுத்து, விவாக ரத்துச் செய்யும் பெண்களுக்கு மத்தியில், தான் இத்தனை வருடம் தன் கணவனோடு குடும்பம் நடத்தியதே பெரிது என நினைத்துக் கொண்டிருந்தாள், அவள். ‘இவ்வளவுக்குப் பிறகும் சேர்ந்திருப்பது எதற்காக’ என்ற எண்ணத்தோடு, குடும்ப நலக் கோர்ட்டில் விவாகரத்து தாக்கல் செய்துவிட்டாள்.

குடும்ப வன்கொடுமைச் சட்டம் எல்லாம் பெண்ணுக்குச் சாதகமாகவே இருக்கிறது. கணவனின் பக்கத்தை அது அதிகம் அலசி ஆராய்வதே இல்லை. ‘ஆண் மட்டும்தான் வன்கொடுமை செய்வான்’ எனச் சட்டமும் முடிவெடுக்கிறது.

ஜன்னல் வழியாக கல்யாண முருங்கை மரத்தின் பக்கம், தன் பார்வையைத் திருப்பியவளுக்கு, தானும் ஒரு கல்யாண முருங்கையாகக் காய் கனியில்லாமல் வெறுமே பூத்திருப்பதாகப் பட்டது. கல்யாண முருங்கை பிள்ளைப்பேறு அளிக்கும் மருத்துவச் செடி. ஆனால் அதற்குக் காய்ப்பில்லை. கனியில்லை. பூத்து உதிரும் அதற்குப் பிள்ளைப்பேறு கிடையாது. அந்தக் கல்யாண முருங்கையாகத் தானிருக்கும் கோலத்தை எண்ணிக் கலங்கியவள் ஒருவாறாக அன்றிரவு தூங்கியிருந்தாள்.

[இந்தக்கதை அமெரிக்கத் தமிழ் இதழான ‘தென்றல்’ இல், ஜனவரி 2016 இல் வெளியாகியுள்ளது]  

 
15) ஸ்ட்ரோக்

இது ஒரு மாறுபட்ட வித்யாசமான கதை. பொதுவாக ஒருமுறை மட்டும் மேலோட்டமாகப் படிப்பவர்கள் இதனைப் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கக்கூடும். ஆழமான அன்புள்ள கதையாக இருப்பதால் அதனை ஆழமாக ஊன்றிப்படிக்க வேண்டியது மிகவும்   அவசியமாகும்.

எனக்கு மிகவும் பிடித்தமான கதைக்கருவாக இருந்ததாலும், என் வாழ்க்கையின் ஏதோ ஒரு பக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பதாலும், நானே பலமுறை படித்து ரஸித்து மகிழ்ந்தேன்.

மாடர்ன் ஆர்ட் என்று ஏதேதோ கிறுக்குவார்கள். கார்ட்டூன் என்று ஏதேதோ கேலிச்சித்திரங்கள் வரைந்து காட்டி, பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத, சில விஷயங்களை பளிச்சென்று ஒரே ஒரு படத்தின் மூலம், நகைச்சுவையுடன் காட்டி மிகச் சுலபமாகப் புரிய வைத்து விடுவார்கள். 

உதாரணமாக இதோ என்னால் வரையப்பட்டதோர் கார்ட்டூன்: 

இனிமே, உட்கார்ந்தா .. சறுக்குப்பாறை 
இருக்கிற ‘பார்க்’கா பார்த்து உட்காரணும்.

இதுபோன்ற கேலிச்சித்திரம் என்ற கார்ட்டூன்களைப் பொதுவாக அனைவரும் புரிந்துகொள்வதோ, ரஸிப்பதோ நடக்காத காரியம். அதில் ஓர் ஆசையும், ஈடுபாடும், கொஞ்சமாவது ரஸிப்புத்தன்மையும், கூடவே கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும் என்று நான் அடித்துச் சொல்லுவேன். 

இந்தக் கதையில் வரும் கதாநாயகியும் ஓர் மாடர்ன் ஆர்டிஸ்ட் மட்டுமல்ல, ஆர்க்கிடெக்ஸிங் முடித்துவிட்டு, கட்டடங்களின் உள்பாகங்களை உருவமைத்துக் கொண்டிருந்தவள். தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு ஃப்ரீலான்சிங்காக, பத்திரிகைகளின் மேல் உள்ள ஈர்ப்பால், டிசைன் இன்ஜினியரிங் முடித்த தகுதியை வைத்து விதம் விதமான படங்களால் பத்திரிகை உலகைக் கலக்கிக் கொண்டிருந்தவள்.

இந்தத்துறையில் இவளின் தனித்தன்மையை உணர்ந்த ஒருவர் இவளின் கண்ணழகில் மட்டுமே காந்தமாக இழுக்கப்படுகிறார். அவளைத் தனக்குள் காதலிக்கவும் ஆரம்பித்து விடுகிறார் ..... அவளின் எண்ணம் எப்படியிருக்கும் என கொஞ்சமும் யோசிக்காமலேயே. 

படங்களில் காட்டப்படும் பலவிதமான் ஸ்ட்ரோக்குகள் போல இந்தக்கதை மிகச்சிறப்பான பலவித ஸ்ட்ரோக்குகளுடன் ஜோராகவே எழுதப்பட்டுள்ளது, நம் ஹனி மேடத்தால். 

இவர்களின் காதல் கடைசியில்  கைகூடியதா என்பதே இந்தக்கதையின் க்ளைமாக்ஸில்  ’ஸ்ட்ரோக்’ மூலமாகவே (குறியீட்டுக் கோடுகளின் மூலமாகவே) அவளால் அவருக்குச் சொல்லப்படும் மிகச்சிறப்பானதோர் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. அதுவே எனக்கு இந்தக்கதையை மிகவும் பிடித்துப் போக வைத்துவிட்டது.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

பொதுவாக அடுத்தவர் அந்தரங்கத்தை அறிவதில் அவருக்குத் துளியும் விருப்பமில்லை. ஆனால் அவர் அவளைக் காதலிக்கத் துவங்கியிருந்தார். தெரிந்துகொள்ளும் தேவையும் இருந்தது. அவருக்குத் திருமணம் ஆகி மனைவியை இழந்திருந்தார். அவளுக்கும் திருமணம் ஆகி மணவிலக்குப் பெற்றிருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அது அவளின் கணவனின்  பராமரிப்பில் இருப்பதாகவும் சொல்லியிருந்தாள்.

“இப்போது உன் வாழ்வில் நீ மட்டும் இருக்கிறாய். என் வாழ்வில் நான் மட்டுமே இருக்கிறேன். நாம் இருவரும் இணைந்து வாழ்ந்தால் என்ன? நமக்காக வாழ, நம்மை சிந்திக்க, நம் இருவருக்கும் துணை தேவை” க்ரீமி இன்னில் குளிர்ந்த விரல்களால் லேஸாக அவள் கைகளைப் பற்றுவதுபோல அவர் ஒரு வேகத்தில் சொல்லி முடித்தார்.

“இதெல்லாம் பற்றி நினைக்கவே எனக்கு நேரமில்லை. இனியும் ஒருமுறை இதெல்லாம் தேவையா என்று யோசிக்க வேண்டும் .....” ஒரு மாதிரி கசப்பாகப் புன்னகைத்தாள். 

அங்கு சில குழந்தைகள் ஆரவாரமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது ஓரிரு குழந்தைகளை செல்ஃபோனில் படம் பிடித்துக்கொண்டிருந்தாள். இவள் புகைப்படம் எடுப்பதைப் பார்த்துப் பக்கத்தில் ஓடிவந்த குழந்தை டேபிளைத் தட்டியது. உருண்ட ஐஸ் க்ரீம் கப் சாய்ந்தது. பிடித்த இருவர் கரங்களிலும் ’ப்ளாக் கரண்ட் ஐஸ்க்ரீம்’ மின்சாரமாகப் பாய்ந்தது. :)

“மெதுவா யோசிச்சுச் சொல்லு ... அவசரமில்லை ... எந்த சுனாமியும் வரப்போறதில்லை.”

“அது எப்படித் தெரியும்?”

“தெரியும்.” அழுத்தமாகப் புன்னகைத்தார். 

‘திஸ் இஸ் த எண்ட்’ சொல்லிக்கொண்டது மனது. ‘வாழ்வது ஒருமுறை’ அதில் காதலும் ஒருமுறை’. கழுவிய பின்னும் ஐஸ்க்ரீம் பிசுக்கோடு கை மணத்துக்கொண்டிருந்தது .... காதோரம் அவள் அடித்திருந்த பாய்சன் செண்டின் மணத்தைப் போலவே.  

தினம் பல நூறு மெஸேஜ்கள் அவளிடமிருந்து அவருக்கு வந்துகொண்டே இருந்தன. அவர்கள் முதிர்ந்த காதலர்களைப்போல எதையும் பேசிக்கொள்வதில்லை. தினமும் காலையில் ஆரம்பிக்கும்போதும், படுக்கைக்குச் செல்லும் போதும், அவளின் சில மெஸேஜ்கள் அவரைப் புதுப்பிக்கப் போதுமானதாய் இருந்தன.  [நம்மில் பலரின் இன்றைய யதார்த்தம் வெகு அழகாகச் சொல்லப்பட்டுள்ளன .... இந்த ஒருசில வரிகளில் ..... :))))) ] 

காத்திருந்தார் .... அவர்.

இன்றாவது அவருக்கு நான் என் பதிலில் சந்தோஷத்தைக் கொடுத்துவிட வேண்டும். எத்தனை நாள் ... எத்தனை ஆண்டுகள் தவம் செய்கிறார். ஓரிரு வார்த்தைகளில் அவர் முகத்தில் ஏற்படும் சந்தோஷம் ... மெல்ல மெல்லப் பூவைப்போல மலர்ந்து கொண்டிருந்தது அவள் இதயம். 

‘இதயம் தேடும் இதயம்’ ... எந்த நிர்பந்தங்களும் இல்லை. சொல்லி விடலாம்தான். இன்றே சொல்லிவிட்டால் என்ன? ந்யூரான்களின் தாறுமாறுமான ஆட்டம்.   

இந்த சிறுகதைத் தொகுப்பு நூல் என்பது சுமார் பதினைந்து பீப்பாய்களில் நிரம்பி வழியும் கொம்புத்தேனாக மிகவும் சுவையோ சுவையாக, இனிப்போ இனிப்பாக உள்ளது. நான் அந்த ஒவ்வொரு பீப்பாய்களிலிருந்தும் ஒரே ஒரு சொட்டுத் தேன் போல எடுத்து இங்கு சாம்பிளாக கொஞ்சூண்டு மட்டுமே உங்களிடம் தெளித்துள்ளேன் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எனவே ஆர்வமுள்ள பதிவர்கள் + வாசகர்கள் அனைவரும் இந்த நூலினை வாங்கி தேனை முழுவதுமாக ரஸித்து, ருசித்து, வாசித்து, தேன் பீப்பாய்களிலேயே மூழ்கிக் குளித்து மகிழலாம். 

பிறருக்கு நாம் அன்பளிப்பான வழங்குவதற்கும் இது மிகவும் ஏற்றதொரு நூல் ஆகும் என நான் உங்களுக்குப் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.யாரோ .... இவர் யாரோ ?
ஆச்சர்யம்... ஆனாலும் உண்மை!

தன் 19-வது வயதில், கல்லூரியில்
இரண்டாம் ஆண்டு படிக்கும்போது
நம் ஹனி மேடம் !

அழகாக அடக்க ஒடுக்கமாக .... 
தோற்றத்தில் ஓர் மடிசார் மாமியாக !!


  


இந்தச் சிறுகதைத் தொகுப்பு நூலினை, மிகச்சிறப்பாக எழுதி வெளியிட்டு, அதன் ஒரு பிரதியினை எனக்கு அன்புப் பரிசாக அனுப்பிவைத்து, என்னை வாசிக்கவும், மதிப்புரை செய்து என் வலைத்தளத்தினில் வெளியிடவும் வாய்ப்பளித்துள்ள, திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைக் கூறிக்கொண்டு விடைபெற்றுக் கொள்கிறேன்.

   

 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

புதன், 28 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-5


ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை

நூல் வெளியீடு:

சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)

நூல் ஆசிரியர்: 

திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்


PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only
 
10) ரக்‌ஷா பந்தன்

கல்யாணம் ஆன புதுசு. தமிழ்நாட்டுப்பெண் வடக்கே எங்கோ வாழ்க்கைப்பட்டு புது இடத்தில் வாழ நேர்கிறது. கணவன் பண்ணும் அட்டகாசம், புது வீடு, புது நண்பர்கள், புதிய ஊர், தனிச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு ரொம்ப அவஸ்தைப்படுகிறாள். 

முதல் ஒரு வாரம் தினமும் இரு வேளைகளும் தன் அப்பாவுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் அரட்டை அடித்துப் பேசி மகிழ்கிறாள். தாயார் குறுக்கே புகுந்து, உன் வீட்டுக்காரரை கவனி. சும்மா ஃபோனில் பேசிக்கொண்டே இருந்தால் மாப்பிள்ளை கோபப்படப்போகிறார் என்கிறாள். தன் அம்மாவை நினைத்து இவளுக்குச் சிரிப்புத்தான் வருகிறது. பிறகு போகப்போக 2-3 நாட்களுக்கு ஒருமுறை என தன் தொலைபேசிப் பேச்சுக்களை குறைத்துக் கொள்கிறாள்.  

அந்த ஊரிலுள்ள அக்கம்பக்கத்தார் வழக்கப்படி, தன் கணவருடன் அடிக்கடி தன் வீட்டுக்கு வரும் ஒரு நண்பனுக்கு, அவன் கையில் தான் வாங்கி வைத்திருக்கும் ரக்‌ஷா பந்தன் கயிற்றைக் கட்டி விட்டு சகோதரனாக ஆக்கிக்கொண்டு அவன் வாயில் தன் கையால் இனிப்பினை ஊட்டி விடுகிறாள். அவன் கொடுக்கும் தங்க மோதிரத்தைத் தயங்கியபடி பரிசாகப் பெற்றுக்கொள்கிறாள். இதைப்பார்த்த இவளின் கணவனே வியந்து போகிறான்.

கொஞ்ச நாளிலேயே தன் கணவன் போதைப்பொருட்களுக்கு அடிமையானவன் என்பதைத் தெரிந்துகொண்ட அவள் புழுவாய்த் துடிக்கிறாள்.  தன் பெற்றோர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியவே கூடாது .... தெரிந்தால் அவர்களால் அதனைத் தாங்கிக்கொள்ளவே முடியாது .... என்பதால் இதில் மிகுந்த கவனமாகவே இருக்கிறாள்.

இதற்கிடையில் கர்ப்பவதியான அவள் பிறந்த வீட்டுக்கு பிரஸவத்திற்காகச் செல்ல நேரிடுகிறது. அந்த சகோதரன் போன்ற நண்பனின் உதவியால் மட்டுமே தன் கணவனை அந்தக் கொடிய பழக்கத்திலிருந்து மிகவும் போராடி மீட்கிறாள். 

இந்தக் கதை நல்ல விதமாக எழுதப்பட்டு, பாஸிடிவ் முடிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

மாமரத்தில் இருந்த அணில் குட்டியொன்று ஜன்னல் வழியாகத்தாவி, உள்ளே வந்து கழுத்தை ஒயிலாகத் திருப்பி, இங்குமங்கும் விழித்துப் பார்த்துவிட்டு, இவள் கேக்குக்குப் போட எடுத்த முந்திரிப் பருப்பைச் சுத்தம் செய்யும்போது நல்லாயில்லை என்று போட்டு வைத்திருந்த சில துண்டு முந்திரிப்பருப்புகளில், இரண்டைக் கையிலெடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் மாலை மயங்கிய நிலையில் பிதற்றிக்கொண்டிருந்த கெளசிக்கை இரண்டு முரட்டு ஆசாமிகள் பொட்ட்டலமாக மடித்துப் போட்டுவிட்டுப் போனார்கள். நடு ரோட்டில் கிடந்தானாம்.  இவள் பதறிப்போனாள்.

டாக்ஸியில் தூக்கிப் போட்டுக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு ஓடினால், அவர் ஆற அமர வந்து செக்கப் செய்துவிட்டு “ஹெரோயின் சாப்பிட்டு இருக்கிறான். அது இவனைச் சாப்பிட்டுக்கிட்டு இருக்குதுன்னு தெரியாம” என்கிறார். 

இவள் உடனே “ஹெராயின்னா என்ன?” என்று கேட்க, “போதைப் பொருள்” என்று கூறிவிட்டு பேடை எடுத்து மருந்துகளை வரிசையாக எழுதத் தொடங்கினார்.


[ இது 02.03.2014 தினமலர் வாரமலரில் வெளியான கதையாகும் ]


 


11) பிள்ளைக் கறி

தன் அம்மாவைப் பெற்ற பாட்டியிடம் வளர நேரும் பெண் குழந்தை. அந்தக்குழந்தையின் அம்மா அவசரப்பட்டு மேல் லோகம் போய்ச் சேர்ந்து விட்டாள். 

பாட்டி யாரையெல்லாம் அந்த ஊரில் மிகவும் நல்லவர்களாக நினைத்திருந்தாலோ, அவர்கள் எல்லோருமே நல்லவர்கள் இல்லை .... அயோக்கியர்கள் மட்டுமே என்பது பேத்திக்கு மட்டுமே, அதுவும் அவள் பூத்துக்குலுங்கி புஷ்பவதியானபின் தெரிய வருகிறது.

அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் தன் பாட்டி வீட்டில் இல்லாதபோதும்கூட, மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு, வீட்டை உள்பக்கம் பூட்டிக்கொண்டு, மிகவும் பாதுகாப்புடன் இருந்த பேத்தி நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறுகிறாள். 

அவளின் நடை, உடை, பாவனை, ஹேர் ஸ்டைல் என எல்லாமே மாறிப்போய் ஆணா பெண்ணா என்று தெரியாதபடி வீரமும் விவேகமும் மிக்கவளாக மாறிப்போய் இருக்கிறாள். கல்யாணமாகி வாழ்க்கைப்பட்டு கிராமத்துப் பாட்டியை விட்டு டெல்லிக்கும் சென்று விடுகிறாள். 

அங்கு தான் படித்த படிப்புக்குப் பொருத்தமானதோர் வேலையையும் தேடிக்கொள்கிறாள். வெளிநாட்டு வேலைகளுக்குத் தனக்கு வாய்ப்புகள் நிறையவே கிடைத்தும்கூட, தான் அப்போது உண்டாகி மாஸமாக இருந்ததால், அவற்றையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டு, தான் அப்போது பார்த்து வந்த வேலையையும் கூட தன் வீட்டிலிருந்தே பார்க்க நிர்வாகத்திடம் ஸ்பெஷல் அனுமதி பெற்று விடுகிறாள். 

இங்கு கிராமத்தில் உள்ள அவளின் பாட்டிக்கும் பெருமையோ பெருமைதான். அடிக்கடி பாட்டியும் பேத்தியும் கடிதம் எழுதி பேசி மகிழ்ந்து வருகிறார்கள்.

சென்ற ஆண்டு கூட அவள் தனக்குப் பிறந்திருந்த பெண்ணோடு ஸ்கூல் லீவு நேரம் கிராமத்திற்கு வந்து பாட்டியைப் பார்த்து விட்டுச் சென்றாள். ஏதோ ஒரு சாம்ராஜ்யத்தின் ராணியும் இளவரசியும் வந்து போனதுபோல பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

”இந்த ஆண்டு குலதெய்வ படையல் நேர்த்திக்கடன் நாம் செய்ய வேண்டும் என முடிவாகியுள்ளது. நீயும் வந்து போ” எனத் தன் பேத்தியை பாட்டி அன்புடன் அழைக்கிறாள். 

பேத்திக்கு வந்துபோக மனதில் ஆசை இருப்பினும் அவள் வர மறுக்கிறாள். அதற்காக அவள் கூறும் காரணங்கள் நம்மையும் கலங்க அடிப்பதாக உள்ளது. மிகவும் அருமையான கதை இது. கதையின் தலைப்புத் தேர்வும் மிகவும் பொருத்தம். 

இன்றைய இளம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை மிக நன்றாக உணர்ந்து, மிகப்பிரமாதமாக எழுதி, ஒருசில ஆபத்துக்களை இலை மறை காய் மறையாகச் சொல்லி, பெண்களுக்கு எச்சரிக்கையும், சமூகத்திற்குச் சாட்டையடியும் கொடுத்திருக்கும் கதாசிரியை திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களை இந்த ஒரு கதைக்காக மட்டுமே நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள், ஹனி மேடம்.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

”பாட்டி, உனக்கு ஞாபகம் இருக்கலாம். நீ கோயிலுக்கோ வெளியிலயோ போயிட்டு வரும்போதெல்லாம் நான் மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கிட்டு உன்கிட்ட சரியாப் பேசவே மாட்டேன்” 

”நீ பக்கத்துல இருக்கிற அழகேசன் கடையில் என்னை விட்டுட்டுப் போவாய். அவர் மடியில் உட்கார வெச்சுக்கிறேன்னு சொல்லி எல்லா இடத்திலும் தொடுவார். நான் கோபமா கையைத் தட்டினா, என்னைக் கண்ட இடத்தில் நல்லா கிள்ளி வைப்பார். தேள் கொட்டுனா மாதிரி எனக்கு அந்த இடம் எரியும்.”

”ஒருநாள் நான் கோபமா வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். அப்போவெல்லாம் செல்வம் அண்ணே, நம் வீட்டுக்கே வந்து எனக்குத் துணை இருக்கும். ஒருநாள் அதுவும் நானும் ஆளுக்கொரு லைப்ரரி புக் படிச்சிட்டு இருந்தோம். திடீர்னு பக்கத்துல வந்து கட்டிப் பிரிச்சு முத்தம் கொடுக்கறேன்னு கன்னத்துல கடிச்சு வச்சிருச்சு. கோபத்தோட பிடிச்சுத் தள்ளுனா நகர விடாம அடுப்பாங்கரைப் பரண்கிட்ட சுவத்தோரமா சாய்ச்சு உடம்புமேல உடம்பை வைச்சு அழுத்துச்சு. பெரிய சைஸ் மரவட்டை உடம்புல ஊர்றமாதிரி இருந்திச்சு. திருவிழாவுக்கு நீ காய் அரிய வைச்சிருக்கிற இரும்பு அருவாமணை அதுல தலைகீழா சொருகி இருந்துச்சு. 

வெடுக்குன்னு அதை உருவி ’என்னை விட்டுடு செல்வண்ணே’ன்னு சொல்லித் தள்ளிவுட்டேன். லேசா அதுங்கையில கீறி ரத்தம் வர ஆரம்மிச்சுருச்சு. கீழே விழுந்த அது பயந்து ஏந்திருச்சு வீட்டுக்குப் போயிருச்சு. அதுக்கப்புறம் நீ வெளிய போனா நான் கதவைத் தாப்பா போட்டுக்கிட்டு தனியா இருக்கக் கத்துக்கிட்டேன்”.  

[இந்தக்கதை அக்டோபர் 2015 பெண்கள் ராஜ்ஜியத்தில் வெளியாகியுள்ளது]

 12) எருமுட்டை

இது ஒரு வித்யாசமான, சற்றே புரட்சிகரமான மிகவும் விறுவிறுப்பான கதை. ஊர் உலகத்தில் இதுவரை நடக்காத சம்பவம் ஒன்றும் இந்தக் கதையில் இல்லைதான் என்றாலும், இதுபோல எழுத மிகவும் துணிச்சல் வேண்டும். அது நம் காதாசிரியருக்கு நிறையவே உள்ளதில் நமக்கும் மகிழ்ச்சியே. :)

கன்று ஈனாத பசுஞ்சாண உருண்டைகளோடு, அருகம்புல் போட்டுப் பிசைந்து காய வைத்த எருமுட்டைகளை தணலில் நன்கு புடம் போட்டு, சாம்பலாக்கி,  பாரம்பர்யமான முறையில் விபூதி தயாரித்து விற்பனை செய்யும் தொழில் அவனுக்கு. அழகான மனைவி உண்டு. இதுவரை குழந்தை பாக்யம் ஏதும் இல்லை.

விபூதியில் கூட அதனை வெள்ளை நிறமாக பளிச்சென்று சாஃப்ட் ஆக ஆக்கிட எவ்வளவோ கலப்படப் பொருட்கள் உள்ளன. அதுபோல விபூதியில் எதைஎதையோ கலந்து வாசனையாகவும் ஆக்க முடியும். இருப்பினும் பாரம்பர்ய முறையில் தன் முன்னோர்கள் எப்படி பக்தி சிரத்தையுடன் செய்தார்களோ அப்படியே செய்ய வேண்டும்; எதிலும் கலப்படமே கூடாது என நினைப்பவன் அவன். 

இப்படிப்பட்ட சுத்தபத்தமான ஆசாமிக்கு மனைவியாக வாய்த்தவள், வேறொருவனுடன் கலப்படமாகிக்கொண்டு இருக்கிறாள். அவர்களின் சிரிப்பொலியையும், வளையல் சப்தத்தையும், மல்லிகைப்பூ வாசத்தையும், இவனால் ஒருநாள் நேரிலேயே உணர முடிகிறது. எவ்வளவு தட்டியும் கதவைத் திறக்காத அவன் மனைவி, தான் பாத் ரூமில் குளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி கதவைத்திறக்க மிகவும் தாமதிக்கிறாள். 

கொல்லைப்புறமாகச் சென்று பார்த்தவனுக்கு அங்கு ஒரு மிகவும் பரிச்சயமான சைக்கிளையும், ஒரு ஜோடி, ஆண் செருப்புக்களையும் காணமுடிகிறது. உள்ளே தற்சமயம் தன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருப்பவன் யார் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. 

அதன்பின் இதுவே அவ்வப்போது தொடர்கதையாவதையும், அரசல் புரசலாக அக்கம்பக்கத்தார் மூலம் கேள்விப்பட்டு நொந்துபோகிறான்.  

எரு முட்டைகளை விபூதிக்காக புடம் போடும் போது அக்னி ஜுவாலைகளில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகவும், அதனில் சாம்பலாகும் எரு முட்டைகளாகவும் இவன் மனமும் கொதித்துக் கொண்டே இருந்து வருகிறது. இவனுக்கு என்னசெய்வது என்றே புரியாமல் குழப்பமாகவும் கோபமாகவும் வருகிறது.

இதற்கிடையில் வெளியூர் பஸ் ஸ்டாண்டில் தன் வேறொரு நண்பனுடன் பேசிக்கொண்டே செல்லும்போது, வேகமாக வந்த ஒரு சரக்கு வேன் இவன் நண்பன் மேல் மோதிவிட, ரத்தக்காயங்களுடன் தவிக்கும் தன் அந்த நண்பனை  ஓர் ஆட்டோவில் ஏற்றி மருத்துமனையொன்றுக்குக் கொண்டு செல்ல நேரிடுகிறது. அங்கு காத்திருக்கும் நேரத்தில், தனக்கு ஏன் வாரிசு இதுவரை உருவாகவில்லை என்பதையும் டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்கிறான். 

டாக்டரும் இவனை இரண்டு மூன்று டெஸ்டுகள் செய்து பார்த்துவிட்டு, ”போதுமான அளவுக்கும், குழந்தை பிறக்க தேவையான அளவுக்கும் வீர்யம் மிக்க விந்தணுக்கள் உனக்கு உன்னிடம் இல்லை” என்று ஓர் இடியைப் போட்டு விடுகிறார். 

அவரே இவனிடம் ”அது உன்னிடம் இல்லாட்டியும் பரவாயில்லை, டோனர்களிடம் வாங்கி கருவோடு செலுத்தி கருவை உண்டாக்கிக்கொள்ளலாம், மிகவும் ஆரோக்யமான குழந்தை பிறக்கும்” என ஓர் இலவச ஆலோசனையையும் வழங்குகிறார். இதிலும்கூட கலப்படம் என்பதைக் கேட்க,  இவனின் கோபம் மேலும் அதிகரிக்கிறது. 

இந்த சோகத்திலும் கோபத்திலும் வீட்டுக்கு வந்தவனிடம், அவன் மனைவி தான் முழுகாமல் இருக்கும் நல்ல செய்தியினைச் சொல்கிறாள். 

அவளை மட்டும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்தி விடலாமா, இல்லை தானும் அவளுமாக சேர்ந்தே எரியூட்டிக்கொள்ளலாமா என சிந்திக்கிறான். ஆனால் இதனை செயல்படுத்துவதில் ஏனோ அவனுக்கு ஓர் தயக்கம் ஏற்படுகிறது. 

குழந்தை பிறந்த உடனே, தன்னுடையதாக இல்லாத அதனை, எங்காவது கொண்டுபோய் கொன்று விடலாமா எனவும் பல்வேறு யோசனைகளில் இருந்து வருகிறான்.

தன் மனைவியையும் அவளின் கள்ளக்காதலனையும் இறுதியில் எப்படி அவனால் தண்டிக்க முடிந்தது என்பதே கதையின் கிளைமாக்ஸில் நாம் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில், முற்றிலும் வித்யாசமாகச் சொல்லப்பட்டுள்ளது. 

[ இந்தக்கதை 1-15/07/2014 புதிய தரிசனத்தில் வெளியாகியுள்ளது]

நீங்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும்
 இந்த என் குட்டியூண்டு தொடரின் நிறைவுப் பகுதி 
இப்போதிலிருந்து 36 மணி நேர இடைவெளிக்குப்பின்

30.09.2016 வெள்ளிக்கிழமை 
மஹாளய பக்ஷ ’அமாவாசை’ நன்னாளில்
பகல் சுமார் 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

காணத்தவறாதீர்கள் !
கருத்தளிக்க மறவாதீர்கள்!!


தொடரும்


 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4


ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை


நூல் வெளியீடு:

சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only

 


7) நான் மிஸ்டர் Y

மேலும் தனக்குக் குழந்தை பிறக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்ட ஒருத்தி, ஏற்கனவே ஒருமுறை வெற்றிகரமாகக் கருக்கலைப்பு செய்துகொண்ட மருத்துவ மனைக்கே சென்று, மீண்டும் கருக்கலைப்பு செய்துகொண்டு மிகவும்  நிம்மதியாக தன் வீட்டிற்குச் செல்கிறாள். 

ஆனால் ஐந்துமாதங்கள் ஆனபிறகே, தன் கரு கலையாமல் இன்னும் வயிற்றிலேயே வளர்ந்து வருவதை உணர ஆரம்பிக்கிறாள். இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை எனச் சொல்லி விட்டார்கள். 

இந்தமுறை சமீபத்தில் கருக்கலைப்பு செய்தவர்கள், ஏதோவொரு அவசரத்திலும் அலட்சியத்திலும், சரியான முறையில் அதனைச் செய்யாமல், அரைகுறையாக அவசரத்தில் செய்து சொதப்பியுள்ளனர். 

தினமும் கூட்டம் கூட்டமாக, இதே வேலைகளுக்காக அங்கு பல பெண்மணிகள் வந்து க்யூவில் நிற்கும்போது, மருத்துவமனையில் உள்ள அவர்களும் என்னதான் செய்வார்கள்? இதுபோன்ற ஓரிரு தவறுகள் எப்போதாவது நடப்பதும் சகஜம்தானே!

இதனால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவளின் வயிற்றுக்குள்ளிருந்து நம்முடன் பேசுபவரே மிஸ்டர் Y.  

ஹனி மேடம் நன்கு யோசித்து, மிகவும் நன்றாக எழுதியுள்ளார்கள் இந்தக்கதையை. 

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

உனக்கு மட்டுமல்ல, உன்னைப்போன்ற அறியாத தாய்களுக்கும், தகப்பன்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மாங்கலாய்டு, ஆட்டிசம், மெண்டல் டிஸ்ஸார்டர், ஸ்பாஸ்டிக், செரிப்ரல் பால்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வாழ உரிமையில்லையா .... எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள். 

விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.   


[தினமலர் பெண்கள் மலரில் 28.06.2013 வெளியாகியுள்ள கதை இது]

 

8) சொர்க்கத்தின் எல்லை நரகம்

இது மிகவும் அழகான எனக்குப் பிடித்தமான கதை. ஏற்கனவே நம் ஹனி மேடம் பதிவினிலேயே படித்த ஞாபகமும் உள்ளது. மீண்டும் படிக்க அலுக்காத கதை.

குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளவே கூடாது என சட்டம் சொல்கிறது. ஆனால் பலர் வீடுகளில் சின்னச்சின்னக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். அவர்களும் ஏதோ வறுமையினாலும், கொடுமையினாலும், ஆதரவற்ற நிலையிலும், வயிற்றுப் பசிக்காகவும், வீட்டு வேலைக்கு வந்துவிட நேரிடுகிறது. அது போல வருவோரில் எத்தனையோ பிஞ்சு உள்ளங்களும் உண்டு. 

அந்தப்பிஞ்சு உள்ளங்களாகிய அவர்கள் மனதிலும் குழந்தைகளுக்கே உரிய ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான ஒரு சின்னப் பெண் குழந்தையைப் பற்றிய கதை இது.  

உதாரணமாக கும்மென்ற வாஸனையுடன் கூடிய ஒரு புத்தம் புதிய முழு குளியல் சோப்பினைக் கண்டால், அது தேயும்வரை அதனை நன்கு தேய்த்து நாமும் என்றாவது ஒருநாள் ஆசைதீரக் குளிக்க மாட்டோமா எனத்தோன்றும் ஓர் குழந்தைக்கு. அதுபோல வாஸனையுள்ள ஹேர் ஆயில், ஸ்நோ போன்ற க்ரீம்கள், வாஸனையுள்ள ஃபேஸ் பவுடர், ரோஸ் பவுடர், நறுமணம் கமழும் செண்ட், கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மை முதலியவற்றை உபயோகிக்க ஓர் ஆசை ஏற்படத்தான் செய்யும். இவையெல்லாம் பெண் குழந்தைகளுக்கே உள்ள சின்னச்சின்ன, மிகவும் இயல்பான இயற்கையான  ஆசைகள் மட்டுமே.  

மிகவும் அழகாக, தனக்கே உரிய தனிப் பாணியில், இந்தக் கதையைத் தத்ரூபமாக எழுதி நமக்கு ஓர் மாபெரும் விருந்தே அளித்துள்ளார்கள், நம் ஹனி மேடம்.

அந்தச் சின்னஞ்சிறு குழந்தைத்தொழிலாளியாகிய பெண், தான் வேலைசெய்யும் அந்த வீட்டில், தனிமையில் இருந்து, தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, என்னதான் தப்பு செய்திருக்கட்டுமே, இப்படியா அந்தக்குழந்தையை அடித்து நொறுக்குவாள் அந்த எஜமானியம்மாள் என்ற அந்த ராட்சசி. :(

இந்தக் கதையைப் படித்து முடித்ததும் யாருக்குமே, கண்களில் கண்ணீர் வரப்போவது நிச்சயம். 

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

காலையில் கிளம்பி வெளியே ஆபீஸ் போன, வீட்டு எஜமானியம்மாள் மாலையில் வீட்டுக்குத் திரும்பி விட்டாள். 

தன் வீட்டில், தண்ணீர் நிரப்பி வைப்பது, துணி துவைத்து வைப்பது, களைந்து வைத்துள்ள அரிசியை இட்லி மாவாக அரைத்து வைப்பது போன்ற எந்த ஒரு வேலைகளும் செய்து முடிக்கப்படவில்லை. சமையல் கட்டில் தான் சாப்பிட வைத்திருந்த டிபன் பாக்ஸும் காலியாகியுள்ளது. வேலைக்கு வைத்துள்ள அந்தச்சின்னப் பெண்ணின் அலங்கோலமான அலங்காரங்களைப் பார்க்கிறாள். 

கோபத்தில் பாய்ந்தாள் ... அந்தக் குட்டியின் தலையில் ஒழக்கு இரத்தம் வர்றாப் போலக் கொட்டினாள். அவளின் தலைக்குஞ்சலம் எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தது. தொடையைத்திருகி முதுகில் சாத்துப்படி வைத்தாள். மடேர், மடேரென்று சும்மா ஒன்னா ரெண்டா வரிசையா ஏராளமான அடிகள். 

அந்தக் குட்டி, ஸ்ப்ரிங் மாதிரி ஒரு மூலையில் போய் சுருண்டு விழுந்தது. பயத்திலே பாவாடையிலே ஒண்ணுக்குப் போய்விட்டது. மூக்கில் சளி. பாவாடையால் தொடைத்துச்சுக்கிட்டது.  

குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது. சோப்பும் மையும் பட்ட கண் எரிஞ்சுது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது.


வெரி வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் ...... 
என் ஸ்பெஷல் பாராட்டுகள், ஹனி மேடம். 

[மேரிலாண்ட் எக்கோஸ் 1985 - வெளியானது] 

 

9) அப்பத்தா

மரணம் என்றால் என்னவென்றே இதுவரை அறியாத ஓர் சின்னப்பெண் குழந்தையின் மன உணர்வுகளைச் சொல்லிச் செல்லும் மிகவும் அழகானதோர் கதை. அடிக்கடி வருவது போல, தன் ஆயா வீட்டிலிருந்து, தன் அப்பத்தா வீட்டுக்கு அந்தப்பெண் குழந்தை இப்போதும் வந்திருக்கிறாள்.

கண்டிப்பும் கறாருமாக, ஒருவித அதிகார தோரணையுடன், தான் உள்பட அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்துகொண்டிருந்த தன் அப்பத்தா, இப்போது அசையால் இப்படிக் கிடப்பதைப் பார்த்து ..... என்ன நடந்துகொண்டு இருக்கிறது இந்த வீட்டில் எனத் தெரியாமல் தவிக்கும் குழந்தை. 

டாக்டர் உள்பட யார் யாரோ வருகிறார்கள் .... போகிறார்கள். யாரும் எதுவும் இவளிடம் சொல்லாமலேயே இருக்கிறார்கள். இவளின் அப்பாவை உடனடியாக வரவழைக்க தந்தி கொடுக்க யாரிடமோ பணம் கொடுத்து யாரோ அனுப்பி வைக்கிறார்கள். அவளுக்கும் சந்தோஷம் .... தன் அப்பாவே இங்கு வரப்போகிறார் என்று.

அதிகார ஆளுமைகளுடன் இருந்துகொண்டு, அந்த வீட்டில் ஆட்சி செலுத்தி வந்துள்ள அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் !

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

சாப்பாட்டுப் பந்தில சமையக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு அல்வா கேட்டா கண்ணால முழுச்சே எழுந்திரிக்க வைக்குற அப்பத்தாவா இப்படிக் கிடக்குறாங்க....?

சமையல்காரன் கிட்ட கணக்குப் பண்ணி அளவாச் சாமான் எடுத்துக் குடுத்து சமைக்கச் சொல்லுற அப்பத்தாவா இது....? ஏன் இப்படிப் படுத்துருக்காக... என்ன ஆச்சு... ஹூம்...  

அங்கு வந்த யாரோ சின்னப் பிள்ளைகளை ஓட்டிக்கொண்டு போய் பந்தியில் வரிசையாக உட்கார வைத்தார்கள். ஆல் வீட்டில் பந்தி, வாழையிலையுடன் கனஜோராய் நடந்து கொண்டிருந்தது. இவளையும் உட்கார வைத்தார்கள். சீயம் போட்டிருந்தார்கள். 

இவள் இட்லியை விட்டுப்புட்டுச் சீயத்தைத் தின்றாள். பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....? 

பந்திக்காரன் பக்கத்து இலை ஆயாவுக்குச் சீயத்தை வைக்க வந்தவன் இவள் திருதிருப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன, இன்னொரு சீயம் வேணுமா” என்று கேட்டுவிட்டு இவளுக்கு மேலும் ஒரு சீயம் போட்டுவிட்டுப்போனான். 

அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.

திடீரென்று வெளியே ஒரே அலறல். எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பி ஒப்பாரி வைக்கின்றனர். அப்பத்தாவைச் சுற்றி நின்று ஏதேதோ சடங்குகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. ஆனால் தன் அப்பத்தா மட்டும் எதற்குமே அசைந்து கொடுக்காமல் படுத்துக்கொண்டே இருப்பது இந்தச் சின்னப்பெண்குட்டிக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. 

கடைசியில் ஓர் ஓலைப்பாயில் படுக்க வைத்து, எல்லோரும் அழுதபடி அப்பத்தாவை எங்கோ எதற்கோ சிலர் தூக்கிச் செல்கிறார்கள். அவளும் தெருமுக்கு வரை கூடவே ஓடிப்போய்ப் பார்த்தாள். 

அதற்குள் ஒரு ஐயா அவளைத் திரும்பி வீட்டுக்கு ஓடிவிடும்படி அதட்டினார்கள். வீட்டிற்கு ஓடிவந்தால், எல்லோரும் வீட்டைக்கழுவிக்கொண்டும், தலை முழுகிக் குளித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இரவு நேரத்திலும் வீட்டில் உள்ள எல்லா ட்யூப் லைட்களும் எரிந்துகொண்டிருந்தன. அவளையும் அழைத்துக்கொண்டுபோய் யாரோ ஒரு அயித்தை (அத்தை) அவள் தலையிலும் தண்ணீரைக் கொட்டினாள்.

மறுநாள் காலை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து தெருவில் பள்ளிக்குப் போகும் யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து “ஏய், எங்க வூட்டுக்கு விளையாட வர்றியா” எனக் கேட்கிறாள் இந்தக்குட்டி.  

“அது செத்த வீடு .....செத்துப்போன வீட்டுக்கு நா வரமாட்டேன்” என்று அந்தக்குட்டி சொன்னதும் இந்தக் குட்டிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. 

அதைவிட தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செத்துப்போய் விட்ட அப்பத்தாவிடம் முதல் முறையாகக் கோபம் வந்தது, அந்தக்குட்டிக்கு.
இந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் 
36 மணி நேர இடைவெளிகளில்
வெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:

பகுதி-5 .... 28.09.2016 புதன் ..............   இரவு  10 மணிக்கு
பகுதி-6 .... 30.09.2016 வெள்ளி .........  பகல்  10 மணிக்கு

தொடரும்


 


என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]