2
=
ஸ்ரீராமஜயம்
குலதெய்வமே
உன்னைக் கொண்டாடுவேன்!
சென்ற என் மூன்று பதிவுகளில் “என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்” என்ற தலைப்பில் என் வீட்டைப்பற்றி கொஞ்சம் எழுதியிருந்தேன்.
எவ்வளவு நேரம் வீட்டுக்குள்ளேயே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது? காலாற நடந்து சென்று அருகே உள்ள கோயில் குளம் எனப்பார்த்து மகிழ வேண்டாமா?
எங்களின் குலதெய்வங்கள் மொத்தம் மூன்று. என் முன்னோர்கள் சிறப்பாக வழிபட்ட தெய்வங்கள் இவை.
[1] குணசீலம்
[2] மாந்துறை
[3] சமயபுரம்
வீட்டில் புதிதாகக் குழந்தைகள் பிறந்தால் முடிகாணிக்கை செலுத்த வேண்டியதும் இதே வரிசைக் கிரமப்படி தான் செய்வது வழக்கம்.
குணசீலம் பெருமாள் கோயில்
மாந்துறை சிவன் கோயில்
மாந்துறை காவல் தெய்வமான கருப்பர் கோயில்
சமயபுரம் மஹமாயீ கோயில்
1. குணசீலம் : [திருச்சி To சேலம் மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முக்கொம்பு பக்கத்தில் உள்ளது]
குணசீலம் “ஸ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடாசலபதி” திருக்கோயில்.
முதல் நாள் மாலை ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மறுநாள் காலை திருமஞ்சனமும் செய்து வருவது வழக்கம்.
வருஷத்தில் ஒரு நாள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அகண்ட பாராயணமும் நடைபெறும்.
அன்று பால் குடம் ஏந்திப்போய், அகண்ட பாராயணத்திலும் கலந்து கொள்வது உண்டு.
லக்ஷக்கணக்கான ஆவர்த்திகள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம ஜபம், பலராலும் சேர்ந்து உச்சரிக்கப்பட்டு, நாள் பூராவும் இரவு பகல் எந்நேரமுமாக நடைபெற்று வரும்.
அதுபோல வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் தேர் திருவிழாவும், அன்றைய தினம் நடைபெறும் மிகப்பெரிய அன்னதான விருந்தும் மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.
இணைப்பு இதோ:
http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_05.html
[தலைப்பு: ”குணக்குன்று குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி” ]
இந்தக்கோயிலுக்கு வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம். இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வத்தின் பிரதிநிதி போல என் வீட்டருகே ஒரு கோயில் அமைந்துள்ளது என்பதில் எத்தனை மகிழ்ச்சி. இதோ இங்கே பாருங்கள்:
ஸ்ரீகிருஷ்ணன்
என்கிற
ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
திருச்சி - 2
பெருமாள் மூலவர் சந்நதி
2. மாந்துறை : [திருச்சி To லால்குடி மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருமையான சிவன் கோயில். இதன் முக்கியமான காவல் தெய்வம் கருப்பர் - ஸ்ரீ கருப்பண்ணஸ்வாமி ]
மாந்துறை “ஸ்ரீ பாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் ” திருக்கோயில் [வெகு அழகான சிவாலயம், அந்த அம்மனும் அழகோ அழகு தான்].
இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.
இணைப்பு இதோ:
http://jaghamani.blogspot.com/2011_07_01_archive.html
[தலைப்பு: ”ஆதரவு அளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்” ]
இந்தக்கோயிலுக்கும் வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம். ஆடி வெள்ளி + தை வெள்ளி போன்ற நாட்களில், அம்பாள் சந்நதியில் மாவிளக்கு போட்டுவிட்டு, கருப்பர் உள்பட ஐந்து சந்நதிகளில் விசேஷ அர்ச்சனைகள் செய்து விட்டு மெயின் ரோட்டருகே உள்ள பிள்ளையாருக்கு சதிர் தேங்காய் உடைத்து விட்டு வருவோம்.
எப்போதாவது, கும்பங்கள் பலவும் வைத்து, வேதவித்துக்களை வரவழைத்து, ஸ்ரீருத்ர மஹன்யாச பாராயணம் செய்யச்சொல்லி, சிறப்பு அபிஷேகங்களும் செய்து விட்டு வருவதும் உண்டு.
இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள சிவன் + அம்பாள் + கருப்பர் போன்ற தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவும், என் வீட்டருகே கோயில்கள் அமைந்துள்ளன என்பதில் எத்தனை மகிழ்ச்சி. இதோ இங்கே பாருங்கள்:
திருச்சி வடக்கு ஆண்டார் தெரு மூலையில்
வடக்கு நோக்கியபடி
[ராமா கஃபேக்கு மிக அருகில்]
அமைந்துள்ள கருப்பர் கோயில்,
திருச்சி-2
ஸ்ரீகருப்பண்ண ஸ்வாமி சந்நதி
இதோ மேலும் ஓர் சப்பாணிக்கருப்பர்
திருச்சி-2
வாணப்பட்டரைப் பகுதியில்
தெப்பக்குளம் பர்மா பஜாரை ஒட்டி
கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார்.
ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர்
மிகப்பிரபலமான சிவன் கோயில்
ஸ்ரீ நாகநாதர் சந்நதி
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சந்நதி
3. சமயபுரம்: [திருச்சி To சென்னை மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருமையான மிகப் பிரபலமான சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்.]
மஹாமாயை, மஹமாயீ, மாரியாத்தா என்றெல்லாம் சொல்லி, அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் திவ்யமான க்ஷேத்ரம் இது.
இந்தக்கோயிலின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் தெய்வீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.
இணைப்பு இதோ:
http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_05.html
[தலைப்பு: ”சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்..” ]
இந்தக்கோயிலுக்கும் வருடம் ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருவது எங்கள் வழக்கம். ஒரே ஒரு முறை இந்தக்கோயிலின் தங்கத் தேரினை எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து இழுக்கும் பாக்யம் பெற்றோம்.
இந்தக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வத்தின் பிரதிநிதி போலவும் என் வீட்டருகே ஒரு கோயில் அமைந்துள்ளது என்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. இதோ இங்கே பாருங்கள்:
திருச்சி டவுன் வாணப்பட்டரை
ஸ்ரீ மாரியம்மன் கோயில் கோபுரம்
வாணப்பட்டரை ஸ்ரீ மஹமாயீ அம்பாள் சந்நதி
[அபிஷேக அலங்காரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம்]
^17.07.2018 அன்று எடுத்து இணைக்கப்பட்ட படம்^
என் வீட்டை விட்டு காலாற நடந்து, திருச்சி தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான நந்திகேஸ்வரரையும், மிக அழகான தெப்பக்குளத்தையும், அதன் மேற்குக்கரையில் அமைந்துள்ள வாணப்பட்டரை ஸ்ரீ மாரியம்மனையும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தாலே போதும். இந்திரலோகம் சென்று வந்தது போல மனதுக்கு ஓர் உற்சாகம் பிறந்திடும்.
திருச்சி டவுன் தெப்பக்குளம்
வடக்குக்கரையிலிருந்து
இரவினில் எடுத்த படம்
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் இந்தத்தெப்பக்குளத்தில் நடைபெறும் ஸ்ரீ தாயுமானவர் + ஸ்ரீ மட்டுவர் குழலம்மை தெப்ப உற்சவம், கண்கொள்ளாக் காட்சியாகும்.
தாயுமானவரை நோக்கி அமர்ந்திருக்கும்
மஹா நந்திகேஸ்வரர்.
நந்திக்கு மட்டுமே இங்கே ஒரு தனிக்கோயில்
அமைந்துள்ளதால் திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றி
அமைந்துள்ள தேரோடும் வீதிகளில் ஒன்றான இதற்கு
”நந்தி கோயில் தெரு” என்றே பெயர் உள்ளது.
பிரதோஷ தினங்களில் சந்தனக்காப்புடன்
நந்திக்கு மட்டுமே இங்கே ஒரு தனிக்கோயில்
அமைந்துள்ளதால் திருச்சி மலைக்கோட்டையைச்சுற்றி
அமைந்துள்ள தேரோடும் வீதிகளில் ஒன்றான இதற்கு
”நந்தி கோயில் தெரு” என்றே பெயர் உள்ளது.
பிரதோஷ தினங்களில் சந்தனக்காப்புடன்
இந்த நந்தியானவர் ஜொலிப்பார்.
அந்த அழகினைக்காண நமக்கு
கோடி கண்கள் வேண்டும்.
கோடி கண்கள் வேண்டும்.
என் வீட்டிலிருந்து கிளம்பி காலாற 10 நிமிடங்கள் நடந்தாலே போதும் மேலே காட்டியுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்றிடலாம்.
எல்லாவற்றையும் நிறுத்தி நிதானமாக தரிஸித்து விட்டு திரும்ப வீடு வந்து சேர மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும்.
என் எல்லாக் குலதெய்வங்களையும் ஒருங்கே கும்பிட்டு வந்தது போல ஓர் மன நிம்மதி ஏற்பட்டு விடும்.
வீடு அமைந்தது ஓர் ராசியென்றால் இவ்வாறு என் மூன்று குல தெய்வங்களின் பிரதிநிதிகள் போலவே எல்லாக் கோயில்களும் என் வீட்டுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது, நினைக்கவே மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது அல்லவா!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம், யானை முன்னே நடந்து வர, அதன் பின்னே பிள்ளையார் தேர், தாயுமானவர் தேர், மட்டுவர் குழலம்மை தேர் என மூன்று தனித்தனித் தேர்களும், மற்றொரு நாள் வாணப்பட்டரை ஸ்ரீ மஹமாயீ தேரும் எங்கள் தெருவழியாகவே செல்லும். அவை மிகவும் அற்புதமான காட்சிகளாகும்.
நான் எழுதிய என் முதல் சிறுகதையான “தாயுமானவள்” என்னும் கதையின் முதல் பகுதியில் இந்த வாணப்பட்டரை ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் வருகை பற்றிய வர்ணனைகள் இடம் பெற்றிருக்கும்.
இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html
திருச்சி நகரின் மையப்பகுதியான MAIN GUARD GATE இல் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் தோற்றம். இதையும் என்னால் என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் காணமுடிகிறது என்பதும், என் வீட்டுக்கு மேலும் ஓர் சிறப்பாகும்.
[தலைப்பு: ”திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church)”]
இந்த ஆலயத்தின் சிறப்புகள் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிய, நம் திருச்சி திரு. தி. தமிழ் இள்ங்கோ ஐயா [எனது எண்ணங்கள்] அவர்கள் எழுதியுள்ள பதிவுக்குச் சென்று பார்த்து மகிழுங்கள்.
இணைப்பு இதோ:
http://tthamizhelango.blogspot.com/2012/09/st-lourdes-church_9.html
[தலைப்பு: ”திருச்சி: புனித லூர்து அன்னை ஆலயம் (St. Lourdes Church)”]
சூடான
செய்திகளும் படங்களும்
இன்று 24.02.2013 மாசி மகத் திருநாளை ஒட்டி
ஸ்ரீ ஆனந்தவல்லி + ஸ்ரீ நாகநாதர்
கோயில் திருத்தேர்கள்
சற்று நேரம் முன்பு
பவனி வந்த காட்சிகள்
என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம்
படமாக்கித் தரப்பட்டுள்ளன.
என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்