[சிறுகதை]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
பூக்களை விட அந்தப்பூக்காரி நல்ல அழகு.
பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்.
பின்புறம் ஒன்றும் முன்புறம் ஒன்றுமாக போடப்பட்ட இரண்டைப் பின்னல்கள். பாவாடை சட்டை தாவணி. பளிச்சென்ற தோற்றம். பார்த்தால் படித்த பெண்ணாகத் தோன்றுகிறாள். பூ வியாபரத்திற்குப் புதியவளோ! என்றும் புரியாத நிலை.
அந்தக்கோயில் வாசலில் பூ விற்று வந்த கிழவியின் வியாபாரம் இந்தப் புதுப் பெண்ணின் வருகையால் கடந்த ஒரு வாரமாகப் படுத்துப்போனது.
இந்தப்பெண்ணின் புதிய பூ வியாபாரத்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல, பூ வாங்கும் சாக்கில் பல இளைஞர்கள் அந்தப்பெண்ணை வட்டமிட ஆரம்பித்தனர். சிலர் தங்கள் பாழும் நெற்றியில் புதிதாகப் பட்டையிட்டுக்கொண்டு, அவளை பக்திப்பரவசத்தால் ஆட்கொள்ளப் பார்த்தனர்.
இதுபோல எவ்வளவு பேர்கள் அவளிடம் வந்தாலும், வழியோ வழியென்று வழிந்தாலும், தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால், ஜொள்ளர்களை சமாளித்து, பூ வியாபாரத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி, மிகக் குறுகிய நேரத்திற்குள், தன் கூடை முழுவதும் காலிசெய்துவிட்டு, கை நிறைய காசுகளுடன், கிழவியைப்பார்த்து கண் சிமிட்டியவாறே “வரட்டுமா பாட்டி” எப்படி என் சாமர்த்தியமான வியாபாரம்? என்பது போல, சிரித்துக்கொண்டே சென்று விடுவாள்.
”ஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்பாள் அந்தக்கிழவியும் எந்த விதமான போட்டியோ பொறாமையோ இல்லாமல்.
ஆனாலும் அந்தப்பெண் போன பிறகே பாட்டிக்கு தன் பூ வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.
அந்தப் பெண்ணைப் பற்றி பலரும் இந்தப்பாட்டியிடம் விசாரித்தார்கள். அந்தப்பெண் யார்? அவள் பெயர் என்ன? எந்த ஊரு? இங்கே எங்கே தங்கியிருக்கிறாள்? என்று தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஓர் ஆவலும் ஆர்வமும்.
”அந்தப்பாப்பா யாரோ எனக்குத் தெரியாதுப்பா; மொத்தத்தில் அது என் பிழைப்பைக் கெடுக்கத்தான் இங்கு வந்து போயிட்டு இருக்கு; இனிமேல் அது இங்கே செவ்வாய் வெள்ளி மட்டும் தான் வருமாம், இன்னிக்கு என்னிடம் சொல்லிட்டுப்போச்சு” என்று கிழவி தன்னிடம் விசாரித்த பலரிடமும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இதை கவனித்த ஒரு இளைஞன் மட்டும் கிழவியின் காதருகே போய் “பாட்டி, அந்தப்பொண்ணை செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு வரவேண்டாம்ன்னு கண்டிச்சு சொல்லிடுங்க” என்றான் சற்றே தயங்கியவாறு.
இதைச்சொன்ன அந்த இளைஞனை, அந்தப்பூக்காரக் கிழவிக்கு, அவனுடைய சின்ன வயதிலிருந்தே பழக்கம் உண்டு. செல்லமாக அவனை பேராண்டி என்று தான் கூப்பிடுவாள்.
தினமும் தவறாமல் இந்தக் கோயிலுக்கு வருபவன். உண்மையிலேயே கடவுள் பக்தி உடையவன்.
ஒரு நாள், உடல்நலமின்றி இருந்து, பலத்த மழையில் நனைய வேண்டிய இந்தக்கிழவியை, பாசத்தோடு குடை பிடித்து, அவளின் பூக்கூடையுடன், அவளின் குடிசை வீடு வரை கூடவே போய், அவளை அவள் வீட்டில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தவன்.
இந்தத்தள்ளாத வயதிலும், பூத்தொடுத்து பூ வியாபாரம் செய்து உழைத்து சாப்பிடும் அந்தக் கிழவி மேல் அவனுக்கு ஒரு தனி பிரியம் உண்டு. மேலும் கோயிலுக்குப்போய் ஸ்வாமி கும்பிட்டு விட்டு திரும்ப வீட்டுக்குப்போகும் முன் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது தினமும் பேசிவிட்டுத் தான் போவான்.
சிறு வயதில் ஒவ்வொரு பூக்களின் பெயர்களையும் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
“இது மல்லிகைப்பூ, இது முல்லைப்பூ, இது ஜாதிப்பூ, இது கனகாம்பரப்பூ, இது வாடாமல்லி, இது ரோஜாப்பூ, இது தாழம்பூ, இது வெண் தாமரைப்பூ, இது செந்தாமரைப்பூ, இது மரிக்கொழுந்து, இது ஜவந்திப்பூ, இது பட்டுரோஜா, இது பாரிஜாதம் (பவழமல்லி), இது இருட்சிப்பூ, இது நந்தியாவட்டை, இது செம்பருத்தி, இது மகிழம்பூ, இது வில்வம், இது துளசி” என ஒவ்வொன்றையும் அவனுக்கு அந்தப்பாட்டி பொறுமையாகச்சொல்லிப் புரிய வைத்திருக்கிறாள்.
”மனுஷங்கக்கிட்டே தான் ஜாதிவெறி இருக்குன்னு பார்த்தா, பூக்களில் கூட ஜாதிப்பூன்னு ஒரு ஜாதி தனியா இருக்காப்பாட்டி” என்று புரட்சிகரமாக அவன் சிறு வயதிலேயே கேட்டதை நினைத்து கிழவி பலமுறை தனக்குள் வியந்து இருக்கிறாள்.
தான் பள்ளியில் படித்து முதல் ரேங்க் வாங்குவது முதல், காலேஜில் சேர்ந்தது, காலேஜ் படிப்பு முடிந்த கையோடு, உள்ளூரிலேயே பேங்க் ஒன்றில் நல்ல வேலையில் அமர்ந்துள்ளது, கை நிறைய இப்போது சம்பளம் வாங்குவது வரை, அவ்வப்போது அனைத்து விஷயங்களையும் அந்தப்பூக்காரப் பாட்டியிடம் பகிர்ந்துகொண்டு, அவள் அவனை மனதார வாழ்த்துவதில் பேரின்பம் கொண்டு வருபவன் அவன்.
பெண் வீட்டுக்கு எந்த ஒரு செலவும் வைக்காமல், தான் திருமணம் செய்துகொள்ள விரும்பும், அந்த இளம் பூக்காரப்பெண்ணை, பொது இடத்தில் பலரும் மொய்ப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டமில்லை.
வழக்கம்போல் அந்தப்பூக்கார கிழவியிடம், தன் மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்து, அது நல்லபடியாக நடக்க வேண்டி, ஆசீர்வதிக்கும் படியாக வேண்டினான். அப்போது கோயில் மணி அடித்தது நல்லதொரு சகுனமாகத் தோன்றியது அந்தப்பாட்டிக்கும், அவளின் பேராண்டிக்கும்.
உயர்நிலைப் படிப்புத் தேர்வு முடிந்து, லீவுக்கு தன் வீட்டுக்கு வந்துள்ள தன் பேத்தி, தான் எவ்வளவு தடுத்தும் கேளாமல், தனக்குப் போட்டியாக ஒரு மாதம் மட்டும் பூ வியாபாரம் செய்யப்போவதாகவும், நான் உன் பேத்தி தான் என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளதை அந்தப்பூக்காரக் கிழவி தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
விளையாட்டாக பூ வியாபாரம் செய்ய இங்கு வந்து போன தன் சொந்தப்பேத்திக்கு, அதுவே பூச்சூடி மணமகளாக மாறும் பாக்யத்தைத் தந்துள்ளதிலும், அதுவும் இந்தத் தனக்கு மிகவும் பழக்கமான, ரொம்ப நல்ல பையன் தன் பேத்தியை தன் மனசார விரும்புவதையும் நினைத்துப் பூரித்துப்போனாள்.
எல்லாம் அந்தக் கோயில் அம்பாளின் அனுக்கிரஹம் தான் என்று வியந்து, சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கினாள் அந்தப் பூக்காரக்கிழவி.
“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என்றாள் அந்தக்கிழவி. மீண்டும் கோயில் மணி மேள தாளத்துடன் ஒலித்தது.
-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-
இந்தச் சிறுகதை ‘வல்லமை’ மின் இதழில்
30.09.2011 அன்று வெளியிடப்பட்டது
http://www.vallamai.com/archives/8633/
இந்தச் சிறுகதை ‘வல்லமை’ மின் இதழில்
30.09.2011 அன்று வெளியிடப்பட்டது
http://www.vallamai.com/archives/8633/