’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
15) ‘பாவை விளக்கு’
அகிலன்
[பக்கம் 96 முதல் 99 வரை]
'பாவை விளக்கு' அகிலன் என்று ஜீவி சொல்கிறார்.
’பாவை விளக்கு’ நாவல் கல்கியில் தொடராக வந்த சமயம், இந்த நாவலில் வரும் உமா என்ற கதாபாத்திரதை அகிலன் கதையில் சாகடித்து விடக்கூடாது என்று வாசகர்களிடமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தபால்கள் கல்கி அலுவலகத்திலே குவிந்ததாம்.
ஜீவி இந்த மாதிரி அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை நிறைய இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையெல்லாம் படிக்கும் பொழுது பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளை எவ்வளவு ஆசை ஆசையாக வாசகர்கள் படித்திருக்கிறார்கள் என்று நினைத்துப் பரவசப்பட்டேன். இப்பொழுதெல்லாம் அந்த மாதிரி எழுதறவங்களும் இல்லை, வாசிக்கறவங்களும் இல்லை என்று நினைத்துப் பார்க்க வருத்தமாக இருந்தது.
1975-இல் அகிலனுக்கு அவரின் ‘சித்திரப்பாவை’ நாவலுக்கு ஞானபீடப்பரிசு தேடி வந்தது. இப்படியாக தமிழுக்கு முதல் ஞானபீடப் பரிசைப் பெற்றுத்தந்த பெருமையைத் தேடிக்கொண்டவர் அகிலன்.
இவரின் ‘பெண்’ ‘எங்கே போகிறோம்’ ’பால் மரக்காட்டினிலே’ ’நெஞ்சினனைகள்’ ‘கறுப்புத்துரை’ ‘புதுவெள்ளம்’ ஆகியவை குறிப்பிடத்தக்க பெருமை பெற்றவை. அகிலன் எழுதிய ‘கயல்விழி’ தான் பிறகு, ’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படமாக ஆக்கப்பட்டது, என பல்வேறு செய்திகளைச் சொல்லியுள்ளார், ஜீவி.
16) சிறுதைச் செம்மல்
கு. அழகிரிசாமி
கு. அழகிரிசாமி
இவரும் கல்கி பத்திரிகையில்தான் நிறைய எழுதியிருக்கிறாராம். இவரைப் பற்றியும் இன்னொரு கரிசல் பூமிக்காரர் கி. ராஜநாராயணன் பற்றியும் ஜீவி சொல்லியிருக்கிறார்.
கி.ரா. அவர்களுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கிய அந்தஸ்து பெற்றவை என்று ஜீவி குறிப்பிடுகிறார். அழகிரிசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகளைப் பற்றி ஜீவி எழுதியிருப்பது படிக்கப் படிக்க சுவையாக இருக்கிறது.
இவர் எழுதிய ‘சுயரூபம்’ என்றோர் கதை, பசியின் கொடுமையில் அவஸ்தைப்பட்ட ஓர் மனிதனின் வேதனையைச் சொல்லும் கதை. இவரது கதைகள் பெரும்பாலும் கல்கியில் வெளியானவைகளாகும். ‘திரிவேணி’ ‘’ராஜா வந்தான்’ போன்ற கதைகளும், ‘டாக்டர் அனுராதா’ ’தீராத விளையாட்டு’ ’புது வீடு புது உலகம்’ ’வாழ்க்கைப் பாதை’ போன்ற புதினங்களும் தன் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளதாகச் சொல்கிறார் ஜீவி.
இவர் மலேசியாவில் தமிழ் ஆசிரியராக இருந்ததும், மலேசியப் பத்திரிகை தமிழ்நேசனுக்கு ஆசிரியராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அழகிரிசாமி அவர்கள் கட்டுரைகள் எழுதுவதிலும் ஒப்பாய்வு செய்வதிலும் வல்லவராவார். ‘எங்கனம் சென்றிருந்தேன்’ ‘காணிநிலம்’ என்ற இரண்டு ஒப்பாய்வு நூல்கள் என்றென்றும் இவர் பெயரைச்சொல்லும், என இவரைப்பற்றி மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார் ஜீவி.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்