முன்கதை முடிந்த இடம்:
அவனை நெருங்கி, “என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய்! வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா? திருட்டுப்போய் விட்டதா? என்று விசாரித்தேன். ஆமாம் என்பது போலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
----------------------------------------
“பஸ்ஸில் ஏறும் போதோ, பயணம் செய்யும்போதோ, இறங்கும் போதோ கும்பலில் என் மஞ்சள் பையிலும் எவனோ ப்ளேடு போட்டுக்கிழித்து என் நகைப்பெட்டியையும் திருடி விட்டானப்பா;
ஆனால், ’இதுபோலெல்லாம் நடக்கலாம் ஜாக்கிரதை’ என்று நீ என்னை நல்லவேளையாக அந்தக்கடையிலேயே உஷார் படுத்தியிருந்ததால், ஓட்டலில் சாப்பிடும் போதே மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக என் சுருக்குப்பையில் போட்டு வேட்டித்தலைப்பில் வைத்து இறுக்க முடிந்து கொண்டுவிட்டேன்;
பஸ்ஸில் பிட்பாக்கெட் போனது என் மஞ்சள் பையிலிருந்த காலி மூக்குத்தி டப்பா மட்டும் தான். அந்தக்காலி நகைப்பெட்டி போனால் போகட்டும் என்று என் மனதை சமாதானம் செய்துகொண்டு விட்டேனப்பா;
என்னைச் சரியான நேரத்தில் உஷார்ப்படுத்திய நீ இவ்வாறு நகையைத்தொலைத்து விட்டு வந்து நிற்கிறாயேயப்பா!”என்று என் வருத்தத்தைத் தெரிவித்தேன்.
பிறகு ஆதரவாக அவன் தோளைத் தட்டிக்கொடுத்து, “சரி ..... இப்போ என் வீட்டுக்கு வந்து ஏதாவது சாப்பிட்டுவிட்டு, அல்லது மோர் தண்ணியாவது குடித்துவிட்டுப்பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் எழுதிக்கொடுத்துவிடு; உன் நல்ல குணத்திற்கு, உன் காணாமல் போன நகை நிச்சயம் கிடைத்துவிடும்” என்று ஆறுதல் சொல்லி என் வீட்டுக்கு அவனை அழைத்தேன்.
என் அழைப்பை ஏற்க மறுத்த அவன், கோபமாகவும், வருத்தமாகவும், என்னிடமிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.
இந்தக்காலப் பயலுகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.நல்ல பயலுகளாகவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் இவன்களுக்கு பதட்டம் ஜாஸ்தியாக இருக்கே தவிர, பாவம் .... கவனம் பத்தாது என்று நினைத்துக்கொண்டேன்.
பிறகு நானும் ஒரு வழியாக, வெய்யிலுக்கு குடையைப்பிடித்துக்கொண்டு, மேலத்தெருவின் நடுவில் இருந்த, என் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
புது மூக்குத்தியையும், மொத்தப்பணத்தையும் பத்திரமாக வைக்க வேண்டிய இடத்தில் வைத்துப்பூட்டினேன்.
அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டைப் பையனையே நினைத்துக்கொண்டிருந்ததில், எனக்கு எந்த வேலையுமே ஓடவில்லை. மனதுக்கு மிகவும் வேதனையாகவே இருந்து வந்தது.
மாலை வேளையில் வழக்கம்போல மெயின் ரோட்டுப்பக்கம் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு, கையில் ஒரு முழுத்தேங்காயை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.
அந்தப்பிள்ளையாரிடம், “இன்று காலையில் மட்டும் எனக்குப்பழக்கமாகி, நகை திருட்டுப்போகாமல் இருக்க என்னை சரியான நேரத்தில் உஷார்படுத்தி, வயதான எனக்கு அந்த கும்பலான பஸ்ஸில் உட்கார இடம் போட்டுக்கொடுத்து பலவழிகளில் உதவிசெய்த மனிதாபிமானமிக்க, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையனுக்கு, அவன் தொலைத்ததாகச் சொல்லும் நகைகள் திரும்பக்கிடைத்து, அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என மனதார வேண்டிக்கொண்டேன்.
நான் வாங்கிவந்த புதிய மூக்குத்தி பத்திரமாக என் வீடு வந்து சேர்ந்ததற்கு, அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் ரூபத்தில் வந்து உதவிய பிள்ளையாருக்கு ஒரு சதிர் தேங்காய் அடித்தேன்.
நான் உடைத்த அந்தத் தேங்காய் நன்கு தூள்தூளாக சிதறி உடைந்து விட்டதா என்று பார்க்க, அங்கிருந்த சதிர் தேங்காய் உடைக்கும் தொட்டியைக் குனிந்து நோக்கினேன்.
அதில் நான் உடைத்த தேங்காய் சிதறல்கள் மட்டுமின்றி, எனக்கு அந்தக்கடையில் மூக்குத்தி போட்டுக்கொடுத்திருந்த அந்த மிகச்சிறிய நகைப்பெட்டியும் உடைந்திருக்கக்கண்டேன்.
கஷ்டப்பட்டு ப்ளேடு போட்டு தான் திருடிய நகைப்பெட்டியில் நகை ஏதும் இல்லையே என்ற கடுப்பில், அந்தப் புளியங்கொட்டைக்கலர் சட்டை அணிந்திருந்த பையன் தான், இதை இங்கு போட்டு உடைத்திருப்பானோ என்ற ஒரு சிறு சந்தேகம் எனக்குள் இப்போது எழுந்தது.
அந்த சிறிய நகைப்பெட்டிக்குள் மூக்குத்தி இல்லாததால் ஏமாற்றமடைந்த அவன், அந்த நகை எங்குதான் மறைந்து போயிருக்கும் என்று தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் தான் என் வருகைக்காக இந்தப்பிள்ளையார் கோயில் வாசலில், நின்று கொண்டிருந்திருப்பானோ? என நினைத்து, ஒன்றும் புரிபடாமல் குழம்பிய நான் அந்தப்பிள்ளையாரை நோக்கினேன்.
மற்ற யாரையுமே தவறுதலாக நினைக்கத் தெரியாத வெள்ளந்தியான என்னை நினைத்து அந்தப்பிள்ளையார் அழுதாரோ அல்லது ஆனந்தக்கண்ணீர் விட்டாரோ! திடீரென பலத்த இடி மின்னலுடன் பெரும் மழையொன்று பெய்யத்தொடங்கியது.
-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-
[ இந்தச்சிறுகதை 19.05.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியானது]