அன்புடையீர்,
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
’தனக்குத்தானே நீதிபதி’ போட்டியின் முடிவுகளை அறிந்து கொள்ளும் முன்பாக நம் உயர்திரு நடுவர் அவர்கள், சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கலந்துகொள்வோருக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒருசில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்களின் வெற்றி வாய்ப்புக்களை மேலும் அதிகரித்துக்கொள்ள இவை மிகவும் பயன்படக்கூடும். அதனால் இவற்றை ஊன்றிப்படித்து, மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்.
இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பின்னூட்டமாக நீங்கள் எழுப்பும் எந்த சந்தேகத்திற்கும் நடுவரிடமிருந்து பதில் பெற்று பிரசுரிக்கிறேன்.
இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். பின்னூட்டமாக நீங்கள் எழுப்பும் எந்த சந்தேகத்திற்கும் நடுவரிடமிருந்து பதில் பெற்று பிரசுரிக்கிறேன்.
- அன்புடன் VGK
மனம் திறந்து...
'நீங்கள் தான் நடுவராக இருக்க வேண்டும்' என்று அன்புடன் கோபு சார் இந்த நடுவர் பொறுப்பை எனக்கு கொடுக்க முற்பட்ட பொழுதே அவரிடம் தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னேன்: "சார்! ஒருவர் மட்டும் நடுவராய் இருக்கும் பட்சத்தில் அந்த நடுவரான ஒருத்தரின் விமரிசனப் பார்வையே தேர்வுக்கான அளவுகோலாக மாறிவிடுமே, சார்!" என்று என் பக்க எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
"பரவாயில்லை. நீங்கள் தான் எனக்கு இந்தப் பணியை முடித்துத் தர வேண்டும்" என்று ப்ரியத்துடன் கேட்டுக் கொண்டதால் அந்த அன்புக்குக் கட்டுப்பட்டேன்.
போட்டிக்கு கட்டுரைகள் வர ஆரம்பித்ததும் இயல்பாகவே எனக்கும் இந்த போட்டிக்கான தேர்வுகளில் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. தமிழில் விமரிசனக் கலையைக் கற்பிப்பதில் ஒரு வாய்ப்பு ஏற்பட்டதாக நாளாவட்டத்தில் எண்ணத் தலைப்பட்டேன். அதற்கு தகுதி எனக்கு உண்டா என்பதை விட அந்தத் தகுதிக்கு என்னை ஆட்படுத்திக் கொள்வதில் ஆர்வம் கூடியது. பல்வேறு விஷயங்களில் நான் கொண்டிருந்த விமர்சனப் பார்வையும் அந்தப் பார்வை ஏற்படுவதற்காக வாழும் நாளில் வாசித்துத் தேர்ந்ததும் அதற்கு துணையாக நின்றது.
'எங்கோ படித்தது', 'யாரோ சொன்னது' என்று விதவிதமான போர்வைகளைப் போர்த்திக் கொண்டும், எந்த மறைப்பும் இல்லாமல் 'நடுவர் குறிப்பு' என்று நேரடியாகவும், கதைகளுக்கான விமரிசனங்கங்கள் எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று என் யோசனைகளை இதற்கு முன்பாகவே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
அவற்றையெல்லாம் தேடித்தேடிப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய சிரமத்தைக் கூட விமர்சகர்களுக்கு வைக்காமல் ஒரே பதிவில் எல்லாவற்றையும் ஒரு சேர அடக்கி சமீபத்தில் கோபு சார் கொடுத்திருந்தது, [ http://gopu1949.blogspot.in/ 2014/07/tips-suggestions-for- winning.html ] எந்த அளவுக்கு சிறப்பாக தன் கதைகளைப் பலரின் விமரிசனங்களுக்கு உட்படுத்த வேண்டும் என்கிற அவரது ஆவலைச் சொல்வதாக அமைந்திருந்தது.
எழுதுகோல் பிடித்த எவரும் பொதுவாக தன் எழுத்துக்களை இன்னொருவர் விமரிசிப்பதை அவ்வளவு பொறுமையுடன் கேட்டு ரசிக்க மாட்டார்கள். இதிலும் கோபு சார் விதிவிலக்காக இருப்பதும், பரிசுகள் வழங்கி மகிழ்வதும் எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
வெகு அரிதாகக் காணப்படுகிற, எழுதுகிறவருக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகிற இந்த நல்ல குணம் தான் அவர் வாழ்க்கையிலும் படிந்து அவர் கண்ட பல வெற்றிகளுக்குக் காரணமாகவும் இருக்கலாம். அவரை 'ரோல் மாடலாக'க் கொள்ள நினைப்பவர்கள் தங்கள் குறிப்புப் புத்தகத்தில் தாராளமாக இதைக் குறித்துக் கொள்ளலாம்.
இப்படித் தான் எழுத வேண்டும் போலிருக்கு என்று கதாசிரியரை பாராட்டி எழுதினால் தான் தேர்வாகும் என்கிற பொது அபிப்ராயமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான், வார்த்தைக்கு வார்த்தை வலிந்து பாராட்டாமல் விமர்சகர்கள் இருந்தால் நல்லது என்றும் ஒரு சமயத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்த எனது குறிப்பைக் கூட ரசித்தபடியே பதிவில் பிரசுரித்தார் அவர். விமர்சனங்களில் கதாசிரியரின் பெயரைச் சொல்லி அடுத்தடுத்து பாராட்டுவதைக் குறைத்துக் கொண்டு கதாசிரியர் என்று சொன்னால் போதுமே என்று இப்பொழுது கூட நினைக்கிறேன்.
'தல', 'வாத்தியார்' போன்ற திரைப்பட தாக்கத்தால் தாக்குண்டு தன்னுள் முகிழ்க்கும் வார்த்தைப் பிரயோகங்களைக் கூடக் குறைத்துக் கொள்ளலாம். கதையைப் படித்த சந்தோஷத்தில் ஏதோ ஓரிரு தடவை குறிப்பிட்டால் வாசித்த வாக்கில் துண்டாகத் தெரியாது போகும். ஆனால் அதுவே வழக்கமாகிப் போய் 'ஓகோ, இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும் போலிருக்கு' என்று ஒவ்வொருவரும் இதையே பின்பற்றினால் நாலாந்தர விமரிசனங்களாய் அமைந்து விடுகின்ற ஆபத்தும் இருக்கிறது. அப்படியான வார்த்தைகளுடன் எழுதப் பட்டிருக்கும் விமர்சனங்களும் தேர்வாகியிருக்கும் பட்சத்தில், அந்த விமரிசனங்களின் வேறான நுண்ணிய பார்வைக்கும் வேறு சிறப்புகளுக்காகவும் தேர்வாகியிருப்பதாகக் கொள்ள வேண்டுகிறேன். ஒரே ஸ்டீரியோ டைப்பாக இல்லாமல் வெவ்வெறு வார்த்தை பிரயோகங்களுடன் மாறுபட்ட பார்வைகளோடு எந்த ஒரு விமரிசனமும் அமைந்து விட்டால் அது புதுமையாக இருக்கும். வாசிப்பவரின் கவனத்தையும் கவரும். நாற்பது கதைகளுக்கு விமரிசனம் எழுதப் போகிறோம் என்று ஏற்பட்டான பிறகு விதவிதமாக எழுதுவதென்பது இயல்பாக ஏற்பட்டால் தானே எடுப்பாகவும் இருக்கும்?... தினமும் காலையில் இட்லி என்றால் எப்படி?....
பார்த்தால் நம் எல்லோருக்கும் தெரிந்த சமாசாரங்கள் தாம் கதை ரூபமெடுக்கின்றன. பாதிக் கதையை படிக்கையிலேயே இப்படித் தான் இதன் முடிவு இருக்கும் என்று கண்டு கொள்வாரும் பலருண்டு. இருந்தும் இதில் கதாசிரியரின் திறமை என்ன இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை எப்படிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். ஒவ்வொரு கதையிலும் இப்படிச் சொன்னது தான் அவரின் சிறப்பு. அந்த சிறப்பை எடுத்துக் காட்டி இதுவரை சொன்னவர்கள் சிலரே. அவர்களே தொடர்ந்தும் பரிசு பெறுகிறார்களே தவிர, எந்தப் பரிசும் யாருக்கும் நிச்சயப்படுத்தப் பட்டதல்ல. கதை 'சொல்லப்பட்ட விதம்' குறித்து சிலாகித்துச் சொன்னவர்கள் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். விமரிசனங்களுக்கு இது தான் முக்கியம். கதையே அல்ல.
இதைக் கொஞ்சம் உங்கள் மனசில் படிகிற மாதிரி விளக்க வேண்டும். எந்தக் கதையும் ஒரு நிகழ்வின் அடிப்படையிலே அமைந்து விடுவதால், வாழ்க்கையின் பல நிகழ்வுகள் நமக்கும் பரிச்சயமாகி இருப்பதால் இதே மாதிரியான கதைக்கரு யார் மனதிலும் தோன்றலாம். அதனால் ஒரு கதையைப் பொறுத்தமட்டில் அந்தக் கதையின் அடிநாதம் எழுத்தார்வம் கொண்ட பலருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது. அப்படியான ஒரு கதைக் கருவை கதையாக சமைத்து அதற்கு கதை என்கிற உருக் கொடுப்பது தான் எழுத்தாளனின் வேலையாகிப் போகிறது. அந்தக் கருவையே பலரிடம் கொடுத்து கதையாக இதற்கு வடிவம் கொடுங்கள் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதைச் செய்வார்கள் இல்லையா?.. ஒரு கதையின் அடித்தளத்திற்கு அடுத்து அடுத்து பலவிதமான அடுக்குகள் கொடுத்து உருக்கொண்ட கதையாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் உருவாக்குவார்கள் இல்லையா?.. இதை கோபு சார் எப்படிச் செய்திருக்கிறார், எப்படியான அழகழகான அடுக்குகள் கொடுத்து இந்தக் கதைக் கட்டிடத்தை நிர்மாணித்திருக்கிறார் என்று ரசித்து விவரிப்பது தான் நல்ல விமரிசனம். அதுவே விமர்சகர்களின் வேலையாகிப் போகிறது.
இரசனையின் அடிப்படையில் குறைகளும் தோன்றலாம். தேர்ந்த ரசனையாளரால் அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. அதனால் தான், தேர்ந்த ரசனையாளன், தான் ரசித்த ரசிப்பின் தரிசனத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் திறம்பட விவரிப்பவனாய் ஆகிப் போகிறான். இவனது வெளிப்பாட்டு ரசனையும் இன்னொருவரின் ரசனையாக ஆகும் பொழுது அந்த விமரிசனமும் கலை ரூபம் கொள்கிறது. கதைகள் மட்டுமல்ல தேர்ந்த விமரிசனங்களும் கலைப் படைப்புகள் தாம்.
சில கதைகளில் அந்தக் கதையின் முடிவில் உங்களுக்கு திகைப்பை ஏற்படுத்துவதற்காக கதாசிரியர் கதையின் போக்கில் வாசிக்கும் உங்களை வெவ்வேறு கோணங்களில் திசைதிருப்பலாம். அப்படி செய்தால் தான் அந்தக் கதையின் முடிவில் உங்களுக்கு திகைப்பு ஏற்படும். துப்பறியும் கதைகளின் பெரும்பாலான கதைகள் இத்தகைய வடிவங்களை தவிர்க்கவே முடியாமல் கொண்டிருக்கும். சமூக கதைகளிலும் கோபு சார் சிலவற்றில் இந்த முயற்சியை செய்திருக்கிறார். (உ-ம்: அதிகாலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு போக வேண்டியிருக்க முதல் நாள் இரவே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்த ஒரு முன் எச்சரிக்கை நபரைப் பற்றிய கதை!) அந்தக் கதையில் கோபு சார் கடைசி முடிவை நீங்கள் எதிர்பார்க்காமல் இருப்பதற்கு தானே வெகு சிரமப்பட்டு வெவ்வேறு சிந்தனைகளில் உங்களை சிறைப்படுத்துகிறார்? அப்படி அவர் செய்திருந்த 'வழி திருப்பல்'களை ஒவ்வொன்றாக உணர்ந்து ரசித்து பாராட்டியிருந்தால் ரொம்பவும் சிறப்பாக இருந்திருக்கும். அதை விட்டு விட்டு அந்த முன் எச்சரிக்கை பேர்வழி இதையெல்லாம் செய்திருந்தால் இப்படி ஏற்பட்டிருக்காது என்று 'பிரிஸ்கிரிப்ஷன்' கொடுத்தால் எப்படி?..
ஆக, கதையின் போக்கை கதையின் போக்கிலேயே ரசிக்க வேண்டும். அந்த ரசனையை விமரிசனமாக்க வேண்டுமே தவிர அந்தக் கதையை அல்ல. கதையின் கருவை எடுத்துக் கொண்டு அலசோ அலசோ என்று அலசக் கூடாது. அப்படி அலசுவதற்கென்று சில பிரச்னை கதைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்காகவும் மாறுபட்ட சிந்தனைகளுக்காகவும் இலட்சிய வேட்கையோடு எழுதப்படுகின்ற கதைகள்.
கோபு சாரின் கதைகளோ பெரும்பாலும் நமது நடைமுறை வாழ்க்கை அவலங்களை, அலட்சிய போக்குகளை, கோணல் மாணல்களை, குடும்பப் போக்குகளை சித்திரமாக்குகின்ற நகைச்சுவை தூக்கலாக இருக்கின்ற கதைகள். படிப்பவர்களை ரொம்பவும் சிரமப்படுத்தாத கதைகள். பெரும் பாலும் நான்கு வரிக் கதைகள். இந்த நான்கு வரிக் கதையையும் மறுபடியும் பல வரிகளில் எடுத்துச் சொன்னால் எப்படி?.. அந்த நான்கு வரிக் கதையை நான்கு பக்கங்களுக்கு நாம் ரசிக்கிற மாதிரி அவர் எப்படி எழுதியிருக்கிறார் என்பதே அவரின் சிறப்பு. அந்தச் சிறப்பை/சிறப்பின்மையை விமரிசனமாய்ச் சொல்வதே நம் எதிர்பார்ப்பு.
கதையின் நிகழ்வுகளில் கோபு சார் இழைத்திருக்கும் நகாசு வேலைகளைப் பற்றிச் சொல்லுங்கள். உங்களை மயக்கும் சொக்குப் பொடி தூவல்களைப் பற்றிச் சொல்லுங்கள். 'குபுக்'கென்று சிரிப்பை வரவழைக்கும் அவர் திறமையை நீங்களும் சிரித்தபடியே சிலாகியுங்கள்.
அது தானே வேண்டும்?.. அது தானே தேர்வாகும் தகுதிக்கான சுலபவழி?.. ஆக, இனி அவரின் கதையையே மறுபடியும் நீங்கள் வர்ணித்து ஊடே ஊடே விமரிசன வரிகளைச் சேர்க்க வேண்டாம். அப்படி எழுதித்தான் உங்களுக்குப் பழக்கம் என்றால் மாற்றி எழுதிப் பார்த்தீர்களானால் உங்கள் விமரிசன எழுத்தை நீங்களே ரசிக்கிற வாய்ப்பு வாய்க்கலாம். 'எழுதுகிற எதுவும் யாருக்காகவும் அல்ல; தனக்காக; தன் சுயரசனைக்காக' என்கிற எண்ணம் முழுசாய் நம்மை மூழ்கடிக்கிற பொழுது எழுத்தும் வசப்படும். முடியாதது எதுவுமே இல்லை; நாம் முயல வேண்டும். அவ்வளவு தான்.
அடுத்தாற் போல் கோபு சார் தன் கதைப் பதிவுகளின் இடையே எங்கிருந்தெல்லாமோ உருவி எடுத்துப் போடும் படங்களைப் பற்றி. அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற் போல் அவர் பதிக்கும் சித்திரங்களைப் பாராட்டி பல வரிகள் விமரிசனத்திற்கு ஊடே. கோபு சாரின் எழுத்தைப் பற்றி எழுதுவதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்றால் தான் நீங்கள் சித்திரங்களுக்குப் போக வேண்டும். இந்த சித்திரங்கள் இல்லாமல் ஒரு புத்தகத்தில் கோபு சாரின் கதைகள் இருந்து அதைப் படித்தால் எப்படி விமர்சிப்பீர்களோ, அப்படி விமரிசனம் செய்யுங்கள். ஒன்று தெளிவாக வேண்டும் நமக்கு. அந்த படங்கள் தகுந்த இடத்தில் தகுந்த படமாக அமைத்தது நமது வாசிப்புணர்வை மேம்படுத்தவே.
அவற்றை ரொம்பவும் ரசித்தீர்களென்றால், அவை இல்லாமல் இவர் எழுத்து இல்லை என்று ஆகிப்போகும். அந்தக் கோணத்தில் கோபு சாரின் கதைகளை ரசிப்பது ஆகச்சிறந்த ஒரு எழுத்தாளரை நாம் குறைத்து மதிப்பீடு செய்தவர்களாய் ஆகிப்போவோம். அதனால் படங்களைப் பற்றி அடக்கி வாசிப்போம்; அறவே வேண்டாம் என்றாலும் சரியே.
எதையாவது எடுத்துக் காட்டாக எழுதி (பொதுவாக பலர் திரைப்படப் பாடல்கள்) கதைகளை விமரிசிக்கிறார்கள். விமரிசனத்திற்காகவோ, விமரிசன ரசனையின் மேம்பாட்டுக்காகவோ திரைப்பாடல்களும் உள் நுழைகின்றன. அப்படி நுழையும் பொழுது எதற்காக எது என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும். கதைக்காக பாடலா, பாடலுக்காக கதையா என்கிற தெளிவு வேண்டும். இது இவர் கதைகளைப் பற்றி விமரிசனப் பகுதியாதலால் இவர் கதைப்போக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பதே முக்கியமாகிப் போகும். இவரும் அந்தந்த திரைப் பாடல்களை நினைவில் கொண்டு அந்தந்த கதைகளை எழுதவில்லை என்பதும் நம் நினைவில் நீங்காது இருக்க வேண்டும். இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் அந்தந்த திரைப்பாடல்களிலிருந்து தனியே கோபு சாரின் கதைகளைப் பிரித்துப் பார்த்து கோபு சாரின் கதைகளை ரசிக்கிற பக்குவம் கொள்ள வேண்டும்.
அடுத்து சிலரது விமரிசனக் கட்டுரைகளில் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகள். சொல்லப் போனால் இவ்வளவு தேர்ச்சியுடன் எழுதிப் பரிசு பெறுபவர்கள் எழுத்துப் பிழைகளுடன் எழுதக் கூடியவர்கள் அல்லர். அப்படியான பிழைகளுக்குக் காரணம் அவசரகதியில் திருப்பிப் படித்துப் பார்க்கக்கூட நேரமில்லாமல் கட்டுரைகளை அனுப்புவதாகத் தான் இருக்க வேண்டும். பல்வேறு பணிகளுக்கிடையே இதுவும் ஒன்றாக இருப்பதைத் தவிர்த்து பல்வேறு பணிகளில் இதையும் ஒன்றாக அமைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் கோபு சாருக்கு இதுவே உங்களிடம் எதிர்ப்பார்க்கும் ஒன்றாக அமைந்து அதற்கு பரிசளித்து தானும் ஆனந்தப்பட வேண்டும் உங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்கிற ஆசை இருப்பதினால்.
எழுதியதை திருப்பிப் படித்தல் என்பது ஒரு நல்ல அனுபவம். மறுபடியும் படித்துப் பார்க்கும் பொழுது தான் இடையில் இன்னொரு கருத்தைச் சேர்க்கலாமே என்று தோன்றும். எழுதியது போதாது என்றால் மேலும் எழுதுவதற்கு ஏதாவது கிடைக்காதா என்று தேடச் சொல்லும்.. பிழைகளைத் திருத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லாவற்றையும் விட நாம் எழுதியதை நாமே திருப்பிப் படிக்கையில் மனதிற்கு ஒரு நிறைவு ஏற்பட்டு நம்மை நாமே பாராட்டிக் கொள்ளத் தோன்றும். அந்த பாராட்டு கிடைக்கிற வரை ஏதோ குறை இருப்பதாகவே மனசு நினைக்கும். ஆனால் நிறைவும் திருப்தியும் கிடைத்து விடுகிற தருணம் இருக்கிறதே, ஆயிரம் பொன் கிடைத்தாலும் கிடைக்காத மன சந்துஷ்டி இது. பொருளாதார சுகத்தால் கிடைக்காத ஆரோக்கியத்தை இந்த திருப்தி மனசுக்கு அளிக்கும்.
ஒரு தடவை கோபு சார் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது. 'தேர்வாகும் இந்த விமரிசனங்களை புத்தகமாகக் கூட நான் போடலாம்' என்று எப்பவோ சொன்னது நினைவுக்கு வருகிறது. 'லாம்' தான்; இருந்தாலும் நினைத்துப் பாருங்கள். பதிவு என்பதால், பதிவுப் போட்டி என்பதால் மனம் போன போக்கில் எந்த வார்த்தையோ, என்ன வரியோ என்று எல்லாமே அமைகிறது.
இந்த எழுத்துக்களே புத்தக உருக்கொண்டால் எப்படியிருக்கும்?.. நினைத்துப் பாருங்கள்.
அப்படிப் புத்தகமாக பிரசுரித்தால் அதற்கு தகுதி பெறும் அளவில் உங்கள் விமரிசன எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
இது தான் சிறப்பான தேர்வு என்று தனியாக எதுவும் இல்லை; போட்டிக்கு வரும் கட்டுரைகளிலிருந்து தான் சிறப்பு தேர்வு பெற வேண்டும். கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
பதிவுலகில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட எழுத்தில் கொள்ளாத சிறப்பு சேரவேண்டும் என்பதற்காக இவற்றையெல்லாம் குறிப்பிடத் தலைப்பட்டேன்.
நிறைய எதிர்பார்ப்பும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
நடுவர்
’தனக்குத்தானே நீதிபதி’
போட்டியில்
பரிசு வென்றவர்கள்
பற்றிய அறிவிப்பு
போட்டிக்கான இணைப்பு:
மேற்படி போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நீதிபதிகளுக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
’VGK-26 பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா’
என்ற நகைச்சுவைக் கதைக்கு வந்து குவிந்திருந்த ஏராளமான விமர்சனங்களில் உயர்திரு நடுவர் அவர்களால் பல கட்ட வடிகட்டலுக்குப்பின்பு,
இறுதியாக ஐந்து விமர்சனதாரர்களுக்கு மட்டும் பரிசளிக்க வேண்டி,
ஒன்பது விமர்சனங்களை தேர்ந்தெடுத்து,
மேலும் அதில் நான்கை வடிகட்ட வேண்டிய நிலையில்
இந்தப்போட்டி நடுவர் அவர்களின் ஒப்புதலோடு என்னால் அறிவிக்கப்பட்டிருந்தது.
கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது விமர்சனங்களில்
முதல் பரிசு இருவருக்கு,
இரண்டாம் பரிசு இருவருக்கு
மூன்றாம் பரிசு ஒருவருக்கு
என ஆகமொத்தம் ஐந்து பரிசுகளைத்
தேர்வு செய்வதற்கான போட்டி என
அனைத்துப்பதிவர்களும், வாசகர்களும்
கலந்துகொள்ளும் விதமாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப்புதுமையான போட்டிக்கான
பரிசுத்தொகை ரூ. 300 என்றும்
இதை யார் வேண்டுமானாலும் சுலபமாக
வெல்ல முடியும் எனவும் அறிவித்திருந்தோம்.
இதில் நாம் அறிவித்திருந்த ஒரே நிபந்தனை...
நீதிபதியாகிய தங்களின் தீர்ப்பு
தலைமை நீதிபதியாகிய உயர்திரு நடுவர் அவர்களின்
இறுதித்தீர்ப்புடன் எல்லாவிதத்திலும்
100% பொருத்தமாக அமைய வேண்டும் என்பது மட்டுமே.
ஒருவருக்கு மேற்பட்டவர்களால் மிகச்சரியான தீர்ப்புகள்
வழங்கப்பட்டிருந்தால் பரிசுத்தொகை சமமாகப் பிரித்தளிக்கப்படும்
எனவும் சொல்லியிருந்தோம்.
அதன்படி இந்தப்போட்டியில் கீழ்க்கண்ட மூன்று நபர்கள் மட்டுமே
தங்களின் தீர்ப்பு உயர்திரு நடுவர் அவர்களின் இறுதித்தீர்ப்புடன்
100% பொருத்தமாக அமையும் விதமாக எழுதி அனுப்பியுள்ளனர்.
மொத்தப்பரிசுத்தொகை இந்த மூவருக்கும்
சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.
[ 1 ]
திருமதி ராதாபாலு அவர்கள்
http://enmanaoonjalil.blogspot.com/
[ என் மன ஊஞ்சலில்..! ]
[ 2 ]
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
http://jaghamani.blogspot.com/
[ மணிராஜ் ]
[ 3 ]
திரு. சுந்தரேசன் கங்காதரன் அவர்கள்
ASST. EXECUTIVE ENGINEER, T.N.E.B.,
[இவருக்கு தற்சமயம் வலைத்தளம் ஏதும் இல்லை]
மூவருக்கும் நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மேலும் ஒரே ஒருவருக்கு மட்டும்
கூடுதலாக ஊக்கப்பரிசாக
ரூ. 50 வழங்கிட விரும்புகிறேன்.
கூடுதலாக ஊக்கப்பரிசாக
ரூ. 50 வழங்கிட விரும்புகிறேன்.
இவரின் தீர்ப்பு மட்டும் நடுவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
அதே ஐந்து வெற்றியாளர்களின் விமர்சனங்களையே
பிரதிபலிப்பதாக இருந்தும்கூட
முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வகைப்படுத்தியுள்ளதில்
சற்றே வித்யாசத்துடன் அமைந்து போய் உள்ளது.
இவர் அளித்துள்ள தீர்ப்பு:
VGK 26002 + VGK 26003 for First Prize
VGK 26010 + VGK 26009 for Second Prize
VGK 26007 for Third Prize
உயர்திரு நடுவர் அவர்களின் இறுதித் தீர்ப்போடு
இவரின் தீர்ப்பினை ஒப்பிடும்போது
VGK 26002 மற்றும் VGK 26010 ஆகிய இரண்டு மட்டுமே
ஒன்றின் இடத்தில் மற்றொன்றாக மாறி அமைந்துள்ளது.
இவர் அளித்துள்ள தீர்ப்பு:
VGK 26002 + VGK 26003 for First Prize
VGK 26010 + VGK 26009 for Second Prize
VGK 26007 for Third Prize
உயர்திரு நடுவர் அவர்களின் இறுதித் தீர்ப்போடு
இவரின் தீர்ப்பினை ஒப்பிடும்போது
VGK 26002 மற்றும் VGK 26010 ஆகிய இரண்டு மட்டுமே
ஒன்றின் இடத்தில் மற்றொன்றாக மாறி அமைந்துள்ளது.
எனினும் இவருடைய முயற்சியினையும்,
கருத்துக்கணிப்பினையும், தீர்ப்பினையும்
நான் மிகவும் உளமாற பாராட்டி மகிழ்கிறேன்.
இந்த ஊக்கப்பரிசினைப் பெறுபவர்:
கருத்துக்கணிப்பினையும், தீர்ப்பினையும்
நான் மிகவும் உளமாற பாராட்டி மகிழ்கிறேன்.
இந்த ஊக்கப்பரிசினைப் பெறுபவர்:
திருவாளர் இ.சே. இராமன் ஐயா அவர்கள்
kanakkaayan.blogspot.com
தங்களுக்கு என் மனம் நிறைந்த
பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஐயா.
- vgk
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-28
வாய் விட்டுச் சிரித்தால் ....
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்