முன்கதை முடிந்த இடம்:
திடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.
நான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்; முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்; தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.
இருந்தும் எனக்கொரு பெரிய குறை. இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது! என்ற வருத்தம் ஏற்பட்டது.
=================================
தொடர்ச்சி .................................பகுதி-3
”இதே கலர் இதே டிசைனில் கை வைத்ததாக வேண்டும்” என்றேன்.
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவர்களுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. மல்லாக்காக இருந்த அந்தச் சுடிதாரை குப்புறப்படுக்கப்போட்டாள் அந்த விற்பனைப்பெண். கைகள் இரண்டும், சுடிதாரின் பின்புறம் முதுகுப்புறமாக பின் போட்டு ஒட்டப்பட்டிருந்ததை என்னிடம் சுட்டிக் காட்டினாள்.
அச்சச்சோ! அந்தக்கைகளுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி வெட்டி பின்புறமாக ஒட்டி வைத்துள்ளீர்கள்? ஒருவித அனுதாபத்துடன் வினவினேன் அப்பாவியாக நான்.
“கைகளைத்தனியே இப்படித்தான் இங்கே வைத்திருப்பார்கள் சார்; அவைகளைத் தனியே வைத்து அவரவர் விருப்பப்படி தைத்துக்கொள்ள வேண்டும்; ஒரு சிலர் கைகள் ஏதும் வேண்டாம், அப்படியே காத்தாட இருக்கட்டும் என்பார்கள்; அதனால் தான் அவற்றைத் தைக்காமல் தனியாக இப்படி வைத்திருக்கிறார்கள்” என்றாள்.
இந்த விளக்கத்தைக்கேட்ட நான் ஒரு வழியாக நிம்மதி அடைந்தேன். அப்படித்தனியே தொங்கிய கைகளும், தோள்பட்டையையொட்டி தைக்கப்பட வேண்டிய இடத்தில் கும்மென்று எக்ஸ்ட்ரா துணிகொடுத்து பஃப் வைத்ததாகவும், கீழே அழகிய கண்ணைக்கவரும் தங்கக்கலரில் பார்டர் கொடுத்கப்பட்டதாகவும், கரும்பச்சை நிறத்தில் ஜம்மென்று இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
என் முகம் வெளிப்படுத்திய திருப்தியை உணர்ர்ந்த அந்த விற்பனைப்பெண் , ”விலை ரூபாய் 2400 மட்டுமே, அதிலும் 10% தள்ளுபடி உண்டு, சார்” என்றாள்.
“இதற்கு மேட்சாக இதே கலரில் கால் குழாயும் (பேண்ட்டும் ) அங்கவஸ்திரமும் ( துப்பட்டாவும் ) தருவீர்கள் அல்லவா?” என்றேன்.
மறுபடியும் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “அதே கலரில் வராது சார், யூனிஃபார்ம் மாதிரி போட மாட்டார்கள்” என்றாள்.
“இதற்கு ஜோடி இது தான்” என்று ஒரு வித அழுகமாங்காய் [அழுகலான மாவடு] கலர் போன்ற பழுப்புக் கலரில், ஆனால் மிகவும் நயமான கொசுவலை போன்ற துணியில் துப்பட்டாவும், கால் குழாயும் எடுத்துக் காட்டினாள். உள்புறம் துணி கொடுத்து, டபுள் ஸ்டிச்சிங் செய்து தொளதொள என்று இருந்தது அந்தக் கால்க்குழாய் (பேண்ட்).
எனக்கு மட்டும் அதே கரும்பச்சைக் கலரில் மேட்ச்சாக இல்லாமல் மங்கிய கலரில் உள்ளதே என்று ஒரு பெரும் குறை மனதுக்குள் இருந்தது.
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் இருந்த போது, அவற்றைப் பேக் செய்து கொண்டே, “ஒன்று போதுமா சார், வேறு ஏதாவது பார்க்கிறீங்களா” என்றாள்.
கால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன், பணம் ரூ. 2160 மட்டும் செலுத்தி விட்டு, பார்ஸலை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து புறப்பட்டேன்.
அந்த பரபரப்பான பஜாரில், வழிநெடுகிலும் பல இளம் வயதுப் பெண்கள் சுடிதாருடன் தென்பட்டனர். நான் அந்தத் தெருவின் ஒரு ஓரமாக நின்றபடி, வாழ்க்கையில் முதன் முதலாக, அந்த இளம் வயது பெண்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோட்டமிடலானேன். அவர்களைப்பார்த்துக்கொண்டே என் மனதினுள் சுடிதார்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தலானேன்.
அவர்களில் பாதிப் பேர் முக்கால் சைஸாக தொடை வரையிலும், மீதிப்பேர் முழுவதும் மறைப்பது போல முழங்காலுக்குக்கீழ் சற்றே இறக்கமாக (ஃபுல் ஸ்லீவ்ஸ்) சட்டையும் அணிந்திருந்தனர்.
அவர்களில் முக்கால் வாசிப்பேர் சுடிதார் ஒரு கலரிலும், துப்பட்டாவும், கால் குழாயும்வேறு கலரிலும் அணிந்திருந்தனர்.
மீதி கால்வாசிப் பேர்கள், எல்லாம் ஒரே கலரில் மேட்ச் ஆக அணிந்திருந்தனர்.
இந்த டீன் ஏஜ் பெண்களையெல்லாம் விதவிதமான சைஸ்களிலும், கலர்களிலும், இன்று மட்டும் லுக் விட்ட எனக்கு மீண்டும் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது.
தவறாக நினைத்து விடாதீர்கள். நான் வாங்கி வந்துள்ள சுடிதார் செட்டில், சுடிதார் ஒருகலரும், கால்க்குழாய் வேறு கலருமாக இருப்பதாலும், அதுவும் ஆஃப் ஸ்லீவ்ஸுடன் தொடைவரையுள்ள மாடலாக இருப்பதாலும், அது இன்றைய நவ நாகரீகப் பெண்கள் உபயோகிக்கக் கூடிய பேஷன் தானா, என்பது தான் என் சஞ்சலமும், சந்தேகமும்.
இதுபோல சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் சுடிதார் அணிந்த பல பெண்களை, பலவடிவங்களிலும், பல்வேறு ஆடைகளுடனும் கண்குளிர தரிஸித்து வந்த நான், இனிமேல் சுடிதார் அணிந்த எந்தப் பெண்ணையும் பார்த்து மனதைச் சஞ்சலப் படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன், மலைவாசல் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து என் வீடு நோக்கிப் புறப்பட்டேன்.
ஆட்டோவில் வரும்போதும் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின. பெரிய பையன்கள் கல்யாணத்திற்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புடவைகள், பல்வேறு கலர்கள், டிசைன்கள், விலைகள் என அள்ளி வந்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அளித்து மகிழ்வித்த அனுபவம் எனக்கு உண்டு. இன்று முதன்முதலாக ஒரு சுடிதார் எடுக்கப்போய் அதிலும் பல புதிய அனுபவங்களையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதிலும் ஒரு மகிழ்ச்சியே ஏற்பட்டது என்றாலும், மனதில் ஏதோ ஒரு சின்ன விசாரம் இருந்து வந்தது.
புடவையில் கூட எனக்கு என்று ஒருசில தனி அபிப்ராயங்கள் உண்டு. அதாவது ஒருசில புடவைகள் ஒருசிலர் கட்டிக்கொண்டால் மட்டுமே மிக அழகாக இருப்பதுபோல எனக்குத் தோன்றும். அதுபோல ஒருசிலர் எந்த ஒரு புடவை கட்டிக்கொண்டாலும் நல்ல அழகாகவே தென்படுகிறார்களே என்றும் நினைத்துக்கொள்வதுண்டு. ஒருசில புடவைகள் புடவைக்கடை வாசலில் உள்ள பொம்மைக்கு கட்டினால் மட்டுமே ஆடாமல், அசங்காமல், கசங்காமல் வெகு அழகாக இருப்பதுபோல அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.
இவ்வாறான பல நினைவுகளுடன் வந்த என்னை, ஆட்டோக்காரர் என் வீட்டு வாசலில் அடித்த சடர்ன் ப்ரேக், நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, நான் என் வீட்டை அடைந்தேன்.
வழக்கம்போலவே, எங்கே போனீர்கள், என்ன வாங்கி வந்தீர்கள் என எதுவும் கேட்காவிட்டாலும், நானே சுடிதாரைப்பிரித்து என் மனைவியிடம் நீட்டினேன். வாங்கிப்பார்த்தவள், அதிசயமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தாள்.
“நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா?” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.
“எல்லாம் அந்தப்பொண்ணுக்கு சரியாகத்தான் இருக்கும்; பேசாமல் கசங்காமல் கொள்ளாமல், அப்படியே அந்த அட்டைப்பெட்டியில் போட்டு பத்திரமாக வையுங்கோ” என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரில் கையைவிட்டு, இட்லிமாவை தன் விரல்களால் எடுத்து பதம்பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
அடிக்கடி ஏற்பட்டு வரும் மின் தடை இப்போது ஏற்படாமல், அந்த கிரைண்டர் தொடர்ந்து ஓடியதில் எனக்கு சற்றே எரிச்சல் ஏற்பட்டது.
சுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத்திரும்பி விட்டேன்.
ஒரு வழியாக வெற்றிலை பாக்கு, பழங்கள், புஷ்பங்கள், சாக்லேட்டுகள், மற்றும் ஸ்வீட் பாக்கெட்களுடன், நான் வெகு கஷ்டப்பட்டு வாங்கி வந்திருந்த சுடிதாரை, என் மனைவி கையால் என் வருங்கால மருமகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தேன் நான். அந்தப் பெண்ணிடம், அவற்றைச் சந்தோஷமாகக் கொடுத்தாள் என் மனைவி.
கலரோ, டிசைனோ, சைஸோ சரியில்லாவிட்டால் உடனே 2 நாட்களுக்குள் கடையில் கொடுத்து விட்டு வேறு ஒன்று மாற்றி வந்து விடலாம் என்றோம் அந்தப் பெண்ணிடம். ஆனால் அவள் இதுவே நன்றாக இருப்பதாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள். பெண் பார்க்கும் படலம் முடிந்து நிச்சயதார்த்தம் நடைபெற நாள் குறித்துள்ள இடைக்காலத்தில், அவள் இன்று இருக்கும் நிலைமையில் வேறு என்னதான், எங்களிடம், தைர்யமாகச் சொல்லிவிட முடியும் என்று என் மனதினுள் நினைத்துக் கொண்டேன்.
தனியாகத் தொங்கிக்கொண்டிருந்த கைகள் இரண்டையும் அழகாகத் தைத்து, அதை அப்படியே அணிந்து கொண்டு வருங்கால மாமியாரிடம் காட்டிவிட்டு, ”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.
அவள் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடம் என் மூன்றாவது மகனிடமிருந்து எனக்குத் தொலைபேசியில் ஒரு அழைப்பு.
“நீ வாங்கிக் கொடுத்துள்ள சுடிதார் அவளுக்கு மிகவும் நன்றாக இருக்குப்பா. சூப்பர் செலக்ஷன், ரொம்பவும் தாங்ஸ்ப்பா” என்றான்.
திருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான்? என்று எனக்குள் ஒரே வியப்பு. அவனிடமே நான் இதைப்பற்றி அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன்.
“மெயிலை ஓபன் செய்து பார் தெரியும்” என்றான். டிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள்.
எது எப்படியோ, நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.
-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-
[ இந்தச்சிறுகதை 25.02.2009 தேதியிட்ட ”தேவி ”
தமிழ் வார இதழில் சற்றே சுருக்கப்பட்டு வெளியிடப்பட்டது ]