என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஸ்நான மந்த்ரங்கள்

தினமும் ஸ்நானம் செய்யும் போது 
அனைவரும் அவசியம் சொல்ல வேண்டிய
 ஸ்நான மந்த்ரங்கள்




[புனித கங்கை]



 கங்கே ச யமுனே சைவ 
கோதாவரி ஸரஸ்வதி !

நர்மதா ஸிந்து காவேரி 
ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு !!




புண்ணிய நதியாம் காவிரி 
அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம்



அல்லது 

 அதிக்ரூர மஹாகாய 
கல்பாந்த தஹநோபம !

பைரவாய நமஸ்துப்யம் 
அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி!!

ஸ்நானம் என்பது வேறு, குளியல் என்பது வேறு. புண்ணிய நதிகளில் நம் தலைமுடி முதல் உடம்பின் அனைத்துப் பகுதிகளும் முழுவதுமாக நனையும்படி, அமுங்கிக்குளித்தல் தான் ’ஸ்நானம்’ என்று புனிதமாகச் சொல்லப்படுகின்றது. 

சிலர் நேரமின்மை, சோம்பேறித்தனம், உடல்நிலை சரியில்லாமை, அடர்த்தியான தலைமுடிப்பிரச்சனை, தலைமுடியில் நீர் பட்டாலே ஒத்துக்கொள்ளாமை போன்ற பல்வேறு காரணங்களால் தினமும் ஸ்நானம் செய்யாமல் இருந்து வருகின்றனர். 

சிலர் தங்கள் தலைமுடியில் நீர் படாமல் கழுத்தோடு மட்டும் குளிப்பார்கள். சிலர் முகம் கைகால்களை மட்டும் கழுவிக்கொள்வார்கள். 

உடல்நலமின்மையால் படுத்தபடுக்கையாக இருந்த ஒருசில ஞானிகள், தங்கள் உடல் முழுவதும் பஸ்மத்தால் [பசுஞ்சாணியால் செய்யப்பட்ட சாம்பல்] பூசி பஸ்ம ஸ்நானம் செய்துள்ளனர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.

’கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக்கட்டு’ என்பது போல, முடிந்தவர்கள் தினமும் ஸ்நானம் செய்வதே நல்ல ஆரோக்யத்துடன் கூடிய புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.      


நதிகளில் ஸ்நானம் செய்யும் போது தண்ணீர் எங்கிருந்து புறப்பட்டு வருகிறதோ அந்த திசையை நோக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். மேற்கிலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி பாய்கிறது என்றால், நாம் மேற்கு நோக்கித்தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.

வீட்டில் பாத் ரூமிலோ, கிணற்றடியிலோ ஸ்நானம் செய்யும் போதும் மேற்கு திசை நோக்கி நின்று கொண்டு ஸ்நானம் செய்தல் நல்லது. 

ஸ்நானம் செய்தபின் உடம்பைத் துண்டினால் துவட்டும் போது, முதலில் நம் முதுகுப்புறத்தை துடைக்க வேண்டும், அடுத்தது முகம், மூன்றாவதாகத் தலைமுடி, அதன் பிறகே மற்ற பகுதிகளில் உள்ள ஈரத்தைத் துடைக்க வேண்டும். 


எப்போதுமே எல்லோருமே அவரவர்களின் முன்னோர்கள் வழக்கப்படி, நெற்றியில் விபூதியோ, நாமமோ, கோபிச்சந்தனமோ, குங்குமமோ இட்டுக் கொள்ள வேண்டும். தீட்டு நாட்களைத்தவிர மற்ற நாட்களில், யாரும் பாழும் நெற்றியுடன் தோன்றக்கூடாது

ஸ்நானம் செய்த பிறகு, பூஜைசெய்ய பஞ்சக்கச்சம் அல்லது மடிசார் புடவை அணிபவர்கள், அவற்றை அணிந்து கொண்ட உடனே ஞாபகமாக, மேற்கு திசை நோக்கித் திரும்பிக்கொண்டு, தங்கள் கால் பாதங்கள் இரண்டையும் மட்டும் மீண்டும் ஒருமுறை, அலம்பி விட வேண்டும். இவ்வாறு கால்களை அலம்பிய பிறகே,  பூஜை, த்யானம் முதலியவற்றில் ஈடுபட வேண்டும்.

யார் எப்போது எதற்காகக் கால் கழுவினாலும், ஒரு காலால் மற்றொரு காலைத் தேய்த்து அலம்புவது கூடவே கூடாதாம். 

தாளிடப்பட்ட தனி குளியறையாகவே இருப்பினும், உடம்பினில் துணிகள் ஏதும் அணியாமல் ஸ்நானம் செய்தல் கூடவே கூடாதாம். 

பூஜையோ தியானங்களோ செய்யும்முன் திருமணம் ஆன ஆண்கள் இடுப்பில் பஞ்சக்கச்சம் + உத்ரீயமும், அதுபோல திருமணம் ஆன பெண்மணிகள் மடிசார் புடவையும் அணிதல் மிகச்சிறப்பான பலன்களை அளிக்குமாம். 


இந்த ஆடைகளை இவர்கள் அணியும் போது, தெற்கு அல்லது வடக்கு நோக்கி நின்றபடி அணிய வேண்டுமாம். கிழக்கு அல்லது மேற்கு நோக்கி நின்று அணியக்கூடாதாம். 


இவ்வாறு ஆண்கள் பஞ்சக்கச்சமும் + பெண்கள் மடிசார் புடவையும் அணிவதால் மின்சாரம் போன்ற ஒரு காந்த சக்தி நிகழ்கிறதாம். இந்த சக்தி இடுப்புப்பகுதியை வலிமையுறச் செய்கிறதாம். 

திருமணம் ஆனவர்கள் இடுப்பில் ஒற்றை வஸ்திரத்துடனோ அல்லது ஈர வஸ்திரங்களுடனோ, பூஜை பாராயணம் முதலிய எந்த சுப கார்யங்களிலும் ஈடுபடக்கூடாது. 

அதுபோல ஒற்றை வஸ்திரம் மட்டும் அணிந்து நாம் நம்மைவிடப் பெரியவர்களை நமஸ்கரிப்பதோ, நம்மை நமஸ்கரிக்கும் சிறியவர்களை ஆசீர்வதிப்பதோ கூடாது. இரண்டாவது வஸ்திரமாக இடுப்பில் ஓர் துண்டாவது சுற்றிக்கொள்ள வேண்டும்.


நம் வீட்டுக்கு வருகைதரும் பெரியவர்களை, நமஸ்காரம் [விழுந்து கும்பிடுதல்] செய்ய விரும்புபவர்கள், வந்தவருக்கு ஆசனம் அளித்து அமரச்சொல்லி,  உடனடியாகச் செய்து விடுதல் நல்லது.  அவர் நம்மை விட்டு, விடைபெற்றுச்செல்லும் சமயம் நமஸ்காரம் செய்தல் கூடாது.


அதுபோல நாம் வயதில் சிறியவர்களாக இருந்து, எங்காவது வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் போது, வீட்டில் உள்ள பெற்றோர் போன்ற நம்மைவிட வயதான பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் செய்துவிட்டு, அவர்களின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டு புறப்படுவது மிகவும் நல்லது.   


காலையில் வாசலுக்கு தண்ணீர் தெளிக்காமல், யாரும் வீட்டை விட்டு எங்கும் எதற்கும் புறப்பட்டுச்செல்லவே கூடாது. 


விடியற்காலம் அவசர வேலையாக வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்பவர்கள், [ஆண்களே ஆனாலும்], கொஞ்சமாக புதுத்தண்ணீர் எடுத்து வாசல் கதவின் நிலைப்படிகள், கோலம் போடும் இடம் முதலியவற்றில் சற்றே தங்கள் கைகளால் தண்ணீரைத் தெளித்து விட்டு, பிறகே புறப்பட்டுச்செல்வது மிகவும் நல்லது.    


-ooooOoooo-





தை அமாவாசைக்குப்பிறகு ஏழாம் நாள் வரும் ரத ஸப்தமி பற்றிய மிக அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு ஒன்று, ரத ஸப்தமி நாளான 30.01.2012 அன்று பதிவர் மணிராஜ் (திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்) அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ:


தலைப்பு: “நலம் தரும் ரத சப்தமி”


அந்த மிக அற்புதமான பதிவில், அந்த ரத ஸப்தமி என்ற விசேஷ நாளில் ஸ்நானம் செய்யும் போது, ஆண்கள்/பெண்கள்/குழந்தைகள் அனைவரும் தலையில் ஏழு எருக்க இலைகளை வைத்துக்கொண்டு சொல்ல வேண்டிய சிறப்பான ஸ்லோகம் ஒன்று பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அதை மட்டும் இங்கு தனியாகக் கீழே கொடுத்துள்ளேன்: 



ஸப்த ஸப்திப்ரியே தே3வி

ஸப்த லோகைக பூஜிதே!

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !

ஸத்வரம் யத்3யத்3 கர்ம க்ருதம் பாபம்
மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோக3ம் ச மாகரீ ஹந்து 
ஸப்தமீ நெளமி ஸப்தமி !

தே3வி!  த்வாம் ஸப்த லோகைக மாதரம் 

ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன 
மம பாபம் வ்யபோஹய ! 

-oOo-



ரத ஸப்தமி ஸ்நானம் முடிந்ததும், ஆண்கள் மட்டும் சூர்யனுக்கு அர்க்4யப் ப்ரதானம் செய்யலாம்:

ஒரு பித்தளைத் தாம்பாளம் + பஞ்சபாத்திர உத்ரணியில் புது ஜலம் எடுத்துக்கொண்டு, 

”ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்4ய ப்ரதா3னம் கரிஷ்யே” என்று சங்கல்ப்பம் சொல்லி விட்டு

ஸப்த ஸப்தி ரதா2ரூட4 !
ஸப்தலோக ப்ரகாஸக !
தி3வாகர ! க்3ருஹாணார்க்4யம்
ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே !

*தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம்; 
*தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம்;  
*தி3வாகராய நம: [நமஹா] இதமர்க்4யம். 

என்று மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு மூன்று முறை அர்க்யம் விடவேண்டும்.  


[இடது கையால் தீர்த்த பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டு, வலது கையில் ஜலத்தை ஏந்தி தாம்பாளத்தில் *மந்திரம் சொல்லிக்கொண்டே விடுவது தான் அர்க்யம் என்பது.] 




பின்குறிப்பு:

எருக்க இலைகளை வீட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஏழு இலைகள் வீதம், ரத ஸப்தமிக்கு முதல் நாளே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அவ்வாறு எருக்க இலைகளைப் ஒடித்துப்பறிக்கும் போது அதில் வடியும் பால் நம் கண்களிலோ, வாய் பகுதியிலோ பட்டு விடாமல் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். முக்கியமாக சிறு குழந்தைகளை கூடவே கூட்டிச்செல்பவர்கள், அதிக கவனமாக இருக்க வேண்டும். 

இவ்வாறு பறித்து வந்த இலைகளை, அவற்றின் காம்புப் பகுதியில் உள்ள பால் போக, நன்கு தண்ணீர்க்குழாயில் காட்டி கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். 


மறு நாள் ரத ஸப்தமியன்று காலை எழுந்ததும் குளிக்கப்போகும் முன்பு, ஒவ்வொருவரும் ஏழு இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு, மேற்படி ஸ்லோகத்தை உச்சரித்து, ஸ்நானம் செய்து [தலைக்கு நீர் விட்டு], அப்படியே அவற்றை முதுகுப்புறமாக விழுந்து விடும் படி செய்து விடலாம். 

வெறும் ஏழு எருக்க இலைகள் மட்டுமல்லாமல், சுமங்கலிப்பெண்கள், சிறிதளது மஞ்சள் பொடியையும்,கோமயம் (பசுஞ்சாணி) மற்றும் அருகம்புல் சேர்த்து தலையில் வைத்துக்கொள்ளவும்.  


சுமங்கலிகள் தவிர மற்ற அனைவரும், [ஆண்கள் உள்பட] மேற்படி பொருட்களில் மஞ்சள்பொடிக்கு பதிலாக கொஞ்சம் அக்ஷதை [பச்சரிசி] சேர்த்து வைத்துக்கொள்ளலாம்.

ஒருவர் ஸ்நானம் செய்து அவர் தலையிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு தரையில் விழுந்துள்ள இலைகள் மற்றவர் எடுத்து, தான் ஸ்நானம் செய்யப் பயன்படுத்தக்கூடாது.

-o-o-o-o-




 [ நாளை மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம் ]



அதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்

அதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். 


பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’  சொல்ல வேண்டும்.




ஸமுத்ர வஸனே தேவி 
பர்வதஸ்தன மண்டிதே !

விஷ்ணுபத்நி நமஸ்துப்யம் 
பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே !!


[ஸமுத்திரத்தை வஸ்த்ரமாக உடையவளும், பர்வதங்களை ஸ்தன மண்டலங்களாக உடையவளும், விஷ்ணு பத்நியுமான பூமாதேவியே உனக்கு நமஸ்காரம். உன்பேரில் பாதம் வைத்து ஸஞ்சரிப்பதைப் பொருத்தருள்க]

o===========O===========o




பிறகு நமது வலது உள்ளங்கையை விரித்துப் பார்த்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்து விட்டு, வலது உள்ளங்கையை நம் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும். 


கராக்ரே வஸதே லக்ஷ்மீ 
கரமத்யே ஸரஸ்வதீ !

கர மூலே து கெளரீ ஸ்யாத் 
ப்ரபாதே கரதர்சனம் !!


[வலது கையின் நுனியில் லக்ஷ்மியும், மத்யத்தில் ஸரஸ்வதியும், மூலத்தில் கெளரியும் வாசம் செய்வதால் விடியற்காலம் இவ்வாறு செய்யும் கரதர்சனம் மங்களத்தைக் கொடுக்கும்.]  




-o-o-o-O-o-o-o-





[ நாளை மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம் ]






திங்கள், 30 ஜனவரி, 2012

பீஷ்மாஷ்டமி 31.01.2012

பீஷ்மாஷ்டமி

தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாம் நாள் ரத ஸப்தமி என்றும் எட்டாம் நாள் “பீஷ்மாஷ்டமி” என்றும் அழைக்கப்படுகின்றன.

மஹாபாரதத்தில் பீஷ்மருக்கு என்று ஒரு தனி இடமும், மிகச்சிறப்பும் உண்டு என்பது நம் அனைவருக்குமே தெரியும். தன் இளம் வயதிலேயே, தன் இளமை முழுவதையுமே தன் தந்தைக்குக் கொடுத்து விட்டு, இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் பிரும்மச்சாரியாகவே இருந்தவர்.  சத்தியம் தவறாமல் வாழ்ந்த மாபெரும் வீரர் “பீஷ்மர்”. ஆட்சிப் பொறுப்பு ஏற்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டதால், ஆட்சிக்கு யார் வந்து அமர்ந்தாலும் அவர்களுக்கு, மிகச்சிறந்த அரசியல் ஆலோசகராக மட்டுமே கடைசிவரை வாழ்ந்தவர், பீஷ்மர். 

மஹாபாரதப்போரில் பீஷ்மரை வீழ்த்த ஒருவனாலும் முடியாத நிலையில், மாயக்கண்ணன் செய்த சூழ்ச்சியால் ‘சிகண்டி’ என்றவரை அவருடன் போரிடச்செய்து, அவரை வீழ்த்தினார்கள். “சிகண்டி” என்பவர் தனக்கு சரிநிகர் சமானமான ஆண் அல்ல என்ற ஒரே காரணத்தினால் பீஷ்மர், சிகண்டியுடன் போர் செய்யாமல் இருந்து விட்டார்.  

இந்த ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி பற்றிய மற்ற பல அருமையான விஷயங்கள் யாவும், அழகான படங்களுடன் நம் பதிவர் “மணிராஜ்” அவர்களால் (திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களால்) இன்று வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு இதோ:

பீஷ்மாஷ்டமி பிரவாகம்

நலம் தரும் ரதசப்தமி

நான் இந்தப்பதிவினில் சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னவென்றால் நீண்ட ஆயுள், ஆரோக்யம், குடும்ப ஒற்றுமை ஏற்பட, சந்ததி ஏதும் இல்லாமல் போன, பீஷ்மருக்கு நாம் ஒவ்வொருவரும் நாளை செவ்வாய்க்கிழமை 31.01.2012 அன்று நீர்க்கடன் [மிகச் சுலபமான தர்ப்பணம்] செலுத்த வேண்டியது மிகமிக அவசியம் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும், முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.

இதை திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள், அப்பா உயிருடன் உள்ளவர்கள், அப்பா உயிருடன் இல்லாதவர்கள் என ஆண்கள் அனைவருமே செய்யலாம். மிகவும் சுலபமான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலையில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு, தூய ஆடை அணிந்து, சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மானுஷ்டங்களையும் முடித்து விட்டு, ஒரு பித்தளை சொம்போ அல்லது வேறு பாத்திரத்திலோ சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளம் வைத்துக்கொண்டு, ஆசனப்பலகையில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.

“பீஷ்மாஷ்டமி புண்யகாலே பீஷ்ம தர்ப்பணம் கரிஷ்யே”  என்று சங்கல்ப்பம் சொல்லிவிட்டு,

இடது கையினால் தீர்த்த பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டு, ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் [”இத3ம் அர்க்யம்” என்று முடியும் இடத்தில்], வலது உள்ளங்கையில் நீரை ஊற்றி, விரல்கள் வழியாக நிறைய ஜலத்தை தாம்பாளத்தில் விடவேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய மிகச் சுலபமான வேலை.

பீஷ்ம: [பீஷ்மஹா] சாந்தனவோ வீர: [வீரஹா] 
ஸத்யவாதீ ஜிதேந்திரிய: [ஜிதேந்திரியஹா]
ஆபி4ரத்3பி3 ரவாப்நோது புத்ர பெளத்ரோசிதாம்
க்ரியாம், பீ4ஷ்மாய நம: [நமஹா] 
இத3ம் அர்க்யம்

வையாக்4ரபாத் கோ3த்ராய ஸாங்க்ருத்ய ப்ரவராய ச
அபுத்ராய த3தா3ம் யர்க்4யம் ஸலிலம் 
பீஷ்ம வர்மணே, பீ4ஷ்மாய நம: [நமஹா]
இத3ம் அர்க்யம்.

க3ங்கா புத்ராய சாந்தாய சந்தநோ: 
ஆத்மஜாய ச அபுத்ராய த3தா3ம் யர்க்4யம் ஸலிலம் 
பீஷ்ம வர்மணே, பீ4ஷ்மாய நம: [நமஹா]
இத3ம் அர்க்யம்.

”அனேன அர்க்4ய ப்ரதா3னேன பீ4ஷ்ம; ப்ரீயதாம்”

என்று சொல்லி எல்லா ஜலத்தையும் அர்க்யம் 
செய்து விட்டு எழுந்து நமஸ்காரம் செய்யவும்.         


-o-o-o-o-o-o-

[மீண்டும் நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்]

மஹா கணேசா! மங்கள மூர்த்தி !!



2

மஹா கணேசா! 
மங்கள மூர்த்தி !!





அன்புடையீர்,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.


முழுமுதற் கடவுளாம் விநாயகர் பற்றி நடமாடும் தெய்வமாக நம்மிடையே விளங்கிய ஸ்ரீ மஹா பெரியவா, சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் [அதாவது 1941 இல்], கூறியுள்ள சில தகவல்களை சமீபத்தில் படிக்கும் வாய்ப்புப்பெற்றேன். 

அதிலிருந்த விஷயங்களை அப்படியே இங்கு தங்களுடன் பகிர்வதன் மூலம் நம் எல்லோருக்குமே குருவருளும் திருவருளும் சேர்ந்தே கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இங்கு பதிவிட்டுள்ளேன்.

என்றும் அன்புடன் தங்கள்
vgk


-oOo-




விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறைய தத்வங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? 

விக்நேஸ்வரர், தன் அப்பாவான ஈஸ்வரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத்தியாகம் பண்ணினால்தான் மஹாகணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது.

அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் ஸ்ருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈஸ்வரன் அனுக்கிரஹித்திருக்கிறார். 


சிதறு தேங்காய் என்று தேங்காயை உடைக்கிற பழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்களில் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகப்பட்டிணத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்தேன். அங்கே வாயிலில் பிள்ளையாருக்கு நிறைய சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்கு குழந்தைகள் ஒரே நெரிசலாய்ச் சேர்ந்துவிடும். 


திபுதிபுவென்று அவை ஓடி வருவதில் என் மேல் விழுந்துவிடப்போகின்றனவே என்று என் கூட வந்தவர்களுக்கு பயம். அவர்கள் அந்தக்குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப்போங்கள்” என்று கண்டித்தார்கள்.


அப்போது ஒரு பையன் டாண் என்று பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு “எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்யதை?” என்று கேட்டான். அப்போது தான் இந்த உண்மை தெரிந்தது.


அஹங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அம்ருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.


கணபதியைக்காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரஸ் யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு, அவருக்கு ஸ்தூலகாயர் என்றே ஒரு பெயர். மலைபோல இருக்கிறார். 


ஆனாலும் அவர் சின்னக்குழந்தை. சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப்பருவத்தில் நிறைய சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம் கூட இளைக்கக்கூடாது. 


ஒரு ஸன்யாஸி நிறைய சாப்பிட்டுக்கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாஸம் இருப்பார்கள். 


குழந்தை அப்படியிருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாக கொழு கொழுவென்று இருந்தால் தான் அழகு. குழந்தை நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக்குழந்தை ஸ்வாமியே காட்டிக்கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.


இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமாக சின்னஞ்சிறு ஆக்ருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தன் வாஹனமாக வைத்துக்கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பக்ஷி என்று வாஹனம் இருக்கிறது


இவரோ தான் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாஹனமாக வைத்துக்கொண்டாலும், வாஹனத்தினால் ஸ்வாமிக்கு கெளரவம் இல்லை. ஸ்வாமியால் தான் வாஹனத்திற்கு கெளரவம். 


வாஹனத்திற்கு கெளரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி, நெட்டிப் பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கெளரவம் எல்லாம் உண்டாகும்படியாகத் தம் உடம்பை வைத்துக்கொண்டிருக்கிறார்.  

ஸ்தூலகாயரான போதிலும், பக்தர்கள் இதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன் என்று காட்டுகிறார்.  


ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் விசேஷமுண்டு. மயிலுக்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரக்ஷிக்கும். யானை எதை ரக்ஷிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். 


ஆனால் இந்த யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக்கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மஹாபாரதத்தையே எழுதிற்று. தன் அழகு, கெளரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக்காட்டிலும் தர்மத்தைச் சொல்கிற ஒன்று, நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்யைக்காக எதையும் த்யாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் த்யாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது.

ஸ்வாமிக்கு கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக்கொள்வார் என்பதற்கு இது உதாரணம். ஒரு ஸமயம் தந்தத்தாலேயே அஸுரனைக்கொன்றார். அப்போது அது ஆயுதம். இப்போது அதுவே பேனா.

நமக்குப்பார்க்கப்பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், ஸமுத்ரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும், அலுப்பு சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும்.

அதனால் தான் குழந்தை ஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும் படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். 


அது ஆனந்த தத்துவம்! அடங்காத ஆசையின் தத்துவம். அவர் பிறந்ததே ஆனந்தத்தில் தான்!

பண்டாஸுரன் விக்ன மந்த்ரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேஸ்வரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தபோது, அவளும் ஆனந்தமாக இந்தப்பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்ன யந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு ஸகாயம் செய்தார். அவர் சாக்ஷாத் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிறந்த அருமைப் பிள்ளை.

இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர் பவித்ததனால், அவரை நாம் பிள்ளையார் என்றே விசேஷித்து அழைக்கிறோம். எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அனுக்கிரஹத்தைப் பெற்றுக்கொண்டால் தான் அந்தக் காரியம் விக்னம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக ப்ரதான மூர்த்தியாக வைத்து உபாஸிக்கிற மதத்துக்கு காணபத்யம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. 

ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்ரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக்கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலமுள்ளவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது.

ஆனால் அவரைச் சிரிக்க வைத்து சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்ரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதும், உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக்கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்ரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக்கொண்டு விட்டார். 

தோ3ர்பி4: கர்ணம் என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. தோ3ர்பி4: என்றால் கைகளினால் என்று அர்த்தம். கர்ணம் என்றால் காது. தோ3ர்பி4: கர்ணம் என்றால் கைகளால் காதைப்பிடித்து கொள்வது. விக்னேஸ்வரருடைய அனுக்கிரஹம் இருந்தால் தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். 

தடைகளை நீக்கிப் பூரண அனுக்ரஹம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்னங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக!  






அபார கருணாஸிந்தும் ஞானதம் ஸாந்தரூபிணம்!
ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்!!


மிகுந்த கருணை உள்ளவரும், 
சாந்த ஸ்வரூபியும், 
ஞானக்கடலுமாகிய 
ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை நமஸ்கரிக்கின்றேன்.






நன்றி:
 श्री कामकोटि प्रदीपः  

  




ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

-oooOooo-






[அடுத்த பதிவொன்றில் நாளை மீண்டும் சந்திப்போம் ]

வெள்ளி, 27 ஜனவரி, 2012

ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்

2
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீ ராதாகிருஷ்ண பரப்ரம்ஹனே நம:




அன்புடையீர்,

வணக்கம்.

இப்பவும் திருச்சியில், எங்கள் தெருவில், எங்கள் வீட்டுக்கு மிக அருகில் 63 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது.

அடியேன் பிறப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு என் சொந்த அத்தையின் கணவரும் மிகப்பெரிய வேத, சாஸ்திர, பாஷ்ய பண்டிதரும், ஸ்ரீமத் இராமாயண மூல பாராயணமும், பிரவசனமும் தினமுமே செய்தவருமான  கூத்தூர் பிரும்ஹஸ்ரீ வெங்கடராம சாஸ்திரிகள் (ஸ்ரீ இராமாயண சாஸ்திரிகள்) என்பவரால் அன்று மிக எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட, இந்த ஸ்ரீ ராதாகல்யாண மஹோத்ஸவம் தொடர்ந்து இன்றும் 63 ஆவது ஆண்டாக மிக விமரிசையாக ஏராளமான பிரபல பாகவதர்களைப் பங்கேற்க வைத்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர்சியாக நடைபெறுகிறது.

நடைபெறும் இடம்: 
முதலியார் ஸ்டோர் [முழுவதுமாகப் பந்தலிடப்பட்டு]
வடக்கு ஆண்டார் தெரு, திருச்சிராப்பள்ளி-620 002

தொடர்புக்கு:
ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவ கமிட்டி
செல்: 99430 30258



இதில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் நேரில் வந்து கலந்து கொண்டு, ஸத்விஷயங்களான மிக இனிமையான பகவன் நாமாக்களையும், பஜனைப்பாடல்களையும் காதால் கேட்டு மகிழ்ந்து, சகல க்ஷேமங்களையும் அடையலாம்.



   



முக்கிய நிகழ்ச்சிகள்:


27.01.2012 வெள்ளிக்கிழமை 


காலை 6 மணிக்கு:


கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 
தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம்


மாலை 6 மணிக்கு


நாமசங்கீர்த்தனம் - கடையநல்லூர் பிரம்ஹஸ்ரீ ராஜகோபால பாகவதர்


இரவு 10 மணிக்கு


ப்ரார்த்தனா அபங்கம் - நங்கவரம் ஸ்ரீ மணிகண்டேஸ்வர பாகவதர்


28.01.2012 சனிக்கிழமை


காலை 8.45 க்கு 


தோடயமங்களம், ஜெயதேவர் அருளிய 
கீதகோவிந்தம் மஹாகாவ்யம் (அஷ்டபதி) 


ஸ்ரீ வாஞ்சியம் ப்ரம்ஹஸ்ரீ முரளிதர பாகவதர்
சென்னை ப்ரம்ஹஸ்ரீ T N மஹாதேவ பாகவதர்


இரவு 11 மணிக்கு


நாம சங்கீர்த்தனம், தியானங்கள், திவ்ய நாம சங்கீர்த்தனம், டோலோஸ்தவம்


29.01.2012 ஞாயிற்றுகிழமை

காலை 8 மணிக்கு உஞ்சவர்த்தி


காலை 9 மணிக்கு 
கோவை ப்ரம்ஹஸ்ரீ ஜெயராம பாகவதர் தலைமையில்
வாளாடி, நங்கவரம் பஜன் மண்டலி மற்றும் வெளியூர், உள்ளூர் பாகவதர்கள் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக நடைபெறவுள்ள 
ஸ்ரீ ராதாகல்யாண மஹோத்ஸவம்.


மதியம் 2.30 க்கு தீபாராதனை, சமாராதனை


மாலை 4 மணிக்கு ஸ்வாமி வீதி உலா


மாலை 6.30 க்கு ஸ்ரீ ஆஞ்சநேய மஹோத்ஸவம்.


சுபம்


அடுத்த வாரம் முதல் அவ்வப்போது, மிகச்சிறிய பகுதியாக. நான் இதுவரை படித்தது, அறிந்தது, கேட்டது, உணர்ந்தது, அனுபவித்தது போன்ற ஒரு சில ஸத் விஷயங்களை தொடர்ந்து பதிவிடலாம் என்று நினைத்துள்ளேன்.  தெய்வ அனுக்கிரஹம் கை கொடுத்து உதவும் எனவும் நம்பியுள்ளேன். 

தொடர்ந்து வருகை தந்து உற்சாகப்படுத்தி, தாங்களும் பயன் அடைவீர்கள் என்றும் நம்புகிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
vgk 



செவ்வாய், 24 ஜனவரி, 2012

செல் ஃபோன் திருடப்பட்டால், இனி கவலையில்லையாம்!

செல் ஃபோன் திருடப்பட்டால், 
இனி கவலையில்லையாம்!






செல் ஃபோன் திருடப்பட்டால், இனி கவலையில்லையாம்! என்பது இனிய செய்தி தானே! அதைப்பற்றி எனக்கு சமீபத்தில் கிடைத்த தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

செல் ஃபோன் என்பது இன்று நமக்கு இன்றியமையாத ஒரு [அத்யாவஸ்யமானப்] பொருளாகி விட்டது. அது இல்லாமல் இனி உயிர்வாழவே முடியாது என்ற நிலைமைக்குத் தான் அநேகமாக நாம் எல்லோரும் வந்துவிட்டோம்.

இந்த அத்யாவஸ்யமான பொருள் அடிக்கடி திருட்டுப்போகவும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்பதும் நம்மால் மறுக்க முடியாத ஒன்று தான். 

அவ்வாறு தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ நம் மனம் மிகவும் வருத்தமடையத்தானே செய்யும். 

இதனால் பல தொல்லைகள் நமக்கு ஏற்படுவதும் இயற்கையே.  கையும் ஓடாது காலும் ஓடாது. பல நண்பர்களின், உறவினர்களின் தொடர்பு எண்கள் நமக்குத் தெரியாமல் போகும். திருடப்பட்ட அது திருடப்பட்டவரால் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புகள் அதிகம். 

இந்த தொல்லைகள் இனி இல்லை என்று சொல்லி, காதுக்கு இனிமையான செய்தி ஒன்று வந்துள்ளது.

கவனமாகப் படியுங்கள். அதன்படி உடனடியாக செயல்படுங்கள். மிகவும் எளிது தான்.

உங்கள் செல்போனை இப்போது கையில் எடுத்துக்கொள்ளுங்கள். பேசுவதற்குத் தயாராக Switch On செய்துகொள்ளுங்கள்.

*#06#  டயல் செய்யுங்கள்.

இப்போது IMEI எண் என்ற 15 ஸ்தான எண் ஒன்று வரும்.

இதை மிகவும் ரகசியமாக எங்காவது தனியே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இதை எக்காரணம் கொண்டும் உங்கள் செல் ஃபோனிலேயே பதிவு செய்து வைக்காதீர்கள். அது மீண்டும் ஆபத்தையே விளைவிக்கும்.

இதை உங்கள் மின்னஞ்சலுக்குப்போய் [Compose Mail க்குப்போய்] உங்கள் மெயில் விலாசத்திற்கே அனுப்பிக்கொள்ளுங்கள்.  முடிந்தால் அந்த மெயில் அனுப்பப்படும் நாள், உங்கள் பிறந்த நாளோ, திருமண நாளோ, குழந்தைகளின் பிறந்த நாளோ ஏதாவது ஒன்றில் அனுப்பி வைத்தீர்களானால், அது மறக்காமல் பிறகு அவசர ஆத்திரத்திற்கு தேடிக் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். 

தங்கள் செல்ஃபோன் துரதிஷ்டவசமாக தொலைந்து போனாலோ, திருடப்பட்டாலோ, உடனடியாக இந்த 15 ஸ்தான IMEI எண்ணை மேலும் சில தகவல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கவும்:

மின்னஞ்சல் முகவரி: cop@vsnl.net

மின்னஞ்சலில் மேலும் தரவேண்டிய தகவல்கள்:

Name:
Full Postal Address:
Phone Model:
Make:
Last used Number:
E-mail for communication:
Missed Date:
IMEI Number [15 digit]

போலீஸில் புகார் அளிக்க வேண்டியது இல்லை. 

இந்த தங்களின் மெயில் கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில், GPRS & INTERNET SYSTEM மூலம் தங்களின் செல் ஃபோன் எங்கு யாரிடம் உள்ளது என்ற தகவல் சுலபமாகக் கண்டு பிடித்துத் தந்து விடுவார்களாம். 

திருடியவர் ஒருவேளை ஏற்கனவே உள்ள தங்களின் செல் ஃபோன் நம்பரையே மாற்றி, பயன்படுத்தி வந்தாலும், கண்டுபிடித்து விடுவார்களாம்.

இது உங்களுக்கு உபயோகமான, மகிழ்ச்சியளிக்கும் நல்லதொரு தகவல் தானே!

நமது செல் ஃபோன் அடுத்த நிமிடமே கூட காணாமல் போய்விடக்கூடும் அல்லவா? அதனால் மேலும் தாமதிக்காமல் IMEI எண்ணை உடனடியாகக் கண்டு பிடித்து அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

அன்புடன்
vgk