நான் அவர் சொன்ன பூங்காவிற்கு 5.55 க்கே ஆஜர் ஆகிவிட்டேன். மிகுந்த பதட்டத்துடன் சற்று நேரத்திற்கெல்லாம் வ.வ.ஸ்ரீ. அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்.
“என்ன சார், ஆபீஸ் பக்கமே காணோம் ?” என்றேன்.
நான் இந்தத்தமிழ்நாட்டிலுள்ள பெரிய பெரிய கட்சிகளுக்காக எவ்வளவு பாடுபட்டு உழைத்திருக்கிறேன் தெரியுமா? நம் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட யூனியன்களில் எவ்வளவு முறை நான் தலைவராக இருந்து கட்சிக்காக எவ்வளவு ஆதரவு திரட்டிக்கொடுத்திருக்கிறேன் தெரியுமா? அந்த நன்றி விஸ்வாசத்தை மறந்துட்டாங்களே எல்லாப் பயல்களும்?
இந்த எலெக்ஷனுக்கு முன்னாலேயே ஆபீஸிலிருந்து பணிஓய்வு பெறுவதும் நல்லது தான், இந்த தடவை வரும் எலெக்ஷனிலேயாவது நமக்கு எவனாவது ஒருத்தன் எம்.எல்.ஏ. சீட்டுக்கு டிக்கெட் தந்துடுவான்னு நினைச்சேன்;ஆனாக்க எல்லாப்பயல்களும் என்னிடமே பேரம் பேசறானுங்களே! நான் கத்துக்கொடுத்த பாடத்தை என்னிடமே திருப்பறாங்களே! என்று ஏதேதோ காரசாரமாக ஆரம்பித்தார், வ.வ.ஸ்ரீ.
“அடடா இது தான் நீங்கள் 3 நாளா ஆபீஸுக்கு வராததற்கு காரணமா! விட்டுத்தள்ளுங்க, சார். இந்தப் பாழாய்ப்போன பாலிடிக்ஸே உங்களுக்கு வேண்டாமே சார்” என்று உசிப்பி விட்டேன் நான்.
“விடுவேனா இத்துடன் இந்தப்பயல்களை! தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிக்ளிலும் நமக்கு ஆளுங்க இருக்கு. தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணிக்காவது கூப்பிடுறாங்களான்னு பார்ப்பேன். அதிலும் ஓரங்கட்டப்பட்டால், எல்லா இடங்களிலும் 234 தொகுதிகளிலும் தனித்தே என் கட்சி போட்டியிடும். அப்போது தான் என் கட்சியின் தனித்தன்மையையும், பலத்தையும் நிரூபித்து, அடுத்த எலெக்ஷனிலாவது என்னால் ஆட்சியைப்பிடிக்க முடியும்.
இன்று நள்ளிரவு பத்திரிக்கையாளர்களுக்கு இது சம்பந்தமாக சிறப்புப் பேட்டி கொடுக்க இருப்பதாகச் சொல்லி, அழைப்புகள் அனுப்பியுள்ளேன். நாளை வரும் செய்திகளைப் பார், நான் யார் என்று உனக்கும் தெரியும்” என்று கர்ஜித்தார் வ.வ.ஸ்ரீ.
”இந்த முற்போக்குக்கூட்டணி, பிற்போக்குக்கூட்டணி என்கிறார்களே, சார், அப்படின்னா என்ன சார், கொஞ்சம் எனக்குப்புரியும் படியா சொல்லுஙளேன்” என்றேன்.
“முற்போக்காவது, பிற்போக்காவது எல்லாமே ஒரே கொள்ளைக்கூட்டம் தானப்பா. முற்போக்குன்னா: ’ வாந்தி’, பிற்போக்குன்னா: ’பேதி’ன்னு நினைச்சுக்கோ. வாந்தியோ பேதியோ எல்லாமே இன்றைய மண்ணாங்கட்டி அரசியலில், சாக்கடைக்கு அனுப்ப வேண்டியவை தான்” என்றார், வ.வ.ஸ்ரீ., மிகுந்த ஆத்திரத்துடன்.
”நீங்கள் ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சியின் பெயர் என்ன சார்?” என்றேன், நான்.
“மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்”
”தமிழ்நாட்டில் பெரிசா எவ்வளவு பேர்கள் மூக்குப்பொடி போடப்போகிறார்கள்! அவர்களுக்கு என்ன சார் இப்படி தனியே ஒரு முன்னேற்றக் கழகம்?” என்றேன்.
“இங்கு தான் நீ, நம் தமிழ்நாட்டு அரசியலை வழுவட்டைத்தனமாகப் புரிந்து கொள்கிறாய். சென்னை மாகாணமாக இருந்தது யாரால் எப்போது ’தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது என்ற சரித்திரம் உனக்குத் தெரியுமா?” என்றார் ஆத்திரத்துடன் வ.வ.ஸ்ரீ.
“சுதந்திரத்திற்குப் பின் பல்லாண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் போய் கழக ஆட்சியைக் கொண்டு வந்தாரே, நம் பேரறிஞர் அண்ணா! அவர்களால் கொண்டுவரப்பட்டது தான் இந்தத் ’தமிழ்நாடு’ என்ற புதுப்பெயர், அப்படின்னு கேள்விப்பட்டிருக்கிறேன், சார்” என்றேன்.
“கரெக்ட்டா சொன்ன தம்பி. இப்போது உள்ளவர்கள் யாருமே அறிஞர் அண்ணாவின் உண்மையான வாரிசு என்று சொல்லிக்கொள்ள முடியாது. அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார். நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன். எனவே அண்ணா அன்று ஆரம்பித்த முன்னேற்றக் கழகத்தின் அசல் வாரிசு, நான் ஒருவன் மட்டுமே. இது ஒரு பாயிண்ட் போதும் எனக்கு, ஆட்சியைப்பிடிக்க என்று மிகவும் ஆவேசமானார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.
”தங்கள் கட்சிக்கு தாய்க்குலத்தில் ஆதரவு இருக்காதே, சார்?” என்றேன்.
”ஏன் இருக்காது? மது அருந்தும் பெண்கள், புகைபிடிக்கும் பெண்கள், சுருட்டு பிடிக்கும் பெண்கள், வெற்றிலைபாக்குப் புகையிலை போடும் பெண்கள் போலவே பொடி போடும் பெண்கள் நிறைய பேர்கள் உண்டப்பா.
ஆனால் அவர்களுக்கே இருக்க வேண்டிய அச்சம், நாணம், மடம், பெயர்ப்பு என்று அந்தக்காலத்தில் சொல்லுவார்களே, அந்த ஒரு வெட்கத்தினால், இந்தப்பொடி போடும் பெண்கள் பற்றி வெளியுலகுக்குத் தெரிய நியாயம் இல்லை. ஆனால் தலைவராகிய எனக்குத் தெரிந்தால் போதாதா! அவர்களின் ஆதரவை அள்ளிப்பெற்றிட முடியுமே, என்னால்!” என்றார்.
”இருந்தாலும் சார்.......”என்று சற்றே நான் இழுத்தேன்.
”பெண்களே! தாய்க்குலமே! உங்கள் ஜாக்கெட்டில் ஒரு பாக்கெட் வையுங்கள். அந்தப் பாக்கெட்டில் பொடியை வையுங்கள். ஈவ் டீஸிங்கா, கடத்தலா, கற்பழிப்பா கவலையே படாதீர்கள். ஜாக்கெட்டில் உள்ள பாக்கெட்டை அவிழ்த்து தூவுங்கள் பொடியை அந்த வில்லன்களில் கண்களை நோக்கி” என்று கூறி மகளிர் அணியை வலுப்படுத்துவோம். மகளிருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவோம்” என்று வீர வசனங்கள் பேச ஆரம்பித்து விட்டார், வ.வ.ஸ்ரீ.
“தங்கள் கட்சியின் கொள்கை என்ன? பிரச்சார யுக்திகள் என்ன?” விளக்குங்களேன் என்றேன்.
”அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் உபயோகித்த அதே மூக்குப்பொடியை நாங்களும் உபயோகிக்கிறோம்.
எனவே நாங்கள் தான் அண்ணா அவர்களின் உண்மைத்தம்பிகள்.
எங்கள் ”மூ.பொ.போ.மு.க.” வே ஒரிஜினல் தாய்க்கழகம் ஆகும் என்று மக்கள் மன்றத்தில் வாதாடுவோம்.
தாலிக்குத் தங்கம் வேண்டாம் !
தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !!
மூக்குக்குப் பொடி வேண்டும் !
எங்கள் கட்சியின் சின்னமே “பொடிட்டின்” தான்.
தற்சமயம் சத்துணவு என்ற பெயரில் ஏதேதோ உணவுகளும், முட்டைகளும் மட்டும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவை கொஞ்சம் பசியாற்றி அவர்களைத் தூங்கச்செய்யுமே தவிர, பாடங்கள் மனதில் பதியவோ, மூளை வளர்ச்சியடையவோ எந்தவிதத்திலும் பயன் படாது.
எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூளைக்கு எழுச்சி கொடுக்கவும், குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கவும், ஆளுக்கு 5 கிராம் வீதம் தினமும் பொடி தந்து அதை எப்படிப்போடணும் என்று பயிற்சியும் தருவோம். பிறகு அதை படிப்படியாக தினமும் 10 கிராம் வீதம் தருவதற்கும் பாடுபடுவோம்.
குழந்தைகளே வருங்கால இந்தியா என்பதால் அவர்களுக்கு ஆரம்பப்பள்ளிப் பருவத்திலேயே எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ’மூ.பொ.போ.மு.க’ கட்சியின் அடிப்படைக்கொள்கைகளில் மிக முக்கியமானதொன்று.
கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்க ஒரு புகழ்பெற்ற சூப்பர் சினிமா நடிகையை தேடி வருகிறேன். படுகுஜாலாக ஒருத்தி மட்டும் கிடைத்து விட்டால் போதும், மற்ற எல்லா பிரச்சனைகளும் ஓவர்.
சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும், இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் “பொடிட்டின்” சின்னமே என எடுத்துரைப்போம்” என்றார் பேரெழுச்சியுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள்.
இருட்டி விட்டதாலும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் தன்னை மறந்து இவ்வாறு உரக்க வீராவேச உரை நிகழ்த்துவதாலும், பயந்து போன மக்கள், அந்தப் பூங்காவை விட்டு அவசர அவசரமாக வெளியேற, எனக்கும் அவருடன் அங்கு தனியே இருப்பது நல்லதாகப் படாமல், ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.
“சார், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கொதித்துப்போய் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக்கேட்கும் எனக்கு, நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது. மீதி விஷயங்கள் நாளை ஆபீஸில் பேசிக்கொள்ளலாம்” என்றேன்.
இதைக்கேட்ட அவர் என்னைக் கட்டித்தழுவிக் கொண்டு, கை குலுக்கினார். அப்போது, அவர் முகத்தில், இதுவரை நான் என்றுமே பார்க்காத ஓர் பேரெழுச்சியுடன் கூடிய குதூகலத்தை, என்னால் காண முடிந்தது.
மீண்டும் ஒருமுறை என்னைக்கட்டி அணைத்துத் தழுவிக்கொண்டு விட்டு, இந்த நான் ஆரம்பிக்க இருக்கும் புதிய கட்சிக்கு நீயும் ஆதரவாக இருந்து எனக்கு பல உதவிகள் செய்யும்படியாக இருக்குமப்பா, நான் அதைப்பற்றி உனக்கு பிறகு விபரமாகச் சொல்கிறேன், என்று சொல்லி ஒருவழியாகப் புறப்பட்டு சென்று விட்டார்.
நல்லவேளையாக இவர் என்னைக் கட்டிப்பிடித்ததை யாரும் அங்கே பார்த்ததாகத் தெரியவில்லை. நானும் நடுங்கியவாறே வீடு போய்ச் சேர்ந்தேன்.
நான் வீடு போய்ச்சேர்ந்தும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் நல்லபடியாக வீடு போய்ச்சேர்ந்தாரா என்று எனக்கு ஏற்பட்ட விசாரத்தில், அவருக்கு மீண்டும் போன் செய்தேன்.
நெடு நேரமாக ரிங் போயும், போன் எடுக்கப்படவில்லை. பிறகு மீண்டும் போன் செய்தபோது ஒரு பெண் குரல் கேட்டது எனக்கு.
ஆஹா! ’கொள்கை பரப்புச் செயலாளர்’ ஆக பதவி ஏற்க அதற்குள் ’குஜாலான’எந்த நடிகை மாட்டினாள் என்று ஆச்சர்யப்பட்டேன்.
பிறகு தான் தெரிந்தது அது அவரின் மனைவியின் குரல் என்று. நான் என்னை அறிமுகம் செய்துகொண்டுவிட்டு, ”மிஸ்டர் ஸ்ரீனிவாசன் சாருடன் பேச வேண்டும்” என்றேன்.
வ.வ.ஸ்ரீ. அவர்களை ஏதோவொரு மனநோய் மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாகச் சொன்னார்கள், அவரின் மனைவி.
நான் பதறிப்போனேன். ”ஏன் என்னாச்சுங்க மேடம்? 2 மணி நேரங்கள் முன்புகூட என்னிடம் நல்லாத்தானே பேசிக்கொண்டிருந்தார்!” என்றேன்.
பிறகு வ.வ.ஸ்ரீ யின் மனைவியே எனக்கு ஆறுதல் சொன்னார்கள். பயப்பட வேண்டாம் என்றும் மனதை தைர்யப்படுத்திக்கவும் சொன்னார்கள்.
அதாவது இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் பற்றிய ஏதாவது செய்திகள் வந்தாலே வ.வ.ஸ்ரீ அவர்களுக்கு இதுபோல ஒரு அட்டாக் வருவதுண்டாம். இதுவரை பலமுறை வந்துள்ளதாம். பயப்பட ஒன்றும் இல்லையாம். முற்றிய நிலையில் ஒரு நாலு நாள் டிரீட்மெண்ட் கொடுத்து படுக்க வைத்தால் போதுமாம். பிறகு பழையபடி, அடுத்த எலெக்ஷன் வரை கவலைப்பட வேண்டியதில்லையாம்.
இன்று தான் அந்த முற்றிய நிலையை அந்த அம்மாவால் கண்டு பிடிக்க முடிந்ததாம். இன்னும் நாலு நாட்களில் வழக்கம் போல ஆபீஸுக்கு வந்து விடுவாராம். தயவுசெய்து யாரும் அரசியல் பற்றி மட்டும் அவரிடம் பேசாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்றாள் அந்த அம்மா, எந்தவித ஒரு டென்ஷனுமே இல்லாமல்.
இத்தகைய ஒரு அட்டாக் வந்துள்ள ஆசாமியுடன், தனியாக அந்தப் பார்க்கில், இருட்டும் வரை இருந்துள்ளோமே என்பதை நினைத்துப்பார்த்த எனக்குத் தான் இப்போது டென்ஷனாகிப்போனது.
இந்தப்பாழாய்ப்போன அரசியல் தேர்தல்கள் அடிக்கடி வந்து தொலைப்பதனால், இதுபோல எவ்வளவு பேர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனரோ?; எவ்வளவு பேர்களுக்கு மூளை குழம்புகிறதோ?; எவ்வளவு மக்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றதோ? என நினைத்து, நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
பாவம் அந்த நல்ல மனிதர், வ.வ.ஸ்ரீ., அவர்கள் சீக்கரமாக குணமாகி நல்லபடியாகத் திரும்ப வரவேண்டும்; நல்லபல செய்திகள் அவர் வாயால் தொடர்ந்து நான் கேட்க வேண்டும், என கடவுளிடம் நான் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன்.
நான் செய்த அந்தப்பிரார்த்தனை வீண் போகவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் வ.வ.ஸ்ரீ. அவர்கள், வழக்கம்போல எழுச்சியுடன் ஆபீஸுக்கு வந்து விட்டார்.
அவரிடம் இந்த எலெக்ஷன் பற்றிய செய்தியினால் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்டதாக அவர் மனைவி சொன்ன அட்டாக்கின் அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை.
அந்தளவுக்கு நல்லதொரு ஷாக் ட்ரீட்மெண்ட், கொடுத்திருப்பார்கள் போலிருக்கு!.
அந்த நல்லதொரு நகைச்சுவையாளரை காப்பாற்றிய, அந்த மனநோய் மருத்துவருக்கும், கடவுளுக்கும் நன்றி கூறினேன், நான்.
நாங்கள் எங்கள் அலுவலகத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த வ.வ.ஸ்ரீ. அவர்களின் பணிஓய்வு பெறும் நாளும் வந்து விட்டது. இன்று தான் அவர் பணிஓய்வு பெறப்போகிறார்.
அந்தக் காலைப்பொழுதில் வ.வ.ஸ்ரீ. யின் டேபிளின் மேல், இரண்டு டஜன் எவர்சில்வர் பொடி டப்பாக்கள், புத்தம் புதியதாக பளபளவென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒண்ணரை அங்குல உயரமும், முக்கால் அங்குல விட்டமும் கொண்டதாக, திருகு மூடி போட்டதாக இருந்தன. ஒவ்வொன்றிலும் ரூ.28.40 என்று விலை போடப்பட்டிருந்தன.
அன்று பணிஓய்வு பெறும் அவரை சந்திக்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு துறைகளிலிருந்தும்,தொழிற்சங்கங்களிலிருந்தும் வந்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பொற்கிழிகள், நினைவுப்பொருட்கள் என்று கொடுத்தபடி இருந்தனர். மாலைகள் மலை போலக்குவியத் தொடங்கின.
பொடி போடும் பழக்கமுள்ள தன் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு புதுப்பொடிட்டின் வீதம், தன் நினைவுப்பரிசாக அளித்து வந்தார் வ.வ.ஸ்ரீ. அந்த டின்கள் உள்ளே முழுவதுமாக மூக்குப்பொடி அடைக்கப்பட்டிருந்தது கண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டு, ஆனந்தக்கண்ணீருடன் வ.வ.ஸ்ரீ. யுடன் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
ஆபீஸ் விட்டதும் அவரை வீடு வரை கொண்டு சேர்க்க நண்பர்கள் பலரும் பல கார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.ஒரு 25 கார்களுக்கு மேல் வரிசையாக பவனி வந்து ஒன்றன்பின் ஒன்றாக நின்றன.
இவற்றையெல்லாம் வாழ்க்கையில் முதன் முதலாகப்பார்த்த எனக்கும் உற்சாகம் ஏற்பட்டது. அவர் பயணம் செய்யப்போகும் விசேஷமான காரில் அவருடைய மாலைகள், பரிசுப் பொருட்கள் முதலியவற்றுடன் நானும் தொத்திக்கொண்டேன்.
எங்களின் மிகப்பெரிய நிறுவனத்தின் ஷிப்ட் முடிந்ததற்கான சங்கு அப்போது ஒலிக்க ஆரம்பித்தது. கழுத்தில் ஆளுயர மாலையுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள் காரில் ஏறி அமர்ந்து விட்டார். கார் கதவு மட்டும் இன்னும் மூடப்படவில்லை. பத்தாயிரம் வாலா பட்டாஸுச்சரம் ஒன்று கொளுத்தப்பட்டது. வெடிகள் வெடித்து ஒருவழியாக ஓய்ந்தன. வ.வ.ஸ்ரீ அமர்ந்திருந்த காரைச்சுற்றி ஒரே கூட்டம். பிரியாவிடை கொடுக்க அலுவலகத் தோழர்களும், தோழிகளுமாக கூடியிருந்தனர்.
வ.வ.ஸ்ரீ. தன் பொடிட்டின்னை எடுத்து இடதுகை விரல்நுனியில் வைத்து, வலது கை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டுதட்டிவிட்டு, பிறகு மெதுவாக அதைத் திறந்து, காரின் ஒரு ஓர இருக்கையில் அமர்ந்தவாறே வெளிப்பக்கமாக நீட்டினார்.
பொடி போட்டுப்பழக்கம் உள்ளவர்கள், பழக்கம் இல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் அதில் தங்கள் விரல்களை இட்டு, ஆளுக்கு ஒரு சிட்டிகை வீதம் பொடியை எடுத்தனர்.
இதுவரை நமக்கு நம் அலுவலக வாழ்க்கையில் அலுப்புத்தட்டாமல் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தி வந்த வ.வ.ஸ்ரீ. என்ற பெரியவர் கொடுத்த பிரஸாதமாகவே அதை நினைத்து தங்கள் மூக்கினில் வைத்து, சர்ரென்ற ஒலியுடன், ஒரே நேரத்தில், ஒற்றுமையாகவும் ஒரே இழுப்பாகவும் இழுத்தனர்.
அவர்களின் ஒட்டுமொத்த தும்மல் சப்தம் விண்ணை முட்ட, அதுவே நல்ல சகுனம் என்று நினைத்த வ.வ.ஸ்ரீ. கார் கதவையும், தன் கையிலிருந்த பொடிட்டின்னையும் மூடியவாறு எழுச்சியுடன் புறப்படச் சொன்னார்.
15 கார்களும் வ.வ.ஸ்ரீ. யின் வீடு நோக்கி, மெதுவாக பயணிக்க ஆரம்பித்தன. அந்தக் காட்சியைக் காண மிகவும் அருமையாகவே இருந்தது, எனக்கு.
வ.வ.ஸ்ரீ. அவர்கள், அவர் அருகிலேயே அமர்ந்திருந்த என்னை அன்புடன் ஒரு பார்வை பார்த்து புன்னகை புரிந்து விட்டு, ஏதோ ஒரு அன்புப்பரவசத்தால் என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார். எனக்கு உடனே அந்தப் பூங்கா ஞாபகம் வந்து விட்டது.
வெற்றி, வெற்றி, வெற்றி ........ நானே முதலமைச்சர், நீயே நிதியமைச்சர். கோட்டையை நோக்கி நாம் ஆட்சியமைக்கச் சென்று கொண்டிருக்கிறோம்” என்று மூ.பொ.போ.மு.க, தலைவர் வ.வ.ஸ்ரீ. அவர்கள் என்னிடம் சொல்லுவது போன்ற பிரமை ஏற்பட்டது எனக்குள்.
-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-