என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
நகைச்சுவை சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2011

முன்னெச்சரிக்கை முகுந்தன்



முன்னெச்சரிக்கை முகுந்தன்

நகைச்சுவைச் சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

ஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்கு சற்று பெருத்த சரீரம்.  நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர் பிரஷருடன் சமீபகாலமாக சற்று ஞாபக மறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலுமே ஒருவித படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.

ஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது அலுவலக அடையாள அட்டை, வீட்டு விலாசம், தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி, அதற்கான கூடு, மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், டிபன் பாக்ஸ், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு, பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீப், ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி ஏதாவது கண்ணில் பட்டால் வாங்கி வர ஒரு துணிப்பை, இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, வேஷ்டி, துண்டு, செருப்புகள் என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி சாமான்களையும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட.

ஆபீஸில் அவருக்கு முன்னெச்சரிக்கை முகுந்தன் என்று ஒரு பட்டப்பெயரே கொடுத்திருந்தனர்.

பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும் இவருக்கு வேஷ்டி-துண்டு எதற்கு என்று நீங்கள் யோசிப்பதும் நியாயமே. அது ஒரு பெரிய கதை. 

ஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறிய அவருக்கு, அன்றொரு நாள் போதாத காலம். இவர் போட்டிருந்த டைட் பேண்ட், ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். அன்று முதல் இன்று வரை, வேஷ்டியும் துண்டும், இவர் போகுமிடமெல்லாம் கூடவே தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன. 

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து காவிரிக்குப்போகும் வழியில் தான் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு அமைந்துள்ளது.

அன்று சனிக்கிழமை. அரை நாள் மட்டுமே ஆபீஸுக்குத் தலையைக் காட்டிவிட்டு, சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டார், முகுந்தன்.

மறுநாள் காலை ஆறரை மணிக்கு திருச்சி ஜங்ஷனிலிருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலைப்பிடித்து சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.

ஞாயிறு மாலை அவர் பிள்ளைக்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்து விட்டு வர ஏற்பாடு. அவரின் மனைவியும் மகனும் ஏற்கனவே சென்னை பெரம்பூரிலுள்ள இவரின் மைத்துனர் வீட்டுக்குப்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. 

முகுந்தனுக்கு வேண்டிய துணிமணிகள், மருந்து மாத்திரைகள், முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் முதலியன அனைத்தும் ஒன்று விடாமல், அவர் மனைவி ஏற்கனவே ஒரு பெட்டியில் ரெடி செய்து வைத்திருந்தாள்.

அவற்றையெல்லாம் ஒரு செக்-லிஸ்டு போட்டுவிட்டு, ஒருமுறை சரி பார்த்துவிட்டு,  ஹோட்டலிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு ஜன்னல் ஓரக் கட்டிலில் படுத்தவர், நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிப்போனார்.

ஜன்னல் வழியே மழைச்சாரல் பட்டு, திடீரென்று கண் விழித்த முகுந்தனுக்கு ஒரே அதிர்ச்சி. மணி 5.30 ஆகிவிட்டது. வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மேக மூட்டமாக எங்கும் ஒரே இருட்டு. மின்னலுடன் கூடிய பலத்த இடிகள் வேறு பயமுறுத்தி வருகிறது. மின்வெட்டுக்கூட ஏற்படக்கூடிய சூழ்நிலை.     

அவசர அவசரமாக பாத்ரூம் போய்விட்டு , பல் தேய்த்து முகம் கழுவி, துண்டு ஒன்றால் துடைத்துக்கொண்டு, மெயின் ஸ்விட்சை ஞாபகமாக ஆஃப் செய்துவிட்டு, வீட்டைப்பூட்டிக்கொண்டு, பூட்டை நன்கு இழுத்துப்பார்த்து விட்டு, காலில் செருப்பு, ஒரு கையில் பெட்டி, மறு கையில் குடை+டார்ச் லைட்டுடன், லிஃப்ட் வேலை செய்யாத எரிச்சலில் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.

“சரியான மழை ... இன்னும் 48 மணிநேரம் தொடருமாம்” யாரோ இருவர் குடை பிடித்த வண்ணம் பேசிச்சென்றது இவர் காதிலும் விழுந்தது.







கனத்த மழையினால் சாலை முழுவதும் சாக்கடை நீரும் கலந்து ஓடிக்கொண்டிருந்ததால் சேறும் சகதியுமாகக் காலை வைக்கவே மிகவும் அருவருப்பாக இருந்தது. 


அதிகமாக ஜனங்கள் நடமாட்டமோ, வாகங்கள் தொல்லையோ இல்லை. ஏற்கனவே ஒருமுறை இதே போன்ற நல்ல மழையில், நடுரோட்டில் குண்டும் குழியுமாகத் தேங்கியிருந்த, மழை நீருக்கு அடியில் இருந்த மாட்டுச்சாணத்தில் காலை வைத்து, அது அப்படியே இவரை வழிக்கி விட்டு, சறுக்கி விழச்செய்ததில், உடம்பெல்லாம் சேறும் சகதியுமாகி, வலது தோள்பட்டை எலும்பு நழுவி. பலநாட்கள் அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், தற்போது மெதுவாக ஊன்றி, அடிமேல் அடிவைத்து, வாஜ்பாய் ஸ்டைலில் நடக்கும் போது, இவர் அருகில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, அதில் உடனே ஏறிக்கொண்டார்.

மணி இப்போதே 6.10 ஆகிவிட்டது. பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் **பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**, ஊரைச்சுற்றிக்கொண்டு, திருச்சி ஜங்ஷனுக்குப்போக எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பல்லவன் எக்ஸ்பிரஸ் வண்டி எப்படியும் புறப்பட்டு விடக்கூடும்.   திருச்சி டவுன் ஸ்டேஷனில் இந்த வண்டி நிற்காது. மழை வேறு வலுத்துத் தொல்லை கொடுத்து வருகிறது.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவராய், ஆட்டோவை நேராக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு விடச்சொன்னார். நேரம் இருப்பதால் பதட்டம் இல்லாமல், 6.45க்குள் அங்கு போய் செளகர்யமாக வண்டியைப்பிடித்து விடலாம் என்று நல்லதொரு முடிவு எடுத்தார்.

ஆட்டோ 6.30 க்கே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை அடைந்து விட்டது. முகுந்தனுக்கு ஒரு பெரிய நிம்மதி. சூடான காஃபி ஒன்று வாங்கி மழைக்கு இதமாக அருந்தினார். 



6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்ததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. பலத்த மழையும் கருத்த மேகமுமே காரணம் என்று நினைத்துக்கொண்டார்.

“சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்? இந்த ப்ளாட்ஃபார்ம் தானே!” என அங்கிருந்த ஃபோர்டரிடம் வினவினார்.

“என்ன சாமீ! ஊருக்குப்புதுசா நீங்கள்? சென்னைப் பட்டணத்திற்குப்போக ராத்திரி பத்தரை மணிக்குத்தான் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் வண்டி இருக்கு. பல்லவனுக்குத்தான் போகணும் என்றால் பேசாமப்போய்ப் படுங்க. நாளைக்குக் காலையிலே 6.45 க்குத்தான் அது வரும்” என்றான்.

அழாக்குறையாக இங்கும் அங்கும் திரும்பிய அவர் கண்களில் பட்டது அந்த ரயில்வே கடிகாரம் 18.50 என்று சிவப்புக்கலர் டிஜிட்டலில் காட்டியவாறே.

ராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும், விரையமான வெட்டிச் செலவுகளும் என்று போட்டிருந்தது அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது. 

கொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம்.   எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.

ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?

கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.






-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-



**பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**

திருச்சி டவுனிலிருந்து திருச்சி ஜங்ஷன் வரை செல்லும் நேர் வழிப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் அடைக்கப்பட்டிருந்த 
ஓரிரு வருடங்களில், இந்தக்கதை எழுதப்பட்டது. 

இப்போது பாலக்கரைப் பகுதியில் அதுபோன்ற 
போக்குவரத்துத் தொந்தரவுகள் ஏதும் இல்லை.  


-oOo-




வெள்ளி, 25 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 8 - இறுதிப்பகுதி]



அடுத்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வ.வ.ஸ்ரீ. அவர்கள் ஆபீஸுக்கே வரவில்லை. எனக்கும் எந்த வேலைகளுமே ஓடவில்லை.  ஒரு வயதான மனிதருடன் மிகக் குறைந்த காலமே ஒரு அலுவலகத்தில் பழகியும், எனக்கு அவர் மீது இப்படி ஒரு அன்பும்,  ஆர்வமும் பிறந்துள்ளது எனக்கே மிகவும் ஆச்சர்யமாகப்போய் விட்டது. 

ஏதோ அவர் மீது ஒரு தனி பாசம்.  தனி பிரியம் எனக்கு. வயதானவர் மற்றும் மிகவும் அனுபவஸ்தர் என்பதாலா, மிகவும் சுவாரஸ்யமாகப் பேசுபவர் என்பதாலா, நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பவர் என்பதாலா என்று சரியாகப் புரியாவிட்டாலும், ஏதோ ஒரு ஈடுபாடு அவருடன் போன ஜன்மத்திலிருந்தே ஏற்பட்டு இப்போது தொடர்கிறதோ என்னவோ.

இன்று சாயங்காலமாக ஆபீஸ் விட்டதும் அவரை அவர் வீட்டில் போய் சந்தித்து வரலாமா என்று நினைத்தேன்.   என் கை என்னையறியாமல் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசச்செய்தது.   மாலை 6 மணிக்கு காந்தி பார்க் என்ற இடத்திற்கு வரச்சொல்லி சொல்லிவிட்டார்.

நான் அவர் சொன்ன பூங்காவிற்கு 5.55 க்கே ஆஜர் ஆகிவிட்டேன். மிகுந்த பதட்டத்துடன் சற்று நேரத்திற்கெல்லாம் வ.வ.ஸ்ரீ. அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்.

“என்ன சார்,  ஆபீஸ் பக்கமே காணோம் ?”  என்றேன்.

நான் இந்தத்தமிழ்நாட்டிலுள்ள பெரிய பெரிய கட்சிகளுக்காக எவ்வளவு பாடுபட்டு உழைத்திருக்கிறேன் தெரியுமா?  நம் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட யூனியன்களில் எவ்வளவு முறை நான் தலைவராக இருந்து கட்சிக்காக எவ்வளவு ஆதரவு திரட்டிக்கொடுத்திருக்கிறேன் தெரியுமா?  அந்த நன்றி விஸ்வாசத்தை மறந்துட்டாங்களே எல்லாப் பயல்களும்? 

இந்த எலெக்‌ஷனுக்கு முன்னாலேயே ஆபீஸிலிருந்து பணிஓய்வு பெறுவதும் நல்லது தான், இந்த தடவை வரும் எலெக்‌ஷனிலேயாவது நமக்கு எவனாவது ஒருத்தன் எம்.எல்.ஏ. சீட்டுக்கு டிக்கெட் தந்துடுவான்னு நினைச்சேன்;ஆனாக்க எல்லாப்பயல்களும் என்னிடமே பேரம் பேசறானுங்களே!  நான் கத்துக்கொடுத்த பாடத்தை என்னிடமே திருப்பறாங்களே! என்று ஏதேதோ காரசாரமாக ஆரம்பித்தார், வ.வ.ஸ்ரீ.

“அடடா இது தான் நீங்கள் 3 நாளா ஆபீஸுக்கு வராததற்கு காரணமா! விட்டுத்தள்ளுங்க, சார்.   இந்தப் பாழாய்ப்போன பாலிடிக்ஸே உங்களுக்கு வேண்டாமே சார்” என்று உசிப்பி விட்டேன் நான்.

“விடுவேனா இத்துடன் இந்தப்பயல்களை!  தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிக்ளிலும் நமக்கு ஆளுங்க இருக்கு.   தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணிக்காவது கூப்பிடுறாங்களான்னு பார்ப்பேன். அதிலும் ஓரங்கட்டப்பட்டால், எல்லா இடங்களிலும் 234 தொகுதிகளிலும் தனித்தே என் கட்சி போட்டியிடும். அப்போது தான் என் கட்சியின் தனித்தன்மையையும், பலத்தையும் நிரூபித்து, அடுத்த எலெக்‌ஷனிலாவது என்னால் ஆட்சியைப்பிடிக்க முடியும். 

இன்று நள்ளிரவு பத்திரிக்கையாளர்களுக்கு இது சம்பந்தமாக சிறப்புப் பேட்டி கொடுக்க இருப்பதாகச் சொல்லி,  அழைப்புகள் அனுப்பியுள்ளேன். நாளை வரும் செய்திகளைப் பார், நான் யார் என்று உனக்கும் தெரியும்” என்று கர்ஜித்தார் வ.வ.ஸ்ரீ. 

”இந்த முற்போக்குக்கூட்டணி, பிற்போக்குக்கூட்டணி என்கிறார்களே, சார், அப்படின்னா என்ன சார், கொஞ்சம் எனக்குப்புரியும் படியா சொல்லுஙளேன்” என்றேன்.

“முற்போக்காவது, பிற்போக்காவது எல்லாமே ஒரே கொள்ளைக்கூட்டம் தானப்பா.   முற்போக்குன்னா: ’ வாந்தி’,   பிற்போக்குன்னா:  ’பேதி’ன்னு நினைச்சுக்கோ. வாந்தியோ பேதியோ எல்லாமே இன்றைய மண்ணாங்கட்டி அரசியலில், சாக்கடைக்கு அனுப்ப வேண்டியவை தான்” என்றார், வ.வ.ஸ்ரீ.,  மிகுந்த ஆத்திரத்துடன். 

”நீங்கள் ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சியின் பெயர் என்ன சார்?” என்றேன், நான்.

“மூ.பொ.போ.மு.க”  

அதாவது,

“மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்”  

என்றார்.

”தமிழ்நாட்டில் பெரிசா எவ்வளவு பேர்கள் மூக்குப்பொடி போடப்போகிறார்கள்! அவர்களுக்கு என்ன சார் இப்படி தனியே ஒரு முன்னேற்றக் கழகம்?” என்றேன்.

“இங்கு தான் நீ, நம் தமிழ்நாட்டு அரசியலை வழுவட்டைத்தனமாகப் புரிந்து கொள்கிறாய்.    சென்னை மாகாணமாக இருந்தது யாரால் எப்போது ’தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது என்ற சரித்திரம் உனக்குத் தெரியுமா?” என்றார் ஆத்திரத்துடன் வ.வ.ஸ்ரீ. 

“சுதந்திரத்திற்குப் பின் பல்லாண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் போய் கழக ஆட்சியைக் கொண்டு வந்தாரே,  நம் பேரறிஞர் அண்ணா! அவர்களால் கொண்டுவரப்பட்டது தான் இந்தத் ’தமிழ்நாடு’ என்ற புதுப்பெயர், அப்படின்னு கேள்விப்பட்டிருக்கிறேன், சார்”  என்றேன்.

“கரெக்ட்டா சொன்ன தம்பி.   இப்போது உள்ளவர்கள் யாருமே அறிஞர் அண்ணாவின் உண்மையான வாரிசு என்று சொல்லிக்கொள்ள முடியாது. அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார்.   நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன்.  எனவே அண்ணா அன்று ஆரம்பித்த முன்னேற்றக் கழகத்தின் அசல் வாரிசு, நான் ஒருவன் மட்டுமே.  இது ஒரு பாயிண்ட் போதும் எனக்கு, ஆட்சியைப்பிடிக்க என்று மிகவும் ஆவேசமானார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.

”தங்கள் கட்சிக்கு தாய்க்குலத்தில் ஆதரவு இருக்காதே, சார்?”  என்றேன்.

”ஏன் இருக்காது?   மது அருந்தும் பெண்கள், புகைபிடிக்கும் பெண்கள், சுருட்டு பிடிக்கும் பெண்கள்,  வெற்றிலைபாக்குப் புகையிலை போடும் பெண்கள் போலவே பொடி போடும் பெண்கள் நிறைய பேர்கள் உண்டப்பா. 

ஆனால் அவர்களுக்கே இருக்க வேண்டிய அச்சம், நாணம், மடம், பெயர்ப்பு என்று அந்தக்காலத்தில் சொல்லுவார்களே, அந்த ஒரு வெட்கத்தினால், இந்தப்பொடி போடும் பெண்கள் பற்றி வெளியுலகுக்குத் தெரிய நியாயம் இல்லை.   ஆனால் தலைவராகிய எனக்குத் தெரிந்தால் போதாதா! அவர்களின் ஆதரவை அள்ளிப்பெற்றிட முடியுமே, என்னால்!”  என்றார்.

”இருந்தாலும் சார்.......”என்று சற்றே நான் இழுத்தேன்.

”பெண்களே!  தாய்க்குலமே!  உங்கள் ஜாக்கெட்டில் ஒரு பாக்கெட் வையுங்கள். அந்தப் பாக்கெட்டில் பொடியை வையுங்கள்.  ஈவ் டீஸிங்கா, கடத்தலா, கற்பழிப்பா கவலையே படாதீர்கள்.  ஜாக்கெட்டில் உள்ள பாக்கெட்டை அவிழ்த்து தூவுங்கள் பொடியை அந்த வில்லன்களில் கண்களை நோக்கி” என்று கூறி மகளிர் அணியை வலுப்படுத்துவோம். மகளிருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவோம்”  என்று வீர வசனங்கள் பேச ஆரம்பித்து விட்டார், வ.வ.ஸ்ரீ.

“தங்கள் கட்சியின் கொள்கை என்ன?  பிரச்சார யுக்திகள் என்ன?” விளக்குங்களேன் என்றேன்.

”அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் உபயோகித்த அதே மூக்குப்பொடியை நாங்களும் உபயோகிக்கிறோம்.  

எனவே நாங்கள் தான் அண்ணா அவர்களின் உண்மைத்தம்பிகள்.

எங்கள் ”மூ.பொ.போ.மு.க.” வே ஒரிஜினல் தாய்க்கழகம் ஆகும் என்று மக்கள் மன்றத்தில் வாதாடுவோம்.

தாலிக்குத் தங்கம் வேண்டாம் ! 
தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !! 
மூக்குக்குப் பொடி வேண்டும் !
   முன்னேற வழி வேண்டும் !!       

என்று முழங்கிடுவோம்.






எங்கள் கட்சியின் சின்னமே “பொடிட்டின்” தான்.

தற்சமயம் சத்துணவு என்ற பெயரில் ஏதேதோ உணவுகளும், முட்டைகளும் மட்டும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இவை கொஞ்சம் பசியாற்றி அவர்களைத் தூங்கச்செய்யுமே தவிர, பாடங்கள் மனதில் பதியவோ, மூளை வளர்ச்சியடையவோ எந்தவிதத்திலும் பயன் படாது. 

எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூளைக்கு எழுச்சி கொடுக்கவும், குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கவும், ஆளுக்கு 5 கிராம் வீதம் தினமும் பொடி தந்து அதை எப்படிப்போடணும் என்று பயிற்சியும் தருவோம். பிறகு அதை படிப்படியாக தினமும் 10 கிராம் வீதம் தருவதற்கும் பாடுபடுவோம்.   

குழந்தைகளே வருங்கால இந்தியா என்பதால் அவர்களுக்கு ஆரம்பப்பள்ளிப் பருவத்திலேயே எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ’மூ.பொ.போ.மு.க’ கட்சியின் அடிப்படைக்கொள்கைகளில் மிக முக்கியமானதொன்று.

கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்க ஒரு புகழ்பெற்ற சூப்பர் சினிமா நடிகையை தேடி வருகிறேன்.   படுகுஜாலாக ஒருத்தி மட்டும் கிடைத்து விட்டால் போதும், மற்ற எல்லா பிரச்சனைகளும் ஓவர்.

சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும்,  இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் “பொடிட்டின்” சின்னமே என எடுத்துரைப்போம்”  என்றார் பேரெழுச்சியுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள்.

இருட்டி விட்டதாலும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் தன்னை மறந்து இவ்வாறு உரக்க வீராவேச உரை நிகழ்த்துவதாலும், பயந்து போன மக்கள், அந்தப் பூங்காவை விட்டு அவசர அவசரமாக வெளியேற, எனக்கும் அவருடன் அங்கு தனியே இருப்பது நல்லதாகப் படாமல், ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.  

“சார், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்.   நீங்கள் கொதித்துப்போய் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக்கேட்கும் எனக்கு, நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது.   மீதி விஷயங்கள் நாளை ஆபீஸில் பேசிக்கொள்ளலாம்” என்றேன்.

இதைக்கேட்ட அவர் என்னைக் கட்டித்தழுவிக் கொண்டு, கை குலுக்கினார். அப்போது, அவர் முகத்தில், இதுவரை நான் என்றுமே பார்க்காத ஓர் பேரெழுச்சியுடன் கூடிய குதூகலத்தை, என்னால் காண முடிந்தது.

மீண்டும் ஒருமுறை என்னைக்கட்டி அணைத்துத் தழுவிக்கொண்டு விட்டு, இந்த நான் ஆரம்பிக்க இருக்கும் புதிய கட்சிக்கு நீயும் ஆதரவாக இருந்து எனக்கு பல உதவிகள் செய்யும்படியாக இருக்குமப்பா, நான் அதைப்பற்றி உனக்கு பிறகு விபரமாகச் சொல்கிறேன், என்று சொல்லி ஒருவழியாகப் புறப்பட்டு சென்று விட்டார்.  

நல்லவேளையாக இவர் என்னைக் கட்டிப்பிடித்ததை யாரும் அங்கே பார்த்ததாகத் தெரியவில்லை.   நானும் நடுங்கியவாறே வீடு போய்ச் சேர்ந்தேன்.

நான் வீடு போய்ச்சேர்ந்தும்,  வ.வ.ஸ்ரீ. அவர்கள் நல்லபடியாக வீடு போய்ச்சேர்ந்தாரா என்று எனக்கு ஏற்பட்ட விசாரத்தில், அவருக்கு மீண்டும் போன் செய்தேன்.      

நெடு நேரமாக ரிங் போயும், போன் எடுக்கப்படவில்லை.   பிறகு மீண்டும் போன் செய்தபோது ஒரு பெண் குரல் கேட்டது எனக்கு.

ஆஹா! ’கொள்கை பரப்புச் செயலாளர்’ ஆக பதவி ஏற்க அதற்குள் ’குஜாலான’எந்த நடிகை மாட்டினாள் என்று ஆச்சர்யப்பட்டேன்.

பிறகு தான் தெரிந்தது அது அவரின் மனைவியின் குரல் என்று.   நான் என்னை அறிமுகம் செய்துகொண்டுவிட்டு, ”மிஸ்டர் ஸ்ரீனிவாசன் சாருடன் பேச வேண்டும்”  என்றேன்.

வ.வ.ஸ்ரீ. அவர்களை ஏதோவொரு மனநோய் மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாகச் சொன்னார்கள், அவரின் மனைவி.  

நான் பதறிப்போனேன்.  ”ஏன் என்னாச்சுங்க மேடம்? 2 மணி நேரங்கள் முன்புகூட என்னிடம் நல்லாத்தானே பேசிக்கொண்டிருந்தார்!” என்றேன்.   

பிறகு வ.வ.ஸ்ரீ யின் மனைவியே எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.  பயப்பட வேண்டாம் என்றும் மனதை தைர்யப்படுத்திக்கவும் சொன்னார்கள்.  

அதாவது இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் பற்றிய ஏதாவது செய்திகள் வந்தாலே வ.வ.ஸ்ரீ அவர்களுக்கு இதுபோல ஒரு அட்டாக் வருவதுண்டாம். இதுவரை பலமுறை வந்துள்ளதாம்.   பயப்பட ஒன்றும் இல்லையாம். முற்றிய நிலையில் ஒரு நாலு நாள் டிரீட்மெண்ட் கொடுத்து படுக்க வைத்தால் போதுமாம்.  பிறகு பழையபடி, அடுத்த எலெக்‌ஷன் வரை கவலைப்பட வேண்டியதில்லையாம்.   

இன்று தான் அந்த முற்றிய நிலையை அந்த அம்மாவால் கண்டு பிடிக்க முடிந்ததாம்.    இன்னும் நாலு நாட்களில் வழக்கம் போல ஆபீஸுக்கு வந்து விடுவாராம்.   தயவுசெய்து யாரும் அரசியல் பற்றி மட்டும் அவரிடம் பேசாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்றாள் அந்த அம்மா, எந்தவித ஒரு டென்ஷனுமே இல்லாமல்.  

இத்தகைய ஒரு அட்டாக் வந்துள்ள ஆசாமியுடன், தனியாக அந்தப் பார்க்கில், இருட்டும் வரை இருந்துள்ளோமே என்பதை நினைத்துப்பார்த்த எனக்குத் தான் இப்போது டென்ஷனாகிப்போனது.

இந்தப்பாழாய்ப்போன அரசியல் தேர்தல்கள் அடிக்கடி வந்து தொலைப்பதனால், இதுபோல எவ்வளவு பேர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனரோ?; எவ்வளவு பேர்களுக்கு மூளை குழம்புகிறதோ?; எவ்வளவு மக்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றதோ? என நினைத்து, நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

பாவம் அந்த நல்ல மனிதர், வ.வ.ஸ்ரீ., அவர்கள் சீக்கரமாக குணமாகி நல்லபடியாகத் திரும்ப வரவேண்டும்; நல்லபல செய்திகள் அவர் வாயால் தொடர்ந்து நான் கேட்க வேண்டும், என கடவுளிடம் நான் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன்.

[இடைவேளை]


நான் செய்த அந்தப்பிரார்த்தனை வீண் போகவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் வ.வ.ஸ்ரீ.  அவர்கள், வழக்கம்போல எழுச்சியுடன் ஆபீஸுக்கு வந்து விட்டார்.   

அவரிடம் இந்த எலெக்‌ஷன் பற்றிய செய்தியினால் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்டதாக அவர் மனைவி சொன்ன அட்டாக்கின் அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை.   

அந்தளவுக்கு நல்லதொரு ஷாக் ட்ரீட்மெண்ட், கொடுத்திருப்பார்கள் போலிருக்கு!. 

அந்த நல்லதொரு நகைச்சுவையாளரை காப்பாற்றிய, அந்த மனநோய் மருத்துவருக்கும், கடவுளுக்கும் நன்றி கூறினேன், நான்.

நாங்கள் எங்கள் அலுவலகத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த வ.வ.ஸ்ரீ. அவர்களின் பணிஓய்வு பெறும் நாளும் வந்து விட்டது.   இன்று தான் அவர் பணிஓய்வு பெறப்போகிறார். 

அந்தக் காலைப்பொழுதில் வ.வ.ஸ்ரீ. யின் டேபிளின் மேல், இரண்டு டஜன் எவர்சில்வர் பொடி டப்பாக்கள், புத்தம் புதியதாக பளபளவென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.   ஒவ்வொன்றும் ஒண்ணரை அங்குல உயரமும், முக்கால் அங்குல விட்டமும் கொண்டதாக, திருகு மூடி போட்டதாக இருந்தன.  ஒவ்வொன்றிலும் ரூ.28.40 என்று விலை போடப்பட்டிருந்தன.

அன்று பணிஓய்வு பெறும் அவரை சந்திக்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு துறைகளிலிருந்தும்,தொழிற்சங்கங்களிலிருந்தும் வந்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பொற்கிழிகள், நினைவுப்பொருட்கள் என்று கொடுத்தபடி இருந்தனர். மாலைகள் மலை போலக்குவியத் தொடங்கின. 

பொடி போடும் பழக்கமுள்ள தன் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு புதுப்பொடிட்டின் வீதம், தன் நினைவுப்பரிசாக அளித்து வந்தார் வ.வ.ஸ்ரீ.   அந்த டின்கள் உள்ளே முழுவதுமாக மூக்குப்பொடி அடைக்கப்பட்டிருந்தது கண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டு, ஆனந்தக்கண்ணீருடன் வ.வ.ஸ்ரீ. யுடன் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

ஆபீஸ் விட்டதும் அவரை வீடு வரை கொண்டு சேர்க்க நண்பர்கள் பலரும் பல கார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.ஒரு 25 கார்களுக்கு மேல் வரிசையாக பவனி வந்து ஒன்றன்பின் ஒன்றாக நின்றன.  








இவற்றையெல்லாம் வாழ்க்கையில் முதன் முதலாகப்பார்த்த எனக்கும் உற்சாகம் ஏற்பட்டது.   அவர் பயணம் செய்யப்போகும் விசேஷமான காரில் அவருடைய மாலைகள், பரிசுப் பொருட்கள் முதலியவற்றுடன் நானும் தொத்திக்கொண்டேன்.

எங்களின் மிகப்பெரிய நிறுவனத்தின் ஷிப்ட் முடிந்ததற்கான சங்கு அப்போது ஒலிக்க ஆரம்பித்தது.   கழுத்தில் ஆளுயர மாலையுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள் காரில் ஏறி அமர்ந்து விட்டார்.  கார் கதவு மட்டும் இன்னும் மூடப்படவில்லை. பத்தாயிரம் வாலா பட்டாஸுச்சரம் ஒன்று கொளுத்தப்பட்டது.   வெடிகள் வெடித்து ஒருவழியாக ஓய்ந்தன. வ.வ.ஸ்ரீ அமர்ந்திருந்த காரைச்சுற்றி ஒரே கூட்டம்.  பிரியாவிடை கொடுக்க அலுவலகத் தோழர்களும், தோழிகளுமாக கூடியிருந்தனர். 

வ.வ.ஸ்ரீ. தன் பொடிட்டின்னை எடுத்து இடதுகை விரல்நுனியில் வைத்து, வலது கை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டுதட்டிவிட்டு, பிறகு மெதுவாக அதைத் திறந்து, காரின் ஒரு ஓர இருக்கையில் அமர்ந்தவாறே வெளிப்பக்கமாக நீட்டினார்.

பொடி போட்டுப்பழக்கம் உள்ளவர்கள், பழக்கம் இல்லாதவர்கள்,  ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் அதில் தங்கள் விரல்களை இட்டு, ஆளுக்கு ஒரு சிட்டிகை வீதம் பொடியை எடுத்தனர். 

இதுவரை நமக்கு நம் அலுவலக வாழ்க்கையில் அலுப்புத்தட்டாமல் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தி வந்த வ.வ.ஸ்ரீ. என்ற பெரியவர் கொடுத்த பிரஸாதமாகவே அதை நினைத்து தங்கள் மூக்கினில் வைத்து, சர்ரென்ற ஒலியுடன், ஒரே நேரத்தில், ஒற்றுமையாகவும் ஒரே இழுப்பாகவும் இழுத்தனர்.  

அவர்களின் ஒட்டுமொத்த தும்மல் சப்தம் விண்ணை முட்ட, அதுவே நல்ல சகுனம் என்று நினைத்த வ.வ.ஸ்ரீ. கார் கதவையும், தன் கையிலிருந்த பொடிட்டின்னையும் மூடியவாறு எழுச்சியுடன் புறப்படச் சொன்னார்.






15 கார்களும் வ.வ.ஸ்ரீ. யின் வீடு நோக்கி, மெதுவாக பயணிக்க ஆரம்பித்தன.  அந்தக் காட்சியைக் காண மிகவும் அருமையாகவே இருந்தது, எனக்கு.   

வ.வ.ஸ்ரீ. அவர்கள், அவர் அருகிலேயே அமர்ந்திருந்த என்னை அன்புடன் ஒரு பார்வை பார்த்து புன்னகை புரிந்து விட்டு, ஏதோ ஒரு அன்புப்பரவசத்தால் என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார்.     எனக்கு உடனே அந்தப் பூங்கா ஞாபகம் வந்து விட்டது.    



வெற்றி, வெற்றி, வெற்றி ........ நானே முதலமைச்சர், நீயே நிதியமைச்சர்.   கோட்டையை நோக்கி நாம் ஆட்சியமைக்கச் சென்று கொண்டிருக்கிறோம்” என்று மூ.பொ.போ.மு.க, தலைவர் வ.வ.ஸ்ரீ. அவர்கள் என்னிடம் சொல்லுவது போன்ற பிரமை ஏற்பட்டது எனக்குள். 

 -o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-







புதன், 23 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 7]



மறுநாள் காலையில், நேற்று வ.வ.ஸ்ரீ. அவர்கள் சொன்னது போலவே, நான் அவர் சீட் வேலைகளையும் சேர்த்துப்பார்க்க வேண்டும் என்றும், அவர் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றே மூன்று மாதங்கள் மட்டும் இருப்பதால் இப்போதே அதற்கான Responsibilities Handing over - Taking over முதலியன மேற்கொள்ள வேண்டும் என்று ஆபீஸ் ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டதால், வ.வ.ஸ்ரீ. அவர்களுடைய சீட் அருகிலேயே அமர்ந்து தொடர்ந்து அரட்டை அடிப்பதற்கு [Official Discussions என்ற பெயரில்] அனுமதி வழங்கப்பட்டு விட்டது, என்று இருவருமே நினைத்து எங்களுக்குள் மகிழ்ந்து கொண்டோம்.

“பல வருஷங்களாக பொடி போட்டுவரும் தங்களுக்கு இதுவரை எந்தப்பிரச்சனையும் வந்தது இல்லையா, சார்” என்று நைஸாக என் இன்றையப் பேட்டியைத் தொடங்கலாலேன்.  

“ஒரு தடவை மூக்கினுள் ஏதோ ஒரு சிறிய கொப்பளம் போல் ஏற்பட்டு, பொடி போடும் போதெல்லாம் வலியும் எரிச்சலுமாக இருந்ததப்பா.  மூக்கு இரண்டையும் சுத்தமாகக் கழுவிவிட்டு “காது மூக்கு தொண்டை” [E.N.T] டாக்டரிடம் போனேன்.  எனக்கு டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.

மிகவும் பொறுத்துப்பொறுத்துப்பார்த்த நான், கடைசியில் சகிக்க முடியாததால், அங்கிருந்த வெண்புறா போன்ற நர்ஸ்ஸிடம் என் பிரத்யேகப் பிரச்சனையை எடுத்துரைத்து, அவள் என்மீது காட்டிய கடைக்கண் பார்வையால், முன்னுரிமை அடிப்படையில், உள்ளே அந்த டாக்டரிடம் சென்று விட்டேன். 

என் சிறிய மூக்குத்துவாரங்களுக்குள் ஏதோவொரு தொலைநோக்குக் கருவியை பொருத்தி, வெளிச்சம் அடித்துப் பார்த்துவிட்டு, அவர் நான் பல்லாண்டு காலமாக பொடி போடும் ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து வன்மையாகக் கண்டித்து விட்டார்.  

காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி, என் மூச்சுக்குழல் முழுவதும் ஒரே இருட்டாக ஒன்றுமே தெரியாமல் வழுவட்டையாக இருப்பதாகக்கூறி, இது மிகவும் ஆபத்து என பயமுறுத்தி, இனி பொடிப்பக்கமே தலை வைத்துப்படுக்கக்கூடாது, கண்ணாலும் பார்க்கக்கூடாது என்று இறுதி எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்.

டாக்டர் சொன்ன எச்சரிக்கையை என்னுடனேயே அருகில் இருந்து கேட்ட என் மனைவி என்னை, அப்போது ஒரு விதக் கொலைவெறியுடன் பார்த்தாள். வெளியே வந்த நான், அன்று இறுதியாக ஒரே ஒரு முறை மட்டும் பொடியை இழுத்துவிட்டு, ஒரு பேரெழுச்சியுடன் ஞாபகமாக அந்த வெண்புறாவுக்கும் நன்றி சொல்லிவிட்டு, என் மனைவியை நேருக்கு நேர் பார்க்க விரும்பாதவனாக, அவளுடனேயே ஆட்டோவில் ஏறி என் வீட்டை அடைந்தேன்.

பொடிட்டின்னை என் வீட்டுப்பரணையில் என் மனைவி பார்க்கும் போதே விட்டெறிந்து விட்டேன்.   இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.

ஒரு அரை மணியோ ஒரு மணியோ, ஒரு மாதிரி தாக்குப்பிடித்து விட்டேன். அதன் பிறகு எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.  நடுவில் என் மனைவி சாப்பிடக்கூப்பிட்டு இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.   ஆனால் யார் பேசுவதும் என் காதிலேயே விழவில்லை.  உடல் பூராவும் ஒரு மாதிரி சோர்ந்துபோய், கண்கள் சொருக, சுத்த வழுவட்டையாகி விட்டேன். அப்படியே விட்டால், எனக்கு மூச்சே நின்றுவிடும் போல ஆனது, என்னால் மட்டுமே உணர முடிந்தது.    

நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.   

இவ்வாறு பொடியுடன் ஒன்றிப்போய்விட்ட அவரின் வாழ்க்கையை எண்ணி, ஆச்சர்யப்பட்டுப்போன நான் ”சமீபத்தில் நீங்கள் துபாய்க்குப்போய் வந்ததாகக் கேள்விப்பட்டேனே,  சார்; அங்கு நம்மூர் போல பொடிக்கடைகள் உண்டா? அந்த அனுபவத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ சார்”, என்றேன்.

“அது ஒரு மிகப்பெரிய கதையப்பா,  லஞ்ச்டயம் ஆவதற்குள் சுருக்கமாகச் சொல்கிறேன்.   துபாயிலிருக்கும் என் பெரிய பையன், ரொம்ப நாட்களாகவே என்னை அங்கு வரும்படி கூப்பிட்டும், இந்தப்பொடி விஷயமாகத்தான், அந்தப்பயணத்தையே ஒத்திப்போட்டு வந்தேன்.  பிறகு அவன் பிடிவாதம் தாங்கமுடியாமல், அவனது அழைப்பை ஏற்று, நான் புறப்பட்டுச்செல்லும்படி ஆனது.




விமானம் ஏறும் முன்பு என்னைப் பரிசோதித்த அதிகாரிகள், என் சட்டைப்பையிலிருந்த பொடிட்டின்னைத் திறக்கச்சொல்லி, அதில் நான் புதுசாக வாங்கி அடைந்திருந்த மூன்று ரூபாய்ப்பொடியையும் ஒரு ஓரமாக தரையில் என்னை விட்டே கொட்டிவிடச்சொல்லிவிட்டனர்.  

காலிட்டின்னை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதியளித்தனர்.  எனக்கு அழுகையே வந்து விட்டது.  கைவசம் பொடி இல்லாத இந்த வெளிநாட்டுப்பயணம் தேவை தானா என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டேன்.   

செக்-இன் முடிந்த என்னையும், மற்ற பயணிகளையும் வெளியே வரமுடியாதபடி (ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பது போல) ஓரிடத்தில் அடைத்து விட்டனர். நாம் செல்ல வேண்டிய விமானம் வந்து விட்டது என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் க்யூவில் நிற்க, நானும் வேறு வழியில்லாததால் அவர்களுடன் சேர்ந்து நிற்கும்படி ஆகி விட்டது. 

முதன் முதலாக விமானத்தில் ஏறும் நான், அந்த ஐந்து மணி நேர விமானப்பயணத்தில் நொந்து நூலாகிப்போனேன்.      எழுச்சியுடன் பொடிபோட்டுக்கொண்டு ஜாலியாகப் பயணிக்க வேண்டிய நான், வழுவட்டையாக காலியான பொடிட்டின்னை மோப்பம் பிடித்தவாறே பறந்து கொண்டிருந்தேன்.  

அழகழகான இளம்வயது குட்டிகளான விமானப் பணிப்பெண்கள் அவ்வப்போது என்னருகே வருகிறார்கள், பயணம் இனிமையாகட்டும் என்று சொல்லி வாழ்த்துகிறார்கள்.  





எனக்குத் தின்ன, சுவைக்க, குடிக்க, சாப்பிட, படிக்க என்று ஏதேதோ தந்துதான் அந்தப்பெண்கள் என்னை அவ்வப்போது கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருத்தியாவது என் அவசர மற்றும் அவசியத் தேவையாகிய பொடியை மட்டும் தராதது, எனக்கு என் பொடிபோடாத மூக்குக்குமேல் கோபத்தை வரவழைத்து, அந்த அழகிய பெண்கள் மேல் ஒரு வித, எரிச்சலையே ஏற்படுத்தியது.  

நல்லவேளையாக 50 கிராமில் இரண்டு பாக்கெட்களும், 10 கிராமில் 50 பாக்கெட்டுகளும், என்னுடைய வெவ்வேறு லக்கேஜ்களுடன் துணிமணிகளில் சுற்றியவாறு கடத்திச்சென்றதை, பறிமுதல் செய்யாமல் விட்டுவிட்டனர்.                                   

அந்தப்பொடியின் காரம், மணம், குணம் குறையும் வரை மட்டும், ஒரு 40 நாட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் தங்கி ஷார்ஜா, துபாய், அபுதாபி என எழுச்சியுடன் அனைத்து இடங்களையும் என் மகனுடன் தினமும் காரில் சுற்றிப்பார்த்தேன். 

நம்மூர், திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயத்தை, நடு ரோட்டில் மலைபோல குவித்து வைத்திருப்பார்களே, அதே போல அங்குள்ள “இண்டர் நேஷனல் கோல்டு பஜார்” என்ற இடத்தில், ஒரு பெரிய தங்கநகைக் கடையில் ஜொலிக்கும் புத்தம்புதிய தங்க மோதிரங்களைக் குவித்து வைத்திருப்பதைப்பார்த்து நான் அசந்து போனேன்.

அதுபோல ’சிட்டிசென்டர்’ என்று ஒரு இடத்திற்கு என் மகன் காரில் கூட்டிச் சென்றான்.  அங்கு ”என்ன விசேஷம்”  என்று போகும் போது அவனிடம் நான் கேட்டேன்.   

“நீ அங்கு வந்து பாருப்பா;  அங்கு கிடைக்காத ஒரு சாமான் இந்த உலகிலேயே எதுவும் இருக்க முடியாது.  அவ்வளவு ஒரு மிகப்பெரிய ப்ரும்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது” என்றான்.

“அப்படியா! என்று கேட்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன். அப்படியானால் எப்படியும் இந்த மூக்குப்பொடி கிடைக்காமல் போகாது என்ற எண்ணத்தில்.  

”அங்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் காரைப்பார்க் செய்யவே பலமாடிகள் கொண்ட மிகப்பிரும்மாண்டமான கட்டடம், கட்டியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 5000 கார்கள் வரை பார்க் செய்ய முடியும்.  எந்த மாடியில் எந்த ஸ்லாட்டில் நம் காரை பார்க் செய்திருக்கிறோம் என்பதை மட்டும் நாம் ஞாபகமாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் நம் காரை நாம் கண்டுபிடிக்கவே ஒரு வாரம் ஆகிவிடும்.   நாம் கார் நிறுத்தும் எந்தத்தளத்திலிருந்தும் அப்படியே நேராக அந்த மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்குள் நுழைந்து விடவும், அங்கிருந்து நாம் விரும்பும் தளத்திற்கு லிஃப்ட்டில் சுலபமாகச் செல்ல வசதிகளும்,  நகரும் படிக்கட்டுகளுமான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருகிறார்கள்” என்றான். 

அங்கு போய்ப்பார்த்தபின்புதான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முழுவதுமாக பொறுமையாக ஒவ்வொரு பிரிவாக சுற்றி வரவே, சுத்தமாக ஒருமாதம் ஆனாலும் ஆகலாம் என்பது எனக்குத் தெரிய வந்தது.

உலகப்பிரசித்தி பெற்ற எல்லா நிறுவனங்களும் அங்கே ஏராளமான ஸ்டால்கள் அமைத்து, அனைத்துப்பொருட்களும் அங்கு கிடைத்தும், அதனால் எனக்கு என்ன பயன் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றியது. 

எனக்கு முக்கியமாகத் தேவைப்படும் மூக்குப்பொடி அங்கு கிடைக்குமா என்பது எனது சந்தேகம். அதுபற்றிய விபரம் எனக்குத் தெரியவில்லை. நான் பொடிபோடுவதே என் மகனுக்குப்பிடிக்காது.   அதனால் அவன் கண்ணெதிரில் நேருக்குநேர் நான் பொடி போடுவதும் கிடையாது. இது இவ்வாறு இருக்க, என் மகனிடம் போய், இந்த உலகச்சந்தையில் மூக்குப்பொடி கிடைக்குமா என்று நான் கேட்டால், என் ரசனை இவ்வளவு கேவலமானதா என்பது போல,  அவன் ஒரு வேளை, என்மேல் கோபப்பட்டாலும் படுவான்.   அதனால் அவனிடம் இதுபற்றி ஏதும் கேட்காமல் வாயையும், முக்கியமாக மூக்கையும் பொத்திக்கொண்டு சுற்றி வரலானேன். 

அங்குள்ள வேறு யாரிடமாவது கேட்டால் அவர்களால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். அல்லது லாகிரி வஸ்துவொன்றை உபயோகிக்கத்துடிப்பதாக, ஏதாவது தவறாக நினைத்து என்னைக் கைது செய்யவும் முயற்சிக்கலாம்.   

இதுபோல ஏதும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவனாக,  உலகச்சந்தையை உற்று நோக்குவது போல, ஒரு மணி நேரம் ஏதோ ஒருசில கடைகளை மட்டும் பார்த்துவிட்டு, சூடான கார்ன் (நம்மூர் சோளக்கருதை, நல்லா வேகவைத்து, உப்பு, எலுமிச்சை, மிளகுத்தூள் முதலியன தூவியது) ஒரு பேப்பர் டம்ளர் நிறைய வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்குள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து கொண்டேன். 

அதற்குள் என் மகனும், மருமகளும் ஏகப்பட்ட மளிகை சாமான்கள், காய்கறிகள், எண்ணெய் டின்கள், பால், தயிர், ஜூஸ் வகைகள், தீனி வகையறாக்கள் என்று வீட்டுக்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் அள்ளி அள்ளி ஆங்காங்கே தயாராக இருக்கும் தள்ளுவண்டி ஒன்றை தரதரவென்று இழுத்து, பொருட்களை அந்த வண்டி நிறைய ரொப்பி, பில் போடும் இடத்திற்கு வண்டியை இழுத்து வந்து, கிரெடிட் கார்டை நீட்டினர்.   

ஐந்தே நிமிடங்களில் ஒவ்வொரு சாமான்களையும், அப்படிஅப்படியே ஒரு மிஷினில் தீபாராதனை போலக் காட்டியவுடன், அது கடகடவென்று பில் போட்டுக்கக்கி விட்டது.  பிறகு கிரெடிட் கார்டைப் பெற்றுகொண்டு, தள்ளுவண்டியுடன் லிஃப்டில் ஏறி, எங்கள் கார் நிறுத்தப்பட்டிருந்த நாலாவது தளத்திற்கு சமமான பகுதியில், லிஃப்டிலிருந்து வெளியே வந்து,  எங்கள் கார் வரை அந்த தள்ளு வண்டியைத்தள்ளிக்கொண்டு,  பிறகு தள்ளுவண்டியிலிருந்த அத்தனைப்பொருட்களையும், கார் டிக்கியில் அடைத்துக்கொண்டு, தள்ளுவண்டியை அங்கேயே ஓரம்கட்டி விட்டு,  எங்கள் வீடு நோக்கித் திரும்பலானோம். 

“எப்படிப்பா இருந்தது இந்த சிட்டி சென்டர் ஷாப்பிங் ஏரியா?” என்றான் என் மகன்.

“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான்.   ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.

என் கைவசம் வைத்திருந்த நம் நாட்டுப்பொடியின் காரம், மணம், குணம் குறையும் வரை ஒரு 40 நாட்கள் மட்டும்  துபாயில் எழுச்சியுடன் தங்கிவிட்டு, இதுபோல தினமும், ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டு ஒருவழியாக ஊருக்கு வந்து சேர்ந்தேன்.   

வரும் போது ஞாபகமாக ஒரு பெளச் பொடியை மட்டும், அண்டர்வேர் பையில் அடக்கமாக வைத்துக்கொண்டு, கைப்பைக்குள் (Hand Luggage) தனியே கொஞ்சமாக ஒரு விபூதி குங்குமப்பிரஸாதம் போல மடித்துப் போட்டுக்கொண்டு விமானம் ஏறிவிட்டேன்.   ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக ஓடினேன் நேராக நம்மூர் பொடிக்கடைக்கு - புதுப்பொடி வாங்க” என்று தன் பயணக்கட்டுரையை புட்டுப்புட்டு புரியும் படியாக எடுத்துரைத்து அசத்தி விட்டார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.    

லஞ்ச் முடிந்ததும் தனக்கு ஏதோ முக்கியமான கட்சிப்பணிகள் இருப்பதாகவும், அதனால் மத்யானம் என்னைத் தேடாதே என்றும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.

இனியும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு முக்கியமான விஷயம், இந்தக் கட்சிப்பணிகள் என்று அடிக்கடி இவர் எஸ்கேப் ஆவது பற்றி மட்டுமே என்பதால்,  அதைப்பற்றிய என் பேட்டியை நாளைக்கே அவர் நம்மிடம் சிக்கும்போது ஞாபகமாகக் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.  







தொடரும்