என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 31 மார்ச், 2012

வாழ்க்கைத்துணை வாய்ப்பதெல்லாம் .......... !


சிரித்து வாழ வேண்டும்


அன்புடையீர்,


வணக்கம்.

விசித்திர அப்பனும் .... விபரீதப் பிள்ளையும் ! என்ற தலைப்பில் நான் ஒருசில ஆங்கில நகைச்சுவைத் துணுக்குகளை தமிழாக்கம் செய்து 29.04.2012 அன்று வெளியிட்டிருந்தேன்.

அதைப்படித்து மகிழ்ந்த மும்பையில் இருக்கும் என் நண்பர் ஒருவர், அவருக்கு மின்னஞ்சல் மூலம் ஆங்கிலத்தில் வந்திருந்த ஏராளமான நகைச்சுவைத் துணுக்குகளை எனக்கு அனுப்பியுள்ளார். 

முடியுமானால் இவற்றையும் தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள் என்ற அன்புக்கட்டளையும் இட்டுள்ளார்கள்.. 

கணவன் மனைவி என்ற மிகவும் புனிதமான, தெய்வீகமான, ஆத்மார்த்தமான, மிகுந்த நம்பிக்கைக்கு உரிய, சுகானுபவம் தரக்கூடிய ஓர் உறவை கேலிசெய்யும் விதமாக உள்ள அவைகளில் பலவற்றை தமிழாக்கம் செய்து வெளியிட எனக்கு விருப்பம் இல்லாததால், அவற்றில் பலவற்றை நான் தள்ளுபடிசெய்து தனியே ஒதுக்கிவிட்டேன். 

ஏதோ அவற்றில் கொஞ்சமாவது நாகரீகமாக இருப்பவைகளை மட்டும் [மொத்தம் 11 மட்டுமே] இங்கு தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளேன். 


கணவன் மனைவி இருவருக்குமே அவரவர்களின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல வாழ்க்கைத்துணை ஏற்பட்டு விடுவதில்லை. அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்பதே உண்மை. 


ஏதோ ’அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை’ என்று தங்கள் மனதை தாங்களே சமாதானப் படுத்திக்கொண்டுதான், பெரும்பாலான தம்பதிகள் இன்று அனுசரித்துப்போய்,பலவிஷயங்களில் தங்களுக்கு முழுவிருப்பம் இல்லாவிட்டாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டு வாழவேண்டியவர்களாகத் தான் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

இந்தப்பதிவினைப் படிப்பவர்கள் என்னை தயவுசெய்து தவறாக ஏதும் நினைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவற்றில் உள்ள நகைச்சுவைக் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு ஏதும் இல்லை. இவை என் சொந்தக் கருத்துக்களும் இல்லை.

ஒருசில தேவையான மாற்றங்களுடன் தமிழாக்கம் மட்டுமே என்னால் செய்யப்பட்டுள்ளது.  

படிக்கும் அனைவரும் தயவுசெய்து யாரோ எழுதிய நகைச்சுவையாக மட்டுமே இவற்றை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
vgk


1) 

செல்போனில் கணவன் மனைவியிடம்:

”என் செல்லமே!
எங்கே இருக்கிறாய் இப்போது?
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

மனைவி:

”ஐ யம் டையிங்”  [I am Dying] 

கணவன்: [சந்தோஷத்துடன் குதித்துக்கொண்டே] :

"நீ இல்லாமல் நான் இனி எப்படி வாழ்வேன், மை டியர் ஸ்வீட்டி?”

மனைவி:

”முட்டாள் தனமாக ஏதாவது உளறாதீர்கள்.

நான் ப்யூட்டி பார்லரில் என் தலைமுடிக்கு 
“டை” [DYE] அடித்துக்கொண்டிருக்கிறேன்.”

[அவள் “ஐ யம் டையிங” என்று சொன்னதை ”அவள் இறந்து கொண்டு இருப்பதாக” இந்தக் கணவர் புரிந்து கொண்டு விட்டார், போலும்]


2)

செல்போனில் ஒரு மனைவி மிகுந்த கோபத்துடன் தன் கணவரிடம்:

”எங்கே போய்த்தொலைந்தீர்கள்?. ரொம்ப நேரமாகக் காணோம்?”

ஊர் சுற்றும் கணவன் [சமாளித்தபடியே]:

அன்பே! அன்றொரு நாள் நகைக்கடைக்கு நாம் சென்றோமே!

நீ கூட ஒரு வைர நெக்லஸ் உனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று சொன்னாயே! 


நான் கூட என்னிடம் தற்சமயம் அதை வாங்கித்தரும் அளவுக்குப் பணம் இல்லை; இருப்பினும் என்றாவது ஒரு நாள் அது உனக்கே சொந்தமாகும் என்று சொன்னேனே! 


நினைவிருக்கிறதா?

அந்தக்கடையில் அந்த நெக்லஸ் இப்போதும் உள்ளதா அல்லது வேறு ஏதாவது புதிய டிசைனில் வந்திருக்கிறதா, என்று தான் உனக்காக நான் ஆசை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மனைவி:

ஆஹா! நீங்களே என் தங்கம் .... வைரம்!  உங்களுக்குத் தான் என் மீது எவ்வளவு ஆசை!! நான் அதே கடைக்கு அடுத்த கடையில் தான் உள்ளேன்; இதோ வந்து விடுகிறேன். அங்கேயே இருங்கோ!!!

[எங்கேயோ ஊர் மேய்ந்து கொண்டிருக்கும் கணவனுக்கு இதைக்கேட்டதும் மயக்கமே வந்து விட்டது]


3)

ஒரு விமானக்கம்பெனி ஒரு சலுகை அறிவிப்பு தந்திருந்தது. அதாவது குறிப்பிட்ட ஒரே ஒரு நாள் மட்டும், விமானப் பயணம் செய்யும் கணவனுக்கு மட்டும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் போதும்;  மனைவி இலவசமாகவே கணவனுடன் பயணம் செய்யலாம், என்று அறிவிப்பு.

அடித்துப்பிடித்து அனைவரும் டிக்கெட் வாங்கி விட்டனர்.

ஜோடிஜோடியாக மிகவும் ஜாலியாக விமானத்தில் இன்பப்பயணம் போய் விட்டு உல்லாசமாக ஊர் திரும்பி விட்டனர்.

ஒரு வாரம் கழித்து, தொலைபேசிமூலம் மனைவிகளை மட்டும் தொடர்புகொண்டு, ”இந்தப்பயணம் அவர்களுக்கு எவ்வாறு திருப்தியாக அமைந்தது” என்று பேட்டி எடுத்தனர் விமானக் கம்பெனியார்.

.................
.........................
...............................
.......................................
..................................................
...........................................................
..................................................................

”எந்தப்பயணம்?” என்றனர் தொடர்பு கொள்ளப்பட்ட அனைத்து மனைவிமார்களும்.
.

4)

கணவன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மனைவியிடம் டாக்டர் சில அறிவுரைகள் கூறினார்:

1)  நல்ல சத்துள்ள ஆகாரமாக அவருக்கு அளியுங்கள்.


2) நல்ல மனநிலையில் எப்போதும் அவர் சந்தோஷமாக இருக்கும்படி  
    மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.


3) உங்கள் பிரச்சனைகள் எதையும் அவரிடம் சொல்லாதீர்கள்


4) டி.வி. சீரியல் நீங்களும் பார்க்க வேண்டாம். அவரும் பார்க்க வேண்டாம்.


5) புத்தாடைகளோ நகைகளோ கேட்டு அவரை நச்சரிக்க வேண்டாம்.


6) இவற்றையெல்லாம் ஓர் ஆண்டுக்கு மட்டும் கடைபிடியுங்கள் போதும். 
 அவர்  பிழைத்து பழையபடி நல்லாவே ஆகிவிடுவார். கவலை வேண்டாம்.

திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் கணவர் மனைவியிடம் கேட்கிறார்:

”டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார்?”
.
மனைவி:

”நீங்கள் உயிருடன் இருக்க கொஞ்சமும் சான்ஸே இல்லை என்று சொன்னார்.”5)

ஒரு மனைவி தன் செல்போனில் சிம்கார்டை மாற்றி விட்டு தன் கணவருடன் பேசி அவரை வியப்பில் ஆழ்த்த நினைத்தாள்.

கணவர் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது, மனைவி சமையல் அறையில் சிம் கார்டை மாற்றி விட்டு புது நம்பரோடு பேசுகிறாள்:

”ஹலோ .... டார்லிங்க்”

க்ணவர் தன் குரலை மிகவும் மெதுவாக்கிக்கொண்டு

“நான் சிறிது நேரத்திற்குப்பின் உன்னை மீண்டும் அழைக்கிறேன்.


உன் குரல் தேன் போல என் காதினில் இனிமையாகப் பாய்கிறது. 


என் வாயை அடிக்கடி ஊமையாக்கிவிடும் என்னவள், இப்போது கிச்சனில் இருப்பதால், என்னால் உன்னுடன் இப்போது மகிழ்ச்சியுடன், சுதந்திரமாகப் பேசமுடியாமல் உள்ளது, 


வெரி ஸாரி டியர்; 


புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்................”


6)

ஒரு கணவர், தன் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளின் போட்டோவைக் குறிவைத்து கத்திகளை விட்டெறிந்து கொண்டிருந்தார்.

ஒரு கத்தியும் சரியாக அவளின் படத்தின் மேல் படாமல் குறி தவறிப்போய் கீழே விழுந்து கொண்டே இருந்தன.

அப்போது எதிர் பாராதவிதமாக அவர் மனைவியிடமிருந்து ஓர் செல்போன் அழைப்பு.

மனைவி: 
“இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்”

கணவரின் நேர்மையான பதில்:

”மிஸ்ஸிங் யூ”7)

கணவரிடம் ஒருவர் பேட்டியெடுக்கிறார்.

பேட்டியாளர்:
”நீங்கள் இன்று பல லக்ஷங்களுக்கு அதிபதி ஆனதற்கு எதைக்காரணமாக நினைக்கிறீர்கள்?”

கணவர்:
”எல்லாவற்றிற்குமே என் மனைவியே காரணம் என நினைக்கிறேன்.”

பேட்டியாளர்:        
”அப்படியா, மிக்க மகிழ்ச்சி! 
திருமணத்திற்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள்?”

கணவர்:
”பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தேன்”.


8)

எப்போது பார்த்தாலும் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் தன் கணவரிடம் மனைவி ஆசையுடன் கூறுகிறாள்:

”நான் ஒரு பெண்ணாக, உங்களின் மனைவியாக இல்லாமல் அந்த்ச் செய்தித்தாளாகவே இருக்கலாம் போல் தோன்றுகிறது. அப்போதாவது என்னை எப்போதும் உங்கள் கரங்களால் தழுவிக்கொண்டிருக்கும் பாக்யம் பெறுவேன், அல்லவா!”

கணவர்:

”நானும் அதையே தான் எதிர்பார்க்கிறேன். நீ செய்தித்தாள் போல இருந்தால்தான் நல்லது. நானும் தினமும் உன்னைத் தூக்கி எறிந்துவிட்டு புதியதாக மறுநாள் வேறொன்றை அனுபவிக்க செளகர்யமாக இருக்கும்.”


9)

HELL [ஹெல்] = ந ர க ம்.

ஹெல்லுக்குச் சென்ற ஓர் கணவர் அங்கிருந்து பூலோகத்தில் உள்ள தன் மனைவிடம் செல்போனில் பேச அங்கிருந்த குட்டிப்பிசாசு ஒன்றிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

குட்டிப்பிசாசும் தன் செல்போனை அவருக்குக் கொடுத்து உதவுகிறது.

பேசிமுடித்த அவர், செல் போனில் பேசியதற்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று கேட்கிறார்.

“ HELL TO HELL FREE " என்கிறது அது.

[ஒரு நரகத்திலிருந்து வேறொரு நரகத்துடன் பேசுவதால் இலவசம் தானாம்]  .
10)

டாக்டர்: 
”தங்கள் கணவருக்கு பரிபூரண ஓய்வும் அமைதியும் இப்போது தேவை.மேடம். இந்தாருங்கள், அதற்கான தூக்க மாத்திரைகள்.”

மனைவி:
நான் எப்போது இதை அவருக்குத் தர வேண்டும்?

டாக்டர்:
இந்த மாத்திரைகள் அவருக்கு அல்ல;  தங்களுக்கு மட்டுமே.
11)

மனைவி கண்வரிடம்:

”நீங்கள் நிறைய புதுத்துணிமணிகளும், புதிய நகைகளும் எனக்கு வாங்கித்தருவதாக நேற்று இரவு சொப்பணம் கண்டேனுங்க!”

கணவர்:

”நானும் அதே கனவு கண்டேன். ஒரு சின்ன வித்யாசம் மட்டுமே.

அதாவது நான் உனக்கு வாங்கித்தந்த அனைத்து ஜவுளி+நகைகளுக்கான பணம் முழுவதையும் உங்க அப்பாவே கொடுப்பது போல எனக்கு கனவில் வந்தது.”
வெள்ளி, 30 மார்ச், 2012

ரதியும் மன்மதனும் !


மதன த்ரயோதசீ 04.04.2012 புதன்கிழமை

சைத்ர சுக்லபக்ஷ த்ரயோதசியான 04.04.2012 புதன் அன்று மாலை கணவன் மனைவி இருவரும் மன்மதனை, அவர் மனைவி ரதி தேவியுடனும், நண்பன் வஸந்த [ருது] தேவனுடனும், கரும்பில் ஆவாஹனம் செய்து பூஜை செய்து, கீழ்க்கணடவாறு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். 

வஸந்தாய நமஸ்துப்4யம் வ்ருக்ஷ கு3ல்ம லதாஸ்ரய!
ஸஹஸ்ரமுக ஸம்வாஸ காமரூப நமோஸ்துதே
[நிர்ணயஸிந்து - 67]

நமோஸ்து பஞ்ச பா3ணாய ஜக3தா3ஹ்லாத3 காரிணே
மன்மதா2ய ஜக3ந் நேத்ரே ரதிப்ரீதி ப்ரியாத தே 

என்று ப்ரார்த்தனை செய்துகொண்டு; 

க்லீம் காமதே3வாய நம:
ஹ்ரீம் ரத்யை நம:
ஸ்மர ஸரீராய நம:
அநங்கா3ய நம:
மன்மதா2ய நம:
காமாய நம:
வஸந்த ஸகா2யநம:
ஸ்மராய நம:
இக்ஷு சாபாய நம:
புஷ்பாஸ்த்ராய நம:

என்று 10 நாமாக்கள் சொல்லி மன்மதனை நினைத்து தம்பதிகளாக ஸ்வாமி ஸன்னிதியில் நமஸ்காரம் செய்யலாம். 

இதனால் கணவன் மனைவிக்குள் மேன்மேலும் அன்பும் பிரேமையும் அதிகரிக்கும். Best of Luck


oooOooo


05.04.2012 வியாழக்கிழமை “பங்குனி உத்திரம்”
இது பற்றிய தனிப்பதிவு வெளியிட உள்ளேன்.
oooOooo


09.04.2012 திங்கட்கிழமை
ஸங்கடஹர சதுர்த்தி


ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்திக்கு [பெளர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது திதி] ஸங்கடஹர சதுர்த்தி என்று பெயர். கணபதியின் முக்கியமான 32 திரு உருவங்களில் ’ஸங்கடஹர கணபதி’ என்பவரும் ஒருவர். இன்று பகல் முழுவதும் உபவாஸம் இருந்து, மாலையில் சந்திரன் உதயமானதும், ஸங்கடஹர கணபதியை அபிஷேகம், அர்ச்சனை, ஸ்தோத்ர பாராயணம் மூலம் உபாஸித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 21 முறை சொல்லி ப்ரார்த்தனை செய்வதால் அனைத்து ஸங்கடங்களும் [இன்னல்களும்] விலகும்.

க3ணாதி4 பஸ்த்வம் தே3வேஸ!
சதுர்த்2யாம் பூஜிதோமயா
கஷ்டாந் மாம் மோசயேஸாந!
ஸர்வமிஷ்டம் ச தே3ஹிமே 

oooooOooooo


10.04.2012 செவ்வாய்க்கிழமை
ஸ்ரீ வராஹ ஜயந்தி


ஹிரண்யாக்ஷன் என்னும் அஸுரன் பூமியைப் பாய்போல் சுருட்டி கடலுக்கடியில் வைத்தபோது, எம்பெருமான் ஸ்ரீ வராஹமூர்த்தியாக அவதரித்து, பூமியை மீட்டெடுத்து பிரதிஷ்டை செய்து ஹிரண்யாக்ஷனை ஸம்ஹரித்தார்.இவ்வாறு வராஹ அவதாரம் செய்த நாளான இன்று, தாயாருடன் சேர்த்துள்ள ஸ்ரீ லக்ஷ்மீ வராஹ மூர்த்தியாக த்யானம் செய்து பாகவத்திலுள்ள ஸ்ரீ வராஹ அவதார கட்டம் பாராயணம் செய்து வராஹ மந்த்ரம் ஸ்தோத்ரம் சொல்லி பூஜை செய்து, பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகள், கடலை போன்றவைகளை வெல்லம் சேர்த்து வேக வைத்து, நிவேதனம் செய்யலாம்.

இதனால் வஸிப்பதற்கு சொந்தமாக நாம் விரும்பும் நிலம் [பூமி] க்ருஹம் [வீடு] கிட்டும். மேலும் நிலம், மனை மற்றும் க்ருஹம் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். அனைத்துப் ஸுகங்களையும் அனுபவித்து இறுதியில் தமிழில் ’வீடு’ என்று கூறப்படும் மோக்ஷமும் கிட்டும்.-oooOooo-   
சுபம்
-oooOooo-        

  

  வியாழன், 29 மார்ச், 2012

விசித்திர அப்பனும் .... விபரீதப் பிள்ளையும் !சிரித்து வாழ வேண்டும் ![நான் சமீபத்தில் படித்த ஒரு சில 
ஆங்கில ஜோக்குகளின் தமிழாக்கம் இவை - vgk]
தந்தை:


“மகனே, நான் உன்னை நேற்று அடித்தபோது நீ எவ்வாறு உன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டாய்?”


மகன்:


”நான் அப்போது உடனே கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்றேனே!” .


தந்தை:


”அது எப்படி உன் கோபத்தை கட்டுப்படுத்தி உன்னைத் திருப்தி படுத்தியிருக்க முடியும்?”
மகன்:


”தாங்கள் தினமும் பல் துலக்கும் ப்ரஷினால் அல்லவா அதை நான் நன்றாகத் தேய்த்து சுத்தப்படுத்தினேன்”
தந்தை:


”உனக்கு நீச்சல் தெரியுமா?”


மகன்:


“தெரியாது”


தந்தை:


”உன்னை விட ஒரு நாய் சிறந்தது. அதனால் நன்றாக நீந்த முடியும்”


மகன்:


“உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”


தந்தை:


”நன்றாகவே தெரியும்”
மகன்:


”அப்புறம் ஒரு நாய்க்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் இருக்கிறது?”
தந்தையும் மகனும் ஒரு மிருகக்காட்சி சாலையில் புலியை அடைத்து வைத்துள்ள கூண்டின் வெளியே நிற்கின்றனர். 


புலியின் வேகம், ஆற்றல், சக்தி, பலம், அதன் பாய்ச்சல், அதனால் ஏற்படக்கூடும் ஆபத்துகள் போன்ற எல்லாவற்றையும் தந்தை விபரமாக எடுத்துக்கூற, மகனும் உன்னிப்பாகவும் படு சீரியஸ் ஆகக் கேட்டுக்கொள்கிறான்.

மகன்:


“அப்பா, எனக்கு ஒரு சிறு சந்தேகம் உள்ளது”


தந்தை:


“சந்தேகம் எதுவானாலும் உடனே கேட்டுத் தெரிந்து கொள்வதே நல்லது. கேள் மகனே கேள் !


மகன்:


அப்பா, ஒருவேளை இந்தப்புலி கூண்டிலிருந்து தப்பி வெளியே வந்து உங்களை அடித்து சாப்பிட்டு விட்டால் .................. ?


தந்தை:


“அதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, தான்”
மகன்:


”அப்போ நான் எத்தனாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குப் போகணும்?”
பள்ளி அருகே போக்குவரத்து ஓட்டுனர்களுக்காக ஒரு விழிப்புணர்வு விளம்பரப் பலகை, மாணவர்களை விட்டு யோசித்து எழுதச் சொன்னார்கள்.


விஷமத்தனமான பையன் ஒருவன் எழுதியது:


வாகன ஓட்டிகளே!

தயவுசெய்து கவனமாக வண்டியை ஓட்டுங்கள்.

மாணவர்களைக் கொன்று விடாதீர்கள் !

ஆசிரியர்கள் வரும் வரைக் காத்திருங்கள் !!
ஆசிரியர்:


”நீ ஒரு மிகப்பெரிய பணக்கார கோடீஸ்வரன் எனக் கற்பனை செய்து கொண்டு உன் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுது”.


[ஒரு பையன் மட்டும் ஒன்றும் எழுதாமல் பேசாமலேயே உட்கார்ந்திருக்கிறான்]:


ஆசிரியர்:


”ஏன் இன்னும் நீ எதுவும் எழுதாமல் அமர்ந்திருக்கிறாய்?”


அந்தப்பையன்:


நான் இப்போது மிகப்பெரிய பணக்கார கோடீஸ்வரனாக்கும்!


நான் என் செக்ரெட்டரியின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்.


அவள் வந்த பிறகு நோட்ஸ் டிக்டேட் செய்து எழுதச்சொல்வேன்! 
ஒரு மாணவன் கேட்கும் நியாயமான கேள்வி:


ஒரேயொரு ஆசிரியரால் எங்களுக்கு 
அனைத்துப்பாடங்களையும் 
சொல்லித்தர முடியவில்லை!


பிறகு எப்படி ஒரு மாணவனால் மட்டும் 
அனைத்துப்பாடங்களையும் 
கற்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்?


PUNCTUATION IS POWERFUL


oooooooooooபுதன், 28 மார்ச், 2012

ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !


31.03.2012 சனிக்கிழமைக்கான விசேஷங்கள்

1) அசோகாஷ்டமி


அசோகம் என்றால் மருதாணி. இன்றைய தினம் அசோகம் என்னும் மருதாணிச் செடியை அல்லது மருதாணி மரத்தை பூஜை செய்து ஏழு மருதாணி இலைகளை கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச்சொல்லி சாப்பிட்டு விடவேண்டும். இதனால் மனதில் உள்ள துக்கமும் துன்பமும் விலகி ஸுகம் கிட்டும்.

த்வா மஸோக நராபீ4ஷ்ட மது4மாஸ ஸமுத்3ப4வ
பிமா3மி ஸோக ஸந்தப்தோ மாமஸோகம் ஸதா3குரு

எச்சரிக்கை:
[மருதாணி இலைகளை சாப்பிடும் வழக்கம் உண்டா? 
என்பது எனக்கும் சந்தேகமாகவே உள்ளது. 
இது ஓர் ஆன்மிக மாத இதழில் நான் படித்த தகவல் மட்டுமே - vgk]2) ஸ்ரீ ராம நவமி 

சைத்ர மாஸி நவம்யாம் து 
ஜாதோ ராம: ஸ்வயம் ஹரி: 
புநர்வஸ்வ்ருஷ ஸம்யுக்தா ஸா திதி2: ஸர்வ காமதா3
ஸ்ரீராம நவமீ ப்ரோக்தா கோடி ஸூர்ய க்3ரஹாதி4கா 
[நிர்ணய ஸிந்து - 64]

அயோத்யா தசரதராஜனுக்கும் கெளஸல்யா தேவிக்கும், பகவான் மூத்த குமாரனாக ஸ்ரீராமராக சித்திரை மாதம் நவமி திதியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் கடக லக்னத்தில் நடுப்பகலில் ஐந்து க்ரஹங்கள் உச்சமாக இருக்கும்போது அவதரித்தார். இந்த நாள் கோடி ஸூர்ய க்ரஹணங்களைப் போன்ற புண்யங்களைத் தரும் நாள். இதைக்கொண்டாடுவதே ஸ்ரீ ராம நவமியாகும். 


ஸ்ரீ ராமாவதாரம் கர்போத்ஸவம் ஜனனோத்ஸவம் என்று இரு வகையாகக் கொண்டாடப்படுகிறது. 


இராவணன், கரன், தூஷணன், திரிசிரஸ், மாரீசன், சுபாகு, தாடகை, விராதன், கபந்தன் போன்ற அஸுரர்களிடமிருந்து முனிவர்களையும் தேவர்களையும் காப்பாற்ற ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப்போகிறார் என்று தெரிந்து கொண்ட மஹரிஷிகள், கெளஸல்யாவின் கர்ப்பவாஸத்தைக் கொண்டாடினார்கள்.


அதுதான் கர்ப்போத்ஸவம். அதாவது ஸ்ரீராமநவமிக்கு முன்பாக ஒன்பது நாட்கள் [23.03.12 முதல் 31.03.12 வரை] நவமியை ஸ்ரீமத்ராமாயண பாராயணம் ப்ரவசனம் செய்து கொண்டாடுவது கர்போத்ஸவம் எனப்படும்.


ஸ்ரீராமர் பிறந்த நாளிலிருந்து [31.03.12 முதல் 08.04.12 வரை] ஒன்பது நாட்கள் ஸ்ரீமத் ராமாயண பாராயணம், ப்ரவசனம் முதலியவைகளுடன் கொண்டாடுவது ஜனனோத்ஸவம். இந்த உத்ஸவ நாட்களில் ஸ்ரீமத் ராமாயணம் பாராயணம் செய்வதும் ஸ்ரீமத் ராமாயண கதையை ஸதாசாரமுள்ளவர்கள் மூலம் கேட்பதும் அனைத்து ஸுகத்தையும் தரும்.


ஸ்ரீராமர் விசுவாமித்ரருடன் சென்ற போதும், பதினான்கு ஆண்டுகள் வனவாஸமுமாக பெரும்பாலும் காட்டிலேயே வஸித்ததால் வெப்பத்தைப்போக்க, விசிறி தானம் செய்து, நீர்மோரும் பானகமும் தானம் செய்யலாம்.


ஸ்ரீ ஸீதாராமர் க்ருபையால் குடும்பத்தில் விரைவில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். 3) ஒற்றுமையைத்தரும் ஸ்ரீ ராமர் விக்ரஹம் - படம் - தானம்


ஸ்ரீ ராமநவமியன்று [31.03.2012] ஸ்ரீராம விக்ரஹத்தாலோ, தங்க/வெள்ளி பிரதிமைகளினாலோ, ஸ்ரீராமர் படத்திலோ, ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை முறையாக பூஜை செய்து, ராம விக்ரஹம், ராமபிரதிமை,ராம பட்டாபிஷேகப்படம் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை, தொடர்ந்து பூஜை செய்ய விரும்புபவர்களுக்கோ அல்லது அருகில் உள்ள கோயிலுக்கோ பஜனை மடத்துக்கோ தானம் செய்யலாம்.   

ஸ்ரீராமர் அருளால் குடும்பத்தில் கணவன்+மனைவி; பெற்றோர்+குழந்தை; அண்ணன்+தம்பி ஆகியவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும்.

விக்ரஹம், பிரதிமை, படமானது அழகான ஸ்ரீராமர், தனது இடது பக்கத்தில் ஸ்ரீஸீதாதேவியுடன் அமர்ந்து, தனது வலது கையால் ஞான முத்திரை காண்பித்து, இடது கையால் ஸ்ரீஸீதாதேவியை அணைத்துக்கொண்டு, வீர ஸிம்மாஸனத்தில் அமர்ந்து கொண்டு இருப்பவராகவும், ஸ்ரீராமருக்கு இரண்டு பக்கங்களிலும் பரதரும், சத்ருக்னரும் வெண்சாமரம் வீசுபவர்களாகவும், அம்பு + வில்லுடன் ஸ்ரீ லக்ஷ்மணரும் மற்றும் ஆஞ்ஜநேயருடன் இருக்கும் விக்ரஹம் அல்லது படம் தான், தானம் தரவும் பூஜை செய்யவும் சிறந்தது.  இவ்வாறான படமோ விக்ரஹமோ கிடைக்காத பக்ஷத்தில், எந்த மாதிரியான ஸ்ரீ ராமர் படத்தையோ விக்ரஹத்தையோ பிரதிமையையோ தானம் செய்யலாம். 


ஸ்ரீராம விக்ரஹத்தை அல்லது படத்தை 9 நாட்களோ அல்லது ஒரே ஒரு நாளோபூஜை செய்து, ஸ்ரீ ராம நவமீ புண்யகாலே ராம விக்3ரஹ [ ஸ்ரீஸீதாராம சித்ர பட2 ] தா3னம் கரிஷ்யே என்று சொல்லி கீழ்க்கண்ட ஸ்லோகமும் சொல்லி ஸ்ரீராமபக்தியுள்ளவருக்கு தானமாகத் தந்து விட வேண்டும்.


இமாம் ஸ்வர்ணமயீம் ராம ப்ரதிமாம் ச ப்ரயத்னத:
ஸ்ரீராம ப்ரீதயே தா3ஸ்யே ராமப4க்தாய தீ4மதே
ப்ரீதோ ராமோ ஹரத்வாஸு பாபாநி சுப3 ஹூநிமே
அநேக ஜன்ம ஸம்ஸித்3தா4நி அப்4யஸ்தாநி மஹாந்தி ச 

இமாம் ஸ்ரீராம ப்ரதிமாம் ஸ்ரீ ராமசந்த்ர ப்ரீதிம் காமயமான:
ஸ்ரீ ராமசந்த்ர ஸ்வரூபாய ஸம்ப்ரத3தே3

இதனால் ஸ்ரீ ஸீதாராமரின் அருள் கிட்டும். ஒற்றுமை ஏற்படும். ஏழரை நாட்டு ஜன்மச்சனியின் தொல்லை போன்றவைகள் விலகும். நீண்ட ஆயுளும் மன நிம்மதியும் கிட்டும், விட்டுப்பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள் என்கிறது ’நிர்ணய ஸிந்து’ என்ற புஸ்தகம். 


2
=
ஸ்ரீராமஜயம்

ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   சுபம்

செவ்வாய், 27 மார்ச், 2012

கனி கிடைக்கும் வரைக் காத்திருப்போம்கனி கிடைக்கும் வரைக் காத்திருப்போம்

முன்னொரு காலத்தில் பூலோகத்தில் ஓர் குழந்தை இருந்தது. 

சொர்க்கத்தில் கடவுள் திருக்கரங்களால் மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆப்பிள் பழம் வீதம் வினியோகிக்கப்படுவதாக அது கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தது. 

தானும் கடவுள் கையால் ஆப்பிள் பழம் வாங்கிக்கொள்ளும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்ற ஆவலில் சொர்க்கத்திற்குச் சென்றது.

அங்கு மிகப்பெரிய க்யூ வரிசையில் மனிதர்கள் நின்றவாறு, கடவுளிடமிருந்து ஆப்பிள்களை பெற்றுச்செல்லும் அழகினைக் கண்டு வியந்து போய் தானும் அந்தக் க்யூ வரிசையின் கடைசியில் சேர்ந்து கொண்டு நின்றது. 

அது அவ்வாறு க்யூவில் நிற்கும் போது அதன் மனதில் பலவித சந்தோஷமான எண்ணங்கள், ஆவல்கள். 

நடக்கபோகும் செயலால் கடவுள் கையால் தனக்கோர் பழம் கிடைக்கவுள்ள பாக்யத்தை மனதில் அசைபோட்டு மகிழ்ந்தது. 

அந்தக்குழந்தையின் முறையும் வந்தது. கடவுளை நெருங்கிவிட்ட அது தன் மிகச்சிறிய இரு கரங்களையும், மிகவும் பக்தி சிரத்தையுடன் குவித்தபடி பெளவ்யமாகவே நீட்டியது.

கடவுளால் அந்தக்குழந்தையின் சிறிய கையில் பெரிய ஆப்பிள் பழம் ஒன்று கொடுக்கப்பட்டது. 

துரதிஷ்டவசமாக அந்த ஆப்பிள் பழத்தின் கனம் தாங்க முடியாத குழந்தையின் கைகளிலிருந்து அந்தப்பழம் கைநழுவி கீழே சேற்றில் விழுந்து விட்டது. 

குழந்தைக்கு இது மிகவும் ஏமாற்றத்தை அளித்தது.

கடவுளின் அருகே இருந்த தேவதைகள் அந்தக் குழந்தையைப் பார்த்து “உனக்கு கடவுள் திருக்கரங்களால் வேறு ஒரு ஆப்பிள் பழம் கிடைக்க வேண்டும் என்று நீ விரும்பினால், மீண்டும் இதே க்யூ வரிசையின் கடைசியில் போய் நின்று கொண்டு மீண்டும் உன் வாய்ப்பு வரும்போது வந்து பெற்றுச்செல்லலாம்” என்று அந்தக் குழந்தைக்கு ஆறுதலும் ஆலோசனைகளும் கூறினர்.

பூலோகத்திலிருந்து புறப்பட்டு சொர்க்கத்திற்கு வந்து மிக நீண்ட நேரம் காத்திருந்தும் பழம் கிடைக்காமல் போனதால், திரும்பவும் வெறும் கையுடன், கடவுள் கையினால், பழம் ஏதும் பெறாமல் பூலோகம் செல்ல விரும்பாத அந்தக்குழந்தை, மீண்டும் அந்த மிக நீண்ட க்யூ வரிசையில் போய் நின்று கொள்ள முடிவு செய்தது. 

இந்த முறை அந்த க்யூ சென்ற முறையைவிட மிக நீளமாகவே இருந்தது. 

கடவுள் கையினால் கொடுக்கப்பட்ட ஆப்பிள்களை எடுத்துக்கொண்டு, முகம் பூராவும் மகிழ்ச்சிப் பரவஸத்துடன் பலரும் தன்னைக் கடந்து செல்வதை அந்தக் குழந்தை க்யூவில் நின்றபடியே கவனித்து வந்தது.

அநேகமாக எல்லோருக்கும் முதல் முறையிலேயே, கடவுள் கையால் சுலபமாகக் கிடைத்து விட்ட ஆப்பிள், தனக்கு மட்டும் கிடைக்காமல் இப்படி ஆகிவிட்டதே என நினைத்து அந்தக்குழந்தையின் மனம் சற்றே வாடிப்போனது. 

எனக்கு மட்டும் இது போல ஆனதற்கு நான் என்ன பாவம் செய்தேனோ என நினைத்து வருந்தியது, அந்தக்குழந்தை.

இந்த முறை கடவுள் கையால் தரப்படவுள்ள அந்த ஆப்பிள் பழத்தை. எப்படியும்  நாம் நழுவ விட்டுவிடக்கூடாது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்தக்குழந்தை தனக்குள் நினைத்துக்கொண்டது.

மீண்டும் அந்தக்குழந்தைக்கான வாய்ப்பு வந்தது. கடவுள் திருக்கரங்களால் இந்த முறையும் ஆப்பிள் பழம் குழந்தைக்குக் கொடுக்கப்பட்டது.

கடவுள் குழந்தையிடம் இப்போது பேசலானார்:

குழந்தாய்! நான் ஏற்கனவே ஒரு ஆப்பிள் பழத்தை உன் கைகளில் கொடுக்கும் போது தான் கவனித்தேன்; அந்த ஆப்பிள் பழம் அழுகலானது என்று. 

அதை உனக்கு நான் கொடுக்க விரும்பாததால் தான் அதை உன் கைகளிலிருந்து உடனே கீழே விழுமாறு செய்தேன்.

உனக்குப்போய் ஓர் அழுகிய ஆப்பிள் பழத்தைக்கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. 

மேலும், இங்கு இருக்கும் ஆப்பிள்களிலேயே மிகச்சிறந்ததோர் ஆப்பிளையே உனக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். 

ஆனால் நீ சென்ற முறை என்னிடம் வந்த நேரத்தில் அந்த மிகச்சிறந்த ஆப்பிள் இவ்விடம்,  இல்லாமல் தோட்டத்தில் காயாகிக் கனியாகும் பருவத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. 

அது கனிந்து என் கைகளுக்குக் கிடைத்து, அதை நான் உன் கைகளில் தரும் வரையிலான நேரத்தில் தான், நான் உன்னை மிகப்பெரிய இந்தக் க்யூ வரிசையில் மீண்டும் காத்து நிற்கும்படிச் செய்தேன். 

இதோ இது தான், இப்போது உன் கையில் நான் கொடுத்துள்ளது தான்,  அந்த மிகச்சிறந்த ஆப்பிள். 

இது போன்ற ஒரு மிகச்சிறந்த ஆப்பிள் இதுவரை விளைந்ததே இல்லை, 

உனக்குத் தான் அதிர்ஷ்டம், அதை நன்கு எஞ்ஜாய் செய்து அனுபவி”

எனச்சொல்லி அந்தக் குழந்தையை அனுக்கிரஹித்து அனுப்பினார்.  


-ooooooooooOoooooooooo-        


நம் சிந்தனைக்கு:

நாம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற (Commitment),  நம் 100 சதவீத அர்பணிப்புகளைக் காட்டி (Dedication) முழு முயற்சிகளுடன் உண்மையாக உழைத்தாலும்  ( Full Efforts with Sincere and Hard work கூட, சில நேரங்களில், காலதாமதங்களும், தவறுகளும், தோல்விகளும் (Delay, Mistakes + Failure) தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து விடுகின்றன. நமக்கு வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போய் விடுவதும் உண்டு.

கடவுள் நமக்கு இதைவிட மேலும் சிறப்பான ஏதோ ஒன்றை நாளை தரவிருப்பதால் தான், இன்று இது இப்படி நிகழ்ந்துள்ளது என்று உணர்ந்து நம் மனதை நாமே சமாதானம் செய்து கொள்ளப் பழக வேண்டும்.

கஷ்டமோ சுகமோ, யாருக்கு எதை எப்போது எங்கே எப்படித்தர வேண்டும் என்பது அந்தப் பரம்பொருளுக்குத் தெரியும் என்பதை நாம் என்றும் மறக்கக் கூடாது. 

நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியவை, என்றோ ஒருநாள் கடவுளால்,  நம் தகுதிக்கு ஏற்றவாறு கட்டாயம் தரப்பட்டே தீரும். 

அதுவரை அமைதியாகக் காத்திருப்போம். 
"WAIT FOR YOUR TURN" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் படித்தது.
தகுந்த மாற்றங்களுடன் தமிழாக்கம் மட்டுமே என்னால் செய்யப்பட்டது. vgk

திங்கள், 26 மார்ச், 2012

I LOVE YOU DARLING !I   LOVE   YOU   DARLING ! 

ஒரு தம்பதிக்கு திருமணம் ஆகி பதினோரு ஆண்டுகளுக்குப்பிறகு ஓர் அழகான குழந்தை பிறந்தது. அவர்கள் இருவரும் மனமொத்த பிரியமான தம்பதி. அவர்களுக்கு அதிசயமாகப் பிறந்த அந்த குழந்தைச் செல்வத்தை செல்லமாக வளர்த்து மகிழ்ந்தனர்.

ஒருநாள், கணவர் மிக அவசரமாக தன் அலுவலகம் போகத்தயாரான நிலையில், வீட்டின் ஓரமாக மருந்து பாட்டில் ஒன்று மூடிதிறந்த நிலையில் இருக்கக் கண்டார்.  

தான் அலுவலகம் புறப்பட ஏற்கனவே தாமதமாகி விட்டதால் தன் மனைவியிடம், அந்த பாட்டிலை நன்றாக மூடி, அலமாரியில் எங்காவது சற்று உயரமான இடத்தில் வைத்து விடுமாறு சொல்லிச்சென்றார்.

சமயலறையில் ஏற்கனவே பல்வேறு வேலைகளில் மூழ்கியிருந்த மனைவி தன் கணவர் சொன்னதை சுத்தமாக மறந்தே போய்விட்டாள். 


அந்த மருந்து பாட்டிலைக்கண்ட அவர்களின் இரண்டே வயதானக் குழந்தை அதன் நிறத்திலும் மணத்திலும் மயங்கி அதை அப்படியே முழுவதுமாகக் குடித்து விட்டது.

அந்த மருந்து, பெரியவர்கள் மட்டுமே அதுவும் மிகச்சிறிதளவே, சாப்பிட வேண்டியதொன்றாகையால், அதை முழுவதுமாக சாப்பிட்டுவிட்ட அந்தக் குழந்தைக்கு அதுவே விஷமாகி விட்டது. 


மயக்கம் போட்ட குழந்தையை தாய் மிக வேகமாக ஆஸ்பத்தரிக்குத் தூக்கிச்சென்றும் அதை பிழைக்க வைக்க முடியாமல் போய்விட்டது.

இந்த துரதிஷ்ட சம்பவத்தால் அந்தத்தாய் கலங்கி ஸ்தம்பித்துப்போய் விட்டாள். தன் கணவர் முகத்தில் எவ்வாறு விழிப்பது? எனக் கவலையும்  கொண்டாள். 

விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகவும் கலக்கத்துடனும் குழப்பத்துடனும் மருத்துவமனையை அடைந்த அவள் கணவர் தன் குழந்தை இறந்து கிடப்பதைப் பார்க்கிறார். மனம் பூராவும் அவருக்கும் மிகுந்த வேதனைகள் தான். 

மனைவியை நோக்கிய அவர் நாலே நாலு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார். அந்த நாலே நாலு வார்த்தைகள் என்னவாக இருக்க முடியும்? சற்றே யோசியுங்கள்.
தன்னைக் கட்டிக்கொண்டு தன் மார்பின் மீது சாய்ந்து அழுது புலம்பும் தன் மனைவியின் கூந்தலை வருடிவிட்டபடி ”நான் இப்போதும் உன்னை நேசிக்கிறேன்”  என்கிறார் அந்தக்கணவர்.

முற்றிலும் எதிர்பாராதவிதமாக அந்தக்கணவர் அப்படிச் சொல்லிய வார்த்தைகளும், அவளிடம் அவர் அவ்வாறு அப்போது நடந்து கொண்டதும் மிகவும் விசித்திரமாகவே தான், இதைப்படிக்கும் நம் எல்லோருக்குமே இப்போது உணர முடியும்.

இதில் உள்ள மற்ற விஷயங்களை அறிவுபூர்வமாக சற்றே உற்று நோக்கி உட்புகுந்து சிந்திப்போமா !

குழந்தையோ இறந்து விட்டது.  இனி யார் என்ன செய்தாலும் அதனை உயிர்பிக்க முடியாது என்பது நன்கு தெரிந்து விட்டது. அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், அந்தத்தாயின் மீது மட்டும் பழிபோடுவதோ, குற்றம் சுமத்துவதோ சரியில்லை என்பதை அந்தக் கணவர் அந்த நேரத்தில் மிகவும் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்.

அந்தக்கணவரே, தான் அலுவகம் செல்லுவதற்கு முன்பு, தானே அந்த பாட்டில் மருந்தை மூடி வேறு எங்காவது உயரமான இடத்தில் பத்திரப்படுத்தி விட்டுச் சென்றிருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தாரேயானால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கவே வாய்ப்பு இல்லை.

தன் ஒரே குழந்தையை இழந்துவிட்டத் துயரம் அந்தத் தாய்க்கும் இருக்குமல்லவா! அவள் மீதே பழிபோட்டு குற்றம் சுமத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும்? 


அவளின் அப்போதைய மனம் புண்பட்ட சூழ்நிலையில் அவளுக்குத்தேவை கணவனின் அன்பும், இரக்கமும், ஆறுதலும், சமாதானமும், தயையும், அனுதாபமும் மட்டுமே. 


அதைத்தான் அந்தக் கணவரும் அப்போது அவளுக்குத் தந்து உதவினார்.

மேலும் நம் சிந்தனைக்கு:

நாம் சிலநேரங்களில் குடும்ப உறவுகளிலோ, அலுவலகத்திலோ, நடந்துவிட்ட ஒரு செயலுக்கு யார் மீதாவது பழிபோடவும், பொறுப்பை நமக்குத்தெரிந்த அடுத்தவர் யார் மேலாவது சுமத்தி விடுவதிலுமே நம் நேரத்தைச் செலவிடுகிறோம்.

மனித உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து மனமார்ந்த அன்புசெலுத்தி ஆதரவு அளிக்கத் தவறிவிடுகிறோம்.

உண்மையான அன்பு செலுத்துதலின் சுலபமான வழிகளில் மிகச்சிறந்த ஒன்று நாம் பிறரை ’மன்னிப்பது’ என்பதே ஆகும். மன்னித்தலை விட சுலபமான வழிகள் இந்த உலகில் வேறு எதுவும் உண்டா? 


பிறரின் மனக்காயங்களையும், வலிகளையும், வேதனைகளையும் அதிகரித்துப் பெருக்கி விடாமல் ’மன்னித்தல்’ என்ற மகத்தான செயலின் மூலம் அறவே போக்கிடுவோம்.

நம் இன்றைய உறவுகளையும் நட்புக்களையும் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாப்போம். அவர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக ஆதரவாக இருப்போம்.

நாம் எல்லோருமே இந்த நல்ல குணங்களை நம் வாழ்க்கையில் வளர்த்துக்கொண்டால்,  உலகில் இன்றுள்ள ஏராளமான பிரச்சனைகள் மிகவும் குறைந்துவிடக்கூடும். 

பிறர் மீதுள்ள சந்தேகங்கள், பிறரைப் பற்றிய குறுகிய மனப்பான்மைகள், அவநம்பிக்கைகள், பொறாமைகள், மன்னிக்க விரும்பாமை முதலியவற்றை நாம் உடனே விட்டொழிப்போம். 


பிறருக்காக நம் சுயநலத்தையும், பிறர் மீது நமக்குள்ள தேவையில்லாத பயத்தையும் போக்கிக்கொள்வோம்.  

இவ்வாறு நம்மை நாமே சற்றே மாற்றிக்கொள்ளும் போதும், விட்டுக்கொடுக்கும் போதும். எதுவுமே நாம் இதுவரை நினைத்து வந்தது போல அவ்வளவு ஒன்றும் கஷ்டமானவைகள் அல்ல என்பதை நாமே உணர முடியும்.  


Never seek intention behind others' mistakes
’I LOVE YOU DARLING !’ 

என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் படித்தது.

தகுந்த மாற்றங்களுடன் தமிழாக்கம் 
மட்டுமே என்னால் செய்யப்பட்டது - vgk