என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 13 மார்ச், 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-5மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
[தொடர்பதிவு]
பகுதி-5


சென்ற பகுதி-4 இல் ஒரு விஷயம் நினைவுக்கு வராமல் இருந்ததாக எழுதியிருந்தேன். இப்போது அதுவும் நினைவுக்கு வந்துவிட்டது. //அந்த ஹிந்தி பண்டிட் ஜீ, நல்ல உயரமாகவும், சற்றே மெலிந்தவராகவும், மூக்குக்கண்ணாடி அணிந்தவராகவும், லேசாக தொங்கும் தாடி வைத்தவராகவும், எப்போதும் வெள்ளைக்கலரில் கதர் சட்டை, கதர் பேண்ட் அணிந்தவராகவும் தூய்மையானவராகவும் இருப்பார். அவர் அன்று திருச்சி மலைக்கோட்டை உள் வீதியில் [இப்போது யானை கட்டுமிடம் அருகே] அப்போது குடியிருந்தார்.  


எவ்வளவு யோசித்தும் அந்த ஹிந்தி பண்டிட் பெயர் மட்டும் இப்போது எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நான் மிகவும் வெட்கப்படுகிறேன். அவருடைய மகன் கூட அப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். அந்த சினிமா நடிகர் பெயரும் என்னால் இப்போது சொல்ல இயலவில்லை.//


அந்த ஹிந்தி பண்டிட் பெயர் :D. ராதாகிருஷ்ணன் [ D.R. என்று சுருக்கமாக அழைப்போம்]அவர் மகன் “பாரதவிலாஸ்” “அவள் ஒரு தொடர்கதை” “காசே தான் 

கடவுளடா” போன்ற திரைப்படங்களில் நடித்த “சசிகுமார்” என்பவர். இந்த சினிமாக்கள் பற்றிய தகவல்களை மட்டும் என்னுடன் அன்று அதே 
பள்ளியில் படித்த வேறு ஒரு நண்பரான திரு G.சுந்தரேசன் மூலம்
இப்போது தொலைபேசியில் பேசித் தெரிந்து கொண்டேன். நன்றி G.S. !


இனி இப்போது இன்றைய புதுப்பதிவுக்குப் போகலாமா ! வாருங்கள் !!

-ooooooooooooooooo-


பள்ளி நாட்களில் நடைபெற்ற 
ஒரு சில மறக்க முடியாத நிகழ்ச்சிகள்

முதன் முதலாக நான் வாங்கிய அடி

ஒண்ணாம் வகுப்பு முதல் பதினோறாம் வகுப்பு வரை நான் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியதே கிடையாது. 


ஆனால் ஒரே ஒரு முறை ஒன்பதாவது படிக்கும் போது, என் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களிடம், கொண்டைப் பிரம்பினால் என் வலது உள்ளங்கையில் சுள்ளென்று அடி வாங்க நேரிட்டது.  அடுத்த நான்கு நாட்களுக்கு எனக்கு வலி தாங்க முடியாதபடி சரியான அடி அது, என் உள்ளங்கையே சிவந்து போய் விட்டது. 

இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் மனதில் அந்த வலி மீண்டும் ஏற்படுவதுண்டு. அதே கொண்டைப் பிரம்புக் குச்சியால் அவரை வெளுத்து வாங்கிவிட வேண்டும் என்ற வெறி, எனக்குள் பலநாட்கள் இருந்து வந்தது.

என்னால் அது போல இப்போது நினைத்தாலும் செய்ய முடியாது. அவர் இப்போது இல்லை. காலமாகி விட்டார். அவர் பெயர் திரு. பூவராக ஐயங்கார் என்பதாகும். அவருக்கு காது சரியாகக் கேட்காது. அதற்காக ஒரு காது கேட்கும் கருவி பொருத்தியிருப்பார். குள்ளமாக இருப்பார். பஞ்சக்கச்சம் கட்டி, தலையில் டர்பன் கட்டியிருப்பார். எப்போதும் ‘கோட்’ [COAT]  போட்டுக்கொண்டிருப்பார்.  . 

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு நாள் ஏதோவொரு பீரியடுக்கான ஆசிரியர் உரிய நேரத்தில் வகுப்புக்கு வரவில்லை. வகுப்பு மாணவர்கள் தங்களுக்குள் ஏதோ காரசாரமான விவாதங்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் ஒரே சப்தமாக இருந்துள்ளது. 


வெளியே வராண்டாவில் சென்று கொண்டிருந்த தலைமை ஆசிரியருக்கு, இந்த சப்தம் அவருடைய காது கேட்கப் பயன்படும் கருவி [மெஷின்] மூலமாகக் கேட்டுள்ளது. 


கோபமாக உள்ளே வந்தார், ஆசிரியர் அமரும் இடத்தில் இருந்த மேஜையில், அங்கிருந்த கொண்டைப்பிரம்பால் நாலு சாத்து சாத்தினார். வகுப்பறையே அமைதியானது. "All of you, Stand up on the Bench"  என்று கத்தினார். எல்லோரும் பெஞ்ச் மேல் ஏறி நின்றோம்.. கொண்டைப் பிரம்பைக் கையில் எடுத்தார். சகட்டு மேனிக்கு எல்லோரையும் கையை நீட்டச்சொல்லி ஓங்கி ஓங்கி இழுத்து விட்டார். 


முதல் பெஞ்சில் அமைதியாக ஏதோ எழுதுக்கொண்டிருந்த எனக்கும் அடி விழுந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவே முதல் அடியும் கடைசி அடியும் ஆனதால், சின்னப்பையனான எனக்கு மிகுந்த வலியைத்தந்து, உள்ளங்கை வின்வின்னென்று வலித்து, உள்ளங்கை சிவந்து வீங்கிப்போய் விட்டதால் என்னால் சாப்பிடவோ எழுதவோ முடியாமல் அடுத்த ஒரு வாரம் வரை மிகவும் கஷ்டப்படுத்தியது. 


பாடம் நடத்தும் ஆசிரியர்களை தெய்வமாகப் போற்றி வந்த மிகவும் ஸாத்வீகமான எனக்கே, அன்று அந்த தலைமை ஆசிரியர் மேல்.கொலைவெறி ஏற்பட்டது என்ற உண்மையை இங்கு இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். 


தவறு செய்தவர்களை கூப்பிட்டுக் கண்டிக்கலாம். திருத்த முயலலாம். ஒட்டுமொத்தமாக அனைவரையும் கொண்டைப் பிரம்பால் உள்ளங்கையில் இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று இன்றுவரை புரியாமலேயே உள்ளது.

மற்றொரு கசப்பன சம்பவம்

[பாவம் ஓரிடம், பழி ஓரிடம்]

பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது. ஒரு பெஞ்சுக்கு மூன்று பேர்கள் வீதம் தள்ளித்தள்ளி அமர்ந்து தேர்வு எழுத வேண்டும். அதிலும் எனக்கு முதல் பெஞ்ச் தான். 


எங்களைக் கண்காணிக்க வந்தவர் எனக்கு எட்டாம் வகுப்புக்கு ஆசிரியராக இருந்த S M பசுபதி ஐயர் என்ற கிழட்டு வாத்யார். அவர் உயரமாக இருந்தும் சற்று கூன் முதுகுடன் இருப்பார். கையில் ஏப்போதும் ஒரு கொண்டைப்பிரம்பு ஒன்று வைத்திருப்பார். யாரையும் அவர் அடிக்கா விட்டாலும், அடிக்க வருவது போல அருகே வந்து பயம் காட்டுவார். அப்படியே அடித்தாலும் லேசாக ஒரு தட்டு தட்டுவார், வலியேதும் இல்லாமல் ஷொட்டுக் கொடுப்பது போல. 


அவர் தத்தித் தத்தி வந்து கொண்டைப்பிரம்பால் ஒரு போடு போடுவது போல அருகில் வரும் போதே, அந்த கொண்டைப்பிரம்பின் ஒரு பகுதியை வாத்யார் பிடித்திருக்க, மறு பகுதியை மாணவர்கள் பிடித்துக்கொண்டு, விட மாட்டார்கள். 


அவர் மொத்தத்தில் ஒரு ஸாத்வீகமான அதிக கெடுபடி இல்லாத வயதான மனிதர். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமே எப்போதும் கொண்டைப் பிரம்பை சுழட்டிய படி இங்குமங்கும் சுத்தக்கூடியவர். மாணவர்கள் யாரும் இவரைப்பார்த்து பயப்படவே மாட்டார்கள்.  

அரையாண்டுத் தேர்வின் கடைசி நாள் காலை மட்டும் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு [ENGLISH SECOND PAPER]. முதல் மாணவனாக தேர்வை முழுத்திருப்தியாக எழுதி முடித்த நான் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்பாகவே நான் எழுதிய தேர்வுத்தாள்களை அந்த கண்காணிப்பாளரான திரு. S.M பசுபதி வாத்யார் அவர்களிடம், கொடுத்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி விட்டேன். இனி பதினைந்து நாட்களுக்கு ஸ்கூல் லீவு தான், ஒரே ஜாலி தான், என வீட்டுக்கு வந்து விட்டேன்.


[ENGLISH FIRST PAPER என்பது ஆங்கில பாடம் சம்பந்தமாக இருக்கும். இந்த ENGLISH SECOND PAPER இல் வேறு பல பொது அறிவுக்கான பகுதிகளாகக் கொடுத்திருப்பார்கள். Punctuation marking, Precis Writing, Correct the spelling mistakes, Match the following, English to Tamil + Tamil to English Translations போன்றவைகள் இதில் அடங்கியிருக்கும். ]


லீவு முடிந்து ஸ்கூல் திறந்ததும் வழக்கம் போல Prayer ந்டைபெற்றது. அது முடிந்ததும் வகுப்புக்குச் சென்றேன். மைக்கில் ஓர் அறிவிப்பு. ”10 ஆம் வகுப்பு D பிரிவு மாணவர்களாகிய V. கோபாலகிருஷ்ணன், பாஷா, கணேசன் ஆகிய மூவரும் உடனடியாக தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்கு வந்து உதவித் தலைமை ஆசிரியர் ஸ்ரீநிவாஸன் சாரை வந்து சந்திக்க வேண்டும்”   என்று அறிவித்தனர்.


எனக்கு ஏன், எதற்கு அழைக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை. ஒரு வேளை அரையாண்டுத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் வாங்கியுள்ளதற்காக ஏதாவது பாராட்டப் போகிறார்களா? அப்படி இருந்தால் பாஷாவையும், கணேசனையும் ஏன் என் கூட அழைக்கிறார்கள்? என்று நினைத்துக்கொண்டேன். சரியென்று மூவரும் சென்றோம்.


கட்டை குட்டையாக நல்ல சிவப்பாக ஒரு 55 வயது இருக்கும் அந்த AHM ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு. [ஏற்கனவே நான் சொன்ன என் வகுப்பு ஆசிரியர் ஆர். ஸ்ரீ. என்பவர் வேறு - அவர் ஐயங்கார்; இந்த AHM ஸ்ரீநிவாஸன் என்பவர் வேறு - இவர் ஐயர்] சந்தனத்தை அரைத்துக் குழைத்து, விபூதிப்பட்டை போல நெற்றியில் 3 கோடுகளாக வரைந்திருப்பார். எங்கள் மூவரையும் கண்டதும் அவர் முகத்தில் கோபம் ருத்ர தாண்டவம் ஆடியது.  


மூவரும் அரையாண்டுத் தேர்வில் ஆங்கிலம் இரண்டாம் தாளில் காப்பி அடித்து எழுதியுள்ளதாகக் குற்றச்சாட்டு. மூவருக்கும் T.C. கிழிக்கப்போவதாகவும், எங்கள் தகப்பனார்களை அழைத்து வந்து T.C. பெற்று பள்ளியைவிட்டு விலக வேண்டும் என்றும் கடுமையாக எச்சரித்தார் A H M அவர்கள். 


பாஷாவும் கணேசனும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அழுகையாக வந்தது. 


“நான் யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை சார்” என கண்கலங்கியபடிக் கூறினேன். 


மேலும் ”இப்போது, அதே கேள்வித்தாளை என்னிடம் கொடுத்தாலும் தங்கள் முன்னிலையிலேயே விடைகள் எழுதிக் கொடுத்து விட முடியும் சார், என்னால்” என்றேன்.


திரு. சற்குணம் என்ற வேறொரு ஆசிரியரும் இந்த விசாரணைக் கமிஷனில் வந்து இடையில் சேர்ந்து கொண்டார்.


“நீ காப்பி அடிக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இவர்கள் இருவரும் காப்பியடிக்க காட்டியுள்ளாய்” என்றார். 


”நான் அதுபோலெல்லாம் எதுவும் செய்யவில்லை சார்”, என்று எவ்வளவோ மன்றாடினேன்.


அன்று முழுவதும் தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியேயே தவம் கிடக்கும் படியாகி விட்டது. 


திரும்பத் திரும்ப காப்பி அடித்தீர்கள். காப்பியடிக்க நீ காண்பித்தாய். அப்பாவுடன் வந்து T.C வாங்கிச் செல், என்பதையே சொல்லி வெறுப்பேற்றினார்கள். 


என் அப்பா மிகுந்த கோபக்காரர். அவருக்கு இது தெரிந்தால், என்னை அடித்து விளாசி விடுவதோடு, என் படிப்பையே அத்தோடு நிறுத்தி விடுவார் என்பது எனக்குத் தெரியும். 


அதனால் அன்று பள்ளி விட்டதும் நேராக என் வீட்டருகே உள்ள கோயிலுக்குப்போனேன். ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனிடம் முறையிட்டேன். ”நீ செய்யும் இது நியாயமா” என கதறி அழுதேன். ”என்னை நீ நிரபராதி என அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும், அப்போதுதான் நீ எனக்குப்பிடித்த சக்தி வாய்ந்த அம்மன் என நான் ஏற்றுக்கொள்வேன்”, என வெகு நேரம் கதறி விட்டு வந்தேன். அந்த அம்பாள் வழக்கம்போல் அன்று என்னைப்பார்த்து புன்னகை புரிந்ததோடு சரி. 


வீட்டில் யாரிடமும் இந்த விஷயத்தை நான் சொல்லிக்கொள்ள விரும்பாமல், என் மனதில் பாரத்தை ஏற்றிக்கொண்டு இரண்டு நாட்கள் தவியாய்த் தவித்தேன்.


பிறகு அந்த நல்ல மனிதரான சற்குணம் வாத்யார் என்னைத் தனியே அழைத்து, ஆறுதல் கூறினார். தேர்வு நேரத்தில் நான் விடைத்தாளை எழுதி, பசுபதி வாத்யாரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு நடந்த கதைகளை, அந்த பாஷா + கணேசன் மூலம் வாக்குமூலமாகப் பெற்றதைக் கூறினார்.


பாஷாவும் கணேசனும் என்னுடன் படித்த போதே மிகப்பெரிய மீசை வைத்த மாமாக்கள் போல தோற்றமளித்தவர்கள். தினமும் பள்ளிக்கே ஸ்கூட்டரில் தான் வந்து போவார்கள். கையில் கைக்கடிகாரம் கட்டியிருப்பார்கள். வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  


நான் அன்று தேர்வு எழுதி விட்டு, வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு, விடைத்தாள் தீர்த்து போய் விட்டதாகச் சொல்லி இருவரும் பசுபதி வாத்தியாரின் மேஜையை நெருங்கி, அடிஷனல் பேப்பர் கேட்பது போல அவர் கவனத்தை திசை திருப்பி, அவர் மேஜை மீதிருந்த என் விடைத்தாளை கடத்திப்போய், கடைசி பெஞ்சில் உட்கார்ந்து English to Tamil + Tamil to English Translation களை அப்படியே அவசர அவசரமாக *ஈ அடிச்சான் காப்பி* அடித்துள்ளனர். 


மூன்று பேப்பர்களும் அடுத்தடுத்து ஒன்றாக திருத்தப்போகும் போது, திருத்திய திரு. பரமசிவன் என்ற ஆசிரியர், மூன்றும் காப்பி அடித்து எழுதப்பட்டவை எனச்சொல்லி சிவப்பு மையால் சுழித்து, AHM அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.


நான் தேர்வு எழுதியதோ முதல் பெஞ்சில் அமர்ந்து. பாஷாவும், கணேசனும் தேர்வு எழுதியதோ கடைசி பெஞ்சில் அமர்ந்து. தேர்வு நடந்த அறையை விட்டு முன்னதாகவே வெளியேறியதோ நான் மட்டுமே. 


இந்த நடந்த உண்மைகளை அப்படியே ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டால், தேர்வுக் கண்காணிப்பாளராக அன்று வந்திருந்த, அந்தப் பசுபதி வாத்யாரை மாட்டி விட்டதாக ஆகுமே என பாஷாவும் கணேசனும் கொஞ்சம் தயங்கியுள்ளார்கள். 


பிறகு நிலைமை முற்றிப்போய் விடாமல் இருக்க, உண்மையை ஒத்துக்கொண்டு, ”குறிப்பாக கோபாலகிருஷ்ணன் மீது எந்தத் தவறும் கிடையாது, அவனை தயவுசெய்து தண்டித்து விடாதீர்கள்” என்பதையும் A H M அவர்களிடம், பாஷா+கணேசன் இருவருமே கூறியிருக்கிறார்கள். 


அதனால் நான் ஒருவழியாக அன்று தப்பிக்க முடிந்தது. எனக்கு எந்த தண்டனையும் தரப்படவில்லை. அந்த குறிப்பிட்ட விடைத்தாளில் நான் அன்று வாங்கியிருந்த மதிப்பெண்கள் 81 out of 100. 


அவர்களுக்கு மட்டும் தலா 50 ரூபாய் FINE வசூலிக்கப்பட்டதாகவும், மன்னிப்புக்கடிதம் எழுதி வாங்கிக்கொண்டதாகவும் பேசிக்கொண்டார்கள். 


1964-65 இல் 50 ரூபாய் என்பது மிகப்பெரியதொரு தொகையாகும்.  இன்றைக்கும் எனக்கு இந்த சம்பவத்தை நினைத்தால் என் மனது மிகவும் கஷ்டப்படும்.


இதே ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்கு இன்றும் நான் செல்வதுண்டு. அம்மனை நெருங்கும் போது ஒரு நிமிடம் இதைப்பற்றியும் நான் இன்றும் நினைத்துக் கொள்வதுண்டு. 


அந்த அம்பாள், அன்று என்னை எப்படியோ நிரபராதி என்று அடையாளம் காட்டிவிட்டதில் எனக்கோர் மகிழ்ச்சி. அன்று முதல் அந்த அம்பாளிடம் எனக்கு ஓர் தனி பிரியமும் பக்தியும் ஏற்படலானது.


அந்த அபாண்டமான பழியை சந்தித்ததிலிருந்து நான் எந்தத் தேர்வு எழுதினாலும், மணியடிக்கும் வரை விடைத்தாளைத் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருப்பேனே தவிர, தேர்வு நடக்கும் ஹாலை விட்டு, அவசரப்பட்டு வெளியே வருவது கிடையாது. இதை எனக்கு ஏற்பட்டதொரு புத்திக் கொள்முதலாகவே எடுத்துக்கொண்டேன் !


ஒரு தமிழாசிரியருக்கு நேர்ந்த கதி

நான் பதினொன்றாவது SSLC படிக்கும் போது ஓர் தமிழாசிரியர் புதிதாகப் பள்ளிக்கு வந்து சேர்ந்திருந்தார். அவர் பெயர் திருமலாச்சாரியார் என்று ஞாபகம். அவர் ஓர் ஐயங்கார் ஸ்வாமிகள். ஸ்ரீரங்கத்தில் குடியிருந்தவர் என்று சொன்னார்கள். 


அவர் மிகவும் ஆச்சாரமானவர். தலை, நெற்றி, தோள்கள், மார்பு, முதுகு என்று எல்லா இடங்களிலும் பெரிய நாமங்கள் இட்டிருப்பார். தலையில் சிகை (குடுமி) வைத்துக்கொண்டு, பஞ்சக்கச்சத்துடன் மேல் சட்டை ஏதும் போடாமல், பள்ளிவரை வந்து விட்டு, பிறகு தன்னோடு தனியாக பையில் எடுத்து வந்துள்ள சட்டையை பள்ளியில் அணிந்து கொண்டு, வகுப்புக்கு வருவார். அவர் மிகவும் ஆச்சரமானவர் என்பதை அவரைப் பார்த்தாலே நமக்கு நன்றாகத் தெரியும்.

அவர் முதன் முதலாக எங்களுக்கு தமிழ் பாடம் நடத்த அனுப்பப்பட்டிருந்தார். அவர் வகுப்பில் நுழையும் போதே என் வகுப்பு மாணவர்களில் பலர் பலத்த குரலில் ’ஓ’ போட்டனர்.  நரிகள் ஊளையிடுவது போல நீண்ட நேரம் பலக்கக் கத்தினர். வந்த ஆசிரியரைப்பார்த்த எனக்கு மிகவும் பாவமாகவும், பரிதாபமாகவும் இருந்தது. மாணவர்களின் இந்தச் செயலை மனதுக்குள் நான் மிகவும் வெறுத்தேன். 

உள்ளே வர நினைத்த அந்த ஆசிரியர், சற்று நேரம் இவர்களின் ஓசை அடங்கும் வரை மிகவும் அமைதியாக நின்றுவிட்டு, அதன்பிறகு சிரித்துக்கொண்டே உள்ளே வந்து தன் இருக்கையில் அமர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் நன்றி கூறினார். 

”நான் பல பள்ளிகளில் இதுவரை பல தமிழ் வகுப்புக்கள் எடுத்துள்ளேன். இந்தப்பள்ளிக்கு நான் புதியவன். இந்தப்பள்ளியின் இந்த வகுப்பு மாணவர்கள் போல எனக்கு எங்குமே உற்சாகமானதோர் வரவேற்பு இதுவரை அளிக்கப்பட்டது இல்லை. என்னைப்பார்த்ததும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ஓர் மகிழ்ச்சியாக உள்ளது. அதைக்காண எனக்கும் ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது” என்றார். 

இதைக்கேட்ட மாணவர்கள் மீண்டும் நரிகள் போல ஊளையிட்டனர். ஏதோ ஒரு வழியாக அந்த ஒரே ஒரு பிரியட் மட்டும் ஒப்பேத்தி விட்டுச் சென்றார், பிறகு என் வகுப்புக்கே மறுநாள் முதல் வரவில்லை.  


பிறகு அவர், அந்த எங்கள் பள்ளியை விட்டே விலகி விட்டார் என்பதும் தெரிந்தது. அவர் எத்தனை படித்தவரோ! எவ்வளவு நன்றாக பாடம் நடத்தக்கூடிய திறமை வாய்ந்தவரோ!! அவரின் வெளி உருவம் மட்டுமே மாணவர்களிடம் கேலிக்கிடமாகத் தோன்றியது.இது மாணவர்களின் விளையாட்டு புத்தியையும், அறியாமையையும் தான் காட்டுகிறது.
நாளையும் தொடரும்
*ஈ அடிச்சான் காப்பி* என்றால் என்னவென்று 
தெரியாதவர்களுக்கு என் விளக்கம் இதோ:

ஒருவன் தேர்வு எழுதும் போது மற்றொருவன் அவனைப்பார்த்து அப்படியே காப்பி அடித்து எழுதிக்கொண்டிருந்தானாம். 

அப்போது முதலாமவன் அருகே ஓர் ”ஈ” பறந்து கொண்டே இருந்ததாம். அதை அவன் பட்டென்று தன் கைகளால் அடிக்க விடைத்தாளில் ஓர் இடத்தில் அந்த அடிப்பட்ட “ஈ” ஒட்டிக்கொண்டு விட்டதாம். 

இதை உற்று கவனித்த நம்மாளு, அந்த இடத்தில் ஓர் “ஈ” யை அடித்து ஒட்ட வேண்டியது தான், அந்த கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மிகப் பொருத்தமான விடையாக இருக்கும் போலிருக்கு, என தனக்குத்தானே நினைத்துக்கொண்டு, தானும் கஷ்டப்பட்டு ஒரு ”ஈ” ஐத் தேடிக் கண்டுபிடித்து அடித்துவிட்டு, அதை மிகச்சரியாக அந்தப்பையன் ஒட்டியிருந்த இடத்திலேயே தானும் ஒட்டி விட்டானாம்.  

இந்த சம்பவம் நடைபெற்ற நாள் முதல் இது “ஈ அடிச்சான் காப்பி” என அழைக்கப்பட்டு வருகிறது.

-o-o-o-O-o-o-o-


48 கருத்துகள்:

 1. தவறு செய்தவர்களை கூப்பிட்டுக் கண்டிக்கலாம். திருத்த முயலலாம். ஒட்டுமொத்தமாக அனைவரையும் கொண்டைப் பிரம்பால் உள்ளங்கையில் இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று இன்றுவரை புரியாமலேயே உள்ளது.//

  இது மிகவும் வருத்தமான விஷயம்.

  தவறு செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கத் தக்கவர்கள்.

  பதிலளிநீக்கு
 2. அதனால் அன்று பள்ளி விட்டதும் நேராக என் வீட்டருகே உள்ள கோயிலுக்குப்போனேன். ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனிடம் முறையிட்டேன். ”நீ செய்யும் இது நியாயமா” என கதறி அழுதேன். ”என்னை நீ நிரபராதி என அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும், அப்போதுதான் நீ எனக்குப்பிடித்த சக்தி வாய்ந்த அம்மன் என நான் ஏற்றுக்கொள்வேன்”, என வெகு நேரம் கதறி விட்டு வந்தேன். அந்த அம்பாள் வழக்கம்போல் அன்று என்னைப்பார்த்து புன்னகை புரிந்ததோடு சரி. //

  அம்பாளின் புன்னகைக்கு அர்த்தம் கவலைப் படாதே உன் கோரிக்கை நிறைவேற்ரப்படும் என்பது தான் போலும்.

  நல்ல தீர்ப்பை அளித்து ஆனந்தம் அடைய செய்து விட்டாளே !ஆனந்தவல்லி.

  மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தொடர் மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. புத்திக் கொள்முதலுக்குக் கொடுத்த விலை மிகவும் அதிகம் தான்.

  பதிலளிநீக்கு
 4. கொண்டைப் பிரம்பைக் கையில் எடுத்தார். சகட்டு மேனிக்கு எல்லோரையும் கையை நீட்டச்சொல்லி ஓங்கி ஓங்கி இழுத்து விட்டார்.

  ஒருமுறை ஆசிரியர் அடிக்க பிரம்பை ஓங்கிய உடனே வலிப்பு வந்த மாதிரி கீழே விழுந்து விட்டான் ஒருமாணவன்..
  ஆசிரியர் தவித்த தவிப்பு சிரிப்பாக இருந்தது...

  கீழே படுத்திருந்தவனும் ஆசிரியருக்குத் தெரியாமல் நமுட்டுச்சிரிப்பைத் தவழ்விட்டு கிண்டலடித்தான்..

  பியூனை அனுப்பி சோடா வாங்கிவர்ச்செய்து முகத்தில் தெளித்து குடிக்கவும் வைத்து, துணைக்கு இரு மாணவர்களையும் சேர்த்து போடா வீட்டுக்கு என்று அனுப்பி வைத்தார்..

  எங்கே அப்பாவை அழைத்துவந்து அடியும், அம்மாவை கூப்பிட்டு வந்து வசவும் வாங்கிவைப்பானோ என்று பயந்துவிட்டார் ஆசிரியர்..

  பதிலளிநீக்கு
 5. நாங்கள் எல்லாம் ஆசிரியர் கையில் பிரம்பைப் பார்த்தால் போதும் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்துவிடுவோம்....

  ஆசிரியரும் தம்மையும் அழ வைத்துவிட்டால் என்னசெய்வது என்று பயந்து அடிக்கவோ திட்டவோ முடியாது கோபத்தில் குமுறுவார்...

  பதிலளிநீக்கு
 6. பாவம் ஓரிடம், பழி ஓரிடம்]

  தவறு செய்யாமல் தண்டனை ..
  தண்டிக்கப்பட்ட நியாயங்கள்...

  பதிலளிநீக்கு
 7. அந்த அம்பாள், அன்று என்னை எப்படியோ நிரபராதி என்று அடையாளம் காட்டிவிட்டதில் எனக்கோர் மகிழ்ச்சி. அன்று முதல் அந்த அம்பாளிடம் எனக்கு ஓர் தனி பிரியமும் பக்தியும் ஏற்படலானது.


  அந்த அபாண்டமான பழியை சந்தித்ததிலிருந்து நான் எந்தத் தேர்வு எழுதினாலும், மணியடிக்கும் வரை விடைத்தாளைத் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருப்பேனே தவிர, தேர்வு நடக்கும் ஹாலை விட்டு, அவசரப்பட்டு வெளியே வருவது கிடையாது. இதை எனக்கு ஏற்பட்டதொரு புத்திக் கொள்முதலாகவே எடுத்துக்கொண்டேன் !

  நிகழ்ந்த சம்பவத்தை மிக அழகாக வர்ணித்த விதம் என்னைக் கவர்ந்தது.
  அம்பாள் உங்களைக் கை விட வில்லை!

  பதிலளிநீக்கு
 8. கொண்டைப் பிரம்பு - என்ன சார் இது? எங்கள் வாத்தியார்களிடம் பிரம்பு இருக்கும். பார்த்திருக்கிறேன் - அடியும் வாங்கியிருக்கிறேன். ஆனால் கொண்டைப் பிரம்பு என்ன என்று புரியவில்லை.....

  நினைவில் இத்தனை விஷயங்களை வைத்து இருப்பது ஆச்சரியம். பலருக்கு இந்த பாக்கியம் இல்லை.

  பதிலளிநீக்கு
 9. பழைய அனுபவ்ங்கள் உங்கள் பாணியில் உள்ள எழுத்து நடை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.ஈ அடிச்சான் காப்பி..இதன் விளக்கம் எனக்கு இத்தனை நாட்களாக தெரியாது.இப்பொழுது உங்கள் பகிர்வின் மூலம் அறிந்து கொண்டேன்.பகிர்வு நீளமாக இருப்பினும் உங்களது அலுப்புத்தட்டாத சுவாரஸ்யமான எழுத்து நடையால் ஒரு வரி விடாமல் படிக்கத்தூண்டிய உங்கள் எழுத்துப்புலமைக்கு ஒரு ராயல் சல்யூட்.

  பதிலளிநீக்கு
 10. பிரம்படி...செய்யாத தப்புக்கு மாட்டிக்கொண்டு அம்மனிடம் முறையிட்டு...நியாயம் கிடைத்து...
  படு சுவாரஸ்யமான flashback !!!

  பதிலளிநீக்கு
 11. வெங்கட் நாகராஜ் said...
  //கொண்டைப் பிரம்பு - என்ன சார் இது? எங்கள் வாத்தியார்களிடம் பிரம்பு இருக்கும். பார்த்திருக்கிறேன் - அடியும் வாங்கியிருக்கிறேன். ஆனால் கொண்டைப் பிரம்பு என்ன என்று புரியவில்லை.....

  நினைவில் இத்தனை விஷயங்களை வைத்து இருப்பது ஆச்சரியம். பலருக்கு இந்த பாக்கியம் இல்லை.//

  கொண்டைப்பிரம்பு பற்றிய விளக்கம்:
  ===================================
  வழவழப்பாக இருக்கும்.

  ஸ்பெஷலாக பையன்களை அடிக்கவென்றே ஒஸ்தியாக தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

  சுமார் இரண்டு அடி நீளம் இருக்கும்.

  அடிவிழும் பாகத்தின் முனையில் மட்டும் சற்று தடிமனாக கொண்டை போல இருக்கும்.

  அதாவது சுத்தியலைக் [Hammer] கற்பனை செய்து கொள்ளுங்கள்.

  நாம் கையில் பிடிக்கும் பகுதி சற்று மெல்லியதாகவும், ஆணி அடிக்கும் பகுதி மட்டும் சற்று தடிமனாக இருக்கும் அல்லவா!

  அது போலவே இந்தக் கொண்டைப்பிரம்பும் அடிக்கும் பகுதி மொத்தமாக இருக்கும்.

  அதனால் ஓங்கி அடித்தால் கையில் ரத்தம் குழம்பிப்போகும். மருதாணி இட்டது போல உடனே சிவந்து போகும். கொழக்கட்டை போல வீங்கிப்போகும்.

  சதைப்பத்து இல்லாத [எலும்பும் தோலுமாக உள்ள மாணவ மணிகளில்] சிலருக்கு கை விரல் எலும்புகளே முறிந்து கூட போகும்.

  டஸ்டர், சாக்பீஸ் முதலிய ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் போலவே சர்வ சாதாரணமாக ஆசிரியர்களுக்கு இந்த கொண்டைப்பிரம்பும் அப்போதெல்லாம் வழங்கப்படுவதுண்டு.

  அது ஒரு பொற்காலம், கொண்டைப் பிரம்பு தயாரித்து சப்ளை செய்பவர்களுக்கு.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 12. இதுக்குத்தான் கடைசி மணி அடிக்கிறவரைக்கும் பரீட்சை ஹாலை விட்டு யாரும் போகப்டாதுன்னு சொல்றாங்க போலிருக்கு..

  ஈயடிச்சான் காப்பிக்கு நல்ல விளக்கம் :-))

  பதிலளிநீக்கு
 13. 1958 முதல் 1961 வரை நானும் இதே பள்ளீயில் படித்ததால் இந்த பதிவு எனக்கு மலரும் நினைவுகள். ஆனால் உங்கள் படு சுவாரஸ்யமான flashback - நிகழ்ந்த சம்பவத்தை மிக அழகாக வர்ணித்த விதம் என்னைக் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
 14. இப்போதெல்லாம் பிரம்பைத் தூக்கினால் கம்பி என்ன வேண்டி வரும். இப்படித்தாம் பிழைகள் செய்யாமலே சிலவேளை தண்டிக்கப்படுகின்றோம் . நல்ல அனுபவங்கள் . மீட்டிப் பார்க்க சிறப்பாக இருக்கும். இப்படித்தான் சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எவ்வளவு சிறிய வயதாக இருந்தாலும் கூட. ஆனால் சிலவற்றை நினைத்துப் பார்த்தாலும் நினைவில் வரவே வராது. தொடருங்கள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. எத்தனை அனுபவங்கள்!எல்லாவற்றையும் அருமையா நினைவு கூர்ந்து எழுதியிருக்கீங்க!நன்று.

  பதிலளிநீக்கு
 16. //பாடம் நடத்தும் ஆசிரியர்களை தெய்வமாகப் போற்றி வந்த மிகவும் ஸாத்வீகமான எனக்கே, அன்று அந்த தலைமை ஆசிரியர் மேல்.கொலைவெறி ஏற்பட்டது என்ற உண்மையை இங்கு இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். //

  //அவர் வகுப்பில் நுழையும் போதே என் வகுப்பு மாணவர்களில் பலர் பலத்த குரலில் ’ஓ’ போட்டனர். நரிகள் ஊளையிடுவது போல நீண்ட நேரம் பலக்கக் கத்தினர். வந்த ஆசிரியரைப்பார்த்த எனக்கு மிகவும் பாவமாகவும், பரிதாபமாகவும் இருந்தது. மாணவர்களின் இந்தச் செயலை மனதுக்குள் நான் மிகவும் வெறுத்தேன். //

  உங்கள் உள்ளத்தை தெள்ளத்தெளிவாகப் புரியவைத்த வரிகள்!

  நம்பியவர்கள் கெடுவதில்லை! உங்கள் வேண்டுதலுக்கு உடனடிப் பலன் கிடைத்ததிலும் மகிழ்ந்தேன்!

  நன்றி!
  காரஞ்சன்(சேஷ்)

  -நன்றி!

  பதிலளிநீக்கு
 17. அன்பின் வை.கோ - இத்தனை ஆண்டுகள் கழித்தும் - நினவில் வைத்திருக்கக் கூடிய - பாதித்த சம்பவங்கள் - சிறு வயதில் மனதில் பதிந்தவை - மறக்க இயலாத ஒன்றாக மாறி விட்ட சம்பவங்கள். நினைவாற்றல் பாராட்டத் தக்கது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 18. எத்தனை ஆண்டுகள் கழித்தும் இப்போது நிகழ்ந்தது போல நினைவில் கொண்டு எழுதியுள்ளது அன்று நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ அப்படியே படிப்பவரையும் உணரவைக்கிறது.

  நிகழ்ந்ததை எழுதுவதில் நல்ல சுகம்.

  பதிலளிநீக்கு
 19. I wounder how you are able to keep all the little things in your mind?
  I felt pained as if I got the slap....
  because your writing is such so nice.
  Really interesting.
  Do you know after reading your memries I too closed my eyes and gone to my olden days.

  Such a sweet memories really.
  viji

  பதிலளிநீக்கு
 20. தொடர்கிறேன் சார்.... கை வலிக்கும் வீங்கும் அளவு அடிப்பதெல்லாம் எந்த விதத்தில் சரி ...மிகவும் வேதனையாக உள்ளது.

  காப்பி அடிப்பது எல்லாம் பிற்காலத்தில் மிக மிக சாதாரணமாக போய்விட்டது வேதனைக்குறியது.......

  பிள்ளைகள் வாத்தியாரை கிண்டல் செய்வது சகஜம்...ஆனாலும் ஆசிரியரிடம் கொஞ்சம் மரியாதையும் அவ்வப்பொழுது இருந்தால், நலல் நட்பு வள்ரும்...வருந்துகிறேன்...

  பதிலளிநீக்கு
 21. செய்யாத தப்புக்கு பழியை சுமத்துவது மிகவும் கொடுமையானது. அந்த நேரத்தில் உங்கள் மனது என்ன பாடுபட்டிருக்கும் என்று உணர முடிகிறது சார்...

  ஹிந்தி பண்டிட் பேரையும் நினைவுக்கு கொண்டு வந்துட்டீங்களே.....பலே சார்.

  பதிலளிநீக்கு
 22. உங்க ஈ அடிச்சான் காப்பியை இப்போ தான் பார்த்தேன் :)))

  பதிலளிநீக்கு
 23. ஒரு ஆசிரியராக இந்த பதிவு சில உண்மைகளை ஒப்புக் கொள்ள வைக்கிறது. அருமையான பகிர்வு சார்.

  பதிலளிநீக்கு
 24. //அந்த அம்பாள் வழக்கம்போல் அன்று என்னைப்பார்த்து புன்னகை புரிந்ததோடு சரி. //

  ஏதேதோ சொந்த வியாகூலங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வருகையில் இடையில் அதுவாக வந்து விழுந்த மிகுந்த அர்த்தம் உள்ள ஒரு வரி!

  //இந்த நடந்த உண்மைகளை அப்படியே ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டால், தேர்வுக் கண்காணிப்பாளராக அன்று வந்திருந்த, அந்தப் பசுபதி வாத்யாரை மாட்டி விட்டதாக ஆகுமே என பாஷாவும் கணேசனும் கொஞ்சம் தயங்கியுள்ளார்கள். //

  இத்தனை ரகளைகளுக்கும் நடுவே, அந்த பாஷா+கணேசனும் நல்ல கேரக்டர்கள் தான் என்று தெரிகிறது பாருங்கள்!

  //இந்த நடந்த உண்மைகளை அப்படியே ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டால், தேர்வுக் கண்காணிப்பாளராக அன்று வந்திருந்த, அந்தப் பசுபதி வாத்யாரை மாட்டி விட்டதாக ஆகுமே என பாஷாவும் கணேசனும் கொஞ்சம் தயங்கியுள்ளார்கள். //

  இத்தனை ரகளைகளுக்கும் இடையே அந்த பாஷாவும் கணேசனும் நல்ல கேரக்டர்களாகத் தெரிகிறது பாருங்கள்!

  //பிறகு அந்த நல்ல மனிதரான சற்குணம் வாத்யார் என்னைத் தனியே அழைத்து, ஆறுதல் கூறினார்.//

  எல்லா வாத்தியார்களுக்கும் அவர்கள் பெயர்களுக்கு முன் தாங்கள் போட்டிருந்த 'திரு', சிறு வயதில் தனக்குக் கல்வி கற்பித்த உயாத்தியார்களிடம் தாங்கள் காட்டும் மரியாதையைத் தெரியப்படுத்துகிறது என்றால், பரமசிவம் சாருக்கு நீங்கள் போட்டிருக்கிற 'திரு' ரொம்பவும் அர்த்தம் நிறைந்ததாகப் பட்டது.

  பதிலளிநீக்கு
 25. வை.கோபாலகிருஷ்ணன் said...
  இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து ஓர் தனிப்பதிவே தந்துள்ளேன்.

  இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

  தலைப்பு:

  இயற்கை அழகில் ’இடுக்கி’
  இன்பச் சுற்றுலா

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 26. ரிஷபன் said...
  *****அந்த அம்பாள், அன்று என்னை எப்படியோ நிரபராதி என்று அடையாளம் காட்டிவிட்டதில் எனக்கோர் மகிழ்ச்சி. அன்று முதல் அந்த அம்பாளிடம் எனக்கு ஓர் தனி பிரியமும் பக்தியும் ஏற்படலானது.


  அந்த அபாண்டமான பழியை சந்தித்ததிலிருந்து நான் எந்தத் தேர்வு எழுதினாலும், மணியடிக்கும் வரை விடைத்தாளைத் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருப்பேனே தவிர, தேர்வு நடக்கும் ஹாலை விட்டு, அவசரப்பட்டு வெளியே வருவது கிடையாது. இதை எனக்கு ஏற்பட்டதொரு புத்திக் கொள்முதலாகவே எடுத்துக்கொண்டேன் !*****

  //நிகழ்ந்த சம்பவத்தை மிக அழகாக வர்ணித்த விதம் என்னைக் கவர்ந்தது.//

  மிக்க நன்றி சார். உண்மைச் சம்பவங்களும் மனதை உலுக்கிய சம்பவங்களும், எல்லோரையுமே நிச்சயமாகக் கவரத்தான் செய்யும்.

  //அம்பாள் உங்களைக் கை விட வில்லை!//

  ஆம். அவள் என்னை அன்றும் இன்றும் கைவிடாமல் காத்தருளுகின்றாள் என்பதே உண்மை.

  இது விஷயமாக அந்த அம்பாளைத்தவிர என் வீட்டில் என் பெற்றோர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் கூட நான் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க முடியாத துர்பாக்கிய நிலையில் தான் அன்று இருந்தேன்.

  பதிலளிநீக்கு
 27. //தவறு செய்தவர்களை கூப்பிட்டுக் கண்டிக்கலாம். திருத்த முயலலாம். ஒட்டுமொத்தமாக அனைவரையும் கொண்டைப் பிரம்பால் உள்ளங்கையில் இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று இன்றுவரை புரியாமலேயே உள்ளது.//

  உண்மைதான் சார். இன்று கூட இந்த வழக்கம் இருப்பது வருத்தமான விஷயம்.

  உங்க அனுபவங்களை,சில இடங்களில் வருத்தமாகவும் சில இடங்களின் மகிழ்ச்சியான விதமாகவும் சிறப்பாக விவரித்து இருக்கீங்க.படிக்க சுவரசியமாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 28. RAMVI said...
  //தவறு செய்தவர்களை கூப்பிட்டுக் கண்டிக்கலாம். திருத்த முயலலாம். ஒட்டுமொத்தமாக அனைவரையும் கொண்டைப் பிரம்பால் உள்ளங்கையில் இழுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று இன்றுவரை புரியாமலேயே உள்ளது.//

  உண்மைதான் சார். இன்று கூட இந்த வழக்கம் இருப்பது வருத்தமான விஷயம்.

  உங்க அனுபவங்களை,சில இடங்களில் வருத்தமாகவும் சில இடங்களின் மகிழ்ச்சியான விதமாகவும் சிறப்பாக விவரித்து இருக்கீங்க.படிக்க சுவரசியமாக இருக்கு.//

  தங்களின் அன்பான வருகைக்கும்,
  அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும்,
  என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 29. கொண்டை பிரம்பு //பற்றிவிவரனைகள் படிக்கும்போதே மனம் பதபதைக்கிறது சார் .இப்பெல்லாம் மாணவர்கள் ரொம்ப முன்னேற்றம் .
  செய்யாத தவறுக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டது இறைவனின் அருள் .
  எப்படி ஒவ்வொரு சம்பவத்தையும் மறவாமல் நினைவில் வைத்திருக்கீங்க .எனது அவா ..நீங்க இந்த பள்ளி பருவ நினைவுகளை புத்தகமாக தொகுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் .
  பின்னாளில் பிள்ளைகளுக்கு பயன்படும் சிலேட்டு குச்சிஎல்லாம் என் மகளே பார்க்கல்ல இனி வரும் சந்ததிக்கு பயன்படும் சார் .

  பதிலளிநீக்கு
 30. angelin said...
  கொண்டை பிரம்பு //பற்றிவிவரனைகள் படிக்கும்போதே மனம் பதபதைக்கிறது சார்

  இப்பெல்லாம் மாணவர்கள் ரொம்ப முன்னேற்றம் .
  செய்யாத தவறுக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டது இறைவனின் அருள் .

  எப்படி ஒவ்வொரு சம்பவத்தையும் மறவாமல் நினைவில் வைத்திருக்கீங்க

  எனது அவா ..நீங்க இந்த பள்ளி பருவ நினைவுகளை புத்தகமாக தொகுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் .

  பின்னாளில் பிள்ளைகளுக்கு பயன்படும்

  சிலேட்டு குச்சிஎல்லாம் என் மகளே பார்க்கல்ல இனி வரும் சந்ததிக்கு பயன்படும் சார் .//

  அன்புள்ள நிர்மலா,

  ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  என் மனமார்ந்த நன்றிகள்.

  பிரியமுள்ள,
  கோபு

  பதிலளிநீக்கு
 31. சார் தாங்கள் கூறியது போல் அடி வாங்குவது, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் சேர்வதும், ஆசிரியர்களை கிண்டல் செய்வதும் அனைத்தும் தங்களுக்கு பின் வந்த எங்களது காலத்திலும்1995-2007 அப்பொழுதும் அதே போல் நடந்தது! எத்தனை இருப்பினும் ஒரு சில ஆசிரியர்களை காணும் போதாவது ஒரு மரியாதையும் பணிவும் வரும்!!ஆனால் நான் முடிக்கையில் எங்களுக்கு பின் வந்த மாணவர்கள் உரையாடல்களை கேட்க கொஞ்சம் பயமாக இருந்தது! " டேய் இன்னைக்கு அந்த பீடீ என்னை அடிச்சுருச்சு டா, இன்னைக்கு சாய்ந்தரம் அதை ரவுண்டு கட்டனும் டா! ". இன்றோ பல ஆசிரியர்கள் அடிக்க பயப்படுகிறார்கள், ஆசிரியருக்கு வணக்கம் சொல்வது கூட தவறான கலாச்சாரமாக போய்விட்டது மாணவர்கள் மத்தியில் "அதுக்கெல்லாம் எதுக்கு குட் மார்னிங்க் சொல்ற? உனக்கு பொழைப்பே இல்ல" இது எனக்காக பலர் உரைத்த வசனமே!

  எதுவாக இருப்பினும் தங்களது நினைவூட்டல் மிக அருமை சார்! தாங்கள் ஒவ்வொரு காட்சியை விவரிக்கையிலும் நானும் உடனிருந்து அனுபவிப்பது போல் ஒரு கற்பனை திரை உருவாகிறது சார்!

  பதிலளிநீக்கு
 32. அன்புள்ள யுவராணி, வாங்கோ.

  //இன்றோ பல ஆசிரியர்கள் அடிக்க பயப்படுகிறார்கள்//

  அந்தக்காலத்தில், பெற்றோர்களே ஆசிரியர்களிடம் சொல்லுவார்கள், ”என் பையன் ஏதேனும் குறும்பு செய்தாலும், சரியாக கவனமாகப் படிக்காவிட்டாலும், அவனுடைய கண்,. காது, மூக்கு, வாய் தவிற மீதி இடங்களில் நன்றாக வெளுத்து விடுங்கோ, சார்” என்பார்கள்.

  //ஆசிரியருக்கு வணக்கம் சொல்வது கூட தவறான கலாச்சாரமாக போய்விட்டது மாணவர்கள் மத்தியில் "அதுக்கெல்லாம் எதுக்கு குட் மார்னிங்க் சொல்ற? உனக்கு பொழைப்பே இல்ல" இது எனக்காக பலர் உரைத்த வசனமே!//

  என்ன ஒரு கொடுமை, யுவராணி! அடைப்படைப்பண்புகள் கூட மாணவர்களுக்கு போதிக்கப்படுவதிலும் தடங்கலா?

  //எதுவாக இருப்பினும் தங்களது நினைவூட்டல் மிக அருமை சார்! தாங்கள் ஒவ்வொரு காட்சியை விவரிக்கையிலும் நானும் உடனிருந்து அனுபவிப்பது போல் ஒரு கற்பனை திரை உருவாகிறது சார்!//

  தங்களின் அன்பான வருகைக்கும்,அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், யுவராணி.

  பதிலளிநீக்கு
 33. நீங்கள் விவரித்துள்ள சம்பவங்கள் மனதை தொட்டன.
  உங்கள் மேல் காப்பி அடித்த பழி வராமல் இருக்க வேண்டுமே என்று மனது ரொம்பவும் தவித்துப் போய்விட்டது.நல்ல வேளை அவர்களே தங்கள் தவறை ஒப்புக் கொண்டு உங்களை பழியிலிருந்து தப்புவித்தனர். ஆனந்த வல்லியின் அருள்!

  நல்ல ஒரு ஆசிரியரை இழந்து விட்டோமோ என்ற ஆதங்கம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.

  நல்லதொரு பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ranjani Narayanan December 17, 2012 1:38 AM

   வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம், வணக்கம்.

   //நீங்கள் விவரித்துள்ள சம்பவங்கள் மனதை தொட்டன.//

   மிக்க நன்றி, மேடம்.

   //உங்கள் மேல் காப்பி அடித்த பழி வராமல் இருக்க வேண்டுமே என்று மனது ரொம்பவும் தவித்துப் போய்விட்டது.நல்ல வேளை அவர்களே தங்கள் தவறை ஒப்புக் கொண்டு உங்களை பழியிலிருந்து தப்புவித்தனர். ஆனந்த வல்லியின் அருள்!//

   ஆம், அது ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாளின் அருளே தான்.

   //நல்ல ஒரு ஆசிரியரை இழந்து விட்டோமோ என்ற ஆதங்கம் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. நல்லதொரு பகிர்வு!//

   தங்கள் அன்பான வருகை + அழகான கருத்துக்கள் எனக்கு மகிழ்வாக உள்ளது. மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 34. நீங்க கையில் அடிவாங்கியது, செய்யாததப்புக்காக ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளானது, அதிலிருந்து மீண்டது,தமிழ் ஆசிரியரை மற்ற வர்கள் நரி போல ஊளையிட்டு வரவேற்றதுன்னு பள்ளி அனுபவம் ஒன்னு விடாம சொல்லி வரீங்க.படிக்கும் போதே அந்தக்காலத்துக்கே டைம் மிஷினில் ஏறிப்போய் வந்தது போல இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் April 3, 2013 at 8:05 AM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

   //நீங்க கையில் அடிவாங்கியது, செய்யாததப்புக்காக ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளானது, அதிலிருந்து மீண்டது,தமிழ் ஆசிரியரை மற்றவர்கள் நரி போல ஊளையிட்டு வரவேற்றதுன்னு பள்ளி அனுபவம் ஒன்னு விடாம சொல்லி வரீங்க. படிக்கும் போதே அந்தக்காலத்துக்கே டைம் மிஷினில் ஏறிப்போய் வந்தது போல இருக்கு.//

   ரொம்பவும் சந்தோஷம்மா. தங்களின் அன்பான வருகைக்கும், அழகாக ஒவ்வொரு பகுதியாகப்படித்து கருத்துக்களைப் பகிர்வதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், பூந்தளிர்.

   நீக்கு
 35. பள்ளி நினைவுகள் சில இனிமையானவை, சில கசப்பானவை. வாழ்க்கையில் இந்த இரண்டும் சேர்ந்துதானே இருக்கிறது. அது போலத்தான் பள்ளி வாழ்வும்.

  பதிலளிநீக்கு
 36. அம்பாள் நம்பாள் இல்லையா.
  அதான் உங்க கோரிக்கையை நிறைவேற்றி விட்டாள்.

  அருமையான NARRATION.

  அற்புதமான ஞாபக சக்தி. வழக்கம் போல் சரள நடை.

  மீண்டும், மீண்டும் படிப்பேன்.

  பதிலளிநீக்கு
 37. இன்னாமா பள்ளியில நடந்த வெசயக ஒன்னுவுடாம சூல்லி வாரீக.நல்ல கியாபக சக்திதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 19, 2015 at 4:05 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //இன்னாமா பள்ளியில நடந்த வெசயக ஒன்னுவுடாம சூல்லி வாரீக.நல்ல கியாபக சக்திதா.//

   எனக்குக்கொஞ்சம் ஞாபக சக்தி அதிகம் என்றுதான் அனைவரும் சொல்லுவார்கள். மிக்க நன்றிம்மா. :)

   மேலும் நான் பார்த்துவந்த வேலைகளுக்கும், எனக்குக்கொடுத்திருந்த பொறுப்புக்களுக்கும் ஞாபக சக்தி மிக மிக அவசியமானதாகும்.

   நீக்கு
 38. பள்ளி நாட்களை இவ்வளவு துல்லியமாக யாராலயுமே நினைவுகூற முடியாதுதான் செய்யாத தப்புக்கு அடி வாங்கியதைக்கூட சொல்லி இருக்கீங்க. .ஒவ்வொரு அனுபவம்ம் ஒரு பாடம்தான்.

  பதிலளிநீக்கு
 39. முதல் பெஞ்சில் அமைதியாக ஏதோ எழுதுக்கொண்டிருந்த எனக்கும் அடி விழுந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதுவே முதல் அடியும் கடைசி அடியும் ஆனதால், சின்னப்பையனான எனக்கு மிகுந்த வலியைத்தந்து, உள்ளங்கை வின்வின்னென்று வலித்து, உள்ளங்கை சிவந்து வீங்கிப்போய் விட்டதால் என்னால் சாப்பிடவோ எழுதவோ முடியாமல் அடுத்த ஒரு வாரம் வரை மிகவும் கஷ்டப்படுத்தியது. // எனக்கும் ஒரே முறை அந்த அனுபவம் ஏற்பட்டது. யாரோ வகுப்பில் பேசியதற்கு எனக்கு அடி விழுந்தது. இத்தனைக்கும் அந்த வாத்தியார் பாடம் நடத்துவதில் ரொம்ப சுமார் ரகம்தான். செய்யாத தப்புக்கு முதுகில் அறையா..ரொம்ப நாள் கொதித்தது. இப்பவெல்லாம் அப்படி அடித்தால் என்னாகும்னு நெனச்சு பாருங்க வாத்யாரே..

  பதிலளிநீக்கு
 40. ஈ அடிச்சான் காப்பிக்கும் விளக்கமா... நம்மள பாத்து காப்பி அடிச்சவங்களுக்கு தண்டனை கொடுத்தது சரிதான் அவங்க காப்பி அடிக்கும் வரை நம்ம பேப்பரை காட்டிகிட்டு இருப்போமா....வாத்தியார்கள் தண்டனை தனதுக்கு முன்ன கொஞ்சம் யோசிச்சிருக்கணும்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... October 24, 2016 at 8:07 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஈ அடிச்சான் காப்பிக்கும் விளக்கமா...//

   ஆமாம். அதுபற்றி சரிவர தெரியாமல் இருந்துள்ள சிலர், இங்கு நான் விளக்கியுள்ளதைப் படித்து மட்டுமே புரிந்துகொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

   //நம்மள பாத்து காப்பி அடிச்சவங்களுக்கு தண்டனை கொடுத்தது சரிதான்.//

   ஆனால் அன்று உண்மையாக நடந்துள்ளதே, யாரும் சற்றும் எதிர்பார்க்காத / யோசிக்காத, வேறு புதுக்கதையாகவே உள்ளது பாருங்கோ.

   நிஜமாக என் விடைத்தாளை ஆசிரியரின் மேஜையிலிருந்து, அவருக்கே தெரியாமல், கடத்திப்போய் காப்பி அடித்த குற்றவாளிகளே, உண்மையில் அன்று என்ன நடந்தது என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளதால் மட்டுமே, நான் அன்று தப்பிக்க முடிந்தது.

   //அவங்க காப்பி அடிக்கும் வரை நம்ம பேப்பரை காட்டிகிட்டு இருப்போமா....//

   அதையும் இந்த விசாரணையை நடத்திய எவனும் யோசிக்கவே இல்லை.

   //வாத்தியார்கள் தண்டனை தருவதற்கு முன்ன கொஞ்சம் யோசிச்சிருக்கணும்ல...//

   இதில் தண்டிக்கப்பட வேண்டியவர் அன்று தேர்வு நடந்த அறையில் கண்காணிப்பாளராக செயல்பட்ட, வயதான கிழட்டு வாத்யார் S M பசுபதி ஐயர் என்பவர் மட்டுமே என்பது என் கருத்து.

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 41. ஒட்டுமொத்தமாக அனைவரையும் தண்டிப்பது - சில வாத்தியார்கள் இப்படி இருந்துடறாங்க. நான் 10வது தூய சவேரியார் பள்ளியில் படித்தபோது, அங்கிருந்த தமிழ் வாத்தியார், இலக்கண வகுப்போ அல்லது மற்ற வகுப்பின்போதோ, ஸ்கேலால் இரண்டுபுறமும் அடித்துக்கொண்டே வருவார் (பசங்களைத்தான்). பதில் உடனே சொல்லணும். ஒரு நாள் மத்தியானம் முதல் கிளாஸ் தமிழ். உள்ள வந்தவர், வெளியில் நின்றிருந்த அவர் பையனை (அட்டென்டரை விட்டு கூட்டிவரச்சொன்னார் போலிருக்கு) உள்ளே வரச்சொன்னார். தன் இடுப்பு பெல்டைக் கழட்டி, விளாசு விளாசுன்னு விளாசினார். நாங்கள்லாம் பயந்தே போயிட்டோம். காரணம் என்னன்னா, அவன், இன்னொரு பையனை நோக்கி செருப்பை எறிந்திருக்கிறான். அதைப் பார்த்த ஒரு டீச்சர், இவர்ட்ட பத்த வச்சுட்டார். அவ்வளவு கோபக்காரராக அந்தத் தமிழாசிரியர் இருந்தபோதும், மிக அருமையா பாடம் சொல்லித்தருவார்.

  காப்பி அடிக்காமலேயே நீங்கள் 'காப்பி அடித்ததாக' மாட்டிக்கொண்டது, 'திக்' என்றிருக்கிறது.அப்போ சின்னப் பையனான உங்களுக்கு எவ்வளவு பயம் இருந்திருக்கும். அதற்குப் பிறகான உங்கள் முன்னெச்சரிக்கையை (எக்சாம் நேரம் முடியாமல் பேப்பரைக் கொடுப்பதில்லை) படித்து புன்னகைத்தேன்.

  'தமிழாசிரியருக்கு நேர்ந்த கதி' - ரசமாக இருந்தது. ஆளுமை இல்லைனா, என்ன புத்திசாலியாக இருந்தாலும் மாணவர்களை மேய்க்க முடியாது. நான் கல்லூரி படிக்கும்போது, கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்கிய 26-27 வயசு வாத்தியார் (பையன்) பாடம் நடத்த வந்தார். கணிதத்தில் முனைவர் பட்டம் வாங்குவதே அபூர்வம் (அப்போது கல்லூரியில் எந்த கணித ப்ரொஃபசரும் முனைவர் இல்லை). கல்லூரி மாணவர்களை அடக்க மிகவும் சிரமப்பட்டார் (இத்தனைக்கும் எங்கள் கல்லூரி மாணவர்கள் தயிர்சாதம் என்று போட்டிக் கல்லூரி மாணவர்கள் அழைப்பர். தூய சவேரியார், தூய ஜான்ஸ்). அப்புறம் சில மாதங்களில் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போய்விட்டார்.

  பின்னூட்டங்களுக்கான உங்கள் பதில்களையும் படித்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 42. நெல்லைத் தமிழன் January 25, 2018 at 3:28 PM

  வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

  //அதற்குப் பிறகான உங்கள் முன்னெச்சரிக்கையை (எக்சாம் நேரம் முடியாமல் பேப்பரைக் கொடுப்பதில்லை) படித்து புன்னகைத்தேன்.//

  இதெல்லாம் நமக்கு ஓர் புத்திக்கொள்முதல் அல்லவா!

  தங்களின் அன்பு வருகைக்கும், அழகான தங்களின் அனுபவக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்வாமீ.

  //பின்னூட்டங்களுக்கான உங்கள் பதில்களையும் படித்து ரசித்தேன்.//

  மிக்க மகிழ்ச்சி.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு