என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 10 மார்ச், 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் [தொடர்பதிவு] பகுதி-2



மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
[தொடர்பதிவு]
பகுதி-2






என்னை முதன்முதலாக பள்ளியில் கொண்டுபோய் சேர்த்தது என் பெரிய அக்கா தான். அவர்களுக்கு என்னை விட 10-12 வயதுகள் அதிகம். எங்கள் தெருவிலேயே அந்தக்காலத்தில் அமைந்திருந்த “பிரின்சிபால் சாரநாதன் ஹிந்து எலிமெண்டரி ஸ்கூல்” தான் நான் ஒண்ணாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளி. 


திருச்சி தேசியக் கல்லூரி, மற்றும் திருச்சி தேசிய கல்லூரி உயர்நிலைப்பள்ளி [National College + National College High School] இவற்றின் கிளை தான் இந்த ”பிரின்சிபால் சாரநாதன் ஹிந்து எலிமெண்டரி ஸ்கூல்” என்பது. திருச்சி நேஷனல் காலேஜில் முன்னாள் முதல்வராக இருந்த “சாரநாதன்” என்பரின் பெயரில் இந்த ஆரம்பப்பள்ளி அழைக்கப்பட்டது.

என் முதல் வகுப்பு டீச்சர் பெயர் : திருமதி “பட்டம்மாள்” டீச்சர். 


சிவப்பாக கும்முன்னு, குண்டு மூஞ்சியாக, அழகாக எப்போதுமே சிரித்த முகத்துடன் மடிசார் புடவையில் இருப்பார்கள். அவர்களுக்கு அப்போது ஒரு 50 வயது இருக்கலாம். 


என் பெரிய அக்காவுக்கும் திருமணம் ஆகி அவளும் அன்று முதல் இன்று வரை மடிசார் புடவையிலேயே இருப்பவள் தான். என் பெரிய அக்காவுக்கு அப்போது ஒரு 16 அல்லது 17 வயது இருக்கலாம். இந்த மடிசார் அந்த மடிசாரிடம் என்னை ஒப்படைத்து விட்டு வெளியே போக முயற்சிக்கும். 


நான் கண்களில் கண்ணீருடன் செய்வதறியாது என் அக்காவை ஏக்கத்துடன் பார்ப்பேன். “இதோ இந்த பள்ளிக்கூட வாசல் திண்ணையில் தான் நான் இருப்பேன். மணியடித்ததும் உன்னை சாப்பிட ஆத்துக்கு (வீட்டுக்கு) அழைத்துப்போவேன்” என்று சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிவிடுவாள். 



எனக்கு முதன்முதலாக எழுத்தறிவித்த இந்த என் குருவான பட்டம்மா டீச்சர் ஒருவேளை இன்றும் எங்காவது உயிருடன் இருந்தால் அவர்களுக்கு வெறும் 108 வயது தான் இருக்கும். அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது.   


என்னுடன் அன்று படித்த சிறுவர்களில் மூவரை மட்டும் இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது. அதில் பூபதி என்று ஒருவன் என்னுடனேயே BHEL இல் பணியாற்றி, என்னுடனேயே பணி ஓய்வு பெற்றவன். 


வெங்குட்டு என்று ஒருவன் பார்க்க செங்குரங்கு போலவே முகம் இருக்கும். என்னை ஏதாவது வம்பு இழுத்துக்கொண்டும், பயமுறுத்திக் கொண்டும் அழவிட்டுக் கொண்டும் இருப்பான். பிறகு நான் இரண்டாம் வகுப்புக்குப் போனவுடன் அந்தச் செங்குரங்குப் பையனைக் காணவில்லை. எனக்கு மிகவும் நிம்மதியாகப் போச்சு.  


மாணிக்கம் என்ற ஒரு பையன் காதுகளில் கடுக்கன்களும், மூக்கில் சிறிய மூக்குத்தி ஒன்று அணிந்திருப்பான். பிறகு அடுத்த வருடத்திலிருந்து அவனையும் காணோம். குழந்தையின் கடுக்கன்களும் மூக்குத்தியும் காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி, அவனின் பெற்றோர்கள் அவனின் பள்ளிப்படிப்பையே நிறுத்தி விட்டார்களோ என்னவோ! 

என்னுடன் அதே பள்ளியில் படித்த மணி என்பவன் பள்ளிக்கு வராமல் சண்டித்தனம் செய்ய, அவன் அப்பா அவனை ஒரு [ Walking Stick ] குடைக் கம்பால் தெருவில் அடித்துக்கொண்டே ஆடு மாடு ஓட்டுவது போல ஓட்டிவந்து பள்ளியில் விட்டுச்செல்வார். 


அதை என்னிடம் சுட்டிக் காட்டி என் அக்கா, “நீ சமத்து, அவன் அசடு, அதனால் தான் அவன் அடி வாங்குகிறான்” என்று ஏதேதோ சமாதானமாக ஆறுதல் சொல்லி நைஸாக பள்ளியில் டீச்சர் அருகே உட்கார வைத்து விட்டுச் சென்று விடுவாள்.  

இந்தப் பட்டம்மாள் டீச்சர் வராத நாட்களில் அடுத்த வகுப்பு எடுக்கும் “சிவா வாத்யார்” என்ற குள்ளமான ஒருவர், இரண்டு வகுப்புக்களையும் சேர்த்தே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, “வாத்து வாத்து ....... வாத்து! எங்கே நீ போறே? குளத்துக்குப்போறேன் ......” என்று கேள்வி பதிலாக ஒரு பாட்டுப்பாடி தானே வாத்தாக மாறி, குனிந்து வாத்து நடை போட்டு, எங்களையும் கோரஸாக பாடச்சொல்லி, மகிழ்வித்தது நன்றாக நினைவில் உள்ளது.


அதே ஆரம்பப்பள்ளியில் குப்புராஜுலு என்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரிடம் நான் நேரிடையாக படிக்கவில்லை என்றாலும் அவரின் முகத்தைப்பார்த்தாலே எனக்கு சற்று பயமாக இருந்து வந்தது. சற்று குண்டாக இருப்பார். வெயில் ஏறஏற அவர் முகம் சிவந்து ஜொலிக்க ஆரம்பித்து விடும். அவரை நான் பார்க்க நேரிடும் போது, ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தை நேரில் கண்டது போல எனக்குள் ஓர் கலவரம் ஏற்படும்.  


வெங்கடாசலம் என்பவர் ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.  வெறும் ஆசிரியரான இருந்திருக்கும் அவரை, அவர் தலையில் யாரோ வெள்ளைப் பெயிண்ட் டின்னை கவிழ்த்துக்கொட்டி, தலை’மை’ [வெண்மை] ஆசிரியராக ஆக்கியிருப்பார்களோ என நான் அடிக்கடி நினைத்ததுண்டு. 


அவர் தலை முழுவதும் தும்பைப்பூ போல ஒரேயடியாக நரைத்துப்போய் வெள்ளை முடிகளாகவே இருக்கும்.  அழுக்கு வேஷ்டியும், அழுக்குச்சட்டையும் அணிந்து கொண்டு இருப்பார். பள்ளியின் தலைமையாசிரியர் என்று யாராவது சொன்னால் தான் தெரிய வரும். அன்றைய ஆசிரியர்களின் ஏழ்மை நிலை அவ்வாறு இருந்திருக்கும்.

என் இரண்டாம் வகுப்பு: லெக்ஷ்மண வாத்யார் என்பவரிடம்.

என் மூன்றாம் வகுப்பு: கந்தசுப்ரமணிய வாத்யார் என்பவரிடம்.

என் நான்காம் வகுப்பு: ஐயங்கார் வாத்யார் என்பவரிடம். 


இவர் மிகவும் கோபக்காரர். நெற்றியில் நாமம் குழைத்து இட்டுக்கொண்டு, எப்போதுமே ஒரே கடுகடுப்பாக, கருப்பாய் இருப்பார். இருப்பினும் என்னிடமும், நமச்சிவாயம் என்ற பையனிடமும் அன்பாகவே இருந்து வந்தார். எங்கள் இருவரையும் திருப்பாவை, திருவெம்பாவை மனப்பாடம் செய்ய வைத்து, திருச்சி மலைக்கோயிலில் ஏதோ ஒரு ஒப்பித்தல் போட்டிக்கு அழைத்துச் சென்றதும், வழியில் ஒரு ஹோட்டலில் கேசரி+பஜ்ஜி வாங்கித்தந்ததும் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

என் ஐந்தாம் வகுப்பு: நாடார் வாத்யார் என்பரிடம். 


அவர் நெற்றியில் பொட்டு வைத்தாற்போல ஒரு பெரிய மச்சம் [பாலுணி] இருக்கும். பார்க்க பெருந்தலைவர் காமராஜர் போல இருப்பார். செம்பருத்திப்பூக்களை நிறைய பறித்து வந்து தன் மேஜையில் வைத்துக்கொண்டு, அடிக்கடி அவற்றை ஒவ்வொன்றாக மென்று சாப்பிடுவார்.

இவ்வாறு ஐந்து வகுப்புகள் முடிவதற்குள் பெருக்கலில் 16 ஆம் வாய்ப்பாடு வரை ராகத்துடன் [16 x 16 = 256 வரை] என்னால் நன்கு பழகிட முடிந்தது.


எதையுமே ஒரு இராகத்துடன் பாட்டாக அதுவும் எல்லோரும் சேர்ந்து கூட்டாகச் சொல்லும் போது சுலபமாக மனதில் பதிவதுண்டு. 


உதாரணமாக, நான் ஒண்ணாவது இரண்டாவது படிக்கும் போது சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு வேடிக்கையான பாடல் இதோ இங்கே:


1+1=2 ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு - ஜப்பான் காரன் குண்டு


2+1=3 ரெண்டும் ஒண்ணும் மூணு - ஐயா வீட்டுத் தூணு [தூண்=Pillar]


3+1=4 மூணும் ஒண்ணும் நாலு - கருப்பு நாயி[ன்] வாலு


4=1=5 நாலும் ஓண்ணும் அஞ்சு - பாட்டி தலை பஞ்சு


5+1=6 அஞ்சும் ஒண்ணும் ஆறு - ரோட்டுல ஓடுது காரு


6+1=7 ஆறும் ஒண்ணும் ஏழு - அம்மா தந்த கூழு


7+1=8 ஏழும் ஒண்ணும் எட்டு - மாமி தந்த புட்டு


8+1=9 எட்டும் ஒண்ணும் ஒம்போது - வெத்தல பாக்கு திம்போது [தின்பது]


9+1=10 ஒம்போதும் ஒண்ணும் பத்து - உன் வாயக் கொஞ்சம் பொத்து !
  




நாளையும் தொடரும்

63 கருத்துகள்:

  1. பள்ளிக் கால நினைவுகள் சூப்பராக போகுது சார்....எல்லாவற்றையும் இப்போது நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம் தான். பாட்டு ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. எதையுமே ஒரு இராகத்துடன் பாட்டாக அதுவும் எல்லோரும் சேர்ந்து கூட்டாகச் சொல்லும் போது சுலபமாக மனதில் பதிவதுண்டு.


    உண்மைதான் ..

    வாய்ப்பாடு மனப் பாடம் செய்யச் சொல்லியே என்பிள்ளைகளுக்கு நான் எதிரியாகிப்போனேன்..

    அவர்கள் கால்குலேட்டரும் சயின்டிபிக் கால்குலேட்டரும்தான் உபயோகிக்கிறார்கல்..

    பதிலளிநீக்கு
  3. நான் கண்களில் கண்ணீருடன் செய்வதறியாது என் அக்காவை ஏக்கத்துடன் பார்ப்பேன்

    என் மகன்கள் என் வளையலைக் கோர்த்து கையில் பிடித்துக்கொண்டு நகரவிடமாட்டார்கள்.. நான் நான்கைந்து வருடம் எல்.கே.ஜி பிள்ளைகளுடன் அமர்ந்து ஹிந்தி கற்றுக்கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் மீண்டும் பள்ளிக்குப் போகமுடிந்தால் அங்கிருந்து இப்போதைய வாழ்க்கைக்குத்திரும்ப ஒரு போதும் இசைய மாட்டோம்...

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.உங்கள் எழுத்து நடையில் படிக்கும் பொழுது சொல்லவா வேண்டும்?

    பதிலளிநீக்கு
  6. 1+1=2 ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு - ஜப்பான் காரன் குண்டு


    2+1=3 ரெண்டும் ஒண்ணும் மூணு - ஐயா வீட்டுத் தூணு [தூண்=Pillar]


    3+1=4 மூணும் ஒண்ணும் நாலு - கருப்பு நாயி[ன்] வாலு


    4=1=5 நாலும் ஓண்ணும் அஞ்சு - பாட்டி தலை பஞ்சு


    5+1=6 அஞ்சும் ஒண்ணும் ஆறு - ரோட்டுல ஓடுது காரு


    6+1=7 ஆறும் ஒண்ணும் ஏழு - அம்மா தந்த கூழு


    7+1=8 ஏழும் ஒண்ணும் எட்டு - மாமி தந்த புட்டு


    8+1=9 எட்டும் ஒண்ணும் ஒம்போது - வெத்தல பாக்கு திம்போது [தின்பது]


    9+1=10 ஒம்போதும் ஒண்ணும் பத்து - உன் வாயக் கொஞ்சம் பொத்து !
    //

    ஆஹாஹா..சூப்பரான பாட்டாக அல்லவா இருக்கின்றது.இந்த பாடலை இப்ப திரும்ப திரும்ப வாசித்ததில் மனப்பாடம் ஆகி விட்டது.

    தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  7. அருமை... உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு பெரிய பூங்கொத்து.

    அதுவும் பாடல் தான் க்ளாசிக்.... இன்னமும் உங்களுக்கு நினைவிருக்கிறதே - அதிலிருந்தே தெரிகிறதே நீங்கள் சொல்வது போல பாடல் மூலம் அனைத்தையும் நினைவிலிருத்த முடியும் என்பது
    .

    பதிலளிநீக்கு
  8. //இந்த மடிசார் அந்த மடிசாரிடம் என்னை ஒப்படைத்து விட்டு வெளியே போக முயற்சிக்கும். நான் கண்களில் கண்ணீருடன் செய்வதறியாது என் அக்காவை ஏக்கத்துடன் பார்ப்பேன்.//

    படப்பிடிப்பாய் எழுத்துக்களை எழுதுவது என்றால் இது தான்!

    //சற்று குண்டாக இருப்பார். வெயில் ஏறஏற அவர் முகம் சிவந்து ஜொலிக்க ஆரம்பித்து விடும். //

    ஹஹ்ஹஹா..

    //குழந்தையின் கடுக்கன்களும் மூக்குத்தியும் காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி, அவனின் பெற்றோர்கள் அவனின் பள்ளிப்படிப்பையே நிறுத்தி விட்டார்களோ என்னவோ! //

    என்ன ஒரு சந்தேகம்!

    //செம்பருத்திப்பூக்களை நிறைய பறித்து வந்து தன் மேஜையில் வைத்துக்கொண்டு, அடிக்கடி அவற்றை ஒவ்வொன்றாக மென்று சாப்பிடுவார்.//

    என்ன ஒரு ஆப்ஸர்வேஷன்! அதுவும் இன்றும் நினைவில் நிற்கிற மாதிரி!

    ஜோர்! தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. // “வாத்து வாத்து ....... வாத்து! எங்கே நீ போறே? குளத்துக்குப்போறேன் ......” என்று கேள்வி பதிலாக ஒரு பாட்டுப்பாடி தானே வாத்தாக மாறி, குனிந்து வாத்து நடை போட்டு, எங்களையும் கோரஸாக பாடச்சொல்லி, மகிழ்வித்தது நன்றாக நினைவில் உள்ளது.// ரசமான அனுபவனம் தான்!

    பதிலளிநீக்கு
  10. எதையுமே ஒரு இராகத்துடன் பாட்டாக அதுவும் எல்லோரும் சேர்ந்து கூட்டாகச் சொல்லும் போது சுலபமாக மனதில் பதிவதுண்டு.


    எளிய வழியில் கற்க உண்மையிலேயே
    சிற்ந்த முறை- மிகவும் இரசித்துப் படித்தேந் காத்திருக்கிறேன்
    -காடரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  11. எதையுமே ஒரு இராகத்துடன் பாட்டாக அதுவும் எல்லோரும் சேர்ந்து கூட்டாகச் சொல்லும் போது சுலபமாக மனதில் பதிவதுண்டு.


    எளிய வழியில் கற்க உண்மையிலேயே
    சிற்ந்த முறை- மிகவும் இரசித்துப் படித்தேந் காத்திருக்கிறேன்
    -காடரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  12. அருமையான மலரும் நினைவுகள்;தொடர் பதிவு,தொடரும் பதிவு1

    பதிலளிநீக்கு
  13. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.உங்கள் எழுத்து நடையில் படிக்கும் பொழுது சொல்லவா வேண்டும்?

    பதிலளிநீக்கு
  14. செம இண்டரஸ்டிங்கா போயிகிட்டு இருக்கு.. ஒரு புக்காவே போடலாமே சார்..:)

    பதிலளிநீக்கு
  15. என் கண் முன்னும் பழைய நினைவுகளை
    கொண்டு வந்து சேர்த்தது
    தங்கள் ஞாபக சக்தி பிரமிப்பூட்டுகிறது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. ஒன்றாம் வகுப்பு ஆசிரியையும் மடிசாரில் வந்திருக்காங்களே!உங்கள் நினைவு சக்தி ஆச்சர்யப்பட வைக்கிறது.வாய்ப்பாடு பாட்டு சூப்பர்.

    பதிலளிநீக்கு
  17. நான் உங்களை இந்த தொடருக்கு அழைத்த நோக்கம் நிறைவேறி கொண்டிருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம் உங்கள் போன்ற பெரியவர்களை கூப்பிட்டு எழுதச் சொன்னால் வித விதமான அனுபவங்களை படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தான் அந்த நோக்கம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. நன்றி.

    இந்த பதிவில் அழகான பாட்டு சொல்லி முடித்து இருப்பது மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
  18. ஞாபகம் வருதே ... ஞாபகம் வருதே...
    அருமையான அந்த நாள் ஞாபகம் வருதே...இதை படிக்கும் போது மனசு மகிழ்கிறதே...

    பதிலளிநீக்கு
  19. சுவாரஸ்யமாக இருக்கிறது.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் வை.கோ - அருமையான மலரும் நினைவுகள் - பால்ய வயது நினைவுகள் நமக்கு மறக்கவே மறக்காது. எபோழுது வேண்டுமானாலும் அசை போட்டு மகிழலாம். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  21. //மடிசார் புடவையில் இருப்பார்கள்.//

    ஆஹா!! இப்படியெல்லாம் ஆசிரியர்களா அக்காலத்தில்!!!

    //இந்த மடிசார் அந்த மடிசாரிடம் என்னை ஒப்படைத்து விட்டு வெளியே போக முயற்சிக்கும்.
    //

    :)))))))

    //மணி என்பவன் பள்ளிக்கு வராமல் சண்டித்தனம் செய்ய, அவன் அப்பா அவனை ஒரு [ Walking Stick ]
    குடைக் கம்பால் தெருவில் அடித்துக்கொண்டே ஆடு மாடு ஓட்டுவது போல ஓட்டிவந்து பள்ளியில்
    விட்டுச்செல்வார்.
    //

    :(( அக்கால பெற்றோர்கள் ரொம்பவும் மோசம் :((

    //“வாத்து வாத்து ....... வாத்து! எங்கே நீ போறே? குளத்துக்குப்போறேன் ......” என்று கேள்வி
    பதிலாக ஒரு பாட்டுப்பாடி தானே வாத்தாக மாறி, குனிந்து வாத்து நடை போட்டு, எங்களையும்
    கோரஸாக பாடச்சொல்லி, மகிழ்வித்தது நன்றாக நினைவில் உள்ளது.//

    மனக் கண் முன் விரிகிறது... :)

    //அன்றைய ஆசிரியர்களின் ஏழ்மை நிலை அவ்வாறு இருந்திருக்கும்.//

    ஹ்ம்ம்ம்... :|

    //திருச்சி மலைக்கோயிலில் ஏதோ ஒரு ஒப்பித்தல் போட்டிக்கு அழைத்துச் சென்றதும்,
    வழியில் ஒரு ஹோட்டலில் கேசரி+பஜ்ஜி வாங்கித்தந்ததும் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.//

    அந்த சின்ன வயதில் அதெல்லாம் பெரிய விஷயமாக இருந்திருக்கும்....
    குறிப்பாக கேசரி பஜ்ஜி :DDDDD

    //செம்பருத்திப்பூக்களை நிறைய பறித்து வந்து தன் மேஜையில் வைத்துக்கொண்டு,
    அடிக்கடி அவற்றை ஒவ்வொன்றாக மென்று சாப்பிடுவார்.//

    anemic ஆக இருந்திருப்பாரோ!?

    //ஒரு வேடிக்கையான பாடல் இதோ இங்கே://

    நன்றாக இருக்கு சார்....very clever method of teaching!!!

    பதிலளிநீக்கு
  22. என்ன ஒரு அழகான அசை போடல்!
    அருமை! அருமையிலும் அருமை!!

    பதிலளிநீக்கு
  23. இவ்வாறு ஐந்து வகுப்புகள் முடிவதற்குள் பெருக்கலில் 16 ஆம் வாய்ப்பாடு வரை ராகத்துடன் [16 x 16 = 256 வரை] என்னால் நன்கு பழகிட முடிந்தது.

    அருமையான மலரும் நினைவுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  24. வாய்ப்பாடு பாடலாக பாடி இருக்கின்றோம். ஆனால் உங்கள் பாடல் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  25. பள்ளி பருவ நினைவுகள் அருமை.
    பாடல் மிக மிக அருமை.

    பாட்டாய் படித்த காரணத்தால் இன்றும் நினைவில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  26. என்னவொரு ஞாபக சக்தி.பிரமிப்பாக இருக்கிறது. டீச்சர் பேரெல்லாம் பாடங்கள் பெயர் சொல்லி மட்டுமே பழகியிருக்கிறேன். பகிர்விற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  27. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ள எல்லோருக்கும் தனித்தனியே நன்றி தெரிவித்து ஓர் தனிப்பதிவே தந்துள்ளேன்.

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    தலைப்பு:

    இயற்கை அழகில் ’இடுக்கி’
    இன்பச் சுற்றுலா

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  28. ஆசிரியர்களின் பெயர்களை நினைவில் வைத்து சுவையாக எழுதியிருக்கீங்க.
    அந்த கூட்டல் வாய்ப்பாடிற்கான பாடல் அருமை. இன்றைய நாட்களிலும் உபயோக படும்படியாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  29. //RAMVI said...
    ஆசிரியர்களின் பெயர்களை நினைவில் வைத்து சுவையாக எழுதியிருக்கீங்க.
    அந்த கூட்டல் வாய்ப்பாடிற்கான பாடல் அருமை. இன்றைய நாட்களிலும் உபயோக படும்படியாக இருக்கு.//

    மிகவும் சந்தோஷம். நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  30. AMAZING!!!!!!!!!!!!!
    I APPRECIATE YOUR KEEN OBSERVATION SIR!!!!!!!!!
    ஒவ்வொரு வாத்தியாரின் பெயர்களும் அடையாளமும் எப்படி நினைவில் வைத்தீர்கள்.
    ஆமாம் உங்க பள்ளியில் ஒன்லி ஆண்கள் மட்டுமா ரெட்டை சடை போட்ட குட்டி பெண்களெல்லாம் இல்லையா :))
    கூட்டல் வாய்ப்பாடு நினைவிற்கொள்ள அருமை

    பதிலளிநீக்கு
  31. angelin said...
    //AMAZING!!!!!!!!!!!!!
    I APPRECIATE YOUR KEEN OBSERVATION SIR!!!!!!!!!
    ஒவ்வொரு வாத்தியாரின் பெயர்களும் அடையாளமும் எப்படி நினைவில் வைத்தீர்கள்.

    ஆமாம் உங்க பள்ளியில் ஒன்லி ஆண்கள் மட்டுமா ரெட்டை சடை போட்ட குட்டி பெண்களெல்லாம் இல்லையா :))

    கூட்டல் வாய்ப்பாடு நினைவிற்கொள்ள அருமை//

    அன்புள்ள நிர்மலா,

    ஒரே மூச்சில் ஒரே நாளில் இந்தத்தொடரின் அனைத்து ஏழு பகுதிகளையும் மிகவும் ரசித்துப்படித்து விட்டு, அன்புடன் வருகை புரிந்து, அழகாகக் கருத்துக்கள் கூறியுள்ளது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    என் மனமார்ந்த நன்றிகள்.

    பிரியமுள்ள,
    கோபு


    [ரெட்டை சடை போட்ட குட்டி பெண்களையெல்லாம், ஆரம்பப்பள்ளியில், வகுப்பறையில் தனியாகத்தான் உட்கார வைப்பார்கள்.

    அவர்களுடன் அந்த சின்ன வயதில் எனக்கு எந்தப் பழக்கமும் இல்லாமல் இருந்திருக்கலாம்.

    VI Std to XI STD ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடத்தில் நான் படித்தேன்.

    அங்கு பெண்கள், மருந்துக்கூட கிடையாது ;((((( vgk]

    பதிலளிநீக்கு
  32. படிக்க படிக்க சந்தோஷாமாக இருக்கிறது சார்! எனக்கும் எனது பள்ளி நினைவுகள் நியாபகம் வருகிறது! எனது பள்ளி நாட்களிலும் நானும் ஆசிரியர்களை கண்டு பயந்தது உண்டு! நானும் அனைவரின் பெயரையும் நியாபகம் வைத்திருக்கிறேன்! ஆனால் உங்களைப்போல் இன்னும் பல வருடங்கள் கழித்து என்னால் பழையதை அப்படியே விவரிக்க முடியுமா என்று தெரியாது சார்! அத்தனை அருமை, தாங்கள் ஒரு சூழலை கவனிப்பதையும் அதை விவரிப்பதைய்ம் கண்டு வியக்கிறேன் சார்! இன்று எனது தம்பி(அம்மாவின் தங்கல் மகன்) பத்து வயதே நிரம்பிய அவனை பள்ளியில் சமாளிக்கவே முடியவில்லை என்று ஆசிரியர்(தெரிந்தவர் என்பதால்) அவனது அம்மாவிடம் நேரடியாக புழம்புகிறார்! அவன் படிப்பில் படு சுட்டி அனைத்து பாடத்திலும் 95- கு மேல் தான் ஆனால் குறும்பு தான் தாங்க முடியல என்ன செய்வதென்று தெரியவில்லை என்று சொல்கிறார்!

    காரணம் தெரியவில்லை இப்பத்து பசங்களுக்கு ஆசிரியர்கள் மேல் பயமும் இல்லை பணிவும் இல்லை, அதுதான் பயமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள யுவராணி,

      //படிக்க படிக்க சந்தோஷாமாக இருக்கிறது சார்!//

      எனக்கும் ரொம்பவும் சந்தோஷம்மா.

      //எனக்கும் எனது பள்ளி நினைவுகள் நியாபகம் வருகிறது! எனது பள்ளி நாட்களிலும் நானும் ஆசிரியர்களை கண்டு பயந்தது உண்டு! நானும் அனைவரின் பெயரையும் நியாபகம் வைத்திருக்கிறேன்! ஆனால் உங்களைப்போல் இன்னும் பல வருடங்கள் கழித்து என்னால் பழையதை அப்படியே விவரிக்க முடியுமா என்று தெரியாது சார்! அத்தனை அருமை, தாங்கள் ஒரு சூழலை கவனிப்பதையும் அதை விவரிப்பதைய்ம் கண்டு வியக்கிறேன் சார்!//

      நினைவாற்றலும், எழுத்துத்திறமையும் ஏதோ கொஞ்சம் கடவுள் கொடுத்த வரமாக எனக்கு அமைந்துள்ளது. அதுவும் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்குமோ தெரியவில்லை.

      //இப்பத்து பசங்களுக்கு ஆசிரியர்கள் மேல் பயமும் இல்லை பணிவும் இல்லை, அதுதான் பயமாக இருக்கிறது!//

      ஆமாம். காலம் மாறிப்போச்சு. குருபக்தி குறைவாகவே உள்ளது. படித்தால் மட்டும் போதாது. மாணவ/மாணவிகளுக்கு பணிவும் மிகவும் முக்கியம் தான்.

      தங்களின் கருத்துப்பகிர்வுக்கு என் நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  33. நல்ல சுவாரஸ்யமான ஞாபகங்கள். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
    கையில் பிடிப்பது செண்டு,தல்லல்லாலா லல்லல்லா,தல்லல்லாலாலல்லல்லா, மூணும்,மூணும்ஆறு,ஈக்கு ஆறுகாலு
    ,தல்,நாலும எட்டு நெற்றியில் வைப்பது பொட்டு,தல்,
    அஞ்சும் அஞ்சும் பத்து, கழுத்தில் போடுவது முத்து இப்படி
    ஒன்று யாருக்கும் தலை ஒன்று
    இரண்டு முகத்தின் கண்ரெண்டு
    உங்களைப் படிக் வந்து நானும் அதில் மூழ்கி விடுகிரேன்
    ஃபஸ்ட் க்ளாஸ் உங்களுடயது.

    பதிலளிநீக்கு
  34. Kamatchi December 14, 2012

    வாங்கோ மாமி. நமஸ்காரம்.

    தாங்கள் எழுதியுள்ள பாட்டும் அழகாகவே உள்ளது.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்
    கோபாலகிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  35. எல்லோரையும் அவரவர்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வைத்துள்ளீர்கள்.
    உங்கள் பாட்டையும், காமாட்சி மாமியின் பாட்டையும் காப்பி, பேஸ்ட் பண்ணிக் கொண்டேன்....பேரன்களுக்கு சொல்லித்தரத்தான்!

    அருமை! அடுத்த பதிவுக்குப் போகிறேன்!

    பதிலளிநீக்கு
  36. Ranjani Narayanan December 17, 2012 12:11 AM

    வாங்கோ திருமதி ரஞ்ஜனி மேடம். வணக்கம்.

    //எல்லோரையும் அவரவர்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வைத்துள்ளீர்கள்.//

    ஆமாம். பலருக்கும் அவர்களின் பள்ளி வாழ்க்கை ஞாபகம் வரலாம்.

    //உங்கள் பாட்டையும், காமாட்சி மாமியின் பாட்டையும் காப்பி, பேஸ்ட் பண்ணிக் கொண்டேன்....பேரன்களுக்கு சொல்லித்தரத்தான்!
    //
    ஆஹா ரொம்பவும் சந்தோஷம்.

    //அருமை! அடுத்த பதிவுக்குப் போகிறேன்!//

    சரி, போங்கோ .... மிக்க நன்றி. அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  37. உண்மையிலேயே உங்களுக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிக. ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு டீச்சர்ஸ் சார்ஸ் சொல்லித்தந்த பாடல் எல்லாமும் நினைவு வச்சிருக்கீங்க. வாய்ப்பாடு மனனம் பண்ணி அதுவும் இப்பவரயிலும் நினைவிலேயே இருக்கும் இல்லியா.அந்தக்கால படிப்பு மிகவும் அர்த்தமுள்ளதாகத்தான் இருந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  38. பூந்தளிர் April 2, 2013 at 8:00 AM

    வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

    //உண்மையிலேயே உங்களுக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிகம். ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு டீச்சர்ஸ் சார்ஸ் சொல்லித்தந்த பாடல் எல்லாமும் நினைவு வச்சிருக்கீங்க. வாய்ப்பாடு மனனம் பண்ணி அதுவும் இப்பவரயிலும் நினைவிலேயே இருக்கும் இல்லியா.//

    அவைகள் என்றுமே மறக்க முடியாத நாட்கள்.

    குழந்தைகளுக்கு அவர்களின் ஏழு வயதுக்குள் எவ்வளவு விஷயங்களை அவர்களின் மூளையில் திணிக்க முடியுமோ அவ்வளவு விஷயங்களையும் திணித்து விட வேண்டுமாம்.

    அந்தக்காலக்கட்டத்தில் தான் நிறைய விஷயங்களை சுலபமாகக் கிரஹித்துக்கொண்டு, நினைவில் அப்படியே அருமையாக அவை பதிந்து போய், வாழ்நாள் முழுவதும் அது மறக்காமல் இருக்குமாம். சமீபத்தில் ஆராய்ந்து சொல்லியுள்ளார்கள்.

    //அந்தக்கால படிப்பு மிகவும் அர்த்தமுள்ளதாகத்தான் இருந்திருக்கு.//

    அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இன்றும் என்னால் ஒரு மிகப்பெரிய கணக்கு எழுதும் லெட்ஜரில், ஆயிரக்கணக்கான எண்களை, கால்குலேட்டர் ஏதும் இன்றி, தவறேதும் இல்லாமல், மிகச்சுலபமாக, மிக வேகமாக கூட்ட முடியும்.

    அதுபோலவே கழித்தல், பெருக்கல், வகுத்தல், மனக்கணக்குகள், பின்னங்கள் எல்லாமே, கால்குலேட்டர் ஏதும் இன்றி என்னால் செய்ய முடியும்.

    இன்று மிகப்பெரிய படிப்புகள் படித்தவனால் கூட அதுபோலெல்லாம் செய்யவே முடியாது.

    நாலும் மூணும் எவ்வளவு என்று கேட்டாலே, கால்குலேட்டர் அவசியம் தேவைப்படும் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  39. நினைவு வைச்சுக்க அருமையான பாடல். நல்லா ஞாபகமும் வைச்சிருக்கீங்க. அருமையான தொடக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam January 14, 2014 at 8:47 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நினைவு வைச்சுக்க அருமையான பாடல். நல்லா ஞாபகமும் வைச்சிருக்கீங்க. அருமையான தொடக்கம்.//

      மிகவும் சந்தோஷம் + நன்றிகள்.

      நீக்கு
  40. பதில்கள்
    1. Geetha Sambasivam January 14, 2014 at 8:48 PM

      //மிச்சத்துக்கு நாளைக்கு!//

      சரி, சரி, OK OK மிக்க நன்றி.

      நீக்கு
  41. உங்கள் பள்ளி அனுபவம் அருமை....ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் பேர் கூட எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கு?

    ஐயங்கார் வாத்தியார்,நாடார் வாத்தியார் ....அந்தக் காலத்தில் ஜாதியின் பெயரில் மக்களைக் குறிப்பிடும் வழக்கத்தை சொல்லியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  42. Radha Balu May 23, 2014 at 4:04 PM

    வாங்கோ, வணக்கம்.

    //உங்கள் பள்ளி அனுபவம் அருமை....ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் பேர் கூட எப்படி உங்களுக்கு ஞாபகம் இருக்கு?//

    டீச்சர் பெயர் மட்டுமல்ல. அவர்களின் சிரித்த முகமும், சிகப்பான குண்டு மூஞ்சியும் கூட இன்னும் ஞாபகத்தில் உள்ளது. முதன் முதலாக எனக்குப்பாடம் சொல்லிக்கொடுத்த டீச்சர் அல்லவா! அதனாலும் இருக்கலாம். பொதுவாகவே எனக்கு ஞாபகசக்தி [முன்பெல்லாம்] அதிகம் என பிறர் சொல்லுவார்கள். இப்போதும் கூட சிலவற்றை மட்டும் நான் நன்னா ஞாபகத்தில் வைத்துக்கொள்வது உண்டு. ;)

    //ஐயங்கார் வாத்தியார்,நாடார் வாத்தியார் ....அந்தக் காலத்தில் ஜாதியின் பெயரில் மக்களைக் குறிப்பிடும் வழக்கத்தை சொல்லியுள்ளீர்கள்//

    இருக்கலாம். ஸ்கூலில் எல்லோருமே அப்படித்தான் அவர்களை அந்தக்காலக்கட்டத்தில் அடையாளம் சொல்வோம்.

    வருகைக்கு மிக்க நன்றி. - VGK

    பதிலளிநீக்கு
  43. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (S'inscrire à ce site
    avec Google Friend Connect)

    பதிலளிநீக்கு
  44. //ன் குருவான பட்டம்மா டீச்சர் ஒருவேளை இன்றும் எங்காவது உயிருடன் இருந்தால் அவர்களுக்கு வெறும் 108 வயது தான் இருக்கும். அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது. // கண்டிப்பாக சந்திக்கலிம். சந்திக்கும்போது திரும்பவும் உங்களுக்கு பாடம் எடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  45. மடிசார் டீச்சர பத்தி படிச்சதும் நான் செஞ்சது ஞாபகத்துக்கு வருது. இல்ல அம்மாதான் ஞாபகப் படுத்தினா

    என்னோட ஒண்ணாங்கிளாஸ் டீச்சர் மடிசார் கட்டி இருப்பாளாம். நான் எனக்கு மடிசார் டீச்சர் வேண்டாம்ன்னு அழுது எங்க அக்கா க்ளாசுக்கு போறேன்னு அழுவேனாம்.

    பதிலளிநீக்கு
  46. ஒன்னாப்பு ரண்டாப்பு சோட்டுகார இப்பகூட நெனப்புல இருக்குதா. இன்னா நெனவு சக்தி.

    பதிலளிநீக்கு
  47. நா இந்த வாய்ப்பாடு எப்பூடி படிச்சிகிடாம வுட்டுபிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 23, 2015 at 11:02 AM

      வாங்கோ, முருகு, வணக்கம்மா.

      //நா இந்த வாய்ப்பாடு எப்பூடி படிச்சிகிடாம வுட்டுபிட்டேன்//

      அது எப்படி எனக்குத்தெரியும்? இதுபோல எவ்வளவு நல்ல நல்ல விஷயங்களைக் கோட்டை விட்டிருக்கீங்களோ ! :)

      நீக்கு
  48. மடிசார்கட்டிய டீச்சரம்மாவை இப்பகூட நினைவில் வச்சிருக்கீங்க. வாய்ப்பாடு நல்லா மனனம் பண்ணினாலே கணக்குப்பாடம் சுலபமா போட்டுடலாம்தான். ஒவ்வொரு அனுபவமும் ரசனை மாறாம சொல்லி வருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  49. இவ்வாறு ஐந்து வகுப்புகள் முடிவதற்குள் பெருக்கலில் 16 ஆம் வாய்ப்பாடு வரை ராகத்துடன் [16 x 16 = 256 வரை] என்னால் நன்கு பழகிட முடிந்தது.// பதினானாறு-பதினானாறு எறநூத்தம்பத்தாதாருரு...என்று ராகமா சொன்னது இப்பவும் ஞாபகம் வருது வாத்யாரே. இப்பவெல்லாம் 10டன் முடிச்சுக்குறாங்க..கால்குலேட்டர வச்சுகுட்டு தப்பு தப்பா கணக்கு போடுறாங்க.

    பதிலளிநீக்கு
  50. எப்படி எல்லா வாத்தியார் பெயர்கள்+ அவங்க டிரஸ் எல்லாம் இப்பவும் நினைவில் வச்சிருக்கீங்களே.. க்ரேட்.. ஓன்னும் ஒன்னும் ரெண்டு சூப்பரா இர்க்கு...இதை மட்டும் காப்பி பண்ணி என் பக்கம் போட உங்க பர்மிஷன் கிடைக்குமா.????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆல் இஸ் வெல்....... June 4, 2016 at 10:07 AM

      வாங்கோ, வணக்கம்.

      //எப்படி எல்லா வாத்தியார் பெயர்கள் + அவங்க டிரஸ் எல்லாம் இப்பவும் நினைவில் வச்சிருக்கீங்களே.. க்ரேட்..//

      :) மிக்க மகிழ்ச்சி. :)

      //ஓன்னும் ஒன்னும் ரெண்டு சூப்பரா இர்க்கு...இதை மட்டும் காப்பி பண்ணி என் பக்கம் போட உங்க பர்மிஷன் கிடைக்குமா.????//

      தாராளமாக தங்கள் வலைத்தளத்தினில் வெளியிட்டுக் கொள்ளவும். என்னுடைய இந்தப்பதிவின் இணைப்பையும் அங்கு கொடுத்து விடவும்.

      கடந்த 4-5 நாட்களாக என் கம்ப்யூட்டரில் மேஜர் ரிப்பேர்கள் ஆனதால் அதனை நான் சர்வீஸுக்கு அனுப்பி இருந்தேன். இன்றுதான் ஒருவழியாகத் திரும்பக் கிடைத்தது. அதனால் பதில் எழுத தாமதம் ஆகிவிட்டது.

      நீக்கு
  51. எப்படி உங்கள் 1ம் வகுப்பு ஆசிரியர் முதற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்? நான் படித்த காலத்து, 'பஞ்சகச்சம்/மடிசார்'லாம் போட்டுண்டு ஒரு ஆசிரியரும் இருந்ததில்லை (ஆனால் எங்க பெரியப்பா, கல்லூரி ப்ரொஃபசர், பஞ்ச கச்சம், கோட், குடுமி என்ற ஹோதாவில்தான் 80வரை வேலை பார்த்துக்கொண்டிருந்தார்). எனக்கு அதிகபட்சம் 4ம் வகுப்பு டீச்சர், வாத்தியார், ஹெட் மாஸ்டர் பெயர்கள்தான் ஞாபகம் இருக்கு.

    உங்களிடம் கடு கடுன்னு இருக்கற வாத்தியார்களெல்லாம் ஐயங்கார்களாக இருக்காங்க. (ஒருவேளை பக்கத்துல ஸ்ரீரங்கம் என்பதால் இருக்குமோ?)

    உங்கள் 1ம் வகுப்பு பாடலைப் படித்தவுடன், எனக்கு 1ம் வகுப்பில், 'ஓரொண் ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு, மூவொண்ணு மூணு' என்று 12ம் வாய்ப்பாடு வரை, ஸ்கூல் ஆரம்பிப்பதற்கு முன்பு, எல்லோரும் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது (பரமக்குடி. உங்களை மாதிரி ஒரே ஊரில் எல்லாப் படிப்பையும் படிக்க எனக்குக் கொடுத்துவைக்கலையே. முதுகலை வரை, நான் 6 வெவ்வேறு மாவட்டங்களில் படித்தேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் January 24, 2018 at 7:28 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எப்படி உங்கள் 1ம் வகுப்பு ஆசிரியர் முதற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்?//

      என் 1-ம் வகுப்பு ஆசிரியை மட்டுமே ஒரு லேடி + மடிசார் மாமி. 1954-55 லேயே அவர்களுக்கு சுமாராக ஒரு ஐம்பது வயது இருக்கலாம். புதிதாகப் பிளந்த பறங்கிப்பழம் போன்ற ஓர் சிவந்த நிறம் + சிரித்த முகம் + குண்டு மூஞ்சி. அதனால் இன்னும் என்னால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்துள்ளது. 2-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை எனக்கு ஆண்கள் மட்டுமே வகுப்பு ஆசிரியராக இருந்துள்ளனர்.

      //நான் படித்த காலத்து, 'பஞ்சகச்சம்/மடிசார்'லாம் போட்டுண்டு ஒரு ஆசிரியரும் இருந்ததில்லை//

      நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது, மடிசார் புடவையுடன் இருந்தது இந்த ஒரே ஒரு டீச்சர் மட்டுமே. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது தாங்கள் சொல்வது போன்ற பஞ்சகச்சம் கட்டிய வாத்யார்களில் சிலரை மட்டும் நான் பார்த்துள்ளேன். அவர்களில் யாரும் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தது இல்லை.

      //(ஆனால் எங்க பெரியப்பா, கல்லூரி ப்ரொஃபசர், பஞ்ச கச்சம், கோட், குடுமி என்ற ஹோதாவில்தான் 80வரை வேலை பார்த்துக்கொண்டிருந்தார்).//

      நான் படித்த பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியராக இருந்த பூவராஹ ஐயங்கார் என்பவரும் பஞ்சகச்சம், கோட், தலையின் உள்ளே சிகை + வெளியே வெள்ளை டர்பன், நெற்றியில் நாமம் போன்ற ஹோதாவுடன், காது செவிடானதால் மெஷின் வைத்துக்கொண்டு, சற்றே குள்ளமாக (முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ஹ ராவ் போல) இருந்தவர் மட்டுமே.

      //எனக்கு அதிகபட்சம் 4ம் வகுப்பு டீச்சர், வாத்தியார், ஹெட் மாஸ்டர் பெயர்கள்தான் ஞாபகம் இருக்கு.//

      அதுவே மிகப் பெரிய விஷயமாச்சே ! பாராட்டுகள்.

      //உங்களிடம் கடு கடுன்னு இருக்கற வாத்தியார்களெல்லாம் ஐயங்கார்களாக இருக்காங்க. (ஒருவேளை பக்கத்துல ஸ்ரீரங்கம் என்பதால் இருக்குமோ?)//

      இருக்கலாம். நான் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் போது, திரு. இராமானுஜம் என்று ஓர் ஆசிரியர் இருந்தார். அவரும் ஓர் ஐயங்கார் மட்டுமே. தலையில் சிகையுடன், பஞ்சக்கச்சத்துடன், முழுக் கை ப்ளைன் கலர் சட்டையுடன், நெற்றியில் நாமத்துடன், நல்ல சிகப்பாக அழகாக, உயரமாக, டீஸண்ட் லுக்குடன் வருவார். இளம் வயதான அவர் மிகவும் நல்லவர் + கண்ணியமானவர். ஆங்கிலமும், கணிதமும் மிக அழகாக நடத்துவார். அவரை பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.

      ஆனால், என் துரதிஷ்டம், எனக்கு, அவர் வகுப்பு ஆசிரியராக இருக்கும் செக்‌ஷனில் என்னால் படிக்க முடியாமல் போய் விட்டது. என்னை பள்ளி நிர்வாகம் 10th & 11th போட்டது 'D' Section இல். அவரோ 'B' Section க்கு வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவர் சொல்லிக்கொடுக்கும் பாடங்கள் English Essay Writing முதலியன, சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்கும். முழுப்பரீட்சைக்கு முன்பு, அங்கு அவரிடம் படிக்கும் பையன்களிடம் நான் அதனைக் கேட்டு வாங்கி எழுதி வைத்து மனப்பாடம் செய்வதும் உண்டு.

      //உங்கள் 1ம் வகுப்பு பாடலைப் படித்தவுடன், எனக்கு 1ம் வகுப்பில், 'ஓரொண் ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு, மூவொண்ணு மூணு' என்று 12ம் வாய்ப்பாடு வரை, ஸ்கூல் ஆரம்பிப்பதற்கு முன்பு, எல்லோரும் உட்கார்ந்து சொல்லிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது (பரமக்குடி. உங்களை மாதிரி ஒரே ஊரில் எல்லாப் படிப்பையும் படிக்க எனக்குக் கொடுத்துவைக்கலையே. முதுகலை வரை, நான் 6 வெவ்வேறு மாவட்டங்களில் படித்தேன்)//

      தமிழ்நாட்டிலேயே, தாங்கள் பல மாவட்டங்களில் படித்துள்ளதால், இன்று உலகில் பல நாடுகளில் வாழவும், பணியாற்றவும், உங்களால் முடிகிறது. நான் செக்குமாடு போல திரும்பத் திரும்ப திருச்சியிலேயே, ஒரே பள்ளியில் படித்து, திருச்சியிலேயே ஒரே கம்பெனியில் வேலை பார்த்து, திருச்சியிலேயே ஓய்வு பெற்று, திருச்சியிலேயே வாழ்ந்தும் வருகிறேன்.

      உங்களுடன் ஒப்பிடும்போது நான் ஒரு கிணற்றுத்தவளை + ஊர்க்குருவி மட்டுமே என்பது எனக்கும் நன்றாகவே புரிகிறது. :)

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. //நான் ஒரு கிணற்றுத்தவளை + ஊர்க்குருவி மட்டுமே// - கோபு சார்.. இந்த வரிகளை, விளையாட்டுக்குக்கூட நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். என் திருப்திக்காக, இந்தப் பழமொழியைச் சொல்றேன்.

      பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்.

      அதுனால, பல ஊர்களுக்குப் போவதால் மட்டும் ஒருவன் பெரிய ஆளாக, எல்லாம் தெரிந்தவனாக இருக்க முடியாது.

      ஒரே ஊர்ல இருக்கறவங்க, ஊர் ஊரா அலையறவங்களைவிட எப்போதும் BETTER. அதுவும் இப்போ உலகமே கணிணிக்குள்ள இருக்கும்போது, எங்கிருந்தாலும் ஒன்றுதான். வெளிநாடுகளைப் பார்க்க பயணம் செய்திருப்பதாலும், பல கலாச்சாரங்கள் கொண்டவர்களுடன் பழகியிருப்பதாலும், கொஞ்சம் நாடுகளைப் பற்றியோ அல்லது மனிதர்களைப் பற்றியோ தெளிவு கொஞ்சம் அதிகமா இருக்கலாம்.

      நீக்கு
    3. நெல்லைத் தமிழன் January 25, 2018 at 1:19 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு நன்றி.

      **நான் ஒரு கிணற்றுத்தவளை + ஊர்க்குருவி மட்டுமே** - கோபு சார்..

      //இந்த வரிகளை, விளையாட்டுக்குக்கூட நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.//

      நீங்கள் ஒருவர் ஒத்துக்கொள்ளா விட்டாலும்கூட, இது உலகறிந்ததோர் உண்மையாச்சே, ஸ்வாமீ.

      //என் திருப்திக்காக, இந்தப் பழமொழியைச் சொல்றேன்: ’பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்’//

      அந்தப் பழமொழியை நான் கொஞ்சம் இப்படி மாற்றிப்பார்த்தேன்:

      ’பன்ருட்டியில், பலா மரம் கண்ட அச்சன், அதன் மிகப்பெரிய பழத்தினை வெட்டாமல் விடவே மாட்டான்’ :)

      //அதுனால, பல ஊர்களுக்குப் போவதால் மட்டும் ஒருவன் பெரிய ஆளாக, எல்லாம் தெரிந்தவனாக இருக்க முடியாது.//

      பல ஊர்களுக்கும் போகும், உங்களால் மட்டுமே, ஜெர்மனியில் உள்ள உலகத்தரம் வாய்ந்த கவிதாயினியில் ஆரம்பித்து, லண்டனில் உள்ள ஜாலிப் பதிவர்கள் வழியாக, உள்நாட்டு லோக்கல் சரக்குகள் வரை அனைத்துப் பதிவர்களின் பதிவுகளுக்கும் சென்று பாராட்டிக் கருத்தளிக்க முடிகிறது.

      சமீபத்தில் திடீரென்று மூனில் போய் இறங்கி அங்கும் பின்னூட்டக் கொடி நாட்டி விட்டு வந்துள்ள உங்களை அந்த அமெரிக்க விஞ்ஞானி 'நீல் ஆம்ஸ்ட்ராங்'குடன் ஒப்பிட்டுப் பார்த்து நான் மகிழ்ந்தேனாக்கும். :)))))

      //ஒரே ஊர்ல இருக்கறவங்க, ஊர் ஊரா அலையறவங்களைவிட எப்போதும் BETTER. //

      எல்லாமே ’இக்கரைக்கு அக்கரை பச்சை’ யாகவே தெரியக்கூடும்.

      //அதுவும் இப்போ உலகமே கணிணிக்குள்ள இருக்கும்போது, எங்கிருந்தாலும் ஒன்றுதான்.//

      இது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் மட்டுமே.

      //வெளிநாடுகளைப் பார்க்க பயணம் செய்திருப்பதாலும், பல கலாச்சாரங்கள் கொண்டவர்களுடன் பழகியிருப்பதாலும், கொஞ்சம் நாடுகளைப் பற்றியோ அல்லது மனிதர்களைப் பற்றியோ தெளிவு கொஞ்சம் அதிகமா இருக்கலாம்.//

      தங்களுக்குக் கவிதையோ, கதையோ, கட்டுரையோ, இசையோ, ராகமோ, தாளமோ, பல்லவியோ, இலக்கியமோ, இலக்கணமோ, சமையலோ எல்லாமே நன்கு அத்துப்படி ஆகியுள்ளது. I KNOW YOU ARE MASTER OF ALL SUBJECTS. இருப்பினும் எதையும் அதிகமாக வெளிக் காட்டிக்கொள்ளாமல், ராமபக்தியுள்ள ஆஞ்சநேய ஸ்வாமி போல, மிகவும் பெளவ்யமாக, தன்னடக்கத்துடன் உள்ளீர்கள்.

      குப்பைப் பதிவுகள் முதல் கோபுரப்பதிவுகள் வரை அனைத்துக்கும் பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டு, எல்லோர் மனதிலும் ஓர் நிரந்தர நீங்காத இடத்தினைப் பிடித்துக்கொண்டுள்ளீர்கள். தங்களைப் போன்ற இந்தப் பொறுமை எனக்குக் கொஞ்சமும் இல்லவே இல்லை என்பதில், எனக்கு சிறிது ஏக்கமும் உண்டு.

      அன்புடன் கோபு

      நீக்கு