என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 3 / 5]நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !

[சிறுகதை - பகுதி 3 / 5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்பக்கக் கதை முடிந்த இடம்:இமாம்பஸந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமேனியா என்று பலவித மாம்பழங்கள், பன்ருட்டிப் பலாப்பழம், சிறுமலை வாழைப்பழம் என்று மிகவும் ஒஸத்தியான பழங்களை அந்தந்த ஊர்களிலிருந்து வரவழைத்து மிகவும் ரஸித்து ருசித்து உண்பவள் என் மனைவி. அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றார், பெரியவர்.


=================================================


”ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் என் மனைவியின் கால் விரல் கிடுக்கினில் ஒருவித அரிப்பும் புண்ணும் [சேற்றுப்புண் போல] ஏற்பட்டு ஆறாமல் இருந்த நிலையில் டாக்டரிடம் கூட்டிச்சென்ற போது, ரத்தப்பரிசோதனை செய்ததில், சர்க்கரை வியாதி உள்ளது, அதுவும் மிகவும் அதிகமாக உள்ளது என்று கேள்விப்பட்டதும், நாங்கள் மிகவும் இடிந்து போனோம்.

ஏற்கனவே எனக்கும்,  இருக்க வேண்டிய சாதாரண சர்க்கரை அளவைத்தாண்டி ஓரளவுக்கு கூடுதலாக இருப்பதாகச் சொல்லி மாத்திரைகள் சாப்பிட்டு வர ஆரம்பித்திருந்த நேரம் அது.   

அன்று முதல் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆகாரங்கள் அனைத்துக்கும் தடை விதித்துக்கொண்டோம். மருந்து, மாத்திரைகள், ஊசி, உடற்பயிற்சிகள், ஆகாரக்கட்டுப்பாடு, ஆஸ்பத்தரி வாசம், மாதம் தவறாமல் ரத்தப்பரிசோதனை என அனைத்தும் ஆரம்பித்து, இன்ப மயமான, வாய்க்கு ருசியான, எங்கள் வாழ்க்கையே தொலைந்து போய் விட்டதாக உணர்ந்தோம்.


ஏதோ கொஞ்சமான உணவு, அடிக்கடி உணவு, அளவான உணவு, அடிக்கடி பசி, தாகம், களைப்பு, இதைச் சாப்பிடலாம், இதைச் சாப்பிடக்கூடாது என பலவித கட்டுப்பாடுகளில் கட்டுண்டு கிடக்க வேண்டியதாயிற்று. மொத்தத்தில் அதுவரை மிகவும் இனிமையாக இருந்த எங்கள் வாழ்க்கை எங்களுக்கே கசப்பாகத் தொடங்கி விட்டது; 


இந்த சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல. நம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கணையத்திலிருந்து சுத்தமாகச் சுரக்காமலோ அல்லது தேவையான அளவுக்கு சுரக்காமலோ உள்ள ஒரு குறைபாடு மட்டுமே;


இந்தப் பிரச்சனை ஒருவருக்கு வருவதற்கு இன்னதான் காரணம் என்று உறுதியாக யாராலும் சொல்லவே முடியாது. இன்ன வயதில் தான் இந்த குறைபாடு வந்து தாக்கும் என்றும் சொல்ல முடியாது. பெற்றோர்களுக்கு இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஜோஸ்யம் போல சொல்லுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை அதில் எந்த உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை;


எங்களுக்காவது எழுபது வயதிற்கு மேல் இது ஏற்பட்டுள்ளது. இப்போதெல்லாம் ஏழு வயதான பள்ளிக்குச்செல்லும் சிறு குழந்தைகளுக்கே காலையில் எழுந்ததும் இன்சுலின் ஊசி தினம் போட வேண்டிய சூழ்நிலைகளை நினைத்தால் மிகவும் பாவமாகவும், வருத்தமாகவும் உள்ளது;  


//இந்த சர்க்கரை நோய் வந்தால் கவலைப்பட ஒன்றுமே இல்லை. சுலபமாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.  அது நம் கையில் தான் உள்ளது; 


சர்க்கரை வியாதி வந்துள்ளது என்று தெரிந்து கொண்டு விட்டால், பிறகு அது நாம் உட்காரும் ஒரு நாற்காலி போல. நாற்காலிக்கு நான்கு கால்களும் + நாம் அமரும் இடமும், மிகவும் முக்கியமானவை அல்லவா! 


இதில் மாத்திரை மருந்து ஊசி என்பது நாற்காலியின் ஒரு கால் போல. மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்பது அதே நாற்காலியின் மற்றொரு கால் போல. உணவுக் கட்டுப்பாடு என்பது அதே நாற்காலியின் மூன்றாவது கால் போல. உடற்பயிற்சி என்பது அதன் நான்காவது கால் போல. இதைப்பற்றிய ஒட்டுமொத்த விழிப்புணர்வு என்பது நாற்காலியில் நாம் அமரும் இருக்கைக்கான இடம் போல. 


இதில் எந்தக்கால் சரியில்லாவிட்டாலும், உட்காரும் நம்மை நிச்சயம் கவிழ்த்து விட்டு விடும். அதாவது இந்த சர்க்கரை வியாதியின் நெருங்கிய சொந்தக்காரர்களான ”கண்கள் பாதிப்பு” ; ”கிட்னி பாதிப்பு” ; ”இரத்தக்கொதிப்பு” ; “மாரடைப்பு” போன்றவைகள் நம்மை சுலபமாக வந்தடைந்து பிரச்சனைகளை அதிகரிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள், நான் சொன்ன நாற்காலியின் நான்கு கால்களிலும் அதன் அமரும் இருக்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம் //  


என்றார் ஒரு கருத்தரங்கில் பங்குகொண்டு சொற்பொழிவாற்றிய ஓர் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்;

இதெல்லாம் சொல்லுவதோ கேட்பதோ சுலபம் தான் ஆனால் அதை கடைபிடிப்பது மஹாகஷ்டம் என்பது அந்த நிபுணருக்கே நன்றாகத் தெரிந்திருக்கும். ஜீனி, வெல்லம், ஸ்வீட்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடுவதால் மட்டும் சர்க்கரை வியாதி வருவதில்லை. இவற்றையெல்லாம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் மட்டும் அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவதும் இல்லை; 


நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி, கோதுமை, பருப்பு, கிழங்கு வகைகளும், மா, பலா, வாழை போன்ற அனைத்து பழ வகைகளிலும் கூட சர்க்கரைச் சத்து நிரம்பித்தான் உள்ளது; 


நார் சத்துக்கள் நிரம்பிய காய்கறிகள் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு சின்ன கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு ஸ்பூன் கொத்துக்கடலை சுண்டல் சாப்பிடுங்கள், முளைகட்டிய பயிறு நிறைய சாப்பிடுங்கள் என்று ஏதேதோ உணவு முறைகளைக் கடைபிடிக்கச் சொல்வார்கள்; 


ஒரு வேளைக்கான உணவாக இரண்டே இரண்டு இட்லிகளோ அல்லது ஒரே ஒரு தோசையோ அல்லது அரையே அரை அடை மட்டுமோ இதில் ஏதாவது ஒன்று மட்டுமே சாப்பிடுங்கள்; அதுவும் தொட்டுக்கொள்ள இந்த தேங்காய் சட்னி மட்டும் கூடவே கூடாது என்று ஏதேதோ ஆலோசனைகள் வழங்குவார்கள்; 


இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என்ன?  பஞ்சுபோன்ற சூடான சுவையான இட்லிகளாக இருந்து, அதுவும் தேங்காய்ச் சட்னி, சாம்பார் கொத்சு, மிளகாய்ப்பொடி எண்ணெயுடனும் சூப்பராக இருந்தால், தலையணிக்கு பஞ்சு அடைப்பது போல ஒரு பத்தோ அல்லது பன்னிரெண்டோ உள்ளே போனால் தான், போதும் என்று சொல்லவே தோன்றும்; கை அலம்பியவுடன் சாப்பிட்டது ஜீரணமாக உடனே சூடான சுவையான டிகிரி காஃபியைத் தேடி நம் நாக்கு அலையும்.


இது போல வக்கணையாக சாப்பிட்டுப் பழகிய எங்களைப்போய், ஒரு இட்லி அல்லது இரண்டு இட்லி அதுவும் சட்னி இல்லாமல் என்றால் என்ன கொடுமை இது பாருங்கள்! 


காரசாரமாகச் ’சட்னி’ இல்லையேல் ’பட்னி’ என்று வீர வசனம் பேசுபவர்கள் நாங்கள்; வாய்க்கு ருசியானவற்றைச் சாப்பிடக்கூடாது என்று தவிர்த்து விட்டு, பிறகு வாழ்ந்து தான் என்ன பயன்” என்றார் அழாக்குறையாக, அந்தப்பெரியவர்.  


பெரியவருக்கு மிகவும் ருசியாக தன் மனைவி கையால் செய்து சாப்பிட்ட, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து, முட்டி மோதி கண்களில் கண்ணீர் தளும்பியது.

அரட்டை ராமசாமி அவரை அன்புடன் ஆதரவாகக் கட்டிப்பிடித்து “வருத்தப்படாதீர்கள், ஐயா; இங்குள்ள எல்லோரிடமுமே,  இது போன்ற பல பசுமை நினைவுகளுடன் கூடிய வாழ்க்கையின் ஒரு பக்கமும், மீளாத்துயருடன் கூடிய இருண்ட மறுபக்கமும் இருக்கத்தான் செய்கிறது” என்று சொல்லி அவரை சற்றே ஆசுவாசப்படுத்தி, குடிக்க குடிநீர் அருந்துமாறுச்சொல்லி, தன் பேட்டியைத் தொடரலானார்.

கதையின் முக்கியக் கட்டமான ’இவர் மனைவியை இவரே கொன்று விட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது’ என்று இவர் நேற்று சொன்ன விறுவிறுப்பான பகுதி எப்போது தொடரும் என்ற ஆவலில் அங்குள்ள பெரியவர்கள் அனைவருமே ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.   

“தங்களுக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் என்று சொன்னீர்களே! அவர்களில் யாரும் உங்களை அவர்களுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லையா?” அரட்டையார் தொடர்ந்து வினவினார்.

“நான் ஆரம்ப நாட்களில், என் குழந்தைகளிடம்,  சற்று கண்டிப்பும் கறாருமாக இருந்து விட்டேன். நான் மிலிடரியில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வேலை பார்த்ததால், நல்லதொரு கட்டுப்பாட்டுடன் என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க விரும்பி விட்டேன். என்னதான் கட்டுப்பாட்டுடன் நான் அவர்களை வளர்த்து ஆளாக்கினாலும், அப்பாவைவிட அம்மாவிடமே அவர்களுக்குப் பிரியம் அதிகம். அனைவருமே அம்மா செல்லம்; 

என் மனைவி, தன் குழந்தைகளை அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாள். குழந்தைகளுக்கு எப்போதுமே பரிந்து தான் பேசுவாள். தன் பிள்ளைகள் மட்டுமின்றி தன் மருமகள்களையும் தன் சொந்த மகள்கள் போலவே பாராட்டி, சீராட்டி, அவர்களிடமும் மிகுந்த அன்பு செலுத்தி நல்ல பெயர் வாங்கிக்கொண்டவள். அதுபோலவே எங்களுக்கு வாய்த்த மாப்பிள்ளையும், “என் மாமியாரைப் போல தங்கமான மனுஷி இந்த உலகத்தில் வேறு யாரும் உண்டா!” என்று புகழ்ந்து தள்ளுபவர். 

இதுபோல அனைவரையும் அரவணைத்துச் சென்று, அன்பு செலுத்தி, அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது என் மனைவிக்கு மட்டுமே வாய்த்த கை வந்த கலை;

எனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும்; 


மற்ற எல்லோரிடமும் பேரன்பு செலுத்துவது போல நடிக்கத் தெரியாது. என் பிறவி குணமும் சுபாவமும் அது போலவே உள்ளது; திடீரென்று அவற்றை என்னால் மாற்றிக்கொள்ளவா முடியும்?” இவ்வாறு தன் வாழ்க்கை அனுபவங்களை சொல்லிக்கொண்டே வந்த பெரியவர் சற்றே நிறுத்தி எழுந்து நின்றார்.  


சற்று நேரம் காலாற நடந்து விட்டு வருவதாகச் சொல்லி, அந்த முதியோர் இல்லத்தை விட்டு வெளியே புறப்பட்டுப்போய் விட்டார்.

நேற்று அந்தப்பெரியவர் சஸ்பென்ஸுடன் முடித்த இடத்திலிருந்து கதையைத் தொடராமல் வேறு ஏதேதோ விஷயங்களுக்குத் தாவியது, கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், அனைவருக்கும் அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.


தொடரும் 


   

சனி, 29 அக்டோபர், 2011

நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 2 / 5]நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !

[சிறுகதை - பகுதி 2 / 5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:


தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.

==================================

மறுநாள் காலை சர்க்கரை நோயாளி ஒருவருக்கு தினமும் ஊசி போட வரும் கம்பவுண்டர் வர தாமதம் ஆகிவிட்டது. நோயாளிக்கு பசி வந்து மிகவும் படபடப்பாக ஆகி விட்டார். இதைப்பார்த்த, கேள்விப்பட்ட புதிதாக வந்த சேர்ந்த பெரியவர், “ஊசி மருந்தின் அளவுகள் தெரியுமா?” என்று கேட்கிறார். டாக்டர் சீட்டைத் தட்டுத்தடுமாறி அந்த வயதான அம்மாளின் ஒரு பையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்துத் தருகிறார்கள். 


டாக்டர் சீட்டை வாங்கிப்படிக்கிறார். அதில் காலையில் A10+M20 என்றும், இரவு A10+M5  என்றும் எழுதியுள்ளதைப் [A = Human Actrapid Soluble Insulin Inj. I.P  +  M = Human Insulatard Isophane Insulin Inj. I.P]. புரிந்து கொண்டவர் தன்னிடமிருந்த அதே மருந்துப் புட்டிகள்,  ஒரே ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எரியும் ஊசி சிரிஞ்ச், பஞ்சு, ஸ்பிரிட் முதலியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, பஞ்சில் ஸ்பிரிட்டை கொஞ்சமாக ஊற்றி, மருந்து பாட்டில்களின் ரப்பர் மூடிகளைப் பஞ்சால் துடைத்து விட்டு முதலில் A10 [பத்து ml] அளவும், அதன் பிறகு அதன் தொடர்ச்சியாக M20 [இருபது ml] அளவும் ஊசியால் அழகாக உறிஞ்சி எடுத்துக்கொண்டார்.  


பிறகு அந்த அம்மாளின் கையில் ஒரு சிறு பகுதியை, ஸ்பிரிட் ஊற்றிய பஞ்சால் துடைத்து விட்டு, துடைத்த இடத்தை கையால் உப்பலாகப் பிடித்துக்கொண்டு, ஊசி மூலம் மருந்தை செலுத்தி விட்டார்.  பிறகு பஞ்சால் ஊசி குத்திய இடத்தை ஓரிரு நிமிடங்கள் அழுத்தி அமுக்கிவிட்டு பஞ்சையும், ஊசி சிரிஞ்சையும் தூரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு கையை அலம்பிக்கொள்கிறார். இந்த வயதான காலத்திலும்,  சற்றும் கை நடுக்கமின்றி அந்த அம்மாவுக்கு வலி ஏதும் தெரியாமல் பெரியவர் ஊசி போட்டு விட்டதை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்து, மன நிம்மதி அடைந்தனர்.


ஊசி போடப்பட்ட அந்த அம்மாவுக்கு உடனடியாக சாப்பிட ஆகாரம் தருவதற்கு ஏற்பாடு செய்கிறார், அந்தப்பெரியவர். ஊசி போட்டு ஆகாரம் உள்ளே சென்ற அந்த அம்மாவுக்கு படபடப்பு அடங்கி முகத்தில் ஒருவிதத் தெளிவு ஏற்பட்டது. 


பெரியவருக்கு அந்த நோயாளியும் மற்றும் ஒரு சிலரும் நன்றி கூறினார்கள். கைவசம் இருந்த நான்கு பாட்டில் ஊசி மருந்துகளை மட்டும், ஆபீஸ் ரூமில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்கச் சொல்கிறார், அந்தப் பெரியவர்.


அனைவரும் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபின் வழக்கம் போல் ஓரிடத்தில் கூடி அமர்கின்றனர். 
    
“நல்லவேளையாகத் தெய்வம் போல இந்தப்பெரியவர் இங்கு வந்து சேர்ந்துள்ளார். சுகர் பேஷண்ட்டுக்கு ஊசி போட்டுவிட அனைத்து மருந்துகள், ஊசிகள், பஞ்சு, ஸ்பிரிட் என எல்லாமே கைவசம் வைத்துள்ளார். சரியான நேரத்தில் இன்று அந்த அம்மாவுக்கு தெய்வம் போல் உதவினார். ஏற்கனவே ஒரு முறை இதே போல ஊசி போடவும், டிபன் சாப்பிடவும் லேட்டாகி அந்த அம்மாவுக்கு வியர்த்துக்கொட்டி, படபடப்பாகி, மயக்கமே போட்டு விழுந்து, பிறகு நாமெல்லாம் பயந்து போய், ஆஸ்பத்தரிக்கு தூக்கிப்போனோமே” என்று ஒரு சிலர் நினைவு கூர்ந்தனர். 


”அந்தக் கம்பவுண்டர் எப்போ வந்து, எப்போ ஊசி போட்டு, அந்த அம்மா எப்போ டிபன் சாப்பிடுவது? பசியில் துடித்து, மயக்கமாகி அந்த அம்மா பிராணனே இந்நேரம் போய் இருக்கும்; நல்லவேளையாக இந்தப்பெரியவர் ....... ” என்று, மற்றொருவர் தன் வீதத்திற்கு அரட்டை ராமசாமியைப் பார்த்து தூபம் போட ஆரம்பித்தார்.


இதுவரை நடைபெற்ற எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்த நம் அரட்டை ராமசாமி, பெரியவரின் கைகளைப்பிடித்துக் குலுக்கி நன்றி கூறிவிட்டு, தன் பேட்டியைத் தொடரலானார்:


“சார், என்ன . . . . டாக்டராக வேலை பார்த்தீர்களோ?” 


“இல்லை, நான் மிலிடரியில் வேலை பார்த்து ரிடயர்ட் ஆன சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர். காஷ்மீர், அஸ்ஸாம், புனே, பஞ்சாப் என பல இடங்களில் வேலை பார்த்துவிட்டு கடைசியாக சென்னைக்கு வந்து செட்டில் ஆனவன்.”


“அப்படியா ... சர்க்கரை நோயாளிக்கு ஊசி போட்டீர்களே, அதனால் தாங்கள் ஒரு டாக்டரோ என்று சந்தேகப்பட்டேன்.


“நானும் என் மனைவியும் கூட டயபடீஸ் பேஷண்ட்கள் தான். நான் இன்று வரை மாத்திரைகளில் மட்டும் சமாளித்து வருபவன். ஆனால் என் மனைவிக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.  


ஆரம்ப காலத்தில் அவளை தினமும் ஆஸ்பத்தரிக்குக் கூட்டிப்போய்த்தான் போட்டு வருவேன். தினமும் காலை எழுந்ததும் டிபன் சாப்பிடுவதற்கு முன்பாக ஆஸ்பத்தரிக்குப் போய் ஊசி போட்டு வருவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  பிறகு நர்ஸ் ஒருவளை தினமும் வீட்டுக்கு வரச்சொல்லி ஊசி போட வைத்தேன். அதற்குப்பிறகு அந்த நர்ஸின் அறிவுரைப்படி அவளிடமிருந்து நானே என் மனைவிக்கு ஊசி போடக் கற்றுக்கொண்டேன். 


அதுவும் கடைசி இரண்டு வருஷங்களாக அவளுக்கு இரண்டு வேளைகளும் இன்சுலின் ஊசி போடப்பட வேண்டும் என்று டாகடர் கூறிவிட்டார். அந்த அளவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அவளுக்கு அதிகமாகி விட்டது.


கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நானே அவளுக்கு தினமும் ஊசி போட்டு வந்ததால், இந்த ஊசி போடும் கலை எனக்கு சுலபமாகப் பழகி விட்டது. ஒரு வேளை போட்ட இடத்திலேயே மறுவேளையும் போடாமல், கைகள், கால்கள், தொடை, வயிறு என மாற்றி மாற்றி, வலி ஏதும் ஏற்படாதபடி, மிகவும் கவனமாக மெதுவாகப் போட வேண்டியது முக்கியம்.


“உங்கள் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர்கள், சார்”


“அவள் கொடுத்து வைத்தவள் தான். பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து விட்டாள். என்னைத்தான் அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள். என்ன செய்வது? எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” பெரியவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு நிறுத்தினார்.


”அதெல்லாம் சரி தான். ஆனால் அனாதைன்னு இனிமேல் நீங்கள் சொல்லாதீர்கள். இந்த முதியோர் இல்லத்தில் உள்ள நாமெல்லோரும் இனி ஒருவருக்கொருவர் உறவினர்கள் தான். இந்த முதியோர் இல்லத்தின் காலை டிபன் எப்படியிருந்தது? தங்களுக்குப்பிடித்ததாக இருந்ததா? என்று பேச்சை மாற்றினார் அரட்டை ராமசாமி.


“பரவாயில்லை. நாம் ஏதோ நம்மால் முடிந்த பணம் கொடுத்தாலும், நம் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, ஆட்களைப்போட்டு, நமக்கு வேளா வேளைக்கு, டயப்படி ஏதாவது ஆகாரம் கொடுத்து கவனித்துக்கொள்கிறார்களே; அதுவே பெரிய விஷயம் தான். சில வீடுகளில் கூட இதுபோல நேரப்படி ராஜ உபசாரம் நடக்கும்னு சொல்லமுடியாது; 


ஆனால் அந்தக்காலத்தில் என் மனைவி எல்லாமே பிரமாதமாகச் செய்வாள். பால் பாயஸம், நெய் மணமும் முந்திரி மணமும் கமழும் ரவா கேஸரி, தேங்காய்+ஏலக்காய்+வெல்லம் கலந்து செய்யும் இனிப்பு போளி, பெருங்காய மணத்துடன் காரசாரமாகச் செய்யும் அடை, தேங்காய் துவையல், நெய்யில் வறுத்த முந்திரி கலந்த தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை, பொரித்த அரிசி அப்பளம், வடகம், ஒட்டலுடன் கூடிய குழம்புமா (பச்சரிசி மாவு) உப்புமா, பஜ்ஜி, வடை, கெட்டிச்சட்னி என வாய்க்கு ருசியாக ஏதாவது தினமும் செய்து கொடுத்து அசத்துவாள்;


அவற்றை இப்போது நினைத்தாலும் நாக்கில் ஜலம் ஊறுகிறது. தினமும் மாலை வேளையில் நானும் என் மனைவியும் ஒரு நீண்ட வாக்கிங் போய்விட்டு கப் ஐஸ் சாப்பிட்டு விட்டு வருவோம். அவளுக்கு ஐஸ் கிரீம் என்றால் உயிர். பேமிலி பேக் வாங்கி வந்து குளிர் சாதனப்பெட்டியில் அடுக்கி வைத்த நாட்களும் உண்டு.


இமாம்பஸந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமேனியா என்று பலவித மாம்பழங்கள், பன்ருட்டிப் பலாப்பழம், சிறுமலை வாழைப்பழம் என்று மிகவும் ஒஸத்தியான பழங்களை அந்தந்த ஊர்களிலிருந்து வரவழைத்து மிகவும் ரஸித்து ருசித்து உண்பவள் என் மனைவி. அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றார், பெரியவர்.


தொடரும்
  
இந்தச் சிறுகதையின் தொடர்ச்சி 
வெளியிடப்படும் நாட்கள்:
பகுதி-3 வரும் 31.10.2011 திங்கள் 
பகுதி-4 வரும் 02.11.2011 புதன் 
பகுதி-5 வரும் 04.11.2011 வெள்ளி.

-oOo-

ஓர் புதிய அறிவிப்பு

ஒரு சில நிர்வாகக் காரணங்களால் தமிழ்மணத்தில் அடியேன் நட்சத்திரப் பதிவர் ஆகத் தோன்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நாட்களில் 
சிறிய மாற்றம் செய்துள்ளார்கள்.

அதன்படி வரும் 07.11.2011 திங்கள் முதல் 
13.11.2011 ஞாயிறு வரை எனக்கு 
”நட்சத்திரப்பதிவர்” 
என்ற அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் 
என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

என்றும் அன்புடன் தங்கள்வை. கோபாலகிருஷ்ணன்

வியாழன், 27 அக்டோபர், 2011

நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 1/5]

நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !

[சிறுகதை - பகுதி 1/5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. சுமார் எண்பது வயதுக்கு மேற்பட்ட பெரியவர் ஒருவர் இறங்கி வந்தார். புதிய அட்மிஷன் போலிருக்கு என்று ஏற்கனவே அங்கு தங்கியுள்ள பெரிசுகளாகிய நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

சுமார் ஐம்பது வயதில், அவருடன் கூட வந்த நபர், கையில் பெட்டி படுக்கையுடன், அலுவலகத்திற்குள் சென்று, சம்ப்ரதாயங்களை முடித்து விட்டு, பெரியவரைப் பழி வாங்கி விட்டது போல, ஒரு ஏளனப்பார்வை பார்த்து விட்டு, சட்டெனக் காரில் ஏறி புறப்பட்டுச் செல்ல எத்தனிக்கிறார்.

நிச்சயமாக பெரியவரின் மகனாகத்தான் இருக்க வேண்டும். காரில் ஏறிச் செல்லப்போகும் மகனிடம் ஏதோ சொல்லப் பெரியவர் முயற்சிப்பது போலத் தோன்றியது.  தன் மகனை “ஜாக்கிரதையாகப் போயிட்டு வாப்பா” என்று சொல்லத்தான் நினைத்திருப்பார் என்று எங்களுக்குத் தோன்றியது.


“போய்விட்டு வருகிறேன்” என்று கூட தன் தந்தையிடம் சொல்லிக்கொள்ளாத மகனிடம் என்ன பேச்சு என்ற வருத்தத்தில் அவருக்குக் குரலும் வெளிவரவில்லை என எங்களுக்குத் தோன்றியது.


பெரியவர் நல்ல உயரம். சிவந்த நிறம். நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் ருத்ராக்ஷக்கொட்டை, படித்தவராகவும், பழுத்த அனுபவம் கொண்டவராகவும், ஓரளவு தன் வேலையைத் தானே செய்து கொள்ளக்கூடிய நிலைமையில் தேக ஆரோக்கியம் கொண்டவராகவும் தோன்றினார். 


வழக்கம்போல் எங்களில் ஒருவரான அரட்டை ராமசாமி [அரட்டை அரங்கத்தில் பங்கேற்கப்போய் தேர்வு ஆகாமல் திரும்பியதால் இந்தப்பெயர் பெற்றவர்] பெரியவரை கைகுலுக்கி வரவேற்றார். 


அவர் தங்க வேண்டிய பகுதியையும், சாப்பாட்டு இடம், கழிவறைகள் போன்ற மற்ற இடங்களையும் அவருக்குச் சுற்றிக் காண்பித்தார். அந்த முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மற்ற பெரியவர்களையும் அறிமுகப்படுத்தினார். பிறகு பிரார்த்தனைகள் நடைபெறும் அந்தப்பெரிய ஹாலில் உள்ள நாற்காலி ஒன்றில் அமரச்செய்தார். குடிக்க ஒரு டம்ளர் குடிநீர் கொடுத்து உபசரித்தார். 


பெரியவரைப் பற்றிய கதையைக்கேட்க அங்குள்ள அனைவரும் தங்கள் காதைத் தீட்டிக்கொண்டனர். ஒரு சிலர் தங்களின் காது மிஷினை சரிவரப் பொருத்திக் கொண்டனர். 


அரட்டை ராமசாமி பெரியவரை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.


“பூர்வீகம் எந்த ஊரு?”


“தஞ்சாவூர்ப் பக்கம் அய்யம்பேட்டை”


“எவ்வளவு குழந்தைகள்?”


“இரண்டு பையன்களும் ஒரு பொண்ணும்”


“பேரன் பேத்தி எடுத்தாச்சா?”


“ஆஹா; ஆளுக்கு ஒரு பொண்ணு, ஒரு பிள்ளை; மூத்தவன் பொண்ணுக்குக் கல்யாணமே ஆயிடுச்சு”


“உங்கள் சம்சாரம்?”


”அவள் போய்ச்சேர்ந்து இன்னியோட பதினைந்து நாள் ஆகிறது”


“மனைவி இறந்து போய் பதினைந்தே நாட்களில், உங்களைப் போய் இங்கு கொண்டு வந்து ..........” அரட்டை ராமசாமி சற்றே இழுத்தார்.


“என் சம்சாரத்தை நானே கொன்று விட்டதாக, என் மேல் ஒரு குற்றச்சாட்டு” பெரியவரின் கண்கள் கலங்கின.


“வருத்தப்படாதீங்கோ; மீதி சமாசாரங்களை நாளைக்கு சாவகாசமாகப் பேசிக்கொள்ளலாம். இப்போது சற்று ஓய்வாகப் படுத்துக்கோங்கோ” அரட்டை ராமசாமி அவரை ஆசுவாசப்படுத்தினார்.


தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.


தொடரும்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

மனசுக்குள் மத்தாப்பூ [ நிறைவுப்பகுதி - 4 of 4]மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதை [ நிறைவுப் பகுதி 4 of 4 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

பகுதி 1 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html

பகுதி 2 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/2-of-4.html

பகுதி 3 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/3-of-4.html
முன்கதை முடிந்த இடம்:

நம்ம ஊரு வயசுப்பொண்ணு ஒருத்தியை அதுவும் வாய் பேசமுடியாத ஒரு அப்பாவிப் பெண்ணை, எங்கிருந்தோ வந்த இவன் கட்டிப்பிடித்துத் தூக்கி விட்டான். இந்த அயோக்யனை சும்மா விடக்கூடாது. கட்டிப்போட்டு உதைக்க வேண்டும் எனப் பஞ்சாயத்தில் முடிவு ஆனது.

மனோவுக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அழுகையாக வந்தது. கீழ் வீட்டு வீட்டுக்கார அம்மா, அவனைப் பார்த்த பார்வையே, அவனை அப்படியே சுட்டெரிப்பது போல இருந்தது.


================================

அலாரம் மண்டையை உடைப்பது போல அடிக்க ஆரம்பித்தது. திடுக்கிட்டு எழுந்தான். அத்தனையும் கனவு என்பதை உணர்ந்தான்.

மனோவுக்கு கனவு ஏற்பட்டால் அது நிச்சயம் நடந்து விடுவதுண்டு. அவன் தந்தை ஒரு சாலை விபத்தில் இறந்து போவது போல கனவு கண்டான். அது போலவே ஒரு வாரத்தில் நடந்து விட்டது.  பிறகு ஒரு முறை அவன் தாய் கிணற்றடியில் வழுக்கி விழுவது போலக் கனவு கண்டான். ஒரு வாரத்தில் அதுபோலவே நடந்து, அவள் படுத்த படுக்கையாகி ஒரு மாதத்தில் போய்ச் சேர்ந்தும் விட்டாள். அன்று முதல் சொந்த பந்தங்கள் என்று சொல்லிக்கொள்ள யாருமின்றி, தனி மரமானான் மனோ. 

தன்னுடன் படித்த சகமாணவன் ஒருவன், பள்ளி இறுதித் தேர்வில், மிகவும் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதன் மாணவனாக வருவதாகக் கனவு கண்டான். அதன்படியே அதே மாணவன், மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலேயே முதல் மாணவனாக ஆனான்.

இன்றைய அவனுடைய கனவில் நல்ல வேளையாக அந்தக் கருநாகப்பாம்பு அனுவைக் கடிக்கவில்லை என்ற மன நிம்மதியுடன், பாத் ரூமுக்குக் குளிக்கச் சென்றான். பத்து மணிக்குள் தன்னை ரெடிசெய்து கொண்டு, அனு வீட்டில் ஆஜராகிவிட்டான், மனோ.

இவன் உள்ளே நுழையவும் அவர்கள் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வந்தவர்களை வரவேற்ற மனோவுக்கு ஒரே அதிர்ச்சி.

.

வந்தவன் பெயர் நாகப்பா. சென்னையில் ஏற்கனவே மனோ தன் தாய் தந்தையுடன் வசித்த பகுதியில், அவன் ஒரு பேட்டை ரெளடி என்று பெயர் பெற்றவன். ஏற்கனவே மனோவுக்குத் தெரிந்த வரை இரண்டு முறை திருமணம் ஆனவன். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு பலமுறை கம்பி எண்ணி வந்தவன்.   

அவனுடன் வந்திருப்பவர்களும் அவனுடைய சொந்த தாயோ தந்தையோ அல்ல. எல்லாம் திட்டமிட்ட சதிச்செயலும், ஏமாற்று வேலைகளும், கபட நாடகமும் என்பதை அனுவின் தாயாரைத் தனியே அழைத்துப்போய் மனோ விளக்கிக்கூறி விட்டான்.

அனுவின் தாயும் ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி, பெண் கொடுக்க சம்மதம் இல்லை எனக்கூறி, அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டாள்.

தங்கள் சூழ்ச்சிக்கு பெண் பலியாகாமல் தப்பித்து விட்டாளே என்ற ஆத்திரத்திலும், ஏமாற்றத்திலும் வந்தவன் பெரிதாகச் சத்தம் போட்டான்:

 “இந்த ஊமையான செவிடான உங்கள் பெண்ணை யார் கட்டிப்பாங்கன்னு நானும் பார்க்கிறேன்; ஏதோ போனாப்போகுதுன்னு பெரிய மனசு பண்ணி, ஒரு பொண்ணுக்கு வாழ்வு கொடுத்து உதவலாம்னு வந்தா மரியாதை தெரியாம இருக்கிறீங்களே!” என்று புலம்பியவாறு புறப்பட்டான்.

அமைதியும் அழகும் அறிவும் நிறைந்த இந்த அனுவைக்கட்டிக்கொள்ள எவனுக்காவது கசக்குமா என்ன? என்று நினைத்துக்கொண்டான், மனோ.

தன் கனவில் வந்த கருநாகப்பாம்பு தான், இந்த நாகப்பா ரூபத்தில் இப்போது அனுவைக் கொத்த வந்துள்ளது. கனவில் அந்த கருநாகப் பாம்பிடமிருந்து அனுவைக் காப்பாற்றியது போலவே, இப்பவும் இந்த நாகப்பாவிடமிருந்தும் நம் அனுவை எப்படியோ ஒரு வழியாகக் காப்பாற்றி விட்டோம், என மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான், மனோ.

நல்ல நேரத்தில் தெய்வம் போல வந்து தன் மகளின் வாழ்க்கை வீணாகாமல் காப்பாற்றிய மனோவுக்கு அனுவின் தாய் கண்ணீருடன் நன்றி கூறினாள். எல்லாவற்றையும் புரிந்து கொண்ட புத்திசாலிப்பெண் அனுவும் கைகூப்பி மனோவை வணங்கினாள்.

தான் கண்ட கனவில் அனு “அம்மா” என்று கத்தியதுபோல, விரைவில் தகுந்த சிகிச்சைகள் மேற்கொண்டால், அவள் வாய் திறந்து பேசவும் வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை டாக்டர் மனோவுக்குத் தோன்றியது.

மனோவின் கனவு என்றுமே பலிக்காமல் இருந்தது இல்லை. அவளை அவன் அலாக்காகக் கட்டிப்பிடித்துத் தூக்கியது, பிள்ளைத்தாச்சியான அவளைப் பிரிய மனமில்லாமல், கட்டி அணைத்தவாறு அமர்ந்தது உள்பட, நிச்சயம் ஒரு நாள் நடந்தே தீரும், என்ற நம்பிக்கையில், மனோவின் மனசுக்குள் மத்தாப்பூக் கொளுத்தியது போன்றதொரு மகிழ்ச்சி ஏற்பட்டது.   

மறுநாள் அதிகாலையின் அனு போட்டிருந்த இதயம் போன்ற [ஹாட்டீன் வடிவ] கோலத்தில் Welcome! Thank You !! Happy Deepavali !!! போன்ற அழகான வார்த்தைகளைப் பார்த்த மனோவுக்கு, அவளின் மனத்திலும் தான் புகுந்து விட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 

அப்புறம் என்ன! அடுத்த தீபாவளி அனுவுக்கும் மனோவுக்கும் நிச்சயமாகத் தலை தீபாவளியாகத் தானே இருக்கும்!    நாமும் அவர்களை மனதார வாழ்த்திடுவோம்!!-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-
இது 2011 ஆண்டுக்கான என் 150 ஆவது பதிவு என்பதை நினைத்து மகிழ்கிறேன்.


இந்த என் சிறுகதையை, முழுவதும் ஒரே பகுதியாக 
"வல்லமை" மின் இதழில் ”தீபாவளி 2011 ஸ்பெஷல்” ஆக 
வெளியிட்டுள்ளார்கள் என்பதையும் 
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.

-oOo-


மேலும் ஒரு மகிழ்ச்சிப் பகிர்வு

வரும் 31.10.2011 திங்கட்கிழமை   முதல் 06.11.2011 ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்மணத்தில், என்னை நட்சத்திரப் பதிவர் ஆக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்து, அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்கள். அதன்படி அந்த ஏழு நாட்களுக்கும் தினமும் ஓரிரு பதிவுகள் வீதம் என் வலைப்பூவில் நான் வெளியிட வேண்டும். 

தாங்கள் அனைவரும் தொடர்ந்து வருகை தந்து உற்சாகம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில், தமிழ்மணத்தின் அன்பான அழைப்பினை ஏற்றுக் கொண்டுள்ளேன்.  


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-

திங்கள், 24 அக்டோபர், 2011

மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]
மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதை [ பகுதி 3 of 4 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

பகுதி 1 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html

பகுதி 2 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/2-of-4.html


முன்கதை முடிந்த இடம்:

அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் பைனாக்குலரில் ரசித்து மகிழ்ந்தான் மனோ. 

அந்த மிகச்சிறிய அழகிய பட்டாம்பூச்சிக்கு அனுவை நெருங்கி முத்தமிடக் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்குக் கிடைக்க வில்லையே என்று, அதன் மேல் பொறாமை ஏற்பட்டது, மனோவுக்கு.  

============================

இத்தகைய அழகிய தன் இளம் பெண் அனுவுக்கு வாய் பேசமுடியாமல் உள்ளது என்று தற்செயலாகக் கோயிலில் சந்தித்த அனுவின் தாயார் மூலம் நேற்று கேள்விப்பட்டதும் மனோவுக்கு அதிர்ச்சியாகிப் போனது.


அழகிய அந்த முழுநிலவுக்குள் இப்படியொரு களங்கமா? மனோவுக்கு மனதை நெருடியது. இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது என நினைத்துக்கொண்டான்.


இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டதிலிருந்து, அனு மேல் அவனுக்கு ஏற்கனவே இருந்து வந்த ஈடுபாடு சற்றும் குறையாமல், அதிகரிக்கவே செய்தது. அவளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த மனோவுக்கு, தன் அறையின் வெளியே யாரோ அழைப்பு மணி அடிப்பது கேட்டது. ஓடிச்சென்று கதவைத் திறந்தான் மனோ. அறையின் வெளியே, வீட்டின் சொந்தக்காரரான அனுவின் அம்மா தான் நின்று கொண்டிருந்தார்கள்.


“வாங்கம்மா! என்ன இவ்வளவு தூரம், மாடி ஏறி நீங்களே வந்துட்டீங்க! ஒரு குரல் கூப்பிட்டிருந்தால் நானே வாடகைப் பணத்துடன் கீழே ஓடி வந்திருப்பேனே” என்று சொல்லி அங்கிருந்த நாற்காலியை மின் விசிறிக்குக்கீழே போட்டு, அவர்களை அமரச்சொல்லி, மின் விசிறியையும் சுழலவிட்டான், மனோ. 


”தம்பி, நான் வாடகைப்பணம் வசூல் செய்ய வரவில்லை. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, நீங்க டூடிக்குப்போக வேண்டியிருக்குமா அல்லது விடுமுறையா எனக் கேட்டுட்டுப் போகலாம்னு தான் நான் வந்தேன்” என்றாள்.

“டூட்டிக்குப் போகணும்னு கட்டாயம் ஏதும் இல்லை. பொழுது போக்கா இருக்கட்டுமே என்று நானாகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் போய் வருவது வழக்கம். சொல்லுங்கம்மா, நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யணுமா?” மனோ மிகுந்த ஆவலுடன் கேட்டான். அவனின் அன்புக்குரிய அனுவின் அம்மா அல்லவா அவர்கள்!

“ஆமாம் தம்பி, நம்ம வீட்டுப்பொண்ணு அனுவை பொண்ணு பார்க்க பட்டணத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருகிறாங்க. எங்க வீட்டுக்காரர் போய்ச் சேர்ந்ததிலிருந்து, ஆம்பளைத்துணை இல்லாத வீடாப்போச்சு. நீங்க கொஞ்சம் அவங்க வந்து போற சமயம் மட்டும், நாளை காலை பத்து மணி சுமாருக்கு நம்ம வீட்டுக்கு வந்து கூடமாட பேச்சுத்துணையா இருந்துட்டுப்போனீங்கன்னா, எங்களுக்கும் கொஞ்சம் தைர்யமா இருக்கும்” என்றாள்.

இதைக்கேட்ட மனோவுக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும், மறுபக்கம் ஒருவித அதிர்ச்சியாகவும் இருந்தது. 

“ரொம்ப சந்தோஷமான சமாசாரம் தான் அம்மா. மாப்பிள்ளைப் பையன் என்ன செய்கிறார்? நம் அனுவைப்பற்றி எல்லாம் விபரமாகச் சொல்லி விட்டீர்களா?” மனோ மிகுந்த அக்கறையுடன் வினவினான்.

“சென்னையில் ஏதோ பிஸினஸ் பண்ணுகிறாராம். பணம் காசுக்கு ஒண்ணும் பஞ்சமில்லையாம். கல்யாணத் தரகர் ஒருவர் மூலம் தான் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது; 

நீங்க தான் தம்பி நேரில் வந்து பேசி முழு விபரம் கேட்டு, நல்லது கெட்டது பற்றி விசாரித்துச் சொல்லணும். நல்லபடியா முடிஞ்சு, நல்ல இடமாக இருக்கணுமேன்னு ஒரே விசாரமாக இருக்கிறது” என்றாள்.

”சரிம்மா, நீங்க கவலைப்படாம போங்க. நான் நாளைக்கு காலையிலேயே சரியா பத்து மணிக்கு முன்னாடியே வந்துடறேன்” என்று சொல்லி டார்ச் அடித்து கீழே கடைசிபடி வரை சென்று வழியனுப்பி வைத்தான், மனோ.

மனோ ஓட்டலுக்குச் சென்று வழக்கம்போல் இரவு உணவருந்தி விட்டு தன் அறைக்கு திரும்ப வந்து படுத்தும், தூக்கமே வரவில்லை. நெடுநேரம் புத்தகங்கள் படித்தும் எதுவுமே மனதில் பதியவில்லை. பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாகத் தூங்கிப்போனான்.
அதிகாலையில் வழக்கம்போல் தன் பைனாக்குலரில் அனுவையும், அவள் போடும் கோலத்தையும் தரிஸிக்க ரெடியாகி விட்டான். இன்று அவனால் எப்போதும் போல இயல்பாக அனுவையும், அவள் போடும் கோலத்தையும் ரசிக்க முடியவில்லை. 

அனுவைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கோ? விரைவில் கல்யாணம் ஆகிச் சென்று விடப்போகிறவள். மெளன மொழி பேசும் அவளுக்கு, அவள் மனதைப்புரிந்து கொள்ளும் கலகலப்பான கணவன் அமைந்து, அவளையும் கலகலப்பாக சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும், என மனதிற்குள் பிரார்த்தித்தான்.       

தன்னை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்ற சந்தோஷத்தில், குனிந்த நிலையில் பூமித்தாயைக் குளிப்பாட்டி, மேக்-அப் செய்வது போல், அழகிய தன் கையின் பிஞ்சு விரல்களால் பொட்டு வைத்து, கோலமிட்டு, கலர் கலரான ஆடைகள் அணிவித்து, பறங்கிப்பூக்களை சூடி மகிழ்கின்றாள் அனு. தன் வீட்டுப் பக்கத்திலிருந்து, நடு ரோட்டுப்பக்கம் போய் அமர்ந்து ஆங்காங்கே [ பூமித்தாயின் உடலில் ] கோலத்தில் டச்-அப் வேறு செய்கிறாள்.

அவள் வீட்டுக்கு நேர் எதிர்புறம் உள்ள செடி கொடிகள் மண்டிக்கிடக்கும் பகுதியிலிருந்து சுமார் ஐந்தடி நீளமுள்ள கருநாகப்பாம்பு ஒன்று வேகமாக அவளின் முதுகுப்புறம் நோக்கி சரசரவென்று வந்து கொண்டிருப்பதை மனோ தன் பைனாக்குலர் மூலம் பார்த்து விட்டான். 

அவளின் முதுகுப்புறம் வந்த அந்த பாம்பு அவளைத் தீண்டாமலும், கோலத்தைத்தாண்டாமலும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.

இதைப்பார்த்து விட்ட மனோவுக்கு பதட்டம் அதிகரித்து, தன் பைனாகுலரை வீசிவிட்டு, வேகமாக மாடியிலிருந்து கீழே ஓடோடி வருகிறான். 

அனுவின் பக்க வாட்டில் நெருங்கிய அவன், அவளை அப்படியே அலாக்காகத்தூக்கிச் சென்று, அவள் வீட்டு வாசல் பக்கம் நின்று அவளை அப்படியே திருப்பி, படமெடுக்கும் அந்தப் பாம்பைப் பார்க்கச் செய்கிறான்.

திடீரென்று ஒரு வாலிபன் தன்னைக் கட்டிப்பிடித்து தூக்கி விட்டதையும், எதிரில் தன்னை ஒரு கருநாகம் தீண்ட இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அனு, வாழ்க்கையில் முதன் முதலாக தன் வாய் திறந்து “அம்மா” என்று அலறிக் கத்திவிட்டாள்.

அவளை அது சமயம் வாய் திறந்து பேச உதவிய அந்தப் பாம்பும், தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல தான் வந்த வழியே திரும்பிச்சென்று, எதிர்புறம் இருந்த செடி கொடிகளுடனான புதர் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.

டாக்டர் மனோவுக்கு அந்தக் கடிக்க வந்த பாம்பை விட, இதுவரை வாய் பேசாத அனு, தன் வாய் திறந்து ”அம்மா” என்று அலறியதில் அதிர்ச்சியாகி அவனும் “அ..ய்..ய்..ய்..யோ” என அவளைப் பார்த்து கத்திவிட்டான்.

காலை வேளையில் இவர்கள் எழுப்பிய சத்தத்தில் ஊரே கூடி நின்று விட்டது. 

நம்ம ஊரு வயசுப்பொண்ணு ஒருத்தியை, அதுவும் வாய் பேசமுடியாத ஒரு அப்பாவிப் பெண்ணை, எங்கிருந்தோ வந்த இவன் கட்டிப்பிடித்துத் தூக்கி விட்டான். இந்த அயோக்யனை சும்மா விடக்கூடாது. கட்டிப்போட்டு உதைக்க வேண்டும் என அந்த ஊர்ப் பஞ்சாயத்தில் முடிவு ஆனது.

மனோவுக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அழுகையாக வந்தது. கீழ் வீட்டு, அனுவின் அம்மா, மனோவைப் பார்த்த பார்வையே, அவனை அப்படியே சுட்டெரிப்பது போல இருந்தது.

தொடரும்

சனி, 22 அக்டோபர், 2011

மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதை [ பகுதி 2 of 4 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
பகுதி 1 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html


முன் கதை முடிந்த இடம்:


“ஆ ... ஆ ... அய்யோ, அம்மா! ரொம்ப பளிச்சு பளிச்சுன்னு வலிக்குதுங்க; அடிவயிற்றைச் சுருக்கு சுருக்குன்னு குத்துதுங்க; எழுந்து ஓடிப்போய் கீழ்வீட்டிலுள்ள என் அம்மாவை இங்கே அனுப்பிட்டு, நீங்க போய் டாக்ஸி பிடிச்சுட்டு வந்திடுங்க, ஆஸ்பத்தரியிலே அட்மிட் செய்துடுங்க” அனு பெரிதாக அலற ஆரம்பித்தாள். 
அனு அலறிய அலறலில், அவளை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த தன் கைகளை விலக்கிக்கொண்டு விட்டான் மனோ. 


சட்டெனத் துள்ளி எழுந்தான் மனோ.

===================================


சட்டென துள்ளி எழுந்தான் மனோ, தன் படுக்கையிலிருந்து
இதுவரை தான் கண்டதெல்லாம் வெறும் கனவு தான் என்பதை அறிந்து, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கி முகம் கழுவச்சென்றான்.மாடியிலிருந்து கீழ் வீட்டு வாசலை நோக்கினான். அனு வழக்கம் போல கோலம் போட அமர்ந்திருப்பதை அறிந்து கொண்டான்.  
இந்த பாவாடை சட்டை தாவணியுடன் கோலமிட, வெளியே தெருவில் அமர்ந்திருக்கும் அனு, சற்று முன்பு புடவையுடன், நிறை மாத கர்ப்பிணியாய், என் மனைவியாய், என்னுடன் எப்படி என் கைப்பிடிக்குள் சிக்கினாள். நினைக்க நினைக்க அவனுக்கு ஒரே சிரிப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. 


சதா சர்வ காலமும் நம் மனதிலும், நினைவிலும், அன்பிலும், ஆசையிலும் இருப்பவர்கள், கனவிலும் வரக்கூடும் என்று நினைத்து தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.


அனு வீட்டு மாடிப்போர்ஷனில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தான் மன நல மருத்துவ மனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ.


உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. 


வெள்ளைப்பணம், கறுப்புப்பணம் என பணத்திற்காக பேயாக அலையும் மனிதர்கள், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர், சாமி பெயரைச் சொல்லி கோயில் பணத்தைக் கொள்ளையடிப்போர், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போர், கஞ்சா கடத்துவோர், எதைப்பற்றியும் கவலையின்றி சதாசர்வ காலமும் குடி போதையில் மிதப்போர், பொடி, புகையிலை, வெற்றிலை பாக்கு, பீடி சிகரெட் சுருட்டுப் பிரியர்கள், காதல் போதையில் காமக்களியாட்டம் போடுவோர், காதல் தோல்வியால் மனம் உடைந்தோர்; 


கம்ப்யூட்டர், லாப்டாப், சாட்டிங், கார், பைக், செல்போன், சினிமா, டி.வி, டி.வி.சீரியல்கள், புடவைகள், நகைகள், புத்தகம், அரசியல், லாட்டரி, சூதாட்டம், சீட்டாட்டம், ஷேர்மார்க்கெட், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்; 


கற்பனை உலகில் மிதப்போர், திடீரென இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளைச் சந்திப்போர், நெருங்கிய சொந்தங்களின் மரணங்களால் அன்பை இழப்போர், விபத்துகள், கொலை, கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் நஷ்டங்களால் பாதிக்கப்பட்டோர் என பலவகை விசித்திர நோயாளிகளை தினமும் பார்த்துப் பழகிவிட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும். கீழ் வீட்டுப்பெண் அனுராதாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அவனுக்குத் தோன்றியது, இங்கே அவன் புதிதாகக் குடிவந்த சமயம். அவள் ஒரு கோலப்பைத்தியம் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் தான், மனோ.அதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலைப்பெருக்கி சாணத்துடன் கூடிய நீர் தெளித்து, கோலம் போடக் குனிந்தால் என்றால், சுமார் ஒரு மணி நேரம் குத்துக்காலிட்டு, இங்கும் அங்கும் தத்தித்தாவி மிகவும் அழகாகக் கோலம் போடுபவள்.   விடியற்காலம் எழுந்து வாக்கிங் போய் விட்டுத் திரும்பும் மனோவை அன்றைய தினம் அனுவால் போடப்பட்ட அழகிய புத்தம் புதிய மிகப்பெரிய கோலம் வரவேற்று, அவனை மிகவும் வியப்படையச் செய்யும்.  
நாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கின.  ”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.கோலத்தைச் சற்று நேரம் நின்று ரசித்துப்பார்த்து விட்டு, மாடி ஏறிப்போகும் மனோவை, சில நேரங்களில் அனுவும் வீட்டுக்குள்ளிருந்து கதவிடுக்கு வழியாகவோ, ஜன்னல் இடுக்கு வழியாகவோ பார்ப்பதுண்டு.எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்!மார்கழி மாதம் நெருங்கி விட்டது. பனி அதிகமாகக் கொட்டுகிறது. விடியற்காலம் வாக்கிங் போவதையே மனோ அடியோடு நிறுத்தி விட்டான். காரணம் கொட்டும் பனி மட்டுமல்ல. 
வாசலில் கோலம் போடும் அனுவை தன் அருகே அழைத்து ரசித்திட நேற்று அவன் புத்தம் புதியதாக வாங்கி வந்திருக்கும் பவர்ஃபுல் பைனாக்குலரும் தான்.தினமும் அதிகாலை மனோதத்துவ டாக்டரின் மனதிற்கும், கண்களுக்கும் விருந்தளித்தது அந்த பைனாக்குலர். பருவமங்கையான அனுவின் அழகை அணுஅணுவாக அள்ளிப்பருகி ரசிக்க முடிந்தது, அவனின் மாடி அறையின் ஜன்னலிலிருந்தபடியே. பாவாடை, சட்டை, தாவணியில், காதில் தொங்கும் ஜிமிக்கிகளுடன், காலில் கொஞ்சும் கொலுசுகளுடன், வாழைத்தண்டு போன்ற வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமென்று தோன்றியது மனோவுக்கு. அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ. அந்த மிகச்சிறிய அழகிய பட்டாம்பூச்சிக்கு அனுவை நெருங்கி முத்தமிடக் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்குக் கிடைக்க வில்லையே என்று, அதன் மேல் பொறாமை ஏற்பட்டது, மனோவுக்கு.  
தொடரும்

வியாழன், 20 அக்டோபர், 2011

மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 1 of 4]

மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதை [ பகுதி 1 of 4 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-"என்னங்க என்னை இப்படி மாத்தி மாத்தி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க! சீக்கரம் எழுந்துருங்க” அனு முனகினாள்.

அவள் சொல்வது எதையும் மனோ காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.

“ப்ளீஸ் அனு, நீ டெலிவெரிக்குப் புறப்பட்டுப் போய் விட்டால் எனக்கு எவ்வளவு போர் அடிக்கும் தெரியுமா; ஐ வில் மிஸ் யூ ய லாட்; இப்போ என்னைத் தடுக்காதே அனு”

“என்னங்க நீங்க! மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டது போல, புள்ளத்தாச்சியான என்னை இப்படிக்கட்டிக்கிட்டு விடமாட்டேன்கிறீங்க, எனக்கு ரொம்ப சிரமமா இருக்குதுங்க”

”கொஞ்சநேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அனு” மோப்பநாய் போல அவளின் மணிவயிற்றின் மேல் தன் முகத்தை வைத்து ஏதோ முகர்ந்தவாறு மெய்மறந்து அமர்ந்திருந்தான் மனோ.

அவளும் தன் அன்புக் கணவருடன் தனக்கு வரவிருக்கும் தற்காலிகப் பிரிவை எண்ணி, பொறுமையாக, அவருக்கு ஆறுதலாக தன் வலது கையால். அவர் தலையைக்கோதி விட்டுக் கொண்டிருந்தாள். தன் சரீர சிரமத்தால் தன் இடது கையைக் கட்டிலில் ஊன்றியபடி சற்றே சரிந்து அமர்ந்திருந்தாள்.

“சீக்கரமா எழுந்திருங்க, எனக்கு கொஞ்சம்  அப்படியே காலை நீட்டி படுத்துக்கணும் போல இருக்குதுங்க” என்றாள் அனு.

“அடடா, அப்படியா, சரி ... சரி, வா .... வா,  அப்போ நாம படுத்துக்கலாம்” என்றான்.

“சீ .. போங்க! உங்களுக்கு வேறு வேலையே இல்லை. எப்போப் பார்த்தாலும் நேரம் காலம் தெரியாம விளையாட்டுத்தான்” என்று சிணுங்கினாள்.

மனோ அவளை விட்டு நகருவதாகவே தெரியவில்லை. அன்பினால் அவன் அவளைக் கட்டிப்போட்டுள்ளான் அல்லவா!

”உள்ளே இந்தக்குழந்தை படுத்துது! வெளியே நீங்க இப்படி படுத்துறீங்க!! உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு, நான் தவியாத் தவிக்கிறேன், பாருங்க;


பேசாம நீங்க உங்க மனசை மாத்திக்கிட்டு கொஞ்சமாவது பக்தி செலுத்துங்க; கோயிலுக்குப் போயிட்டு வாங்க இங்கே பக்கத்திலே நிறைய பாகவதாள் எல்லாம் வந்து ஜேஜேன்னு திவ்ய நாம பஜனை நடக்குது. அங்கு போயிட்டு வாங்க;  பஜனை செய்வதைக் கண்ணால் பார்த்தாலும், பக்திப்பாடல்களைக் காதால் கேட்டாலும் புண்ணியம் உண்டுங்க; 


எனக்கு நல்லபடியா ’குட்டி மனோ’ பிறக்கணும்னு உம்மாச்சியை வேண்டிகிட்டு வாங்க” அன்புடன் ஆலோசனை சொன்னாள் அனு. 

“அதெல்லாம் முடியாது, எனக்கு குட்டிமனோ வேண்டாம்; ’அனுக்குட்டி’ தான் பிறக்கணும்;  மேலும் உன்னைவிட்டு ஒரு நிமிஷம் கூட என்னால் நகரவே முடியாது, அனு; 


அங்கேயெல்லாம் போய் பஜனை செய்தால் எனக்கு சரிப்பட்டு வராது; வேண்டுமானால் நாம் இருவரும் இங்கேயே ................ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான்.


இதைக்கேட்டதும் அனு அவனைப் பார்த்து கோபமாக முறைக்க ஆரம்பித்தாள். 


”பூஜை ரூம் நிறைய பக்திப் பாடல், பஜனைப்பாடல் புத்தகங்களாகச் சேர்த்து வைத்திருக்கிறாய் அல்லவா, அதை ஏதாவது எடுத்து நீ பாடினால் நானும் உன்னுடன் கூடவே பாடுகிறேன் என்று சொல்லவந்தேன்” என்று சொல்லி சமாளித்தான்.


உள்ளூரிலேயே, அவர்கள் வாழும் அதே வீட்டிலேயே, கீழ் போர்ஷனில் அனுவின் அம்மா இருப்பதால், உதவி தேவைப்பட்டால் கடைசி நேரத்தில் அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான் மனோ. 


அவர்கள் அனுவுக்கு ஒத்தாசையாக இருக்கிறேன் என்று சொல்லி இங்கு  முன்கூட்டியே வந்து உட்கார்ந்து விட்டால், இவர்களின் பிரைவஸிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமே என்ற பயம் மனோவுக்கு.


சற்று நேரத்தில் தன் வயிற்றை தன் இரண்டு கைகளாலும் தடவி விட்டுக்கொண்டு சற்றே நெளிய ஆரம்பித்தாள், அனு.

“ஆ ... ஆ ... அய்யோ, அம்மா! ரொம்ப பளிச்சு பளிச்சுன்னு வலிக்குதுங்க; அடிவயிற்றைச் சுருக்கு சுருக்குன்னு குத்துதுங்க; எழுந்து ஓடிப்போய் கீழ்வீட்டிலுள்ள என் அம்மாவை இங்கே அனுப்பிட்டு, நீங்க போய் டாக்ஸி பிடிச்சுட்டு வந்திடுங்க, ஆஸ்பத்தரியிலே அட்மிட் செய்துடுங்க” அனு பெரிதாக அலற ஆரம்பித்தாள். 
அனு அலறிய அலறலில், அவளை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த தன் கைகளை விலக்கிக்கொண்டு விட்டான் மனோ. 


சட்டெனத் துள்ளி எழுந்தான், மனோ.


தொடரும்


[ இந்தக் கதையின் அடுத்தடுத்த பகுதிகள் முறையே 22.10.2011 சனிக்கிழமை + 24.10.2011 திங்கட்கிழமை வெளியிடப்படும். இறுதி நிறைவுப்பகுதி 26.10.2011 புதன்கிழமை தீபாவளியன்று வெளியிடப்படும்.  ]


அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல் வாழ்த்துக்கள். 

என்றும் அன்புடன் தங்கள் 
வை. கோபாலகிருஷ்ணன்