ஓர் கவிதை நூலுக்கான
புகழுரை
சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது.
இந்த ஆண்டு அவர்கள் ’பெண் பூக்கள்’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள கவிதை நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு நேற்று வெள்ளிக்கிழமை (30.10.2015) எனக்குக் கிடைத்தது.
ஏற்கனவே இவர்கள் மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ’அன்ன பட்சி’ என்பதும் ஒன்றாகும்.
அந்த ‘அன்ன பட்சி’யே தன்னுடன் இந்தப் ‘பெண் பூக்கள்’ என்ற புதிய நூலை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.
பூக்களைப் பார்த்தாலே பெண் நினைவும், பெண்ணைப்பார்த்தாலே பூக்களின் நினைவும் வருவது இயற்கையே. இங்கு இந்த நூலுக்கு அவர்கள் வைத்துள்ள தலைப்போ ‘பெண் பூக்கள்’ :)
பூக்களிலும் ஆண் / பெண் என்ற பாகுபாடு உண்டோ என்ற சந்தேகத்துடன் அந்தப் புத்தம்புதிய நூலின் வழவழப்பான கன்னங்கள் போன்ற அட்டைகளைத் தொட்டுத்தடவிப் பார்த்.....தேன். உடனே கும்மென்றதோர் நறுமணம் கமழ்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
உள்ளே நுழைந்தால் ’ரோஜாப் பூ’வில் ஆரம்பித்து ...... ’அத்திப் பூ’ வரை ஐம்பத்து ஏழு விதமான பூக்களைப் படங்களாக ஒவ்வொரு பக்கத்திலும் காண்பித்து, ஒவ்வொரு பூவின் பெயர்களையுமே தலைப்பாக வைத்து, மிக மிக அருமையாக தேன் சிந்திடும் 57 கவிதைகள் படைத்துள்ளார்கள்.
படிக்கப்படிக்க பூக்களின் மணத்திலும், தேனின் ருசியிலும் சொக்கிப்போனேன். நூலினை முழுவதும் படித்து முடிக்காமல் என்னால் அங்கு இங்கு நகர முடியாமல் கட்டிப்போட்டு விட்டன, இந்த சாதனை அரசியின் அறிவு பூர்வமான ஆக்கங்கள்.
படிக்கப்படிக்க பூக்களின் மணத்திலும், தேனின் ருசியிலும் சொக்கிப்போனேன். நூலினை முழுவதும் படித்து முடிக்காமல் என்னால் அங்கு இங்கு நகர முடியாமல் கட்டிப்போட்டு விட்டன, இந்த சாதனை அரசியின் அறிவு பூர்வமான ஆக்கங்கள்.
’தமிழ் மரபின் நீட்சியாக’ என்ற தலைப்பில் ’புதிய தரிசனம்’ பதிப்பாசிரியர் திரு. ஜெபக்குமார் அவர்கள் இந்த நூலுக்கு மிகச்சிறியதோர் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள்.
”பூக்களின் தேனுரை” என்ற தலைப்பினில் நம் ’ஹனி மேடம்’ எழுதியுள்ள முன்னுரைப் பக்கத்தில் என்னை மிகவும் கவர்ந்துள்ள வரிகள் இதோ:
”பெண்ணைத் தாயாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகளாய், பேத்தியாய் நேசிக்காதவர்கள் இருக்க முடியாது. பிறப்பிலிருந்து இறப்புவரை நம் வாழ்வில் தொடர்புடையவை பூக்கள். பூத்துச் சிரிக்கும் மலர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பெண் நம் ஞாபகச் சுரங்கத்தில் தங்கம்போலோ, வைரம்போலோ பளீரிடுவாள். பேதையிலிருந்து பேரிளம் பெண் வரை .... ஏன் பாட்டி வரை நம்மை வசீகரித்த பெண்களும் பூக்களும், அவர்களின் மேலான நம் பாசமும், நேசமும், காதலும், அன்பும் பொங்க சில கவிதைகளை ஆண் பார்வையிலும், சில கவிதைகளைப் பெண் பார்வையிலிருந்தும் படைத்திருக்கிறேன். இவை கவிதைகள் என்பதைவிட பாசப்பகிர்வு எனலாம். வாழ்நாள் முழுவதும் உங்களை வசீகரித்த, வசீகரித்துக் கொண்டிருக்கும் பெண்களை நீங்களும் இக்கவிதைகளில் உணர்ந்தால் அதுவே எனக்கான பரிசு” - அன்புடன் தேனம்மை லெக்ஷ்மணன்.
எல்லாக் கவிதைகளுமே மிக அழகாக யோசித்து எழுதப்பட்டுள்ளன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றை மட்டும் நான் உங்களுக்கு இங்கே சாம்பிளாகத் தந்துள்ளேன் ... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.
ரோஜா
நேற்றுப் பெய்த மழையில், மாடியின் தளத்திலும், கைப்பிடிச்சுவரிலும் ஈரப்பூக்கள் பூத்துக் கொண்டேயிருந்தன.
துணியெடுக்கச்சென்ற நான், தன்னையுமறியாமல், கன்னங்களை அழுந்தத் துடைத்துக்கொண்டேன்.
நேற்று நீ இட்ட முத்தம், ரோஜாவும் முட்களுமாய், கன்னம் வழி கசிந்து, பூத்துக்கொண்டிருக்கிறதோவென்று.
மல்லிகை
கல்லூரி வகுப்பறை நண்பர்கள், பேப்பர் அம்புகளை எய்து கொண்டிருந்தபோது.... நீ பார்வை அம்புகளை எய்தாய்....
உன் பார்வை விடு தூதில் ஒவ்வொன்றும் மல்லிகையாய் மெத்தென்று என் மனதில்....
உன் பார்வைகளில் உதிர்ந்த மல்லிகைகளை, என் பார்வைகளில் வாங்கிக் கோர்த்தபோது, நம் காதலின் கிரீடம் ஆனது அது.
அதை அணிந்து உலா வந்தோம்.. ஒளி வட்டம் போல பார்வை வட்டம் சூடி..
ஆவாரம்பூ
பொங்கலுக்குப் பொங்கல் விடுமுறையில் ஊர் வாரேன்.. புது நெல்லு வாசத்தில் நீ வெல்லமிட்ட பொங்கல் தின்ன..
காணும் பொங்கலன்னிக்கு, கன்னுப்புள்ளையும் நெக்கதிரும், ஆவாரம் பூவும் சொமந்த காலம் என் நெனைப்பில் ஓடுதடி..
கண்ணுக்குத் தெரியாத கயிறுவச்சு இழுக்கிறியே.. மஞ்சு வெரட்ட விட்டுப்பிட்டு.. அடி..! என் மஞ்சக்கெழங்கு ஒன்னோட பூப்பறிக்க வந்தேன்டி....
கொப்பும் குலையுமா கொள்ளைச் சிரிப்போட, என் அயித்தைமக ஒன்னைப்போல காடாட்டம் பூத்திருக்கும்.. ஆவாரம்பூ அலைஅலையா....
கூட நெறைய அள்ளி வந்து குதிர் ரெம்பக் கொட்டிவச்சோம்.... யார் கூட எப்படியோ ஒங்கூட மகிர்ந்திருக்கும்.
அள்ள அள்ளக் கொறையாத அழகுப்பாதகத்தி... அடுத்த பொங்கலுக்குக் காத்திருக்கேன் அடி..! சேர்ந்து நாம் பூப்பறிக்க...!
கனகாம்பரம்
ஊர்த்திருவிழா... கிலுகிலுப்பை, ஊதல் சின்னவனுக்கு... பலூனும் பஞ்சு மிட்டாயும் பெரியவளுக்கு... தேரில் வந்த சாமி பார்த்து தேங்காயுடைச்சு முடிச்சாச்சு...
கியாஸ் லைட் வெளிச்சத்துல, நாயனமும் மோளமும் ஒன்னுக்கொன்னு எசை பாட... கரகாட்டம் ஆடி வந்த கறுத்த அழகி கூந்தலிலே அம்பாரமாய் கனகாம்பரம்..
மெலிஞ்சிருந்த அவள் கரகம் எடுத்துச் சுற்றிச்சுற்றி ஆடயிலே கனகாம்பரம் சுத்தினதுபோல் ராட்டினமாய் என் மனசும்...
இதுபோன்ற ருசிமிக்க மற்ற பூக்களையும் கவிதையாய் நுகர்ந்து ரஸித்து, அவற்றில் சிந்திடும் தேனை ருசித்து இன்புற, தாங்களே அந்த நூலை வாங்கிப்படித்து மகிழுங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன்.
நூல் வெளியீடு:
‘புதிய தரிசனம் பதிப்பகம்’
அட்டைகள் நீங்கலாக 64 பக்கங்கள்
விலை : ரூ. 60 (ரூபாய் அறுபது) மட்டுமே
தொடர்புக்கு முகவரி:
10/11 அப்துல் ரசாக் 2வது தெரு
சைதாப்பேட்டை
சென்னை - 600 015
தொலைபேசி எண்: 044-42147828
e-mail: puthiyadharisanam@gmail.com
திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
பற்றி நான் ஏற்கனவே கீழ்க்கண்ட என் பதிவுகளில்
சிறப்பித்து எழுதியுள்ளவைகள்
மீண்டும் தங்களின் பார்வைக்காக இதோ
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
வலைத்தளங்கள்:
சும்மா
டைரிக்கிறுக்கல்கள்
THENU'S RECIPES
கோலங்கள்
CHUMMA!!!
சாதாரணப் பெண் அல்ல
சாதிக்கப்பிறந்தவர்
நம் ’ஹனி மேடம்’ !
இவரைப்பற்றி மேலும் அறிய
சமீபத்தில் இவர் எழுதி வெளியிட்டுள்ள பிரபல நூல்கள்:
கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்,
ஆன்மிகம், கலை, கட்டடங்கள்
மட்டுமின்றி
பங்குச்சந்தை முதலீடுகள் உள்பட
இவர் எழுதாத தலைப்புகளோ,
பங்கேற்காத நிகழ்ச்சிகளோ,
இவரின் ஆக்கங்கள் இடம் பெறாத
பத்திரிகைகளோ, மின்னூல்களோ,
முகநூல் பொன்ற சமூக வலைத்தளங்களோ ஏதும்
இல்லவே இல்லை என நாம் அடித்துச்சொல்லலாம்.
நான் சமீபத்தில் படித்து வியந்தது இவரின்
கூண்டுக்கிளி
அனைத்திலும் ஆர்வமுள்ள
அதி அற்புதமான
திறமைசாலியாவார் !
’சாட்டர் டே ஜாலி கார்னர்’
என்ற தலைப்பினில்
பல்வேறு நபர்களை பேட்டி எடுத்து இவர்
வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதோ ஒருசில சாம்பிள் பேட்டிகள்
காணத்தவறாதீர்கள்
கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் தன் வலைத்தளங்களில்
எழுதிக்குவித்துள்ள பதிவுகளின் மொத்த எண்ணிக்கை
2000த்தை தொட்டுள்ளன. :)
அனைவருடனும் நட்புடன் பழகுவதில்
தேனினும் இனிமையானவர் !
-oOo-