About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, October 31, 2013

73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் !

2
ஸ்ரீராமஜயம்பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின் சுத்தி செய்யும் சக்தியைத் தெரிந்துகொண்ட பெருமை ஒரு பக்கமிருக்கட்டும்.

ஆனால் இந்த ஐந்தையும் ‘பஞ்சகவ்யம்’ [”கோ” என்றால் பசு. ’கவ்யம்’ என்றால் பசு ஸம்பந்தமுள்ளது. ‘பஞ்ச கவ்யம்; என்பது பசு ஸம்பந்தப்பட்ட ஐந்து ] என்று சேர்த்து ஒருவரைச் சாப்பிடச் சொல்லி அவரை சுத்தி பண்ணுகிற போது, அது சரீர சுத்திக்காக மட்டுமில்லை; ஆத்ம சுத்திக்காகவே.

பாபத்தைப் போக்கிப் புண்ணியத்தை உண்டு பண்ணுகிற சக்தியும் பஞ்ச கவ்யத்துக்கு இருக்கிறது. 

மந்திரபூர்வமாக அதை ப்ராசனம் பண்ணுவதால் [உட்கொள்வதால்] இந்த சக்தி இன்னமும் விருத்தியாகிறது. ’மங்களம்’ என்றால் மங்களம்தான். ஆனந்தமாக ..... அதிலேயே ஒரு கம்பீரத்தோடு, தூய்மையோடு, ஆனந்தமாக இருந்து கொண்டிருப்பதால் அது ’மங்களம்.’

எங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசுள்ள சந்தோஷத்தை விருத்தி பண்ணவேண்டும். 

நாமும் மங்களமாக இருந்துகொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும். 


oooooOooooo


தீபாவளிக்கும் 
பெரியவாளுக்கும் 
என்ன  சம்பந்தம்?

 [Mr. Sivan Krishnan]

ரொம்ப  நெருங்கிய  சம்பந்தம்  என்றே சொல்லலாம்.

தீபாவளி பொழுது விடியலில்  கொண்டாடுகிறோம்.    

வாழ்க்கை  நன்றாக  விடிய  கொண்டாடுகிறோம்.

தீபாவளி சந்தோஷம் தரும்  ஒரு  பண்டிகை.   

பெரியவாளின்  நினைப்பே  குதூகலத்தை  உண்டாக்கும்  ஒரு செயல்.

தீபாவளிக்கு  புதுசு நம் மேலே  ஏறிக்கொள்கிறது.   

பெரியவாளின்  எண்ணமே  நம்  உள்ளத்தை  புதுசு பண்ணி விடுகிறது.

தீபாவளிக்கு  படார்  படார்  பட்டாசு உண்டு.  

பெரியவாளிடம்  படார்  படார்  என்று  புதுப்புது அர்த்தங்கள், விவரங்கள்  நமக்கு கிடைக்கும்.

தீபாவளி  என்றாலே  வண்ண  வண்ண  ஒளி. 

பெரியவா படமே  நமக்கு  ஆன்ம ஒளி  தரும்  ஒரு  சாதனம்.

தீபாவளி இனிப்பு  ரொம்ப தின்றால்  திகட்டும்.   

பெரியவா  உபதேசங்கள்  எவ்வளவு நாம் கேட்டாலும்  இனிக்கும், ஆனால் திகட்டாது . 

[ Thanks to Mr. Sivan Krishnan ]

oooooOoooooபாமரன் கேள்வியும் 

பரமாச்சாரியார் பதிலும்! 


கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமஹாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது…


கீதையின் காலத்தில் சாஸ்திரப் பிரமாணம் என்பது சரி; ஆனால் இப்போது சாஸ்திரப் பிரகாரம் தேடினால் பலதும் பகுத்தறிவுக்கு ஒட்டமாட்டேன் என்கிறது. 

சாஸ்திரம் என்பது வழக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நியதி என்று கொண்டாலும், அதில் காலமாற்றத்தால் ஏற்பட்ட கசடுகளும் சேர்ந்திருக்குமே! அதனால் பழமையான வேதங்களையே கர்மத்திற்கு பிரதானமாகக் கொள்ளவேணும் என்கிறார்கள். 

அக்காலத்தில் கர்மா இருந்தது; ஆனால் இன்றைக்கு பெருகிவிட்டிருக்கிற ஜனங்களிடையே பஜனை சம்ப்ரதாயம் இல்லை; “பஜனை செய்தே உய்யலாம்’ என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால், கர்மாவின் மீதான பிடிப்பு தளர்ந்து விடுகிறதே! 

தேவை கர்மாவா? பக்தியா? பகவான் யாரிடம் முதலில் தன் பார்வையைப் பதிப்பான்?

வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக அநுஷ்டிப்பவர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். 

இவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, “இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்?” என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். 

கர்ம மார்க்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து, “செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை; ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா?’ என்று நினைக்கிறார்கள்.

ஆச்சாரியாள் [ஆதி சங்கரர்] ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால், கர்மத்தையே ஈசுவர பூஜையாகச் செய்யவேண்டும் என்று தெரிகிறது. 

கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈசுவரனையும் மறக்காமல் இருக்க வேண்டும். கர்மங்களை ஈசுவரார்ப்பணமாகச் செய்யவேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈசுவரனிடம் வைத்து அவனுக்குக் கர்மபலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை.

சாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கிவிட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும்; பக்தியும் வேண்டும். 

நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தமநிலை சித்திக்கும்; அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம்; 

அல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம் என்கிற சமாதிநிலை ஏற்படலாம்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால் கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா? பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா? 

ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்து கொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் அன்போ பாசமோ காட்டாமல், வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும்.

பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். 

ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான். 

தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். 

ஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாமல், “வெட்டு வெட்டு’ என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது.


[ Thanks to Sage of Kanchi 14.09.2013 ]

oooooOooooo

இன்று 31.10.2013 வியாழக்கிழமை 
“கோ வத்ஸ துவாதஸி” 
என்ற மிகச்சிறப்பான நாள்.

அதுபோல வரும் 10.12.2013 செவ்வாய்க்கிழமை
”கோஷ்டாஷ்டமீ” என்ற சிறப்பான நாள்.

இவை இரண்டையும் பற்றி 
தெளிவாக அறிய விரும்புவோர் 
தயவுசெய்து என்னுடைய 
இந்தப்பதிவினைப்பாருங்கள்.

தலைப்பு: “ஸ்வீட் சிக்ஸ்டீன்”
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

150க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களைப்பெற்ற

மிகச்சிறப்பான வெற்றிப்பதிவு மட்டுமல்ல,
மிகவும் சுவாரஸ்யமான பதிவும் கூட !

காணத்தவறாதீர்கள்.

கருத்தளிக்க மறவாதீர்கள்.


oooooOooooo

அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்.ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

Tuesday, October 29, 2013

72 ] பளபளக்கும் பட்டுப் புடவை !

2
ஸ்ரீராமஜயம்
இங்கே பட்டைப்பற்றி என் அபிப்ராயத்தைச் சொல்ல வேண்டும்.  அது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

ஒரு முழுப்பட்டுக்காக நூற்றுக்கணக்கில் பட்டுப்பூச்சிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது.

இதனாலே ‘அஹிம்ஸா பரமோதர்ம’ என்கிற பெரிய ஆசாரத்துக்கு பங்கம் வந்து விடுகிறது. 


அதுவும் தவிர, பட்டு வஸ்திரங்கள் விலையும் ரொம்ப ஜாஸ்தியாக இருப்பதால், பட்டுப்புடவை மோஹத்தால் குடும்பப் பொருளாதாரமே சீர்கெடுகிறது.

இதுலே வசதி இருக்கிறவர்களைப்பார்த்து வசதி இல்லாதவர்களும் ‘காப்பி’  பண்ணப்பார்ப்பதால் ரொம்பவும் கஷ்டம்  + கடன் உண்டாகிறது.

இந்தக்காரணங்களை உத்தேசித்துத்தான் பட்டு கூடாது என்றுதான் சொல்லிக்கொண்டு வருகிறேன்.   
 

இலட்சக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கின்ற பட்டினால் நமக்கு ஓர் அலங்காரமா?

oooooOooooo

அநுபூதி பெற்ற குரு கிடைப்பாரா?


குருவை அநுபவியாகத்தான் சாஸ்திரங்கள் காட்டுகின்றன: ‘ப்ரம்ம நிஷ்டம்’ என்று உபநிஷத்தில்; ‘தத்வ தர்சின:’ என்று கீதையில். அப்படிப்பட்டவர், நிஜமாகவே ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவர். 

இந்த நாளில் கிடைப்பாரா என்று யோஜனை பண்ண வேண்டாம். நிஜமான முமுக்ஷுதாவோடு தவியாகத் தவித்தால் ஈச்வரன் நிச்சயம் அப்படி ஒருவரைக் காட்டிக் கொடுக்காமல் விடமாட்டான். 

ஸதாகால ப்ரஹ்ம நிஷ்டரோ இல்லையோ, இருக்கிறதற்குள் ச்ரேஷ்டரான ஒருவரைக் காட்டி அவருக்குள்ளே இவனுக்கு மஹாவாக்யம் தருகிற ஸமயத்தில் ஸாக்ஷாத் அந்த ஈச்வரனே ஆவிர்பாவம் ஆகி உபதேசம் பண்ணிவிடுவான். 

அப்படித்தான், அப்படித்தான்! ; அதிலே ஸந்தேஹமே வேண்டாம். இந்த நாளிலும் அநுபவியான குரு கிடைப்பாரா என்று இவன் ஏங்கிக் கொண்டிருக்கிற மாதிரியே, இந்த நாளிலும் நிஜமான முமுக்ஷு கிடைப்பானா என்று ஸ்வாமியும் ஏங்கிக் கொண்டுதான் இருப்பாராதலால் அப்படிப்பட்டவனை விட்டுவிட மாட்டார். 

வெளியிலே ஸ்தூல ரூபத்திலே ஒரு மநுஷ குருவுக்குள்ளேதான் என்றில்லாமல் இவனுடைய அந்தராத்மாவிலேயே அவர் ஸூக்ஷ்ம குருவாக ஆவிர்பவித்தும் அநுக்ரஹிப்பதுண்டுதான். 

ஆனால் அதை நான் சொல்லப்போனால், இந்த அடங்காப் ….. [சட்டென்று வார்த்தையை மாற்றி] அடக்கம் போதாத ஸ்வதந்திர யுகத்தில், ‘குரு என்றே ஒரு ஆள் வேண்டாம். ஈச்வரன், தானே நேராக அப்படி நமக்குள்ளேயே அநுக்ரஹம் பண்ணி விடுவான். சங்கரசார்யாரே சொல்லிவிட்டார்’ என்று ஆரம்பித்துவிடக்கூடும்! 

வெளி குரு இல்லாமல் உள் குருவாக அவனே வருவதென்பது அபூர்வத்திலும் அபூர்வம். ரொம்பவும் அபூர்வமான உசந்த முமுக்ஷுக்களுக்கே அப்படி வருவது ...... அல்லது ரொம்பவும் அபூர்வமான பூர்வ ஸம்ஸ்காரம் இருக்கிறவனுக்கு அவன் முமுக்ஷுவாக இல்லாமல் ஸாமான்ய நிலையிலிருந்தால்கூட ஈச்வரனே இழுத்துப் பிடித்துத் தடுத்தாட்கொள்வதுமுண்டு. 

அதை ஜெனரல் ரூலாக்குவது அடியோடு பிசகு.

பரம ஸத்தியமான ஒன்றை உள்ளபடி உணர்ந்துரைக்கும் மகிழ்ச்சியுடனும் அழுத்தத்துடனும் பிரமாண மொழியாகக் கூறுகிறார்கள்.

[Thanks to Sage of Kanchi 11.09.2013]

oooooOooooo


‘சாஸ்திரத்தை மீறி விட்டோமோ’  


பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மைஅடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு, உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத் துரத்துபவர்கள்.தர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல்கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள். 


காஞ்சி மஹாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றிவந்தார். 

இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. 

குடும்ப நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். 

அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், ‘சாஸ்திரத்தை மீறி விட்டோமோ’ என்ற உறுத்தல், பக்தரைவாட்டியது. 

தனது மனக்கலக்கத்துக்கு மருந்தாக… மஹாபெரியவாளைஅனுதினமும் தியானித்து வந்தார்! 

அவருக்கு காஞ்சி மஹான் திருவருள் புரிந்தசம்பவத்தை உள்ளம் உருக விவரித்தார் அகிலா கார்த்திகேயன்… ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசைஆசையாகச் செய்தார். 

குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்பதைவிட,வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சி மஹானைத் தரிசிக்கப் போகிறோம் என்ற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது. 

சென்னை வந்ததும்,விமானநிலையத்தில் இருந்து டாக்ஸி பிடித்து காஞ்சிபுரம் சென்றார்.

காஞ்சிமடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார் மஹாபெரியவா. 

தரிசனத்துக்காக வந்திருந்த அடியவர்களுக்கு வியப்பு. 

சமையல் இன்னின்ன மாதிரியெல்லாம் இருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு பெரியவா சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியெல்லாம் சொன்னது கிடையாதே’என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்துசேர்ந்தார் பக்தர். 

மஹாபெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார். 

அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளை அழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.

வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படி பெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர்களுக்குப் புரியவில்லை. 

ஆனால்,கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிஸிக்க ஓடிவந்துவிட்டான் .... எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத் தெரியாதா?! 

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மஹாபெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார். 


அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?” என்றார்  கருணையும் கரிசனமும் பொங்க. 


அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்து வார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித்திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது!மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மஹான், ”நானே சொல்லிடறேன்!” என்றுஆரம்பித்தார்…


”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கே புறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கறவரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமாஇருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்னநான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார். 

அவ்வளவுதான்…தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்து போனார்கள். எனில், அந்தப்பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்! 

இதற்கு நடுவில்இன்னொரு சம்பவமும் நடந்தது. 


அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்தநேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த மற்ற அன்பர்களிடம்,”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரே…அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோ” என்று கேட்டாராம். 


இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், எவரிடமும் ‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்று எதையும் கேட்டறியாதவர் பெரியவர். 

ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல்திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள். 

இந்த வேளையில்தான் சாப்பிட்டு முடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்! 


அவரையும்சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்த மஹாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமே சொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்… 


”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண்ணாக்கையும் தையல் இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!”என்றார். 

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். 


தெய்வத்துக்கு நிகரான காஞ்சி மஹான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்றுநெகிழ்ந்தார்.. ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்று தவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்! 

இதையெல்லாம்உணராமல் இருப்பாரா பெரியவா. 


அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், 

”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். 

எங்கிட்ட இருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படறார். 

ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. 

இருந்தாலும் எனக்கு என்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! 

அவரோட மனசை நோக விட்டுட முடியுமா?” 

என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்துபேசினார். 

”இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிற பசு மாட்டுக்குக் கொடுங்கோ ... 

அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிற பாலை எனக்குக் கொடுங்கோ. 

நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். 

ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? 
பசு மாட்டு வழியா வந்தா 

எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும்.


அதனால அவர் மனசுல நெனச்சபடி, எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. 

அதை நான்ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?” 

என்றார் விளக்கம் சொல்வதுபோல! 


இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மஹாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்

’காலடி’யும் மூன்று எழுத்துகள்தான் ’காஞ்சி’யும் மூன்று எழுத்துக்கள்தான் எனக்கு இரண்டுமே ஒன்றுதான். 

அனைவருக்கும் அந்த மஹானின் கருணையும், காருண்யமும், அருளும், அனுக்கிரஹமும் கிட்டட்டும். 
லோகா சமஸ்தா 

ஸுகினோ பவந்து.
[Thanks to Mr RISHABAN Srinivasan Sir, 

for sharing this on 25.10.2013]

oooooOoooooஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியாகும்.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-


ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

கண்ணீர் அஞ்சலி


 

நம் பேரன்புக்குரிய பதிவர் ’ஆச்சி’ 
அவர்களின்  பாசமிகு தந்தை [வயது 59] 
22.10.2013 அதிகாலை இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். 


அவர் பிரிவால் வருந்தி வாடும் 
ஆச்சி அவர்களுக்கும், 
அவர்கள் குடும்பத்தாருக்கும் 
நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் 
தெரிவித்துக் கொள்வோம்.


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
’ஆச்சி’ அவர்களின் வலைத்தள முகவரி


திருமதி  Balasundaram Sridhar அவர்கள்ஆச்சி ஆச்சி
இரங்கல் தெரிவிக்க நினைப்போர் நேரிடையாக 

ஆச்சியின் மேற்படி வலைத்தளத்திலேயே 

பின்னூட்டமிட வேண்டுகிறேன்

Sunday, October 27, 2013

71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... !

2
ஸ்ரீராமஜயம்தாயன்பைப்போல கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்கும் காண முடியவில்லை. 

பிள்ளை எப்படியிருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலும் கூட, தாயாராகப்பட்டவள், அதைப்பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள்.

’பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்று இதைத்தான் சொல்லுகிறோம். 

‘தேவி அபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்’ என்று அம்பாளிடம் நம் குறைகளைச் சொல்லி மன்னிப்புக்கேட்டுக்கொள்ளும் துதி ஒன்று இருக்கிறது.

அதிலும் ’துஷ்டப்பிள்ளை இருப்பதுண்டு ஆனால் துஷ்ட அம்மா என்று ஒருத்தி கிடையவே கிடையாது’ என்று வருகிறது. 

பரிபூரணமான அன்பையும், தன்னலமே இல்லாத உழைப்பையும் அம்மா ஒருத்தியிடம்தான் பார்க்க முடியும்.

oooooOooooo

இதை மாற்றினால் போதும்!
[ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அருள் வாக்கு  ]ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. 

சாஸ்திரத்தில் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. 

அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமெண்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.


நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. 

நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். 

பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.

க்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. 

அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் STRAIN பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். 

நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும்,அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.

நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான்.

‘பணம்தான் பிரதானம்’ என்பதே அந்த அம்சம். 

பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன.  நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. 

லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

[ Thanks to Amritha Vahini 15.10.2013 ]


oooooOooooo


ஓர் அதிசய நிகழ்வு

ஒருதடவை ஆந்திராவில் மஹாபெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்தசம்பவம் இது. 

வழக்கமான பூஜைநேரம். மஹான் சிறிய காமாட்சி உருவச்சிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்து விட்டார்.


அந்தநேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டுக்கொண்டு 'எனக்குபுடவைகொடு... புடவைகொடு!' என்று கூவினாள், ரகளைசெய்தாள்.அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாகக் காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது'பூஜை நேரத்தில் இப்படி ஒரு  தொல்லையா?'  என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை  அங்கே இருந்து விரட்டத் தொடங்கினார்கள்.


அமைதியாக அவளைப் பார்த்த மஹான், அவர்களை பார்த்து கையமர்த்தி விட்டு, ஒரு புடவையைக் கொண்டு வரச்சொல்லி, அதைத் தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். 

புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டாள்.

அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம். 

அவள் பின்னாலேயே வேகமாகப் போனார். 

ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தினை அந்த சிஷ்யர் கடந்தபோது, அவர் கன்னத்தில் யாரோ 'பளார்' என்று அறைந்தது போலிருந்தது!

அங்கேயே மயங்கி விழுந்தவர், பெரியவா  இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.


”என்னடா... புடவை என்னாச்சுனு 

பார்க்கப் போனியோ ? 


வந்தவ அம்பாள்டா ... மடையா”என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தைச் சுட்டிக்காட்டினார் மஹாபெரியவா. 

வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அதே இடத்தில் தான் தேவியின் சிலையில் உடுத்தப் பட்டிருந்த சேலையும் கிழிந்திருந்தது !

தனக்கு என்ன தேவை என்று மஹானிடம் நேரில் கேட்டு பெறும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!


ஸ்ரீமஹாபெரியவா திருவடிகள் சரணம்     

[Thanks to Amritha Vahini  25.10.2013] 

oooooOoooooFLASH NEWS


மகிழ்ச்சிப் பகிர்வுமேலும் ஓர் சாதனைக்கிளி 

திருமதி அம்பாளடியாள் அவர்கள்.அவர்களின் வலைத்தளத்தில் 

நேற்று முன்தினம் வெற்றிகரமாக தனது 


7 0 0 வது 


கவிதையை வெளியிட்டுள்ளார்கள்.

இணைப்பு இதோ:


இதுவரை  பார்க்காதவர்கள்

அங்கு உடனே சென்று  பார்த்து,

பாராட்டி, வாழ்த்தி மகிழுங்கள். 

 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்