என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

44] அரசியலில் மாணவர்கள்

2
ஸ்ரீராமஜயம்



  


உங்கள் வீடு ஒரு குடும்பம். இத்ற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள்.

இப்படியே இந்த உலகம் முழுவதும் ஒரு பெரிய குடும்பம்.

இதற்கு இறைவனும் இறைவியும் அப்பாவும் அம்மாவுமாக இருக்கிறார்கள்.

கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பது மட்டும்தான்.

அதற்கு இடையூறாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது தனக்கும் தேச நட்புக்கும் இடையூறுதான் செய்யும்.

நம் தேசத்தை நல்லவழியில் நடத்துவதற்கு, முதலில் நல்லபுத்தியும், தர்மபலமும், தெய்வபலமும் பெற்று நிலைப்படுத்திக்கொண்டால்தான், அதை வளர்த்துக்கொள்ள முடியும்.

தெய்வ கார்யம், சமூக கார்யம் இரண்டிலும், ஒன்றையும் விடாமல் பண்ண வேண்டும். தெய்வ கார்யங்களுக்கு பக்தி வேண்டும்.

oooooOooooo

”பூக்காரி .... காமாட்சி”

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் பெரியவாளை "அப்பா" என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.

பெரியவா "ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!" என்பார். 

"காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்" என்பாள். பூக்காரி. 

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக்கூடாது. ஆனால், இந்தக் காமாட்சிக்கு மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். 

ஏனெனில், பெரியவாளே அவளிடம், " நீ உன் வியாபாரத்தை முடித்துக்கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக்கூடாது!" என்று கட்டளை இட்டிருந்தார். 

அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும். 

அன்று, புதுக்கோட்டையிலிருந்து "ஜானா" என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள். 

அந்தப் பாதுகைகளை அன்று காலை முதல் தன் காலை விட்டு பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகும்முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார். 

அப்போது நியூஸ் படிக்கும் நாகராஜன், "இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை!" என்று கழட்டுவதற்காகக் காத்திருந்தார். 

ஆனால், பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். 

பூக்காரியும் நானும் அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். 

பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம், "இது உனக்குத்தான், எடுத்துக்கோ!" என்றார்.

"நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!" என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். 

அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தாள். 

எத்தனையோ பேர்கள்,  அவளிடம் ”லட்ச ரூபாய் பணம் தருகிறோம், இந்தப் பாதுகையை எங்களுக்குக் கொடுத்துவிடு” என்றனர். அவள் அசையவேயில்லை. 

பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச்செய்தார். அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி, வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.

அவர் மறைவுக்குப்பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. 

"அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!" என்று ஒருநாள் புலம்பினாள்.

கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு செம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.

சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து, போயிடுத்து"ன்னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

இதுபோலவே பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை..... இது நான்கு மறை தீர்ப்பு.



[’கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்’ என்ற புத்தகத்தில் படித்தது]






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


ஓர் முக்கிய அறிவிப்பு


இந்தத்தொடரின் அடுத்த பகுதியான 
பகுதி: 45 சற்றே நீள, அகல, ஆழம் நிறைந்ததாக 
அமைந்துள்ளதால், அதை சேமித்து ஒரே பகுதியாக 
வெளியிடுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

அதனால் பகுதி-45 மட்டும் 
பகுதி-45/1/6, 45/2/6, 45/3/6, 45/4/6, 45/5/6 + 45/6/6 என
ஆறு சிறு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன.

01/09/2013 ஞாயிறுக்கும் 02/09/2013 திங்களுக்கும் 
இடைப்பட்ட இந்திய நேரம் 
நள்ளிரவு சுமார் 11 மணிக்கு ஆரம்பித்து 
அவைகள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியிடப்படும்.

ஒவ்வொரு பகுதியும் மிகவும் அபூர்வமான படங்களையும்
ஆச்சர்யமான தகவல்களையும் தாங்கி வருகின்றன

அனைத்து ஆறு ’சிறுபகுதி’களையும்
காணத்தவறாதீர்கள்.




-oOo-





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

30 / 31.08.2013 

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

43] படிப்பே மருந்து, பத்தியமே பணிவு.

2
ஸ்ரீராமஜயம்






பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது. உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் அதோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய பத்தியம் தான் பணிவு என்பதே.

பள்ளியில் படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால், பள்ளிக்கூடம் வைத்த பயன் நமக்கு ஏது?

பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலியவை இல்லாமல், படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக்கொண்டால் சாதுர்யமாக அயோக்கியத்தனங்கள் செய்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது.

தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். உறுதியான சங்கல்ப்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.




oooooOooooo




“அந்த மஹான்களெல்லாம் 
நம் வீட்டுக்கு வரமாட்டார்கள்…”


காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்திலுள்ள தெரு வழியாக நடந்து வந்தார். 

ஒரு வீட்டு வாசலில் பந்தல், தோரணம் என அமர்க்களப்பட்டது. 

அவ்வீட்டு சிறுவனுக்கு உபநபயனம் (பூணூல் சடங்கு). 

அந்த வீட்டின் முன் பெரியவர் நின்றார். 

வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து, பாதத்தில் விழுந்து ஆசி பெற்றனர்.

பெரியவர், அன்று புதிதாக உபநயனம் ஆன பையனையும், அவனது பெற்றோரையும் முன்னால் வரும்படி அழைத்தார். 

உபநயனம் நடப்பதற்கு முந்தியநாள் தான், அந்தப் பையன் தன் அப்பாவிடம், ”அப்பா! மஹா பெரியவா நம்ம ஊருக்கு வந்திருக்கிறாரே! எனக்கு பூணூல் சடங்கு நடக்கிற விபரத்தை அவரிடம் சொன்னால், நம் வீட்டுக்கு வருவார் இல்லையா!” என்று கேட்டான்.

அதற்கு அப்பா, "அந்த மஹான்களெல்லாம் நம் வீட்டுக்கு வரமாட்டார்கள்,” என்று சொல்லியிருந்தார்.

ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில், பெரியவரே யாரும் அழைக்காமல் அங்கு வந்து நின்று, தங்களை முன்னால் வரச்சொல்கிறார் என்றால், அவர்களுக்கு எவ்வளவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்!

பெரியவர் அந்த சிறுவனை ஆசிர்வதித்தார்.

பின், அடுத்த தெருவுக்கு சென்றார். அவ்வீட்டில், ஒரு சிறுவனும், அவனது பாட்டியும் இருந்தனர். பெரியவரைக் கண்டதும் நமஸ்கரித்தனர்.
பெரியவர் மூதாட்டியிடம், “நேற்று இரவு உன் பேரன், நம் வீட்டுக்கு பெரியவர் வருவாரா என்று கேட்டான் இல்லையா! நீ அதற்கு என்ன சொன்னாய்?” என்றார்.
”பெரியவா! உங்களுக்கு பாதபூஜை செய்யவோ, பிக்ஷை செய்யவோ (தானம் செய்தல்) எங்களிடம் வசதியில்லை, அதனால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமாட்டீர்கள் என்று சொன்னேன்,” என்றார் மூதாட்டி.

பெரியவர் சிரித்தார்.

“”பார்த்தாயா! இப்போது நான் வந்து விட்டேன், என்ன செய்யப் போறே!” என்றவர், பையனை அருகில் அழைத்து, “என்னைத் தரிசிக்க நீ எதுவும் செய்ய வேண்டாம். உன் வீட்டுக்கு வருவேனா என்று சந்தேகப்பட்டாய் அல்லவா! இப்போ, நான் உன் வீட்டுக்குள்ளேயே வரப்போறேன். நீ அனுமதிப்பாயா?” என்றவர், வீட்டுக்குள் வந்து சிறுவனையும், மூதாட்டியையும் ஆசிர்வதித்தார்.
எங்கு என்ன நடந்தாலும் தெரிந்து கொள்ளும் மஹிமை மிக்கவராக இருந்தார் பெரியவர்.
[மார்ச் 17,2013, தினமலரில் வந்த செய்தி - By சி.வெங்கடேஸ்வரன்]




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

29.08.2013 வியாழக்கிழமை

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

42] நேர மேலாண்மை

2
ஸ்ரீராமஜயம்




1] பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது.

2] கேட்டதில், கேட்கப்போவதில் ஆசையை விடுவது.

3] பார்த்ததில், பார்க்காததில் ஆசையை விடுவது.

எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் - ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.

கேட்ட உபதேசத்தை விடாமல் மனனம் செய்து அர்த்தத்தை கண்டு கொண்டபிறகு, அந்த அர்த்தம் ஒன்றிலேயே மனதை இடைவிடாமல் ஈடுபடுத்தி நிற்பதே தியானம் ஆகும்.   

பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.



oooooOooooo

ஓர் ஆச்சர்யமான சம்பவம்


ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள்.

அதில் ஒரு வயசான பாட்டி. 

பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு…. என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.


“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”




“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.



“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே? ……… அதான் 

ஒதவியா இருக்கட்டுமே … ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!


”ஆஹா, பிடிப்பு இருக்கட்டும் ….. ன்னு குடுத்தாராம்! ”


சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.


“சரி … ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”




“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரஹம் … மழை பெஞ்சா, ஆத்துல


முழுக்க ஒரேயடியா ஒழுகறது …. அதை கொஞ்சம் சரி பண்ணிக் 

குடுத்தா, தேவலை பெரியவா”


என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! 


மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!


“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே! …….” 




மறுபடியும் கிண்டல் சிரிப்பு.



“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”


“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன் …..” 


பாட்டி சற்றே நகர்ந்து நின்றாள். 


இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். 

கணவர் வழியில் ஏராளமான சொத்து! 

ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? 

அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?


பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். 
காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், 


“தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” 


என்று சொல்லிவிட்டாள். 


பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. 


எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். 


அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை, பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.


பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். 


சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….


“என்னது இது?”




“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”



“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”


“குடுத்துட்டோம். பெரியவா”


“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு 

பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு

எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடைசிலே போனாப் 

போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை….. அது வந்து …… பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“……… கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்.. ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? 


பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? 

எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? 

நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” 

குண்டுகளாக துளைத்தன! 


பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! 

மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.


ஆம். தவறுதானே?




“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” 



திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.


“நீ எங்கே குடியிருக்கே?”


“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”


“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”


“அங்க சுப்புராமன் இருக்கார்……”


பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!


“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”


“இல்லை……….”


“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். 


இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? 


நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..


டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”


“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”




“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”


பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. 

ஒரு பக்தரிடம், 

”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்….. உள்ள போய்ப் பாரு. 

ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே…. ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். 

பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். 

பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து …….



”சர்வேஸ்வரா……மஹாப்ரபு ……. 



நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?”






என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் 



விழுந்தாள். 





மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். 



இதை உண்மையான பக்தனும் பகவானும் 

மட்டுமே அனுபவிக்க முடியும்.


தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து 

தர்ஸனம் பண்ணுகிறார்கள். 




ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை 

பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், 

பகவானால் தாங்க முடியாமல், தானே 

அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். 


அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் 

எல்லோருக்கும் கிடைக்குமா? 




தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக 

அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம் 

கிடைக்கும்.
  



[Thanks to Amirtha Vahini 30 07 2013]









ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

27.08.2013 செவ்வாய்க்கிழமை