என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

VGK 07 - ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 06.03.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L @ G M A I L  .  C O M ]

REFERENCE NUMBER:  VGK 07

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:


  

 


ஆப்பிள் கன்னங்களும் 

அபூர்வ எண்ணங்களும் !


[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


 

”டேய் ... சீமாச்சூ! ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்...டா. 

அந்தப் பிள்ளையார் கோயில் டெய்லரிடம் போய் இந்தப் புதுசா தைத்த ஜாக்கெட்டை கைப்பக்கம் கொஞ்சம் பிரிச்சு லூஸ் ஆக ஆக்கிக்கொண்டு வரணும்...டா. 

விலை ஜாஸ்தியான ஒஸ்தித் துணி...டா. 

ஜாக்பாட் நிகழ்ச்சியில் வந்த, குஷ்பு போல முதுகுப் பக்கம் பெரிய ஜன்னலா வைக்கச் சொன்னேன்டா. 

ஏதோ சுமாரான ஜன்னலாக வைத்துவிட்டு கைகள் பக்கம் ரொம்பவும் டைட்டா தைத்துத் தொலைத்து விட்டான்.....டா. 

அளவு ரவிக்கையைக் கொடுக்கும் போதே படித்துப் படித்து சொன்னேன்....டா. 

பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிவிட்டு, வேணும்னே இப்படி டைட்டாகத் தைத்துத் தொலைத்திருக்கிறான்....டா. 

நானே அந்த டெய்லரிடம் போகலாம்ன்னு தான் நினைச்சேன்....டா. 

ஆனாக்க அவனையும், அவன் அசட்டுச் சிரிப்பையும், திருட்டு முழியையும், பார்க்க எனக்கு சகிக்கலை...டா, பிடிக்கலை...டா”, என்றாள் என் பக்கத்து வீட்டு ஜிகினாஸ்ரீ. 

அவளின் உண்மைப் பெயர் என்னவோ ’ஜெயஸ்ரீ’ தான். இருந்தாலும் நான் அவளுக்கு என் மனதுக்குள் வைத்துள்ள பெயர் ஜிகினாஸ்ரீ. 

நொடிக்கு நூறு தடவை என்னை “டா” போட்டு பேசி வருகிறாள். “ஸ்ரீனிவாசன்” என்கிற என் முழுப்பெயரைச் சுருக்கி “சீமாச்சூ” என்கிறாள். அதிலும் எனக்கென்னவோ என் மனதுக்குள் ஒரு வித கிளுகிளுப்பு தான்.

சின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் மிகவும் பழக்கம். தாயக்கட்டம், பரமபத சோபன படம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பாண்டி, பம்பரம், கோலிக்குண்டு, சடுகுடு, பச்சைக்குதிரை தாண்டுதல் எனப் பல விளையாட்டுகள், நாங்கள் சேர்ந்தே ஜாலியாக விளையாடியதுண்டு.

என்னை விட அவள் இரண்டு வயது சிறியவள். விஞ்ஞான பாட நோட்டில் சயன்ஸ் டயக்கிராம் வரைய என் உதவியை நாடுவாள். அவளுக்கு சரியாக ஓவியம் வரைய வராது. 

இந்த வேலை, அந்த வேலை என்று பாகுபாடு இல்லாமல் என்னை நன்றாகவே எல்லாவற்றிற்கும் பயன் படுத்திக் கொள்வாள்.

நானும் மகுடிக்கு மயங்கும் நாகம் போல அவள் எது சொன்னாலும், சின்ன வயதிலிருந்து என்னையும் அறியாமல் தட்டாமல் செய்து கொடுத்துப் பழகி வந்து விட்டேன்.  

ஒருநாள் மதியம் அவள் வீட்டுக்கு நான் எதற்கோ சென்றிருந்தேன். அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து, அங்கிருந்ததோர் வார இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். இவள் குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டாள். அவள் வீட்டிலோ அன்று வேறு யாருமே இல்லை.

சற்று நேரத்தில் பாத்ரூம் கதவை லேஸாகக் கொஞ்சூண்டு மட்டும் திறந்து, தன் கைகள் மட்டும் வெளியே தெரிவதுபோல, தன் உள்பாவாடையை என்னை நோக்கி வெளியே விட்டெறிந்தாள். 

”டேய் சீமாச்சூ, இந்தப் பாவாடையிலிருந்து நழுவிவிட்ட நாடாவை மளமளன்னு ஊக்குபோட்டு கோர்த்துக்கொடு...டா;  ஊக்கு அதோ அந்த அலமாரியில் மூன்றாவது தட்டில் முன்னுடிக்க இருக்கு பாரு...டா” என்றும் அவள் சொன்னதுண்டு.  

நானும் அன்று அவளின் அந்த உள்பாவாடை நாடாவை மளமளன்னு ஊக்கால் கோர்த்து, பயபக்தியுடன், பாத் ரூம் கதவின் கைப்பிடியில் சொருகிவிட்டு, அவளிடம் எடுத்துக்கோ என்று சொல்லிவிட்டு, வார இதழை விட்ட இடத்தில் தொடங்கி படித்ததுண்டு.


 


என் தந்தையும் அவள் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வரும் நண்பர்கள். என் தாயும் அவள் தாயும் மிகவும் சிநேகிதிகள். அக்கம்பக்கத்திலேயே தான் எங்கள் வீடுகள். நாங்கள் இவ்வாறு சிறு வயதிலிருந்தே ஒன்றாகப்பழகி வருவதை யாருமே தவறாகவோ, வித்யாசமாகவோ நினைப்பதில்லை. 

நான் படிப்பில் சுமார் தான். இப்போது பீ.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அவள் அப்படியில்லை. படிப்பில் படு சுட்டி. ப்ளஸ் டூ வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கிப் புகழ் பெற்றவள்.

படிப்பு மட்டும் அல்ல, அவள் அழகோ அழகு. அன்று சிறு வயதில் என்னைவிட நோஞ்சானாகத் தான் இருந்தாள். அவள் எட்டாவது படிக்கும் போது, அவர்கள் வீட்டில் திடீரென ஒரு விழா எடுத்தார்கள்.

காது, மூக்கு, கழுத்து, கைகள் என புதுப்புது நகைகள் அணிவித்திருந்தார்கள். இதுவரை கவுன், பாவாடை சட்டை, சுடிதார், நைட்டி என அணிந்திருந்தவளுக்கு பட்டுப்பாவாடை சட்டையுடன், நல்ல பளபளப்பான ஜிகினா ஜரிகைகளுடன் மின்னும் தாவணி அணிவித்திருந்தார்கள். தலை நிறைய கலர் கலராக பூச்சூடிக்கொண்டிருந்தாள். 


கழுத்தில் நெருக்கமாகத் தொடுத்த நறுமணம் கமழும் மல்லிகைப்பூ மாலை அணிவித்திருந்தனர். அந்த மாலையின் அடியில் குஞ்சலம் போல சில பட்டு ரோஜாக்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

பூப்போட்ட தாவணியின் ஜரிகைகள் ஜிகினா போல மிகவும் பளபளப்பாக டால் அடித்துக் கண்ணைப் பறிப்பதாக இருந்தது. 

அதைப் பார்த்து திகைத்துப்போன நான், அவளை ஜிகினாஸ்ரீ என்று வாய் தவறி அழைத்தேன். விழா அமர்க்களத்தில் நான் சொன்னது அவள் காதில் சரியாக விழவில்லை போலும். 

அவள் வயதுக்கு வந்து விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். எங்கள் எல்லோருக்கும் இனிப்புப் புட்டு, எள்ளுப்பொடி என ஏதேதோ தின்பதற்கான பலகாரங்கள் கொடுத்தார்கள். 

பெண்களெல்லாம் என் ஜிகினாஸ்ரீயை ஒரு நாற்காலியில் பட்டுத்துணி போட்டு அமர வைத்து, கூடி நின்று பாட்டுப் பாடினார்கள். பெண்மணிகளின் கோலாட்டமும் கும்மாளமுமாக விழா இனிதே நடைபெற்றது. 

எனக்குத்தான் இந்த திடீர் விழாவைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. என் தாய் உள்பட எனக்குப் புரியும் படியாக யாரும் எதுவும் எடுத்துச் சொல்லவும் இல்லை. 

பிறகு ஒரு நாள் இது பற்றிய என் சந்தேகத்தை நான் அவளிடமே கேட்டு விட்டேன். 

அதற்கு அவள் தன் தலையில் அடித்துக்கொண்டு, “மக்கு, மக்கு; பத்தாவது படிக்கிறாய்; உனக்கே உனக்காக ஒரு எழவும் புரியாது...டா. என்னைக் கேட்டது போல வேறு யாரையும் கேட்டு வைக்காதே...டா; அப்புறம் உனக்கு உதைதான் விழும்; 

உனக்கு முரட்டு மீசை முளைக்கும் போது ஒரு பொண்டாட்டி வருவாள்...டா. அவளிடம் போய் உன் சந்தேகங்களைக் கேளு...டா. அவ எல்லாம் விபரமா உனக்குச் சொல்லுவா...டா” என்றாள்.

இப்போது தான் அரும்பு மீசை முளைக்கலாமா என்று பார்த்துவரும் என் மேல் உதட்டுக்கும், நாசித் துவாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தடவி பார்த்துக் கொண்டேன். 

அவளைவிட இரண்டு வயது பெரியவனாகிய எனக்கு, எங்கள் வீட்டில், வயது வந்து விட்டதாக விழா எதுவுமே எடுக்கவில்லை. இவளுக்கு மட்டும் என்ன திடீர் விழா ? என்பதே எனக்கான மிகப்பெரிய சந்தேகம். 

பள்ளியில் விசாரித்ததில் பருவம் அடைந்த வயதுப்பெண்களுக்கு நடைபெறும் விழாவென்றும், அதைப் ’பூப்பு நீராட்டு விழா’ என்று சொல்லுவார்கள் என்றும், ஏதேதோ தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் என் வயது நண்பன் ஒருவன்.

மொத்தத்தில் யாருக்கும் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லையோ அல்லது எனக்குப் புரியும்படியாகத்தான் எடுத்துச் சொல்லத் தெரியவில்லையோ ! 

சரியென்று நானும் அதைப் பற்றி சந்தேகம் கேட்பதையே பிறகு ஒரு வழியாக விட்டு விட்டேன். 

  அந்த விழா நடைபெற்ற பிறகு, அவளின் நடை உடை பாவனை தோற்றம், எல்லாவற்றிலும் ஒரு வித திடீர் மாற்றங்கள். 


திடீரென கொஞ்ச நாளிலேயே நல்ல சதை பிடிப்புடன் மொழு மொழுவென்று தேக அமைப்பு மாறி விட்டது. 

ஆப்பிள் போன்ற செழுமையான கன்னங்கள், ஆங்காங்கே அசத்தலான மேடு பள்ளங்கள் என ஆளே முற்றிலும் மாறி விட்டாள். 

என்னை “டா” போட்டு அழைப்பதும், அதிகாரமாக வேலை ஏவுவதும் மட்டும் இப்போதும் குறையவே இல்லை. அவள் எங்கு போனாலும் என்னையும் துணைக்கு அழைத்துப் போவதும், கடையில் வாங்கிய துணிமணிகள் போன்ற பொருட்களை என்னை விட்டு தூக்கி வரச்செய்வதுமாக, மொத்தத்தில் என்னை, ஒரு வேலையாள் போலவே நடத்தி வந்தாள். 

ஆனால் ஒன்று மட்டும் சொல்லியே ஆகவேண்டும். ஹோட்டலில் வயிறு முட்ட டிபனும், ஐஸ் க்ரீம் போன்றவையும், அவள் செலவிலேயே, அவ்வப்போது எனக்கு வாங்கித் தரவும் தவற மாட்டாள். 

நானும் அவளுடன் சிறு வயதிலிருந்தே பழகிய தோஷமோ என்னவோ தெரியவில்லை, வாலிப வயதாகிய எனக்கு அவள் மேல் நாளுக்கு நாள் ஒரு வித ஈர்ப்பும் இனக் கவர்ச்சியுமாக, என்னை ஆட்டிப் படைத்து வந்த ஏதோவொன்று, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடியாடி உதவிகள் செய்து வரச் செய்தது என்னை. 

எனக்கு இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலோ, அவளுடன் பேசாவிட்டாலோ, ஏதோ பைத்தியம் பிடித்தாற்போல ஒரு உணர்வு ஏற்பட்டு வருகிறது.

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு போகும் போது, அவள் பொறியியற் கல்லூரியில் நுழைந்து படிக்க முயற்சித்து வருகிறாள். 

சிறந்த படிப்பாளியும், வருங்கால இஞ்ஜினியருமான அவளை, சாதாரணமானதொரு பட்டதாரியாகப் போகும் நான் என் சுமாரான நிறத்துடனும், மிகச் சாதாரணமான பெர்சனாலிடியுடனும், என்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அடைய முடியுமா?

அவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.

அவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்கு என் அன்புப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன். 

நேற்று மாலை நல்ல ராயல் ஆப்பிள் பழமொன்று பெரியதாக வாங்கி வந்திருந்தேன். நான் வரைந்த அவளின் படத்தையும், படத்தில் நான் வரைந்துள்ள அவளின் ஆப்பிள் கன்னங்களையும், நான் வாங்கி வந்த ஆப்பிளையும் மாறி மாறிப் பார்த்து வெகுநேரம் ரசித்துக்கொண்டிருந்தேன்.

பிறகு ஆப்பிள் பழத்தைக் கத்தியால் எனக்கேயுள்ள காதல் கலையுணர்வோடு அழகாக வெட்டினேன்.


நான் கஷ்டப்பட்டு வரைந்திருந்த படத்திலிருந்த அவளின் கன்னத்தின் மேல், அந்த ஒரேயொரு துண்டு ஆப்பிளை வைத்து, குனிந்து என் வாயினால் கவ்வி ருசித்தேன். 

அவள் கன்னத்தையே நான், லேசாகக் கடித்து விட்டது போன்ற ஒரு வித இன்பம் எனக்கு ஏற்பட்டது. 

அந்த நேற்றைய இன்ப நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் என் மனதில் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த என் கையில், இப்போது அவளின் ஜாக்கெட் டெய்லரிடம் சென்று ஆல்டர் செய்து வரக் கொடுக்கப்பட்டுள்ளது. 


   

டைட்டான அவளின் ஜாக்கெட்டை லூஸாக்க, அவள் சொன்ன அந்த டெய்லரிடம் போய் அமர்ந்திருந்தேன். 


ஜாக்கெட்டை மட்டுமில்லாமல் என்னையும் லூஸாக்கி விட்டது அந்த டெய்லர் சொன்ன சமாசாரம். “யாரு சாமி, அந்தப் புதுப் பையன்? அந்தப் பொண்ணு அடிக்கடி ஒரு வாட்டசாட்டமான, சிவத்த, வாலிபனுடன் பைக்கில் உட்கார்ந்து ரெளண்டு அடிக்குது !” என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்த டெய்லர். 

“யோவ் ! வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறாதே; அவள் அப்படிப் பட்ட பெண் இல்லை” என்றேன் நான். 

“நான் இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு நீங்க கோச்சுக்கிறீங்க? 

அந்தப் பையன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமோன்னு கேட்டேன். தெரிந்தா யாருன்னு சொல்லுங்க; இல்லாவிட்டால் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க !

அந்தப் பையன் ஏதாவது சொந்தக்கார முறைப் பையனாக் கூட இருக்கலாம். அல்லது நண்பனாக இருக்கலாம். கூடவே அந்தப் பெண்ணுடன் காலேஜில் படிப்பவனாகக் கூட இருக்கலாம். 

கம்ப்யூட்டர், சாட்டிங் அல்லது செல் போன் தொடர்புன்னு ஏதேதோ நியூஸ் பேப்பர்களில் போடுறாங்களே அது போல கூட இருகலாம். 

ஏதோ பாய் ஃப்ரண்டுன்னு சொல்றாங்களே அதுவாகவும் கூட இருக்கலாம்.

அவன் யாராக இருந்தாலும் சரி; நமக்கு எதற்கு வீண் ஊர் வம்பு” 
என்று சொல்லி, கைப்பக்கம் சற்று லூஸாக்கிய அந்த ஜாக்கெட்டை ஒரு பேப்பர் பையில் போட்டு என்னிடம் கொடுத்தார் அந்த டெய்லர். 

இதையெல்லாம் கேட்ட எனக்கு ஒரே பதட்டமாகிப் போனது. ஜிகினாஸ்ரீ ஒரு வேளை எனக்குக் கிடைக்காமல் போய் விடுவாளோ? 

இனியும் தாமதிக்காமல் அவளிடம் என் காதலைத் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேனே தவிர, அவளிடம் எப்படி ஆரம்பிப்பது, எப்படிப் பேசுவது என்பது ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது, எனக்கு. 

தன் புது ஜாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்டவள்,

“தாங்க்யூ.....டா சீமாச்சூஊஊ...” என்றாள். 

அப்போதே சுடச்சுட அவளிடம் ஏதோ கேட்க நினைத்த நான், சற்றே தயங்கினேன். 

“அந்த டெய்லர் உன்னிடம் ஏதாவது கேட்டானா” என்றாள் அவளாகவே. 

“நீ யாருடனோ பைக்கில் ஊர் சுற்றுகிறாயாமே; அதை அவர் பார்த்து விட்டதில் உனக்கு ஒரு குற்ற உணர்ச்சியோ ! அதனால் தான் நீ டெய்லர் கடைக்குச் செல்லாமல் என்னை அனுப்பினாயோ?” 

கேட்டுவிடலாமா என்று நினைத்தும் என் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.

“அந்த டெய்லர் என்னிடம் என்ன கேட்பார் என்று நீ எதிர்பார்க்கிறாய்?” என்றேன், மிகவும் புத்திசாலித் தனமாக அவளை மடக்குவதாக நினைத்து. 

”நீ சுத்த ட்யூப் லைட்டுடா, சீமாச்சூ; ஜாக்கெட்டை லூஸாக்கிக் கொடுத்தற்கு ஏதாவது காசு கேட்டானா?” என்றாள் சர்வ அலட்சியமாக. 

“அதெல்லாம் ஒண்ணும் கேட்கவில்லை. எல்லாமே அவன் செய்த கோளாறு தானே,  எப்படிக் கேட்பான்” என்று மட்டும் சொல்லிவிட்டு என் வீடு நோக்கி சென்று விட்டேன்.

    

நான் வரைய ஆரம்பித்த அவளின் படத்தை பைனல் டச் அப் செய்து, கீழே ஜிகினாஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ என்று எழுதி, என் கையொப்பமிட்டு, ப்ரேம் செய்து கொண்டு வந்து விட்டேன்.

என் தாயாரிடம் மட்டும் காட்டினேன். “சபாஷ்...டா ஸ்ரீனிவாஸா, சூப்பரா வரைந்திருக்கிறாய். வரும் பதினெட்டாம் தேதி அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அப்போது கொண்டுபோய் அவளிடம் கொடு. ரொம்பவும் சந்தோஷப்படுவாள்” என்றாள் என் அம்மா. 

“தாங்க் யூ..... ம்மா” என்றேன். 

ஆனால் பதினெட்டாம் தேதிக்கு, முழுசா இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப்பத்து நாட்களும் பத்து யுகமாக, நத்தை வேகத்தில் நகர்ந்தன. 

ஒருவழியாக அந்தப் பதினெட்டாம் தேதியும் வந்தது. 

நானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஞாபகமாக அழகிய பேப்பர் கலர் பேக்கிங்குடன் படத்தை ஒரு ஃபேன்ஸி பையில் போட்டு கையில் எடுத்துச் சென்றேன்.

அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே, நிறைய ஜோடி காலணிகள் வீட்டு வாசலில் கிடந்ததைக் காண முடிந்தது. 

உள்ளே அங்கு யார் யாரோ புது முகங்களுடன், பழத்தட்டுகள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

எங்களை ஜிகினாஸ்ரீயின் பெற்றோர்கள் வரவேற்று அமரச் செய்தனர். அவர்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். 

டெய்லர் சொன்ன அதே வாட்டசாட்டமான சிவத்த வாலிபன், என் கையைப் பிடித்து குலுக்கியவாறே “அயம்... சுரேஷ்... சாப்ட்வேர் இஞ்சினியர்.... டி.ஸி.எஸ்; நெள அட் யுனைடெட் ஸ்டேட்ஸ்; ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளை தான் நான்; கிளாட் டு மீட் யூ; ஜெயஸ்ரீ உங்களைப்பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறாள்” என்றான். 

புத்தம் புதியதொரு பட்டுப்புடவையில், சர்வ அலங்காரங்களுடன், என் ஜிகினாஸ்ரீ, கையில் ஒரு ட்ரேயில் ஸ்வீட் காரம் முதலியன எடுத்து வந்து, மிகவும் நிதானமாக, முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகையுடன், எல்லோருக்கும் விநியோகம் செய்ய ஆரம்பித்தாள். 

என்னைப் பார்த்ததும் “வாடா சீமாச்சூ, நீ எப்போ வந்தாய்? என்னுடைய ’வுட் பீ’ சுரேஷைப் பார்த்தாயா, உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

“பார்த்தேன், உனக்கு எல்லா விதத்திலும் மிகவும் பொருத்தமானவரே” என்றேன்.

என் கையிலிருந்த, நான் வரைந்துள்ள அவளின் படத்தை, அவளிடம் கொடுக்கத் தோன்றவில்லை எனக்கு. 

ஆனாலும் அவளாகவே என் கையிலிருந்து வெடுக்கென அதைப் பிடுங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்து, அசந்து போனாள். 

“யூ ஆர் ரியல்லி வெரி கிரேட்....டா..... சீமாச்சூ” என்று கூறி என் கையைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கி, விரல்களை முத்தமிட்டு, தன் கண்களில் ஒத்திக் கொண்டாள். 

பிறகு தன் வருங்காலக் கணவன் சுரேஷிடம் அந்தப் படத்தை நீட்டினாள். அவரும் அதை ரசித்துப் பார்த்து விட்டு, எழுந்து என்னிடம் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டினார்.

“எப்படி ஸார், இவ்வளவு தத்ரூபமாக வரைய முடிகிறது உங்களால்?” என்றார் சுரேஷ். 

“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை. 

“எங்க சீமாச்சூ .... சின்ன வயதிலிருந்து நன்றாக படங்கள் வரையுவான். எனக்கு சயன்ஸ் டயக்ராம் எல்லாம் இவன் தான் வரைந்து தந்து உதவுவான். படம் வரைவதில் எங்கள் சீமாச்சூ... சீமாச்சூ... தான்” என்று பெருமையாகக் கூறினாள், ஜிகினாஸ்ரீ. 

சுரேஷுக்கும் ஜெயஸ்ரீக்கும் வரும் தை பிறந்ததும் கல்யாணம் நடத்தலாம்னு இருக்கிறோம் என்று பொதுவாக அங்கு கூடியிருப்பவர்களுக்கும், எங்களுக்குமாக ஒரு தகவல் போல, ஜெயஸ்ரீயின் அப்பா மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

“டேய், சீமாச்சூ, இந்தக் கல்யாணம் முடியும் வரை நிறைய வேலைகள் இருக்கும்....டா. நீ தான்...டா எனக்குக் கூடமாட இருந்து எல்லா உதவிகளும் செய்யணும். எனக்குக் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் இல்லாத குறையை நீ தான்...டா தீர்த்து வைக்கணும்” என்று உத்தரவு பிறப்பித்தாள், என் அன்புக்குரிய ஜிகினாஸ்ரீ.

நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. 

எவனோவொரு வேலையாள் சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது, ஒரு ஆணி பறந்து வந்து, அங்கே அருகில் அமர்ந்திருந்த, என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண் விழியினில் படாமல் தப்பியது. 

அதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது. 

’ஜெயஸ்ரீ’ வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.oooooOooooo

”VGK 05 - காதலாவது 
கத்திரிக்காயாவது”

என்ற சிறுகதை 
விமர்சனப்போட்டிக்கு 
ஏராளமானவர்கள் 
உற்சாகத்துடன் கலந்துகொண்டு
தாராளமாக விமர்சனங்கள் 
எழுதி அசத்தியுள்ளது
மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அந்தப்போட்டிக்கான விமர்சனங்களில்
பரிசுக்குத் தேர்வானவைகள் மட்டும்
வெகு விரைவில் வெளியாக உள்ளன 
என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன் கோபு [ VGK ]

oooooOooooo
”யாரோ சொன்னது”

"எதை எழுதினாலும் எழுதுபவரின் மன ஓட்டம் வரிகளில் படிந்து ஆற்றோட்டம் போல அழகாக அமைவது எழுதுவதின் சிறப்பைக் கூட்டும்.  


கதைக்கு மட்டுமல்ல .... விமரிசனங்களுக்கும் விமரிசிப்பவரின் இந்த எண்ண ஓட்ட அமைதி இன்றியமையாத ஒன்று.

விமரிசிக்கப் போகும் வரிகளை // ......... // இப்படி அடைப்புக்குறிக்குள் சிறையிட்டு துண்டு துண்டாக அந்த அடைப்புச் செய்தியை விமரிசிப்பது அல்லது சிறப்பித்து சொல்வது, சொல்லப் போகும் எண்ண ஓட்ட வேகத்திற்கு தடுப்பு அணை போட்டதாகவே அமையும்.  

இந்த அடைப்பாகிய தடுப்பு வேலிகள் நடுநடுவே குறுக்கிட்டு குறுக்கிட்டு கோர்வையாகச் சொல்லப் போவதின் அழகையும் குலைக்கும்.   

விமரிசிக்கப் போகும் வரிகளை உள்வாங்கிக் கொண்டு தன் மொழியில், தன் நடையில், அவற்றையே வெளிப்படுத்தினால், விமரிசனங்களின் அழகும் கூடும்."  

                                  [ இது யாரோ எப்போதோ எங்கோ என்றோ சொன்னது ]இப்படி அடிக்கடி 'விமரிசனக்கலை' பற்றி பலர் சொன்னதை அல்லது நான் படித்ததை அவ்வப்போது வெளியிடுவதாக இருக்கிறேன். 

எங்கிருந்தெல்லாமோ திரட்டப்படும் இப்படியான கருத்துக்கள் விமரிசனங்கள் எழுதுவோருக்கு உதவியாக இருந்தால் எனக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.


அன்புடன் கோபு [ VGK ]


ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

VGK 04 / 01 / 03 ] FIRST PRIZE WINNERS ! "காதல் வங்கி”

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 04 ]  ” காதல் வங்கி  ”


இணைப்பு:மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 
   


மற்றவர்களுக்கு: 


    முதல் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்: அதில் ஒருவர்


திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்
sivamgss.blogspot.in" எண்ணங்கள் “

முதல் பரிசினை வென்றுள்ள திருமதி. கீதா சாம்பசிவம்


 அவர்களின் விமர்சனம்:


வங்கி வேலை கிடைப்பதை விடக் கடினமானது அதைச் சரியாக நிறைவேற்றுவது.  இங்கே ஜானகி வாடிக்கையாளரின் மனதைக் கவரும் வண்னம் சேவையில் சிறந்தவளாக இருக்கிறாள். இதிலிருந்தே அவளைப் பற்றி ஒரு மாதிரிப் புரிய ஆரம்பிக்கிறது. இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக வங்கிக்கு நற்பெயர் வாங்கிக் கொடுக்கும் விதத்தில் வாடிக்கையாளருக்குச் சேவை செய்கிறாள்.  


அங்கே எத்தனையோ வாலிபர்கள் வந்து போனாலும்  அவர்கள் எவரையும் இவளுக்குப் பிடிக்கவில்லை. எல்லாருடனும் சகஜமாகப் பழகினாலும் தன் எல்லை எது எனப் புரிந்து வைத்திருக்கிறாள். 


அப்போது தான் வருகிறார் ரகுராமன்.  பெயர்ப் பொருத்தமே அசத்தல்.  ரகுராமன் - ஜானகி. என்றாலும் முதலில் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை.  சாதாரண வாடிக்கையாளராகத் தான் இருந்திருக்கார்.  ஆனால் அவருக்கு வங்கி குறித்த விஷயங்கள் எதுவும் தெரியாது,  முழுமையாக ஜானகியை நம்பி வங்கியில் வாடிக்கையாளராகச் சேர்கிறார். ஜானகியும் ஒரு வங்கிக் காசாளராகவே அவருக்கு வேண்டிய உதவிகள் செய்கிறாள். 

ரகுராமனைக் குறித்து ஜானகி அறிய நேர்ந்தது அவங்க வீட்டில் நடந்த ஏதோ ஒரு சுப நிகழ்வில்.  வந்தவர் வைதிக பிரமசாரி என அறிகிறாள் ஜானகி. குடும்பப் பாரம்பரியத்தின் மேலும் கலாசாரத்தின் மேலும் ஓர் ஆழமான பிடிப்பு அவள் மனதின் ஓர் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  முழுதும் மறையவில்லை. ஆனால் அது வெளிப்பட நேர்ந்தது ரகுராமனை ஜானகி சந்தித்த பின்னர் தான். முதலில் அவருடைய படிப்பிலும், வித்வத்திலும் ஏற்பட்ட பிரமிப்பில் அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள நினைத்தவள், தொடர்ந்து அவரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என நினைக்கிறாள்.  இது தான் காதல்.  இது ரகுராமன் மனதிலும் பிரதிபலிக்கிறது.

ஒரு பெண்ணோ, ஆணோ ஒருவரைப் பார்த்ததும், அவர்கள் மனதில் உடனடியாகத் தோன்றுவது மாற்றுப் பாலினத்திடம் சாதாரணமாக ஏற்படும் இனக்கவர்ச்சியே.  ஆனால் காதல் என்பது பெண்ணின் மனதில் தோன்றும் அதே சமயம் அதன் பிரதிபலிப்பு அவள் காதலிக்கும் அந்த ஆணிடமும் தோன்ற வேண்டும். இது வயது வித்தியாசம் பார்க்காது, படிப்போ, வேலையோ, அழகோ, பணமோ எதுவும் பார்க்காது. ஒருவரை ஒருவர் பார்ப்பதிலும், நினைப்பதிலுமே மனம் சந்தோஷம் அடையும். ரகுராமன் நவநாகரிக இளைஞரே அல்ல. வங்கியிலோ, அல்லது வேறெங்குமோ வேலை செய்யவில்லை. இந்தக்கால நவநாகரிக உடைகள் அணிபவரும் அல்ல. இத்தனையும் மீறி ஆசார, அநுஷ்டானங்களைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ரகுராமன்  நவநாகரிகப் பெண்ணான ஜானகியின் மனதைக் கவர்ந்ததோடு அல்லாமல் அது கல்யாணம் வரைக்கும் போய்விட்டது.

ஜானகிக்குத் தன் படிப்பெல்லாம் வெறும் ஏட்டுப்படிப்பு. ரகுராமன் படிப்புத் தான் உண்மையில் வாழ்க்கைக்குப் பலன் தரக்கூடியது என்று புரிந்து கொள்ளும் அறிவும் இருக்கிறது.  இந்தக்கால இளைஞர்களின் போக்கும் அவளுக்குப் பிடிக்கவில்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கும் இந்த வாழ்க்கையை வெறுக்கிறாள்.  அதே சமயம் வங்கி வேலையை விடவும் தயாரில்லை.  சுகமான வாழ்க்கைக்குப் பணம் தேவைன்னு இருவரும் தெரிந்து கொண்டு தேவையான பணமும் சேர்த்துக் கொண்டு பின்னரே கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.  அதுவும் ஜானகியின் பெற்றோர், உற்றார், உறவினரின் முழு சம்மதத்தோடு.

காதல் செய்வதால் இருவரும் ஊர் சுற்றவில்லை.  ஹோட்டல், சினிமா, பார்க்குனு உட்கார்ந்து பேசலை.  ரகுராமன் வங்கிக்குப் பணம் போட வருகையிலே பார்ப்பது தான்.  அதுவே போதுமானதாக இருந்திருக்கிறது.  எல்லாவற்றிலும் ஒரு நிதானம், அவசரமின்மை, திட்டமிடுதல், தேர்ந்தெடுத்துச் செய்தல் என இருவரும் எல்லாவிதத்திலும் ஒத்துப் போய்க் கடைசியில் திருமணமும் செய்துக்கறாங்க. 

கல்யாணம் ஆகிவிட்டது என்றாலும் வங்கி வேலையை விடாமல் அதே சமயம் பாரம்பரியப் பழக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துத் தன் குல வழக்கப்படி மடிசாருடன் வங்கி வேலைக்கு வந்து செல்கிறாள் ஜானகி.  இதற்காக வெட்கப்படவில்லை என்பது இங்கே முக்கியம்.  இப்போது அவளைப் பார்ப்பவர்களுக்கும் மன நிறைவு.  நமக்கும் மன நிறைவு. 

பெண்ணால் தான் குடும்ப வழக்கங்கள், குல ஆசாரங்கள் கடைப்பிடிக்கப்படும். ஆகவே அந்தப் பெண்ணுக்கு  இப்படியான ஆசாரங்களையும், குடும்ப வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர் மாப்பிள்ளை ஆவதற்கு உதவும் பெண்ணின் தாயும் போற்றுதலுக்குரியவரே. அவர் தன் வளர்ப்பு சரியானது என்பதை அறிந்து கொண்டு  மகிழ்ச்சியே அடைகிறார்.  

தாயும், பெண்ணும் ஒரு தோழி போல் மனம் விட்டுப் பேசி ஒருவர் மனதை இன்னொருவர் புரிந்து கொள்வது இங்கே கூர்ந்து கவனிக்கத் தக்கது.  ஒவ்வொரு தாயும் தன் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும், அவள் கல்யாண வயதில் எப்படி அவளிடம் மனதைப் புரிந்துகொள்ளும்படி பேச வேண்டும் என்றெல்லாம் இந்தத் தாயிடமிருந்து அறிய முடிகிறது.   

திருமணத்தில் பெண்ணின் விருப்பம் எவ்வளவு முக்கியம் என்பதும் இங்கே புரிய வருகிறது.   குடும்ப வாழ்க்கையில் பெற்றோர் தலையீடும் இல்லை. ஒருவரை ஒருவர் அநுசரித்துப் போகாமல் நினைத்தால் சண்டை, பிறந்த வீடு செல்வது, உடனே விவாகரத்து என இருக்கும் இந்தக்கால கட்டத்துக்குத் தேவையான கதை.

காதல் செய்வதை விட அதைக் கல்யாணம் வரை கொண்டுபோவது கடினம் ஏனெனில் அந்தக் கல்யாணம் நிலைத்திருப்பதும் பெண், பிள்ளை இருவர் கைகளிலும் இருக்கிறது.  அந்த விஷயத்தில் ரகுராமனுக்கும் சரி, ஜானகிக்கும் சரி மன முதிர்ச்சி கொஞ்சம் அதிகமாவே இருக்கிறது.  எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துடன் குடும்ப வாழ்க்கைக்கும் தயாராக இருக்கின்றனர்.  

காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் இந்த மாறுபட்டக் காதல் கல்யாணம் குறித்துப் படித்துப் புரிந்து கொள்ள நேர்ந்ததும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  

இப்படியான பெண்கள் இன்னமும் வாழ்வதாலேயே அவர்களாலேயே நம் பாரம்பரியமும், கலாசாரமும், ஆசார அநுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதும் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்கிறது. இது அவ்வளவு விரைவில் மறையக் கூடிய ஒன்றல்ல என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. 

 

மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
     முதல் பரிசினை 
வென்றுள்ள மற்றொருவர் யார் ?

தொடர்ச்சியாக 


முதல் பரிசினை 


அதுவும் நான்காம் முறையாக


வென்றுள்ள 


’விமர்சன சக்ரவர்த்தி ’திரு. ரமணி 
முதல் பரிசினைத் தொடர்ச்சியாக வென்று வரும் 

விமர்சனச் சக்ரவர்த்தி  


திரு. ரமணி 


அவர்களின் விமர்சனம் இதோ: கதைக் களம் வங்கியாக இருப்பதால்

இது வங்கிக் காதலாகத்தானே இருக்க வேண்டும் ?

இது என்ன காதல் வங்கி  ?கதை என்று சொன்னால் ஒரு திருப்பம்

ஒர் அதிர்ச்சி ஒரு எதிர்பாராத புரட்சிகரமான முடிவு

எனவெல்லாம் தானே இருக்கவேண்டும் ?

எந்த வித சிறு அதிர்வும் இல்லாது

ஒரு சொகுசுப் பேருந்தில்

நேர்கோட்டுப்பாதையில் பயணிப்பதைப் போன்றுச்

செல்லும் இந்தக் கதை எந்த வகையில் சேர்த்தி ?மாற்றம் ஒன்றே மாறாதது .

காலச் சூழலுக்குத் தகுந்தாற்போல தன்னை

மாற்றிக் கொள்ளாத எதுவும்பிழைக்கமுடியாது

நிலைக்க  முடியாது எனவெல்லாம்

பயிற்றுவிக்கப்படுகிற இந்தக் காலத்தில்

பழமையை இன்னும் சரியாகச் சொன்னால்

பழைய பஞ்சாங்க வாழ்க்கை முறையை

சிறப்பித்துச் சொல்லும் இந்தக் கதையை

இதன் கருத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் ?இந்தக் கதையைப் படித்து முடித்ததும்

இப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம்  உங்களுக்குத்

தோன்றினால் நிச்சயம் தவறே இல்லை

தோன்றவில்லையெனில்தான் அது தவறுஏனெனில் ஒரு படைப்பைப் படிக்கிற அனைவரும்

டைப்பாளியின் போக்கில்  அவரது நோக்கில்

படித்துப் பின் அதை நம் போக்கில் புரிந்து கொள்ள

முயலுகிற வழக்கம் எல்லாம் மாறி

வெகு காலமாகிவிட்டதுநாம் எல்லோரும் எல்லாவற்றிலும் சரியோ தவறோ

ஒரு கருத்துகைக் கொண்டிருக்கிறோம் அல்லது

ஒரு கருத்தைக் கொள்ளும்படியாக

பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்நம் கருத்துக்கு ஒத்துப் போகிற கதையெனில்

அதிலுள்ள பிற சிறப்பு அம்சங்கள் குறித்து

அலசி ஆராயத் துவங்குகிறோம்.மாறாக இருப்பின்

அப்படைப்பைக் குதறித் தள்ளத் தயாராயிருக்கிறோம்

அல்லது கண்டு கொள்ளாது புறக்கணித்து

ஒதுங்குகிறோம்இந்தக் கதையை விமர்சிக்கும் முன்னால் இவ்வளவு

நீண்ட முன்னுரை எழுதுவதன் காரணமே

இந்தக் கதை இப்படி இரண்டு எல்லைக் கோட்டின் அருகில்

இருந்து ஆராயாது இயல்பாக அணுகி ரசிக்கவேண்டிய

கதை என்பதால்தான்பொதுவாக வங்கியெனச் சொன்னால் பணம் போடும் இடம்

எடுக்கும் இடம் என்பதைவிட பணம் இருக்கும் இடம்

எனத்தான் நாம் பொருள் கொள்கிறோம்அந்த வகையில் இந்தக் காதல் வங்கிக்கான

பொருளாக காதல் இருக்குமிடம் நிலைக்குமிடம்

எனச் சொல்லலாம்அடுத்ததாக காதல்

உலகில் அனைத்து மொழிகளிலும் அதிகமாக

விளக்கம் சொல்லப்பட்ட இன்னும் மிகச் சரியாக

விளக்கம் சொல்ல முடியாத சொற்கள் எனச் சொன்னால்

அது நிச்சயம் கடவுள்,கவிதை,காதல் என்கிற

மூன்று சொற்களாகத்தான் இருக்கமுடியும்இந்தக் கதை பூடகமாக அந்தக் காதலுக்கு

அருமையான விளக்கம் சொல்லிப்போகிறது

என்றால் நிச்சயம் மிகையில்லைமனித வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக

உணவு, உடை ,இருப்பிடம் எனச் சொல்வதைப்போல

உண்மையான காதலுக்கு உடல் ,உணர்வு,ஆன்மா

இவைகளின்  ஒத்திசைவு அவசியத் தேவைஒரு உடல் வெறி கொள்ள 
ஒரு உடல் மறுப்பது எனில் 
அது காமக் காதல்இருவரின் உடல் மட்டும் 
ஒத்துச் செல்கிறது எனில் 
அது மிருகக்காதல்இருவரின் உடலும் உணர்வும் 
ஒத்துச் செல்லுகிறதெனில் 
அது சராசரிக் காதல்ஆன்மா மட்டுமே 
ஒத்துச் செல்லுகிறதெனில்

அது தெய்வீகக் காதல் 

எனச் சொல்லலாம்இன்னும் சுருக்கமாகச் சொன்னால்

உடலில் துவங்கி  உணர்வில் வளர்ந்து

ஆன்மாவில் நிலை கொள்கிற காதலை விட

ஆன்மாவில் துவங்கி உணர்வில் வளர்ந்து

உடலில் முடிவில் சங்கமிக்கிற

(அல்லது சங்கமிக்காமலே போகிற ) 
காதலே நிச்சயமாக தெய்வீகக் காதல்ஜானகி ரகுராமன் காதல் நிச்சயம்

தெய்வீகக் காதல்தான்இதைப் பூடகமாகச் சொல்லத்தான்

நாம்புரிந்து கொள்ளும்படியாகச் சொல்லத்தான்

ஜானகியின் தாயாரை நமக்காக சில சராசரி

மனிதர்கள் நோக்கில் (அவர் அப்படி இல்லையென்றாலும் )

சில கேள்விகள் எழுப்பச் செய்து அதற்கு

ஜானகி மூலம் அருமையான விளக்கமளிக்கிறார்அவர் விளக்கம் மூலமே இது சராசரி

வங்கிக்காதல் இல்லை

இது காலம் கடந்து நிலைக்கிற காதல் வங்கி

என்பதுமிக எளிதாய் நமக்குப் புரிந்து போகிறதுபயண இலக்கு  மிகத் தூரமாக இருப்பவர்களுக்கு

அதிக வளைவு நெளிவுகளற்ற

நான்கு வழிச் சாலைகள் தான் ஏற்புடையது

என்பதைப்போலமிக உயர்ந்த நோக்கத்திற்காக கதை சொல்ல

நினைப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூட்டுவதற்காக

செய்யப்படுகிற நெளிவு சுழிவு யுக்திகள்

(எதிர் கதாபாத்திரங்கள், முரண் நிகழ்வுகள் )

நிச்சயம் தேவையில்லை. குறிப்பாக இந்தக்

கதைக்கு அது தேவைப்படவில்லைமுடிவாக ஏன் எதற்கு என்கிற கேள்விகளைத்

தொடர்ந்து நம் செயல்பாடுகள் இருக்குமாயின்

கலாச்சாரப் பண்பாட்டுக் குழப்பங்கள் நேர

வாய்ப்பே இல்லைஉடல் ஆரோக்கியத்திற்கு உணவு என்பது போய்

அது நாக்கிற்கு என ஆனதைப் போலசீதோஷ்ண நிலையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள

உடை என்பது போய் பகட்டுக்கு என ஆனதைப் போலவாழ்வின் தேவைக்குத் தேவையான பொருட்கள்

என்பது போய் தன் செழுமையைக் காட்டுவதற்கு

என ஆனது போலவாழ்வின் தேவைக்கு வேலை என்பது போய்

வேலைக்காக வாழ்வது என்பது போலசிறந்த வாழ்வுக்கு காதல் என்பது போய்

உடலுறவுக்கு தலைவாசல் காதல் என்பது போலவாழ்வின் அனைத்து நிலைகளிலும் மாறுதல்கள்

புதுமைகள் புரட்சிகள் என்கிற பெயரில்

அர்த்தமற்ற அழிவைத் தருகிற போக்கே தொடர்வதற்குப் பதில்

அர்த்தமுள்ள உயர்வைத் தருகிற உன்னதமான

பழமையும் பழைய பஞ்சாங்கமுமே தொடரலாமோ

என்கிற ஆதங்கம் அனைவர் மனதிலும்

இன்றையச் சூழலில் வரத்தான் செய்கிறதுமாறுதலும் புதுமையும் உயர்வையும் நன்மையையும்

தருமாயின் வரவேற்கத்தக்கதே.


அதுவே அழிவையும் நலிவையும் தருமாயின்

நிச்சயம் மாறுதல்களை நாம்

மறுபரிசீலனை செய்யத்தான் வேண்டும் எனும்

ஒரு திடமான கருத்தை இக்கதை நம்முள்

ஏற்படுத்திப் போவது நிஜம்சென்ற விமர்சனப் போட்டியில் திரு, ரமணி அவர்கள்

அலசி காயப்போடுவது மட்டுமல்ல விமர்சனம் எனக்

குறிப்பிட்டிருந்தார். அதுவும் சரிதான்.


[ ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதுவும் சரிதான் !! 
தங்களைத் தாங்களே மறைத்துக்கொள்ள  
அருமையானதோர் டெக்னிக் - ரஸித்தேன். vgk ;))))) ]என்னைப் பொருத்தவரை விமர்சனம் என்பது

ஒரு ஸ்தலத்தைச் சேவிக்கச் செல்பவன் அந்த

ஸ்தலப் புராணத்தைத் தெரிந்து கொண்டு சேவித்தல்

எத்தனைச் சிறப்போ அதைப் போலகதையின் அந்தராத்மாவை புரியச் சொல்லி விட்டு

வாசகனை அவன் போக்கில் கதையை படிக்கத்

தூண்டுவதும் நல்ல விமர்சனமாக இருக்க முடியும்அதனாலேயே கதையின் சுருக்கத்தை  சிறந்த

வரிகளைக் கோடிட்டுக் காட்டும் (அதிகப் பிரசங்கி )

வேலையை நான் செய்யவில்லைஒரு நெல்லை நூறு நெல்லாக பெருக்கிக் காட்டுதல்

மூலம் ஒரு நிலம் செழுமையான நிலம் என

தன்னை நிரூபிப்பதைப் போலஒரு சிறுகதை வாசகனுக்குள் பல்வேறு தொடர்

சிந்தனைகளை  பெருக்கிப் போகிறதெனில் 
அதுதான் மிகச் சிறந்த கதை ....


வேறு அத்தாட்சிகளும் சான்றிதழ்களும் அதற்கெதற்கு ?கதையைப் படிப்பவர் அனைவரின்

சிந்தனை விளக்கைச் சிறப்பாகத் தூண்டி

நன்றாக ஒளிவிடச் செய்யும்

அற்புதமான கதையைத் தந்தமைக்கு

மிக்க நன்றியும் தொடர வாழ்த்துக்களும்  வை.கோ. சார் .  மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

இனிய நல்வாழ்த்துகள்.  
    

    


    
மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் ஏற்கனவே 

வெளியிடப்பட்டுள்ளன.இணைப்புகள்:

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-03-03-third-prize-winner.html


http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-02-03-second-prize-winners.htmlகாணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் விழுவது எழுவதற்காகவே 


என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் 


இந்தக்கிளியைப் பாருங்கள் !
போட்டியில் 


உற்சாகமாக 


தொடர்ந்து 


கலந்துகொள்ள


மறவாதீர்கள் !!இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 


http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html


கதையின் தலைப்பு:”உடம்பெல்லாம் உப்புச்சீடை !”

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


27.02.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் 


போட்டி எண்: VGK 05 + VGK 06


ஆகிய இரு கதைகளுக்குமோ அல்லது 


அவற்றில் ஏதாவது ஒன்றுக்கோ


விமர்சனம் எழுதி  அனுப்புபவர்கள் 


மிகவும் அதிர்ஷ்டசாலிகளே !ஏனென்றால் அவர்களுக்கு 


'முதல் பரிசு' பெறும் 


வாய்ப்புகள் ஏராளம் ..... ஏராளம் !
இதுவரை விமர்சனச் சக்ரவர்த்தியாகத் 


திகழ்ந்து வரும்


திரு. ரமணி அவர்களின் இடத்தையே கூட


மிகச்சுலபமாக உங்களால் பிடித்துவிட முடியும்.புரிந்து கொள்ளுங்கள் !உடனே விமர்சனம் 


எழுதி  அனுப்புங்கள் !!

*வாழ்த்துகள் *

என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்