என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 29 பிப்ரவரி, 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of 8 ]



ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-13


ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை
பகுதி 2 of  8






4. சுந்தரகாண்டம் முழுவதும் ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் மஹிமையை வர்ணிப்பது தான். முதல் ஸர்கத்தில் மஹேந்திரமலை மேல் ஏறி மிகப்பெரிய உருவத்தை எடுத்துக்கொண்டும், கர்ஜனை செய்துகொண்டும், மலைகளைக் கால்களால் மிதித்ததில் மலைப்பாறைகள் நொறுங்கி நாலா பக்கங்களும் சிதறிற்று. 

ஸ்ரீ ஆஞ்ஜநேயரின் திருவடிகளை பூஜிப்பவர்களுக்கு மலைபோல கஷ்டங்கள் வந்தாலும், மலை நொறுங்குவது போல உடனடியாக நீங்கிவிடும் என்பதைக் காட்டுகிறது.    

5. ராமபாணம் போல் ஆஞ்ஜநேயர் சமுத்திரத்தின் மேல் போகிறார் என்று வால்மீகி முனிவர் சொல்வதிலிருந்து ராமபாணம் எப்படிக் குறி தப்பாதோ அப்படிச் சுலபமாக சமுத்திரத்தைத் தாண்டி அக்கரை போய்ச்சேர்வார். 


பாணத்தை ஒருவர் குறிவைத்து நாண்கயிறு ஏற்றினால் தானே போகும்! அதேபோல் தானாகப் போகவில்லை; ஸ்ரீராமரின் க்ருபையால் தான் இந்த அகண்ட சமுத்திரத்தை என்னால் தாண்ட முடியும் என்று ஆஞ்ஜநேயர் எண்ணினார்.


தான் செய்கிறோம் என்ற கர்வமில்லாமல் வினயத்துடன் இருப்பவர்களால் தான் பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  


6. சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு வம்ச அரசனான சகரனால் உண்டாக்கப் பட்டதால், ஸ்ரீராமருடைய காரியமாய் வரும் ஹனுமாருக்கு உதவி புரிய நினைத்து கடலில் மூழ்கியிருக்கும், மைனாக மலையைத் தூண்டிவிட்டு, மேலே எழும்பி வரும்படிச் செய்து, ஆஞ்ஜநேயரை மலைமேல் உட்கார்ந்து இளைப்பாறச் செய்து, கிழங்குகள் பழங்கள் முதலியன அவருக்குக் கொடுத்து ஸத்கரிக்கும்படி சொன்னார்.


மைனாக மலையும் மேலே எழும்பிவந்து,  ஹனுமாரை இளைப்பாறி விட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. வாயு பகவானால், மைனாக மலை இந்திரனிடமிருந்து காப்பாற்றப் பட்டதால், வாயு குமாரருக்கு உதவி செய்ய தானும் கடமைப்பட்டிருப்பதாக மைனாக மலையும் நினைத்தது.


ஆனாலும் ஸ்ரீ ஹனுமார் என்ன நினைத்தார் தெரியுமா?


ராம பாணத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கிற காரணத்தினால் மைனாக மலை மேல் தான் இளைப்பாறக்கூடாது. ராம பாணம் குறி தப்பாது. அதன் வேகத்தை மைனாக மலை தடுக்க முயற்சி செய்கிற மாதிரி ஆகிவிடும். ராமபாணத்தின் மதிப்பையும் குறைப்பதாக ஆகி விடும். உப்புக்கடலின் நடுவே பலவிதமான கிழங்குகளும் பழங்களும் கிடைப்பது ஒரு பெரிய ஆச்சர்யம் தான். 


நம் போன்றவர்கள் ஏதாவது உபாசனம் செய்து வரும்போது ஸித்திகள் வரும். அதில் நாம் மனதை வைத்துவிடக்கூடாது. அவ்வாறு மனதை வைத்துவிட்டால் நமக்கு பகவத் அனுபவம் கிடைக்காமல் போய் விடும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


பகவத் க்ருபைக்குப் பாத்திரமானவர்களை மனைவி, புத்திரர், உறவினர் ரூபத்தினாலும், ஸித்திகள் மூலமாகவும் தொந்தரவு கொடுத்து, மேலே ஏறி வரவிடாமல் இருப்பதற்கு, தேவதைகள் பெரிதும் முயற்சிப்பார்கள்.


ராம பக்தனுக்கு, சமுத்திர ராஜன் தூண்டுதலில், மைனாகமலை ஸ்ரீ ஹனுமனைத் தன்னிடம் ஸத்கரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கே, இந்திரன் தன் சாபத்தை விலக்கிக்கொண்டு, தன்னிடம் இனிமேல் பயம் இல்லாமல் சுதந்திரமாக எங்கும் சஞ்சரிக்கலாம் என்று மைனாக மலைக்கு வரம் கொடுத்து விட்டார்.


இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது:


ஒருவர் மூலமாகவோ அல்லது தானாகவோ, ஒரு பக்தனுக்கு கைங்கர்யம் செய்தாலோ அல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாலோ, நமக்கு இருக்கிற பயம், பாபம், ஊழ்வினை இவைகள் எல்லாம் மறைந்து போகும்.





தொடரும்




இதன் அடுத்தடுத்த பகுதிகள் 
01.03.2012 முதல் 07.03.2012 வரை 
தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு 
மேல் வெளியிடப்படவுள்ளன.
அன்புடன் vgk 

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of 8 ]



ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-12


ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை 
பகுதி 1 of  8




ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு ஸ்ரீமத் சுந்தர காண்டத்தில் உள்ள பக்தியின் பெருமை சொல்லில் அடங்காது. தன் வாழ்நாட்களில், சுந்தர காண்டத்தில் எவ்வளவு ஸ்லோகங்கள் உள்ளனவோ அவ்வளவு முறைகள் அதாவது சுமார் 3000 ஆவர்த்திகள், தினம் முழுகாண்டத்தையும், ஸ்ரீகுருவாயூர், காஞ்சீபுரம், திருப்பதி, திருத்தணி, நாமக்கல் போன்ற க்ஷேத்ரங்களிலும் மற்றும் அநேக ஆஞ்ஜநேயர் கோயில்களிலும் ஆத்மார்த்தமாக பாராயணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ”ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாவுகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது”  என்று உமாசம்ஹிதையில் ஸ்ரீபரமேஸ்வரன் கூறுகிறார்.

ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் பெருமைகளைப்பற்றி ஸ்ரீ ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களிடம் சொல்லியிருப்பதில் முக்கியமான சிலவற்றை கீழே பார்ப்போம்:

1. உமா சம்ஹிதை என்ற புத்தகத்தில் ஸ்ரீ பரமேஸ்வரனே உமாதேவியிடம் சொன்ன ஒரு ஸ்லோகம்:-


ஈஸ்வர உவாச:-

“கிம்பஹூத்தேன கிரிஜே யாம்ஸித்திம் படனான்னர:
ஸ்ரீமத் சுந்தரகாண்டஸ்ய ந லபேத ந ஸாஸ்தி ஹி”  

“ஸ்ரீமத் சுந்தரகாண்ட பாராயணத்தால் மனிதனுக்கு கிடைக்காத ஸித்திகளே இல்லை” என்று பொருள்.


2. ஒரு சமயம் ஸ்ரீ மஹா பெரியவாளிடம் ஒரு வேத பிராமணர், தான் வயிற்று வலியால் ரொம்ப சிரமப்படுவதாகவும், எந்த ஒரு வைத்தியனாலும் குணம் தெரியவில்லை என்று சொன்னபோது, ஸ்ரீ மஹாபெரியவாள், ”ஸ்ரீமத் சுந்தரகாண்டத்திலிருந்து ஒரு ஸர்க்கம் தினம் போஜனத்திற்கு முன் பாராயணம் செய்யேன்” என்று சொல்லி அருளுகிறார். அவரும் இந்த மாதிரி பாராயணம் செய்து, வியாதியிலிருந்து பூர்ண குணமடைந்து விட்டதாக ஸ்ரீபெரியவாளிடம் திரும்ப வந்து சொல்கிறார். 


”சுந்தரகாண்டத்தில் ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு மந்த்ரம்” என்றும் அவரிடம் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாள் சொல்லியிருக்கிறார். 


3. ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் முதல் ஸ்லோகத்தின் முக்கிய கருத்து ஸ்ரீ ஆஞ்ஜநேயர் ஆசார்யன் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜீவாத்மாவான ஸ்ரீ சீதா தேவியை பரமாத்வாவான ஸ்ரீ ராமருடன் சேர்த்து வைக்கிறார். 


ஆசார்யனின் கடமை பூர்வாச்சார்யார்கள் சென்ற வழியைப்பின்பற்றி ஜீவாத்மாவின் பக்தியைப்பற்றி பரமாத்மாவிடம் எடுத்துச்சொல்லியும், பரமாத்மாவின் பரமகல்யாண குணங்களை ஜீவாத்மாவுக்கு எடுத்துச்சொல்லியும் இரண்டு பேரையும் சேர்த்து வைப்பது தான்.


ஆச்சார்யன் எப்படியிருக்க வேண்டும் என்பதைக்குறிக்க ஸ்ரீ ஆஞ்ஜநேயர் பெரிய காளை மாடு போலவும், பெரிய சிங்கம் போலவும் இருக்கிறார் என்று வால்மீகி முனிவர் வர்ணிக்கிறார். 


காளை மாடு கடும் வெயில், மழையைப் பற்றி கவலைப்படாமல் நிமிர்ந்து நடைபோடும். சிங்கம் கம்பீரத்துடன் எல்லாக் காட்டு மிருகங்களுக்கும் தலைவனாய் இருக்கும். 


ஆசார்யன் தனக்கு வரும் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல், தைர்யமாக இருந்து கொண்டு, தன்னிடம் வரும் பக்தர்களை தன் உபதேசத்தால் பகவானை அடைய உதவி புரிய வேண்டும். 


ஸ்ரீ ஆஞ்ஜநேயரை பூஜித்தால் நமக்கு இந்த அரிய லாபம் கிடைக்கும்.








தொடரும் 

பலி ஆடுகள் !

பலி ஆடுகள் !



ஒரு ஊரில் ஒரு விவசாயி ஒரு குதிரையும் ஒரு ஆடும் வளர்த்து வந்தார். 

ஒரு நாள் உடல் நலமில்லாமல் போய் விட்ட அவரின் குதிரைக்கு வைத்தியம் செய்ய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டார். 

குதிரையைப் பரிசோதித்த அந்த வைத்தியர் குதிரைக்கு வைரஸ் நோய் தாக்கியிருப்பதாகவும், மூன்று நாட்களுக்கு இந்த மருந்தினைக்கொடுத்து சரியாகிறதா என்று பார்க்கலாம் என்றும், தான் மீண்டும் மூன்று நாட்களுக்குப்பிறகு வருவதாகவும், ஒருவேளை சரியாகாமல் போனால் நாம் அதனைக் கொன்று விடுவதே நல்லது என்றும் சொல்லி விடுகிறார்.

இந்த இவர்களின் சம்பாஷனைகளை அருகே நின்ற அந்த ஆடு உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது.மறுநாள் குதிரைக்கு மருந்து செலுத்தி விட்டு அவர்கள் புறப்பட்டு விட்டனர்.

அந்த ஆடு குதிரையிடம் வந்து “நண்பா! நீ உற்சாகமாக இரு; ஓய்ந்து படுக்காதே; உடனே எழுந்திரு; சுறுசுறுப்பாக என்னுடன் நடந்து வா; இல்லாவிட்டால் அவர்கள் உன்னை ஒரு வழியாகத் தூங்கச்செய்து விடுவார்கள்” என்றது. ஆனாலும் குதிரையால் ஆடு சொன்னது போல உடனே செய்ய முடியவில்லை.

இரண்டாம் நாளும் குதிரைக்கு மருந்து செலுத்தி விட்டுச் சென்றார்கள்.

இரண்டாம் நாளும் ஆடு குதிரையிடம் வந்து அதை உற்சாகப்படுத்தி எழுந்து வருமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டது. அவ்வாறு செய்யாவிட்டால் நீ நிச்சயம் இறக்க நேரிடும் என்று எச்சரித்ததோடு, ”வா ... என்னோடு புறப்படு ... நான் உனக்கு உதவுகிறேன்” என்று ஆறுதலாகப்பேசி அதனை எழுப்ப முயன்றது.  ஆனால் குதிரை எவ்வளவோ முயன்றும் அதனால் அது போலச் செய்ய முடியவில்லை.

மூன்றாவது நாளும் மருந்து அளித்து சிகிச்சை செய்த வைத்தியர், குதிரையின் உடல்நிலையில் துரதிஷ்டவசமாக எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை. எனவே இதை நாம் நாளைய தினமே கொன்று விடலாம். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த வைரஸ் ஊரில் உள்ள மற்ற எல்லாக்குதிரைகளுக்கும் பரவிடக்கூடும் என்று சொல்லிவிட்டுப்போனார். 

அவர்கள் சென்ற பிறகு ஆடு குதிரையிடம் மீண்டும் வந்தது, 

”நண்பா, நான் சொல்வதை இப்போது நீ கவனமாகக் கேட்டுக்கொள். இதுவே உனக்கு இறுதி வாய்ப்பு; உடனே மன உறுதி கொண்டு எழுந்திரு; வலிமையுடன் தைர்யமாக என்னுடன் ஓடி வா ,,,,, உம் ,,, அப்படித் தான் ,,,, சபாஷ் ,,,,, உன்னால் நிச்சயம் முடியும் ..... அப்படித்தான் .... மெதுவாக ..... வெரி குட் ..... அவ்வளவே தான் ..... இப்போ வா ,,,,,  ஒன் .... டூ ..... த்ரீ ... சூப்பராக உன்னால் இப்போது ஓட முடியும் ..... முயற்சி செய் ..... இது பத்தாது ..... இன்னும் சற்றே வேகமாக ..... எஸ் ,, எஸ் ,,,, குட் ,,,, வெரிகுட் ...  அவ்வளவு தான் ... உன்னால் பழையபடி நடக்க முடிகிறது; 

நிச்சயமாக உன்னால் ஓடவும் முடியும்; முயற்சி செய் .... உன் உடல் மிகவும் நன்றாகத் தேறிவிட்ட்து ... இனி எந்தக்கவலையோ பிரச்சனையோ இல்லை, உன்னால் இனி பழையபடி வேக வேகமாக இயங்க முடியும்” என்று சொல்லி மிகவும் தன்னம்பிக்கையை அளித்தது.



அதே நேரம் அந்த பண்ணை உரிமையாளரான விவசாயி அவ்விடம் வந்தவர் தன் குதிரை பழையபடி எழுந்து இங்குமங்கும் துள்ளி ஓடுவதை கவனித்து விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்: 


“ஆஹா. என் குதிரை அபூர்வமாக தெய்வ சக்தியால் மட்டுமே ஆச்சர்யமாகப் பிழைத்துக் கொண்டுள்ளது; 

MIRACLE தான் நடந்துள்ளது. இந்த ஆட்டினை அடித்துப்போட்டு கொன்று, விருந்து ஏற்பாடுகள் செய்து, இந்தக்குதிரை பிழைத்து விட்டதை நாம் நாளை கொண்டாடியே ஆக வேண்டும்” என உரக்கக்கத்திச் சொல்கிறார்.  


-oOo-


இது போன்ற அநீதிகள் ஆங்காங்கே இன்றும் நடைபெற்றுக்கொண்டு தான் வருகின்றன.

ஒரு வெற்றிக்கான உண்மையான காரணம் என்ன? யார் இந்த வெற்றிக்குப் பின்னனியில் உழைத்துள்ளார்கள்? யாருக்கு வெற்றிக்கான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்? என்பதையே அறியாமல் ஏதேதோ தவறுகள் இழைக்கப்பட்டு விடுகின்றன.  

உண்மையான உழைப்பாளியின் உழைப்பு சுரண்டப்பட்டு வருகிறது. யாரோ செய்த கடும் வேலைகளுக்கான, உண்மை உழைப்புக்கான பாராட்டும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் சம்பந்தமே இல்லாத வேறு சிலருக்கு போய்ச்சேர்ந்து, அனாவஸ்யமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெற்றிக்கு உண்மையாக உழைத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டு,  விரக்தியடைய நேரிடுகிறது. அவர்களின் இந்த நிலை இன்று ’பலி ஆடுகள்’ நிலையில் தான் உள்ளன.

உரிய அங்கீகாரம் இல்லாமலும் வாழப்பழகுவது என்பதை நாம் கற்றுக்கொள்வதும், நம் தனித்திறமைக்கு எடுத்துக்காட்டு தான் என்பதை, நாம் நினைவில் கொள்வோம்.

”உன்னுடைய வேலையும் உழைப்பும் தொழிற்கல்வி சார்ந்தது அல்ல” என்று யாராவது நம்மிடம் சொல்லி வெறுப்பேற்றினாலும் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டாம்.

தொழிற்கல்வி கற்காமலேயே அனுபவம் வாயிலாகக் கட்டப்படும் பாய்மரக் கப்பல்களும், படகுகளும், சிறுசிறு தோணிகளும், பரிசல்களும் பாதுகாப்பாகவே கரை சேர முடிகிறது.

தொழிற்கல்வி கற்ற நிபுணர்கள் செய்யும் ’டைட்டானிக்’ போன்றவைகள் தான் அனைத்து உயிர்களையும் ஒட்டுமொத்தமாக மரணமடையச்செய்து விடுகின்றன.


-oOo-


[என்றோ மின்னஞ்சல் மூலம் 
நான் ஆங்கிலத்தில் படித்த செய்தியினை 
சற்றே தேவையான மாற்றங்கள் செய்து 
சிறுகதையாக்கித் தமிழில் தந்துள்ளேன். vgk]

பார்த்தால் பசி தீரும் !

வாழைப்பழத்தை உரித்ததும் 
அப்படியே சாப்பிடுபவர்களா நீங்கள் ?

என்னங்க நீங்க! 
எதிலும் ஒரு 
கலையுணர்வு வேண்டாங்களா!

கீழே ஒருவர் 
வாழைப்பழத்தை உரித்ததும்
என்ன செய்துள்ளார் 
பாருங்களேன்!

’பார்த்தால் பசிதீரும்’ 
அல்லவா!! 




அன்புடன்
vgk

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி



சித்திரம் பேசுதடி ... 
எந்தன் சிந்தை மயங்குதடி


கனிந்த நட்பு
[ தோலுரிக்கப்பட்டு சுயரூபம் 
தெரியும் வரை நீடிக்குமோ! ] 


”இவர் தான் உங்கள் அப்பாவான 
சேவலைக் கொன்றவர்” 
தாய்க்கோழியின் தகவல், 
தன் குஞ்சுகளிடம்!

[பிஞ்சுக் குஞ்சுகளின் மனதில் 
நஞ்சை வார்த்து விட்டதே]


ஆஹா! 
நம் நாடு எங்கேயோ போய்விட்டது!
[ வலைப்பதிவராக இருப்பாரோ? ]


ஏறட்டுமே பெட்ரோல் விலை
[இனி நமக்கென்ன கவலை?
லோன் கொடுப்பவரல்லவா 
கவலைப்பட வேண்டும்!]

பாவம் அந்தப் பிரச்சனைக்குரிய பெண்
[ ஆணாதிக்கம் ஒழிக!]


கூட்டாக பலரும் சேர்ந்து செய்யும் வேலைகளில் 
சரியான திட்டமிடலும், தகவல் பரிமாற்றமும்
இல்லையேல் இப்படியும் ஆகும் தானே!




=oOo=

I Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]

I Q  TABLETS 
[ ஐக்யூ டாப்லெட்ஸ்]


நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒரு ஆச்சாரமான தென்னிந்தியரும் ஒரு வெள்ளைக்கார துரையும் சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்தனர்.  

சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு எட்டு மணிக்குக் கிளம்பிய ரயில் மறுநாள் காலை ஏழு மணிக்கு விஜயவாடாவை அடைந்தது. வெள்ளைக்கார துரை ஏற்பாட்டின் படி அவருக்கு மிகவும் பிரமாதமான அருஞ்சுவையுடன் கூடிய அனைத்துக் காலை சிற்றுண்டிகளும் பணியாள் ஒருவரால் வழங்கப்பட்டன.


தென்னிந்தியர் தனது நாலு அடுக்கு டிபன் கேரியரின் முதல் அறைலிருந்து இரண்டே இரண்டு இட்லிகளை மட்டும் எடுத்து சாப்பிட்டார்.


அதே போல ’வால்டேர்’ என்று அன்று அழைக்கப்பட்ட தற்போதைய விசாகப்பட்டிணத்தில் வெள்ளைக்கார துரைக்கு ரெயில்வே சிற்றுண்டி சாலையால், மிகப்பெரிய அளவில் மிகச் சிறப்பான மதிய சாப்பாடு விருந்தாகவே அளித்து மகிழ்விக்கப்பட்டது.

இப்போதும் நம் தென்னிந்தியர் தனது டிபன் கேரியரின் இரண்டாவது அடுக்கிலிருந்து நான்கு இட்லிகளை மட்டுமே எடுத்து சாப்பிட்டார்.


இந்த மனிதரைப் பார்த்து அந்த வெள்ளைக்காரர் மிகவும் வியந்து போனார். அவருக்கு இவரின் செயல் ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. என்ன நடக்கிறது இங்கே என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தும் ஏனோ ஒரு தயக்கத்தில், தொண்டை வரை வந்த சொற்களை வாயிலிருந்து வெளியே விடாமல், நாகரீகம் என்ற பெயரில் அமைதியாகவே இருந்து விட்டார்.

இதே செயல் இரவு எட்டு மணிக்கு ’பெர்ஹாம்பூர்’ என்ற ஸ்டேஷன் வந்ததும், மீண்டும் இரவு டின்னர் நேரத்திலும் நடந்ததால், வெள்ளைக்காரரால் பொறுமையாக இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

“ஐயா, நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வேளா வேளைக்க்ச் சாப்பிட்டு வரும் அந்த வெள்ளைப் பண்டம் என்ன?” என்றார்.

“ஐயா, இதன் பெயர் " IQ Tablets [ ஐக்யூ டாப்லெட்ஸ்]”; 


தென்னிந்தியர்களாகிய எங்களால் இதை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு, பேரெழுச்சியுடன் ஒருசில நாட்கள் கழித்து விட முடியும்” என்றார் நம்மாளு.

“ஆஹா! அப்படியா, மிக்க மகிழ்ச்சி!! இதை எப்படித் தயார் செய்கிறீர்கள் என்பதை எனக்குத் தாங்கள் சற்றே விளக்கமாகச் சொல்ல முடியுமா?” என்ற மிகுந்த ஆவலுடன் கேட்டார் அந்த வெள்ளைக்காரர்.

தென்னிந்தியரும், அதற்குத் தேவையான மூலப்பொருட்கள், அவைகள் தயாரிக்கும் முறைகள் முதலியவற்றை மிகவும் சிரத்தையுடன் அழகாக அற்புதமாக விபரமாக விளக்கிக் கூறினார்.

இதைக்கேட்டு மகிழ்வடைந்த வெள்ளைக்காரர், “எனக்கு அதில் இரண்டைத்தர முடியுமா? தாங்கள் எனக்கு இலவசமாகத் தர வேண்டாம். அதற்கு எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அதை நான் தங்களுக்குத் தந்து விடுகிறேன்” என்றார்.

ஒரு நிமிடம் தயங்கி யோசித்த தென்னிந்தியர் பிறகு பேசலானார்:

“ஐயா, என்னிடம் மீதியுள்ளது மூன்றே மூன்று மட்டுமே; அதை நான் நாளை காலையில் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் சாப்பிடலாம் என்று நினைத்திருந்தேன்; 

இருப்பினும் நான் ரயிலிலிருந்து இறங்கியவுடன், அருகில் உள்ள என் சொந்தக்காரர் வீட்டுக்குப் போக இருப்பதால், அங்கு காலை சிற்றுண்டி எனக்கு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை நான் எப்படியும் சமாளித்துக் கொள்வேன்;

நீங்கள் என்னிடம் ஆசைப்பட்டுக் கேட்பதால் உங்களுக்கு அவற்றைத் தருவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு IQ Tablet [ஐக்யூ டாப்லெட்] ரூபாய் 20 ஆகுமே” என்றார். 

[ இந்தச் சம்பவம் நடைபெற்ற காலக்கட்டத்தில் விலைவாசிகள் மலிவோ மலிவு - ஒரு இட்லி 5 பைசா; ஒரு ரூபாய்க்கு 20 இட்லிகளும், 20 ரூபாய்க்கு 400 இட்லிகளும், 60 ரூபாய்க்கு 1200 இட்லிகளும் கிடைத்த காலம் அது ] 

இதைக்கேட்டதும் அந்த வெள்ளைக்காரருக்கு ஒரே மகிழ்ச்சி. தனக்கு இன்று அந்தப்பொருள் கிடைப்பதற்கான தன் அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்து போய், மகிழ்ந்து போய், உடனடியாக 3 டாப்லெட்ஸ்களையும் [இட்லிகளையும்] பெற்றுக்கொண்டு, ரூபாய் 60 பணமும் கொடுத்து விட்டார். டாப்லெட்ஸ்களை [இட்லிகளை] உண்டுவிட்டு தூங்கிப்போனார், வெள்ளைக்காரர். 

மறுநாள் காலை ஹெளரா ஸ்டேஷனில் இருவரும் பிரிய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. 

வெள்ளைக்காரர் கண் விழித்தெழுந்ததும் தென்னிந்தியரைப் பார்த்து, “ஐயா, இந்தப்பொருளைச் செய்வது பற்றிய முழு செய்முறைகளும், ஒன்று விடாமல் எனக்குச் சொல்லி விட்டீர்களா! அல்லது ஏதாவது சிலவற்றை சொல்லும் போது நடுவில் விட்டு விட்டீர்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“சுத்தமாக ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விபரமாகச் சொன்னேனே, ஐயா” என்றார் தென்னிந்தியர்.

“அப்படியானால், பிறகு ஏன் இந்த டாப்லெட்ஸ் விலை மிகவும் அதிகமாக உள்ளன?” என்று கேட்டார், வெள்ளைக்காரர். 

.........
.............
....................
..........................
................................
.......................................
.............................................
.....................................................

“நான் தான் சொன்னேனே ஐயா, அவைகள் யாவும் IQ TABLETS [ஐக்யூ டாப்லெட்ஸ்] என்று; 

நேற்று இரவு தான், முதன்முறையாக நீங்கள் மூன்றே மூன்று டாப்லெட்ஸ் மட்டும் சாப்பிட்டுள்ளீர்கள்; 

அவை இப்போது நன்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டன பாருங்கள்; 

உங்களை நன்கு சிந்திக்க வைத்துள்ளன பாருங்கள். 

என்னிடம் கேள்விகள் கேட்கத் தூண்டியுள்ளன பாருங்கள்; 

அதனால் தான் அவைகளின் விலை சற்று அதிகம்; 

அப்போ நான் வரட்டுமா .....” 

என்று சொல்லி விடைபெற்று, ரயிலிலிருந்து இறங்கி விட்டார், அந்த புத்திசாலித் தென்னிந்தியர். 

-o-o-o-o-o-o-





[This is a short story in English forwarded by my friend VIJI of BHEL. 
Only the translation in Tamil is done by me - vgk]  

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை !


ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
பகுதி-11


ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை !




ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸம்தாத்ரத்தின் மஹிமையைக் கீழ்க்கண்டவாறு விளக்குவார்.

ஸ்ரீ தர்மபுத்ரர் ஸ்ரீ பீஷ்மரைக் கேட்டு அவரும் பதில் சொல்லி ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாளும் பாஷ்யம் பண்ணியுள்ளதன் கருத்து:-

1.ஸ்ரீ குருவாயூரப்பன் ஒருவனே தேவாதி தேவன்

2.அவன் தான் நாம் எல்லோரும் அடைய வேண்டிய இடம்

3.அவனை ஸ்தோத்ரம் செய்வதே பூஜையாகும்

4.அந்த ஸ்தோத்ரத்தை [அதாவது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை] பக்தியுடன் ஸதா ஜபிப்பதே எல்லாவற்றிலும் சிறந்த தர்மம்

5.பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்+பூஜை இரண்டையும் சேர்த்தே செய்ததாகும்.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பூர்வ பாகம் - 15 ஆவது ஸ்லோகம்:

ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோ திகதமோ மத: !
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை ராச்சே நரஸ் ஸதா !!    

6.விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபத்தால் இம்மையில் எல்லாம் கிடைத்து முடிவில் முக்தியும் கிடைக்கும்.

a)ஸ்ரீ பீஷ்மர் விஷ்ணு ஸஹஸநாம ஸ்தோத்ரத்தை தர்மபுத்ரருக்கு சொல்லும்போது ஸ்ரீ கிருஷ்ண பகவானே பக்கத்தில் இருந்தார்.

b)ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் பூர்த்தியானவுடன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை செய்யும்படி ஸ்ரீமத் பாகவத மஹாத்மியத்தில் ஸ்ரீ வியாசர் சொல்லியிருக்கிறார் (பத்மபுராணம் மாஹாத்மியம் 6 ஆவது அத்யாயம் 62/63 ஸ்லோகங்கள்). 


ஸப்தாஹ பாராயணத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் அதைப் போக்கிவிடும். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றுமே இல்லை.

THROUGH THAT, EVERY PERFORMANCE BIDS FAIR TO BECOME FRUITFUL 
IN AS MUCH AS THERE IS NOTHING MORE EFFICACIOUS THAN THAT. 



நாஸ்தியஸ்த்மாததிகம் யத: !!

c)எல்லா தர்மங்களிலும் மேலான தர்மம் இது. பலஸ்ருதியில் வரும் ஸ்லோகங்கள் எல்லாமே உண்மையானவை தான். EXAGGERATION இல்லை என்று ஸ்ரீ ஆதிசங்கரர் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். 

”த்யெள: சந்த்ரார்க்க நக்ஷத்ர” இத்யாதினா
ஸ்துத்யஸ்ய வாசுதேவஸ்ய மாஹாத்மய 
கதனேனோக்தானாம் பலானாம் ப்ராப்திவசன
யதார்தகதனம் நார்தவாத இதி தர்சய !!  

d)கர்ம மார்க்கத்திலும் யக்ஞம் பூர்த்தியானவுடன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். இந்த பாராயணத்தால் எல்லாக் கர்மாக்களும் நன்றாக பூர்த்தியானதாக பகவான் ஏற்றுக்கொள்வார்.

e)ஞான மார்கத்திலும் பாஷ்யம் முடிவில் ஆதிசங்கர பகவத் பாதாள் சகுணப்ரம்மமாகிற பகவானை சரணமடைந்தவர்களுக்கும் ப்ரம்ம சாக்ஷாத்காரம் ஏற்படும் என்று ஒரு ஸ்லோகம் சொல்லி பூர்த்தி செய்திருக்கிறார்.

ஸகுணஸரணாநாமபி அனாவ்ருத்தி ஸித்திரிதி

f)பலஸ்ருதியின் 6 ஆவது ஸ்லோகம்:

யச: ப்ராப்நோதி விபுலம் யாதி ப்ராதாந்யமேவ ச !
அசலாம் ச்ரியமாப்நோதி ச்ரேய: ப்ராப்நோத்யநுத்தமம் !! 

சுத்தமான கீர்த்தியை அடைவான். 
சுற்றத்தார்களுக்குள் முக்கிய ஸ்தானத்தில் இருப்பான்.

g)பலஸ்ருதியின் 8 ஆவது ஸ்லோகம்: @@@@

ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் !
பயாந் முச்யேத பீதஸ்து முச்யேதபந்த ஆபத:

இதன் கடைப்பையாதி ஸங்க்யைப்படி 632 தடவைகள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தால் ஸகல ரோகங்களும் நிவர்த்தியாகும்.        


h)பலஸ்ருதியின் 9 ஆவது ஸ்லோகம்:

துர்காணயதிதரத் யாசு புருஷ: புருஷோத்தமம் !
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித: !!

இதன்படி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை 538 ஆவர்த்திகள் செய்தால் எல்லாக் கஷ்டங்களும் நிவர்த்தியாகும்.

i) பலஸ்ருதியின் 4 ஆவது ஸ்லோகம்:

தர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ சார்ந்த மாப்நுயாத் !
காமநவாப்நுயாத் காமீ ப்ரஜார்த்தீ ப்ராப்நு சாயாத் ப்ரஜா !!

இதன்படி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை 782 தடவைகள் படித்தால் ஸத்புத்ர பாக்யம் ஏற்படும்.

j) ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் 1990 இல் ஒரு Devotee க்கு கீழ்க்கண்டவாறு அவர் கையால் எழுதிக் கொடுத்ததைப் பார்ப்போம்:

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண மஹிமைக்கு ஈடு இணையில்லை. அதுவே எல்லா க்ஷேமத்தையும் அளிக்கும். 

அதிலும் ஒரு விஷயம்; 
91 ஆவது தசகத்தில் ஸ்ரீ பட்டத்ரி, 
"சரித்திரம்+ நாமஜபம் இரண்டும் துல்லியமாக இருக்க வேண்டும்" 
என்று உபயத: என்ற வார்த்தையை மறுபடியும் சொல்கிறார். 
[91 ஆவது தசகம், 5 ஆவது ஸ்லோகத்தில்] 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தில் அவதார சரித்திரம் முழுவதும் அடங்கியுள்ளதாக “பட்டர்” என்ற வைஷ்ணவாசார்யார் வியாக்ஞானம் செய்துள்ளார். அதே நேரத்தில் நாம ஜபமும் ஆகிறது. 


ஆகையால் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண ஒன்றின் மூலம், ஒரு நாளில் எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஜபித்தால் இரண்டையும் [i.e. சரித்திரம், நாமஜபம்] செய்ததாகி விடுகிறது.”

k) ஸ்ரீ மஹாபெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்கும் முன், அங்கிருக்கும் சிஷ்யர்களை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை சொல்லும்படி சமிக்ஞை செய்வார்கள். [தலையில் கையினால் குட்டிக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள்; “சுக்லாம்பரதரம்” என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம் ]. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம். 

    -o-o-o-o-o-o-o-o-o-



பின்குறிப்பு

@@@@
ரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் !
பயாந் முச்யேத பீதஸ்து முச்யேதபந்த ஆபத:

[ இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தீராத கொடுமையான வியாதிகள் + ரோகங்கள் ஏற்பட்டு நம்மில் பலரும் சிரமப்படுகிறோம். நோய்வாய்ப்பட்டு பல நாட்கள் ஆஸ்பத்தரியிலோ வீட்டிலோ படுத்த படுக்கையாகிறோம். எவ்வளவோ பணம் செலவழித்து, வைத்தியமும் பார்க்கிறோம். 

அதனுடன் கூட இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தையும், முழு நம்பிக்கையுடனும், பக்தி ஸ்ரத்தையுடனும், மனதை ஒருமுகப்படுத்தி, தொடர்ச்சியாக தினம் 21 முறைகள் வீதம் 30 நாட்களுக்குச் சொல்லி, 31 ஆவது நாள் பாக்கி 2 தடவைகள் சொல்லி [ஆகமொத்தம் 632 ஆவர்த்தி] பூர்த்திசெய்து தான் பார்ப்போமே ! 

கைகால் அலம்பிக்கொண்டு, விளக்கேற்றி வைத்துவிட்டு, வடக்கோ அல்லது கிழக்கோ நோக்கி அமர்ந்து கொண்டு, சொல்லிக்கொண்டே இருந்தால் போதுமே!  மணி, மந்த்ர, ஒளஷதம் என்று தானே நம் முன்னோர்களும் எல்லாவற்றிலும் கடைபிடித்து வந்தார்கள் !

ஏற்கனவே இதுவரை சொல்லி பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்தில் உச்சரிக்க சற்றே சிரமமாக இருக்கும். 

அப்படிப்பட்டவர்கள் [மிகப்பெரிய எழுத்துக்களில் தமிழில் அச்சிடப்பட்டு விற்கப்படும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண புத்தகத்தைப் பார்த்து] தினமும் ஒருமுறை வீதம் கொஞ்சநாட்கள் சொல்லிப் பழகிவிட்டால் அது மனதில் அப்படியே பதிந்து போகும். 

சொல்லச்சொல்ல ருசியோ ருசியாக இருக்கும். மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும், தைர்யத்தையும் அளிக்கும். 

பிறகு நன்கு சொல்லவும் உச்சரிக்கவும் பழகிவிட்டபிறகு பலமுறைகள் சொல்வது என, எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம். 

அதிக எண்ணிக்கையான தினம் 21 முறைகள் சொல்லும் போது ஆரம்பத்தில் உள்ள ஸ்லோகங்களையும், கடைசியில் உள்ள பலஸ்ருதிகளையும் ஒரே ஒரு முறை சொன்னால் போதும். நடுவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண பிரதான மந்திரங்களான 108 மட்டும் (ஒவ்வொன்றும் 2 வரிகள் மட்டும்) 21 தடவைகள் தொடர்ந்து சொன்னால் போதுமானது.  

அதாவது ஆரம்ப ஸ்லோகம் No. 1:

“விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு: 
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:

முடிவு ஸ்லோகம் No. 108:

வனமாலீ கதீ சார்ங்கீ சங்கி சக்ரீ ச நந்தகீ !
ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்: வாஸுதேவோ பிரக்ஷது !! 

ஸ்ரீ வாஸுதேவோ பிரக்ஷது ஓம் நம இதி:


இதில் உள்ள ருசியும், பலன்களும், அருமை பெருமைகளும் அதைச்சொல்லி அனுபவத்துப் பார்த்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும். 

வைத்தியர்களே வியந்து போகும் அளவுக்கு, நமக்கு வந்த வியாதிகள் பறந்து போகும்; வாழ்க்கையில் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து வெற்றி வாய்ப்புகளும் நம்மை நாடி அவைகளாகவே வந்து சேரும். 

இவையெல்லாம் அனுபவித்து சுகமடைந்த பலரும் சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன். ஏன் ... நானே கூட அவ்வப்போது இதனை என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். vgk ] 


-ooooooooooooooo-




இதன் அடுத்தடுத்த எட்டு பகுதிகளில் ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் அபார மஹிமை பற்றி ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருளிய வெகு அருமையான செய்திகள் வெளியிடப்பட உள்ளன. அனைவரும் தவறாமல் படித்துப் பயன்பெறுவீர். 


அன்புடன் 
vgk




தொடரும்

காணாமல் போன கைக்கடியாரம்


காணாமல் போன கைக்கடியாரம்




ஒரு விவசாயி தன் வயல் அருகே இருந்த மிகப்பெரிய தானிய சேமிப்புக்கிடங்கில் தன் கைக்கடியாரத்தை எங்கோ தொலைத்து விட்டதை உணர்ந்தார். 

எங்கு தேடியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை. அவரைப்பொருத்தவரை அது ஒரு சாதாரண கடியாரம் அல்ல. செண்டிமெண்ட்டாக இருந்த நினைவுப்பொருள். அதனால் அதற்கான மதிப்பு மிகவும் அதிகமே.

எல்லா இடத்திலும் அதைத்தேடியும் காணாமல் வருத்தப்பட்டு வெளியே வந்தபோது, தானிய சேமிப்புக்கிடங்குக்கு வெளியே நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறார். அவர்களிடம் விஷயத்தைக் கூறி அவர்கள் அனைவருமாக உள்ளே போய் தேடிக்கண்டுபிடித்துத் தருமாறு சொல்லுகிறார். 

கண்டெடுத்துக் கொடுப்பவருக்கு தகுந்ததோர் சன்மானம் பரிசாகத் தருவதாகவும் அறிவிக்கிறார்.

அனைத்துச் சிறுவர்களும் ஆவலுடன் சேர்ந்து தேடியும் காணாமல் போன அந்த பொருள் கிடைக்கவில்லை. அந்த விவசாயி உள்பட அனைவரும் வீடு திரும்ப நினைக்கும் போது ஒரே ஒரு சிறுவன் மட்டும், ”தனக்கு மட்டும் அதைத் தேட இன்னொரு சந்தர்ப்பம் தர முடியுமா” எனக் கேட்டுக்கொள்கிறான்.

துடிப்புடன் இருந்த அந்தச்சிறுவனை நோக்கிய விவசாயி, அவனை மீண்டும் தனியே உள்ளே செல்ல அனுமதிக்கிறார். ”தாராளமாக உள்ளே சென்று வா; வென்று வா” என்றும் ஊக்கமளிக்கிறார். 

உள்ளே சென்றவன் சற்று நேரத்திலேயே வெற்றியுடன், கையில் கைக்கடியாரத்துடன் திரும்ப வருகிறான். அவனைப்பார்த்த விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்படுகிறது. 

“நீ மட்டும் எப்படி வெற்றி பெற முடிந்தது? மற்றவர்கள் எதனால் வெற்றி பெற முடியாமல் போனது? என்று ஆச்சர்யத்துடன் வினா எழுப்பினார்.

”அமைதியாக தரையில் அமர்ந்து, என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ’கவனித்தல்/கேட்டல்’ [Listen] என்ற ஒன்றை மட்டுமே நான் செய்தேன். நான் மட்டுமே தனியாக இருந்ததால் நிசப்தம் நிலவியது. தங்கள் கைக்கடியாரத்தின் ’டிக்டிக்’ என்ற ஒலியை என்னால் நன்கு கேட்க முடிந்தது.   அந்த ஒலி வந்த திசையை நோக்கி ஓடி அதை என்னால் சுலபமாகக் கண்டுபிடித்து எடுத்துவர முடிந்தது” என்றான் அந்தச் சிறுவன்.


-o-o-o-o-o-o-o-

அமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.

தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.

-o-o-o-o-o-o-o-




[This is a short story in English forwarded by my friend VIJI of BHEL. 
Only the translation in Tamil is done by me - vgk]