முன்கதை முடிந்த இடம்:
என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச்செல்வதுபோல உணர்ந்தேன்.
அதன் பிறகு இன்று வரை நான் அவளை சந்திக்கவே இல்லை.
===============================
என் கற்பனைக்காதலியான அந்த பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் அசல் அச்சில் இருந்த இந்தப்பெண்ணை கடற்கரையில் கண்டு சிலையாகிப்போன என்னை, என் மகன் “என்னப்பா...ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள்! “மீட் மிஸ்டர் கோபிநாத், மிகப்பெரிய தொழிலதிபர், அவரின் ஒரே பெண் இவள்” என்றான்.
தொழிலதிபருடன் கை குலுக்கினேன். அந்த அழகு தேவதையைக் கைகூப்பி வணங்கினேன். அந்தப்பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் என் மனைவிக்குப் பிடித்துப்போய் விட்டது.
சம்ப்ரதாயத்திற்காகவும், மேற்கொண்டு பேசி முடிவெடுக்க நாங்கள் காரில் ஏறி பெண் வீட்டுக்குப்போனோம். ஏற்கனவே என் பையனும் அந்தப்பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுத்துவிட்ட விஷயம் தான்.
அந்தப்பெண்ணின் வீட்டை அடைந்த நாங்கள், அவர்களின் செல்வச்செழிப்பைக்கண்டு வியந்து போனோம். பெண்ணின் தாயாரைப்பார்க்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம்.
சற்றே தயங்கியவாறு அழைத்துச்சென்றனர். பெண்ணின் தாயாரைப்பார்த்த நானும் என் மனைவியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.
ஒரு தனி அறையில் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தனர். தலை முழுவதும் ஆங்காங்கே புண்ணுடன் கூடிய வீக்கங்கள். சம்மர் க்ராப் அடித்த தலைபோல முடிகள் ஆங்காங்கே வெட்டப்பட்டிருந்தன.
எங்களைக்கண்டதும் ஒரு புன்சிரிப்பு, ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும். பிறகு கேவிக்கேவி அழுகை. எங்கேயோ வெறித்த ஓர் பார்வை. சற்று நேரத்தில் நைட்டியில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
சிவந்த முகம் வெளிறிப்போய் இருந்தது. கைகளிலும் ஆங்காங்கே காயங்கள். ஒருசில வருடங்களாக ஏதோ ஒருவித மனோவியாதியாம். உடுத்தும் உடைகளையே உருவி விட்டெறிந்து விடுகிறாளாம்.
பணக்காரக்கணவர், எடுபிடியாக எக்கச்சக்க வேலையாட்கள், விலையுயர்ந்த கார்கள், அழகிய தோட்டங்களுடன் மிகப்பெரிய பங்களா வீடு, அழகு தேவதையாக ஒரே மகள். அனைத்து சுகங்கள் இருந்தும் அனுபவிக்கக்கொடுத்து வைக்காத ஜன்மம். என்ன கொடுமை இது. என் மனது மிகவும் நடுங்கியது.
எப்படி அழகாகவும், மிடுக்காகவும் இருந்த என் அன்றைய கற்பனைக் கதாநாயகி , அழகு தேவதை, தங்கப்பதுமை, தங்கச்சிலை, பைங்கிளி என்றெல்லாம் என்னால் வர்ணிக்கப்பட்டவள் இன்று இப்படி அலங்கோலமாக ஆகிவிட்டாளே! என நினைத்து என் மனம் கண்ணீர் வடித்தது. அங்கு நிற்கவோ அவளைத்தொடர்ந்து பார்க்கவோ என் மனம் சகிக்காமல், வேறு பக்கமாக என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.
இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.
என் எண்ணங்களையும், உணர்வுகளையும், அந்த நாள் ஞாபகங்களையும் அங்கு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பரிதாப நிலையில் நான்.
ஈ என்று எப்போதும் என்னிடம் இளித்து வந்த அந்த ஈரோட்டுக்காரியையும், மனநலம் குன்றிய நிலையில் உள்ள இந்த மதராஸ்காரியையும் மாறிமாறி நினைத்துக்கொண்டே, என் மனைவியைத் திரும்பிப்பார்த்தேன்.
இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.
“எது எப்படியிருந்தாலும் நம் மகன் அந்தப்பெண்ணையும், அந்தப்பெண் நம் மகனையும் மனதாரக் காதலிப்பதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள். பிறகு என்ன! கல்யாண ஏற்பாடுகளைச் செய்துவிடுவோம்” என்று ரகசியமாக என் மனைவியிடம் தெரிவித்தேன்.
என் மகன் என்னை நெருங்கி “அவளின் அம்மாவை மட்டும் மறந்து விட்டுப்பார்த்தால், இந்த சம்பந்தம் எல்லாவிதத்திலும் ஓ.கே. தானே அப்பா” என்றான்.
“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-
[இந்தக்கதை பத்திரிகை ஆசிரியர் அவர்களால் சற்றே சுருக்கப்பட்டு
“காதலும் கல்யாணமும்” என்ற தலைப்பில்
10.03.2010 தேதியிட்ட தேவி வார இதழில் வெளியிடப்பட்டது.]