About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, June 10, 2011

வ டி கா ல் [ பகுதி 2 of 4 ]


”சரி சார், இந்த இரவு நேரத்தில் என்ன விஷயமாக என்னைப்பார்க்க வந்தீர்கள்?” என்றேன்.

“சும்மாத்தான். உங்கள் கதைப் புத்தகங்களைப்படித்த நான் உங்களை நேரில் சந்திக்கணும் என்று பல நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்றும் எனக்குத்தூக்கம் வரவில்லை. உங்கள் வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது. உங்களையும் பார்த்து அறிமுகம் செய்துகொண்டு, உங்கள் கதைப்புத்தகங்களைப்ப் பார்த்த விஷயத்தையும் கூறிவிட்டு, என்னைப்பற்றியும் (என் கதையையும்) சுருக்கமாகச் சொல்லி விட்டுப்போகலாமோ என்று தான் வந்தேன்” என்றார்.

அவருக்கு ஏழு பெண்கள், நான்கு பையன்களாம். இது தவிர நாலைந்து குழந்தைகள் பிறந்து அற்ப ஆயுளுடன் போய்ச்சேர்ந்து விட்டதாம். வயது எழுபத்தி எட்டாம். ஒரு பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்று பதினெட்டு ஆண்டுகள் ஆகிறதாம். குழந்தைகள் பதினோறு பேர்களுக்கும் திருமணம் ஆகி பேரன் பேத்திகள் பிறந்து பல ஊர்களில் உள்ளனராம்.  

இரண்டு பையன்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலையாம். மற்ற இரண்டு பையன்களுக்கும் டெல்லியில் வேலையாம். பையன்கள் எல்லோரும் நல்லபடியாகவே இவரைப் பார்த்துக் கொள்கிறார்களாம். இவருக்கும் பென்ஷன் பணம் வருகிறதாம். பையன்கள் இவரை ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என்பார்களாம். எங்கு போனாலும் விமானத்தில் போய் வாருங்கள் என்பார்களாம். 

டெல்லியில் உள்ள இரு மகன்கள், மேலும் இந்தியாவின் ஏழு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஏழு பெண்கள் வீடுகளுக்கும், மாதாமாதம் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தவாறு சென்று ஒரு மாதம் தங்கி வருவது வழக்கமாம். 

இந்தமுறை சிங்காரி வீட்டுக்கு வந்து 20 நாட்கள் ஆகப்போகிறதாம். இன்னும் ஒரு வாரமோ பத்து நாட்களோ கிளம்பி விடுவாராம். அவரின் மனைவி இறந்து போய் மூன்று வருடங்கள் முடியப்போகிறதாம். 

என்னைப்பற்றியும் ஓரளவு விசாரித்துத் தெரிந்து கொண்டார். என்னை விட அவர் 16 வருடங்கள் சீனியர் என்று கணக்குப்போட்டுக்கொண்டேன். நான் ரிடயர்ட் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. அவர் ரிடயர்ட் ஆகி 18 வருடங்கள் ஆகின்றன.  

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த பெரியவர் என நினைத்துக்கொண்டேன். இன்று ஓரிரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ, வளர்க்கவோ. ஆளாக்கவோ திண்டாட்டமாக இருக்கும் நிலமையில், இவருக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து, அவர்களில் பதினோறு பேர்களை நன்கு வளர்த்து,  படிக்க வைத்து, நல்ல நிலமைக்குக் கொண்டு வந்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, எவ்வளவு ஒரு பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை அவருக்கு இருக்க வேண்டும் என வியந்து போனேன். அவருக்கு கோயில் கட்டிக் கும்பிடவேண்டும் போலத்தோன்றியது எனக்கு. 

அவரிடம் நீணட நேரம் பேசிக்கொண்டிருந்ததில், ஒருசில விஷயங்களை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.  அதாவது என்னைப் பொருத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொருத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன்.  ஏனென்றால் பாவம், அவருக்கு மனைவி இல்லை. 

விருப்பம் உண்டோ இல்லையோ, மனைவி என்று ஒருத்தி இருந்தால், ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில்.  காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.

மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, அதுவும் வயதான காலத்தில் ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அவள் ஒருத்தி இருந்தால் தானே இவனுக்கு, இவனுடைய எண்ணங்களுக்கு, இவனுடைய தேவைகளுக்கு, ஒரு வடிகாலாக இருந்து செயல்பட முடியும். அவள் இல்லாத நிலையில் வடிகால் தேடி இவர் வெளியே பலரிடம் செல்ல வேண்டியுள்ளது.

வீட்டில் இவரின் பையன்களோ, மருமகள்களோ, மாப்பிள்ளைகளோ, இவர் பெற்ற பெண்களோ, பேரன்களோ, பேத்திகளோ பலரும் இருக்கலாம். இவரும் பேசலாம் அல்லது பேச நினைக்கலாம். அவர்கள் நின்று இவர் பேச்சைக்கேட்க வேண்டுமே! அதற்கு அவர்களுக்கு விருப்பமும், பொறுமையும், நேர அவகாசமும் இருக்க வேண்டுமே!

அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச்செல்லும் சூழ்நிலைகள். களைப்புடன் வீட்டுக்கு வந்தால் சமையல், சாப்பாடு, ஷாப்பிங் போவது, டி.வி. நிகழ்ச்சிகள், கம்ப்யூட்டர், செய்தித்தாள், வார மாத இதழ்கள் படிப்பது, மறுநாள் சீக்கரம் எழுந்து ஆபீஸ் செல்ல வேண்டி, சீக்கரமாக படுக்கப்போவது என்று ஒவ்வொரு நாளும் கழியும். யாருக்கும் மற்ற யாரிடமும் எதுவும் பேச நேரமிருக்காது. 

குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போவது, ட்யூஷன் போவது, வீட்டுப்பாடம் செய்வது, நடுநடுவே டி.வி. நிகழ்ச்சிகள், கார்டூன் நெட்வொர்க், வீடியோ கேம்ஸ் என்று அவர்களுக்கும் நேரம் சரியாக இருக்கும். தாத்தாவைப் பார்க்கவோ அவருடன் பேசவோ விரும்ப மாட்டார்கள்.

அந்தப்பெரியவருக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லையென்று அவர் புலம்பினாலோ, இருமினாலோ, தும்மினாலோ இவர்களின் எரிச்சலும் கோபமும் அதிகமாகும். 

இத்தகைய சூழ்நிலைகளில் அந்தப்பெரியவர் யாருடன் மனம் விட்டுப்பேச முடியும்?  வந்த பெரியவரின் பேச்சுக்களிலிருந்து என்னால் இவற்றையெல்லாம் அனுமானிக்க முடிந்தது.  ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ! அவர்மேல் இரக்கம் கொண்டு, அவருடன் மிகவும் கனிவாகவே பேசினேன்.

தொடரும் 

31 comments:

 1. என்னைப் பொருத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொருத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன். //

  அருமையான அறிமுகம்.

  ReplyDelete
 2. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த பெரியவர் என நினைத்துக்கொண்டேன். இன்று ஓரிரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ, வளர்க்கவோ. ஆளாக்கவோ திண்டாட்டமாக இருக்கும் நிலமையில், இவருக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து, அவர்களில் பதினோறு பேர்களை நன்கு வளர்த்து, படிக்க வைத்து, நல்ல நிலமைக்குக் கொண்டு வந்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, எவ்வளவு ஒரு பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை அவருக்கு இருக்க வேண்டும் என வியந்து போனேன். அவருக்கு கோயில் கட்டிக் கும்பிடவேண்டும் போலத்தோன்றியது எனக்கு//

  இன்றைய நிலைக்கு அவர் கோவில் கட்டி கும்பிட வேண்டியவர்தான்.

  ReplyDelete
 3. வயதான காலத்தில் மனைவியின் தேவை குறித்து
  மிகச் சரியாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
  அதே சமயம் கதையின் மையப் புள்ளிக்கும்
  கதையை மிக அழகாக நகர்த்திவிட்டீர்கள் என
  நினைக்கிறேன்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

  ReplyDelete
 4. //ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ! அவர்மேல் இரக்கம் கொண்டு, அவருடன் மிகவும் கனிவாகவே பேசினேன்.// very good!

  ReplyDelete
 5. மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, அதுவும் வயதான காலத்தில் ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அவள் ஒருத்தி இருந்தால் தானே இவனுக்கு, இவனுடைய எண்ணங்களுக்கு, இவனுடைய தேவைகளுக்கு, ஒரு வடிகாலாக இருந்து செயல்பட முடியும். அவள் இல்லாத நிலையில் வடிகால் தேடி இவர் வெளியே பலரிடம் செல்ல வேண்டியுள்ளது.


  அம்மா போனா அன்பு போச்சு
  அப்பா போனா பரிவு போச்சு
  அக்கா போனா கனிவு போச்சு
  சகோதரன் போனா ஆதரவு போச்சு
  மனைவி போனா எல்லாமே போச்சு
  என்பதை அழகாய் சொல்லி இருக்கீங்க ஐயா
  பெண்கள் ஆண்களை விட தைரிய சாலிகள் அதனால் தான் கணவனை இழந்ததும் பலபேர் வாழ்க்கையை தெளிவாய் எதிர்கொள்கிறார்கள் , ஆனால் ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்

  ஆறுதலின் தேறுதல் சொல்லிய அசத்தல் கதை தொடருங்கள் ஐயா

  ReplyDelete
 6. பிள்ளையாண்டன் ஊர்லேருந்து வந்துட்டாரா? அல்லது உங்க ப்ளாக் பாஸ்வேர்ட் அவர் கைலேயே இருக்கா? டெம்ப்ளேட் கண்ணுக்கு இதம் பழசை விட.

  புது டெம்ப்ளேட்டுடன் படிக்க படு பாந்தம்.

  பெருங்குடும்பம் பெருங்குற்றமாய்க் கருதப்படும் இன்றைய நாளில் பெரியவரின் பதினோரு குழந்தை வளர்ப்பு இன்றைய கால ஐந்து குடும்பங்களின் பொறுப்பு.

  சபாஷ் இந்தப் பதிவுக்கும்.

  ReplyDelete
 7. //////இன்று ஓரிரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ, வளர்க்கவோ. ஆளாக்கவோ திண்டாட்டமாக இருக்கும் நிலமையில், இவருக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து, அவர்களில் பதினோறு பேர்களை நன்கு வளர்த்து, படிக்க வைத்து, நல்ல நிலமைக்குக் கொண்டு வந்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, எவ்வளவு ஒரு பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை அவருக்கு இருக்க வேண்டும் என வியந்து போனேன்/// எனக்கும் அதே வியப்பு தான் ஐயா, ஆனாலும் அந்த காலத்தில் இதெல்லாம் சாதாரணமாக தான் இருந்துள்ளது...

  ReplyDelete
 8. புது டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது. மனைவியின் பிரிவு கஷ்டம்தான்... அதுவும் முதிர்வயதில் பிரிவு.... கதை மெல்ல நகர்ந்து முக்கிய பகுதிக்கு வந்திருப்பதாய் தோன்றுகிறது.

  ReplyDelete
 9. ஐயா வாசிகக வாசிக்க வாசிக்க தூண்டுகிறது உங்கள் படைப்புக்கள்...
  அருமையிங்க...

  நம்ம பக்கமும் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 10. கதை நிதானமாக அதே சமயம் அழகாக சென்று கொண்டிருக்கிறது. அந்த பெரியவர் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ள ஆவல்.

  ReplyDelete
 11. சரளமான நடையில் உங்கள் கதை சொல்லும் சாமர்த்தியம் அருமை, கோபு சார். தொடருங்கள்.

  ReplyDelete
 12. வயதான காலத்தில்தான் துணை தேவை. உண்மையான கருத்து சார். பாட்டிகள்கூட சமாளித்துக் கொள்கிறார்கள் தாத்தாக்கள்தான் பாவம். முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு பெரியவரும் இதைத்தான் சொன்னார்.

  ReplyDelete
 13. ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.

  கதை சொல்லும் ஆற்றல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.. அதுவும் சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களைக் கூட விட்டு விடாமல் சொல்லிப் போகிற ஆற்றல் உங்கள் ஸ்பெஷாலிட்டி.. ஜமாய்ங்க..

  ReplyDelete
 14. //அவர்கள் நின்று இவர் பேச்சைக்கேட்க வேண்டுமே!// இதை நான் கண்கூடாக இங்கே முதியோர் இல்லத்தில் பார்த்திருக்கிறேன் .
  நாங்கள் எல்லா கிறிஸ்மசுக்கும் கோயில் மூலம் அங்கே சென்று அவங்களுக்கு சின்ன சின்ன பரிசு கொடுப்போம் அங்கே ஒரு indoor plant இருக்கும் அதன் பேர் wish tree .அதில் எல்லா பெரியவங்களும் அவங்க என்ன ஆசைபடராங்களோ எழுதி வப்பாங்க .அதை படிச்சப்ப எனக்கு அழையே வந்தது ,அவளவும் சின்ன ஆசைகள் மகன் அல்லது மகளோடு பார்க்குக்கு போகணும் ,ஒரு மணிநேரமாவது ஒண்ணா உக்கார்ந்து பேசணும் ,கைய பிடிச்சிட்டு பேசணும் ....

  ReplyDelete
 15. அந்தப் பெரியவர் இன்னும் உங்ககூட தான் உட்கார்ந்திருக்காரா? ரியலிஸ்டிக்கா நடக்கறா மாதிரி எழுதிருக்கீங்க.. நல்லா இருக்கு.. ;-))

  ReplyDelete
 16. உண்மைக்கு மிக நெருக்கமான வரிகள்.

  ReplyDelete
 17. //"என்னை விட அவர் 16 வருடங்கள் சீனியர் என்று கணக்குப்போட்டுக்கொண்டேன். நான் ரிடயர்ட் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. அவர் ரிடயர்ட் ஆகி 18 வருடங்கள் ஆகின்றன"//

  ஒருவர் மாநில அரசாங்கத்திலிருந்தும் , இன்னொருவர் மத்திய அரசாங்கத்திலிருந்தும் ஓய்வு பெற்றிருந்தால் கணக்கு மாறும்!! :))

  //" ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ!"//

  இப்படி நினைப்போம்...பார்த்தால் அவர்களிடம் பேசிய நேரம் போக நம்மிடம் வந்து நமக்கு பாடம் நடத்தி விட்டுப் போவார்கள்!

  ReplyDelete
 18. சார் உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
  கிடைக்கும் போது பாருங்கோ.

  http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html

  ReplyDelete
 19. பெரும் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய திருமதி லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு,

  அநேக நமஸ்காரங்கள்.

  இந்த வயதான காலத்திலும், மிகவும் ஆர்வமுடனும், பேரெழுச்சியுடனும், வலைச்சர ஆசிரியர் என்னும் மிகப்பெரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, மிகச்சிறப்பாக பணியாற்றி, புதுமையான முறையில் தினமும் காலையிலும், மாலையிலும், ஏராளமான சிறந்த எழுத்தாளர்களையும், அவர்களின் அற்புதப் படைப்பு ஆற்றல்களையும், அனைவரும் அறியும் வண்ணம் தாங்கள் கடந்த ஒரு வாரமாக செயல்பட்டு வருவது எனக்கு மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.

  இதன் நடுவே இன்று மாலை அடியேன் பெயரையும் நுழைத்து கெளரவித்துள்ளது எனக்கு தங்கள் ஆசிகள் என்றும் உண்டு என்பதை அறிவிப்பதாகவும், மேலும் பல சிறந்த படைப்புகள் தர வேண்டும் என உற்சாகம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

  அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் என் பாராட்டுக்கள்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  வை கோபாலகிருஷ்ணன் [vgk]

  ReplyDelete
 20. தனிமை என்றுமே கொடியது தான். அதுவும் மனைவியை இழந்த கணவனுக்கும் கணவரை இழந்த மனைவிக்கும் அது இன்னும் கொடுமையான விஷயம். முதுமையெய்திய ஆண்களின் இன்றைய நிலையை மிக அழகாக அலசியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 21. இந்தத் தொடரின் இரண்டாம் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  தொடர்ந்து வாருங்கள்.

  உற்சாகம் தாருங்கள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 22. நாலு பையன்கள், ஏழு பெண்கள், அவர்களெல்லாம் சிறு வயதில் இருக்கும்போது அவர்கள் வீடு எப்படி இருந்திருக்கும்? கற்பனை பண்ணவே முடியவில்லை.

  ReplyDelete
 23. இது போல வயசானவஙக ளுக்கு பேச்சு துணைக்கு ஒரு ஆள் தேவை..இரவோ பகலோ நேரம்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை போல..

  ReplyDelete
 24. //மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, அதுவும் வயதான காலத்தில் ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அவள் ஒருத்தி இருந்தால் தானே இவனுக்கு, இவனுடைய எண்ணங்களுக்கு, இவனுடைய தேவைகளுக்கு, ஒரு வடிகாலாக இருந்து செயல்பட முடியும். அவள் இல்லாத நிலையில் வடிகால் தேடி இவர் வெளியே பலரிடம் செல்ல வேண்டியுள்ளது.//

  நூத்துக்கு நூறு உண்மை. ஒரு சர்வே சொல்கிறது. கணவனை இழந்த மனைவி எப்படியோ வீட்டு வேலைகளை செய்து கொண்டு, பேரன், பேத்திகளை அரவணைத்துத் தன் வாழ்நாளை கடத்தி விடுவாளாம். ஆனால் ஆணுக்கு அது கஷ்டம்தான்.

  எழு பெண்கள், நாலு பையன்கள். என் மாமியார் வீட்டில் 6 பையன்கள், இரண்டு பெண்கள். அதுவே மலைப்பாக இருக்கு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நம்ப பேரன், பேத்திகள் போல் அந்தக் காலக் குழந்தைகள் இருந்திருக்க மாட்டார்கள். அண்ணாக்களும், அக்காக்களும், தம்பி, தங்கைகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

  ஆனால் இன்னும் பல வருடங்களுக்குப் பின் மாமா, மாமி, அத்தை உறவெல்லாம் இருக்குமா என்றே தெரியவில்லை. பக்கத்து வீட்டுல இருக்கறவங்களை தான் UNCLE, AUNTY என்று கூப்பிடணும்.

  ReplyDelete
 25. அடேங்கப்பாடியோ 7--பொட்டபுள்ளிக 4 ஆம்புள புள்ளிகளா அதுமில்லாத மவுத்தானது கொஞசமா? இந்த வயசாளிகளுக்கே அவங்க பேச்ச யாராச்சும் கேக்கோனும்னு நெனப்பாகதா.

  ReplyDelete
 26. இளமை பருவத்தில் வீடு நிறைய குழந்தைகள் மனிதர்களுடன் இருந்தவா வயசான பின்னர் அவங்க பேச்சைக் கேட்பதற்கு கூட யாருமில்லாதப்போ தனிமையாதான் உணருவாங்க. அதான் நடு இரவு நேரம் என்று கூட பார்க்காமல் அந்த எழுத்தாளர் வீட்டு கதவை தட்டி இருக்கார்போல.

  ReplyDelete
 27. // அவரிடம் நீணட நேரம் பேசிக்கொண்டிருந்ததில், ஒருசில விஷயங்களை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது என்னைப் பொருத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொருத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன். ஏனென்றால் பாவம், அவருக்கு மனைவி இல்லை.// சரிதான்...தலைப்ப டச் பண்றாப்புல இருக்கு...

  ReplyDelete
 28. //என்னைப் பொருத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொருத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன். ஏனென்றால் பாவம், அவருக்கு மனைவி இல்லை.//
  விறுவிறுப்பு கூடுகிறது!

  ReplyDelete
 29. வயசானவங்களுக்கு தன் பேச்சை காது கொடுத்து கேட்பதற்கு ஒரு துணை தேவை. வீட்டில் சொல்லி பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக்கூட தனக்கு நெருக்கமான நட்பு கிடைத்து விட்டால் எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்ள தோணுது.அதை இந்த கதையில் அழகாக சொல்லி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... September 9, 2016 at 10:21 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வயசானவங்களுக்கு தன் பேச்சை காது கொடுத்து கேட்பதற்கு ஒரு துணை தேவை.//

   இன்று, பெரும்பாலானவர்களுக்கு இது நிச்சயமாகத் தேவைப்படத்தான் செய்கிறது.

   //வீட்டில் சொல்லி பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக்கூட தனக்கு நெருக்கமான நட்பு கிடைத்து விட்டால் எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்ள தோணுது.//

   கரெக்ட். இன்று என்னுடன் சிலர் இதுபோல தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகள் பலவற்றை பகிர்ந்து கொண்டு, ஓர் வடிகாலும் ஆறுதலும் தேடி வருகிறார்கள்.

   //அதை இந்த கதையில் அழகாக சொல்லி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான தொடர் வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete