என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

*அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்னு பழகு!!*


அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!

சமையல் குறிப்பு

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




இன்றுள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் விஷயமாக, தன் குடும்பத்தைப்பிரிந்து  உலகின் பல்வேறு பாகங்களில் தனித்துத்தங்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதில் பலருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பிட முடிவதில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது மிகவும் சகஜமாக உள்ளது.  அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தன் வீட்டில் சைவ சாப்பாடு மட்டுமே வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப்பழகியவர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகவே இருக்கும்.

மெஸ் போன்ற உணவு விடுதிகளிலோ, ஹோட்டல்களிலோ தினமும் சாப்பிடுவது என்பது நாளடைவில் 

1] மிகவும் அலுத்துப்போய் விடக்கூடும். 
2] அதிக பணச்செலவினை ஏற்படுத்தும்.
3] சிலர் உடம்புக்கு ஒத்து வராது
4] மன நிறைவு ஏற்படாமல் போகும்
5] ருசியில்லாமல் பசிக்காக மட்டும் சாப்பிட வேண்டிய 
    கட்டாயத்தினை  ஏற்படுத்தும்.

அவரவருக்கு வேண்டிய உணவினை அவரவர்களே தயாரித்து உண்ண பழகிக்கொண்டால் அதில் பல்வேறு நன்மைகள் உண்டு. இது சொல்வது மிகவும் சுலபம் தான்; ஆனால் இவ்வாறு செய்வதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளும் சிக்கல்களும் உண்டு தான்.

இந்த சமையல் கலை என்பது ஆரம்பத்தில் பழகும்  வரை சற்று கஷ்டமாக இருக்குமே தவிர, ஓரளவு பழகி விட்டால், பிறகு அதனால் ஏற்படும் பயன்களும், மன திருப்தியும் மிகவும் அதிகமே.

ஒரு காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு, சாதம் வடிக்க ஒரு பிரஷர் குக்கர், ஒரு மிக்ஸி, ஒரு குளிர்சாதனப்பெட்டி, ஒருசில அத்யாவஸ்ய பாத்திரங்கள்,  தேவையான மளிகை சாமான்கள் முதலியன மட்டும் வாங்கி வைத்துக்கொண்டால் போதும். 

குக்கரில் சாதம் வடித்துக்கொள்வது மிகவும் எளிது. தயிர் + ஊறுகாய் போன்றவைகளை அவ்வப்போது ஃப்ரெஷ் ஆகக் கடையில் வாங்கி வைத்துக்கொண்டு விடலாம். வெறும் தயிர் / மோர் சாதம் மட்டும் சாப்பிட்டால் அதுவும் அலுத்துப்போகும் அல்லவா! 

தினமும் சாம்பார், ரஸம், அவியல், பொரியல் என செய்வதற்கெல்லாம் நிறைய பொறுமையும் நேரமும் தேவைப்படும். அதெல்லாம் சரிப்பட்டு வராது. நிறைய பாத்திரம் பண்டங்களைத் தேய்ப்பதும் மிகவும் கஷ்டமான வேலையாகிவிடும்.

அதனால் அதற்கு மாற்றாக “அடை” மாவு மிக்ஸியில் அரைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் நல்லது, இது ஆண்களுக்கு மிகவும் சுலபமானது.  காரசாரமான “அடை” தயாரிப்பது எப்படி? என விளக்க நினைக்கிறேன். இது ஆண்களுக்கு மிகவும் பயன்படக்கூடும். 

ஒவ்வொரு வேளையும் கனமான ஓரிரு அடைகளும், தயிர் சாதமும் சாப்பிட்டால் வயிறு கம்முனு இருக்கும். தயிர் சாதம் அல்லது மோர் சாதத்திற்கு, இந்த அடையையே தொட்டுக்கொண்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

அடை வார்ப்பதற்கு என்றே  கனமான அடைக்கல் என்று ஒன்று விற்கப்படுகிறது.     மெல்லிய தோசைக்கல்லோ, நான் ஸ்டிக் ஐட்டமோ இந்த அடை வார்க்க சரிப்பட்டு வராது. 

[கனமான அடைக்கல் வாங்க இங்கு திருச்சி பெரிய மார்க்கெட் மணிக்கூண்டுக்கு அருகே உள்ள இரும்புக் கடைக்கு வாங்க!] 

இப்போ “அடை” தயாரிப்புக்கான பொருட்கள் மற்றும் செய்முறைக்குப் போவோமா?

நல்ல கனமான 30 அடைகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் கொடுத்துள்ளேன்: 

1] நல்ல நயம் புழுங்கல் அரிசி*  : ஒரு கிலோ

    [*இட்லி அரிசி போதும்; சாப்பாட்டு அரிசி வேண்டாம் ]     

2] நல்ல நயம் துவரம் பருப்பு    : 625  கிராம்  

3] நல்ல நயம் கடலைப்பருப்பு :  250 கிராம்  

மேலே 1 முதல் 3 வரை கூறியுள்ள பொருட்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்து ஒரே பாத்திரத்திலோ நல்ல நீரில் ஊறப்போட்டு மூடி வைக்கவும். குறைந்த பக்ஷம் 3 மணி நேரமாவது ஊறணும். அதிகபக்ஷம்  5 மணி நேரம் கூட ஊறலாம். அதன் பிறகு தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் புதிய தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். பிறகு அந்த நீரையும் வடித்து எடுத்து விடவும். 

4] கட்டிப்பெருங்காயம் : ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு எடுத்து அதை  ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் நல்ல தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு மூடி வைக்கவும்.  பெருங்காயம் முற்றிலும் கரைய நீண்ட நேரம் ஆகும். அதனால் அதை முன்கூட்டியே சுமார் 12 மணி நேரம் முன்பாகவே ஊறப்போட்டு விடவும். அப்போது தான் அடியில் கட்டியாகத்தங்காமல் கரையக்கூடும்.  

நடுவில் முடிந்தால் பெருங்காயம் கரைந்த ஜலத்தை தனியாக எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு மீண்டும் தண்ணீர் விட்டு, பிசுக்கு போல அடியில் தேங்கியுள்ள பெருங்காயத்தை கை விரல்களால், பிசைந்து கலக்கி விடவும். 

இந்தக்கட்டிப் பெருங்காய ஜலத்துடன் அரைக்கும் அடைமாவு, ஜம்முனு வாசனையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போதும், அடை வார்க்கும் போதும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைக்கூட சுண்டி இழுத்து அழைத்து வரும் குணமும் மணமும் இந்தக் கட்டிப் பெருங்காய ஜலத்துக்கு மட்டுமே உண்டு.

5] நம் கைவிரல் அளவு நீளமுள்ள நல்ல சிவப்பு மிளகாய் வற்றல் [புதியதாக 40] நாற்பது எண்ணிக்கை நன்கு கழுவி விட்டு காம்புகளை மட்டும் நீக்கி வைத்துக்கொள்ளவும்.  

6] நன்கு கழுவிய நீண்ட பச்சை மிளகாய் [வாசனைக்காக] 5 எண்ணிக்கை
    காம்புகளை நீக்கி வைத்துக்கொள்ளவும்.

7] இஞ்சியின் மேல் தோலை நன்கு சீவி நீக்கிவிட்டு, உள்பக்க சதை பாகத்தை மட்டும் கத்தியால் சீவி வைத்துக்கொள்ளவும. சற்றே பெரிய ஒரு துண்டு இஞ்சி சீவலே போதுமானது.

8] டேபிள் சால்ட் [உப்பு] மொத்தமே ஆறு சிறிய ஸ்பூன் அளவு போதும்.  உப்பு இன்னும் கூட குறைவாகவே எடுத்துக்கொள்ளலாம். மாவு அரைத்து டேஸ்ட் பார்த்து விட்டு தேவைப்பட்டால் பிறகு உபரியாக சேர்த்துக்கொள்ளலாம். அதிகமாக உப்பைப் போட்டுவிட்டால் கரித்துக்கொட்டும். அதை எடுக்க முடியாமல் கஷ்டமாகப்போய்விடும். 

அதனால் உப்பு விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. அரிசி+பருப்புகள் மேலே நான் சொன்ன அளவில் மொத்தமாக 2 கிலோ போட்டால் மட்டுமே ஆறு சிறிய ஸ்பூன்கள் உப்புத்தூள் சேர்க்கலாம்.

9] கருவேப்பிலை 2-3 ஆர்க் நன்கு கழுவி இலைகளைத்தனியே பிரித்து வைத்துக்கொள்ளவும்.

10] முருங்கை இலை கிடைத்தால் அவற்றையும் பறித்து கழுவி ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்.  முருங்கை இலையுடன் அடை வார்த்தால் அதன் டேஸ்ட் தனியாக இருக்கும்.  உடம்புக்கும் நல்லது.

11] வெங்காய அடை விரும்புவோர் அடை வார்க்கும் சமயத்தில் மட்டும் அதனை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கியபிறகு நீண்ட நேரம் உபயோகிக்காமல் வைக்கக் கூடாது.அதனால் அவ்வப்போது தேவைப்பட்டால்  நறுக்கி, அடைக்கல்லில்  அடை வார்க்கும் போது,  அதன் மேல் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

12] சிலருக்கு எந்த உணவிலும் தேங்காய் சேர்த்தால் தான் பிடித்தமாக இருக்கக்கூடும். அவர்கள் தேங்காயைத்துருவலாகவோ, அல்லது சிறிய பற்கள் வடிவிலோ வெட்டி தயாராக வைத்துக்கொள்ளலாம். 

13] அடை வார்க்க எண்ணெயோ, நெய்யோ அவரவர் விருப்பம் போல நிச்சயம் வேண்டும்.

14] அடைக்குத்தொட்டுக்கொள்ள வெல்லப்பொடியோ, ஜீனியோ, நெய்யோ  அவரவர் விருப்பம் போல ருசிக்காக சேர்த்துக்கொள்ளலாம். 

சிலர் அடைக்கு அவியல் தான் வேண்டும் என அடம் பிடிப்பார்கள். எனக்கு இந்த அவியல் என்பதே ஏனோ பிடிப்பதில்லை. சிலர் சாம்பார், சட்னி, தோசை மிளகாய்ப்பொடி, மோர்க்குழம்பு என்று ஏதேதோ கூட கேட்பார்கள்.  

காரசாரமான நல்ல தரமான அடைக்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம். சூடான காரசாரமான அடைக்கு, சீவிய மண்டை வெல்லப்பொடி + உருக்கிய நெய் நல்லதொரு காம்பினேஷன் என்பது என் அபிப்ராயம். 

அடைக்கு அரைப்பதற்கான  முன்னேற்பாடுகள்:
===============================================

மின் இணைப்பினைத் துண்டித்து விட்டு, மிக்ஸியை நன்றாக ஈரத்துணியால் புழுதி போகத்துடையுங்கள். அப்படியே மிக்ஸி கனெக்‌ஷன் ஒயரின் வெளிப்பக்கத்தையும்  துடையுங்கள். பிறகு காய்ந்த துணியால் ஒருமுறை துடையுங்கள்.

பெரிய சைஸ் மிக்ஸி ஜார் + ப்ளேடு நன்றாக கழுவிக்கொண்டு வாருங்கள்.

மின்சார சப்ளை அடுத்த அரை மணி நேரத்திற்காவது இருக்குமா என உறுதி செய்து கொள்ளுங்கள்.

அரைத்த மாவை ஊற்றி பத்திரப்படுத்த ஒரு சுத்தமான பாத்திரத்தை நன்கு அலம்பி, மிக்ஸி அருகே  தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

சுத்தமான தண்ணீர் ஒரு பாத்திரத்தில் மிக்ஸி அருகே வைத்துக்கொள்ளுங்கள். ஓரிரு கரண்டிகள் + ஸ்பூன்களும் இருக்கட்டும்.

நீர் வடிகட்டப்பட்ட ஊறிய அரிசி + பருப்புகளையும், பெருங்காயம் ஊறிய ஜலம் போன்ற Sl. Nos: 1 to 9 அனைத்தையும்,   மிக்ஸி அருகில் கொண்டு வந்து வரிசையாக அழகாக வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அடைக்கு அரைத்தல்:
===============================

ஸ்விட்சை ஆஃப் [SWITCH OFF} செய்து விட்டு மிக்ஸியின் PLUG குக்கு மெயின் மின்இணைப்பு இப்போது கொடுக்கவும். மிக்ஸியில் உள்ள கண்ட்ரோல் ஸ்விட்ச் ஆஃப் இல் உள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டு, மெயின் ஸ்விட்ச்சை இப்போது ”ON” செய்துகொள்ளவும்.

முதலில் Sl. Nos. 5 to 9 இல் உள்ள அனைத்துப்பொருட்களையும் [காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் + காம்பு நீக்கிய பச்சைமிளகாய் + சீவி வைத்துள்ள இஞ்சி + கருவேப்பிலை + உப்புத்தூள்] மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸியை மெதுவாக ஓட விடுங்கள்.

நன்றாக சுண்டிய வற்றல் குழம்பு போல ஆகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு நன்றாக ஓட விட்டு, பிறகு அந்தக்குழம்பினை [விழுதினை] தனியாக ஓர் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

ஊறிய புழுங்கல் அரிசி + பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து மிக்ஸி பாத்திரத்தில் பாதி அளவுக்கு மட்டும் போடுங்கள். அத்துடன் மேலே உள்ள குழம்புக்கரைசலில் கொஞ்சம் ஊற்றி, பெருங்காய ஜலத்தையும் சிறிதளவு ஊற்றி, Just ஒரு கரண்டி அளவு நல்ல தண்ணீரும் விட்டு, மிக்ஸியை 2-3 நிமிடங்களுக்கு ஓட விடுங்கள்.   

நடுவே மிக்ஸியை ஆஃப் செய்துவிட்டு,  மிக்ஸி ஜாரைத்திறந்து ஸ்பூன் உதவியால்  கிளறி விடுங்கோ.  மாவு ஓரளவு கெட்டியாகவே இருப்பது நல்லது. அதிகமாக ஜலம் விடக்கூடாது.  அதுபோல மையாக அரைபட வேண்டும் என்ற தேவை இல்லை. கைக்கு நரநரப்பாகவே இருக்கட்டும். அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் ஓரளவுக்கு அரை பட்டுவிட்டால், அந்த விழுதினை தனியாக வைத்துள்ள பாத்திரத்தில் வழித்து ஊற்றிக்கொள்ளவும்.

இதே போல மீண்டும் மீண்டும் அரிசி+பருப்பு கலவை + காரக்குழம்பு கலவை + பெருங்காய ஜலம் இவற்றை, சற்றே ஜலம் விட்டு மிக்ஸி ஜாரில் பாதி அளவுக்குப்போட்டு 2-3 நிமிடங்களுக்கு ஓடவிட்டு, அரைத்த மாவை பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். இது போல ஒரு ஏழெட்டு முறை அதிகம் போனால் 10 முறை ஓட்டினால் ஊற வைத்த அரிசி+பருப்பு + காரக்குழம்பு விழுது + பெருங்காய ஜலம் முதலியன சுத்தமாக முழுவதும் தீர்ந்து, அரைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு விடும்.

கடைசியாக மிக்ஸி பாத்திரத்தில் ஒட்டியுள்ள மாவை நன்கு வழித்து, ஒரு டம்ளர் ஜலம் விட்டு ஓடவிட்டு, அந்தக்கரைசலை தனியாக பாதுகாத்து வைத்துக்கொள்ளவும். ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கெட்டிமாவில் அதை இப்போது ஊற்ற வேண்டாம்.  

பிறகு அவ்வப்போது கொஞ்சமாக மாவை எடுத்து அடை வார்க்கும் போது அந்த கெட்டி மாவை சற்றே நீர்க்க வைக்க இந்தக்கடைசியாக அரைத்துவைத்த கரைசலை பயன் படுத்திக்கொள்ளலாம்.

காலியான மிக்ஸி ஜார் + மற்ற காலியான பாத்திரங்களை தண்ணீர் விட்டு ஊறப்போட்டு விட்டால், பிறகு அவற்றை பளபளப்பாகக் கழுவி வைக்க ஈஸியாக இருக்கும்.  அப்படியே விட்டுவிட்டால் ஆங்காங்கே சிந்தியுள்ள மாவினால் சுண்ணாம்புப்பட்டை அடித்தது போல அசிங்கமாக இருக்கும். பிறகு அவற்றைத் தேய்த்து பளபளப்பாக்குவதும் கஷ்டமாக இருக்கும்.


மிக்ஸியின் மின் இணைப்பினை துண்டிக்கவும். மிக்ஸி + மிக்ஸியின் இணைப்பு ஒயரின் மேல் சிந்திச்சிதறியுள்ள அடைமாவினை நன்றாக ஓர் ஈரத்துணியினால் துடைத்து விடுங்கள். 

அன்புள்ள அறிவுள்ள ஆண்களே! 

உங்களுக்கு இந்த இடத்தில் ஓர் எச்சரிக்கை. மிக்ஸியின் ஜார் + ப்ளேடு, மற்றும் மற்ற காலியான பாத்திரங்களை மட்டுமே தண்ணீர் ஊற்றி ஊறப்போட வேண்டும். 

எக்காரணம் கொண்டும் மிக்ஸியையோ, அதன் இணைப்பு ஒயரையோ தண்ணீர் ஊற்றி ஊறப்போடக்கூடாது.

அதுபோல செய்தீர்களானால் பிறகு அதை ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து பழுது பார்க்க நேரிடும். அல்லது புது மிக்ஸி ஒன்றை உடனடியாக ஓடிப்போய் வாங்கி வர நேரிடும். 

அதனால் ஜாக்கிரதை!! 

வரும்முன் காத்துக்கொள்ளுங்கள்.



இது போல கஷ்டப்பட்டு அரைத்து வைத்துள்ள மாவை நன்கு கரண்டியால் கிளறி விட்டு, மூடி வைத்து விடவும். ஒரு கால் மணி நேரம் சென்ற பிறகு, சற்றே அரைத்த சூடு சற்றே அடங்கியபிறகு, அடை வார்க்கலாம். 

ஒரு ஸ்பூன் அடை மாவு பேஸ்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்துப் பாருங்கோ, காரசாரமாக ஜோராக பெருங்காய மணத்துடன் இருக்கும். உப்பு போதாவிட்டால் அவ்வப்போது, அடை வார்க்கும் போது கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம்.

உடனடியாக அடை வார்ப்பதற்கு மாவு எவ்வளவு தேவையோ அதை மட்டும் வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, மீதி அதிக அளவு மாவை ஃப்ரிட்ஜில் மூடி வைத்து பாதுகாக்கவும். ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும். 

நாளாக நாளாக அடைமாவு சற்றே புளிக்கும். அந்த புளித்தமாவு அடை மிகவும் டேஸ்ட் ஆக இருக்கும். இந்த புளித்தமாவு அடைக்கு தொட்டுக்கொள்ள,எண்ணெயில் குழைத்த காரசாரமான தோசைமிளகாய்ப்பொடி மிகவும் ஜோராக இருக்கும்.

இப்போது அடை வார்ப்பதற்கான  முன் ஏற்பாடுகள்:
====================================================

காஸ் அடுப்பு பர்னர் முதலியவைகளை  நன்றாகத் துடைக்கவும்.

காஸ் சிலிண்டரில் காஸ் இருக்குமா என உறுதி செய்து கொள்ளவும்.

அடைக்கல்லை நன்றாக தேய்த்து அலம்பித் துடைத்து விட்டு அடுப்பின் மீது வைக்கவும்.

கெட்டியான தோசைத்திருப்பி, கிடுக்கி, எண்ணெய் அல்லது நெய் முதலியவற்றை சமையல் மேடையின் அருகே வைத்துக்கொள்ளவும்.

மேலே சொன்ன Sl. Nos. 10 + 11 + 12 அதாவது நன்கு கழுவி ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகள் + நறுக்கிய வெங்காயத்தூள்கள் + தேங்காய்த்துருவல் அல்லது தேங்காய் பற்கள் முதலியனவற்றில் அவரவர் விருப்பம்போல வார்க்க வேண்டிய அடையில் தூவி அர்ச்சிக்க தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். இந்த அர்ச்சனை ஒன்றும் அவசியமான தேவை அல்ல. விரும்புவோர் மட்டும், அவரவர்கள் விருப்பம் + வேண்டுதல்படி செய்தால் போதும். இவை [Sl. Nos: 10 to 12] ஏதும் இல்லாமலேயேகூட அடை சூப்பராகத்தான்  இருக்கும்.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

ஆண்களுக்கான ஸ்பெஷல் எச்சரிக்கை:
=======================================

சட்டை பனியன் ஏதும் அணியாமல் வெறும் தொந்தியுடன், தயவுசெய்து அடை வார்க்கச் செல்லாதீர்கள். இதில் எனக்கு ஏற்பட்டதோர் அனுபவத்தை நகைச்சுவையாக ஏற்கனவே சொல்லியுள்ளேன். 

பதிவின் தலைப்பு: ”உணவே வா .... உயிரே போ”

இணைப்பு: http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html    

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

காஸ் அடுப்பை பெரிதாகப்பற்ற விடுங்கள். ஓர் ஐந்து நிமிடங்கள் அடைக்கல் நன்றாக சூடேறட்டும்

லேசாக அடைக்கல் மீது தண்ணீரைத் தெளித்தால் சொர்ரென்று ஓர் சப்தம் வர வேண்டும். அந்த நாம் தெளித்த நீர் உடனே ஆவியாகிப்போக வேண்டும். அப்போது தான் அடைக்கல் நன்கு சூடாகியுள்ளது என்று அர்த்தம்.  

இப்போது முதல் அடை வார்ப்பதற்கு முன்பு மட்டும், ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை காலியான சூடான அடைக்கல்லில் ஊற்றி தோசைத்திருப்பியால் நன்கு பரவலாகத் தேய்த்து விடவும்.  அப்போது தான் எண்ணெய்ப்பசை ஏற்படும். அப்போது தான்  அடி ஒட்டாமல் முதல் அடையை அடைக்கல்லிலிருந்து எடுக்க வரும்.

கெட்டியாக உள்ள அடைமாவில் கொஞ்சூண்டு தண்ணீர் கலந்து கரண்டியால் கலக்கிக்கொள்ளவும். ஏற்கனவே மிக்ஸியில் கடைசியாக ஓடவிட்டு, நாம் எடுத்து வைத்துள்ள காரசார கரைசலையும் தண்ணீருக்கு பதில் இப்போது கலந்து கொள்ளலாம். 

அடைக்கல்லில் நாம் ஊற்றும்  மாவு சற்றே இலகுவாக இருக்க வேண்டும். அது தான் முக்கியம். ஒரேயடியாக ஓடஓட தோசைமாவு போலவும் இருக்கக்கூடாது.

சூடான அந்த அடைக்கல்லில் அடை மாவை அழகாகக் கரண்டியால் ஊற்றி வட்டமாக தேய்த்து விட்டு கோலம் போடுங்கள். கெட்டியாக 2 அல்லது 3 கரண்டி அடை மாவை ஊற்றினால் போதும். அந்த வட்டத்தின் நடுவே அழகாக தொப்புள் போல ஒரு கீறல் [ஓட்டை] தோசை திருப்பியின் விளிம்பினால் கொடுக்க வேண்டும். 

உடனே 2-3 ஸ்பூன் எண்ணெயோ அல்லது நெய்யோ, சுற்றிலும் பிரதக்ஷணமாக ஊற்ற வேண்டும். நடுவில் நாம் போட்டுள்ள ஓட்டையிலும் ஊற்ற வேண்டும். சொர்ரென்ற சப்தத்துடன் அடை ஆனந்தமாக வேக ஆரம்பிக்கும். தேவைப்பட்டால் அவ்வப்போது அடுப்பை ’சிம்ரன்’ இல் வைக்கலாம். [அதாவது அடுப்பை சிம்மில் ரன் செய்வதே “சிம்ரனில்” எனக்கூறப்பட்டுளளது]

இப்போது முருங்கை இலையையோ அல்லது வெங்காயத்தூள்களையோ அல்லது தேங்காய் துருவலையோ தேங்காய் பற்களையோ அடைக்கல்லில் உள்ள வட்டவடிவ அடைமாவின் மீது அர்ச்சிக்க விரும்புவோர் அர்ச்சிக்கலாம்.

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அடையின் அடிப்பகுதி நல்ல சூடாகி இருக்கும். இப்போது தோசைத்திருப்பியால் அடையை சுற்றிலும் லேசாக நெம்பிவிட வேண்டும். பிறகு தோசைத்திருப்பியை அடையின் ஏதாவது ஒரு பகுதியில் நடு ஓட்டை வரை ஒரே சொருகாகச் சொருகி, அப்படியே எடுத்து குப்புறக் கவிழ்த்துப்போட வேண்டும்.  

அடுப்பை சிம்ரனில் வைத்து, நம் இடது கையில் கிடுக்கியால் அடைக்கல்லை நன்கு கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, வலது கையில் தோசைத்திருப்பியை வைத்துக்கொண்டு கவனமாகச் செய்ய வேண்டிய வேலை இது.  அதாவது இந்த அடையை குப்புற படுக்கப்போடும் வேலை. 

இதில் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கவனம் சிதறினால் சூடான அந்த அடைக்கல் நம் கையைச்சுட்டு விடும். அடைக்கல்லே நழுவி நம் கால் விரல்களில் விழுந்து விடக்கூடிய அபாயமும் உண்டு. அதிக எண்ணெய் அல்லது நெய் ஊற்றி இருந்தால் நம் கைகள் மீதும், ஆடை அணியாத நம் வயிற்றுப்பகுதியிலும் அது சுடச்சுட தெளித்து விடவும் கூடும்.


திருப்பிப்போட்ட அடையைச்சுற்றிலும் + நடுவே உள்ள ஓட்டையிலும் கொஞ்சமாக எண்ணெயோ அல்லது நெய்யோ [ஒரு ஸ்பூன் அளவு மட்டும்]  ஊற்றவும்.

இப்போது சிம்ரனிலேயே அடையின் மறுபக்கமும் ஓரிரு நிமிடங்களில் நன்றாக பதமாக வெந்து போய் விடும்.  அதிகம் போனால் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. அதை அப்படியே தோசைத்திருப்பியால் அலாக்காத் தூக்கி அருகே வைத்திருக்கும் ஒரு தட்டில் போட்டு விட்டு, அடுத்த அடைக்கு அடைக்கல்லில் மாவு ஊற்றி வட்டவடிவமாக்கி, ந்டுவில் துளை இட்டு, வழக்கப்படி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விட வேண்டும்.

முதலில் வார்க்கப்பட்ட அடையில் ஒரு துண்டு எடுத்து வாயில் புட்டுப் போட்டுக்கொண்டால், நன்றாக வெந்து விட்டதா? காரசாரம், உப்பு உரைப்பு போன்றவை சரியாக உள்ளதா? எனத் தெரியவரும். உப்பு குறைவாக இருந்தால் மேலும் சில சிட்டிகைகள், அடைமாவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

அவ்வளவு தாங்க! இதுபோல அடிக்கடி பர்னரை சின்னதாகவும் பெரிதாகவும் எரியவிட்டு, எவ்வளவு அடைகள் தேவையோ அவ்வளவு அடைகள் ஒருவர் வார்த்து வார்த்துப்போடப்போட மற்றவர்கள், எடுத்துப் போய் சூடாக சாப்பிட்டு மகிழலாம். 

கடைசியாக வார்க்கும் அடையை குப்புறப்படுக்கப்போடும் முன்பே காஸ் அடுப்பை சுத்தமாக அணைத்து விடலாம்.  அடைக்கல்லில் உள்ள சூட்டிலேயே அந்த அடை வெந்து போகும். இதனால் எரிபொருள் கொஞ்சம் மிச்சமாகும். 

குளிர் காலத்தில் இந்த அடையை சூடாக சாப்பிட்டால், குளிருக்கு இதமாக இருக்கும். 

இந்த சமையல் குறிப்பு பேச்சுலர்களுக்காக மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஆண்களே கூட மாதம் ஒருமுறையாவது இது போலச்செய்து, தன் மனைவிக்கு ஓய்வு கொடுத்து அசத்தலாம். 

அலுவலகம் போய் சோர்ந்து போய் வரும் தன் மனைவிக்கு கணவர் இதுபோல செய்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தலாம்.  

தன் கணவர் தனக்காக அன்பாகச் செய்துகொடுத்த  அடையைச் சாப்பிடும் மனைவி அடைக்கு பதிலாக வைர அட்டிகையே கிடைத்தது போல மகிழ்ச்சியும் கொள்ளலாம். 

கணவன் தன் மனைவிமேல் கொண்ட அன்பை வெளிக்காட்ட இதெல்லாம் ஓர் உபாயம் தானே !  நீங்களும் செய்வீர்கள் தானே!!



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்






பின் குறிப்பு [1]: 

2-3 நாட்கள் தொடர்ச்சியாக அடையையே சாப்பிட்டால் அதுவும் கொஞ்சம் அலுத்துப்போகும் அல்லவா! 

அப்போது அதே அடை மாவில் கொஞ்சம் வெங்காயம் கலந்து, கொதிக்கும் எண்ணெயில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிப்போட்டுப் பாருங்கள். 

பக்கோடா போல வரும். அதன் பெயர் ”கு ணு க் கு” என்பதாகும்.  வெங்காய மசால் வடை போல சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். அதே சமயம் சாப்பிட வாய்க்கு மிகவும் மிருதுவாக இருக்கும்,





மழைகாலத்தில் இந்த குணுக்கு போட்டு சூடாகச் சாப்பிட்டுப்பார்க்க வேண்டும்.  சொர்க்க லோகத்திற்கே சென்று ஆனந்தமாக மிதப்பது போல ருசியோ ருசியாக இருக்கும்.  எங்க அம்மா இருந்தவரை அடிக்கடி எனக்கு இதை செய்து தந்துள்ளார்கள். 

[என் அம்மா இப்போது சுவர்க்கத்தில்;அதனால் நான் இப்போது நரகத்தில்]

சூடான சுவையான குணுக்கை நினைத்தாலே வாயில் நீர் சுரக்கிறது எனக்கு. ;)))))

-oooooOooooo-


பின் குறிப்பு [2]: 


அனுபவம் இல்லாமல் முதன் முதலாக இந்த அடையை தயாரிக்க விரும்புவோர், குறைந்த அளவில் மேற்படி பொருட்களை எடுத்துக்கொண்டு. செய்து பார்ப்பதே நல்லது.

நல்ல கனமாக 6 அடைகளோ அல்லது சற்றே மெல்லிசாக 10 அடைகளோ தயாரிக்க மேற்படி பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு எடுத்துக்கொண்டால் போதும்.

அதாவது 

நயம் இட்லி புழுங்கல் அரிசி -  200 கிராம்
நயம் துவரம் பருப்பு                -  125 கிராம்
நயம் கடலைப்பருப்பு              -   50 கிராம்
LG பெருங்காய்ப்பொடி            -  1 சிறிய ஸ்பூன்
சிவப்பு மிளகாய் வற்ற்ல்       -   8 எண்ணிக்கை
பச்சை மிளகாய்                        -   1 அல்லது 2 
தோல் நீக்கிய் இஞ்சி               -   1 சிறிய துண்டு
கருவேப்பிலை                         -   1 ஆர்க் [10-15 இலைகள்]
உப்பு                                             -   1 அல்லது 2 சிறிய ஸ்பூன்

புழுங்கல் அரிசி + பருப்புகள் மட்டும் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு, மற்ற எல்லாப்பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே தடவையாகவோ அல்லது பிரித்து வைத்து இரண்டு தடவையாகவோ அரைத்துக்கொள்ளலாம். அதிகமாக ஓடஓடத் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாகவே அரைக்கணும். ஊறிய அரிசியும் பருப்பும் முழுசு முழுசாக இல்லாமல் அரைபட்டால் போதும். இட்லி தோசை மாவு போல மையாக அரைபட தேவையில்லை. 

ooooooooooooooooo






அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!


அன்புடன்
VGK

-ooooooooooOoooooooooo-


http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html
என்ற என்னுடைய பதிவுக்கு  
ஓர் பின்னூட்டம் வந்துள்ளது.
அது இதோ இங்கே 




http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/
my-first-event-bachelors-feast.html

நேரம் இருந்தால் வந்து பாருங்கள்




இது யார்? புதிதாக நமக்கு ஓர் அழைப்பு 

விடுத்துள்ளர்களே என்று நான் உட்புகுந்து 

பார்த்தால் ”சமையல் அட்டகாசங்கள்” 

பதிவர் Mrs. JALEELA KAMAL 

அவர்கள் தான் இந்த 

அழைப்பினை விடுத்துள்ளார்கள்.


BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் 

குறிப்புகள் கேட்டுள்ளார்கள். 





ஏதோ ஒரு போட்டியாம். 



அதற்குப் பரிசும் உண்டாம். 

பதிவை எழுதி நம் வலைத்தளத்தில்

வெளியிட்டுவிட்டு அதில் ஏதேதோ 

இணைப்புகள் கொடுத்து அவர்களுக்குத் 

தகவல் தர வேண்டுமாம்.



LINKY TOOL குறிப்புகளை இணைப்பது


எப்படி?  என்றெல்லாம் ஏதேதோ

சொல்லியிருக்கிறார்கள்.




எனக்கு அதெல்லாம் ஒன்றுமே



சுத்தமாகப் புரியவில்லை.





மேலும் அதையெல்லாம் 



செய்து கொண்டிருந்தால்



இங்கு நம் சூடான அடை 



ஆறிவிடும் அல்லவா! 




அதனால் அதையெல்லாம் அப்படியே



அம்போ என நான் விட்டுவிட்டேன்.


சரி, எனக்கு நேரம் ஆச்சு! 


நான் இப்போ சூடாக அடை சாப்பிடணும்!!


அப்போ வரட்டுமா!!! 



Bye for now ........





oooooOooooo





வெள்ளித்தட்டில் சூடான அடைகளும்

சுவையான வெல்லப்பொடியும் ரெடி.

உருக்கிய நெய்யின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்!




அடடா ..... என்ன அழகு!

’அடை’யைத் தின்னு பழகு!!










அன்புடன் 

VGK



  


...

திங்கள், 10 டிசம்பர், 2012

16.12.2012 தேதியிட்ட கல்கியில் என் பெயர்

அன்புடையீர்,

வணக்கம்.


16.12.2012 தேதியிட்ட கல்கி இதழின் 
பக்கம் எண்கள்: 58 +59 இல் 
“வாசகர் கமென்ட்ஸ் போட்டி முடிவு!” வெளியிட்டுள்ளார்கள்.

அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
15 கமென்ட்ஸ்களில் 
என்னுடையதும் ஒன்று 
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

-oOo-

கீழ்க்கண்ட படத்துக்கு வாசகர்கள் அனுப்பிக் குவித்த கமென்ட்ஸ்களிலிருந்து தேர்வான சிறந்த கமென்ட்ஸ்கள் இங்கே பிரசுரமாகியுள்ளன. 

பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் நன்றி!

[ "கல்கி" Dated 16.12.2012 
Released on 09.12.2012 ]





என்னால் எழுதியனுப்பப்பட்டு
வெளியாகியுள்ள கமெண்ட்:

அறுந்திடும் செருப்புக்களால்
அறாமல் தொடர்ந்திடும் படிப்பு

- வை.கோபாலகிருஷ்ணன், திருச்சி




போட்டி முடிவு வெளியான 
கல்கி இதழின் அட்டைப்படம்





அன்புடன்
VGK