’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்
கதையின் தலைப்பு :
VGK-31
’ முதிர்ந்த பார்வை ‘
இணைப்பு:
மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு, மிக அதிக எண்ணிக்கையில் பலரும், மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, வெகு அழகாக விமர்சனங்கள் எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விமர்சனங்கள் மொத்தம்: ஐந்து
மற்றவர்களுக்கு:
இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
விமர்சனம் - 1
இந்தக்காலத்தில் மகனும், மருமகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே பெரும்பாலும் நினைக்கிறார்கள். இப்போதைய சூழ்நிலை நிறைய மாறி இருப்பதால் பிள்ளையைப் பெற்றவர்கள் தங்கள் மகனின் சுக வாழ்க்கைக்குக் குறுக்கே முட்டுக்கட்டை போடுவதில்லை. நாற்பது வருடங்கள் முன்னர் வரை கூட மாமியாருக்கு மகன் மருமகளோடு தனித்திருப்பதைக் கண்டால் பொறாமை ஏற்பட்டு விடும். ஆனாலும் பேரன், பேத்தி என வந்துவிட்டால் மாறும் ஒரு சில மாமியார்களும் உண்டு.
பெற்றோருக்கு எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் பிள்ளைகளின் சுக வாழ்வே குறிக்கோளாக இருக்கும். அவன் திருமணமாகிய பின்னர் தங்களை விட்டு விட்டு மனைவியுடன் தனியாக வசித்தாலும் பெற்றமனம் அவனைத் திட்டாது. எங்கோ ஆயுசோடு கிடக்கட்டும் என்றே நினைக்கும். அதிலும் மகன் வயிற்றுப் பேரன்/பேத்தி என்றால் கேட்கவே வேண்டாம். தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள். மாறாகச் சிலர் பெண்ணின் குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு மகனின் குழந்தைகளைக் கிட்டே சேர்க்காமல் இருப்பதும் உண்டு. ஆனால் இந்தக் கதையிலோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பாசத்தைப் பிழிந்து தருபவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வந்து தங்க நினைத்து மகனிடம் சொல்லி முதியோர் இல்லம் வந்துவிடுகின்றனர். இதில் மகனுக்கு அதிர்ச்சி கலந்த வருத்தம். காரணம் என்னமோ நல்லது தான். ஆனாலும் பெற்றோர் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் ஜாதகத்தைக் காரணம் காட்டுவது இந்தக் காலத்திலும் அதை நம்புபவர்கள் இருப்பதையும் காட்டுகிறது.
ஜோசியர் கூட்டுக்குடும்பமாக இருக்கவேண்டாம், ஆபத்து வரும் எனச் சொல்லி இருக்கிறார் என்கின்றனர் பெற்றோர். ஆனால் உண்மையான காரணம் இது இல்லை என்பது நமக்கே புரிந்து விடுகிறது. ஏனெனில் பெரும்பாலோர் கூட்டுக் குடும்பத்தையே ஆதரிப்பார்கள். உண்மையான ஜோசியர் இப்படிச் சொல்லி இருப்பாரா என்னும் சந்தேகம் நமக்குள் வருகிறது. மகனுக்கோப் பெற்றவர்களைப் பிரிந்து இருக்க முடியவில்லை என்பது பெற்றோரிடம் அவனுக்கு உள்ள அதீத பாசத்தைக் காட்டுகிறது. என்னதான் மணிகண்டன் மனைவியும் நல்லவளாகவே மாமனார் மாமியாரைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாலும், எப்போ என்ன வம்பு கிடைக்கும் என்று அலைகிற மக்கள் இந்தச் சிறிய தாற்காலிகப் பிரிவைக் கூடப் பெரிதாக்கி வம்பு பேசுகின்றனர். அவ்வளவு ஏன் அவள் பெற்றோரே தங்கள் மகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் கொஞ்சம் இடிக்கிறது. ஆனால் மருமகளோ அதையும் தாங்கிக் கொள்கிறாள்.
ஒரு படுக்கை அறைகொண்ட சிறிய வீட்டில் கூட்டுக்குடும்பமாக அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் படித்ததுமே பெற்றோர் முதியோர் இல்லம் சென்ற காரணம் நமக்கும் புரிந்து விடுகிறது. தான் பெற்ற மகனாகவே இருந்தாலும் மனைவியோடு வெளியே செல்லும்போது முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும் அம்மாக்களே அதிகம். இந்த மாதிரியான உலகில் தன் பிள்ளை, மனைவியோடு சேர்ந்து சந்தோஷத்தை அனுபவித்துத் தங்கள் குலத்தை விருத்தி செய்வதற்காக ஒர் குழந்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு பெற்றோர் முதியோர் இல்லம் செல்வது வரவேற்கத் தக்க ஒன்றே. ஆனால் அதைப் பிள்ளையிடம் வெளிப்படையாகச் சொல்லி இருந்தால் முதியோர் இல்லத்துக்குச் செலவு செய்த காசில் கொஞ்சம் கூடப் போட்டு அப்படி, இப்படிக் கடன் வாங்கி இன்னொரு அறை கட்டி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் கணவன், மனைவி வாழ்க்கை ஒரு குழந்தை பிறந்ததும் முடிந்துவிடுவதில்லை. குழந்தைகளோடு முடிவதில்லை கணவன், மனைவி இருவரின் பந்தமும், பாசமும். அதையும் தாண்டி இருக்கிறது.
அத்தகைய ஒரு நிலையை இந்தத் தம்பதிகளும் அனுபவிக்க வேண்டாமா? ஆகையால் அவர்கள் தனியாகச் செல்வதற்கு பதிலாக மகனிடம் மெதுவாக எடுத்துச் சொல்லித் தங்கள் ஆசை நிறைவேற வேண்டுமானால் இன்னொரு அறை வேண்டும் எனக் கூறி இருக்கலாம். ஆனால் இம்மாதிரியான சங்கடமான சூழ்நிலை மும்பை, புனே போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் அனுபவரீதியாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள். அங்கே வீடு கிடைக்காத கஷ்டம். இங்கே வீடு சொந்த வீடாக இருந்தும் பொருளாதாரக் கஷ்டம். மகனுக்காக அவர்கள் செய்யும் தியாகம் இது என ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் நால்வருக்குள்ளாக வெளிப்படையாகப் பேசித் தீர்க்க வேண்டிய ஒன்றை ஊரறியச் செய்திருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது. ஆனாலும் இதன் மூலம் நன்மையே விளைந்தாலும் அக்கம்பக்கம் பேச்சுக்களினாலும், பெற்றோரின் உதாசீனத்தாலும் அந்தப் பெண்ணின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்!
அவள் உடல்நலம் சீர்கெடுவது இதனாலோ என எண்ணினால் இல்லை. அவள் முதல்முறையாகக் கருவுற்றிருக்கிறாள். அதுவும் இரட்டைக்குழந்தையாக இருக்கலாம் என இரட்டிப்பு சந்தோஷத்தையும் கொடுக்கிறாள். ஆனாலும் மணிகண்டனுக்கு இந்த நேரம் பார்த்துத் தன் பெற்றோர் அருகே இல்லையே எனத் தோன்றப் பெற்றோரிடம் சென்று சொல்லி ஆலோசனை கேட்கிறான். மணிகண்டனின் பெற்றோர் செய்த தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் நினைத்தது நிறைவேறிய திருப்தியில் இதைச் சொல்ல வந்த பிள்ளையிடமும், மருமகளிடமும் தாங்கள் திரும்ப வீட்டுக்கே வருவதாகச் சொல்லி விடுகின்றனர். ஆனால் கடைசி வரை தாங்கள் வெளியே வந்த காரணத்தைச் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். இனி எல்லாம் சுகமே!
விட்டுக் கொடுத்துப் போவதும், ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதும் தான் இல்வாழ்க்கையின் உண்மையான தாத்பரியம் என்பதை இந்த சின்னஞ்சிறு கதையின் மூலம் புரிய வைத்த ஆசிரியருக்குப் பாராட்டுகள். அதே சமயம் கூட்டுக் குடும்பங்களில் ஒவ்வொருவரும் வெளிப்படையாகத் தங்கள் குறைகளைப் பேசிப் புரியவைக்கவேண்டும் என்பதும் என் தனிப்பட்ட கருத்து.
இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
விமர்சனம் - 2
சாதாரண கருவை வைத்துச் சிறுகதை பின்னியிருக்கும் சாமர்த்தியத்துக்கு மறுபடியும் ஜே!
பிள்ளை மருமகளுடன் வாழும் பெற்றோர்.
மாமியார் மாமனாரை மதித்து நடத்தும் மருமகள்.
பெற்றோர்களைத் தாங்கோ தாங்கு என்று தாங்கும் பிள்ளை.
திடீரென்று ஜோசியர் 'கூட்டுக் குடும்பத்தினால் ஆபத்து' என்று குறி சொன்ன சாக்கில் முதியோர் இல்லத்தில் வலியச் சேர்கிறார்கள் பெற்றோர்கள். பிள்ளை துடிக்கிறான். மருமகளுக்கு அவப்பெயர். வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் இளம் தம்பதியினர் தனிமையில் இனிமை காண்கின்றனர். நாலு மாதங்களில் மருமகள் கர்ப்பம். ஜோசியர் பரிகாரம் சொன்னதாகச் சொல்லி பெற்றோர் மறுபடி பிள்ளை மருமகளுடன் சேர்கிறார்கள்.
சில கதைகள் பொழுதுபோக்குக்காக எழுதப்படுபவை. சில செய்தி சொல்வதற்காக எழுதப்படுபவை.
இந்தக் கதை பொழுதுபோக்கா செய்தியா எதை வைத்து எழுதப்பட்டது என்றக் கேள்வி ஒருபுறம் இருக்க, இது போன்ற கதைகளில் இல்லாத செய்தியைக் கூட இருப்பதாக அறியும் அபாயம் இருக்கிறது என்பது ஒரு பெரிய நெருடல்.
முன் சொன்னது போல் எளிய கரு, கதை பின்ன ஒரு முரணும் சில கொக்கிகளும் தேவைப்பட்டதால் அதையும் சேர்த்துப் பின்னியிருக்கிறார் கதாசிரியர். அங்கே தான் கதை வழுக்கி விழுந்திருப்பதாக நினைக்கிறேன்.
கதையில் வரும் பெற்றோர் கண்மூடித்தனமான ஒரு காரணத்தைச் சொல்லித் திடீரென முதியோர் இல்லத்தில் வற்புறுத்திச் சேர்ந்து விடுகின்றனர். கூட்டுக் குடும்பம் உடைகிறது. பிள்ளைக்கும் மருமகளுக்கும் வருத்தம். மருமகளின் பெற்றோர்களே அவளை அவதூறாகப் பேசுகிறார்கள். கடைசியில் அதே உருப்படாத காரணத்துக்கான பரிகாரத்தைச் சொல்லிப் பெற்றோர்கள் சேர்கிறார்கள். கூட்டுக் குடும்பம் பிழைக்கிறது.
சல்லடைக்கு எத்தனை ஓட்டை? இந்தக் கதைக்குள் அத்தனை ஓட்டை.
பெற்றோர்களின் செயலுக்கு என்ன உந்துதல்? எதற்காக அப்படித் துணிந்தார்கள்? 'இளம் தம்பதிகளின் நெருக்கத்துக்கு தாங்கள் தடையாக இருக்கிறோமோ' என்ற உள்ளுணர்வின் கேள்வி. புரிகிறது. நேர்மையான கேள்வியே. அதற்காக என்ன செய்யலாம்? என்னென்னவோ செய்யலாம்.
'ஒரு வருடம் கோவில்களுக்குச் சென்று வருகிறோம், துணையோடு பயணம் ஏற்பாடு செய்' என்றால் உடனே செய்திருப்பான் இந்த மகன். வரவுக்குள் செலவு செய்து தந்தையின் ஓய்வூதியத்தைச் சேமித்து வைப்பவனுக்கு, இவர்களுக்குப் பயணம் அமைத்துத் தரத் தெரியாதா? ஒன்றுமில்லாவிட்டால் கூட உதவாக்கரை சம்பந்திகள் - பெற்ற பெண்ணையே அவதூறு பேசும் இந்தப் பெற்றோர்கள் கேவலமானவர்கள் என்று தோன்றுகிறது (மெலோடிராமா என்றாலும் உதை உதை என்று உதைக்கிறது) - இரண்டு பெற்றோர்களையும் சேர்த்து சேத்ராடனம் அனுப்பியிருக்கலாம்.
அது முடியவில்லையா? பக்கத்து வீடாகப் பார்த்துக் கொள்ளும்படி பையனிடம் ஒரு தனிப் போர்ஷன் கட்டச் சொல்லியிருக்கலாம். பொய் சொல்லி வற்புறுத்தி முதியவர் இல்லம் போகிறவர்கள், இதைச் செய்ய பொய் சொல்ல வேண்டியதேயில்லை! போதாக்குறைக்கு செட்டாகச் செலவழிக்கும் மகன், தனி போர்ஷனை ஒரே மாதத்தில் கட்டிக் கொடுத்திருப்பான் என்று தோன்றுகிறது.
அது முடியவில்லையா? பிள்ளை மருமகளை மாதத்தில் நாலு நாள் தனியாக அனுபவித்து வர எங்காவது அனுப்பலாம். பொய் சொல்லி அவர்களை ஏமாற்ற வேண்டியதில்லை.
அதுவும் முடியவில்லையா? பிள்ளையிடம் உண்மையைச் சொல்லலாம். வயதான பிள்ளைக்கு விவஸ்தை கிடையாதா என்ன? பெற்ற பிள்ளைகளிடம் உண்மையைப் பேச முடியாத பெற்றோர்கள் இருந்தால் என்ன, போனால் என்ன? பிள்ளைகளிடம் கூட நேர்மையாக உண்மையாகப் பேசவில்லையென்றால் பெற்றோர் என்ற அந்தஸ்துக்கே அவமானமில்லையா? பிள்ளைகளிடம் நேர்மையாக நடக்கவில்லையென்றால் இவர்கள் யாரிடம் நேர்மையாக நடக்கப் போகிறார்கள்?
பொய் சொல்லத் துணிந்தார்கள். அதையாவது குட்டையைக் குழப்பாமல் செய்திருக்கலாம். 'கூட்டுக் குடும்பத்தினால் ஆபத்து' என்று ஜோசியர் சொன்னதாகச் சொல்லும் பொழுதே பரிகாரம் பற்றியும் சொல்லியிருந்தால் ஓரளவுக்காவது கதைப் போக்கிலும் பெற்றோர்களின் செயலிலும் நாகரீகத்தின் சாயல் தெரிந்திருக்கும்.
சாத்திரம் சம்பிரதாயம் பார்க்கும் குடும்பத்தில் இப்படி ஒரு பொய் சொல்லி சுய நலத்துக்காகத் தனியே செல்லும் பெற்றோர்கள், தங்கள் செயலினால் ஒன்றுமறியாத மருமகளுக்கு அவதூறு வருவதை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? தங்கள் நலத்துக்காக, தங்கள் பிள்ளையின் சந்ததிக்காக, வீட்டுக்கு வந்த பெண்ணை இக்கட்டான நிலைக்கு உட்படுத்தும் இந்தப் பெற்றோர்களை எப்படி மதிப்பது?
எல்லாவற்றுக்கும் மேல் இங்கே இடிக்கிறது. முதல் குழந்தை பிறக்கும் சாத்தியம் தெளிவாகிவிட்டது. சாமர்த்தியமாகச் சாதனை புரிந்ததாக பெற்றோர்களுக்கு மெடல் கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். சரி, அடுத்தக் குழந்தைக்கு இந்தப் பெற்றோர் எத்தகைய பொய்யைச் சொல்வார்கள்?
இவர்களின் நடத்தையில் பெருமைப்பட எதுவும் இல்லை. அடுத்த முப்பது வருடங்களில் இவர்களது மகன் இப்படி நடக்காமல் நேர்மையுடன் நடப்பான் என்ற நம்பிக்கை இருந்தாலும், இலேசானக் கலக்கம்.
போலியாக ஒரு கிலியை உண்டாக்கி இருப்பவர்களையெல்லாம் தேவையில்லாமல் கலங்க வைத்து, கடைசியில் ஒன்றுமில்லை என்று கைவிரிக்கும் அசட்டுத்தனம். வயதானால் கிறுக்குத்தனம் அதிகமாகும் என்பதற்கு இந்தக் கதையின் பெற்றோர்கள் ஒரு உதாரணம். பெற்ற மகனிடம் பொய் சொல்ல இந்தப் பெற்றோர்களுக்கு எப்படி மனம் வந்தது? எந்த வகை நேர்மையைக் கடைபிடிக்கிறார்கள் இவர்கள்? இளம் தம்பதிகளின் நெருக்கம் ஒன்றும் புதிய விஷயமல்ல. இதே பெற்றோர்கள் ஒரு காலத்தில் இளம் தம்பதிகளின் நிலையில் இருந்தவர்கள் தான். அதிலிருந்தாவது அறிவு கிடைத்திருக்கக் கூடாதோ? கிடைக்கவில்லை. அவர்கள் நெருங்குவதற்காக இவர்கள் என்னவோ தியாகம் புரிவது போல் நடந்து கொள்வது அருவருப்பாகவும் பட்டது.
பொழுதுபோக்காகப் படித்துவிட்டுப் போக முடியவில்லை. நல்ல வேளை, இது போன்ற பெற்றோர்கள் எனக்குக் கிடைக்கவில்லையே என்ற நிம்மதியே மேலோங்கியது. ஒரு வேளை அதைத்தான் கதாசிரியர் சொல்ல வந்தாரா? அதுதான் செய்தியா? நீண்ட நாட்கள் உறுத்திக் கொண்டிருக்கபோகும் கதை.
பத்திரிகைகளில் கதை எழுதுபவர்களுக்குக் கிடைக்காத 'பாடங்கள்', வலைப்பதிவுகளில் எழுதுவோருக்குக் கிடைப்பது உண்டு.
தன் கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு எப்படியெல்லாம் தன் கதை அவர்களுக்கு அனுபவமாகிறது என்பதை அந்தக் கதையை எழுதிய கதாசிரியரும் தெரிந்து கொள்கிற வாய்ப்பு இது. எதையும் கதை பண்ணும் திறமைசாலிகள் இப்படியான வாசக அனுபவங்களையும் கதை பண்ணும் சாமர்த்திய எழுத்தாளர்களாய் இருப்பதும் உண்டு.
கதாசிரியரைத் தாண்டி இந்த விமரிசனம் மகனைப் பெற்ற அப்பாவி பெற்றோர்களுக்கும் பாடம் சொல்கிறது. அன்பைப் பொழிவதாக நினைத்து அவர்கள் செயல்படுவது பார்ப்பவர்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படலாம் என்பதற்கான பாடமாகவும் தெரிகிறது.
அடுத்து பெண்ணைப் பெற்றோருக்கும் பாடம். தன் மகள் அவளது கணவனின் பெற்றோர்களைத் தன்னைப் பெற்றவர்கள் போல நினைத்து ஊரார் மெச்ச அல்ல பொறாமைப்பட கூட்டுக் குடும்ப வாழ்க்கை நடத்தினால் மகளைப் பெற்ற பெற்றோர்கள் அடையும் நிம்மதி, நிம்மதியே அல்ல என்று இன்னொரு பாடம்!
இத்தனை பேருக்குப் பாடம் கற்பிப்பதான தோற்றம் கொள்வதினால் தான் இந்த விமரிசனத் தேர்வும்.
பார்வைகள் முதிர்வதும், முதிராததும் அவரவர் அனுபவப் பார்வைகளின் தன்மை வயப்பட்டதே என்பது மட்டும் யாராலும் மாற்றுச் சொல்ல முடியாத இன்னொரு பாடம். ஆக பெரும் அனுபவமே அத்தனைக்கும் ஆசான்.
-- நடுவர்
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப் பிரித்து அளிக்கப்பட உள்ளது.
இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப் பிரித்து அளிக்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-33
VGK-33
’ எல்லோருக்கும் பெய்யும் மழை ’
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்