என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

VGK 32 - ச கு ன ம்



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 28.08.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

[ V A L A M B A L @ G M A I L . C O M ]


REFERENCE NUMBER:  VGK 32

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 



’ச கு ன ம் ‘

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




அன்று வைகுண்ட ஏகாதசி. விடியற்காலம் மூன்று மணிக்கே நான் அலாரம் வைத்து எழுந்துவிட்டேன். ஸ்ரீரங்கம் போய் பெருமாளை சேவிக்கும் ஆவலில் வெளியூரிலிருந்து ரயிலில் வந்து இறங்கப்போகும் என் மாமியாரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அழைத்துவர நான் திருச்சி ஜங்ஷனுக்குச் செல்ல வேண்டும். அவர்களை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு நான் ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து என் ஆபீஸுக்குச்செல்ல வேண்டும்.

குளித்து முடித்துப் புறப்படத் தயாரானேன்.

“நாலு மணிக்கு பால் பூத் திறந்துவிடும்; தயவுசெய்து இரண்டு அரை லிட்டர் பாக்கெட்டுகள் வாங்கிக்கொடுத்துட்டுப் போயிடுங்கோ; ஜங்ஷனுக்கு போகவர ஆட்டோ பேசிக்கொண்டு விடுங்கோ”  புது டிகாக்‌ஷனில், ஃபிரிட்ஜ்ஜில் இருந்த பழையபாலை சுடவைத்துக் கலந்த காஃபியை நீட்டியவாறே அன்புக் கட்டளையிட்டாள் என்னவள்.  

காஃபியை என் கையில் கொடுத்தவள், வாசலைப்பெருக்கி, தண்ணீர் தெளித்து, சிறிய கோலம் ஒன்றை அவசர அவசரமாகப் போடலானாள். [வாசலில் தண்ணீர் தெளிக்காமல், காலையில் வீட்டை விட்டு யாரும் எங்கும் வெளியே புறப்பட்டுப் போகக்கூடாது என்பது சாஸ்திர சம்ப்ரதாயமாகும். ] 

அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில், காலை ஆறு மணிக்கு மேல்தான் லிஃப்ட் இயக்கப்பட வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. இரண்டாவது மாடியிலிருந்து முப்பத்தாறு படிகள் இறங்கி, தெருக்கோடியில் உள்ள பால் பூத்துக்கும் ஆட்டோவிலேயே சென்று, பால் பாக்கெட்டுகள் வாங்கிவந்து, ஆட்டோக்காரரை ஐந்து நிமிடம் நிற்கச்சொல்லி விட்டு வாங்கி வந்த புதுப்பாலை என் மனைவியிடம் கொடுக்க மீண்டும் படியேறினேன்.

நான் படியேறி மேலே போகும்போது, எண்பது வயதைத்தாண்டிய ஸ்ரீமதிப்பாட்டியும், ஐம்பது வயதாகியும் பிரும்மச்சாரியான அவர்களின் இரண்டாவது மகனும், முதல் மாடியிலிருந்து கீழே இறங்கி காவிரி ஸ்நானத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த வயதிலும் அவர்கள் இருவரும் மிகவும் சுறுசுறுப்பானவர்களாகவே உள்ளனர். எனக்கும் தூரத்து சொந்தம் தான். அந்தக்கால உடம்பு. வெயிலோ, மழையோ, பனியோ, குளிரோ வருஷம் முழுவதும் விடியற்காலம் நாலு மணிக்குள் எழுந்து, ஐந்து மணிக்குள் கிளம்பி, போகவர சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்தே போய் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, விபூதியைக் குழைத்து இட்டுக்கொண்டு, சிவப்பழமாக சொட்டச்சொட்ட ஈரத்துணியுடன், காலை ஏழு மணிக்குள் திரும்பி வந்து விடுவார்கள்.  

அந்த ஸ்ரீமதிப்பாட்டியின் கணவர் இருந்தவரை, அவருடனேயே தான் காவிரி ஸ்நானத்திற்கு சென்று வந்தார்கள். முகம் பூராவும் பசுமஞ்சளுடன் பார்க்கவே பறங்கிப்பழம்போல நல்ல சிவப்பாக, நெற்றியிலும், நடுவகிட்டிலும் குங்குமம் வைத்துக்கொண்டு, தீர்க்க சுமங்கலியாகவே சிரித்த முகத்துடன் அழகாக அம்பாள் போல காட்சியளித்தவர்கள் தான். இப்போது கணவர் காலமானபின் கூடத்துணைக்கு தன் பிள்ளையை அழைத்துக்கொண்டு தினமும் விடியற்காலம் காவிரிக்குச் சென்று வருகிறார்கள். 

பெரும்பாலும் நான் ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து ஆபீஸ் போக அவசரமாகச் செல்லும் போது, அநேகமாக இவர்கள் இருவரும் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, சிவப்பழமாக எதிரே தென்படுவார்கள்.

ஆரம்ப நாட்களில் எனக்கு நேர் எதிராக வராமல், நான் ஆபீஸுக்கு நல்லபடியாக போய் வரவேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில், சற்றே தயக்கத்துடன் ஒதுங்கி நின்று, வழிவிட்டு விடுவார்கள், அந்தப் பாட்டி.

ஒரு நாள், எனக்கு எதிரே ஏதோ யோசனையில் நடந்து வந்து விட்ட அவர்கள் என்னைப்பார்த்து,  “சிவராமா, ஓரமா ஒரு நிமிஷம் உட்கார்ந்து விட்டு, பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, பிறகு போப்பா” என்றார்கள் அந்த ஸ்ரீமதிப்பாட்டி.

“பாட்டி, நான் சகுனம் ஏதும் பார்ப்பதே கிடையாது. தினமுமே உச்சிப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டும், ஹனுமான் ஸ்லோகம் சொல்லிக்கொண்டும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்து கொண்டும் தான், ஆபீஸுக்குப்போய் கொண்டிருக்கிறேன்;  

மேலும் நீங்கள் பல்லாண்டு காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, இந்தத் தள்ளாத வயதிலும், மிகவும் மனோ தைர்யத்துடன், தினமும் காவிரி ஸ்நானம் செய்து கொண்டு, பசி பட்டினி இருந்து தினமும் ஜபம், தபம், விரதம் முதலியவற்றை அனுஷ்டித்துக்கொண்டு, பழுத்த பழமாக இருந்து வருகிறீர்கள்.  நான் அலுவலகம் செல்லும்போது தாங்கள் என் எதிரே நடந்து வருவதை, ஒரு மிக நல்ல சகுனமாகவே எடுத்துக்கொள்கிறேன்; 

தொடர்ந்து எரியும் தீபத்தில் எண்ணெயோ அல்லது திரியோ ஏதாவது ஒன்று தீர்ந்து போவது இயற்கை தானே! அதுபோல வயதான தம்பதியினரில், யாராவது ஒருவர் மற்றொருவரை விட்டுவிட்டு, முன்னால் போவதும், தவிர்க்க முடியாத ஒரு இயற்கையின் நியதி தானே!

அதனால் என் எதிரில் தாங்கள் வர நேரும்போது, எந்தவிதமான தயக்கமும் இன்றி, ஒதுங்கி நிற்காமல் சர்வ சாதாரணமாகவே வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றேன். 

இதைக்கேட்டதும் ஸ்ரீமதிப் பாட்டிக்கு ஒரே சந்தோஷம். 

“சிவராமா, நீ மஹராஜனா நீண்ட நாட்கள் செளக்யமா, சந்தோஷமா இருக்கணும்டா” என்று வாயார வாழ்த்தினார்கள்.

இந்த அவசர யுகத்தில், விஞ்ஞான உலகத்தில், சகுனம் பார்ப்பது எவ்வளவு ஒரு மூட நம்பிக்கை என்பதை அந்த இரு பெரியவர்களுக்கும், நாசூக்காக உணர்த்தி விட்டோம் என்பதில் எனக்கு ஒரு பெரிய திருப்தி ஏற்பட்டது.

ரயிலில் வந்திறங்கிய என் மாமியாரை ஆட்டோவில் கூட்டிவந்து என் வீட்டில் விட்டுவிட்டு, அவசர அவசரமாக ஆபீஸுக்குப் புறப்பட்ட நான் ஏழு மணி பஸ்ஸையும் ஓடிப்போய் பிடித்து விட்டேன்.

பீஸுக்கு வந்த எனக்கு சிறிது நேரத்திலேயே, என் மனைவியிடமிருந்து டெலிபோனில் அவசர அழைப்பு வந்தது. 

“காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, படித்துறையில் படியேறி வந்த ஸ்ரீமதி பாட்டி கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த அடி பட்டுவிட்டதாம். பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்களாம். டாக்டர் வந்து பார்த்துவிட்டு, அடுத்த 24 மணி நேரத்திற்கு எதுவும் சொல்வதற்கு இல்லை என்று சொல்லி விட்டாராம். சொந்தபந்தம் எல்லோருக்கும் தகவல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். மூத்த பிள்ளையும், நாட்டுப்பெண்ணும் (மருமகளும்), பேரன் பேத்தியும் பம்பாயிலிருந்து கிளம்பி விட்டார்களாம்; 

எது எப்படியிருந்தாலும் நானும் என் அம்மாவும் ஸ்ரீரங்கம் போய் வைகுண்ட ஏகாதசியான இன்று பெருமாளை ஸேவித்து விட்டு வந்துவிடுகிறோம்” என்று தகவல் சொல்லிவிட்டு, தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள்.

ஆபீஸ் முடிந்து மாலை நான் வீட்டுக்கு வந்தேன். உள்ளே நுழையும் போதே சமையலறையிலிருந்து கும்முனு ஏதோ ஒரு புதிய வாசனை. என் மாமியார் வந்தாலே இப்படித்தான். சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது புதுசுபுதுசாக திண்பண்டங்கள் செய்து அசத்தி விடுவார்கள். 

திரட்டுப்பால் செய்து கொண்டிருப்பது போலத்தெரிய வந்தது. அந்த திரட்டுப்பாலை மாப்பிள்ளைக்கு மாமியார், ஒரு பெரிய வெள்ளி டவரா நிறைய வெள்ளி ஸ்பூன் போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, சுவையாக நானும் ருசித்தேன். என் அருகே குடிநீர் கொண்டு வந்து வைத்த மனைவியிடம் “நீயா செய்தாய்? சூப்பரா இருக்கு!” என்று சும்மாவாவது கேட்டு வைத்தேன்.

அவள் வழக்கம் போலவே, ”உங்க மாமியார் தான் ஆசை ஆசையாக உங்களுக்குப் பிடிக்குமேன்னு செய்திருக்கிறார்கள்; எனக்கு இதெல்லாம் பொறுமையாக, பதமா, பக்குவமா செய்ய வராதுங்க” என்று ஒப்புக்கொண்டாள்.

அம்மா சமையலில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தால், அவர்களின் பெண் நேர்மாறாகத்தான் இருப்பார்கள். இது பல இடங்களில் நான் சோதித்துக் கண்டு பிடித்த உண்மை. 

தன் மகள் நன்றாக படித்து முன்னேறட்டும் என்று மிகவும் செல்லமாக வளர்த்து, சமையல் அறைப்பக்கமே அவர்களை வரவிட மாட்டார்கள். சமையல் சம்பந்தமாக எதுவும் சொல்லித்தரவும் மாட்டார்கள். தானே ஒண்டியாக சமாளித்துக்கொள்வார்கள். இது போன்று செல்லமாகவே வளர்ந்துவிட்ட பெண்களுக்கு படிப்பு முடிந்ததும் திருமணம் ஆகிவிடும். புகுந்த வீட்டிற்குப்போகும் அந்தப் புதுப்பெண்ணுக்கு தினப்படி சமையல் செய்யப் பழகுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.  

அன்று இரவே ஏழு மணி சுமாருக்கு, ஒரு சம்புடத்தில் திரட்டுப்பாலை கணிசமான அளவு எடுத்துக்கொண்டு, படுத்த படுக்கையாக இருக்கும் ஸ்ரீமதிப்பாட்டியைப் பார்க்க முதல் மாடிக்கு நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். இதுவரை எப்போதுமே என்னைப்பார்த்ததும் சிரித்த முகத்துடன் “வாடா, சிவராமா” என்று வாய் நிறைய வரவேற்று, கலகலப்பாகப் பேசி வந்து கொண்டிருந்த பாட்டியைப் படுத்த படுக்கையாய்க் கண்டதும் எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 

கொஞ்சமாகத் திரட்டுப்பாலை எடுத்து நானே பாட்டியின் வாயினுள் ஊட்டி விட்டேன். அவர்கள் லேசாக அதை சுவைத்து தொண்டைக்குள் விழுங்கியது போலத் தோன்றியது எனக்கு. எப்போதும் என்னைப்பார்த்தால் “சிவராமா! நீ மஹராஜனா நீண்ட நாள் செளக்யமா, சந்தோஷமா, இருக்கணும்டா” என்று சொல்லி ஆசீர்வதிப்பார்கள். நான் கொடுத்த சிறிதளவு திரட்டுப்பாலை அவர்கள் ஏற்றுக்கொண்டு சுவைத்தது, இப்போது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.

என் மாமியார், சம்புடத்தில் இருந்த திரட்டுப்பாலை அங்கே கூடியிருந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் விநியோகித்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷம். ”எப்படி மாமி இவ்வளவு ருசியா, கையிலே ஒட்டாதபடி சுருள்சுருளாகப் பண்ணுகிறீர்கள்?” என்று கேட்டு அதற்கான செய்முறையைச் சொல்லச்சொல்லி மனதில் எழுதிக்கொண்டனர். 

அந்தப் பாட்டியின் இரண்டாவது மகன் நேராக என் மாமியாரிடம் வந்தார். நாங்கள் திரட்டுப்பால் கொண்டு சென்ற சம்புடத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டார். திரட்டுப்பால் சரிபாதி விநியோகிக்கப்பட்டு, மீதி பாதி அப்படியே அந்த சம்புடத்தில் இருந்தது.  அதை வாங்கிக்கொண்டவர், நேராக சமையல் அறைப் பக்கம் போனார். அப்படியே அதை முழுவதும் வழித்து முழுங்கி சுத்தமாக ஃபினிஷ் செய்துவிட்டு, அந்தப்பாத்திரத்தையும் கையோடு தேய்த்து அலம்பிக் கொண்டு வந்து எங்களிடம் பொறுப்பாக ஒப்படைக்கும் போது ஒரு பெரிய ஏப்பமும் விட்டார்.

“டாக்டர் என்ன சொன்னார்?” ஒரு மரியாதைக்காக நான் கேட்டு வைத்தேன்.

“தலையில் அடி பலமாக விழுந்துள்ளது; ரொம்ப வயசாகி விட்டதாலே, பிழைப்பது ரொம்பவும் சிரமம். எல்லோருக்கும் தகவல் கொடுத்திடுங்கோன்னு சொன்னார்; அண்ணா மன்னி குழந்தைகள் எல்லோரும் வந்துண்டே இருக்கா; என்ன செய்யறது, நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்”, என்று சொல்லிக்கொண்டே திரட்டுப்பாலை முழுவதுமாக முழுங்கிய மகிழ்ச்சியிலும், மிகவும் கஷ்டப்பட்டு சற்றே அழுகையை வரவழைக்க முயற்சித்தார்.

“கவலைப்படாதீங்கோ; தங்கள் அம்மா எப்படியும் பிழைச்சுடுவான்னு எனக்குத் தோணுது, ராத்திரி வேளையிலே ஏதாவது உதவி தேவைன்னா, தயங்காம என்னை வந்து கூப்பிடுங்கோ” என்று ஆறுதல் சொல்லிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பினோம்.

ராத்திரி பத்தரை மணி இருக்கும். எங்கள் பில்டிங்கே அதிருவது போல ஒப்பாரிக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.  உடனே நான் புறப்பட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். 

என் வீட்டு பூஜை அறையில், கங்கை நீர் அடைத்து வைத்திருந்த  சொம்பை ஞாபகமாக எடுத்துப்போய் அதை உடைத்து பாட்டியின் வாயில் கொஞ்சம் ஊற்றி, உடம்பு பூராவும் தெளித்தேன். சுவற்றின் மூலையில் தீபம் ஒன்று ஏற்றி வைக்கச்சொன்னேன்.  பாட்டியின் தலைப்பக்கம் தெற்கே இருக்குமாறு மாற்றிப்போட்டேன். கைக் கட்டைவிரல்கள் இரண்டையும், கால் கட்டைவிரல்கள் இரண்டையும் சேர்த்து சிறிய துணி ஒன்றினால் இறுக்கமாகக் கட்டிவிட்டேன்.

தூரத்து சொந்தமான ஸ்ரீமதிப்பாட்டியின் இறுதிச்சடங்குக்கு, வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து,  என்னால் முடிந்த சரீர ஒத்தாசைகளும் செய்தேன்.

மறுநாள் காலை மூத்தபிள்ளை, நாட்டுப்பெண் (மருமகள்), நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணத்தை எதிர்கொண்டு நிற்கும் பேத்தி,  பள்ளியில் படித்து வரும் பேரன்,  அனைவரும் வந்திறங்கி, பாட்டியின் காரியங்கள் யாவும் ஜாம் ஜாம் என்று நடைபெறத்தொடங்கின. 

அக்கம்பக்க வீடுகளில் குடியிருப்போர், உற்றார், உறவினர் என நிறைய கும்பல் கூடி விட்டது. இறந்தவர் பல்லாண்டுகள் நன்றாக வாழ்ந்து, வயது எண்பதையும் தாண்டியிருப்பதால் இது ஒரு ‘கல்யாணச் சாவு’ தான் என்று கலகலப்பாக எல்லோரும் பேசிக்கொண்டனர்.    

’ஆஹா! ஏகாதசி மரணம், துவாதசி தகனம்’ கிடைத்துள்ளது இந்தப் புண்யவதிக்கு என்றனர் ஒருசிலர்.

‘சாதாரண ஏகாதசியா என்ன! வைகுண்ட ஏகாதசியாக்கும்!! என்றனர் மேலும் சிலர்.

எனக்கும் அவர்கள் கூறுவது மிகவும் நியாயமாகவே பட்டது.

‘சாவிலும் இதுபோல, ஒரு நல்ல சாவு, டக்குணு கிடைக்கணும்பா’ என்றனர், அடுத்தடுத்து அதை எதிர்நோக்கிக் க்யூவில் காத்திருக்கும், பெரிசுகளில் சிலர்.

காவிரிக்கரையில் உள்ள ஓயாமாரியில் பாட்டியின் உடலை முறைப்படி கொள்ளி போட்டு எரியச் செய்து விட்டு, எல்லோருமாக பாட்டிக்காக காவிரியில் தலை முழுகிவிட்டு, வீடு திரும்பினோம்.

தலைவாழை இலை போட்டு, பாயஸம், பச்சடி, முப்பருப்பு வகைகளுடன் அனைவருக்கும் வயிறார விருந்து சாப்பாடு போடப்பட்டது, எங்கள் வீட்டிலேயே. 

காவிரிக் கரையிலேயே அனைவருக்கும் சாப்பாட்டுக்கு அழைப்பு கொடுத்து விட்டோம். இறந்தவர் நமக்கு அளிக்கும் பிரஸாதமாக ஏற்று, சொந்த பந்தங்கள் அனைவரும் இருந்து சாப்பிட்டு விட்டுச் செல்வது தான் வழக்கம்.  சமையல் செய்த புண்ணியத்தை என் மாமியாரும், அனைவருக்கும் பரிமாறிய புண்ணியத்தை என் மனைவியும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். 

சாப்பாடு முடிந்ததும், கை அலம்பிய கையோடு, வந்தவர்கள் அனைவரும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டனர். 

சாப்பாடு முடிந்தபின், பாட்டியின் பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டிலேயே தனியாக இருக்கும் ரூம் ஒன்றில், மேற்கொண்டு நடைபெற வேண்டிய பதிமூன்று நாட்கள் காரியங்களைப்பற்றி தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.     

அந்த ரூமுக்கு வெளியே நான் சற்று ஓய்வாகப் படுத்திருந்ததால் அவர்கள் பேச்சு என் காதிலும் அரைகுறையாக விழுந்து கொண்டிருந்தது.

”நம் அம்மா நல்லா, திடமாகத்தானே இருந்தார்கள்! தன் பேத்தி கல்யாணத்தைக்கூட பார்க்காமல், இப்படித் திடீரென்று போய்ச் சேர்ந்துடுவாள்ன்னு, நான் எதிர்பார்க்கவே இல்லை” மூத்தவர் இளையவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.  

”நேத்திக்கு காலையிலே தூங்கியெழுந்து வழக்கம்போல காவிரிக்குக் குளிக்கப் போகும்போது நல்லாத்தானே இருந்தாங்க!  விடியற்காலம் ஐந்து மணியிருக்கும். இந்த ஒத்தப்பிராமணன் சிவராமன் தான் படியேறி எதிரே வந்தான். அவன் முகத்திலே தான் முதன் முதலாக முழிச்சாங்க; 

எனக்கு அப்போதே மனசுக்கு ஒரு மாதிரி கருக்குனு தோணிச்சு. இப்போ என்னைத் தாயில்லாப் பிள்ளையாக ஆக்கிவிட்டு, இப்படி அநியாயமாப் போய்ட்டாங்க” என்று அந்த 50 வயதான தடிப்பிரும்மச்சாரி தன் அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தது என் காதில் நன்றாகவே விழுந்தது.  உடனே ஒரு நிமிடம் நான் மிகவும் அதிர்ச்சியானேன்.

நல்லவேளையாக இந்த இவர்களின் பேச்சு என் மனைவி காதிலோ, என் மாமியார் காதிலோ விழவில்லை. என்னைப்போல இதை அவர்கள் சுலபமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சண்டைபோட்டு, மண்டையை உடைத்து, இன்றைக்கே இன்னொரு சாவு இங்கு ஏற்படுமாறு செய்து இருந்திருப்பார்கள்.

எவ்வளவு வருஷங்கள் ஆனாலும், இந்தத் தடிப்பிரும்மச்சாரி போன்ற ஒரு சில, நன்றிகெட்ட அசட்டு மனிதர்களின் மூட நம்பிக்கையை, நாம் முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.

தன் வயதான தாயாரை காவிரி ஸ்நானத்திற்கு கூட்டிச்சென்றவர், அவர்கள் நல்லபடியாக காவிரிப் படித்துறையில் படியேறி வரும்போது ஜாக்கிரதையாகப் பார்த்து கையைப்பிடித்து கூட்டி வந்திருக்க வேண்டும்.

அதை பொறுப்பாகச் செய்யாமல், அந்தப்பாட்டி கால் தடுக்கி கீழே விழுந்து தலையில் நல்ல அடிபட, கூடப்போன இவரின் கவனக்குறைவே காரணமாக இருக்கும்போது, வீட்டை விட்டு புறப்பட்ட போது நான் எதிரே வந்ததால் சகுனம் சரியில்லாமல் இப்படி ஆகிவிட்டதாக என் மீது பழியைப் போடுகிறார்.  

மனிதர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படியெல்லாம் பேசுகிறார்கள், எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள், நன்றிகெட்ட ஜன்மங்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

”எல்லாம் அதுஅது தலைவிதிப்படி நடக்க வேண்டிய நேரத்தில், நடந்து கொண்டே தான் இருக்கும். எம தர்மராஜாவிடமிருந்து யாரும் தப்பவே முடியாது. ஏதோ இந்தக்கிழவி தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொண்டு, கடைசிவரை வைராக்கியமாக இருந்து, டக்குனு மகராஜியாப் போய்ச்சேர்ந்துட்டா. யாருக்கும் கடைசிவரை எந்த சிரமமும் கொடுக்கவில்லை” இறந்துபோன பாட்டியின் மூத்த மருமகள், ஒரு மூலையில் ஓரமாக முடங்கிக்கிடந்த வேறொரு காது கேளாத கிழவியிடம், கத்திப் பேசிக்கொண்டிருந்தாள். 

வெயிலில் பாட்டி காரியமாக அலைந்துவிட்டு, பலமான விருந்து சாப்பாடும் சாப்பிட்ட எனக்கு கண்ணைச் சொக்கியதால், தூக்கம் வருவது போல இருந்தது.

“சிவராமா! நீ மஹராஜனா நீண்டநாள் செளக்யமா, சந்தோஷமா இருக்கணும்டா ” என்ற ஸ்ரீமதிப்பாட்டியின் குரல் வைகுண்டத்திலிருந்து ஒலிப்பது போல இருந்தது எனக்கு.


oooooOooooo


நம் சிந்தனைக்கு சில விஷயங்களாக 
இதில் மேலும் பல கருத்துக்கள் 
என்னுடைய பழைய பதிவினில் கொடுத்துள்ளேன்.
விருப்பமுள்ளவர்கள் போய்ப் படித்துக்கொள்ள
இதோ இணைப்புகள்:









     

 நினைவூட்டுகிறோம் !

 

சிறுகதை விமர்சனப்போட்டியின்
நடுவர் யார் ?

VGK-31 To VGK-34 ஆகிய நான்கு கதைகளில்

ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் 

எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே 


இந்தப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.



போட்டியில் கலந்து கொள்ள மறவாதீர்கள்.

மேற்படி போட்டியின் இதர
நிபந்தனைகள் காண இதோ இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/06/blog-post.html



     


VGK-30 மடிசார் புடவை

சிறுகதை விமர்சனப்போட்டி முடிவுகள்


 

 

 

 

 

 


வழக்கம் போல் 

நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள் 
வெளியிடப்படும். 

அதையடுத்து 
VGK-01 to VGK-30
TOTAL LIST OF HAT-TRICK WINNERS
பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

அதையடுத்து அனைவரும் 
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் 
VGK-21 To VGK-30 
ஒட்டுமொத்த பரிசுத்தொகைகள்
பற்றிய அறிவிப்புகள்
வெளியிடப்படும். 

காணத்தவறாதீர்கள்.


ஒவ்வொருவாரப் போட்டிகளிலும்

கலந்துகொள்ள மறவாதீர்கள்.





என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்



25 கருத்துகள்:

  1. சகுனம் பார்க்கிறேன் என்று சொல்லி, எந்த விதத்திலும் பிறர் மனதை நோகடிக்காமல் இருப்போம். பிறர் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வோம்.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. மூட நம்பிக்கைகளை நீக்கும்
    முனைப்பில் அருமையான கருத்துடன்
    சிறுகதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மூடத் தனமான நம்பிக்கைகளை, சாடும் கருத்து கொண்ட கதை!

    அந்த இளைய மகனுக்கு, உறைக்கிறார்போல், சில பதிலடிகளை சிவராமன் கொடுத்திருக்க வேண்டும். கதாசிரியர் அதை எழுத தவறிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  4. சிவராமனுக்கு இப்படி ஒரு பேச்சு காதில் விழுந்திருக்க வேண்டாம். உண்மையாகவே அந்த மகனை விடபிரமாதமாகப் பாட்டியைக் கவனித்தவர். சகுனம் என்பதை சிவராமன் பார்க்காத போது, பாட்டியின் மகன் இவ்வாறு சொன்னது அதீத அநியாயம்.எத்தனை பேரின் மனதைக் கலங்கச் செய்யும் சகுனங்களை நம்புபவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பது அரிதேஎ. நல்லதொரு அருமையான கதைத் திரட்டுப் பாலைப் போலவே வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. Ellorukkum Eniya vaalththu.
    Vetha.Elangathilakam

    பதிலளிநீக்கு
  6. விதவைப்பாட்டி எதிரே வருவதை சிவராமன் துர்சகுனமாக எண்ணவில்லை! ஆனால் அப்பாட்டியின் மகனோ சிவராமன் எதிரே ஒற்றை பிராமணனாக வந்ததை துர்சகுனமாக நினைத்துள்ளார். மனித மனங்களில்தான் எத்தனை வேற்றுமை! மிக அருமையான கதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இப்போவும் இரண்டு முறை கொடுத்தேன். போனதானு தெரியலை. மூணாம் முறை

    வழக்கம் போல் காக்கா உஷ்ஷா? என்னோட கருத்துக்களை மட்டும் தூக்கிச் செல்லும் காக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    சகுனம் பார்க்கும் இரண்டாவது பிள்ளையின் எண்ணம் மோசமானது; கண்டிக்கத் தக்கது.

    முதல்லே எழுதினது இது இல்லை. சேமிக்கலை. :(

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வை.கோ

    சகுனம் சிறுகதைக்கு மூன்றாவது முறையாக மறுமொழி எழுதுகிறேன். சகுனம் பார்ப்பது தவறென வலியுறுத்த வேண்டிய தருணத்தில் - சகுனத்திற்கு எழுதிய மறுமொழிகள் காக்காய் தூக்கிக் கொண்டு போய் விட்டதாக வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை.

    என்ன செய்வது - அனைவருமே சகுனம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் - 80 வயதுப் பாட்டியின் மரணத்திற்கு எதிரே வந்த சிவராமன் தான் காரணம் எனச் சகுனம் பார்க்கும் பாட்டியின் பையன் திருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. சகுனம் பார்ப்பது என்ற மூடநம்பிக்கையை கைவிட வேண்டும்.
    பாட்டியின் ஆசி சிவராமனுக்கு என்றும் உண்டு.
    அருமையான கதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    கதையின் ஒவ்வொரு வரியும் நிஜத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை தந்தது. ஸ்ரீமதி பாட்டி இறந்த சமயம்... நடந்த நிகழ்வுகளை படிக்கும் போது, ஒரு தத்ரூபம்... ஒரு பேரமைதி, மனத்துள் ஒரு அதிர்வு கூடவே இருந்தது.

    நன்றி கெட்ட மனிதனின் வார்த்தைகள் சுட்டபோது இதயம் அடைந்த உணர்வு கூட தொற்றிக் கொண்டது.

    திரட்டுப் பாலின் ருசியும், சமையலின் ருசியும், அங்கங்கே மனத்தைப் பறிகொடுக்க வைத்தது. பசியையும் தூண்டியது. எழுத்தால் உணர்வுகளைத் தூண்டும் ரகசியம் கதை முழுக்க தெரிகிறது... இது கதையல்ல நிஜம்... என்று.!

    இது தான் உங்கள் வெற்றி. வாழ்க..!

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  11. எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் புரளும்.

    பதிலளிநீக்கு
  12. இதெல்லாமே ஒருமூட நம்பிக்கைதான் விட்டுடலாம்

    பதிலளிநீக்கு
  13. // எவ்வளவு வருஷங்கள் ஆனாலும், இந்தத் தடிப்பிரும்மச்சாரி போன்ற ஒரு சில, நன்றிகெட்ட அசட்டு மனிதர்களின் மூட நம்பிக்கையை, நாம் முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்று நினைத்துக்கொண்டேன்.//

    முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  14. இன்னாலாம் மூட நம்பிக்கைக இருக்குது. படிச்சவங்க படிக்காதவங்க அல்லாரும் எப்பூடிதா நம்புறாகளோ.

    பதிலளிநீக்கு
  15. ஏன்தான் இப்படி மூடநம்பிக்கைகளை நம்புறாங்களோ. பல்லி இடதுதோளில் விழுநதா சாவுன்னு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும். அது பல்லிக்கா நமக்கானு போட்டிருக்காது. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். மத்தவங்க நோகும்படி பேசுவது கூடாதுன்னு ஏன் யோசிக்கவே மாட்றாங்க.

    பதிலளிநீக்கு
  16. வாசிப்பு அனுபவம் விரும்பிவருபவர்க்கு இது ஒரு உன்னத அனுபவம். மெஸெஜும் எப்பவும்போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  17. மக்களிடையே மண்டிக்கிடக்கின்ற மூடநம்பிக்கைகளில் சகுனம் பார்ப்பதும் ஒன்று. இதனால் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான பாதிப்புகளை விளக்கி, இதுகுறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஒரு நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கையேற்படுத்தும் நல்லதொரு சகுனமாகவும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  18. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 38 + 35 = 73

    அதற்கான இணைப்புகள் (பகுதி-1 + பகுதி-2):

    http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_26.html

    http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_28.html

    பதிலளிநீக்கு
  19. Muthuswamy MN சகுனம் சூப்பர்

    - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980)

    Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

    பதிலளிநீக்கு
  20. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-32-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-32-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-32-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  21. சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் என்பது பற்றிய முழு விபரங்களும், ’நடுவர் யார் யூகியுங்கள் போட்டி’யில் வெற்றி கிட்டி பரிசுக்குத் தேர்வானவர்கள் யார்-யார் என்பது பற்றியும் அறிய இதோ இணைப்பு:

    https://gopu1949.blogspot.in/2014/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  22. சகுனம் பற்றிய உங்கள் கருத்து மிகவும் நன்று. அதை ஒட்டிய கருத்துக்களை மிகவும் ரசித்தேன்.

    நம்பிக்கை தவறல்ல. ஆனால் எதுவுமே யாரையும் காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது, அப்படித் தெரியும்படி நடந்துகொள்ளக்கூடாது.

    ஆங்காங்கே நகைச்சுவையையும் தூவியிருக்கிறீர்கள் (அப்படி வெளிப்படையாகத் தெரியாமலேயே). உதாரணம்,

    1. "புது டிகாக்‌ஷனில், ஃபிரிட்ஜ்ஜில் இருந்த பழையபாலை" (இது கதையை ஒட்டியதா அல்லது கதை எழுதும் அன்று உங்களுக்கு நடந்ததா? )

    2. “நீயா செய்தாய்? சூப்பரா இருக்கு!” என்று சும்மாவாவது கேட்டு வைத்தேன் - At least அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஊறு வராமல் கேட்டுவிட்டீர்கள்.

    3. "அப்படியே அதை முழுவதும் வழித்து முழுங்கி சுத்தமாக ஃபினிஷ்" - எப்படி நடக்குமோ அதைமாதிரியே விவரித்துள்ளீர்கள்.


    சாதாரண கதையாக இருந்தால்,
    "எங்கள் பில்டிங்கே அதிருவது போல ஒப்பாரிக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன" என்று தொடங்கி, கதை, அந்தப் பாட்டியின் இரண்டாவது மகன் இறப்பதுபோல் முடித்திருக்கலாம். ஆனாலும் சொல்லவந்தது, 'சகுனம்' பற்றிய மூட நம்பிக்கையும், அதை முழுவதுமாக ஒழிக்கமுடியாமையையும்.

    கதையை ரசித்தேன். முன்னமே வாசித்து பின்னூட்டம் எழுதிய நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் December 25, 2017 at 4:25 PM

      //சகுனம் பற்றிய உங்கள் கருத்து மிகவும் நன்று. அதை ஒட்டிய கருத்துக்களை மிகவும் ரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, ஸ்வாமீ. தாங்கள் இங்கு இன்று வந்துள்ளதே நல்லதொரு சகுனம்தான்.

      //நம்பிக்கை தவறல்ல. ஆனால் எதுவுமே யாரையும் காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது, அப்படித் தெரியும்படி நடந்துகொள்ளக்கூடாது.//

      ஆமாம். ஆமாம். அது மிக மிக முக்கியமாகும்.

      //ஆங்காங்கே நகைச்சுவையையும் தூவியிருக்கிறீர்கள் (அப்படி வெளிப்படையாகத் தெரியாமலேயே).//

      :))))))))))))))))))))) 

      உதாரணம்,

      //1. "புது டிகாக்‌ஷனில், ஃபிரிட்ஜ்ஜில் இருந்த பழையபாலை" (இது கதையை ஒட்டியதா அல்லது கதை எழுதும் அன்று உங்களுக்கு நடந்ததா? ) //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கலாம். இருக்கலாம். :)


      //2. “நீயா செய்தாய்? சூப்பரா இருக்கு!” என்று சும்மாவாவது கேட்டு வைத்தேன் - At least அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஊறு வராமல் கேட்டுவிட்டீர்கள்.//

      அதெல்லாம் கரெக்டாகக் (வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோலக்) கேட்டு விடுவேன்.

      //3. "அப்படியே அதை முழுவதும் வழித்து முழுங்கி சுத்தமாக ஃபினிஷ்" - எப்படி நடக்குமோ அதைமாதிரியே விவரித்துள்ளீர்கள்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! தங்களின் இந்த ரசனைக்கு மிக்க மகிழ்ச்சி. :)))))

      //சாதாரண கதையாக இருந்தால்,
      "எங்கள் பில்டிங்கே அதிருவது போல ஒப்பாரிக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன" என்று தொடங்கி, கதை, அந்தப் பாட்டியின் இரண்டாவது மகன் இறப்பதுபோல் முடித்திருக்கலாம். ஆனாலும் சொல்லவந்தது, 'சகுனம்' பற்றிய மூட நம்பிக்கையும், அதை முழுவதுமாக ஒழிக்கமுடியாமையையும். கதையை ரசித்தேன்.

      மிக்க மகிழ்ச்சி, ஸ்வாமீ. ..... அதே அதே ..... ! இந்தத்தலைப்பில் மேலும் மேலும் ட்விஸ்ட் கொடுக்கக் கூடாது.

      //முன்னமே வாசித்து பின்னூட்டம் எழுதிய நினைவு.//

      ஆம் .... ஏற்கனவே .... இதே கதைக்கு இதோ http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2_28.html இந்தப் பதிவினில் உங்கள் பின்னூட்டமும் என் பதிலும் உள்ளன.

      மிக்க நன்றி .... அன்புடன் கோபு

      珞

      நீக்கு
  23. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 26.06.2021

    சகுனம் என்ற மூடநம்பிக்கைகளை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கின்றோம் ,பெரியமனிதர்கள்(அறிவு முதிர்ச்சி,அனுபவ பாடம் பெற்றோர்) வாழ்த்து என்றும் நம்மை வாழவைக்கும் முதுகுக்கு பின் பேசும் வெட்டிப்பேச்சு வீணர்களை பொருட்ப்படுத்தவேண்டாம். துரை.மணிவண்ணன்.
    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. 
    - VGK 

    பதிலளிநீக்கு