என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 30 ஆகஸ்ட், 2014

VGK 31 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - முதிர்ந்த பார்வை

 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-31  


 ’ முதிர்ந்த பார்வை ‘  

இணைப்பு:




    


 


மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு, மிக அதிக எண்ணிக்கையில் பலரும், மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, வெகு அழகாக விமர்சனங்கள் எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மொத்தம்: ஐந்து


  






இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 




  


மற்றவர்களுக்கு: 







     





இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள 

விமர்சனம் - 1



இந்தக்காலத்தில் மகனும், மருமகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே பெரும்பாலும் நினைக்கிறார்கள்.  இப்போதைய சூழ்நிலை நிறைய மாறி இருப்பதால் பிள்ளையைப் பெற்றவர்கள் தங்கள் மகனின் சுக வாழ்க்கைக்குக் குறுக்கே முட்டுக்கட்டை போடுவதில்லை. நாற்பது வருடங்கள் முன்னர் வரை கூட மாமியாருக்கு மகன் மருமகளோடு தனித்திருப்பதைக் கண்டால் பொறாமை ஏற்பட்டு விடும்.  ஆனாலும் பேரன், பேத்தி என வந்துவிட்டால் மாறும் ஒரு சில மாமியார்களும் உண்டு.  

பெற்றோருக்கு எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் பிள்ளைகளின் சுக வாழ்வே குறிக்கோளாக இருக்கும்.  அவன் திருமணமாகிய பின்னர் தங்களை விட்டு விட்டு மனைவியுடன் தனியாக வசித்தாலும் பெற்றமனம் அவனைத் திட்டாது.  எங்கோ ஆயுசோடு கிடக்கட்டும் என்றே நினைக்கும். அதிலும் மகன் வயிற்றுப் பேரன்/பேத்தி என்றால் கேட்கவே வேண்டாம்.  தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள். மாறாகச் சிலர் பெண்ணின் குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு மகனின் குழந்தைகளைக் கிட்டே சேர்க்காமல் இருப்பதும் உண்டு. ஆனால் இந்தக் கதையிலோ அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பாசத்தைப் பிழிந்து தருபவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வந்து தங்க நினைத்து மகனிடம் சொல்லி முதியோர் இல்லம் வந்துவிடுகின்றனர். இதில் மகனுக்கு அதிர்ச்சி கலந்த வருத்தம்.  காரணம் என்னமோ நல்லது தான். ஆனாலும்  பெற்றோர் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் ஜாதகத்தைக் காரணம் காட்டுவது இந்தக் காலத்திலும் அதை நம்புபவர்கள் இருப்பதையும் காட்டுகிறது. 

ஜோசியர் கூட்டுக்குடும்பமாக இருக்கவேண்டாம், ஆபத்து வரும் எனச் சொல்லி இருக்கிறார் என்கின்றனர் பெற்றோர்.   ஆனால் உண்மையான காரணம் இது இல்லை என்பது நமக்கே புரிந்து விடுகிறது.   ஏனெனில் பெரும்பாலோர் கூட்டுக் குடும்பத்தையே ஆதரிப்பார்கள்.  உண்மையான ஜோசியர் இப்படிச் சொல்லி இருப்பாரா என்னும் சந்தேகம் நமக்குள் வருகிறது.  மகனுக்கோப் பெற்றவர்களைப் பிரிந்து இருக்க முடியவில்லை என்பது பெற்றோரிடம்  அவனுக்கு உள்ள அதீத பாசத்தைக் காட்டுகிறது. என்னதான் மணிகண்டன் மனைவியும் நல்லவளாகவே மாமனார் மாமியாரைத் தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாலும், எப்போ என்ன வம்பு கிடைக்கும் என்று அலைகிற மக்கள் இந்தச் சிறிய தாற்காலிகப் பிரிவைக் கூடப் பெரிதாக்கி வம்பு பேசுகின்றனர்.  அவ்வளவு ஏன் அவள் பெற்றோரே தங்கள் மகளைப் புரிந்து கொள்ளவில்லை என்பதும் கொஞ்சம் இடிக்கிறது.  ஆனால் மருமகளோ அதையும் தாங்கிக் கொள்கிறாள். 

ஒரு படுக்கை அறைகொண்ட சிறிய வீட்டில் கூட்டுக்குடும்பமாக அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் படித்ததுமே பெற்றோர் முதியோர் இல்லம் சென்ற காரணம் நமக்கும் புரிந்து விடுகிறது. தான் பெற்ற மகனாகவே இருந்தாலும் மனைவியோடு வெளியே செல்லும்போது முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும் அம்மாக்களே அதிகம்.  இந்த மாதிரியான உலகில் தன் பிள்ளை, மனைவியோடு சேர்ந்து சந்தோஷத்தை அனுபவித்துத் தங்கள் குலத்தை விருத்தி செய்வதற்காக ஒர் குழந்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக  ஒரு பெற்றோர் முதியோர் இல்லம் செல்வது வரவேற்கத் தக்க ஒன்றே. ஆனால் அதைப் பிள்ளையிடம் வெளிப்படையாகச் சொல்லி இருந்தால் முதியோர் இல்லத்துக்குச் செலவு செய்த காசில் கொஞ்சம் கூடப் போட்டு அப்படி, இப்படிக் கடன் வாங்கி இன்னொரு அறை கட்டி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.  ஏனெனில் கணவன், மனைவி வாழ்க்கை ஒரு குழந்தை பிறந்ததும் முடிந்துவிடுவதில்லை. குழந்தைகளோடு முடிவதில்லை கணவன், மனைவி இருவரின் பந்தமும், பாசமும்.  அதையும் தாண்டி இருக்கிறது.

அத்தகைய ஒரு நிலையை இந்தத் தம்பதிகளும் அனுபவிக்க வேண்டாமா?  ஆகையால் அவர்கள் தனியாகச் செல்வதற்கு பதிலாக மகனிடம் மெதுவாக எடுத்துச் சொல்லித் தங்கள் ஆசை நிறைவேற வேண்டுமானால் இன்னொரு அறை வேண்டும் எனக் கூறி இருக்கலாம்.  ஆனால் இம்மாதிரியான சங்கடமான சூழ்நிலை மும்பை, புனே போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் அனுபவரீதியாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள்.  அங்கே வீடு கிடைக்காத கஷ்டம்.  இங்கே வீடு சொந்த வீடாக இருந்தும் பொருளாதாரக் கஷ்டம். மகனுக்காக அவர்கள் செய்யும் தியாகம் இது என ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் நால்வருக்குள்ளாக வெளிப்படையாகப் பேசித் தீர்க்க வேண்டிய ஒன்றை ஊரறியச் செய்திருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது.  ஆனாலும் இதன் மூலம் நன்மையே விளைந்தாலும் அக்கம்பக்கம் பேச்சுக்களினாலும், பெற்றோரின் உதாசீனத்தாலும் அந்தப் பெண்ணின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும்!   

அவள் உடல்நலம் சீர்கெடுவது இதனாலோ என எண்ணினால் இல்லை.  அவள் முதல்முறையாகக் கருவுற்றிருக்கிறாள்.   அதுவும் இரட்டைக்குழந்தையாக இருக்கலாம் என இரட்டிப்பு சந்தோஷத்தையும் கொடுக்கிறாள்.  ஆனாலும் மணிகண்டனுக்கு இந்த நேரம் பார்த்துத் தன் பெற்றோர் அருகே இல்லையே எனத் தோன்றப் பெற்றோரிடம் சென்று சொல்லி ஆலோசனை கேட்கிறான்.  மணிகண்டனின் பெற்றோர் செய்த தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் நினைத்தது நிறைவேறிய திருப்தியில் இதைச் சொல்ல வந்த பிள்ளையிடமும், மருமகளிடமும் தாங்கள் திரும்ப வீட்டுக்கே வருவதாகச் சொல்லி விடுகின்றனர்.  ஆனால் கடைசி வரை தாங்கள் வெளியே வந்த காரணத்தைச் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். இனி எல்லாம் சுகமே!

விட்டுக் கொடுத்துப் போவதும், ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதும் தான் இல்வாழ்க்கையின் உண்மையான தாத்பரியம் என்பதை இந்த சின்னஞ்சிறு கதையின் மூலம் புரிய வைத்த ஆசிரியருக்குப் பாராட்டுகள்.  அதே சமயம் கூட்டுக் குடும்பங்களில் ஒவ்வொருவரும் வெளிப்படையாகத் தங்கள் குறைகளைப் பேசிப் புரியவைக்கவேண்டும் என்பதும் என் தனிப்பட்ட கருத்து.

 



இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர் : 
திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்


 வலைத்தளம்: எண்ணங்கள் sivamgss.blogspot.com






மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




     






இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள 

விமர்சனம் - 2



சாதாரண கருவை வைத்துச் சிறுகதை பின்னியிருக்கும் சாமர்த்தியத்துக்கு மறுபடியும் ஜே!


பிள்ளை மருமகளுடன் வாழும் பெற்றோர். 
மாமியார் மாமனாரை மதித்து நடத்தும் மருமகள். 
பெற்றோர்களைத் தாங்கோ தாங்கு என்று தாங்கும் பிள்ளை. 

திடீரென்று ஜோசியர் 'கூட்டுக் குடும்பத்தினால் ஆபத்து' என்று குறி சொன்ன சாக்கில் முதியோர் இல்லத்தில் வலியச் சேர்கிறார்கள் பெற்றோர்கள். பிள்ளை துடிக்கிறான். மருமகளுக்கு அவப்பெயர். வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில் இளம் தம்பதியினர் தனிமையில் இனிமை காண்கின்றனர். நாலு மாதங்களில் மருமகள் கர்ப்பம். ஜோசியர் பரிகாரம் சொன்னதாகச் சொல்லி பெற்றோர் மறுபடி பிள்ளை மருமகளுடன் சேர்கிறார்கள். 

சில கதைகள் பொழுதுபோக்குக்காக எழுதப்படுபவை. சில செய்தி சொல்வதற்காக எழுதப்படுபவை. 

இந்தக் கதை பொழுதுபோக்கா செய்தியா எதை வைத்து எழுதப்பட்டது என்றக் கேள்வி ஒருபுறம் இருக்க, இது போன்ற கதைகளில் இல்லாத செய்தியைக் கூட இருப்பதாக அறியும் அபாயம் இருக்கிறது என்பது ஒரு பெரிய நெருடல். 

முன் சொன்னது போல் எளிய கரு, கதை பின்ன ஒரு முரணும் சில கொக்கிகளும் தேவைப்பட்டதால் அதையும் சேர்த்துப் பின்னியிருக்கிறார் கதாசிரியர். அங்கே தான் கதை வழுக்கி விழுந்திருப்பதாக நினைக்கிறேன்.  

கதையில் வரும் பெற்றோர் கண்மூடித்தனமான ஒரு காரணத்தைச் சொல்லித் திடீரென முதியோர் இல்லத்தில் வற்புறுத்திச் சேர்ந்து விடுகின்றனர். கூட்டுக் குடும்பம் உடைகிறது. பிள்ளைக்கும் மருமகளுக்கும் வருத்தம். மருமகளின் பெற்றோர்களே அவளை அவதூறாகப் பேசுகிறார்கள். கடைசியில் அதே உருப்படாத காரணத்துக்கான பரிகாரத்தைச் சொல்லிப் பெற்றோர்கள் சேர்கிறார்கள். கூட்டுக் குடும்பம் பிழைக்கிறது.

சல்லடைக்கு எத்தனை ஓட்டை? இந்தக் கதைக்குள் அத்தனை ஓட்டை.

பெற்றோர்களின் செயலுக்கு என்ன உந்துதல்? எதற்காக அப்படித் துணிந்தார்கள்?  'இளம் தம்பதிகளின் நெருக்கத்துக்கு தாங்கள் தடையாக இருக்கிறோமோ' என்ற உள்ளுணர்வின் கேள்வி. புரிகிறது. நேர்மையான கேள்வியே. அதற்காக என்ன செய்யலாம்? என்னென்னவோ செய்யலாம். 

'ஒரு வருடம் கோவில்களுக்குச் சென்று வருகிறோம், துணையோடு பயணம் ஏற்பாடு செய்' என்றால் உடனே செய்திருப்பான் இந்த மகன். வரவுக்குள் செலவு செய்து தந்தையின் ஓய்வூதியத்தைச் சேமித்து வைப்பவனுக்கு, இவர்களுக்குப் பயணம் அமைத்துத் தரத் தெரியாதா? ஒன்றுமில்லாவிட்டால் கூட உதவாக்கரை சம்பந்திகள் - பெற்ற பெண்ணையே அவதூறு பேசும் இந்தப் பெற்றோர்கள் கேவலமானவர்கள் என்று தோன்றுகிறது (மெலோடிராமா என்றாலும் உதை உதை என்று உதைக்கிறது) - இரண்டு பெற்றோர்களையும் சேர்த்து சேத்ராடனம் அனுப்பியிருக்கலாம். 

அது முடியவில்லையா? பக்கத்து வீடாகப் பார்த்துக் கொள்ளும்படி பையனிடம் ஒரு தனிப் போர்ஷன் கட்டச் சொல்லியிருக்கலாம். பொய் சொல்லி வற்புறுத்தி முதியவர் இல்லம் போகிறவர்கள், இதைச் செய்ய பொய் சொல்ல வேண்டியதேயில்லை! போதாக்குறைக்கு செட்டாகச் செலவழிக்கும் மகன், தனி போர்ஷனை ஒரே மாதத்தில் கட்டிக் கொடுத்திருப்பான் என்று தோன்றுகிறது.

அது முடியவில்லையா? பிள்ளை மருமகளை மாதத்தில் நாலு நாள் தனியாக அனுபவித்து வர எங்காவது அனுப்பலாம். பொய் சொல்லி அவர்களை ஏமாற்ற வேண்டியதில்லை.

அதுவும் முடியவில்லையா? பிள்ளையிடம் உண்மையைச் சொல்லலாம். வயதான பிள்ளைக்கு விவஸ்தை கிடையாதா என்ன? பெற்ற பிள்ளைகளிடம் உண்மையைப் பேச முடியாத பெற்றோர்கள் இருந்தால் என்ன, போனால் என்ன? பிள்ளைகளிடம் கூட நேர்மையாக உண்மையாகப் பேசவில்லையென்றால் பெற்றோர் என்ற அந்தஸ்துக்கே அவமானமில்லையா? பிள்ளைகளிடம் நேர்மையாக நடக்கவில்லையென்றால் இவர்கள் யாரிடம் நேர்மையாக நடக்கப் போகிறார்கள்?

பொய் சொல்லத் துணிந்தார்கள். அதையாவது குட்டையைக் குழப்பாமல் செய்திருக்கலாம். 'கூட்டுக் குடும்பத்தினால் ஆபத்து'  என்று ஜோசியர் சொன்னதாகச் சொல்லும் பொழுதே பரிகாரம் பற்றியும் சொல்லியிருந்தால் ஓரளவுக்காவது கதைப் போக்கிலும் பெற்றோர்களின் செயலிலும் நாகரீகத்தின் சாயல் தெரிந்திருக்கும். 

சாத்திரம் சம்பிரதாயம் பார்க்கும் குடும்பத்தில் இப்படி ஒரு பொய் சொல்லி சுய நலத்துக்காகத் தனியே செல்லும் பெற்றோர்கள், தங்கள் செயலினால் ஒன்றுமறியாத மருமகளுக்கு அவதூறு வருவதை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? தங்கள் நலத்துக்காக, தங்கள் பிள்ளையின் சந்ததிக்காக, வீட்டுக்கு வந்த பெண்ணை இக்கட்டான நிலைக்கு உட்படுத்தும் இந்தப் பெற்றோர்களை எப்படி மதிப்பது?

எல்லாவற்றுக்கும் மேல் இங்கே இடிக்கிறது. முதல் குழந்தை பிறக்கும் சாத்தியம் தெளிவாகிவிட்டது. சாமர்த்தியமாகச் சாதனை புரிந்ததாக பெற்றோர்களுக்கு மெடல் கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். சரி, அடுத்தக் குழந்தைக்கு இந்தப் பெற்றோர் எத்தகைய பொய்யைச் சொல்வார்கள்?

இவர்களின் நடத்தையில் பெருமைப்பட எதுவும் இல்லை. அடுத்த முப்பது வருடங்களில் இவர்களது மகன் இப்படி நடக்காமல் நேர்மையுடன் நடப்பான் என்ற நம்பிக்கை இருந்தாலும், இலேசானக் கலக்கம்.

போலியாக ஒரு கிலியை உண்டாக்கி இருப்பவர்களையெல்லாம் தேவையில்லாமல் கலங்க வைத்து, கடைசியில் ஒன்றுமில்லை என்று கைவிரிக்கும் அசட்டுத்தனம். வயதானால் கிறுக்குத்தனம் அதிகமாகும் என்பதற்கு இந்தக் கதையின் பெற்றோர்கள் ஒரு உதாரணம்.  பெற்ற மகனிடம் பொய் சொல்ல இந்தப் பெற்றோர்களுக்கு எப்படி மனம் வந்தது? எந்த வகை நேர்மையைக் கடைபிடிக்கிறார்கள் இவர்கள்? இளம் தம்பதிகளின் நெருக்கம் ஒன்றும் புதிய விஷயமல்ல. இதே பெற்றோர்கள் ஒரு காலத்தில் இளம் தம்பதிகளின் நிலையில் இருந்தவர்கள் தான். அதிலிருந்தாவது அறிவு கிடைத்திருக்கக் கூடாதோ? கிடைக்கவில்லை. அவர்கள் நெருங்குவதற்காக இவர்கள் என்னவோ தியாகம் புரிவது போல் நடந்து கொள்வது அருவருப்பாகவும் பட்டது. 

பொழுதுபோக்காகப் படித்துவிட்டுப் போக முடியவில்லை. நல்ல வேளை, இது போன்ற பெற்றோர்கள் எனக்குக் கிடைக்கவில்லையே என்ற நிம்மதியே மேலோங்கியது. ஒரு வேளை அதைத்தான் கதாசிரியர் சொல்ல வந்தாரா? அதுதான் செய்தியா? நீண்ட நாட்கள் உறுத்திக் கொண்டிருக்கபோகும் கதை.


 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 
திரு. அப்பாதுரை அவர்கள்


 வலைத்தளம்: மூன்றாம் சுழி   http://moonramsuzhi.blogspot.com



  







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




     





பத்திரிகைகளில் கதை எழுதுபவர்களுக்குக் கிடைக்காத 'பாடங்கள்', வலைப்பதிவுகளில் எழுதுவோருக்குக் கிடைப்பது உண்டு.

தன் கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு எப்படியெல்லாம் தன் கதை அவர்களுக்கு அனுபவமாகிறது என்பதை அந்தக் கதையை எழுதிய கதாசிரியரும் தெரிந்து  கொள்கிற வாய்ப்பு இது.  எதையும் கதை பண்ணும் திறமைசாலிகள் இப்படியான வாசக அனுபவங்களையும்  கதை பண்ணும் சாமர்த்திய எழுத்தாளர்களாய் இருப்பதும் உண்டு.

கதாசிரியரைத் தாண்டி இந்த விமரிசனம் மகனைப் பெற்ற அப்பாவி பெற்றோர்களுக்கும் பாடம் சொல்கிறது. அன்பைப் பொழிவதாக நினைத்து அவர்கள் செயல்படுவது பார்ப்பவர்களால் எப்படிப்  புரிந்து கொள்ளப்படலாம் என்பதற்கான பாடமாகவும் தெரிகிறது.

அடுத்து  பெண்ணைப் பெற்றோருக்கும் பாடம்.  தன் மகள் அவளது கணவனின் பெற்றோர்களைத் தன்னைப் பெற்றவர்கள் போல நினைத்து ஊரார் மெச்ச அல்ல பொறாமைப்பட கூட்டுக் குடும்ப வாழ்க்கை நடத்தினால் மகளைப் பெற்ற பெற்றோர்கள் அடையும் நிம்மதி, நிம்மதியே அல்ல என்று இன்னொரு பாடம்!

இத்தனை பேருக்குப் பாடம் கற்பிப்பதான தோற்றம் கொள்வதினால் தான் இந்த விமரிசனத் தேர்வும்.

பார்வைகள் முதிர்வதும், முதிராததும் அவரவர் அனுபவப் பார்வைகளின் தன்மை வயப்பட்டதே என்பது மட்டும் யாராலும் மாற்றுச் சொல்ல முடியாத இன்னொரு பாடம். ஆக பெரும் அனுபவமே அத்தனைக்கும் ஆசான்.

-- நடுவர்  

    




மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து அளிக்கப்பட உள்ளது.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-33



’ எல்லோருக்கும் பெய்யும் மழை ’




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


04.09.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

45 கருத்துகள்:

  1. திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் பரிசு பெற்றதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  2. திரு. அப்பாதுரை அவர்களின் மாறுபட்ட சிந்தனைகளை விதைத்த விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..
    சுறு சுறு என்று பச்சை மிளகாயை நறுக் என கடித்த அதிர்ச்சியான முதிர்ச்சியான கருத்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி August 30, 2014 at 5:55 PM

      அன்புடையீர், வாங்கோ, வணக்கம்.

      //திரு. அப்பாதுரை அவர்களின் மாறுபட்ட சிந்தனைகளை விதைத்த விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..//

      திரு. அப்பாதுரை அவர்களின் விமர்சனத்தில் முதல் 14 பத்திகளை [First 14 Paragraphs only] மட்டுமே தாங்கள், நேற்று படித்துள்ளீர்கள்.

      ஆனாலும் அதில் மொத்தம் 19 Parahraphs உள்ளன. விடுபட்டுப்போன கடைசி 5 பத்திகள் மட்டும் இப்போது புதிதாக என்னால் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர கடமைப்பட்டுள்ளேன்.

      அவ்வாறு விடுபட்டுப்போன கடைசி 5 பத்திகளை வேறு ஒரு அரக்குக் கலரில் Highlight செய்து வெளியிட்டுள்ளேன்.
      இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      //சுறு சுறு என்று பச்சை மிளகாயை நறுக் என கடித்த அதிர்ச்சியான முதிர்ச்சியான கருத்துகள்..!//

      நேற்று, பச்சை மிளகாயின் காம்பினை என்னையறியாமல் நீக்கி வைத்திருந்துள்ளேன். இப்போது காம்புடன் சேர்ந்த முழுப்பச்சை மிளகாயைத் தங்களுக்கு மேலும் சுறு சுறு என்றும் நறுக்நறுக் என்றும் கடிக்கக் கொடுத்துள்ளேன்.

      மேலும் அதிர்ச்சியடையாமல், ஜில் வாட்டரை அருகே வைத்துக்கொண்டு, முழுப்பச்சை மிளகாயையும் காம்புடன் ருசித்து மகிழவும்.

      நீக்கு
  3. அன்பைப் பொழிவதாக நினைத்து அவர்கள் செயல்படுவது பார்ப்பவர்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படலாம் என்பதற்கான பாடமாகவும் தெரிகிறது.
    //

    நடுவரின் சீர்தூக்கி சிறப்பாக்கும் பார்க்கும் நடுநிலைப்பார்வை
    கருத்துகள் புதிய கோணத்தில் சிந்திக்க கற்றுத்தருகின்றன..

    பாசம் என்கிற போர்வையில் வாழ்க்கையில் வழுக்கி விழும் கணங்களை காட்சியாக்குவதாக அமைந்தது..!

    பதிலளிநீக்கு
  4. //சல்லடைக்கு எத்தனை ஓட்டை? இந்தக் கதைக்குள் அத்தனை ஓட்டை.//

    //இரண்டு பெற்றோர்களையும் சேர்த்து சேத்ராடனம் அனுப்பியிருக்கலாம். //

    விமர்சனம் எழுதியவரானால் இரண்டு பெற்றோர்களையும் ஒர்ரேஅடியாக அனுப்பியியிருப்பாரோ!

    பதிலளிநீக்கு
  5. என் விமரிசனத்தில் ஒரு பகுதியைக் காணோமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை August 31, 2014 at 2:30 AM

      Welcome to Mr. APPADURAI Sir.

      //என் விமரிசனத்தில் ஒரு பகுதியைக் காணோமே?//

      தங்களின் இந்த நினைவூட்டலுக்கு முதலில் என் நன்றிகள்.

      தாங்கள் 16.08.2014 அன்று ஓர் விமர்சனம் அனுப்பி அதன்பின் 18.08.2014 அன்று அதையே SLIGHT ஆகத் திருத்தி அனுப்பியிருந்தீர்கள். நினைவிருக்கலாம்.

      அவ்வாறு திருத்தப்பட்ட [Revised] விமர்சனம் மட்டுமே, அதுவும் முழுவதுமாக மட்டுமே, உயர்திரு நடுவர் அவர்களின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் என்னால் அனுப்பப்பட்டது என்பதை இங்கு முதலில் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்வாகியுள்ள அந்த விமர்சனத்தை நான் இங்கு வெளியிட COPY & PASTE செய்து கொண்டுவரும் போது, தங்களின் விமர்சனத்தில் கடைசி 5 பத்திகள் [Last 5 Paragraphs ] மட்டும் காட்சியளிக்காமல் கணினியில் சுருங்கி உள்ளுக்குள் மறைந்து இருந்து போனதால், நான் முழுமையாக அதை COPY & PASTE செய்து கொண்டு வராமல் இருந்துள்ளேன்.

      இப்போது தாங்கள் இதனை என் கவனத்திற்குக்கொண்டு வந்த பிறகே மீண்டும் அவ்வாறு HIDE ஆகி இருந்துள்ள பகுதியை தோண்டிக்கண்டுபிடித்து, இதில் சேர்த்துள்ளேன்.

      தங்களின் விமர்சனத்தில் உள்ள மொத்தம் 19 பத்திகளும் [All the 19 Parahraphs] இப்போது காட்சியளிக்கின்றன.

      ஏற்கனவே இந்தத்தங்களின் விமர்சனத்தை ஆர்வத்துடன் படித்து பின்னூட்டமிட்டுள்ள திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் போன்றவர்கள் மீண்டும் படிக்க செளகர்யமாக அந்த விட்டுப்போன [இப்போது புதிதாக நான் காட்சிப் படுத்தியுள்ள] கடைசி 5 பத்திகளை மட்டும் வேறு ஒரு கலரில் HIGHLIGHT செய்து காட்டியுள்ளேன்.

      எனினும் என் தவறுக்கு வருந்துகிறேன். அதைச் சுட்டிக் காட்டி என் கவனத்திற்குக்கொண்டு வந்துள்ள தங்களுக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. இதில் தவறு இல்லை ஐயா. விட்டுப் போயிருப்பதை நினைவு படுத்தினேன். சாதாரணமாக நிகழ்வது தான். முழுப் பச்சை மிளகாயை (?) வெளியிட்டதற்கு நன்றி .

      பரிசுக்கு பரிந்துரை செய்த நடுவருக்கும், கதை எழுதி இந்த வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி வை கோ சார்.

      நீக்கு
    3. ஆ.. இன்னொரு விஷயம்... நடுவர் யாரன்ற என் கணிப்பு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மூன்றினம் கொண்ட நாலெழுத்தாளர், சரியா?

      நீக்கு
    4. அப்பாதுரை August 31, 2014 at 8:56 AM

      //ஆ.. இன்னொரு விஷயம்... நடுவர் யாரன்ற என் கணிப்பு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//

      மிகவும் சந்தோஷம்.

      // மூன்றினம் கொண்ட நாலெழுத்தாளர், சரியா?//

      சரியா தவறா என்பது பற்றி 13.09.2014 சனிக்கிழமையன்று பகிரங்கமாக அறிவிக்கப்படும்.

      ’நடுவர் யார் யூகியுங்கள்’ போட்டி நிறைவடையும் நாளான 11.09.2014 வியாழன் இரவு 8 மணிக்கு மேல்
      நடுவர் பற்றிய பல சுவையான தகவல்கள், இடைக்கால பட்ஜெட் அறிக்கைபோல வெளியிடப்பட உள்ளன.

      நீக்கு
  6. கதாசிரியருக்கு நடுவரின் வக்காலத்து அவசியமா?
    நடுவர் யாருக்குச் செய்தி சொல்கிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அப்பாதுரை August 31, 2014 at 2:32 AM

      //கதாசிரியருக்கு நடுவரின் வக்காலத்து அவசியமா?
      நடுவர் யாருக்குச் செய்தி சொல்கிறார்? //

      ஏதோ தேர்வுக்கான விடைக் காகிதங்களைத் திருத்துகிற மாதிரி இவர் இவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்று எனக்கு அறிவிப்பதோடு நடுவர் வேலை முடிந்து விட்டதாக இந்தப் போட்டியின் நடுவர் நினைக்க வில்லை.

      அது தான் இந்த விமரிசனப் போட்டிக்காக அமைந்த நடுவரின் செயல்பாட்டு விசேஷமாக ஆகி, கதாசிரியர், விமர்சகர், நடுவர் என்று எல்லோருக்கும் ஒரு சுதந்திரத் தன்மையை அளித்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

      'நடுவர் ஒருவர் மட்டுமே என்று அமைவதால், விமரிசனத் தேர்வும், உங்கள் கதைகளைப் பற்றிய நடுவரின் பார்வையாக அமைந்து விடுகிற ஆபத்தும் இருந்துவிட வாய்ப்புண்டே, சார்' என்று ஆரம்பத்திலேயே சொன்னவர் தான் இந்த நடுவர்.

      ஆனால் விமரிசனங்களைத் தேர்ந்தெடுப்பதில் தன் சொந்த கருத்தை ஒதுக்கி தூர வைத்து விட்டு, வந்த விமரிசனங்களில் சிறப்பாக தனக்குத் தெரிபவைகளைத் தேர்ந்தெடுத்து நடுநிலையாக செயல்படுகிறார்.

      உங்கள் விமரிசனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே அவர் உங்கள் விமரிசனத்தைப் பாராட்டியும் அதே நேரத்தில் அதற்கு தன் கருத்தை நடுவர் ஸ்தானத்தில் சொல்லியிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?..

      பாராட்ட வேண்டிய விமரிசனங்களைப் பாராட்டியும், தன் கருத்தை பதிக்க வேண்டிய இடங்களில் பதித்தும் புதுமையான ஒரு நடுவராக இவர் இருப்பது, வழக்கமாக இப்படியான போட்டிகள் எப்படி அமையுமோ அப்படி அமைந்து விடாமல் இந்தப் போட்டித் தேர்வின் வெற்றிக்கு சிறப்புக் கூட்டி இருப்பதை நீங்களே உணரலாம்.

      இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்து பார்த்தீர்களென்றால், பல இடங்களில் நடுவர் தன் தனிப்பட்ட கருத்துக்களை 'நடுவரின் கருத்து' என்று பதிந்திருப்பதைப் பார்க்கலாம்.

      குறிப்பாக அவற்றின் பெரும்பாலான செய்திகள் இதோ இந்தப்பதிவினில் ஒட்டு மொத்தமாக என்னால் தொகுத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

      http://gopu1949.blogspot.in/2014/07/tips-suggestions-for-winning.html

      உயர்திரு நடுவர் அவர்கள் தன் ‘மனம் திறந்து ......’ பேசியுள்ளது இதோ இந்த இணைப்பில் உள்ளது:

      http://gopu1949.blogspot.in/2014/07/blog-post_29.html

      நடுவரின் இந்த செயல்பாடு இந்த விமரிசனப்போட்டியில் கலந்து கொண்ட பல விமர்சகர்களுக்கு உற்சாகமூட்டியிருப்பதை விமர்சகர்களும் தங்கள் கருத்தாக பகிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

      நடுவர் யார் என்று கண்டுபிடிக்கும் போட்டியின் முடிவு அறிவிக்கப்போகும் 13.09.2014 வரை தான், நடுவரின் இந்த 'நடுவர் கருத்து' என்று வெளிப்படும் எண்ணப் பகிர்வுகளும்.

      அதற்குப் பின் நடுவர் தன் கருத்தை பின்னூட்டங்களாக விமரிசகர்களோடு கலந்து உரையாடும் விதத்தில் தன் பெயரில் வெளிப்படுத்தவிருக்கிறார்.

      நடுவரின் அந்த செயல்பாடு, 'உங்களை விட்டுத் தனியாக நான் ஒருவன் அல்லன்; உங்களில் நானும் ஒருவன்' என்று நேரடியாக அவர் கலந்து கொள்ளும் வாய்ப்பாக அமையப் போகிறது.

      அப்படி அமையும் பொழுது உங்கள் கேள்விகளுக்கு அவரே நேரடியாக பொறுப்புடன் பதில் சொல்லும் வாய்ப்பும்
      கிடைக்கப் போகிறது

      'வெற்று பாராட்டாக கதாசிரியரை பாராட்டுகிற மாதிரி விமரிசனங்களை அமைக்க வேண்டாம். குட்ட வேண்டிய இடங்களில் தாராளமாகக் குட்டி சுதந்திரமாக இந்தக் கதைகளைப் படித்த உங்கள் அனுபவத்தை விமரிசனமாக
      எழுதுங்கள்' என்று பகிரங்கமாக அறிவித்தவரும் இந்த நடுவர் தான். அப்படியே மாறுபட்ட பார்வைகளோடு அமைந்த விமரிசனங்களும் தேர்வாகியிருக்கின்றன,

      அதற்காக நான் முகம் சுளித்ததில்லை' என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்

      'விமர்சகர்கள், கதாசிரியர், நடுவர் என்று எல்லோருக்கும் அவரவர் கருத்துக்களைச் சொல்ல வெளிப்படையாக
      வாய்ப்பு கிடைத்திருக்கும் இந்த மாதிரி ஒரு போட்டியை உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்த்ததுண்டா'..என்று உங்கள் அனுபவத்தைச் சொல்ல கேட்டுக் கொள்கிறேன்.

      நடுவரின் இந்தக் கருத்து கதாசிரியருக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல; அது நடுவரின் கருத்து என்றே கருத வேண்டுகிறேன்.

      இது பற்றி உங்கள் கருத்தையும் ஒரு வரியாக இல்லாமல் விரிவாக பதிய வேண்டுகிறேன்.

      அப்படிப் பதிந்தால் இந்த விமரிசனப் போட்டியின் தகுதிச் சிறப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எல்லோருக்கும் புரியும்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. //கதாசிரியருக்கு நடுவரின் வக்காலத்து அவசியமா?
      நடுவர் யாருக்குச் செய்தி சொல்கிறார்? //

      நீங்கள் கேட்ட மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விட்டதாக நான் எடுத்துக் கொள்ளலாமா, அப்பாதுரை சார்?

      நீக்கு
    3. பொதுவில் வைத்த கேள்வியாயினும் பதில் சொன்னமைக்கு நன்றி.

      நீக்கு
  7. //விட்டுக் கொடுத்துப் போவதும், ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவதும் தான் இல்வாழ்க்கையின் உண்மையான தாத்பரியம் என்பதை இந்த சின்னஞ்சிறு கதையின் மூலம் புரிய வைத்த ஆசிரியருக்குப் பாராட்டுகள். அதே சமயம் கூட்டுக் குடும்பங்களில் ஒவ்வொருவரும் வெளிப்படையாகத் தங்கள் குறைகளைப் பேசிப் புரியவைக்கவேண்டும் என்பதும் என் தனிப்பட்ட கருத்து.
    // அருமையான விமர்சனம்! பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம்அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. சகோதரி கீதா சாம்பசிவம் மற்றும் ஐயா அப்பாதுரை இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. வித்யாசமான கோணத்தில் விமர்சனம் எழுதி பரிசு பெற்றுள்ள திரு. அப்பாதுரை அவர்களுக்கு என் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  10. என்னோட கருத்தை மட்டும் தூக்கிச் செல்லும் காக்கையை மீண்டும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இம்முறை வடை எனக்குக் கிடைத்ததால் தூக்கிச் சென்றதைப் புரிந்து கொள்ள முடிகிறது. :)))

    பதிலளிநீக்கு
  11. நான் நேற்று என்ன எழுதினேன் என்பது முழுதும் நினைவில்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கருத்து நினைவில் உள்ளது. அதில்:

    அப்பாதுரையோடு சேர்ந்து பரிசைப் பகிர்வதில் சந்தோஷம் அடைகிறேன். கிட்டத்தட்ட என்னோட கருத்துக்கே அப்பாதுரையும் ஒத்துப் போவது க்ரேட் பீபிள் திங்க் அலைக் என்பதை நினைவூட்டுகிறது. :)))) மற்றபடி அப்பாதுரையின் எழுத்துத் திறமை இல்லாட்டியும் என்னோட கருத்துகளுக்காகத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும் வாய்ப்பளித்த வைகோவுக்கும் நன்றி.

    அப்பாதுரை சொல்ல நினைத்த சில கருத்துகளை நானும் சொல்ல நினைத்து ரொம்பக் கடுமையாக இருக்கும்னு நினைச்சு விட்டுட்டேன். உண்மையில் அந்த மருமகளின் பெற்றோரிடமும் எனக்கு அதிகக் கோபம் தான் வந்தது. தான் பெற்ற மகளின் மனதைப் புரிந்து கொள்ளாத பெற்றோரும், நேரிடையாகப் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயத்தை நாடகமாடி அதைப் பெரிய தியாகம் எனக் காட்டிக் கொண்ட மாமியார் மாமனாரும் கண்டிக்கத்தக்கவர்களே! அந்தப் பெண்ணின் மனப் புண் ஆறாதது. இத்தனை வருடங்கள் மாமியார், மாமனார் மேல் அவள் வைத்திருந்த மரியாதைக்கும் சிறிதாவது பங்கம் வந்திருக்கும். :(

    பதிலளிநீக்கு
  12. http://sivamgss.blogspot.in/2014/08/blog-post_31.html
    திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  13. நடுவர் அவர்கள் யார் என்பது எனக்கு நன்றாகவே புரிந்து விட்டதால் அவருடைய இந்த அணுகுமுறை புதிதாகத் தெரியவில்லை. யாராக இருந்தாலும் அப்பாதுரை நினைப்பவர் இல்லை. :)))) இதிலே அப்பாதுரையா, நானா யார் ஜெயிக்கப் போறோம்னு பார்க்க ஆவலோடு காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  14. நானும் விமரிசனத்துக்கான பல கதைகளிலும் தவறுகள் இருந்தால் தயங்காமல் சுட்டிக் காட்டியே வந்திருக்கேன். :))))))

    பதிலளிநீக்கு
  15. கதை எழுதிய விதத்தை மட்டும் விமர்சிக்கவேண்டும் .. அந்த கதாபாத்திரங்கள் எப்படி செயல்படவேண்டும் என்று புத்திமதி எல்லாம் சொல்லக்கூடாது என்றெல்லாம் நடுவர் குறிப்பிட்டிருந்ததால் க்ஷேத்திராடனம் போல பல சிந்தனைகளை குறிப்பிடவில்லை ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி August 31, 2014 at 9:54 AM

      //கதை எழுதிய விதத்தை மட்டும் விமர்சிக்கவேண்டும் .. அந்த கதாபாத்திரங்கள் எப்படி செயல்படவேண்டும் என்று புத்திமதி எல்லாம் சொல்லக்கூடாது என்றெல்லாம் நடுவர் குறிப்பிட்டிருந்ததால் க்ஷேத்திராடனம் போல பல சிந்தனைகளை குறிப்பிடவில்லை ..!//

      கதையின் கருத்தை எடுத்து அலசோ அலசுன்னு அலசக் கூடாது. நாலு வரி கதையை நாலு பக்கத்திற்கு எப்படி எழுதியிருக்கிறார் என்று அவர் கதையை எழுதிய முறையை விரிவாகச் சொல்வது தான் விமரிசனம் என்றும் நம் நடுவர் அவர்கள் சொல்லியிருப்பதும் என் கவனத்திற்கு வருகிறது.

      இதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார் என்று விளக்க வேண்டி நடுவரிடம் கேட்டிருக்கிறேன்.. அவர் அதற்கு பதிலளிக்கும் பட்சத்தில் இந்தக் கதையின் முதல் பரிசு விமர்சனங்களை வெளியிடும் போது நடுவரின் பதிலையும் நடுவர் கருத்தாக வெளியிடுகிறேன்.

      - VGK

      நீக்கு
    2. இராஜராஜேஸ்வரி August 31, 2014 at 9:54 AM

      கதை எழுதிய விதத்தை மட்டும் விமர்சிக்கவேண்டும் .. அந்த கதாபாத்திரங்கள் எப்படி செயல்படவேண்டும் என்று புத்திமதி எல்லாம் சொல்லக்கூடாது என்றெல்லாம் நடுவர் குறிப்பிட்டிருந்ததால் க்ஷேத்திராடனம் போல பல சிந்தனைகளை குறிப்பிடவில்லை ..!

      -=-=-=-

      கதையின் கருத்தை எடுத்து அலசோ அலசுன்னு அலசக் கூடாது. நாலு வரி கதையை நாலு பக்கத்திற்கு எப்படி எழுதியிருக்கிறார் என்று அவர் கதையை எழுதிய முறையை விரிவாகச் சொல்வது தான் விமரிசனம் என்றும் நம் நடுவர் அவர்கள் சொல்லியிருப்பதும் என் கவனத்திற்கு வருகிறது.

      இதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார் என்று விளக்க வேண்டி நடுவரிடம் கேட்டிருக்கிறேன்.. அவர் அதற்கு பதிலளிக்கும் பட்சத்தில் இந்தக் கதையின் முதல் பரிசு விமர்சனங்களை வெளியிடும் போது நடுவரின் பதிலையும் நடுவர் கருத்தாக வெளியிடுகிறேன்.

      - VGK 31/08/2014

      -=-=-=-

      ’முதிர்ந்த பார்வை’யுடன் நடுவர் பேசியுள்ளார்கள்.
      அது இன்று வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2014/09/blog-post.html

      இது தங்களின் Special தகவலுக்காக.

      VGK 01/09/2014

      நீக்கு
  16. பச்சை மிளகாயை அப்படியே கடித்தாலும், சரி, காம்புடன் கடித்தாலும் சரி சுள்ளென்று உறைக்கும் என்பதால் நான் உப்பு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் பொடி தடவி ஊற வைத்து பஜ்ஜியாகவே சாப்பிட்டுடறேன். ஆகவே எனக்கெல்லாம் உறைக்காது. :))))

    பதிலளிநீக்கு
  17. கதையை விமரிசிக்கலாமே தவிர கதாசிரியரை விமரிசிப்பதை தவிர்க்க வேண்டும். இது என் கொள்கை.

    பதிலளிநீக்கு
  18. அன்புடையீர்,

    இங்கு அன்புடன் வருகை தந்து, தங்களின் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    ’முதிர்ந்த பார்வை’யுடன் நடுவர் பேசுகிறார்

    என்ற தலைப்பில் இன்று தனிப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2014/09/blog-post.html

    இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  19. திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
  20. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

    அன்புடையீர்,

    வணக்கம்.

    31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 ஆகஸ்டு வரையிலான 44 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

    என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  21. திருமதி கீதாசாம்பசிவம் மேடம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஆகஸ்டு வரை முதல் 44 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  22. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு அப்பாதுரை அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஆகஸ்டு மாதம் வரை முதல் 44 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  24. பரிசு வென்ற திருமதி கீதாசாம்பசிவமவங்களுக்கு வாழ்த்துகள். பச்ச மொளவாவ அப்படியே கடிச்சாகாட்டியும் காம்போட கடிச்சா காட்டியும் ஒரைககும் ஸோ பஜ்ஜியா போட்டுப்பிடுவாங்களாம. நானு வரலாமா பஜ்ஜி திங்க.

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஆகஸ்டு மாதம் வரை, முதல் 44 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் அல்லது சில பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    பதிலளிநீக்கு
  26. திருமதி கீதாசாம்பசிவம் மேடம் வாழ்த்துகள். விமரிசனம் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  27. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    614 out of 750 (81.86%) within
    20 Days from 15th Nov. 2015 ! :)
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


    அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஆகஸ்டு மாதம் முடிய, என்னால் முதல் 44 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  28. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  29. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    614 out of 750 (81.86%) that too within
    15 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஆகஸ்டு மாதம் வரை, என்னால் முதல் 44 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு