என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

VGK 30 / 02 / 03 SECOND PRIZE WINNERS - மடிசார் புடவை

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : VGK-30  


 ’ மடிசார் புடவை ‘  


இணைப்பு:மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  ஐந்து
  
இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள்.   


மற்றவர்களுக்கு:     


இனிப்பான இரண்டாம் பரிசினை 


 வென்றுள்ளவர்கள் இருவர் 


அதில் ஒருவர்


காரஞ்சன் (சேஷ்)
essseshadri.blogspot.com


திரு. E S சேஷாத்ரி அவர்கள்


 இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திரு. E S சேஷாத்ரி 


அவர்களின் விமர்சனம் இதோ:
“மடிசார் புடவை” எனும் தலைப்பும், மாமி வேடத்தில் கமலஹாசனின் படமும் இது ஒரு பிராமணக் குடும்பம் சார்ந்த கதை என்பதை உணர்த்திவிடுகிறது. மடிசார் புடவை உடுத்திக்கொள்ளும் பழக்கமுடைய, இப்படி என்றால் அப்படி என்றும், அப்படி என்றால் இப்படி என்றும் கூறும் சுபாவமுடைய அத்தை கம் வருங்கால மாமியாரை, எப்படிக் கவர்ந்தார் அவரின் வருங்கால மருமகள் என்பதை மருமகளே எடுத்துரைப்பதாக எழுதப்பட்ட அற்புதமான கதை.

கதாபாத்திரங்கள் யாருக்குமே பெயர் வைக்காமல், அத்தனை பாத்திரங்களையும் நமக்கு மாமியாரின் மனதினைக் கவர்ந்து வெற்றி கண்ட மருமகள் வாயிலாகவே அறிமுகம் செய்யும் ஆசிரியரின் யுக்தி பாராட்டுக்குரியது. தொய்வில்லாமல் கதையைத் தொடர்ந்து படிக்க வைத்துவிடுகிறார் கதாசிரியர்.

மாமியார், மாமனார், மற்றும் ஆயிரம் பிறை கண்டாரோ இல்லையோ ஆயிரம் குறை கண்டவர் எனச் சொல்லும் அளவிற்கு, எளிதில் திருப்தி அடையாத, எதிலும் குறை காணும் இயல்புடைய, ஒன்பது பேருக்குச் சமமான ஒரே ஒரு நாத்தனார் என வாழ்க்கைப்பட்ட இடத்தில் அவர்களிடம் பயந்து நடுங்கிப் பழகிவிட்ட அம்மா, அக்காவிற்கும் மனைவிக்கும் இடையில் சட்டசபை சபாநாயகர் போல் திகழும் அப்பா, சர்வாதிகாரியாய்த் திகழும் அத்தை கம் வருங்கால மாமியார், இவர்கள் அத்தனை பேரையும் நமக்கு அறிமுகம் செய்யும் மகள். இவர்களே கதாபாத்திரங்கள்.

இந்தக் கதையைப் படித்தவுடன் என் மனதில் ஏற்பட்ட எண்ணம் என்னவென்றால் மாமியாரைக் கவர்வது எப்படி? எனத் திருமணம் ஆகப்போகும் மற்றும் திருமணமான பெண்களுக்கென நம் கதாசிரியர் ஒரு புத்தகம் எழுதினால் மிகவும் பரபரப்பாக விற்பனையாகும் எனத் தோன்றுகிறது. தலைமுறைக்கேற்ப, மாறிவரும் பெண்களின் எண்ண ஓட்டங்களைத் தன் கதை வாயிலாக மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.


“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்பார்கள். அவ்வாறான குடும்பம் அமைய குடும்ப உறவுகள் வலுவாக, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டும், விட்டுக்கொடுத்து அனுசரணையாக இருந்தும், ஒவ்வொருவருடைய நிறை, குறைகளை அறிந்து, குறைகளைப் பெரிதுபடுத்தாமல், நிறைகளைப் பாராட்டும் மனப்பக்குவத்துடன் அனைவரும் நடந்துகொண்டால் அந்தக் குடும்பம் ஆனந்தம் விளையாடும் வீடாய்த்திகழும் என்பதில் ஐயமில்லை.

கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த சூழலில், மாமியார்-மருமகள், நாத்தானர்-மருமகள் உறவுகள் சற்று சிக்கலான நிகழ்வுகள்தான். பொதுவாக, மாமியார்களுக்கு மருமகளைக் கண்டால் பிடிக்காததன் காரணம், எங்கே மருமகள் தன்னிடமிருந்து தன் மகனைப் பிரித்துக் கொண்டுசென்று விடுவாளோ? என்ற அச்சமும், தன்னை அவள் முதுமைக்காலத்தில் பராமரிக்காமல் விட்டுவிட்டால், தன் நிலை என்ன? என்ற பாதுகாப்பில்லாத உணர்வும் தான்.

அதற்கு மாறாக மருமகள் தன் செயல்களால், பரிவால், விட்டுக் கொடுக்கும் தன்மையால் ஒரு நம்பிக்கையையும் தெளிவையும் ஏற்படுத்த முயற்சித்தால். மருமகள் மாமியாருக்குத் தன் உள்ளம் கவர்ந்த உத்தமியாக, இன்னொரு மகள் போலத் தெரிவாள்.

இந்தக் கருத்துகளைத் தெளிவுபடுத்தும் விதத்தில், கதாசிரியர் இக்கதையினைப் படைத்துள்ளார்.

“அமுக்கக்கள்ளி” எனும் வார்த்தைக்கு அர்த்தம் தேட முற்பட்டால் கூகிள் தேடுபொறி கூட நம் கதாசிரியரின் இந்தக் கதைவரிகளை மட்டுமே விடையாகக் காண்பிக்கிறது.

உவமைகளைக் கையாள்வதில் கதாசிரியர் ஒரு கவிஞராகிவிடுகிறார்.

1.    அக்காவிற்கும் மனைவிக்கும் இடையில் “சட்டசபை சபாநாயகர் போலஇருக்கும் அப்பா.
2.    சர்வாதிகார நாத்தனாரே சம்பந்தியாகப் போவதை எண்ணுகையில் அம்மாவிற்கு அடிவயிற்றில் புளியைக் கரைப்பது போலஇருத்தல்.
3.    நாத்தனார், அந்தப் பட்டுப்புடவை விஷயமாக என்ன அபிப்ராயம் சொல்லுவார்களோ, எனத் தவித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் நெஞ்சு, மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல, என்னமாய்த் துடித்துக் கொண்டிருக்கும் என எண்ணுவதாகக் காண்பித்தது.

மேற்குறிப்பிட்ட உதாரணங்கள் இதை நன்கு வெளிப்படுத்திவிடுகின்றன.

எத்தனைதான் அசெளகர்யங்கள் இருந்தாலும், பட்டுப்புடவை உடுத்திக் கொள்வதை விட்டுப் பிரிய மனமில்லை பெண்களுக்கு. பட்டுப் புடவைகளின் ரகங்கள், வண்ணங்கள், அதற்குப் பொருத்தமான பார்டர் என அனைத்தையும் ஆசிரியர் எப்படி இவ்வளவு துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார்?. பட்டுப்புடவை அதிகம் வாங்க நேர்ந்த பாக்கியசாலியோ? என எண்ண வேண்டியுள்ளது.

பலவிதமாக யோசித்து, ஒருவழியாகத் தன் நாத்தனாருக்கென நல்லதொரு புடவையை வாங்கிக் கொண்டு, அதற்கேற்ற ரவிக்கைத்துணி வாங்க அப்பாவும் அம்மாவும் சென்றுவிட, அங்கே வேறுபக்கத்தில் நின்றிருந்த தன் அத்தை வயதையொத்த சில மாமிகள் வேறு ஒரு புடவை ரகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்து அங்கே சென்று அவர்கள் பேசுவதைக் கேட்க நேர்ந்த மகளுக்கு அதுவே ஒரு பெரிய திருப்பத்தை அளித்துவிடுகிறது.
  
இதனால்தான் வள்ளுவர் “கேட்டலே நன்று” என உரைத்தாரோ? தன் அத்தையின் வயதை ஒத்த ஒருமாமி “சில்க் காட்டன்” புடவையை விரும்புவதும், அதில் எந்த வண்ணத்தைத் தெரிவு செய்வது எனக் குழம்பி நிற்கையில், அவர் உடல் நிறத்திற்கேற்ப வண்ணத்தைத் தெரிவு செய்வதில் உதவி அவரின் மனம் கவர்ந்த மங்கையாகி “நீ ... ராஜாத்தி போல எப்போவும் நன்னா இருப்பேடி ... என் கண்ணே” என ஆசீர்வாதம் பெறுவதாக அமைத்து அவர் மாமியாரின் மனதைக் கவரப்போகிறார் என்பதைக் குறிப்பாக உணர்த்திவிடுகிறார் ஆசிரியர்.

“ஜில்” என்ற வார்த்தை மிகவும் பிடித்த விஷயமோ கதாசிரியருக்கு!

1.   தன் வருங்காலக் கணவன் அழைப்பது போன்றே ‘ராஜாத்தி’  என ஒரு மாமி தன்னை அழைத்ததும் மகளின் உள்ளத்தில்ஜில்” என ஒரு பரவச உணர்வு ஏற்படுவதும்,

2.   புடவை வாங்கி முடித்ததும் அப்பா, அம்மாவுடன் “ஜில்” என ஐஸ்கிரீம் சாப்பிட விழைவதும்

3.   நாத்தனார் முன் எப்போதும் கீழே உட்கார்ந்து பழகிய அம்மாஜில்லுனு தரையிலே உட்காரத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு என உரைப்பதும்

4.   புடவை தனக்குப் பிடித்திருப்பதாகவும், அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அத்தை கூறியதும் எல்லோருக்கும் ஜில் வாட்டர் எடுத்துக்கொண்டு வருவதாக சிம்பாலிக் ஷாட் அமைத்த இடத்திலும்

நமக்குள்ளும் ஒரு ஜில் எனற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் ஆசிரியர்.

தரையில் அமரும் வழக்கமுள்ள அம்மாவைக் காண்பிக்க ஆசிரியர் உபயோகப்படுத்தியுள்ள கருப்பு வெள்ளைப் படம், ஆயிரம் உணர்வுகளை வெளிப்படுத்தி பெயரறியா அந்தப் பாத்திரத்திற்கு வலுசேர்த்துச் செல்கிறது.

காட்சி அமைப்புகளில் கதாசிரியர் ஒரு கைதேர்ந்த இயக்குநராகவும் காட்சியளிக்கிறார். உள்ளம் குளிர்ந்த நாத்தனார், தயாரித்த இனிப்பும், பஜ்ஜியும், காபியும் படங்களாகி நமக்குள்ளும் பசியைத் தூண்டிவிடுகிறது.

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பன் எனக் கூறுவார்கள். இந்தப் பெண்ணோ அம்மாவுக்குப் பாடம் சொல்லித்தரும் பேபியாகச் சித்தரிக்கப் பட்டுள்ளார்.

தன் அத்தையின் வயதையொத்த மாமியின் ரசனையை அறிந்து, நல்ல வண்ணத்தில் ஒரு சில்க் காட்டன் புடவையைத் தன் வருங்கால மாமியாருக்கு வாங்கியதோடு மட்டுமல்லாமல், அதைத் தெரியாத மாதிரி அம்மாவை “இது ஏதுடி இன்னொரு புடவை?” என நடிக்கச் சொல்லுமிடத்திலும், “இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என அத்தையிடம் பாராட்டைப் பெற்றவுடன், இது உங்களுக்குப் பிடிக்கும் என்றுதான் நான் வாங்கிவந்தேன் எனக் கூறியதோடு நின்றுவிடாமல், அம்மா வாங்கி வந்த புடவையுடன் தான் வாங்கியதையும் எடுத்துக்கொள்ளுமாறு கூறுவதும் அருமை.

தன் வருங்காலக் கணவன் வாங்கிய பட்டுப் புடவை, அத்தையிடம் இல்லாத கலராக தன் அம்மா வாங்கி வந்துள்ள  பட்டுப் புடவை, தான் வாங்கிவந்துள்ள சில்க் காட்டன் புடவை என ஓவ்வொன்றையும் அணிந்து கொள்ள வேண்டிய தருணங்களைப் பட்டியலிட்டு. சம்மதிக்கச் செய்து வெற்றிகண்டு, விழுந்து நமஸ்கரித்து வருங்கால மாமியாரைத் தன் வசமாக்கிய மருமகள் “பெண்ணிற்குப் பெண்ணே எதிரி” என்றகருத்தை  உடைத்துக் காட்டி,மாமியார் மெச்சவாழ்ந்து காட்டிய மருமகளாவாள்  என்பதில் ஐயமில்லை.

அதோடு மட்டுமா? அவளுடைய ஆளுக்கும் ப்ளாஸ்க்கில் சூடாகக் காபி போட்டு வைத்துவிட்டு அவருக்குள்ளும் ஒரு “ஜில்” உணர்வையல்லவா ஏற்படுத்த முனைகிறாள். சட்டசபை சபாநாயகர் ரோல் தன் கணவருக்கு இல்லாமல் செய்துவிடுவாள் என்பதிலும் ஐயமில்லை. முயன்றால் முடியாததுண்டோ? முயற்சி திருவினையாக்கும்!.

மாமியாரின் மனம் கவர்ந்த மருமகள் பாத்திரத்தைப் படைத்த கதாசிரியர் அனைத்து மகளிராலும் போற்றப்படுவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்.

       

 


இனிப்பான இரண்டாம் பரிசுடன்

தான் பெற்றுவரும் தொடர் வெற்றியை 

ஆறாம் சுற்றிலும் தக்க வைத்துக்கொண்டு

ஹாட்-ட்ரிக் பரிசின் உச்சத்தை எட்டியுள்ள


திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கு

நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

 

   
 
    இனிப்பான இரண்டாம் பரிசினை 


 வென்றுள்ள மற்றொருவர்திருநிறைச்செல்வன்


 J. அரவிந்த் குமார்    


அவர்கள்.


வலைத்தள முகவரி 


இனிப்பான இரண்டாம் 

பரிசினையும் வென்று 


முதன்முதலாக 


ஹாட்-ட்ரிக் அடித்துள்ள 


திருநிறைச்செல்வன்


 J. அரவிந்த் குமார்    


அவர்களின் விமர்சனம் இதோ

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து 
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

சளைக்காமல்  பிரபலகடைகளில் புடவைகளை ரகம் ரகமாக எடுத்துப்போட்டு திணறச்செய்து புடவை எடுக்காமல் வெளியேற முடியாத மனநிலைக்கு வாடிக்கையாளர்களை கொண்டு செல்லும்  தொழில்ரகசியம் போல,   நுணுக்கமான பொருத்தமாக தேர்ந்தெடுத்த வண்ண வண்ண படங்கள் வானவில்லையும் , சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகளையும், தோகை விரித்தாடும் அழகு மயில்களையும் தோற்கச்செய்யும் வகையில் எழில் கொஞ்சி, நம் வாசிப்பனுபவத்தை மிளிரச்செய்வதில் ஆசிரியரின் திறமை ஜொலிக்கிறது..

-- காதல் வங்கியாக, மடிசார்புடவை கதையாக கனிந்திருக்கிறது..

ஒவ்வொரு பொம்மனாட்டிகளையும் கவனித்து  வசனங்களைப் பின்னுவதால் மிகுந்த சுவாரஸ்யமாக  ஆரவரமாக, அற்புதமாக கதைத்தேர் நகர்கிறது..!

மண்டைக்குடைச்சல்களுடன் ஜவுளிக்கடைக்கு அவர்கள் செல்ல புடவைகளின் வண்ணங்கள், விலைகள், கலர் காம்பினேசன், டிசைன், பளபளப்பு, வித்தியாசமான தலைப்புகள், புடவையின் பார்டர்கள், எல்லாம் கண்முன் காண்பது போன்ற தோற்றத்தில் கதையில் லயிக்கவைக்கிறார் கதை ஆசிரியர்..

பட்டுபுடவைக்கு சவால்விடும் தோற்றத்தில், கனம் சற்றே குறைந்து, வசீகரிக்கும் புடவைகள்.. மாட்சிங் பிளவுஸ் ரன்னிங் ஆக அதுவே புதிய பொலிவைத்தருவதாக, முந்திப்பக்கம் இல்லாமல் உள்பக்கம் இருப்பதால் தேகவாகுக்கேற்ப உபயோகப்படுத்தும் சிறப்பும் சேர்த்து ஜொலிக்கும் சில்க்காட்டன் புடவைகள் ஆராய்ச்சி வியக்கவைக்கிறது..

வாங்கும் புடவையை ட்யூப்லைட் வெளிச்சத்தில் பார்த்து திருப்திப்படாமல், வெளியில் வெயில் வெளிச்சத்திலும் பார்த்து தேர்ந்தெடுப்பது நல்ல அனுபவம்..

நல்லவேளை ஒரிஜினல் பட்டா என்று அறிய ஒரு இழையை தண்ணீர் தொட்டு இழுத்து அறுத்துப்பார்த்தல், ஜரிகையின் ஒரு இழையை  உருவி தீப்பெட்டி நெருப்பில் காட்டி பொசுக்கிச்சோதித்தல், தண்ணீரில்  புடவையின் ஒரு முனையை நனைத்து சாயம் கெட்டியா என ஆராய்தலெல்லாம் செய்யாமல் விட்டார்களே..! 

ஆயிரம் ஆயிரமாக பொங்கல் வைத்து விலைகொடுத்து வாங்கும் பட்டுப்புடவைகளின் அசௌகர்யங்களைப் பற்றி பட்டுப்பட்டென்று புட்டுவைக்கும் தன் அத்தை வயதுப்பெண்களின் பேச்சுகளை வைத்து, அந்த வயதுப்பெண்களின் மனோ நிலையை ஆசைகளை கண்கூடாகவும் தெரிந்துகொள்கிறாள்..!

கதை ஆசிரியரும் மனித மனங்களை இனிய சொற்களாலும், கனிந்த அணுகுமுறையாலும் கதையாக்கி மனம் கவருகிறார்..

தானாக கனிவதை தடிகொண்டு அடித்தால் கனியுமா என்ன?

எல்லாவற்றிற்கும் ஒரு டெக்னிக் உண்டு..
தேங்காய் உடைப்பதற்குக்கூட. சரியான நரம்பைத்தேர்ந்தெடுத்து விரலால் சுண்டியே சரிபாதியாக  உடைக்க முடியும். அல்லாமல் கன்னாபின்னா என்று தட்டுத் தட்டு என்று பலமுறை தட்டி ஒழுங்கில்லாமல் சிதறவிடுவதைப் போல் காலம் நேரமில்லாமல் கண்டபடி பேசி உறவை உடைத்துக்கொண்டு காலம் காலமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்பவர்களும் உண்டு.. !

பாய் கொண்டு வந்தவன் வெளியிலே காத்திருக்க வாய் கொண்டுவந்தவள் நடுவீட்டில் உபசாரம் ஏற்பதுதானே உலக வழக்கு.

திறக்காத மப்பூட்டுகளையும் இன்சொல் திறக்கிறதே,,!.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல இன்சொல்லும் குறிப்புணர்ந்து தந்த புடவையுமே ஆயுதமோ.. !

பிறந்த வீட்டின் பெருமையும் புகுந்த வீட்டின் பெருமையையும் ஒருங்கே கட்டிக்காக்கிறாள்..

ரிப்பேரான பொருட்களை மெக்கானிக் வந்து ஒரு தட்டில் சரி செய்து விடுகிறார்..எங்கே தட்டுவது என்ற அனுபவ அறிவுதான் அவரது தொழிலின் வெற்றி..மற்றவர்கள் எத்தனை தட்டினாலும் கொட்டினாலும் சரியாகாமல் மேலும் மேலும் சிக்கல்கள்தான் உண்டாகின்றன..

அரிதாக பூக்கிற பூக்களுக்குதானே மதிப்பு அதிகம்..!

ஆரம்பத்திலிருந்த மன மேக மூட்டங்கள் பகலவனைக்கண்ட பனிபோல் மறைந்து போகின்றன..

குயிலும் குரலும் மயிலும் அழகும் போல..... சூழ்நிலையை அழகாய் எடுத்துரைக்கும் ஒரு கேரக்டராய் கூடு விட்டு கூடு மாறும் ஜாலம் ...... கதை முழுவதும் சொக்குப்பொடித்தூவலாய் வசீகரிக்கிறது..!

தன் அம்மாவின் நாத்தனாரே [தன் சொந்த அத்தையே] மாமியாராவது தொடரும் துன்பம் போல. .!

கையில் வசமாய் உருட்டுக் கட்டை வைத்திருக்கிறேன்..  ..அந்த அத்தையை மட்டும் அடையாளம் காட்டுங்கள் போதும்என்று படிப்பவர்களும் வீறு கொண்டு எழச்செய்யும் வகையில் அத்தையை படைத்திருப்பது பாத்திரப் படைப்பிற்குக் கிடைத்த வெற்றி..!.

சரளமான, மெல்லிய நகைச்சுவையுடன் கதை போகிறது.. ஒவ்வொரு வார்த்தையிலும் ஆசிரியர் கடந்த அனுபவங்கள் பிரதிபலிக்கின்றன

உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனுசரித்து வாழ பழகி கொண்டால் எல்லாம் இன்ப மயமே...;)

புரிந்து கொள்ளுதல்கள் உறவுகளை வலுவாக்கும் உரம் என்று அனுபவ கருத்துக்கள் ஆங்காங்கே அழகாய் தெளிக்கப்பட்டிருக்கிறன, 

கதைக்கும் மேலே சில விசயங்களை அழுந்தச் சொல்கிறது..!

பெற்ற தாயின் மனமும் நோகாமல், வரப் போகும் மாமியாரையும் சும்மா ஐஸ் வைக்காமல் உண்மையாகவே மனதுக்குப் பிடித்து அன்புடன் புவை எடுத்து குளிர்விக்கும் இந்த மாதிரி பெண்கள் மருமகளாகக் கிடைக்க கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்..

Family management கற்றுக்கொடுக்கும் கதை..!
குடும்ப உறவுகளை சரிவர பேணாமல் கஷ்டத்தையே விலைக்கு வாங்குகிறார்களே அவர்களுக்கு இந்தக்கதையே பாடம் ..!

அவரவர்களுக்கு ஏற்ற ஐஸ் ஆகப்பார்த்து வைத்தால் தானே  காரியம் கச்சிதமாக முடிகிறது!  உளவியலை அழகாக புரிந்துவைத்திருப்பது மட்டுமல்லாமல் அதைக் கதையில் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது கதாசிரியரின் தனிச் சிறப்பு.

உறவுகளை அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் அரவணைத்துச் செல்லும்போது அங்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான நிறைவும் இனிமையும் தனி தான்! என்று உணர வைத்து விடும் அகிய கதை..!

சிறிய புள்ளி தான், ஆனால் அதை வைத்து அழகான கோலம் போட்டு நவரசங்களையும் வர்ணங்களாகத்தீட்டி கவருகிறது..

உறவுகள் விட்டுக்கொடுக்கும் நேரத்திலும், தட்டிக்கொடுக்கும் நேரத்திலும் பலம் பெறுகின்றன என்ற ஆசிரியரின்  அனுபவத்தை பிடிவாதம் கொண்ட மாமியாரை தட்டிக் கொடுக்கும் மருமகள் மூலம் சொல்லி வழிகாட்டியிருக்கிறார் ஆசிரியர்..!

பிறந்த வீட்டுப் பெருமையும் பேணி, புகப் போகும் வீட்டிலும் சந்தோஷத்தைக் கொண்டு வந்த பெண்ணரசியை ராஜாத்தி என் கண்ணு என்று புடவைக்கடையில் மாமியோடு, வருங்கால மாமியாரோடு, பெற்ற தாயாரோடு, வாசகர்களும் தானே திருஷ்டி கழிக்கிறார்கள்..

அந்த அளவுக்கு கதையில் கரைந்து போகுமாறு சஸ்பென்ஸ் திரில்லர்களுக்கே உரித்தான பரபரப்பை ஒரு குடும்ப கதையில் கொண்டுவருவதென்றால் அதுதான் கதை ஆசிரியரின் தனித்திறமை..!

’ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கற, பாடிக்கறக்கிற மாட்டை  பாடிக்கற’    என்கிற வித்தை புரிந்தவள் திருப்தியுறச்செய்கிறாள்.. ! 

கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவுமே..!

கடந்து போன தலைமுறைகளின் வாழ்க்கைமுறை எத்தனை விதமாய்க் கோர்க்கப்பட்டிருக்கின்றன என வியக்கிறோம் ..!

சந்தோஷமாக முடிந்ததில் மிக்க சந்தோஷம்.. சூழலை மிகச் சரியாக கண்முன் கொண்டுவந்து நிறுத்திய நல்ல துவக்கம் .. படிப்பவர்களும் எடுத்த புடவை மற்றும் டிசைன் பிடிக்காமல் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாதே என்கிற பயம் வந்து தவிக்கவும் வைக்கிறார்..!

பாம்பென்று தாண்டவும் முடியாத பழுதென்று மிதிக்கவும் முடியாத குணம் கொண்ட அத்தையையும் தன் நற்பண்புகளாலும், சமயோசித அன்பினாலும் தன் போக்கில் வளைத்துவிடுகிறாளே..!

காதலொருவனைக்கைப்பிடித்து அவன் காரியங்கள் யாவினும் கைகொடுக்கும் முன்னோட்டமாக, சூடான காபி காதலுடன் சிறிய பிளாஸ்க்கில் நிறையும் போது - மாமியார் மனதோடு, பெற்றோர் மனதோடு படிப்பவர்கள் மனதும் நிறையும் சூட்சுமம் கதாசிரியரின் தனித்திறமை..!

கதை சொல்லும் போக்கிலேயே வாழ்வியல் அணுகுமுறையை தேனாகத் தித்திக்கத் தித்திக்க புகட்டுகிறார் கதை ஆசிரியர்..

சின்னச்சின்ன நகாசு வேலைகலையும்  நறுவிசாக நுணுக்கமாக காட்சிப்படுத்தி ஒன்றவைக்கிறார் கதை ஆசிரியர். 

தரையில் விழுந்த அணில்குஞ்சின் படபடப்புடன் தன் நாத்தனார் காலடியில் அமர்ந்த அம்மாவின் படபடப்பை மனநிறைவாக மாற்றி ..பரவாயில்லை இந்தப்பெண் இந்த வீட்டில் பிழைத்துக்கொள்வாள் என்கிற சர்பிகேட்டும் பெற்றுத்தருகிறது..

பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த நிறைவாக இருக்கும் போது ஜில் என்று ஐஸ்கிரீம் சுவைக்கும் ம்னநிலைக்கு தாயுடன் நம்மையும் அழைத்துச்செல்கிறாள்..

சின்னக் கதையை சாங்கோபாங்கமாக ஆதியோடந்தமாக விவரித்து ஐஸ்கிரீம் சாப்பிடும் வரை நகர்த்தி, கதைத்தேரை அலங்காரமான ஜோடனைகளுடன் கருத்தைக்கவர்ந்து, பிரம்மாண்டமாய் வண்ணமயமாய் ஜொலிக்கிறது.

திருமண வீட்டின் நிகழ்ச்சிகளையும் உறவிலேயே வாழ்க்கைப் படப்போகும் பெண்ணின் எண்ண ஓட்டங்களையும் அழகாகக் கோர்த்துச் சொல்லி, ஒத்தை நாத்தனார்… ஒன்பது நாத்தனாருக்கு ஈடு…., எது வாங்கினாலும் குறை சொல்வது…, புடவைக் கடையில் புடவை வாங்கும் பாங்கு என கதையின் முதற்பாதியில் உருவாக்கிய படபடப்பான எதிர்பார்ப்புக்களை எல்லாம் கதையின் பிற்பாதியில் நெய், ஏலம், முந்திரி திராட்சை நிரம்பிய இனிப்புடன், அருமையான பஜ்ஜி கெட்டிச்சட்னியுடன் , சூடான நுரைததும்பும் காப்பியும், அருந்தி மனநிறைவுடன் அத்தையின் திருப்தியும் கலந்து சூழ்நிலையை சொர்க்கமாக்குகின்றன..!

மடிசார் புடவை என்னும் தலைப்பிலான கதையை எழுதிய கதை ஆசிரியர் தன் ஆழமான மன உணர்வுகளோடு தொடர்பு கொண்டு, தான் ரசித்தவற்றை வசீகர மொழியாக்கி, லயித்த விஷயங்களை மென்மையாகவும் மேன்மையாகவும் நளினமாகவும் வாசிப்பவர் மனதில் நங்கூரமிடுவது போல கதையாக்கி இருக்கும் பாங்கு பாராட்டப்படுகிறது.. 

சமுத்திரம் பெரிதா ? தேன் துளி பெரிதா ?
தேன் தான், அது  இந்தக் கதை தான்..!
நிலைக்க போவதும், வருந்தி உழைப்பதும்,
வயசை தொலைத்ததும், கலக்க போவதும் யாரு ? -கதை ஆசிரியர் தான்..!

வழிகளில் நூறு தடை இருந்தால் தான் வாழ்க்கை ருசியாகும் 
மேடுகள் கடக்கும் நதியினில் தானே மின்சாரம் உண்டாகும்..!

மிகுதியான் மிக்கவை செய்யினும், அவர்களை தம் தகுதியால்  வென்று  இருக்கிறாள் புத்திசாலிப்பெண்..!

இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளைஅழகாகப் பிரகாசிக்கும்!.
நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.

ஆசையோ பிறரது பொருளை கவர்ந்திழுக்கிறது .. அத்தை போல 
அன்போ தனது பொருளை பகிர்ந்தளிக்கிறது .. மருமாள் போல..

வாழ்வு என்ற பொருள் சுவையானது அன்பு  என்ற உப்பாலே
மனம் என்ற பொருள் இனிப்பாவது அன்பு என்ற சர்க்கரையாலே..

விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்று உணர்த்தும் சாமர்த்தியசாலிப்பெண்.. இப்படி ஒரு கெட்டிக்காரி தனக்கு மருமகளாக வேண்டும் என்று யார்தான் விரும்பமாட்டார்கள்.!

கதை ஆசிரியர் எந்தப்பாத்திரத்திற்கும் பெயரே குறிப்பிடாமல் கதாநாயகியின் பார்வையில் காட்சியாக்குகிறார்..!

அன்பும் அறிவும் திறக்காத பல இதயங்களை திறக்கும்.!

ஆசிரியரின் எழுத்தில் ஒரு குறும்படமாய் மனதில் விரிகிறது - சிறுகதையின் உள்ளீடான மனிதநேயமும், பாஸிட்டிவ் அப்ரோச்சும் சேர்ந்து  நுட்பமான உணர்வுபூர்வமான கதைகளில் ஒரு மனநிறைவும், கூடவே லேசாய் மனதில் கனமும் ஏற்படுவதும், சிந்தனைகள் கிளறப்படுவதும் நிச்சயம் நடக்கக் கூடிய விஷயங்கள்.!

தேடித் தொட்டவனுக்குத்தான் தேன் கூட இனிக்கும்!

நற் பண்புகளோடு கூடிய இனிய பேச்சு நட்பெனும் உறவைத் தானே தரும் ... இதுவும் ஓர் உளவியல் மற்றும் சமூகவியல் தத்துவம். நேர்மறைக் கோட்பாடு. அதாவது பிறரிடம் பயன் தருகின்ற, நற் பண்போடு கூடிய இனிய வார்த்தைகளைப் பேசுவதினால், அது அவருக்கு புதிய உறவை உண்டாக்கி அல்லது இருக்கின்ற உறவைப் பலப்படுத்தவும், மேலும் நன்மைகளையே தரும்

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, 
பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

 
Thank You very much
My Dear Arvind Kumar
vgk


     

 

 


இனிப்பான இரண்டாம் பரிசுடன்

முதன் முறையாக

ஹாட்-ட்ரிக் அடித்துள்ள


திருநிறைச்செல்வன்


 J. அரவிந்த் குமார்    


அவர்களுக்கு

VGK-28 To VGK-30


  நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
 
    


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்

சரி சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.

காணத்தவறாதீர்கள் !

அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு: VGK-32   ’ச கு ன ம்’  


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


28.08.2014
இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

16 கருத்துகள்:

 1. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
  திரு. E S சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. இனிப்பான இரண்டாம் பரிசுடன்
  முதன் முறையாக ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
  திருநிறைச்செல்வன் J. அரவிந்த் குமார் அவர்களுக்கு
  மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
 3. வழிகளில் நூறு தடை இருந்தால் தான் வாழ்க்கை ருசியாகும்
  மேடுகள் கடக்கும் நதியினில் தானே மின்சாரம் உண்டாகும்..!

  Family management கற்றுக்கொடுக்கும் கதை..!
  குடும்ப உறவுகளை சரிவர பேணாமல் கஷ்டத்தையே விலைக்கு வாங்குகிறார்களே அவர்களுக்கு இந்தக்கதையே பாடம் ..!//அருமை!
  முதன் முறையாக ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
  திருநிறைச்செல்வன் J. அரவிந்த் குமார் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 4. என்னுடைய விமர்சன்ம் தெரிவானதில் மகிழ்ச்சி! வாய்ப்பளித்த திரு வைகோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி! வாழ்த்தும் நல்லிதயங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 5. சேஷாத்ரி மற்றும் அரவிந்த் குமார் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வை.கோ - முதல் பரிசு பெற்ற லஷ்மி கங்காதர் - கீதா மதிவண்ணன் - மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற காரஞ்சன் ( சேஷ் ) மற்றும் அரவிந்த் குமார் ஆகிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 7. இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு. சேஷாத்திரி அவர்களுக்கும், திரு அரவ்ந்த்குமார் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 8. இரண்டாம் பரிசு பெற்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும், திரு அர்விந்த் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  மடிசார் புடவை....:

  உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 'அவள்' எழுதிய சிறுகதை.. அதுதான் புடவைக் கடைக்குள்ளே அலசி, ஆராய்ந்து, அடடா......எத்தனை சூட்சுமம்...! கதை பிரமாதம்..

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 10. இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.சேஷாத்திரி அவர்களுக்கும், திரு அரவிந்த்குமார் அவர்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. பரிசு வென்ற திரு சேஷாத்ரி திரு அரவிந்தகுமாருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. இரண்டாம் பரிசினை வென்ற திரு.சேஷாத்திரி அவர்களுக்கும், திரு அரவிந்த்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. பரிசு வென்ற திரு சேஷாத்திரி திரு அரவிந்த குமாரவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. திருசேஷாத்ரி திரு அரவிந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. பரிசுக்கும் ஹாட்ரிக் வெற்றிகளுக்கும் இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு