என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 24 நவம்பர், 2011

கொஞ்சநாள் பொறு தலைவா....! ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா!!



கொஞ்சநாள் பொறு தலைவா ......!
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா !!

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-






அந்த பரபரப்பான பஜாரில் 15 நிமிடங்களாக டிராபிக் ஜாம். வாகனங்கள் ஏதும் நகர்வதாகவே தெரியவில்லை. கார் ஓட்டி வந்த நந்தினிக்கு கடுப்பாக வந்தது.

கைக்குழந்தையுடன் கடைவீதிக்கு ஏதோ பொருட்கள் வாங்க வந்த மல்லிகா போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டதால் ரோட்டை கிராஸ் செய்துவிடலாம் என்று போகும்போது, தன் அக்கா நந்தினியைக் காரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் “அக்கா, எப்படியிருக்கீங்க, பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?” என்று ஆசையுடன், பேச வந்தும், நந்தினி கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு, “உனக்கு என்ன வேண்டும், லிஃப்ட் வேண்டுமானால் ஏறிக்கொள், என்னை அக்கா என்றெல்லாம் அழைக்காதே” என்கிறாள்.

மல்லிகா தன் கண்களில் வந்த நீரைத் துடைத்துக் கொள்கிறாள். தன் வீடு மிக அருகிலேயே இருந்தும், லிஃப்ட் எதுவும் கேட்டு தான் அவளை நெருங்கவில்லை என்றாலும், நந்தினியுடன் மனம் விட்டுப்பேச ஒரு வாய்ப்பாகக்கருதி, அந்தக் காருக்குள் ஏறி தன் அக்காவின் இருக்கை அருகிலேயே அமர்ந்து கொள்கிறாள்.  


இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தாங்கள் மிகவும் பாசமாக, பிரியமாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறாள். 

தான் உயிருக்குயிராய் காதலித்த ஆனந்த்துக்கே தன்னை பதிவுத்திருமணம் செய்து வைத்தவளும் இதே தன் அக்கா நந்தினி தான் என்பதையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறாள்.  


தாயில்லாமல் வளர்ந்த தங்களை பாசத்துடன் பார்த்துப் பார்த்து வளர்த்த தன் தந்தை சம்மதிக்காதபோதும், தனக்காக அவரிடம் பரிந்து பேசி, வாதாடியும் எந்தப் பயனுமில்லாததால் , உடனடியாகப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, தனக்கும் ஆனந்துக்கும் ஐடியா கொடுத்தவளும் இதே நந்தினி அக்கா தான். 


அதுமட்டுமல்லாமல் தானே பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து எங்கள் பதிவுத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போட்டுச் சென்றவளும் இதே அக்கா நந்தினி தான். 


ஆனால் 2 வயது சிறியவளான தான், அவசரப்பட்டு காதல் வசப்பட்டு, ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், அக்கா நந்தினிக்கு இன்னும் சரியான வரன் அமையவில்லை.  


அவள் கோபத்திற்கான காரணம் அதுவல்ல என்பது மல்லிகாவுக்கும் தெரியும்.  ஒரே ஆதரவாக இருந்து வந்த தங்கள் அப்பாவின் திடீர் மரணத்திற்கு காரணம் தன்னுடைய கலப்புத் திருமணமே என்பதை மட்டும், அக்கா நந்தினியால் தாங்க முடியாமல் உள்ளது என்பதும் மல்லிகாவுக்கும் தெரியும்.   

மல்லிகாவிடமிருந்து குழந்தை நந்தினியிடம் தாவி ஸ்டியரிங்கை பிடித்து விஷமம் செய்ய ஆரம்பித்தது.  முதன்முதலாக அந்தக் குழந்தையைப் பார்த்ததும், அதன் முகத்தில் தன் அப்பாவின் சாயல் அப்படியே இருப்பதைப் பார்த்த நந்தினி மிகவும் ஆச்சர்யப்பட்டாள்.

”உன் பெயர் என்னடா”  என்று அவன் கன்னத்தை லேசாக கிள்ளியபடி கேட்கலானாள்.

“ரா மா னு ஜ ம்” என்றது தன் மழலை மொழியில்.  

தன் அப்பாவின் பெயரையும் அந்தக்குழந்தை வாயால் கேட்டதும், குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டாள் நந்தினி.

போக்குவரத்து சரியாகி வண்டிகள் நகரத் தொடங்கின.  நந்தினி மல்லிகாவை எங்கே கொண்டுபோய் விடவேண்டும் என்பது போல பார்க்கலானாள்.  


நேரே போய் முதல் லெஃப்ட் திரும்பச்சொன்னாள். கார் திரும்பியதும் வலதுபுறம் உள்ள மிகப்பெரிய பச்சைக் கட்டடம் என்றாள்.

கார் நிறுத்தப்பட்டது. நந்தினியை உள்ளே வரச்சொல்லி மல்லிகா கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். குழந்தையும் நந்தினியை கட்டிப் பிடித்துக்கொண்டு காரைவிட்டுக் கீழே இறங்க மறுத்தது. பிறகு நந்தினியே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மல்லிகா வீட்டின் உள்ளே நுழைந்தாள்.   

மல்லிகாவின் கணவரும், அவருடைய சகோதரரும் நந்தினியை வரவேற்று உபசரித்தனர்.  அங்கிருந்த செல்வச் செழிப்பான சூழ்நிலையும், மனதிற்கு இதமான மனிதாபிமானமிக்க வரவேற்பும், நந்தினியை மனம் மகிழச்செய்தன.  


பூஜை அறையில் தன் அப்பா ராமானுஜம் அவர்களின் மிகப்பெரிய படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது கண்டு மகிழவே செய்தாள். குழந்தையை படத்தருகே கொண்டு சென்றாள் நந்தினி. “உம்மாச்சித் தாத்தா” என்றது அந்தக் குழந்தை.

தன் அக்காவுக்கு ஆசை ஆசையாக டிபன் செய்து கொண்டு சூடாகப் பரிமாற வந்தாள், மல்லிகா.

மல்லிகாவின் கணவன் ஆனந்த் நந்தினியை மிகவும் ஸ்பெஷலாக விழுந்து விழுந்து கவனித்து உபசரித்தார். 

தன் தம்பிக்கும் நந்தினிக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை, மெதுவாக சமயம் பார்த்து நந்தினியிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி, தன் ஆவலைத் தெரிவித்து , அவள் விருப்பத்திற்காகவும், சம்மதத்திற்காகவும் தாங்கள் எல்லோருமே காத்திருப்பதாகக் கூறினார், ஆனந்த்.

தெருவில் நின்று கொண்டிருந்த தன் தங்கை மல்லிகாவை, தான் வேறு யாரோ போல “லிஃப்ட் வேண்டுமானால் காரில் ஏறிக்கொள், என்னை அக்கா என்று அழைக்க வேண்டாம்” என்று சொன்னதை நினைத்து வருந்தினாள் நந்தினி.  


தனது வாழ்க்கை என்ற நீண்ட பயணத்திற்கே லிஃப்ட் தரத் தயாராக இருக்கும் அந்த அன்பு உள்ளங்களிடம், பிரியாவிடை பெற்று புறப்படலானாள், நந்தினி.   


தன் தந்தை உருவில் பிறந்துள்ள தன் தங்கை பிள்ளை ராமானுஜத்திற்கு டாட்டா சொல்லி புறப்பட்டாள். அந்தக் குழந்தையை விட்டுப்பிரிய மட்டும் அவள் மனம் மிகவும் சங்கடப்பட்டது. 


தனக்குத் திருமணம் ஆகி இந்த வீட்டுக்கே வந்துவிட்டால், தினமும் அவனைக்கொஞ்சி மகிழலாம் என்று அவள் மனம் சொல்லாமல் சொல்லி மகிழ்வித்ததை,  அவள் முகத்தில் பிரதிபலித்த சந்தோஷம் காட்டிக் கொடுத்தது.


நந்தினி தன் காரை ஸ்டார்ட் செய்யும் போது, அஸ்தமித்திருந்த நேரமானதால், அந்தத்தெரு விளக்குகள் யாவும் ஒரே நேரத்தில் பிராகாசிக்கத் தொடங்கின, அவளுக்கு அமையப்போகும் புத்தம் புதிய இனிய இல்வாழ்க்கை போலவே. 


வழியனுப்ப கார் அருகே குழந்தை ராமானுஜத்துடன் மல்லிகா, ஆனந்த், ஆனந்தின் தம்பி ஆகியோர் சூழ்ந்து நிற்க,  “கொஞ்ச நாள் பொறு தலைவா ...... ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....’’ என்ற பாடல் யாருடைய செல்போனிலிருந்தோ அழைப்பொலியாக ஒலித்தது, நல்லதொரு சகுனமாக நந்தினி உள்பட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 




-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-



இந்தச்சிறுகதை வல்லமை மின் இதழில் 
23.11.2011 அன்று வெளியிடப்பட்டது.

திங்கள், 21 நவம்பர், 2011

மழலைகள் உலகம் மகத்தானது





மழலைகள் உலகம் மகத்தானது

'மழலைகள் உலகம் மகத்தானது' என்ற தலைப்பில் பலரும் பலவிதமாக தொடர் பதிவாக எழுதி வருவது மிகச்சிறப்பாகவே உள்ளன. அவர்கள் தங்கள் பதிவுகளில் சொல்லாத கருத்துக்களை நான் எதுவும் புதிதாகச் சொல்லிவிடப் போவதில்லை.  

என்னை இந்தத் தொடர்பதிவைத் தொடருமாறு திருமதி சாந்தி மாரியப்பன் [அமைதிச்சாரல்] அவர்கள் 14.11.2011 அன்றே அழைப்பு விடுத்திருந்தார்கள்.

அமைதிச்சாரல் said...
”உங்களைத் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்.”



தமிழ்மண நட்சத்திரப் பதிவராக 7.11.2011 முதல் 13.11.2011 வரை ஒரு  வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்புப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து, எனக்கு மட்டுமல்லாது என் வீட்டு கணினிக்கும் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததும், வீட்டில் அடுத்தடுத்த விருந்தினர்கள் வருகையும், அடிக்கடி விருந்தினர்களுடன் வெளியில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் என்னால் அவர்களின் வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனது. 

சரி, ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது போல ’நாளடைவில் அவர்களும் மறந்து விடுவார்கள்; நாமும் மறந்து விடலாம்’ என்று தான், நான்
நினைத்திருந்தேன்.

ஆனால் நாம் ஒன்று நினைக்க [தப்பிக்க நினைக்க] தெய்வம் ஒன்று

நினைக்கிறது என்பார்கள். அதுபோலவே ஆகிவிட்டது.





வலைப்பதிவர் மணிராஜ் அவர்கள், ”மழலைகள் உலகம் மகத்தானது” 

என்ற தலைப்பில் நான் தொடர்பதிவு எழுத வேண்டும் என்று

நேற்றைய தன் பதிவினில் அன்புக்கட்டளை இட்டுள்ளார்கள். எனக்கு

மிகவும் பிடித்தமான தெய்வாம்சம் பொருந்திய தெய்வீகப்பதிவர்

அல்லவா! அதுதான் தெய்வ சங்கல்ப்பம் என்று நானும் நினைத்து

எழுதிவிடுவது என்று தீர்மானித்தேன்.





 இராஜராஜேஸ்வரி said


'தொடர அசாதாரண பன்முகத்திறமையாளரான திருவாளர் வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களையும் அழைக்கிறேன்.


இந்த என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மணிராஜ் என்ற

வலைப்பதிவருக்கு நானும் கூட ஒரு மழலைக்குழந்தை தான்.  






மிகச்சாதாரணமானவனாகிய என்னை, அசாதாரண

பன்முகத்திறமையாளர் என்று ஒரேயடியாகப் புகழ்ந்து

தள்ளியுள்ளார்கள். 




அவர்களின் மழலைக் குழந்தையை அவர்கள் எப்படி

வேண்டுமானாலும் அழைக்கலாம் தானே!



மழலைகளை யார் தூக்கிச்சென்றாலும், என்ன விளையாட்டுக்

காட்டினாலும், கொஞ்சி மகிழ்ந்தாலும், அந்தச் சேயின் மழலை

உள்ளத்தில், தாயின் ஞாபகமும், ஏக்கமும் மட்டும் தானே எப்போதும்

இருந்து கொண்டு இருக்கும்?





அதனால் இவர்களின் அன்பான அழைப்பை என்னால் தட்ட

முடியவில்லை. ஏதோ யாரும் இதுவரை எழுதாத ஒருசில புதிய

விஷயங்களையும், என் சொந்த அனுபவங்களையும் சேர்த்து,

ஞாபகத்திற்கு வந்த ஒரு சிலவற்றை மட்டும் திரட்டி எழுதலாம் என

நினைத்து இதோ ஆரம்பித்து விட்டேன்.




இதை வெளியிடும் நேரத்தில் என் அன்புக்குரிய திருமதி மனோ

சுவாமிநாதன் [முத்துச்சிதறல்] அவர்களிடமிருந்து மேலும் ஒரு

அழைப்பு ..... இதோ:


இந்தத் தொடர்பதிவிற்கு நான் அன்புடன் அழைப்பது:




1. பேரன்களுடன் கொஞ்சி விளையாடும்

திரு.வை.கோபாலகிருஷ்ணன்.



ஒரே கல்லில் இரண்டல்ல, மூன்று மாங்காய்கள்! அதுபோல இந்த என்

ஒரே பதிவினில் எனக்கு அழைப்பு விடுத்துள்ள மூவரையும் திருப்தி

படுத்திவிட்டோம் என்பதில் எனக்கும் கொஞ்சம் திருப்தியே. 




அன்புடன் என்னைப் பதிவிட அழைத்துள்ள மூவருக்கும்

[முப்பெருந்தேவிகளுக்கும்] என் நெஞ்சார்ந்த நன்றிகள். 





என் எழுத்துக்களும் ஒருவேளை மழலை மொழியாகவே கூட 

படிப்பவர்களுக்குத் தோன்றலாம். 




அவ்வாறு இருப்பின் பொருத்தருள்க!  மன்னித்தருள்க!!

”குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.”

எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில திருக்குறள்களில் இதுவே

முதலிடம் பெறுவது என்றால் அது மிகையாகாது.


நாம் பெற்றெடுத்த குழந்தைகள் பேசும் மழலைச் சொற்களில் இனம்

நுகராதவரே, புல்லாங்குழல் கேட்க இனிமையுடையது, யாழ் கேட்க

இனிமையுடையது என்பார்கள் என்கிறார், திருவள்ளுவர்.


இந்தக் குறளில் எனக்கு மிக மிகப்பிடித்தது முதல் வரியில்

ஆறாவதாக வரும் “தம்” என்ற வார்த்தையே. 


அது அங்கு ’தம் மக்கள்’ என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளது. 




அந்த மழலைச்சொல்லை

தம் மகன், தம் மகள், தம் பேரன், தம் பேத்தி மூலம் அனுபவித்து

மகிழ்ந்தவர்களுக்கே இது சுலபமாகப் புரியக்கூடியது.





’குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று; 


குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று’ என்பதனால் அடுத்த

வீட்டுக்குழந்தையை அல்லது அடுத்தவர் குழந்தையைக்

கொஞ்சினாலே நமக்கு இன்பம் ஏற்படுகிறது. 




நாம் அதுபோல் கொஞ்சுவது நமது சொந்த மகனோ அல்லது மகளோ

என்றால்! அதே இன்பம் பேரின்பம் ஆகிவிடுகிறது. 





அதையும் தாண்டி, நாம் கொஞ்ச வாய்ப்புக்கிடைக்கும் குழந்தையானது,

நமது மகனின் மகனோ/மகளோ அல்லது நமது மகளின்

மகனோ/மகளோ, அதாவது நம் சொந்தப் பேரனோ அல்லது

பேத்தியோ என்றால் அதுவே பேரின்பத்தின் உச்சக்கட்டமாகி

விடுகிறது.





உலக ஜனத்தொகை எழுநூறு கோடியை எட்டிவிட்டதாகச்

சொன்னாலும், நம் வீட்டில் புதியதாக ஒரு குழந்தை இன்று

பிறக்கிறது என்றால் அந்த மகிழ்ச்சியை நாம் வார்த்தைகளால்

சொல்லிவிட முடியுமா என்ன! ஜனனம் என்பது ஒரு வரவல்லவோ!!

அதற்கு மிகவும் ஒரு கொடுப்பிணை இருக்க வேண்டுமல்லவோ!!! 




எனக்குத் தெரிந்த ஒரு பாட்டி இருந்தார்கள். 


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியருகே வரஹூர் 


என்ற சிறிய கிராமம் உள்ளது.



ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியின் போது இங்கு நடைபெறும் உரியடி

உத்ஸவம் உலகப்புகழ் பெற்றது. [ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வேத

வராகமாக (வெள்ளைப்பன்றியாக) தோன்றி மறைந்து அங்கு வரஹூர்

பெருமாளாக ஸ்ரீ கிருஷ்ணராகக் கோயில் கொண்டுள்ளார்.  ]





எனக்குத் தெரிந்த அந்தப்பாட்டி அந்தக்கோயில் பெருமாளிடம்,

[அதாவது ஸ்ரீ கிருஷ்ணரிடம்] தனக்கு சந்ததி விருத்தியாக வேண்டும்

என்ற நோக்கத்தில் வேண்டிக்கொள்கிறாள்: 

“என் வீட்டு வாசல்படியை பீயால் நீ மொழுகு, 

உன் கோயில் வாசல்படியை நெய்யால் நான் மொழுகுகிறேன்”. 

அதாவது அந்தப்பாட்டிக்கு ஸ்ரீ குட்டிக்கிருஷ்ணன் போல ஒரு  பேரனோ 


அல்லது பேத்தியோ பிறந்து அவர்கள் வீட்டு வாசல்படியில்

அந்தக்குழந்தை மலம்+ஜலம் கழித்து மகிழ்விக்க வேண்டுமாம்.





அவ்வாறு பிராப்தம் ஏற்பட்ட உடனே இவள் ஸ்ரீ கிருஷ்ணனின் 


அந்தக்கோயில் வாசல்படி முழுவதும் நெய்யால் அபிஷேகம் செய்வாளாம். 




எப்பேர்ப்பட்ட ஒரு பிரார்த்தனை! 


நான் மிகவும் வியந்து போனேன்!!



குழந்தைச்செல்வம் என்பது கிடைக்க மிகவும் கொடுத்துத்தான்

வைத்திருக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.


புராணக்கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கதாபாத்திரம்

“குசேலர்” என்ற ஓர் ஏழை அந்தணர். 




ஸ்ரீகிருஷ்ணர் குட்டிக்கிருஷ்ணராக இருந்தபோது அவரின் பால்ய ஸ்நேகிதர் 


தான் இந்த குசேலர். 



அந்தக் குசேலருக்கு மொத்தம் 27 குழந்தைகள். இதில் எனக்குக்

கொஞ்சம் கூட ஆச்சர்யமே கிடையாது. சொல்லப்போனால் அவர்

மேல் எனக்கு ஒரு பொறாமையே உண்டு. ஏனென்றால், நானும் அதே

புராணகால குசேலர் போல 27 குழந்தைகளுடன், நவீனகால

குசேலனாக இருந்திருக்க வேண்டியவன் தான்!  




குழந்தைகள் மேல் எப்போதுமே எனக்குக் கொள்ளை ஆசை தான்!! 


பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் என்னால் இன்று குசேலனாகவும் 


ஆக முடியாமல் குபேரனாகவும் ஆக முடியாமல் ஒரு ரெண்டுங்கெட்டானாக


மட்டுமே ஆக முடிந்துள்ளது.




 

 


  

 


 

 







குசேலர் அபார சம்சாரியாக இருந்து, 27 குழந்தைகளுடன் அவர்

குடும்பமே வறுமையில் வாடியதால், அவர் மனைவியின்

ஆலோசனைப்படி, அந்த ஊருக்கே இராஜாவாக இருந்த பகவான்

ஸ்ரீகிருஷ்ணரை சந்திக்க மிகுந்த தயக்கத்துடன் செல்கிறார்.



நமக்கொரு கஷ்டகாலம் ஏற்படும்போது மட்டும் தானே நமக்குக்

கடவுள் ஞாபகமே வருகிறது! அது போலத்தான் குசேலரின்

மனைவிக்கு அன்று ஸ்ரீகிருஷ்ணரின் ஞாபகம் வந்தது. 





யாரையாவது நாம் பார்க்கச்சென்றால், அதுவும் நமக்கொரு ஒரு

காரியம் அவரால் சாதகமாக முடிய வேண்டும் என்றால், வெறும்

கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது. 


மஹாராஜாவையோ, நம்மைவிடப் பெரியவர்களையோ, கோயிலில்

உள்ள தெய்வத்தையோ, குழந்தைகளையோ சந்திக்கச்செல்லும்போது,

நாம் நம் சக்திக்கு ஏற்றபடி ஏதாவது கொஞ்சமாவது புஷ்பமோ, பழமோ,

தின்பண்டமோ எடுத்துச்செல்லவேண்டும் என்பது அந்தக்காலம் முதல்

இன்றுவரை பலராலும் கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கமே.  






தனது அழுக்கடைந்த கிழிந்த வஸ்திரத்தில் (ஆடையில்) சிறிதளவு ஸ்ரீ

கிருஷ்ணருக்கு சிறுவயதில் பிடித்தமான அவல் எடுத்துக்கொண்டு

செல்கிறார். அவரால் முடிந்தது அவ்வளவு தான்.


அரண்மனைக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்படுகிறது.


மிகவும் சிரமப்பட்ட பின்னரே, தான் வந்துள்ள செய்தியை அரசருக்குத்

தெரிவிக்க வேண்டி மன்றாடுகிறார். 




காவலர்கள் கடைசியாக அவர்மேல் இரக்கம் கொண்டு அரசரான பகவான் 


ஸ்ரீகிருஷ்ணரிடம் குலேசர் என்ற பெயரில் ஒரு ஏழை அந்தணர் அரண்மனை 


வாசலில் நெடுநேரமாக காத்திருப்பதாகவும், ராஜாவை தான் பார்த்தே 


ஆகவேண்டும் என பிடிவாதம் செய்வதாகவும் லேசாகத் தெரிவிக்கின்றனர்.  



குசேலர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டதுமே, ராஜாதிராஜாவான

ஸ்ரீகிருஷ்ணரே தன் பட்டுப்பீதாம்பரங்களுடன், அரண்மணை

வாசல்வரை ஓடிவந்து, பரம ஏழையான குசேலரைக்

கட்டித்தழுவிக்கொண்டு வரவேற்று, விருந்தளித்து உபசரிக்கிறார். 






அவர்கள் இருவரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று

விடுகிறார்கள். அவர்களிடையே ஏழை பணக்காரர்; ராஜா குடிமகன்;

செல்வம் வறுமை என்ற எந்த பாகுபாடும் இல்லை. 




இருவருமே மழலைகால மலரும் நினைவுகளுக்குத் திரும்பி, 


மிகுந்த நட்புடன் பழகிய அந்த அருமையான, இனிமையான 


நாட்களுக்குச் சென்று குழந்தைகளாகவே மாறி விடுகின்றனர். 



குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணரிடம் எதுவுமே உதவி கேட்கத்

தோன்றவில்லை. மிகவும் பிரமித்துப்போய் உள்ளார். 




”எனக்கு நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என்று

பகவானே குசேலனிடம் கேட்கிறார். 





தான் கொண்டுவந்துள்ள அவலைக்கூட கொடுக்கத்தோன்றாமல்

மிகுந்த வெட்கத்துடன், குசேலர் திரும்பிச்செல்ல நினைக்கிறார். 


பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தெரியாத விஷயமா என்ன?  






பகவான் குசேலரரின் அழுக்கு வஸ்திரத்தில் முடிந்து

வைத்துள்ள அவலைத் தானே கேட்டு வாங்கி, மிகுந்த மகிழ்வுடன்

தன் வாயில் சிறிது போட்டுக்கொள்ள, உடனே அந்த ஏழைக் 


குசேலரின் குடும்பம் பெரிய பணக்கார குபேரர் குடும்பமாக மாறி விடுகிறது. 





மிகச் சாதாரண மிகவும் மலிவான பொருட்களாயினும்,

பக்தன் உள் அன்புடன் தனக்கு அளிக்கும் பொருட்களில் தான்

பகவான், தானும் ஆனந்தம் அடைந்து, அவனையும்

ஆனந்தப்படுத்துகிறான் என்பதே இதிலிருந்து நாம் உணர வேண்டிய

விஷயமாகும். 




மழலைப் பருவத்தில் மனதில் அன்பு மட்டுமே பெருக்கெடுத்து

ஓடுகிறது. 





குழந்தைகள் மனதில் மட்டும் தான் அன்பு பெருக்கெடுத்து ஓடும். 


மழலைகள் இருக்குமிடம் தான் அன்புகள் பரிமாறப்படும் இடம். 


அதுவே பூத்துக்குலுங்கும் புஷ்பங்கள் நிறைந்த நந்தவனம். 


அங்கு அன்பென்னும் அருமையான வாசனையுள்ள மலர்களைத் தவிர  


வேறு எந்த பாகுபாடுகளுக்கும் இடமே இல்லை. 


இந்த அன்பென்னும் மழலைகள் தோட்டத்துக்குள் நாம் 


சென்று விட்டால், இறைவனை மிகவும் எளிதாகவே அடைந்து 


விடலாம் என்பதையும் நாம் இந்தக்குசேலர் கதை மூலம் 


நன்கு அறிய முடிகிறது.



”அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”

என்கிறார் திருவள்ளுவர் தனது மற்றொரு குறளில்.

அதாவது, தம் குழந்தைகள் தம் பிஞ்சுக்கைகளால் இட்டும், தொட்டும்

துழாவிய உணவு, பெற்றோருக்கு அமிர்தத்தைவிட மிகுந்த இனிமை

தருவதாகும் என்று பொருள்படக் கூறியுள்ளார்.    



நன்றிப் பயந்தூக்கா நாண் இலியும் சான்றோர்முன்

மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி

வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம்மூவர்

எச்சம் இழந்து வாழ்வார். 

[ திரிகடுகம் ]  

செய்நன்றி மறந்த நாணமில்லாதவனும், சான்றோர் முன்னிலையில்

பொய்ச்சாட்சி சொல்பவனும்

, அடைக்கலப் பொருளைக் கவர்ந்து கொள்பவனும், மக்கள் பேறு

இல்லாமல் துன்புறக்கூடும் என்கிறது, இந்தச்செய்யுள்.


குலாமை, சூலின் படும் துன்பம், ஈன்றபின்

ஏலாமை, ஏற்ப வளர்பு அருமை, சால்பவை
வல்லாமை, வாய்ப்ப அறிபவர் உண்ணாமை,
கொல்லாமை நன்றால், கொழிந்து.
[ சிறுபஞ்சமூலம் ]


மலட்டுத்தன்மையால் துன்பம், கர்ப்பம் தரித்துக் குழந்தை

பெறும்போது துன்பம், பெற்றபின் ஏற்காமையால் வரும் துன்பங்கள்,

குழந்தையை வளர்ப்பதில் உள்ள துன்பங்கள், வளர்த்தால் குழந்தை

நல்ல குணங்களைப் பெறாது இருத்தலால் வரும் துன்பங்கள்

ஆகியவற்றை அறிந்தவர் உயிர்களைக் கொல்லாதிருத்தலும், புலாலை

உண்ணாதிருத்தலும் நல்லது என்று சிறுபஞ்சமூலத்தில் இந்த

செய்யுளில் சொல்லப்பட்டுள்ளது.


குழவி தளர்நடை காண்டல் இனிதே;

அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

வினையடையான் வந்து அடைந்து வெய்து உறும்போழ்து;

மனன் அஞ்சான் ஆகல் இனிது.

[ இனியவை நாற்பது ]

குழந்தையின் தளர் நடையைக் காணுதல் இனியது. அக் குழந்தையின்

மழலைச் சொற்களைக் கேட்டல் அமிர்தத்தைவிட இனியது.

தீவினைகளுக்கு உரிய விளைவு நம்மை வந்து அடைந்து

துன்பப்படுத்தும் போது அஞ்சாத மனம் கொண்டிருத்தல் இனியது,

என்கிறது ‘இனியவை நாற்பது’ விலுள்ள இந்தச்செய்யுள்.


கற்பு உடுத்து, அன்பு முத்து, நாண் மெய்ப் பூசி,

நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பேறு

என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின், இல் அன்றே
,
கொண்டாற்குச்செய் தவம் வேறு.

[ நீதிநெறிவிளக்கம் ]


பொருள்: 

கற்பினையே நல்ல ஆடையாக உடுத்திக் கணவர் மேல் காட்டும்

அன்பை மலராகச் சூடி, நாணம் எனும் பெண்மை குணத்தை

உடம்பெல்லாம் சாந்தாகப்பூசி நற்குணங்களும், நற்செய்கைகளும்

ஆகிய ஆபரணங்களை அணிந்துள்ள நல்ல மனைவிக்குக் குழந்தைப்

பேறு மேலும் கூடுதலான ஒரு செல்வமாகும். இத்தகு மனைவியை

அடைந்தவனுக்கு, நன்மை கருதி, வேறு எந்தத் தவமும் செய்ய

வேண்டுவது இல்லை.  



எங்கள் குடும்பம் மிகப்பெரியது. ஆலமர விழுதுகள் போல மழலைச்

செல்வங்கள் நிறைந்து காணப்படுவது. குடும்பத்தில் ஏதாவது ஒரு

சிறிய கொண்டாட்டம் என்றாலும் என் அக்காமார்களின்,

அண்ணாவின், மைத்துனரின் பேரன், பேத்திகள், என் பேரன்கள் பேத்தி

என என்னைச் சுற்றி ஒரு நாற்பது மழலைகள் நிறைந்திருக்கும்.

அவர்களுக்கு ஏற்றாற்போல நகைச்சுவையான கதைகளை நான் கூற,

அவர்கள் அனைவரும் சிரித்து மகிழ்வார்கள். அதுபோன்ற நேரங்களில்

நானும் அவர்களுடன் ஒரு மழலையாகவே மாறிவிடுவேன். அந்த

இன்பத்தை அடிக்கடி அனுபவித்து வரும் எனக்கு மட்டுமே அதில்

உள்ள சுகத்தை நன்கு உணர முடியும்.




இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் என்னிடம் அன்று

சிறுவயதில் கதை கேட்டு மகிழ்ந்த இரண்டு பெண் குழந்தைகளே,

பிற்காலத்தில், எனக்கு மருமகள்களாக வாய்த்தது தான். 


எல்லாம் கடவுள் செயல்! 

    


மழலைகள் உலகம் மகத்தானது! 

அதுவே நம்

மனக்கவலைகளுக்கு மருந்தானது!!




என்றும் அன்புடன் தங்கள்




வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




இந்த மகத்தான மழலைகள் உலகத்தைப் பற்றி அவரவர்கள்

தங்களின் அனுபவத்துடன் கூடிய பதிவாகத் தொடர்ந்து எழுத

வேண்டுமாய் கீழ்க்கண்ட இனிய தோழிகளையும், அருமை

நண்பர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்:


1) Miss. NUNMADHI அவர்கள்


2) Mrs. ANGELIN அவர்கள்


3) Mr. A.R. RAJAGOPALAN அவர்கள்


4) Mr. K S S  RAJH அவர்கள்

அன்புடன் vgk