About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, November 8, 2011

நகரப் பேருந்தில் ஒரு கிழவி
நகரப் பேருந்தில் ஒரு கிழவி

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந்து நிலையத்தை விட்டுக் கிளம்பி விட்டது.

“புளியந்தோப்புக்கு ஒரு டிக்கட் கொடுப்பா” கிழவி தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து காசு எடுத்து நடத்துனரிடம் நீட்டுகிறாள். அவள் மடிமீது ஏதோ சற்றே பெரிய சாக்கு மூட்டை வேறு.

“வண்டி புளியந்தோப்புக்குப் போகாதும்மா. கேட்டுக்கிட்டு ஏற வேண்டாமா?” ரெண்டு ரூபாய் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு, காசைக் கிழவியின் கையிலிருந்து வெடுக்கெனப் புடுங்கி தன் பையில் போட்டுக்கொண்டு “மார்க்கெட்டில் இறங்கி நடந்து போம்மா” என்கிறார் நடத்துனர்.

“அய்யா, அப்பா, வண்டியக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுய்யா, மார்க்கெட்டிலே இறங்கினா புளியந்தோப்புக்குப் போக நான் ரொம்ப தூரம் நடக்கணுமேப்பா, வெய்யிலிலே இந்த வயசானக் கிழவி மேல இரக்கம் காட்டுப்பா, கையிலே வேறு சில்லறைக் காசும் இல்லப்பா” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு, எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறாள் அந்தக் கிழவி.

”பேசாமக் குந்தும்மா; சரியான சாவு கிராக்கியெல்லாம் பஸ்ஸிலே ஏறி, என் உயிரை வாங்குது” என்று சீறுகிறார் நடத்துனர். அவர் கவனம் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் போட்டு காசு வசூலிப்பதில் திரும்புகிறது.

கிழவிக்கு வயது எண்பதுக்குக் குறையாது. நல்ல பழுத்த பழம் போன்றவள். தோல் பூராவும் ஒரே சுருக்கம் சுருக்கமாக உள்ளது. வெய்யிலின் கடுமையில் அவள் முகம் மிளகாய்ப் பழம் போல சிவந்து விட்டது.

அதற்குள் பஸ் மார்க்கெட்டை நோக்கி பாதி தூரம் சென்று விட்டது. பஸ்ஸின் ஆட்டத்தில் நின்று கொண்டிருந்த கிழவி அவளையறியாமலேயே மீண்டும் தன் இருக்கையில் தள்ளப்படுகிறாள்.

அவள் வாய் மட்டும் ஏதோ “காளியாத்தா ... மாரியாத்தா” ன்னு புலம்பிக் கொண்டே இருந்தது.

கிழவியைப் பார்த்த எனக்குப் பாவமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.

தள்ளாத வயதில், கடுமையான வெய்யிலில், கையில் சுமையுடன் பஸ்ஸில் ஏறி, சாமர்த்தியமாக அதுவும் தன்னந்தனியாக பயணம் செய்கிறாளே என்று எனக்குள் வியப்பு.

புளியந்தோப்பு வழியாக இந்த பஸ் போகுமா என்று ஒரு வார்த்தை யாரிடமாவது கேட்டு விட்டு அவள் ஏறியிருக்கலாம் தான். படித்த விபரம் தெரிந்தவர்களுக்கே சமயத்தில் இதுபோல தவறு ஏற்படக் கூடும். பாவம் வயசான இந்தக் கிழவி என்ன செய்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.

மார்க்கெட் நெருங்கும் முன்பே, போக்குவரத்து ஸ்தம்பித்து பஸ் நிற்க ஆரம்பித்தது. வரிசையாக பேருந்துகளும், லாரிகளும், கை வண்டிகளும், ஆட்டோக்களுமாக கண்ணுக்கு எட்டியவரை நின்று கொண்டிருந்தன.

யாரோ ஒரு மந்திரி, எங்கோ ஒரு பகுதியில், மக்கள் குறை கேட்க வரப் போவதாகவும், அவரின் காரும், அவரின் ஆதரவாளர்களின் கார்களும், பாதுகாப்பு போலீஸ் வண்டிகளும் வரிசையாகப் போன பின்பு தான், போக்கு வரத்து சகஜ நிலைக்குத் திரும்புமாம்.

வெகு நேரமாக இப்படி ட்ராஃபிக் ஜாம் ஆகியுள்ளதாக பேசிக்கொண்டனர், பஸ் அருகில் நின்ற ஒரு சில கரை வேட்டி அணிந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள்.

இங்கு டிராஃபிக் ஜாம் ஆகி மக்கள் தவித்து நிற்கும் பகுதிக்கு அந்த மந்திரி குறை கேட்க நடந்தே வந்தாரானால், அவரை இங்குள்ள மக்கள் கொதித்துப்போய் ஜாம் செய்து விடுவார்கள், என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

கீழே இறங்கி நிலமையை ஆராய்ந்த நடத்துனர், ஓட்டுனரிடம் வண்டியை சீக்கிரமாக ரிவேர்ஸ்ஸில் எடுக்கச் சொல்லி விசில் ஊத ஆரம்பித்தார். ”ரைட்டுல கட் பண்ணு. இந்த டிராஃபிக் ஜாம் இப்போதைக்கு கிளியர் ஆகாது போலத் தோன்றுகிறது. பேசாமல் இந்த டிரிப் மட்டும் புளியந்தோப்பு வழியாகப் போய் விடலாமய்யா” என்றார்.

கிழவியின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று நினைத்து என்னுள் மகிழ்ந்து கொண்டேன்.

ஆனால் புளியந்தோப்புக்கு சற்று முன்னதாகவே பஸ் எஞ்சினில் ஏதோ கோளாறு ஆகி வண்டி நிறுத்தப்பட்டது. எஞ்சினைத் திறந்து பார்த்த ஓட்டுனர், நடத்துனரிடம் “ரேடியேட்டருக்குத் தண்ணி ஊத்தணும்” என்றார். ரேடியேட்டரிலிருந்து ஒரே புகையாக வந்து கொண்டிருந்தது.

“நடுக்காட்டில் நிறுத்தினா தண்ணிக்கு எங்கேய்யா போவது?” நடத்துனர் புலம்ப ஆரம்பித்தார்.

இது தான் சமயம் என்று தன் பெரிய மூட்டையுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய கிழவி, “இதோ தெரியுதே குடிசை. அது தானய்யா என் வீடு. என் வீட்டுக்கு வாப்பா. வேண்டிய மட்டும் தண்ணி தாரேன்” என்று கூறினாள்.

இரண்டு குடம் தண்ணீர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சொம்பு நிறைய நீர்மோர் கொண்டு வந்து “வெய்யிலுக்கு குளுமையாய் இருக்கும், குடிச்சுட்டுப் போப்பா” என்றாள், அந்த நடத்துனரிடம்.

மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.

“நல்லா மவராசனா இருப்பா” என்று வாய் நிறைய வாழ்த்தினாள், அந்தக் கிழவி.

பிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்தும், அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது.

-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
7. புனர்பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் 
[பெரியநாயகி அம்மன்]இருப்பிடம்: வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி 
செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் 
வாணியம்பாடி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் 
இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய  
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.07/27

32 comments:

 1. இது கற்பனைக் கதையா இல்லை உண்மைச் சம்பவமா? எதுவாயிருப்பினும் அந்தக் கிழவி மனதில் நிற்கிறார். அருமை.

  ReplyDelete
 2. கதையின் கதாநாயகி கதை வாசித்தவர்கள் மனதில் பெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டார்.

  ReplyDelete
 3. கதை நன்றாக இருக்கிறது கோபு சார். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் .!

  ReplyDelete
 4. சிறியதானாலும் அருமையான கதை ஐயா! எவரையும் இகழ்வது தவறு என்பதை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 5. இதனை மீள்பதிவாக போடலாமே என்று நேற்று நினைத்தேன்.இன்று வந்து விட்டது. நன்றி

  ReplyDelete
 6. உங்களுக்கே உரிய பாணியில்
  அருமையான கதை வை கோ
  வாழ்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. எங்கள் மனதிலும் நீங்காமல் இடம் பிடித்து விட்டார் மூதாட்டி .
  ஒருவரையும் ஏழ்மை கண்டு இகழக்கூடாது என்பதற்கு இக்கதை சான்று

  ReplyDelete
 8. என்னுடைய பாணியில் இது "நச் கதை".வயதானவர்களை நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.த.ம 6

  ReplyDelete
 9. குணமெனும் குன்றேறி நிற்க சில சந்தர்ப்பங்கள் தேவைப்படுகின்றன. நல்ல கதை.

  ReplyDelete
 10. தாய் அன்புக்கு தன் மக்கள், பிறர் மக்கள் என்ற வித்யாசம் கிடையாது.
  அழகான கதை.

  ReplyDelete
 11. உங்களின் ஒவ்வொரு கதையும் பல சுவாரஸ்யமான மனிதர்களையும் சூழ்நிலைகளையும் அறிமுகப்படுத்துகிறது!

  ReplyDelete
 12. மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.

  உண்மை தெரிந்த மகிழ்ச்சி !

  ReplyDelete
 13. புனர்பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
  [பெரியநாயகி அம்மன்]

  மிகவும் பயனுள்ள தகவல்..

  ReplyDelete
 14. இராஜராஜேஸ்வரி said...
  மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.

  உண்மை தெரிந்த மகிழ்ச்சி !//

  ”மகிழ்ச்சி தெரிந்த உண்மை” -
  உங்களின் இந்தப்பின்னூட்டம்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 15. இராஜராஜேஸ்வரி said...
  புனர்பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்

  [பெரியநாயகி அம்மன்]

  மிகவும் பயனுள்ள தகவல்..//

  இது என் ஜன்ம நக்ஷத்திரம்.

  மிகவும் பயனுள்ள தகவல் என்று அந்த பெரியநாயகி அம்மனே நேரில் வந்து சொன்னதாக உணர்கிறேன். மகிழ்கிறேன். vgk

  ReplyDelete
 16. மோர்கொடுத்த பாட்டி என் மனதிலும் நிற்கிறாள். பெரும்பாலும் பேருந்தில் நடத்துனர்கள் முதியோர்கள், ஏழ்மை மிக்கவர்களை அலட்சியமாகதான் பேசுகிறார்கள். அவர்கள் ஸ்டாப்பிங்கில் இறங்க அவகாசம் தராமல் தள்ளிவிடுவது போல் கூச்சல் போட்டு வந்து தொலையுதுங்க பாரு என்று கத்துவதை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் வயதாகும் போதுதான் புரியும். நல்ல சிறுகதை சார்.

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு February 2, 2013 at 9:05 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வணக்கம் டீச்சர்.

   //மோர்கொடுத்த பாட்டி என் மனதிலும் நிற்கிறாள். பெரும்பாலும் பேருந்தில் நடத்துனர்கள் முதியோர்கள், ஏழ்மை மிக்கவர்களை அலட்சியமாகதான் பேசுகிறார்கள். அவர்கள் ஸ்டாப்பிங்கில் இறங்க அவகாசம் தராமல் தள்ளிவிடுவது போல் கூச்சல் போட்டு வந்து தொலையுதுங்க பாரு என்று கத்துவதை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் வயதாகும் போதுதான் புரியும்.//

   ஆமாம் மேடம். பழுத்த இலையைப்பார்த்து பச்சை இலைகள் சிரிக்கின்றன.

   அவர்களுக்கும் வயதாகும் போது தான் இது புரியும். சரியாகவே உணர்ந்து சொல்லுகிறீர்கள்.

   //நல்ல சிறுகதை சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 17. சிறப்பான சிறுகதை ஐயா. அருமை! அருமை!

  ReplyDelete
  Replies
  1. வேல் October 8, 2013 at 6:53 AM

   வாங்கோ ’வேல் வேல் வெற்றிவேல்’ அவர்களே, வணக்கம்.

   //சிறப்பான சிறுகதை ஐயா. அருமை! அருமை!//

   தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 18. அய்யா கதையா இது? உண்மைச் சம்பவம் போல் உள்ளது. பழுத்த மரம் தான் அனைத்தையும் ஈர்க்கும். ஆதரிக்கும். இந்த கதையைப் படித்தவுடன் எனக்கு தற்போது ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. சரி பதிவிடலாம் என்று நினைத்துவிட்டேன். அடுத்த பதிவிற்கு களம் அமைத்து கொடுத்த கதை. எப்படி.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran May 18, 2015 at 2:54 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஐ யா, கதையா இது? உண்மைச் சம்பவம் போல் உள்ளது. பழுத்த மரம் தான் அனைத்தையும் ஈர்க்கும். ஆதரிக்கும். இந்த கதையைப் படித்தவுடன் எனக்கு தற்போது ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. சரி பதிவிடலாம் என்று நினைத்துவிட்டேன். அடுத்த பதிவிற்கு களம் அமைத்து கொடுத்த கதை. எப்படி நன்றி சொல்வேன்?//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் அனுபவத்தையும் பதிவிடுங்கள். மறக்காமல் எனக்கு அதன் இணைப்பினை மெயில் மூலம் அனுப்பி வையுங்கோ. என் மெயில் முகவரி: valambal@gmail.com சில சமயங்கள் என் டேஷ் போர்டில் எந்தப் புதுப்பதிவுகளும் காட்சியளிப்பது இல்லை. அதனால் தகவல் + இணைப்பு மெயில் மூலம் அனுப்பினால் நல்லது. Just LINK மட்டும் அனுப்புங்கோ போதும். உடனே வருகை தந்து கருத்தளிக்க முயற்சிப்பேன்.

   VGK

   Delete
 19. அகழ்வாரைத் தாங்கும் நிலமு போல தன்னை அவமான படுத்தியவர்களுக்கும் உபசாரம் பண்ண றாங்க.

  ReplyDelete
 20. பூந்தளிர் May 20, 2015 at 10:34 AM

  //அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தன்னை அவமான படுத்தியவர்களுக்கும் உபசாரம் பண்ணறாங்க.//

  மிக அழகான உதாரணம் கொடுத்து, அசத்திட்டீங்கோ :) நன்றி.

  ReplyDelete
 21. நகரப் பேருந்து நகராப் பேருந்தாய் ஆனதால் அந்தக் கிழவிக்கு நல்லதாய் போயிற்று.

  அந்தக்காலத்து மனுஷங்க போல ஆகுமா?

  வாய்ப்பு கிடைக்கும் பொழுது மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுவும் இந்த மாதிரி சேவை துறைகளில் இருப்பவர்கள் கண்டிப்பாக சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்.

  அந்தக் கிழவிக்கு ஒரு ஓ போட்டுட்டேன்.

  ReplyDelete
 22. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  சூட்சுமத்தை பிடித்துக் கொண்டு கதையை எழுதி இருக்கும் விதம் அருமை. சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு பேருந்து நிகழ்வு. அதில் அசாதாரண கற்பனையைக் கலந்து, லட்டு பிடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்பதை நிரூபித்த கதை.

  தலைமுறை இடைவெளியில் தவறி விழுந்து விட்டது மனித நேயம் என்பதையும் அழகாய் சொல்ல வேண்டிய இடத்தில் காட்சி படுத்திய விதம் இதம்.

  கிழவி..... அந்த நடத்துனர் இதயத்தைக் கடந்து வந்து படிப்பவர் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்திருப்பார்.

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  ReplyDelete
 23. வயசாளி என்னக்குமே வெவரமானவங்கதா. அவமா படுத்திட்டாங்களேன்னு மனசுல வெச்சுகிடாம ஒதவி பண்ணி போட்டுது.

  ReplyDelete
 24. கிழவியின் வேண்டுதல் அம்மன் காதுல விழுந்துவிட்டது போல அவ இறங்க வேண்டிய இடத்திலேயே இறங்க முடிந்ததே. நடத்துனர் ஓட்டுனரையும் தவறாக எண்ணாமல் உபசரிக்க முடிந்ததே.

  ReplyDelete
 25. கதைக்குள் நானும் ஒரு பாத்திரமாக உணர்ந்தேன்...இன்னா செய்ய நினைத்தாரை ஒருத்த கிழவி...நெஞ்சில் நிற்கும் பாத்திரம்!!!

  ReplyDelete
 26. கிழவி பாத்திரம் நெஞ்சம் நிறைத்தது!

  ReplyDelete