என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 12 நவம்பர், 2011

நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !!
நன்றே செய் ! 

அதுவும் இன்றே செய் !!


[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன் 
எண்ணெய் பார்த்துப் பல வருடங்கள் ஆன பரட்டைத்தலை. அதில் ஆங்காங்கே தொங்கும் ஆலம் விழுது போன்ற சடைகள். அழுக்கான ஒரு வேஷ்டி அதனிலும் சல்லடை போன்ற பொத்தல்கள்.

சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.

வலது கையில் நாய்ச் சங்கிலியுடன் கட்டப்பட்ட ஓரிரு இரும்பு வளையங்கள். சிவந்த கண்கள். எச்சில் ஒழுகும் வாய்.

வலது கால் கட்டைவிரல் பகுதியில் அடிபட்டது போல காயத்துடன் சற்றே வெளியில் வரும் ரத்தத் துளிகள். அதைச்சுற்றி ஈக்கள் மொய்த்த வண்ணம் இருந்ததால் காலை அடிக்கடி நீட்டியும் மடக்கியும் அந்த ஈக்களை ஓட்டியபடி, அந்த ஓட்டல் வாசலில் ஒரு தகரக் குவளையுடன், அமர்ந்து கொண்டு, ஓட்டலுக்கு வருவோர் போவோரை கை கூப்பி வணங்கிக் கொண்டிருந்த அவனை, எல்லோருமே ஒரு வித அருவருப்புடன் பார்த்து விட்டுத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.

யார் பெற்ற பிள்ளையோ பாவம் என்று இரக்கப்பட்டு, ஒரு சிலர் தங்களால் முடிந்த சில்லறை நாணயங்களையும் போட்டுச் சென்றனர்.

போக்குவரத்து நெருக்கடியை உத்தேசித்து, அந்த ஓட்டலுக்கு சற்று தள்ளியிருந்த, ஜன நடமாட்டம் அதிகமில்லாத, சந்து ஒன்றில் தன் காரை நிறுத்திவிட்டு, ஓட்டலில் டிபன் சாப்பிட வந்திருந்த பாபு, அவசர அவசரமாக அந்த ஓட்டலிலிருந்து வெளியேறவும், அந்தப் பரட்டைத்தலையன், மொய்க்கும் ஈக்களைத் துரத்த வேண்டி, தன் காலை நீட்டவும், பாபு அவன் காலில் இடறி நிலை தடுமாறி விழப்போய், கஷ்டப்பட்டு சுதாரித்துக் கொண்டு, ஒருவழியாக சமாளித்து நின்று, அவனைக் கண்டபடி திட்டித் தீர்க்கவும் சரியாய் இருந்தது.

ஏற்கனவே புண்ணான தன் கால் விரலில், பாபு இடறியதால் மேலும் ரணமான அவன் பே...பே...பே...பே.. என்று ஏதோ கத்திக்கொண்டே, கஷ்டப்பட்டு எழுந்து நின்று கொண்டான்.

அவன் செயலால் சற்றே பயந்து போன பாபு, தன் நடையை சற்று வேகமாக்கி, தன் காரை நோக்கி ஓட ஆரம்பிக்க, அவனும் பாபுவைத் துரத்த ஆரம்பித்தான்.

காலை விந்தி விந்தி நடந்த பரட்டைத் தலையன், பாபு காரைக் கிளப்புவதற்கு முன்பு காரின் முன்னே போய் நின்று விட்டான்.

இருபது வயதே ஆன இளைஞன் பாபுவுக்கு, இப்போது பயம் மேலும் அதிகரித்தது. நம்மைத் துரத்தி வந்துள்ள இவன் மேலும் என்ன செய்வானோ? என்று.

ஒரு வேளை மனநிலை சரியில்லாதவனாக இருந்து, அவன் காலில் நாம் இடறிய கடுப்பில், நம்மைத் தாக்குவானோ அல்லது நம் காரைக் கல்லால் அடித்துச் சேதப் படுத்துவானோ எனக் கவலைப் பட ஆரம்பித்தான்.

கார் கண்ணாடிகளை மேலே தூக்கி விட்டு, காரை மெதுவாக ஸ்டார்ட் செய்து, லேசாக அந்தப் பரட்டைத் தலையன் மீது, ஹாரன் அடித்தபடியே மோதித் தள்ளினால், அவன் நகர்ந்து விடுவான் என்று எதிர்பார்த்து செயல்பட ஆரம்பித்தான்.

அதற்கெல்லாம் அந்தப் பரட்டைத் தலையன், சற்றும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. தன் தோளில் தொங்கிய, கழுதைக் கலர் ஜோல்னாப் பையில் கையை விட்டு துலாவிக்கொண்டிருந்தான்.

பிறகு தைர்யத்தை வரவழைத்துக்கொண்டு, காரிலிருந்து இறங்கி அவசரமாக பின்புற டிக்கியைத் திறந்து, கார் ஜாக்கியுடன் இருந்த இரும்புக் கழியை கையில் தற்காப்பு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, அவனை நெருங்கினான். பாபு.

காருக்கு முன்னால் இஞ்ஜினை ஒட்டி நின்றிருந்த அந்தப் பரட்டைத் தலையன் இப்போதும், தன் ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு எதையோ குடைந்து தேடிக்கொண்டிருந்தான்.


இரும்புக் கழியால் அவனை அடிப்பது போல ஓங்கிக்கொண்டு, அவனை கார் பக்கத்திலிருந்து வேறு பக்கம் ஓடிப் போகத் தூண்டினான், பாபு.

இப்போதும் பே...பே...பே...பே ன்னு கத்திய அவன், தன் ஜோல்னாப் பையிலிருந்து புத்தம் புதியதோர் செல்போன் ஒன்றை எடுத்து, கார் இன்ஜின் பேனட் மீது வைத்து விட்டு, காலை விந்தி விந்தி பயந்து கொண்டே மீண்டும், அந்த ஓட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

அப்போது தான் பாபுவுக்கு தான் சமீபத்தில் ஏராளமான ரூபாய்கள் செலவழித்து வாங்கிய புத்தம் புதிய ஐ-பேட் மொபைல் போன், தன்னிடம் இல்லாதது பற்றிய ஞாபகமே வந்தது.

பரட்டைத் தலையனின் காலில் இடறி தடுமாறி விழ இருந்த பாபுவின் செல்போன் மட்டும், பரட்டைத் தலையனின் ஜோல்னாப் பைக்குள் விழுந்திருக்கக் கூடும் என்பது புரிய வந்தது.

அதைத் தன்னிடம் ஒப்படைக்கத்தான் அவன் தன்னைத் துரத்தி வந்துள்ளான் என்பதையும் பாபு இப்போது தான் உணரத் தொடங்கினான்.

பாவம், அந்த வாய் பேச வராத அப்பாவியான பிச்சைக்காரனைப் போய் நாம் தாக்க நினைத்தோமே என்று தன் அவசர புத்தியை நினைத்து மிகவும் வெட்கப் பட்டான்.

பாபு அவனை மீண்டும் சந்தித்து ஒரு சில உதவிகள் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனாலும் அப்போது தன் காரை வீட்டை நோக்கி ஓட்டிச் செல்லும்படியாகி விட்டது. நேராக வீட்டுக்குச் சென்ற பாபு, தன்னுடைய பழைய கைலிகள், பேண்டுகள், சட்டைகள் என சிலவற்றை ஒரு பையில் போட்டுக்கொண்டு, சில்லறைகளாகவும், ரூபாய் நோட்டுக்களாக ஒரு நூறு ரூபாய்க்கு மேல் பணமும் போட்டுக் காரில் அதைத் தனியாக வைத்துக் கொண்டான். அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் பாபுவுக்கு.

தான் அவனுக்கு இந்தச் சின்ன உதவியைச் செய்ய நினைத்ததை நிறைவேற்ற, மறு நாள் காலை, தன் காரில் அதே ஓட்டல் வாசலுக்குச் சென்றான், பாபு. ஆனால் அங்கே அந்த பரட்டைத் தலையனைக் காணவில்லை.

சுற்று வட்டாரத்தில் பல இடங்களிலும், மிகவும் மெதுவாகக் காரை ஓட்டிச் சென்று, ஒரு மணி நேரத்திற்கு மேல் தேடியும், அவனைப் பார்க்க முடியவில்லை.

கடைசியாக காரில் ஏறி வீடு திரும்பும் வழியில் நடு ரோட்டில் ஒரு மிகப் பெரிய கூட்டம். காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு, இறங்கி நடந்து வந்து, கூட்டத்தை விலக்கிப் பார்த்த பாபுவுக்கு ஒரே அதிர்ச்சி.

நடு ரோட்டில், நல்ல வெய்யில் வேளையில், பசி மயக்கத்தில் இருந்துள்ள அவனுக்கு, வலிப்பு ஏற்பட்டதாகவும், துடிதுடித்து விழுந்த அவன் உயிர் உடனே பிரிந்து விட்டதாகவும், அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

இறந்து கிடந்த அந்தப் பரட்டைத் தலையன் அருகே, அவனை நல்லடக்கம் செய்ய வேண்டி, ஒரு துணியை விரித்து, யாரோ வசூலுக்கு ஏற்பாடும் செய்திருந்தனர்.

பாபுவின் கண்கள் ஏனோ சில சொட்டுக் கண்ணீர் வடிக்க, அவன் கைகள் இரண்டும், இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அந்தப் பிணத்துக்கு அருகில், விரித்திருந்த துணியில் போட்டுக் கொண்டிருந்தன.

காரில் ஏறி வீட்டுக்குத் திரும்பி வரும் போது, அந்த அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர்வமாக பாபு பிரார்த்தித்த போது, ”அப்படியே ஆகட்டும்” என்பது போல அவனின் ஐ-பேட் மொபைல் போன் ஒலிக்க ஆரம்பித்தது.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-


23. ”அவிட்டம்” நக்ஷத்திரத்தில் 
பிறந்தவர்கள் சென்று வழிபட 
வேண்டிய கோயில்:

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் 
திருக்கோயில் 
[புஷ்பவல்லி அம்மன்] 

இருப்பிடம் : 
கும்பகோணம் மகாமகக்குளம் 
மேற்குக் கரையிலிருந்து 
4 கி.மீ. தூரத்தில் இந்தக் 
கோயில் அமைந்துள்ளது. 

கும்பகோணத்திலிருந்து தாராசுரம், 
முழையூர் வழியாக மருதாநல்லூர் 
செல்லும் பஸ்களில் கொருக்கை 
என்னும் இடத்தில் உள்ளது..


23/27

27 கருத்துகள்:

 1. "நன்றேசெய்......" மனத்தைத்தொட்டு நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 2. தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால்தான் மனம் சிந்திக்கத் துவங்குகிறதோ.? தனக்கு இழப்பு இல்லாத போதுதான் மற்றவரின் கஷ்டம் தெரிய வருகிறது. ஒரு சிறு கதையில் மனதின் பல பரிமாணங்கள் காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. //"நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !!"//
  பொருத்தமான தலைப்பு, பொருளுள்ள தலைப்பு!

  பதிலளிநீக்கு
 4. நல்ல கதை.
  மனசை நெகிழ வைக்கிறது.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கருத்துதான் சார். சில சமயங்களில் நாம் செய்ய வேண்டும் என்று நினைத்தது பயனில்லாமல் போய்விடும். உடனேயே செய்ய வேண்டும்தான். நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 6. தங்களது பதிவுகளில் என் மனங்கவர்ந்த பதிவுகளில் இதுவும் ஒன்று

  பதிலளிநீக்கு
 7. அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர்வமாக பாபு பிரார்த்தித்த போது, ”அப்படியே ஆகட்டும்” என்பது போல அவனின் ஐ-பேட் மொபைல் போன் ஒலிக்க ஆரம்பித்தது.//

  Nice story..

  பதிலளிநீக்கு
 8. ”அவிட்டம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய கோயில்:
  அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர்
  திருக்கோயில்
  [புஷ்பவல்லி அம்மன்] //

  very useful post. Thank you for sharing.

  பதிலளிநீக்கு
 9. கலங்க வைத்த முடிவு .மனம் கனத்து போனது ..

  பதிலளிநீக்கு
 10. மனதை நெகிழ வைத்த சிறுகதை....

  நன்றே செய்! அதுவும் இன்றே செய்!!.... நல்ல அறிவுரை...

  பதிலளிநீக்கு
 11. நன்றே செய் அதுவும் இன்றே செய் அருமையான தலைப்பும் , நெகிழ்வான கதையும்.

  பதிலளிநீக்கு
 12. நல்ல கதை. நம்மில் 99 சதவிகிதம் மனிதர்கள் இப்படித் தான் இருக்கிறோம் என்பது வருந்ததக்க உண்மை.

  பதிலளிநீக்கு
 13. //இப்போதும் பே...பே...பே...பே ன்னு கத்திய அவன், தன் ஜோல்னாப் பையிலிருந்து புத்தம் புதியதோர் செல்போன் ஒன்றை எடுத்து, கார் இன்ஜின் பேனட் மீது வைத்து விட்டு, காலை விந்தி விந்தி பயந்து கொண்டே மீண்டும், அந்த ஓட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தான்//

  பே...பே...பே...பே பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு தங்கள் சிறுகதை.

  நல்ல கதைகேற்ற நல்ல தலைப்பு "நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !! "

  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேல் September 20, 2013 at 9:25 AM

   வாருங்கள், வணக்கம்.

   *****இப்போதும் பே...பே...பே...பே ன்னு கத்திய அவன், தன் ஜோல்னாப் பையிலிருந்து புத்தம் புதியதோர் செல்போன் ஒன்றை எடுத்து, கார் இன்ஜின் பேனட் மீது வைத்து விட்டு, காலை விந்தி விந்தி பயந்து கொண்டே மீண்டும், அந்த ஓட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தான்*****

   //பே...பே...பே...பே பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு தங்கள் சிறுகதை.

   நல்ல கதைகேற்ற நல்ல தலைப்பு "நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !! "

   நன்றி ஐயா//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
 14. மனநிலை பிறழ்ந்தவனாக இருந்தாலும் நீதி தேவதை அவனிடம் வாசம் செய்கிறாள்.

  பதிலளிநீக்கு
 15. ஒருத்தருக்கு நல்லது செய்ய நினச்சா உடனே செய்துடனும் நாளை என்று ஒத்திப்போடவே கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 20, 2015 at 6:22 PM

   //ஒருத்தருக்கு நல்லது செய்ய நினச்சா உடனே செய்துடனும் நாளை என்று ஒத்திப்போடவே கூடாது.//

   கரெக்டு. ஒத்திப்போட்டால் பிறகு சந்தர்ப்பம் சாதகமாக அமையும் என்று சொல்லமுடியாதுதான்.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க.

   நீக்கு
 16. நன்றே செய், அதுவும் இன்றே செய்

  இல்லை இல்லை

  இப்பொழுதே செய். சில நேரங்களில் நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் பிறகு நொந்து கொள்வோம்.

  இந்தக் கருத்தை அருமையாக சொல்லி விட்டீர்கள். இந்த சிறுகதையில்.

  பதிலளிநீக்கு
 17. கரீட்டுதா. நல்லது செய்ய நெனச்சு போட்டா ஒடனே செய்து போடணும். நல்ல கத.

  பதிலளிநீக்கு
 18. யாருக்காவது நல்லது செய்ய நினைத்தால் உடனே செய்துடணும் என்பதை அழகாக சொன்ன கதை.

  பதிலளிநீக்கு
 19. உயிரோடு இருக்கும்போது கிடைத்திருந்தால் வயிறார சாப்பிட பயன்பட்டிருக்கும்...இறுதி மரியாதைக்காவது பயன்பட்டதே...

  பதிலளிநீக்கு
 20. நாம் இப்படி தான் அவசரப்பட்டு நடந்துக்கொள்வோம்,,,

  மனம் கனக்கும் பதிவு ஐயா, இறந்த பின் அவனுக்கு காசு என்ன, இருக்கும் போது இல்லாதது,,
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran December 11, 2015 at 1:59 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நாம் இப்படி தான் அவசரப்பட்டு நடந்துக்கொள்வோம்,,,

   மனம் கனக்கும் பதிவு ஐயா, இறந்த பின் அவனுக்கு காசு என்ன, இருக்கும் போது இல்லாதது,,
   தொடர்கிறேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் - VGK

   நீக்கு
 21. மீண்டும் இரசித்தேன்! நெஞ்சம் கனத்தது!

  பதிலளிநீக்கு