About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, November 11, 2011

தை வெள்ளிக்கிழமை

தை வெள்ளிக்கிழமை


[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்
                                      -oOo-   


    ருக்குவுக்கு இடுப்புவலி எடுத்து விட்டது. 

ஸ்பெஷல் வார்டிலிருந்து தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறார்கள். பெற்ற தாய் போல பார்த்துக் கொள்ள டாக்டர் மரகதம் இருக்கிறார்கள். சுகப் பிரஸவமாகி சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை மட்டும் தான் ருக்குவுக்கு.

ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயான ருக்கு, இந்த ஐந்தாவது குழந்தை தேவையில்லை என்று சொல்லி டாக்டர் மரகதத்திடம் வந்தவள் தான், ஒரு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு.

“ஏம்மா .... சற்று முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாதா? இப்போது தான் எவ்வளவோ தடுப்பு முறைகள் இருக்கே! கருக்கலைப்பு செய்து உடம்பைக் கெடுத்துக்கணுமா?” என்றாள் டாக்டர்.

ருக்கு கடந்த இரண்டு வருடங்களாக, டாக்டர் மரகதம் வீட்டில் சமையல் வேலை செய்து வருபவள். அவள் கணவன் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்ப்பவர். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குள் இரண்டு பெண், இரண்டு பிள்ளையென நான்கு குழந்தைகள். இது ஐந்தாவது பிரஸவம்.

ஒரே ஒரு முறை ருக்குவின், தங்கவிக்ரஹம் போன்ற நான்கு குழந்தைகளையும் டாக்டர் மரகதம் பார்க்க நேர்ந்த போது, அவர்களின் அழகு, அடக்கம், அறிவு, ஆரோக்கியம் அனைத்தையும் கவனித்து தனக்குள் வியந்து போய் இருந்தார்கள்.

ஐந்தாவதாக இருப்பினும் நல்ல நிலையில் உருவாகியுள்ள இந்தக் குழந்தையை கருக்கலைப்பு செய்ய மனம் ஒப்பவில்லை, டாக்டர் மரகதத்திற்கு.

மேலும் டாக்டருக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டு, டாக்டரிடம் ஏதாவது நல்ல குழந்தையாக ஏற்பாடு செய்யச் சொல்லிக் கூறியிருந்தனர், அந்த தம்பதியினர்.

ருக்குவிடம், டாக்டர் மரகதம் இந்த விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்கள்.

“உனக்கு வேண்டாத இந்தக் குழந்தையை, இப்போது எதுவும் செய்யாமல், நீ பெற்றெடுத்த பிறகு என்னிடம் கொடுத்து விடேன். பிரஸவம் நல்லபடியாக நடக்கும் வரை, நானே உன்னையும் உனக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும், போஷாக்காக கவனித்துக்கொள்கிறேன்.” என்று கூறி ஒருவாறு ருக்குவையும், அவள் மூலமே அவள் கணவனையும், சம்மதிக்க வைத்து விட்டார், அந்த டாகடர்.

மேற்கொண்டு குழந்தை பிறக்காமல் இருக்க பிரஸவத்திற்குப் பின், கருத்தடை ஆபரேஷன் செய்வதாகவும், பேசித் தீர்மானித்து வைத்தனர்.

அன்று ருக்கு வேண்டாமென்று தீர்மானித்த குழந்தை பிறக்கும் நேரம், இப்போது நெருங்கி விட்டது.

ருக்கு பிரஸவ வலியின் உச்சக்கட்டத்தில் துள்ளித் துடிக்கிறாள். மிகப்பெரிய அலறல் சப்தம் கேட்கிறது.

பட்டு ரோஜாக்குவியல் போல பெண் குழந்தை பிறந்து விட்டது. தாயும் சேயும் நலம். டாக்டர் மரகதம் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் தன் கடமையைக் கச்சிதமாக முடித்ததும், கை கழுவச் செல்கிறார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் செல்கின்றனர். வாசலில் கவலையுடன் ருக்குவின் கணவர். டாக்டருக்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது.

“உங்கள் விருப்பப்படியே பெண் குழந்தை தான். யெஸ்...யெஸ், ஜோராயிருக்கு. ஷ்யூர், ஐ வில் டூ இட். இப்போதே கூட குழந்தையைப் பார்க்க வரலாம். வக்கீலுடன் பேசி லீகல் டாகுமெண்ட்ஸ் ரெடி செய்து வைச்சுடுங்கோ. நான் போன் செய்த பிறகு புறப்பட்டு வாங்கோ” என்றார்டாக்டர்.

ருக்குவை தியேட்டரிலிருந்து ஸ்பெஷல் ரூமுக்கு கூட்டி வந்து படுக்க வைத்து, அருகே தொட்டிலில் குழந்தையைப் போடுகிறார்கள்.

ருக்குவின் கணவரும் உள்ளே போகிறார். பெற்றோர்கள், பிறந்த குழந்தையுடன் கொஞ்ச நேரமாவது கொஞ்சட்டும். மனம் விட்டுப்பேசி, மனப்பூர்வமாக குழந்தையைத் தத்து கொடுக்கட்டும் என்று ஒரு மணி நேரம் வரை டாக்டர் அவகாசம் தந்திருந்தார்.

பிறகு டாக்டர் ருக்குவை நெருங்கி ஆறுதலாக அவள் தலையைக் கோதி விட்டார்.

“என்னம்மா, பரிபூரண சம்மதம் தானே. அவங்களை வரச் சொல்லவா? உன் வீட்டுக்காரர் என்ன சொல்கிறார்? உன் வீட்டுக்காரர் தனியே ஒரு ஹோட்டல் வைத்து, முதலாளி போல வாழவேண்டி, நியாயமாக எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அவர்கள் அதைத் தந்து விட நிச்சயம் சம்மதிப்பார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

மேலும் உனக்குப் பிறந்த இந்தக் குழந்தையை மிகவும் நன்றாக, வசதியாக வளர்த்து, படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

இன்றைக்கே இப்போதே உடனடியாக முடிவெடுத்து விட்டால் தான் உங்களுக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது ” என்றார் டாக்டர்.

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.

“எங்களை தயவுசெய்து மன்னிச்சுடுங்க டாக்டர். நாங்க இந்தக் குழந்தையை மட்டும் கொடுக்க விரும்பலை” என்றனர்.

சிரித்துக்கொண்ட டாகடர், ”அதனால் பரவாயில்லை. ஏற்கனவே நீங்க இரண்டு பேரும் ஒத்துக்கொண்ட விஷயம் தானே என்று தான் கேட்டேன். திடீரென்று ஏன் இப்படி மனசு மாறினீங்க? அதை மட்டும் தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்” என்றார் டாக்டர்.

ருக்கு வெட்கத்துடன் மெளனமாகத் தலையைக் குனிந்து கொள்ள, அவள் கணவன் பேச ஆரம்பித்தான்.

“இன்று ‘தை வெள்ளிக்கிழமை’ டாக்டர். அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்களது அஞ்சாம் பெண்ணை கொடுக்க மனசு வரலை, டாக்டர்” என்றார்.

இது போலவும் ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்த்த டாக்டர் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே போனார், தன் குடும்ப நண்பருக்குப் போன் செய்து, அவர்களை புறப்பட்டு வராமல் தடுக்க.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-


18. கேட்டை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:

அருள்மிகு வரதராஜப்பெருமாள் 
திருக்கோயில் 
[பெருந்தேவி தாயார்] 

இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து 
கும்பகோணம் செல்லும் வழியில் 
13 கி.மீ., தூரத்திலுள்ள 
பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் 
இருந்து அரை கி.மீ., தூரத்தில் 
கோயில் உள்ளது..
18/27
31 comments:

 1. எத்தனை பிள்ளை பெற்றாலும்
  இடுப்பு வலியெடுக்க பெற்றதை
  கொடுக்க மனம் வருமா ?
  வித்தியாசமான சிந்தனை
  யதார்த்தமான முடிவு வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 2. ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்களது அஞ்சாம் பெண்ணை கொடுக்க மனசு வரலை, டாக்டர்” என்றார்./

  நிதர்சனக் கதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. கேட்டை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:
  அருள்மிகு வரதராஜப்பெருமாள்
  திருக்கோயில்
  [பெருந்தேவி தாயார்]/

  பயனுள்ள தகவலுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. வித்தியாசமான கதை.சுவாரஸ்யமாக கொண்டு சென்று அருமையாக முடித்துள்ளீர்கள் வாழ்த்துகக்ள்!

  ReplyDelete
 5. பிரசவ வைராக்கியம்ன்னு இதையும் சொல்லலாம் போலிருக்கே ;-)

  ReplyDelete
 6. அருமையான கதை மற்றும் முடிவு

  ReplyDelete
 7. ரசித்தேன். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. தை வெள்ளிக்கிழமை என்பது ஒரு காரணம் மட்டுமே. அது இல்லையென்றால் வேறு காரணம் சொல்லி மறுத்திருப்பார்கள். அருமையான கதை சார்.

  ReplyDelete
 9. ஐயா
  வை கோ நான் அன்றே
  சொன்னேன் நீங்கள்
  வை கோ மட்டுமல் கதை கோ
  என்று
  அது மேலும் உண்மை
  யாகிறது
  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. முன்பு படித்திருந்தாலும் தற்போதும் ரசித்தேன்

  ReplyDelete
 11. கதை ஹைவேய்சில் போவது போல விர்ரென்று போனது..

  ReplyDelete
 12. /முன்பு படித்திருந்தாலும் தற்போதும் ரசித்தேன்/

  ReplyDelete
 13. அதானே.. என்ன கஷ்டம் இருந்தாலும், பெற்ற குழந்தையை தத்துக்கொடுக்க [விற்க] எந்தத் தாய்க்கு மனசு வரும்... வெகுசிலருக்கே அல்லவா...

  நல்ல கதை...

  ReplyDelete
 14. எத்தனை குழந்தை பெற்றாலும் பெற்ற தாய்க்கு குழந்தையை தூக்கி கொடுக்க மனம் வராது.அருமையான கதை

  ReplyDelete
 15. ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; //

  நான் அஞ்சாவது பொண்ணு .

  இதை கேட்டதும் மனதுக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது.

  கதை மிக அருமை.

  ReplyDelete
 16. என் நட்சத்திரத்திற்கு வழிபட வேண்டிய
  கோவில் அறிந்து மகிழ்ச்சி.

  வரதராஜப் பெருமாளையும், பெருந்தேவியையும் வழிப்பட்டு விடுகிறேன்.

  நன்றி சார்.

  ReplyDelete
 17. :) எத்தனனயாவது ஆணோ பெண்ணோ அத்தனைக்கும் பழமொழிகள் உண்டு. ஏனெனில், பெற்ற மனம்! நல்ல கதை.

  ReplyDelete
 18. இதுதான் இறைவனின் விளையாட்டு வேண்டாம் என்போருக்கு அள்ளி அள்ளி தருவார் வேணும் என்போருக்கு ம்ஹூம் அருமையாக இருந்தது .வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் பாட்டு தான் நினைவுக்கு வருது.செண்டிமெண்ட் ஆன நல்ல கதை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள சகோதரி Mrs. ராதா ராணி Madam,

   வாருங்கள். வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

   2011 ஆம் ஆண்டு நான் வெளியிட்டுள்ள பல சிறுகதைகளை, இதுவரை படிக்காத, மிகுந்த ஆர்வமுள்ள என் தங்கை Mrs. ராதா ராணி அவர்கள் படித்தால், மிகவும் ரஸிப்பார்களே என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ......

   எனக்கும் இப்போது அதே “நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்” பாட்டு தான் நினைவுக்கு வருது.

   மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   என்றும் அன்புடன்,
   VGK

   Delete
 20. ஐந்தாம் பொண்ணு அதிர்ஷ்டம் என்று நினைக்கும் தம்பதியினருக்கு அதிர்ஷ்டம் வரட்டும்.

  ReplyDelete
 21. யாருக்குமௌ தன் குஞ்சு பொன் குஞ்சு தானே. கொடுக்க எப்படி மனம் வரும்?

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 20, 2015 at 11:32 AM

   //யாருக்குமே தன் குஞ்சு பொன் குஞ்சு தானே. கொடுக்க எப்படி மனம் வரும்?//

   அதானே, அழகாச் சொல்லிட்டீங்கோ. மிக்க நன்றி.

   Delete
 22. அஞ்சாவது பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது. உண்மை தானே.

  அந்தக் குழந்தையை அவர்கள் தத்து கொடுக்கக் கூடாது என்று முதலிலேயே வேண்டிக் கொண்டேன்.

  ReplyDelete
 23. எத்தர ஏள பாளன்னாலும் பெத்த புள்ளய யாருக்கும கொடுக்க மனசு ஒப்பாதுங்க.

  ReplyDelete
 24. வசதி இல்லாதவங்களுக்கே ஏன் இப்படி மழலைச்செல்வங்களை அதிகமா கொடுக்கறார் இந்த ஆண்டவர். பெற்ற குழந்தையை தத்துக்கொடுக்க யாருக்குமே மனது வராதுதான். தை வெள்ளி இல்லாம வேறு தாட்களில் பிறந்திருந்தாலும் தத்து கொடுத்திருக்க மாட்டாங்க.

  ReplyDelete
 25. // “இன்று ‘தை வெள்ளிக்கிழமை’ டாக்டர். அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்களது அஞ்சாம் பெண்ணை கொடுக்க மனசு வரலை, டாக்டர்” என்றார்.// அதுமட்டுமில்ல பொண்ண பெத்துக்குற குடுப்பினை எல்லாருக்கும் அமயுறதில்ல...பெற்றோர் மனச வெளிச்சம்போட்டு காட்டுன கதை...

  ReplyDelete
 26. ஐந்தாவது பெண் குழந்தை,,,,,,,,,,, ம்ம் நானும் மகிழ்ந்தேன், எப்படி யெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர் என்று,,

  கதை சொல்லி சென்ற விதம் மனதிற்கு பிடித்தது,,

  அவர்கள் நலமுடன் இருக்கனும். கதையானாலும்.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran December 11, 2015 at 2:18 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஐந்தாவது பெண் குழந்தை,,,,,,,,,,, ம்ம் நானும் மகிழ்ந்தேன், எப்படி யெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர் என்று,,

   கதை சொல்லி சென்ற விதம் மனதிற்கு பிடித்தது,,
   அவர்கள் நலமுடன் இருக்கனும். கதையானாலும்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம். - VGK

   Delete