About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, November 13, 2011

உண்மை சற்றே வெண்மை !உண்மை சற்றே வெண்மை

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


என் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் எப்போதும் குறைந்தபக்ஷம் ஒரு பசு மாடாவது கன்றுக்குட்டியுடன் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பசுக்களும், இரண்டு மூன்று கன்றுக்குட்டிகளும் கூட இருப்பதுண்டு.

என் அப்பாவும், அம்மாவும் பசு மாட்டை தினமும் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி, அதன் நெற்றியிலும், முதுகுப்பகுதியிலும், வால் பகுதியிலும் மஞ்சள் குங்குமம் இட்டு, தெய்வமாக அவற்றைச் சுற்றி வந்து கும்பிடுவார்கள். 

மாட்டுத்தொழுவத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருவார்கள்.  அகத்திக்கீரை, தவிடு, கடலைப்புண்ணாக்கு, வைக்கோல், அரிசி களைந்த கழுநீர், பருத்திக்கொட்டை, மாட்டுத்தீவனங்கள் என அரோக்கியமான சத்துணவுகள் அளித்து, போஷாக்காக வளர்த்து வருவார்கள். 

வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் மாட்டுக்கொட்டகையில் சாம்பிராணி புகை மணம் கமழும். பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் கோமாதாக்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.  

கன்றுக்குட்டிகளுக்கு போக மீதி எஞ்சும் பசும்பால் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பசு மாட்டு சாணத்தில் தயாராகும் விராட்டி என அனைத்துப் பொருட்களும், எங்கள் குடும்பத் தேவைக்குப்போக விற்பனையும் செய்வதுண்டு.

என் பெற்றோருக்கு, மிகவும் அழகு தேவதையாகப் பிறந்துள்ள ஒரே பெண்ணான என்னை, நன்கு செல்லமாக வளர்த்து படிக்கவும் வைத்து விட்டனர். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்க இருந்த எனக்கு சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர்.  
கல்லூரிப் படிப்பு முடிந்து வந்த எனக்கு இதுவரை மாப்பிள்ளை மட்டும் சரிவர அமையவில்லை. இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.

இப்போது மாடுகளையும் கன்றுகளையும் பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் போட்டு, பால் வியாபாரமும் சக்கைபோடு போட்டு வருகிறது. எனக்கு இன்னும் மாப்பிள்ளை தான் சரியாக அமையவில்லை.

பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. ”ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!

இப்போதெல்லாம் ஒருசில பசுக்கள் இரவில் ஒரு மாதிரியாகக் கத்தும் போது, என் பெற்றோருக்கு, என்னைப்பற்றிய கவலை மிகவும் அதிகரிக்கிறது. நல்ல வரனாக இவளுக்கு சீக்கரம் அமையாமல் உள்ளதே என மிகவும் சங்கப்பட்டு வருகின்றனர்.

சொல்லப்போனால் வாயில்லாப் பிராணிகள் எனப்படும், அந்தப் பசுக்களைப்போல (என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டி) எனக்கு வாய் இருந்தும் நான் ஒன்றும் கத்துவதில்லை.

என்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.

அன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.ஏதோ சிகிச்சைக்காக மாட்டு வைத்தியரிடம் கூட்டிச்செல்கிறார் என்று
 நினைத்துக் கொண்டேன். சிகிச்சை முடிந்து வந்த அது பரம ஸாதுவாகி 
விட்டது. அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும் 
குடிகொண்டிருந்தது. 


இப்போதெல்லாம் அது இரவில் கத்துவதே இல்லை.மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் 
பேசிக்கொண்டார்கள். அந்தப் பசுமாட்டைப் பார்த்த எனக்கு, ஏதோ 
புரிந்தும் புரியாததுமாகவே இருந்து வந்தது.சென்ற வாரம் என் அப்பாவைத்தேடி ஆறுமுகக்கோனார் என்பவர் 
வந்திருந்தார். அவருடன் ஒரு பெரிய பசுமாடும், கன்றுக்குட்டியும் 
வந்திருந்தன. “காராம் பசு” என்று பேசிக்கொண்டனர். உடம்பு பூராவும் 
ஆங்காங்கே நல்ல கருப்பு கலராகவும், இடைஇடையே திட்டுத்திட்டாக 
வெள்ளைக்கலராகவும், பார்க்கவே வெகு அழகாக, அவைகள் இரண்டும் 
தோற்றமளித்தன.அவைகளைப்பார்த்த என் அப்பாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டன. 
அம்மாவிடம் போய் ஏதோ ஆலோசனை செய்தார். 
நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்தக்காராம்பசுவும் 
கன்றுக்குட்டியும் அப்பாவுக்குச் சொந்தமாகி விடுமாம்.
“நாற்பதாயிரம் ரூபாயா?” மிகவும் விலை ஜாஸ்தியாக உள்ளதே, என்று 
என் அம்மா வியந்து போனாள்.

“ஒரு வேளைக்கு பத்து லிட்டருக்குக் குறையாமல் பால் கறக்குமாம்; 
நாலு அல்லது ஐந்து மாதங்களில் போட்ட பணத்தை எடுத்து விடலாம்; 
காராம் பசு என்றால் சும்மாவா? அதன் உடம்பில் உள்ள 
இரட்டைக்கலருக்கே மதிப்பு அதிகம் தான்” என்று அப்பா அம்மாவிடம் 
சொல்வது, என் காதிலும் விழுந்து தொலைத்தது.இப்போது இந்த மாட்டை ஆசைப்பட்டு, இவ்வளவு பணம் போட்டு 
வாங்கிவிட்டால், திடீரென என் கல்யாணம் குதிர்ந்து வந்தால், 
பணத்திற்கு என்ன செய்வது என்றும் யோசித்தனர் என் பெற்றோர்கள். 
கல்யாணச் செலவுகளைத்தவிர, நகைநட்டு, பாத்திரம் பண்டமெல்லாம் 
எப்பவோ சேகரித்து வைத்து விட்டாள், மிகவும் கெட்டிக்காரியான என் 
தாய்.


என்னைப்போலவே தளதளவென்று இருக்கும் இந்தக் காராம்பசுவுக்கு 
உடம்பிலும், மடியிலும் வெவ்வேறு இரண்டு கலர்கள் இருப்பதால் 
மார்க்கெட்டில் மெளசு ஜாஸ்தியாக உள்ளது.

ஆனால் அதே போல எனக்கும், என் உடம்பின் அதே பகுதியில், சற்றே 
ஒரு ரூபாய் நாணயமளவுக்கு, வெண்மையாக உள்ளது. அதுவே எனக்கு 
சுத்தமாக மார்க்கெட்டே இல்லாமல் செய்து, என் திருமணத்திற்கு 
இடையூறாக இருந்து வருகிறது.

இந்தக் காராம்பசு, தன் இயற்கை நிறத்தை ஆடை ஏதும் போட்டு 
மறைத்துக் கொள்ளாமல், உண்மையை உண்மையாக வெளிப்படுத்தும் 
பாக்யம் பெற்றுள்ளதால், அதற்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உள்ளது.

நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து என் உடலையும், 
அந்தக்குறையையும் நான் மறைக்க வேண்டியுள்ளது. என்னுடைய 
பொதுவான, மேலெழுந்தவாரியான, உருவ அழகைப்பார்த்து, மிகுந்த 
ஆர்வமுடன் பெண் கேட்டு வந்து போகும், பிள்ளையைப்பெற்ற 
மகராசிகளிடம், மிகுந்த கூச்சத்துடன் இந்த ஒரு சிறிய விஷயத்தை 
உள்ளது உள்ளபடி உண்மையாக கூற வேண்டியுள்ள, சங்கடமான 
துர்பாக்கிய நிலையில் இன்று நாங்கள் உள்ளோம்.

உண்மையை இப்போது மறைத்துவிட்டு, பிறகு இந்த ஒரு மிகச்சிறிய 
வெண்மைப் பிரச்சனையால், என் இல்வாழ்க்கை கருமையாகி 
விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்.

”ஆனால் ஒன்று; என்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் இனி பிறந்து 
வரப்போவதில்லை;   ஏற்கனவே எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து 
கொண்டு தான் இருக்க வேண்டும்; அவனை நமக்கு அந்த பகவான் தான் 
சீக்கரமாக அடையாளம் காட்ட வேண்டும்”, என்று என் அம்மா 
தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தானும் ஆறுதல் அடைந்து, 
என்னையும் ஆறுதல் படுத்துவதாக நினைத்து வருகிறாள்.

அந்தக்காளை இந்தக் காராம்பசுவை விரும்பி ஏற்றுக்கொள்ள பிராப்தம் 
வருவதற்குள், பட்டதாரியான எனக்கு, “முதிர்க்கன்னி” என்ற 
முதுகலைப்பட்டமளிப்பு விழா நடந்தாலும் நடந்து விடலாம்.

நான் என்ன செய்வது? 
காராம்பசுவாகப் பிறக்காமல், 
கன்னிப்பெண்ணாகப் பிறந்து விட்டேனே!-o-o-o-o-o-o-o-o-o-o-

முற்றும் 

-o-o-o-o-o-o-o-o-o-o-


ஓர் முக்கிய அறிவிப்பு
இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தின் என் அடுத்த படைப்பு 


இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும்.


இறுதிப்பதிவாக HAPPY இன்று முதல் HAPPY என்ற தலைப்பில்


நான் என்னுடைய மகிழ்ச்சிகளை உங்கள் எல்லோருடனும் 


பகிர்ந்து  கொள்ள இருக்கிறேன். 


அந்தப்பதிவு இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும்.


காணத்தவறாதீர்கள்.
அன்புடன்
vgk

26. உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்: 

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் 
திருக்கோயில் 
[பிருகன்நாயகி அம்மன்] 

இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 
40 கி.மீ., தூரத்திலுள்ள 
ஆவுடையார்கோவில் சென்று, 
அங்கிருந்து திருப்புவனவாசல் 
செல்லும் வழியில் 
21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  

மதுரையில் இருந்து செல்பவர்கள், 
அறந்தாங்கி சென்று, அங்கிருந்து 
திருப்புவனவாசல் செல்லும் 
பஸ்களில் சென்றால் தீயத்தூர் 
என்னும் இடத்தில் உள்ளது.  
120 கி.மீ., தூரம்.


26/27

30 comments:

 1. ஒன்றை ஒன்றுக்கு சிறப்பாகவும்
  அதையே மற்றோன்ற்க்கு இழிவாகவும் காண்பது
  நமது குணக்கேடே ஒழிய இயற்கையின் பாதகமில்லை
  அருமையான கதை.வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 2. இன்றைய சூழலில் பசுக்கள் , காராம்பசுவானாலும் வேறு எதுவானாலும் தன் இணைக்கு எந்த ஒரு கண்டிஷனையும் வைத்துக் கொள் வதில்லை. ஆனால் மனிதர்கள் அப்படியில்லையே. கண்டிஷன் போடாத துணையைத் தேடிக் கண்டுபிடிக்கக் காலமாகலாம். பொறுத்துக் கொள்ள வேண்டியதுதானே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மீண்டும் ரசித்தேன் நட்சத்திர வழிபாட்டு தளத்துடன்.

  ReplyDelete
 4. த.மணம். 4

  உங்கள் மகிழ்ச்சியான விசியங்களை படிக்க காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 5. எனக்குப் பிடித்த மற்றும் ஒரு மீள்பதிவு.மீண்டும் ரசித்தேன்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 6. அருமையான கதை சார். சிறிய குறைகளை பெரிதுபடுத்துவது தவறு.

  ReplyDelete
 7. மனித உறவுகளும் market value நிர்ணயிக்கும் உலகம்! நல்ல பதிவு.

  ReplyDelete
 8. நான் என்ன செய்வது?
  காராம்பசுவாகப் பிறக்காமல்,
  கன்னிப்பெண்ணாகப் பிறந்து விட்டேனே!

  முத்தாய்ப்பான முத்தான கண்ணீர்முத்துக்களால் கோர்க்கப்பட்ட கனமான கதை.

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய கோயில்:
  அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர்
  திருக்கோயில்
  [பிருகன்நாயகி அம்மன்] /

  பயனுள்ள தகவல். பாராட்டுக்கள்..

  ReplyDelete
 10. உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய கோயில்:
  அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர்
  திருக்கோயில்
  [பிருகன்நாயகி அம்மன்] /

  பயனுள்ள தகவல். பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. மீள்பதிவானாலும் நல்ல பதிவு.
  வெற்றிகரமாய் முடிக்கப் போகிறீர்கள்.. ஹேப்பி..

  ReplyDelete
 12. time difference ஆகவே தாமதமாகி விட்டது .
  மீண்டும் படித்து ரசித்தேன் .பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. நான் மிகவும் ரசித்த ஒரு மீள்பதிவு இது!

  ReplyDelete
 14. திரு பாலசுப்ரமணியன் கருத்தே என்னுதும். மாடுகளுக்கு வித்தியாசம் பார்க்கத் தெரியாது.

  எனக்குத் தெரிந்து இது போல இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

  ReplyDelete
 15. சின்னச் சின்ன விஷயத்தை பெரிதாக்குவதால்
  வரும் விளைவுகள் உறவுகளை பாதிக்கும் விதத்தை
  அழகாய் சொல்லியிருகீங்க ஐயா..
  அருமை...

  ReplyDelete
 16. மிகவும் நல்ல கதை... வாழ்த்துகள்...

  ReplyDelete
 17. நிறவேறுபாடு மாடுகளைக் கூட
  பாதிப்பதில்லை ஆனால்
  மனிதன் தான மாறுபடுகிறான்
  பாபம் அந்தபெண்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. இந்த என் சிறுகதைப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் கூறி பாராட்டி, வாழ்த்தி, சிறப்பித்துள்ள அனைவருக்கும் தனித்தனியே நன்றி கூறி

   “HAPPY இன்று முதல் HAPPY” என்று ஒரு தனிப்பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

   அதற்கான இணைப்பு இதோ:
   http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

   என்றும் அன்புடன் தங்கள்,
   VGK

   Delete
 18. சூப்பர் கதை. சங்கடமா இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள பட்டு.

   தங்களின் அன்பான வருகைக்கும், ‘சூப்பர் கதை’ என்ற பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /சங்கடமா இருந்தது./

   ஆம் எனக்கு இதை வெளியிடவும் மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது.

   அன்புடன்,
   VGK

   Delete
 19. வாயில்லா ஜீவன்களிடத்து காட்டும் பரிவில் நூற்றில் ஒரு பங்கு கூட வாயுள்ள ஜீவன்களிடத்தில் காட்டப்படாதது மனதைப் பிழிகிறது.

  ReplyDelete
 20. மாட்டின் உணருவு&உணர்சி களை கவனித்து செயல் படுபவர்கள் வீட்டில் இருக்கும் பெண்ணின் உணர்வு களை ஏன் புரிஞுசுக்க மாட்ராஙுக?

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 20, 2015 at 6:37 PM

   //மாட்டின் உணர்வு & உணர்ச்சிகளை கவனித்து செயல் படுபவர்கள் வீட்டில் இருக்கும் பெண்ணின் உணர்வுகளை ஏன் புரிஞ்சிக்க மாட்ராங்க?//

   அவர்கள் புரிந்துகொண்டுதான் உள்ளார்கள். என்னவோ பாவம் அவளுக்கு இன்னும் ப்ராப்தம் வராமல் உள்ளது.

   திரும்பத்திரும்ப உண்மையையே பேசி வருவதால், அவர்களின் நிலைமை இதுவரை துரதிஷ்டமாகவே அமைந்துள்ளது. மேற்கொண்டு என்ன செய்யலாம், எப்படிச்செய்யலாம்ன்னு நீங்க சொல்லுங்கோ !

   Delete
 21. மாட்டின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவங்க அந்த மங்கையின் உணர்வுகளையும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்குமே.

  ReplyDelete
 22. மாட்டுகிட்ட காட்டுற அன்பை மக கிட்டயும் காட்டுவாங்கதான். அவுகளுக்கு சரியான நேரம் அமயல அதா.

  ReplyDelete
 23. முதலில் படிச்சப்பவோ ரொம்ப படிச்சகதைதான் மறுபடி படிக்கவும் அதே சவாரசியம் குறையவேஇல்லை.

  ReplyDelete
 24. உண்மை சற்றே வெண்மை...எனக்கு உணர்த்தியது வாத்தியார் மனத்தின் மென்மை...எனக்கு ஏற்படுத்தியது மேன்மை...கதையோ அருமை...

  ReplyDelete
 25. மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு, கதை அருமை,

  எனக்கு இது தான் ஞாபகம் வந்தது, பெண்கள் பெண் குழந்தைப் பிறந்தாள் அய்யோ என்றும், மாட்டிற்கு பெண் கன்று என்றால் மகிழ்ச்சியும்,,,,,

  அருமை அருமை ஐயா,,,,

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran December 11, 2015 at 1:24 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு, கதை அருமை,//

   மிக்க மகிழ்ச்சி.

   //எனக்கு இது தான் ஞாபகம் வந்தது, பெண்கள் பெண் குழந்தைப் பிறந்தாள் அய்யோ என்றும், மாட்டிற்கு பெண் கன்று என்றால் மகிழ்ச்சியும்,,,,,//

   ஆம் .... இதுதான் உலகம். கடேரி (பெண்) கன்னுக்குட்டி என்றால் மாடு வளர்ப்பவரும் மிகவும் மகிழ்வார். :)

   //அருமை அருமை ஐயா,,,,//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றீங்க - VGK

   Delete
 26. மீள்பதிவாயினும் மீண்டும் இரசித்தேன்!

  ReplyDelete