About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, February 9, 2011

நகரப் பேருந்தில் ஒரு கிழவி

டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந்து நிலையத்தை விட்டுக் கிளம்பி விட்டது.

“புளியந்தோப்புக்கு ஒரு டிக்கட் கொடுப்பா” கிழவி தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து காசு எடுத்து நடத்துனரிடம் நீட்டுகிறாள். அவள் மடிமீது ஏதோ சற்றே பெரிய சாக்கு மூட்டை வேறு.

“வண்டி புளியந்தோப்புக்குப் போகாதும்மா. கேட்டுக்கிட்டு ஏற வேண்டாமா?” ரெண்டு ரூபாய் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு, காசைக் கிழவியின் கையிலிருந்து வெடுக்கெனப் புடுங்கி தன் பையில் போட்டுக்கொண்டு “மார்க்கெட்டில் இறங்கி நடந்து போம்மா” என்கிறார் நடத்துனர்.

“அய்யா, அப்பா, வண்டியக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுய்யா, மார்க்கெட்டிலே இறங்கினா புளியந்தோப்புக்குப் போக நான் ரொம்ப தூரம் நடக்கணுமேப்பா, வெய்யிலிலே இந்த வயசானக் கிழவி மேல இரக்கம் காட்டுப்பா, கையிலே வேறு சில்லறைக் காசும் இல்லப்பா” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு, எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறாள் அந்தக் கிழவி.

”பேசாமக் குந்தும்மா; சரியான சாவு கிராக்கியெல்லாம் பஸ்ஸிலே ஏறி, என் உயிரை வாங்குது” என்று சீறுகிறார் நடத்துனர். அவர் கவனம் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் போட்டு காசு வசூலிப்பதில் திரும்புகிறது.

கிழவிக்கு வயது எண்பதுக்குக் குறையாது. நல்ல பழுத்த பழம் போன்றவள். தோல் பூராவும் ஒரே சுருக்கம் சுருக்கமாக உள்ளது. வெய்யிலின் கடுமையில் அவள் முகம் மிளகாய்ப் பழம் போல சிவந்து விட்டது.

அதற்குள் பஸ் மார்க்கெட்டை நோக்கி பாதி தூரம் சென்று விட்டது. பஸ்ஸின் ஆட்டத்தில் நின்று கொண்டிருந்த கிழவி அவளையறியாமலேயே மீண்டும் தன் இருக்கையில் தள்ளப்படுகிறாள்.

அவள் வாய் மட்டும் ஏதோ “காளியாத்தா ... மாரியாத்தா” ன்னு புலம்பிக் கொண்டே இருந்தது.

கிழவியைப் பார்த்த எனக்குப் பாவமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.

தள்ளாத வயதில், கடுமையான வெய்யிலில், கையில் சுமையுடன் பஸ்ஸில் ஏறி, சாமர்த்தியமாக அதுவும் தன்னந்தனியாக பயணம் செய்கிறாளே என்று எனக்குள் வியப்பு.

புளியந்தோப்பு வழியாக இந்த பஸ் போகுமா என்று ஒரு வார்த்தை யாரிடமாவது கேட்டு விட்டு அவள் ஏறியிருக்கலாம் தான். படித்த விபரம் தெரிந்தவர்களுக்கே சமயத்தில் இதுபோல தவறு ஏற்படக் கூடும். பாவம் வயசான இந்தக் கிழவி என்ன செய்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.

மார்க்கெட் நெருங்கும் முன்பே, போக்குவரத்து ஸ்தம்பித்து பஸ் நிற்க ஆரம்பித்தது. வரிசையாக பேருந்துகளும், லாரிகளும், கை வண்டிகளும், ஆட்டோக்களுமாக கண்ணுக்கு எட்டியவரை நின்று கொண்டிருந்தன.

யாரோ ஒரு மந்திரி, எங்கோ ஒரு பகுதியில், மக்கள் குறை கேட்க வரப் போவதாகவும், அவரின் காரும், அவரின் ஆதரவாளர்களின் கார்களும், பாதுகாப்பு போலீஸ் வண்டிகளும் வரிசையாகப் போன பின்பு தான், போக்கு வரத்து சகஜ நிலைக்குத் திரும்புமாம்.

வெகு நேரமாக இப்படி ட்ராஃபிக் ஜாம் ஆகியுள்ளதாக பேசிக்கொண்டனர், பஸ் அருகில் நின்ற ஒரு சில கரை வேட்டி அணிந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள்.

இங்கு டிராஃபிக் ஜாம் ஆகி மக்கள் தவித்து நிற்கும் பகுதிக்கு அந்த மந்திரி குறை கேட்க நடந்தே வந்தாரானால், அவரை இங்குள்ள மக்கள் கொதித்துப்போய் ஜாம் செய்து விடுவார்கள், என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

கீழே இறங்கி நிலமையை ஆராய்ந்த நடத்துனர், ஓட்டுனரிடம் வண்டியை சீக்கிரமாக ரிவேர்ஸ்ஸில் எடுக்கச் சொல்லி விசில் ஊத ஆரம்பித்தார். ”ரைட்டுல கட் பண்ணு. இந்த டிராஃபிக் ஜாம் இப்போதைக்கு கிளியர் ஆகாது போலத் தோன்றுகிறது. பேசாமல் இந்த டிரிப் மட்டும் புளியந்தோப்பு வழியாகப் போய் விடலாமய்யா” என்றார்.

கிழவியின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று நினைத்து என்னுள் மகிழ்ந்து கொண்டேன்.

ஆனால் புளியந்தோப்புக்கு சற்று முன்னதாகவே பஸ் எஞ்சினில் ஏதோ கோளாறு ஆகி வண்டி நிறுத்தப்பட்டது. எஞ்சினைத் திறந்து பார்த்த ஓட்டுனர், நடத்துனரிடம் “ரேடியேட்டருக்குத் தண்ணி ஊத்தணும்” என்றார். ரேடியேட்டரிலிருந்து ஒரே புகையாக வந்து கொண்டிருந்தது.

“நடுக்காட்டில் நிறுத்தினா தண்ணிக்கு எங்கேய்யா போவது?” நடத்துனர் புலம்ப ஆரம்பித்தார்.

இது தான் சமயம் என்று தன் பெரிய மூட்டையுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய கிழவி, “இதோ தெரியுதே குடிசை. அது தானய்யா என் வீடு. என் வீட்டுக்கு வாப்பா. வேண்டிய மட்டும் தண்ணி தாரேன்” என்று கூறினாள்.

இரண்டு குடம் தண்ணீர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சொம்பு நிறைய நீர்மோர் கொண்டு வந்து “வெய்யிலுக்கு குளுமையாய் இருக்கும், குடிச்சுட்டுப் போப்பா” என்றாள், அந்த நடத்துனரிடம்.

மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.

“நல்லா மவராசனா இருப்பா” என்று வாய் நிறைய வாழ்த்தினாள், அந்தக் கிழவி.

பிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்தும், அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது.

-o-o-o-o-o-o-

36 comments:

 1. //அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது//


  என் மனதிலும்.

  ReplyDelete
 2. பாட்டி கொடுத்த மோரின் உப்போ உறைப்போ
  கொஞ்சமாவது நடத்துனர் நெஞ்சில்
  சேர்ந்த்திருக்குமா?
  சேர்ந்திருந்தால் அனைவருக்கும் நல்லது
  ஏன் அவருக்குமே கூட நல்லது
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. மனிதம். அதற்கு தெய்வத்தின் பரிசு...

  ReplyDelete
 4. கிழவிக்கு மட்டுமான ஒரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவள் கேட்காலேயே நிறைவேறியது.

  எல்லோருக்குமான ஒரு பிரச்சனை கேட்காமலேயே கிழவியால் தீர்த்துவைக்கப்பட்டது.

  பலரால் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. சிலரால் பிரச்சனைகள் தீர்கின்றன.

  என்றைக்கும் தேவையான ஒரு கதை கோபு சார்.அற்புதம் படைக்கின்றன உங்கள் விரல்கள்.

  ReplyDelete
 5. மனித நேயம் என்பதை இழந்து கொண்டே இருக்கிறோம். பல நடத்துனர்கள் இப்படி எல்லோரிடமும் எரிந்து விழுவதைக் கண்டிருக்கிறேன். அவர் மட்டுமல்ல, செய்யும் வேலையில் பிடிப்பு இல்லாத எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள்.

  உடலில் சுருக்கம் இருந்தாலும் மனதில் இல்லை அந்த மூதாட்டிக்கு!

  நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. திக்கற்றவருக்கு தெய்வமே துணை!

  ReplyDelete
 7. நம்மில் பலரும் இப்படித் தான் முதலில் எதையாவது சொல்லி விட்டு பிறகு வருத்தப்படுவோம். கடவுள் அருள் புரிந்து பேருந்தை புளியந்தோப்புக்கு வரவழைத்து நடத்துனருக்கும் பாடம் புகட்டி விட்டார்.

  ReplyDelete
 8. nijamaa nadanthathaa???

  ippadiyum sila per irukkaarkalaa???

  antha paattikku thalai vanangugiren! ippadich chila perinaal thaan, indru varai intha naattaip patri pugazh pesikkondiruppavarkalin vaarthaiyil sirithenum unmai enji irukkirathu polum...

  ReplyDelete
 9. raji said...//அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது//
  //என் மனதிலும்.//

  அப்போ தங்கமான மனது தான், உங்களுக்கும் !

  Ramani said...//பாட்டி கொடுத்த மோரின் உப்போ உறைப்போ கொஞ்சமாவது நடத்துனர் நெஞ்சில்
  சேர்ந்த்திருக்குமா? சேர்ந்திருந்தால் அனைவருக்கும் நல்லது ஏன் அவருக்குமே கூட நல்லது. நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் கொடுக்கும் உற்சாகத்திற்கும் என் அன்பான நன்றிகள் சார்.

  ஸ்ரீராம். said..//மனிதம். அதற்கு தெய்வத்தின் பரிசு..// அழகாகச் சொன்னீர்கள் ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்.

  சுந்தர்ஜி said...
  //கிழவிக்கு மட்டுமான ஒரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவள் கேட்காலேயே நிறைவேறியது.
  எல்லோருக்குமான ஒரு பிரச்சனை கேட்காமலேயே கிழவியால் தீர்த்துவைக்கப்பட்டது.
  பலரால் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. சிலரால் பிரச்சனைகள் தீர்கின்றன.

  என்றைக்கும் தேவையான ஒரு கதை கோபு சார்.அற்புதம் படைக்கின்றன உங்கள் விரல்கள்.//

  தங்களின் தலைசிறந்த ஆய்வறிக்கை எனக்கு ரொம்பப் பிடிக்குது + உற்சாகம் தருகிறது,
  மிக்க நன்றி, சார்.

  வெங்கட் நாகராஜ் said...
  //மனித நேயம் என்பதை இழந்து கொண்டே இருக்கிறோம். பல நடத்துனர்கள் இப்படி எல்லோரிடமும் எரிந்து விழுவதைக் கண்டிருக்கிறேன். அவர் மட்டுமல்ல, செய்யும் வேலையில் பிடிப்பு இல்லாத எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள்.

  உடலில் சுருக்கம் இருந்தாலும் மனதில் இல்லை அந்த மூதாட்டிக்கு! நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.//

  செய்யும் வேலையில் எல்லோருக்குமே பிடிப்பு வேண்டும் என வெகு அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள், வெங்கட். என் நன்றிகள்.

  middleclassmadhavi said...
  // திக்கற்றவருக்கு தெய்வமே துணை!//
  நூற்றுக்கு நூறு உண்மை தான், மேடம்.

  கோவை2தில்லி said...
  //நம்மில் பலரும் இப்படித் தான் முதலில் எதையாவது சொல்லி விட்டு பிறகு வருத்தப்படுவோம். கடவுள் அருள் புரிந்து பேருந்தை புளியந்தோப்புக்கு வரவழைத்து நடத்துனருக்கும் பாடம் புகட்டி விட்டார்.//

  சரியாகச் சொன்னீர்கள், மேடம்.

  Matangi Mawley said...
  //nijamaa nadanthathaa??? ippadiyum sila per irukkaarkalaa???
  antha paattikku thalai vanangugiren! ippadich chila perinaal thaan, indru varai intha naattaip patri pugazh pesik- kondiruppavarkalin vaarthaiyil sirithenum unmai enji irukkirathu polum...//

  கதை என் கற்பனைதான் என்றாலும் இப்படியும் சில பேர் ஆங்காங்கே இன்றும் உள்ளனர் என்பதை நான் நன்றாகவே அறிவேன்.

  காலம் சென்ற என் அத்தையின் மகள் (அவர்களே என் மாமியாரும் கூட) இதே போல எல்லோரிடமும் மிகவும் நல்ல இரக்க குணம் உடையவர். எல்லோரிடமும் அன்பாக, பிரியமாக இருந்து எல்லோருக்கும் தன்னால் ஆன சிறு சிறு உதவிகள் செய்து அன்பினால் அனைவரையும் வென்றவர். அவர் மறைந்து பல வருஷங்கள் ஆகியும், இன்றும் அந்த கிராமமே அவரின் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது.

  இத்தகைய தன்னலமற்ற ஒரு சில தியாக மனப்பான்மை கொண்டவர்களால் தான், தாங்கள் சொல்வது போல, நம் நாட்டைப் பற்றிய புகழ் இன்றும் பேசப்படுகிறது. அது என்றுமே பேசப் பட்டுக் கொண்டே தான் இருக்கும். அதில் நாம் சந்தேகமே பட வேண்டாம்.

  ”நல்லவராக ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும் அவரை உத்தேசித்து அந்த ஊரில் உள்ள எல்லோருக்குமே மழை பெய்யும்”, என்கிறார் திருவள்ளுவர்.

  ---------------------------------------

  வருகை தந்து பாராட்டியுள்ள அனைத்து உடன் பிறப்புகளுக்கும், மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 10. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பதை நிருபிக்கும் நிகழ்வு பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. என் வலைப்பூவுக்கு இன்று புதிதாக வருகை தந்து கருத்துக்கள் கூறியுள்ள திரு. தங்கராசு நாகேந்திரன் & திரு. மதுரை சரவணன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வாருங்கள்.

  ReplyDelete
 12. எங்கள் மனதிலும் இன்னும் அந்தக் கிழவிதான்

  ReplyDelete
 13. எல் கே said...//எங்கள் மனதிலும் இன்னும் அந்தக் கிழவிதான்//
  உங்களுக்கும் தங்கமான மனசு தான்.
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 14. அற்புதமான கற்பனை. இயல்பான நடை படிக்க இடைஞ்சல் இல்லாமல் கருத்தை அழகாகப் படிப்பவரிடம் சேர்த்தது. " அப்போ வண்டி புளியந்தோப்பு வராதுன்னியே; இப்போ வந்திடுச்சி பாத்தையா?" என்று எகத்தாளமாகத்தான் சாதாரணமாக எல்லோருக்கும் கேள்வி எழும்பும். அந்த மனத்தாங்கல், சோர்வு இத்தனைக்கும் இடையேயும் அந்த வயதானவரின் தாயுள்ளத்தை வெளிப்படுத்தியமாறு கதையை அமைத்தது மேலும் சிறப்பைக் கூட்டியது.
  நல்ல நெறிகளை நெஞ்சில் விதைக்கும் ஒரு கதையைப் படித்த நிறைவு ஏற்பட்டது. மிக்க நன்றி.

  ReplyDelete
 15. ஜீவி said...
  //அற்புதமான கற்பனை. இயல்பான நடை படிக்க இடைஞ்சல் இல்லாமல் கருத்தை அழகாகப் படிப்பவரிடம் சேர்த்தது. " அப்போ வண்டி புளியந்தோப்பு வராதுன்னியே; இப்போ வந்திடுச்சி பாத்தையா?" என்று எகத்தாளமாகத்தான் சாதாரணமாக எல்லோருக்கும் கேள்வி எழும்பும். அந்த மனத்தாங்கல், சோர்வு இத்தனைக்கும் இடையேயும் அந்த வயதானவரின் தாயுள்ளத்தை வெளிப்படுத்தியமாறு கதையை அமைத்தது மேலும் சிறப்பைக் கூட்டியது.
  நல்ல நெறிகளை நெஞ்சில் விதைக்கும் ஒரு கதையைப் படித்த நிறைவு ஏற்பட்டது. மிக்க நன்றி.//

  அன்புள்ள ஜீவி அவர்களின் முதல் வருகைக்கும், மேலான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  கதையைப் படித்ததும் மன நிறைவு ஏற்பட்டுள்ளதாக தாங்கள் எழுதியுள்ளது, எனக்கும் மிகவும் நிறைவு தருவதாகவே உள்ளது. நன்றி.

  நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் வருக என அன்புடன் அழைக்கிறேன். WELCOME !

  ReplyDelete
 16. பிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்தும், அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது.//
  எங்கள் மனத்திலும் நகராமல் நிற்கிறது.

  ReplyDelete
 17. இராஜராஜேஸ்வரி said...
  //பிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்தும், அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது.//
  எங்கள் மனத்திலும் நகராமல் நிற்கிறது.//

  உங்களுக்கும் தங்கமான மனஸு தான். நன்றிகள்.

  ReplyDelete
 18. //”பேசாமக் குந்தும்மா; சரியான சாவு கிராக்கியெல்லாம் பஸ்ஸிலே ஏறி, என் உயிரை வாங்குது” என்று சீறுகிறார் நடத்துனர். அவர் கவனம் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் போட்டு காசு வசூலிப்பதில் திரும்புகிறது.///வீட்டுக்கு வீடு வாசற்படி.

  //மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்///
  கண்டிப்பா அவ‌ரின் தாயாரை நினைத்திருப்பார்.
  அசத்தலான,கருத்தான‌ கதை

  ReplyDelete
 19. அம்முலுவின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. என் மனமார்ந்த நன்றிகள், அம்முலு.

  //அசத்தலான,கருத்தான‌ கதை//

  உங்களின் கருத்துக்களும் அசத்தலாகவே உள்ளன.

  பிரியமுள்ள
  கோபு

  ReplyDelete
 20. வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது.

  // புளியந்தோப்பு வழியாக இந்த பஸ் போகுமா என்று ஒரு வார்த்தை யாரிடமாவது கேட்டு விட்டு அவள் ஏறியிருக்கலாம் தான்.//

  பாட்டி கவனக்குறைவாக ஏறியது தப்புத்தான். ஆனால் நடத்துனர் வாய் வார்த்தைகள் அதிகம்.

  ஏதோ கடவுள் அனுக்கிரகம் பாட்டி தன் வீட்டருகே இறங்கும்படி அமைந்தது.

  பொதுவாக எல்லோரிடமும் மனிதநேயம் அவசியம். அதிலும் பெரியவர்களிடம் அனுதாபம் கொள்ளல் மிகஅவசியம்.
  நல்லகதை. நல்ல கருத்துப்பகிர்வு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. இளமதி October 14, 2012 12:43 AM
  //வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது.//

  //பொதுவாக எல்லோரிடமும் மனிதநேயம் அவசியம்.
  அதிலும் பெரியவர்களிடம் அனுதாபம் கொள்ளல் மிகஅவசியம்.
  நல்லகதை. நல்ல கருத்துப்பகிர்வு. வாழ்த்துக்கள்!//

  நல்லாவே சொல்லிட்டீங்க ;)

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்....இளமதி!

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
 22. நான் கதை எழுதப் போறேன்னு சொன்னதும் என் தம்பி, ‘நீதிக்கதைகளா?’ என்று கேட்டான்.

  இன்னி தேதிக்கு இந்த அவசர யுகத்துல இது போல் கதைகள் கண்டிப்பாகத் தேவைதான். நம்ப சின்ன வயசில’பஞ்ச தந்திரக் கதைகள்’ மிருகங்களை வைத்து நிறைய எழுதினார்கள்.

  இது போன்ற கதைகளைப் படித்து யாராவது ஒரே ஒருவர் நாம் இப்படி நடக்கக்கூடாது. ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது வெற்றி தானே.

  ReplyDelete
  Replies
  1. JAYANTHI RAMANI February 8, 2013 at 2:06 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நான் கதை எழுதப் போறேன்னு சொன்னதும் என் தம்பி, ‘நீதிக்கதைகளா?’ என்று கேட்டான்.

   இன்னி தேதிக்கு இந்த அவசர யுகத்துல இது போல் கதைகள் கண்டிப்பாகத் தேவைதான். நம்ப சின்ன வயசில’பஞ்ச தந்திரக் கதைகள்’ மிருகங்களை வைத்து நிறைய எழுதினார்கள்.

   இது போன்ற கதைகளைப் படித்து யாராவது ஒரே ஒருவர் நாம் இப்படி நடக்கக்கூடாது. ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது வெற்றி தானே.//

   ஆமாம். வயதானவர்கள் + உடல்நலம் இல்லாதவர்கள் மேல் கொஞ்சமாவது இரக்கம் காட்டி நடந்து கொண்டால் நல்லது.

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. .

   Delete
 23. மனிதன் தான்தான் எல்லாவற்றையும் நடத்துவதாக எண்ணுகிறான். ஆனால் அவனுக்கு மேலே ஒரு சக்தி இருப்பதை மறந்து விடுகிறான்.

  ReplyDelete
 24. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சும்மாவா சொல்லி இருக்காங்க

  ReplyDelete
 25. நல்ல மனத்திலிருந்து வெளிப்படும் பாசிடிவான எண்ண அதிர்வுகள் நல்லதையே நோக்கிச் செலுத்தப்படுதல் போல அந்த முதியவளின் வேண்டுதல் சரியாக செவிசாய்க்கப்பட்டிருக்கிறது. வசைபாடிய வாய்க்கு அமிர்தமாய் நீர்மோர்.. உணரத்தவறினால் உள்ளே அவ்வளவு எளிதில் இறங்கியிருக்க வாய்ப்பில்லை.. அருமையான கதை. எளிய நடை. பாராட்டுகள்.

  ReplyDelete
 26. வயசாளிங்க எப்பத்துகுமே வெவரமானவங்கதான்.

  ReplyDelete
 27. பஸ் நடத்துனர்கள் பயணிகளிடம் கொஞ்சமாவது இயல்பாக நடந்து கொள்ளணும் அதிலும் வயதானவர்களிடம் ஓரளவாவது சாந்தமாக நடந்து கொள்ளலாம் ஆண்டவன் அந்த அம்மா பக்கம் இருக்கும்போது யார்தான் என்னதான் செய்துவிட முடியும்.

  ReplyDelete
 28. அடடா...அருமை...கதையின் போக்கு இப்படித்தான் இருக்கும் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தும் ரசிக்கும்படியாக உள்ளது...இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்...

  ReplyDelete
 29. //மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.//
  வள்ளுவரின் பொய்யாமொழி நினைவுக்கு வந்தது!நன்றி!

  ReplyDelete
 30. நல்ல கதை. கிராமத்து வயசான கிழவின்னா இப்படி இடுப்பில் சுருக்கு பையுடனும் உடம்பிலும் சுருக்கங்களுடனும் அந்த கிழவியே கண் முன்னால இருக்காங்க. கையில் கனமான முட்டை வேறு.நடத்துனரும் வயசாளிங்க கிட்ட கொஞ்சமாவது இதமாக நடந்து கொள்ளணும். ஆனாலும் ஆண்டவன் கருணை கிழவி பக்கமே இருந்திருக்கு. அவ வீட்டு பக்கமே பேரூந்து நின்றது .அவளும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் தாகத்துக்கு நீர்மோர் கொடுத்து உபசரிப்பது நெகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... February 23, 2016 at 1:35 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நல்ல கதை. கிராமத்து வயசான கிழவின்னா இப்படி இடுப்பில் சுருக்கு பையுடனும் உடம்பிலும் சுருக்கங்களுடனும் அந்த கிழவியே கண் முன்னால இருக்காங்க. கையில் கனமான மூட்டை வேறு. நடத்துனரும் வயசாளிங்க கிட்ட கொஞ்சமாவது இதமாக நடந்து கொள்ளணும். ஆனாலும் ஆண்டவன் கருணை கிழவி பக்கமே இருந்திருக்கு. அவ வீட்டு பக்கமே பேருந்து நின்றது. அவளும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் தாகத்துக்கு நீர்மோர் கொடுத்து உபசரிப்பது நெகிழ்ச்சி.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 31. அனுமான் சாலிசா முதல் ஸ்லோகம் போட்டு ரெண்டு நாளா உங்கள காணோமே. டாஷ் போர்ட்ல வரலயான

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... February 23, 2016 at 1:47 PM

   //அனுமான் சாலிசா முதல் ஸ்லோகம் போட்டு ரெண்டு நாளா உங்கள காணோமே. டாஷ் போர்ட்ல வரலயா?//

   டேஷ் போர்டில் வந்துள்ளது. எனக்கு நிறைய நேரங்களில் BLOGGER இல் ஏதேதோ பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. என் ப்ளாக் உள்பட மற்றவர்களின் ப்ளாக்குகளையும் ஓபன் செய்து படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியாமல் உள்ளது. இது ஏதோ அதிசயமாக இப்போதுதான் ஒருவழியாக ஓபன் ஆகியுள்ளது. இந்தப் பின்னூட்டமே பப்ளிஷ் கொடுத்தால் வெளியாகுமோ ஆகாதோ சந்தேகமாகத்தான் உள்ளது. அதுபோல உங்கள் ப்ளாக் எனக்கு ஒருவேளை ஓபன் ஆனால் நான் அங்கு வந்து பின்னூட்டமிட முயற்சிப்பேன்.

   Delete
 32. தகவலுக்கு நன்றி ஸார்

  ReplyDelete