என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 5 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 5 / 8 ]

இந்தத் தொடரின் முதல் 4 பகுதிகளைப் படிக்க : gopu1949.blogspot.com/2011/02/4-8.html

பகுதி 5 ............. தொடர்கிறது:

அதன்படியே மறுநாள் ‘பல்ஹர்ஷா’ வில் காலை டிபனும்; ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ’இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, கடலை உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும், மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு, காலாற நடந்து, கதவு வரை சென்று, எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறைக் காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார்.

நாக்பூரில் மட்டும், அப்பர் பெர்த்தில் அமர்ந்தபடியே அவர், மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல, கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.

நிறைய பச்சை வாழைப்பழங்கள் போட்டுத் தொங்க விடப்பட்டிருந்த அவரின் ’கேரி பேக்’ ஒன்று இப்போது, மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக் கொண்டு பரிதாபமாக காட்சியளித்தது.

அவர் இரண்டொரு முறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி கவனித்திருந்தார்.

மொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.

இரவு மணி 10.45 க்கு, ‘கட்னி’ என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். அந்த ஆசாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.

பட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தை [இப்போது போல செல்போன் பிரபலமாகாத காலம் அது] சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். பட்டாபி கோஷ்டி விடியற்காலம் 4.50 க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும்.

குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

மறு நாள் அதிகாலை, அலாரம் அடித்ததும் அலறி எழுந்த பட்டாபி, அதை மேலும் தொடர்ந்து அடிக்க விடாமல், அதன் தலையில் ஒரு குட்டு குட்டி, அதை ஊமையாக்கினார்.

லைட்டைப் போட்டால் ஒருவேளை அந்த ஆசாமியும் தூக்கம் கலைந்து எழுந்து விடக்கூடும் என்ற பயத்திலும், காலை வேளையில் அதன் முகத்தில் மீண்டும் முழிக்க விருப்பமின்றியும், மங்கலான நைட் லாம்ப் வெளிச்சத்திலேயே, தன்னுடைய ஒவ்வொரு சாமான்களையும் விமலா & பங்கஜம் உதவியுடன், ரயில் பெட்டியிலிருந்து இறங்க வேண்டிய கதவுப் பகுதி அருகில், அவர்கள் தாமதமின்றி உடனே இறங்குவதற்கு வசதியாக வைத்துக் கொண்டார். விமலாவை விட்டு ஒருமுறை சாமான்களை எண்ணச் சொல்லி பன்னிரண்டு உருப்படிகள் என்பதை உறுதி செய்து கொண்டார், பட்டாபி.

குழந்தைகள் ரவியையும், கமலாவையும் மெதுவாக எழுப்பி, அவர்கள் முகத்தை வாஷ் பேசினில் அலம்பித் துடைக்கவும், வண்டி அலஹாபாத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.

மூட்டை முடிச்சுக்களுடன் கீழே இறங்கிய அவர்களை டாக்ஸி வாலாக்களும், போர்ட்டர்களும் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலியவற்றைக் குழைத்த ஒரு புது மொழியில் சங்கரமடம் செல்ல பேரம் பேசி முடித்து, ஒருவழியாக டாக்ஸியில் ஏறி அமர்ந்தது அந்தக் குடும்பம்.

தொடரும்37 கருத்துகள்:

 1. நல்ல வேளை இந்த பகிர்வில் அவரது திட்டும் வார்த்தைகள் கேட்கவில்லை! கதை விறுவிறுப்பாய் அலகாபாத் வரை வந்து விட்டது. தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 2. இவர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு
  ஒதுங்கிய அந்த மனிதரை நினைத்தால் பாவமாக
  உள்ளது,மீண்டும் கதையில் எப்போது வருகிறார் பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
 3. அந்த மனிதரின் மீள்வருகை சங்கர மடத்திலா...கடைசி வரை 'இந்தக் ' குடும்பம் தவறை உணருமா...பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 4. இந்த பதிவில் " அவரை" கொஞ்சம் அதிகம்
  நிகழ்வுகளில் நுழையவிடாமல் வைத்ததில்
  ஏதோ சூட்சுமம் உள்ளது.
  அடுத்த பதிவில் பார்ப்போம்
  நல்ல பதிவு.
  தொடர வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அந்த மனிதருக்காய் சங்கர மடத்தில் காத்திருப்போம்

  பதிலளிநீக்கு
 6. தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
  http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

  பதிலளிநீக்கு
 7. தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியது அறிந்தேன்.
  மிக்க மகிழ்ச்சி.வாழ்த்த வயதில்லை.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 8. 'லோயர் பர்த்' கிடைத்ததின் அல்ப சந்தோஷத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 9. இப்பதான் உங்கள் பிளாக் பக்கம்
  வந்தேன்.வலைசரத்தின் மூலம்
  வந்தேன். வாழ்த்துக்களும்,வணக்கங்களும்

  பதிலளிநீக்கு
 10. என் பிளாக் பக்கம் வருகை தாருங்கள்

  பதிலளிநீக்கு
 11. சங்கர மடத்தில் காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 12. கூடவே வந்து கொண்டிருக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 13. அன்புடன் மலிக்கா said...//தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html //

  அன்புள்ள திருமதி ”அன்புடன் மலிக்கா” அவர்களே! என்னையும் தாங்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.
  வலைச்சரத்தில் கடந்த ஒரு வாரமாக தாங்கள் மேற்கொண்டுள்ள கடும் உழைப்பு என்னை மிகவும் பிரமிக்கச் செய்கிறது. கஷ்டப்பட்டுத் தேடி சுறாக்களையும், புறாக்களையும் பிடித்துப்போட்ட தாங்கள் எழுத்துலகில் ஒரு மிகப் பெரிய திமிங்கிலம் தான் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. பாராட்டுக்கள்/வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. ஆயிஷா said...//இப்பதான் உங்கள் பிளாக் பக்கம்
  வந்தேன்.வலைசரத்தின் மூலம் வந்தேன். வாழ்த்துக்களும்,வணக்கங்களும்.//
  தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், வணக்கங்களுக்கும் மிக்க நன்றி.

  ஆயிஷா said...//என் பிளாக் பக்கம் வருகை தாருங்கள்//

  வரவேற்புக்கு நன்றி. இன்று உடனே வந்துள்ளேன். இனி நேரம் கிடைக்கும் போது வருகின்றேன்.

  பதிலளிநீக்கு
 15. raji said...//தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியது அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.வாழ்த்த வயதில்லை.மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
  நன்றி.//

  ப்ளாக்கில் தட்டுத்தடுமாறி நுழைந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் திரு. எல்.கே அவர்களால் சென்ற மாதமும், திருமதி. அன்புடன் மலிக்கா அவர்களால் இந்த மாதமும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது எனக்கே ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. என்ன செய்வது, உங்களைப் போன்ற திறமைமிக்க (ப்ளாக்கில் பிரபலமாகி விட்ட) எவ்வளவோ எழுத்தாளர்களுக்கு அறிமுகமே தேவையில்லாமல் இருக்கலாம் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. எது எப்படியோ, இந்த அறிமுகத்தால் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக எழுதியுள்ளது எனக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி, நன்றி, நன்றி.

  பதிலளிநீக்கு
 16. காசி யாத்திரையை உற்சாகப் படுத்தும் விதமாக என்னுடனேயே தொடர்ந்து கங்கா காவேரி எக்ஸ்பிரஸ்ஸில் பயணித்து வரும், சக பயணிகளான

  திரு. வெங்கட்,
  திரு. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்,
  திரு ரமணி சார்,
  திரு எல்.கே.,
  திரு மோகன்ஜி,
  கவிதைப்புயல் திரு சிவக்குமாரன்,
  திருமதி ராஜி &
  திருமதி மி கி மாதவி
  ஆகிய அனைவருக்கும்
  என் அன்பு கலந்த நன்றிகள்.

  மீண்டும் அடுத்த பகுதியில் அலஹாபாத் சங்கர மடத்தில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 17. சங்கர மடத்தில் காத்திருக்கிறேன். அந்த மனிதர் சங்கர மடத்துக்கு வருவாரா!

  பதிலளிநீக்கு
 18. பின்னூட்டம் இடாமல் இவர் ஒருவர் மட்டும் எங்கே போய் ஒளிந்து கொண்டார் என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன்.

  கடைசியில் பார்த்தால் பட்டாபி குடும்பம் காரில் போய்ச் சேர்வதற்குள், நீங்கள் சங்கர மடத்தில் காத்திருக்கும் செய்தி இப்போது தான் தெரிய வந்தது.

  பட்டாபிக்காக இல்லாவிட்டாலும், உங்களுக்காகவே அவரை நான் சங்கர மடத்திற்கு வாங்கோ என்று அழைக்கணும் போலிருக்கு. வருவாரோ, மாட்டாரோ

  மேலும் அவர் தன் ரயில் பயணத்தைத் தொடர்ந்து வாரணாசியிலே போய் இறங்க வேண்டியவர் வேறு.

  யார் யார் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம், ஒரு இரண்டு நாட்கள் போகட்டும்.

  நாம் ஏதேதோ நினைத்து ஒரு கணக்குப் போடுகிறோம். ஆனால் மேலே உள்ள அவன் கணக்கு சமயத்தில் வேறு விதமாக ஆகிவிடுகிறது.

  அதைப் பற்றி இன்று ஒரு பதிவு “அவன் போட்ட கணக்கு” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். சங்கர மடத்தில் காத்திருக்கும் நேரத்தில் அதைப் படியுங்கள். அன்புடன்.....

  பதிலளிநீக்கு
 19. அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது

  சந்தோஷம் தரவே பயணித்த்ர்ரோ !

  பதிலளிநீக்கு
 20. குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

  நாமும் கூடவே தொடர்கிறோம் !

  பதிலளிநீக்கு
 21. இராஜராஜேஸ்வரி said...
  அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது

  //சந்தோஷம் தரவே
  பயணித்த்ர்ரோ !//

  இருக்கலாம். இருக்கலாம்.

  தங்களின் பின்னூட்டங்கள் எல்லாம் எனக்கு எவ்வளவு சந்தோஷத்தைத் தருகின்றன. அதுபோலத்தான் அவரும் சந்தோஷம் தரவே பயணித்துள்ளார் போலிருக்கு.

  தங்களின் அன்பான வருகைக்கும், சந்தோஷம் தரும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 22. இராஜராஜேஸ்வரி said...
  குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

  //நாமும் கூடவே தொடர்கிறோம் !//

  தூங்காமல் ஓடிக்கொண்டிருந்த ரயில் தான் செயின்-புல்லிங் செய்யப்பட்டு, ஓடாமல் நின்றுபோய் இன்றுடன் மிகச்சரியாக ஒரு மாதம் ஆகிறதே!

  எப்படித் தொடர்வீர்கள்?

  Any how, Thanks for your kind entry to my old posts & for the valuable comments offered.

  Thanks a Lot, Madam.

  Affectionately yours.
  vgk

  பதிலளிநீக்கு
 23. குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது//ரயிலில் செல்லும் ஆசையை தூண்டிவிட்டது.

  பதிலளிநீக்கு
 24. ammulu September 26, 2012 3:55 AM
  ****குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது****

  //ரயிலில் செல்லும் ஆசையை தூண்டிவிட்டது.//

  அன்புத்தங்கை அம்முலுவின் வருகையும், அழகான கருத்துக்களும் ரயிலின் ஆட்டத்திலும் சீரான ஓட்டத்திலும் தூளியில் தூங்கும் குழந்தைபோல, என்னையும் மகிழ்வித்தது. நன்றியோ நன்றிகள்.

  பிரியமுள்ள
  VGK

  பதிலளிநீக்கு
 25. மேன்மையான மனிதராக உப்புச்சீடை மனிதர் வாசகர்கள் மனதில் ஒரு உயர்வான இடத்தை பிடித்துவிட்டார்... அழகு என்பது புறத்தோற்றத்தில் மட்டும் இருந்தால் போதாது. அதனால் பயன் தற்போதைய சந்தோஷத்துக்கு மட்டுமே... பாம்பு அழகா இருக்கேன்னு எடுத்து ஆபரணமா கழுத்துல போடுக்க முடிகிறதா? அதுபோல பட்டாபி பங்கஜம் குடும்பம் பண்ற அலம்பலும் ஆர்ப்பாட்டங்களும் அமைதியா மேலிருந்து உப்புச்சீடை மனிதர் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்.... மனதளவில் உயர்ந்தவராகிவிட்டதால் கதையை படிக்கும்போது கூட அவரை மதிக்கும்படி தான் நினைக்க தோன்றுகிறது..

  பட்டாபி ஃபேமிலி சாப்பாட்டு விஷயத்தில் ஜமாய்க்கிறார்களே... ‘பல்ஹர்ஷா’ வில் காலை டிபனும்; ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ’இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, கடலை உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

  சாப்பிடுற விஷயத்தில் ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட் போலுக்கு பட்டாபி ஃபேமிலி... தின்றே கொழிக்கும் கூட்டம் போல :-) வஞ்சனை இல்லாமல் சாப்பிடும்போதெல்லாம் ஒரு கருணைக்காவது சாப்பிடுறீர்களான்னு கேட்க தோணித்தா?

  லோயர் பர்த் விட்டுக்கொடுத்ததும் மனிதரிடம் கொஞ்சம் கருணை பிறந்திருக்கு போலிருக்கே..

  கண்டிப்பா இதுபோன்றவர்களின் மனதை திருத்த தான் சங்கரமடத்தில் அந்த மேன்மையான மனிதர் இவருக்கும் முன்பு போய் காத்திருப்பாரோ???

  பட்டாபி எத்தனை சுயநலம் அப்பப்பா.... அலாரம் வைப்பதில் இருந்து அடிச்சதும் அமுக்கிவிட்டு எழுந்தா அவர் முகத்துல முழிக்கனுமாம்...ஹூம்...

  சங்கரமடம் திருத்திவிடும் பட்டாபி குடும்பத்தினரை என்று நினைக்கிறேன்...

  எழுத்து நடை அற்புதம் அண்ணா.. உவமைகளும் மிக இயல்பாய் வருகிறது அருமையாய்...

  இனி அடுத்து என்னாகிறது என்று பார்ப்போம் அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK To மஞ்சு

   // வஞ்சனை இல்லாமல் சாப்பிடும்போதெல்லாம் ஒரு கருணைக்காவது சாப்பிடுறீர்களான்னு கேட்க தோணித்தா?//

   அதானே, பாருங்கோ மஞ்சு.

   எனக்குத்தெரிந்த என்னிடம் மிகவும் பாசமுள்ள ஒருத்தங்க வெளிநாட்டிலிருந்து, தினமும் ஒருநாள் தவறாமல், சாப்பிட்டீங்களா அண்ணா? டிபன் சாப்பிடீங்களா அண்ணா? காஃபி சாப்பிட்டீங்களா அண்ணா, அண்ணாவுக்கு மன்னிக்கும் நமஸ்காரங்கள் என ஒவ்வொரு வேளையும் ஒரு மெயில் அனுப்பிக்கிட்டே இருக்காங்க.

   அவ்வளவு ஒரு வாத்சல்யத்துடன் கூடிய கிளிகொஞ்சும் விசாரிப்புகள்.

   அதுபோல மெயில் வந்தபிறகே இப்போதெல்லாம் எனக்கு சாப்பிடப் போகணும்னு ஞாபகமே வருது.

   இப்படியும் சிலர் ஒரே ரயில் பயணத்திலேயே பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு வார்த்தை Just for a courtesy கூட கேட்காமல் இருக்கிறார்கள், பாருங்கோ.

   //எழுத்து நடை அற்புதம் அண்ணா.. உவமைகளும் மிக இயல்பாய் வருகிறது அருமையாய்...//

   ரொம்ப சந்தோஷம் மஞ்சு.

   பிரியமுள்ள]
   கோபு அண்ணா

   நீக்கு
 26. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.//

  அப்பாடா கொஞ்சமாவது புரிஞ்சுண்டாங்களே. கூடிய சீக்கிரம் முழுக்க புரிஞ்சுப்பாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI February 4, 2013 at 1:11 AM
   ***அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.***

   //அப்பாடா கொஞ்சமாவது புரிஞ்சுண்டாங்களே. கூடிய சீக்கிரம் முழுக்க புரிஞ்சுப்பாங்க.//

   நீங்க சொன்னா எதுவும் கரெக்டா இருக்கும்ன்னு நாங்க இப்போ புரிஞ்சிக்கிட்டோம்.

   நீக்கு
 27. ஒரு வழியாக அலஹாபாத் வந்தாயிற்று. இனிதான் கதையின் கிளைமாக்ஸ் வரப்போகிறது. எல்லோரும் காத்திருங்கள்.

  பதிலளிநீக்கு
 28. அவசரமா இறங்கினவங்க அஸுதி கலசத்தை மறந்திருப்பாங்கன்னு யூகம் பண்ரேன் அந்த மனுஷர் அதை நினைவு படுத்தி இருப்பாரோ?

  பதிலளிநீக்கு
 29. அந்தக் குடும்பத்துக்கு தான் உடன் பயணிப்பது பிடிக்கவில்லை என்று அறிந்த மாத்திரத்திலேயே அப்பர் பெர்த்தில் அடைக்கலமாகிவிட்ட பெரியவரின் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது? சொல்லாமற் செய்வர் பெரியர் என்பது எவ்வளவு சரியாக இருக்கிறது... அப்பாடா ஒருவழியாக இறங்கிப்போனார்களே என்று வாசிக்கும் நமக்கே ஆசுவாசமாக இருக்கிறது. அப்படியென்றால் அந்தப் பெரியவருக்கு எப்படி இருந்திருக்கும்?

  பதிலளிநீக்கு
 30. அந்த வயசாளி பெரியவரு வெவரமானவருதான். ஒதுங்கி போயிட்டாகளே.

  பதிலளிநீக்கு
 31. அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தாச்சா ஒரு மரியாதைக்கு கூட பெரியவரிடம் சொல்லிண்டு போக தோணலியே.

  பதிலளிநீக்கு
 32. //அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும், மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு, காலாற நடந்து, கதவு வரை சென்று, எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறைக் காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார்.// ஐயோ பாவம் அந்த அப்பிராணி மனிதர்...கதயோட போக்கு ரொம்ப அமைதியாப் போவுதே..எதுனா புயலடிக்கப்போகுதா...?

  பதிலளிநீக்கு
 33. //ழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.//
  அருமை! என்ன ஆகப்போகிறதோ? அறிய ஆவல்!

  பதிலளிநீக்கு
 34. இந்த பகுதியில் அந்த உப்புசீடை மனிதர் இவர்களின் கடும் சொற்களில் இருந்து தப்பித்துவிட்டார். லோயர் பர்த் கிடைத்த சந்தோஷமாயிருக்கலாம். இந்த பதிவு படிக்கும்போது நீங்களும் இந்த ட்ரெயினில் எப்பவாவது காசியாத்திரை பயணம் செய்திருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. ரயிலின் தாலாட்டு பலார்ஷா நாக்பூர் கட்னி என்று எல்லா ஸ்டேஷனின் பெயர்களையும் நினைவில் வைத்து பதிவில் சொல்லி இருக்கீங்க.இவ்வளவு கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் கவனிப்பதாலதான் திறமையா எழுத முடிகிறது. படிகிறவங்களையும் கூடவே அழைத்து செல்வதுபோல இருக்கு. இருட்டிலேயே எல்லா சாமான்களையும் தட்டு தடுமாறி எடுத்து வந்து கதவு பக்கத்துல வச்சாச்சி லைட்டு போட்டா அவரு எழுந்துவிடுவாரோன்னு பதட்டத்துல இருந்திருக்காங்க. பதட்டத்துலயே ஏதாவது முக்கியமான விஷயத்தை மறநுதுடக்கூடாதேன்னு படிக்கிறவங்களுக்கு பதட்டமா இருக்கே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... February 16, 2016 at 12:42 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்த பகுதியில் அந்த உப்புசீடை மனிதர் இவர்களின் கடும் சொற்களில் இருந்து தப்பித்துவிட்டார். லோயர் பர்த் கிடைத்த சந்தோஷமாயிருக்கலாம்.//

   இருக்கலாம், இருக்கலாம்.

   //இந்த பதிவு படிக்கும்போது நீங்களும் இந்த ட்ரெயினில் எப்பவாவது காசியாத்திரை பயணம் செய்திருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.//

   ஆமாம். இதே கங்கா காவேரி எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் நானும் 1984-இல் சென்னை பீச் (Beach Station) ஸ்டேஷனில் ஏறி, அலஹாபாத்தில் இறங்கி, பின் அங்கிருந்து வாரணாசிக்கும் சென்று வந்துள்ளேன். அலஹாபாத் திரிவேணி சங்கமத்தில் எடுத்துள்ள போட்டோகூட, திரு. தமிழ் இளங்கோ அவர்களின் ‘எனது எண்ணங்கள்’ என்ற வலைத்தளத்தினில் இதோ இந்தப்பதிவினில் சமீபத்தில் காட்டப்பட்டுள்ளது:

   http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html

   //ரயிலின் தாலாட்டு பலார்ஷா நாக்பூர் கட்னி என்று எல்லா ஸ்டேஷனின் பெயர்களையும் நினைவில் வைத்து பதிவில் சொல்லி இருக்கீங்க.இவ்வளவு கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் கவனிப்பதாலதான் திறமையா எழுத முடிகிறது. படிக்கிறவங்களையும் கூடவே அழைத்து செல்வதுபோல இருக்கு.//

   மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொன்றையும் அழகாக நிறுத்தி நிதானமாகப் படித்து மகிழ்ந்துள்ளீர்கள் எனத் தெரிகிறது.

   //இருட்டிலேயே எல்லா சாமான்களையும் தட்டு தடுமாறி எடுத்து வந்து கதவு பக்கத்துல வச்சாச்சி லைட்டு போட்டா அவரு எழுந்துவிடுவாரோன்னு பதட்டத்துல இருந்திருக்காங்க. பதட்டத்துலயே ஏதாவது முக்கியமான விஷயத்தை மறந்துடக்கூடாதேன்னு படிக்கிறவங்களுக்கு பதட்டமா இருக்கே.....//

   அது எப்படி எதையாவது மறப்பார்கள்? அதுதான் மொத்த சாமான்களின் எண்ணிக்கையை, இறங்கும் முன்பு டாலி செய்துகொண்டு திருப்திப்பட்டுக்கொண்டு விட்டார்களே! :)

   அன்புடன் கூடிய தங்களின் தொடர் வருகைக்கும், அழகான விரிவாக கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு