About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, February 17, 2011

சூ ழ் நி லை

காலை 10 மணி. பிஸினஸ் விஷயமாக சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது.

”குட்மார்னிங் ... ஜெயா... சொல்லு” என்றார் டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம்.

ஜெயாவுக்கு குரல் தடுமாறியது. அவள் அழுது கொண்டே பேசுவது இவருக்குப் புரிந்தது.

“அப்பா... தாத்தா சென்னையில் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டாராம். இப்போது தான் போன் வந்தது. அவரின் உடல் ‘ஜி.ஹெச்’ இல் உள்ளதாம். அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங் ஃப்ளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?” என்றாள்.

மஹாலிங்கம் சற்று பலமாகச் சிரித்துக் கொண்டே, “அப்படியாம்மா, ரொம்ப சந்தோஷம். நான் அவசியம் போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்” என்றார், சற்றும் தன் முகபாவணையில் வருத்தமோ அதிர்ச்சியோ ஏதும் இல்லாமல்.

தன் அப்பாவின் இத்தகைய பேச்சு ஜெயாவுக்கு அதிர்ச்சியை அளித்தது. தன் தாயாரிடம் இந்த டெலிபோன் உரையாடலைப் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.

இதைக் கேள்விபட்ட மஹாலிங்கத்தின் மனைவி ஈஸ்வரிக்கு தன் கணவன் மீது கோபமாக வந்தது.

“கோடீஸ்வரரான இவருக்கு எப்போதுமே எங்க பிறந்த வீட்டுக் காரங்களைக் கண்டாலே ஒரு வித இளக்காரம் தான். மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு. இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன்” என்று தன் மகளிடம் கூறிவிட்டு, விமான டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடுகளைக் கவனிக்கலானாள்.

மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட மஹாலிங்கம், தன் தந்தை இறந்த துகத்தில் மூழ்கியிருக்கும் ஈஸ்வரியுடன் அதிகமாக மனம் விட்டு பேச முடியாமல் போனது. அகால மரணம் ஒன்று எதிர்பாராமல் நடந்து விட்ட அந்த வீடு இருக்கும் சூழ்நிலையிலும், பெரியவரின் மறைவால் அந்த வீட்டில் குழுமியிருக்கும் மனிதர்களின் துக்கமான மன நிலையிலும், எப்படி அவர்கள் மனம் விட்டு பேச முடியும்.

ஈஸ்வரி ஒரு மூன்று வாரங்களாவது இங்கேயே (பிறந்த வீட்டிலேயே) இருந்து விட்டு, பிறகு டெல்லிக்கு புறப்பட்டு வரட்டும் என்று தன் மாமியாருக்கும் மனைவிக்கும் பொதுவாக காதில் விழுமாறு சொல்லி விட்டு, தான் மட்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால் அவரால் எந்த வீட்டிலும், எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாது. துக்க வீட்டுக்கு வந்து விட்டு ’போயிட்டு வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. அதனால் டக்கென்று புறப்பட்டு விட்டார். அவர் எப்போதுமே இப்படித்தான் என்று தெரிந்த ஈஸ்வரியும் அவர் மேல் இப்போது உள்ள கோபத்தில், அவருடன் முகம் கொடுத்தே பேசவில்லை.

இதற்கிடையில் தன் கணவன் இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி பெருமையாகப் பேசி பூரித்துப் போகும் தன் தாயிடமே கோபமாக வந்தது, ஈஸ்வரிக்கு.

அடுத்த ஒரு மாதமும் கோபத்தில், தன் கணவனுடன் தொலைபேசியில் கூட பேசுவதைத் தவிர்த்து விட்டாள் ஈஸ்வரி. அவ்வளவு கோபம் அவர் மீது.

ஒரு மாதம் கழித்து ஒரு வழியாக டெல்லிக்குத் திரும்பினாள் ஈஸ்வரி.

“வா, ஈஸ்வரி” என்று அன்புடன் தான் வரவேற்றார், தற்செயலாக அன்று வீட்டில் இருந்த மஹாலிங்கம். ஜெயாவும், தன் அன்புத் தந்தையை இழந்த துக்கத்துடன் திரும்பி வந்துள்ள தன் அம்மாவை ஓடிச்சென்று ஆறுதலாக பற்றிக்கொண்டாள்.

தன் வயது வந்த மகள் பக்கத்தில் இருக்கிறாளே என்றும் பாராமல் ஈஸ்வரி கோபமாக தன் கணவனிடம் வாய் சண்டையிட தயாராகி விட்டாள்.

“எங்கப்பா சாலை விபத்திலே செத்துப்போனது உங்களுக்கு ரொம்பவும் ஸந்தோஷமா? இது போல நீங்க ஜெயாவிடம் சொன்னது கொஞ்சமாவது நியாயமா? உங்களிடம் எவ்வளவு தான் பணமிருந்தாலும், எங்க அப்பாவை அந்தப் பணத்தால் திரும்ப வரவழைக்க முடியுமா? ” என சுடும் எண்ணெயில் போட்ட அப்பளமாகப் பொரிந்து தள்ளினாள்.

“வெரி... வெரி... ஸாரி ஈஸ்வரி, இது தான் உன் கோபத்திற்குக் காரணமா?

“சென்னைக்குப் போன இடத்தில் என் நண்பர் ஒருவர் மூலம், நம்ம ஜெயாவுக்கு எல்லா விதத்திலும் நல்ல ஒரு பொருத்தமான மாப்பிள்ளை பையன் பார்த்து, ஜாதகமும் பொருந்தி, மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிக்கும் நேரம், நம் ஜெயாவிடமிருந்து, இந்த துக்கமான தகவல் வந்தது. நான் அங்கிருந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பிள்ளை வீட்டார் ஏதாவது அபசகுனமாக நினைக்காமல் இருக்கவும் தான், அவ்வாறு சொல்லும் படியும், சமாளிக்கும் படியும் ஆகி விட்டது.

என்னிடம் உள்ள பணத்தாலும், செல்வாக்காலும் அவரின் உயிரைத் திரும்ப கொண்டு வர முடியாவிட்டாலும், அவருடைய உடலையாவது வெகு சீக்கரமாக ”ஜி.ஹெச்” லிருந்து வீட்டுக்குக் கொண்டு வர முடிந்தது.

மேற்கொண்டு செய்ய வேண்டிய இறுதிச் சடங்களின் எல்லாச் செலவுகளுமே என்னுடையதாக இருக்கட்டும் என்று சொல்லி, உன் அம்மாவிடம் நிறைய பணம் கொடுத்து வர முடிந்தது.

இந்தப் பணம் கொடுத்த விஷயம் மட்டும் உன்னிடமோ, வேறு யாரிடமுமோ சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனக்கும் என் மாமனாரின் இந்த திடீர் முடிவில் மிகவும் வருத்தம் தான். அவரின் விதி அது போல உள்ளபோது நம்மால் என்ன செய்ய முடியும்?

அமரரான உன் அப்பா ஆசீர்வாதத்தால் தான், இந்த ஒரு நல்ல இடம் கை கூடி வந்து, நம் ஜெயாவின் கல்யாணம் நல்லபடியாக முடியணும்!” என்று சொல்லி, தன் மனைவின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார் மஹாலிங்கம்.

தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு, அவர் தக்க நேரத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி.

அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.

தாத்தாவின் திடீர் மரணம், ஒரு விதத்தில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள், மணப்பெண் ஜெயா.

-o-o-o-o-o-o-




















33 comments:

  1. இதற்குத் தான் பெரியவர்கள் எதையும் பேசுவதற்கு முன் யோசித்துப் பேச வேண்டும் என்று சொலவார்கள் போல! நல்ல சிறுகதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. மணப்பெண் ஜெயாவிற்கு ஆரம்பத்திலேயே புரிதல் வந்துவிடும்! நல்ல கதை

    ReplyDelete
  3. நல்ல சிந்தனையுடன் கூடியவர்கள் செய்யும்
    செயலுக்கு தகுந்த காரணம் இல்லாது போகாது
    நல்ல கதை

    ReplyDelete
  4. பெரும்பாலும் அப்பா அறிவுப்பூர்வமா யோசிப்பாங்க,அம்மா உணர்வுப்பூர்வமா யோசிப்பாங்க.நான் சொல்வது சரிதானே சார்.

    ReplyDelete
  5. அழகான கதையோட்டம்.. ரசித்து எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  6. நெகிழ வைக்கும் கதை... பெரியவர்களின் கருத்துக்களை மதிக்க தூண்டும் விதம் அமைந்து உள்ளது.

    ReplyDelete
  7. ”சூழ்நிலை”க்கு தகுந்தவாறு பேசுவது மஹாலிங்கத்திடம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம். உணர்வுப்பூர்வமான கதை.

    ReplyDelete
  8. நல்ல க்ராஃப்ட்மேன்ஷிப் உள்ள எழுத்து உங்களது கோபு சார்.

    ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் ஆரம்பித்து இஷ்டப்படி முடிக்க எல்லோராலும் முடியாது.

    படிக்கும் ஆர்வத்தைத் தக்கவைக்க உதவும் டெக்னிக். அதற்குள் ஒரு பாடம் சொல்லும் வியூகம்.

    அசத்தறிங்க.

    ReplyDelete
  9. அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அற்புதமான மனம் கவர்ந்த கதை!

    ReplyDelete
  10. கதையை சுத்தி சுத்தி சுழலவிட்டு அடிக்கிறீங்க சார்! உங்களோட பல கதைகள்ல இந்தப் போக்கு இருக்கு. அற்புதம். ;-)

    ReplyDelete
  11. இந்த மாதிரி விஷயங்களில் பெண்களை விட ஆண்கள் சரியா செயல்படுவாங்க ... அற்புதமான நடை

    ReplyDelete
  12. //இராஜராஜேஸ்வரி said...
    அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அற்புதமான மனம் கவர்ந்த கதை!//

    அழகிய தாமரை மலர்ந்தது போன்ற தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  13. வருகை தந்து கருத்துக்கூறி பாராட்டியுள்ள அனைவருக்கும் அன்பான வணக்கங்களும் நெஞ்சார்ந்த நன்றிகளும்.

    ReplyDelete
  14. Dear Sundarji & RVS,

    தங்களின் பிரத்யேகமான பாராட்டுக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உள்ளன.

    My Special Thanks to both of you.

    ReplyDelete
  15. நெகிழ வைக்கும் சிறுகதை. பகிர்வுக்கு நன்றி ஐயா .

    ReplyDelete
  16. ஜிஜி said...

    //நெகிழ வைக்கும் சிறுகதை. பகிர்வுக்கு நன்றி ஐயா//

    தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் வாங்க !

    ReplyDelete
  17. நிதானம் ஜெயிக்கும் என்று சொல்லி உங்கள் கதை சொல்லும் திறன் ஜெயித்து விட்டது..

    ReplyDelete
  18. ரிஷபன் said...
    //நிதானம் ஜெயிக்கும் என்று சொல்லி உங்கள் கதை சொல்லும் திறன் ஜெயித்து விட்டது..//

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், சார்.

    ReplyDelete
  19. இந்தக் கதையை படிக்க ஆரம்பிக்கும்போதே முடிவை யூகித்து விட்டேன் சார்... :)

    அன்புடன்,
    ராணி கிருஷ்ணன்.

    ReplyDelete
    Replies
    1. //nunmadhi October 14, 2011 10:19 AM
      இந்தக் கதையை படிக்க ஆரம்பிக்கும்போதே முடிவை யூகித்து விட்டேன் சார்... :)

      அன்புடன்,
      ராணி கிருஷ்ணன்.//

      அப்படியாம்மா.... ரொம்ப சந்தோஷம்.
      ’நுண்மதி’ ன்னா பின்ன என்ன, சும்மாவா?

      நுண்மதி = நுன்மையான அறிவு படைத்தவள் ;)))))

      மிக்க நன்றி, கெளரி லக்ஷ்மி.

      பிரியமுள்ள
      VGK

      Delete
  20. "பதறாத காரியம் சிதறாது" என்னும் கருத்தைச் சொல்லிய கதை.

    எதேச்சையாக நடக்கும் இயற்கைச் சம்பவங்களுக்கும் சகுனம் அதுஇதுன்னு எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணம் கண்டுபிடிக்கும் இந்த வாழ்க்கை முறையில் மிக சாதுர்யமாக சமயோசிதமாக நடந்துகொண்ட இந்த தொழிலதிபரின் திறமையை சொல்லியவிதம் அருமை.

    பல பேரின் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கிற அதேசமயம் நிதானத்துடன் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டிய நிஜம்.
    நல்ல கதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இளமதிOctober 14, 2012 12:14 AM

      அன்பின் இளமதி, வாங்கோ, செளக்யம் தானே?

      //"பதறாத காரியம் சிதறாது" என்னும் கருத்தைச் சொல்லிய கதை.//

      //மிக சாதுர்யமாக சமயோசிதமாக நடந்துகொண்ட இந்த தொழிலதிபரின் திறமையை சொல்லியவிதம் அருமை.//

      //பல பேரின் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கிற அதேசமயம் நிதானத்துடன் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டிய நிஜம்.//

      //நல்ல கதை. வாழ்த்துக்கள்!//

      ”யங்க் மூன்” இன் பாராட்டுக்களால் நானும் இளமையை எட்டிவிட்டது போன்ற உணர்வு கிடைத்தது.

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், இளமதி.

      பிரியமுள்ள
      VGK

      Delete
  21. ”பாக்யா” என்ற பத்திரிகையில் என் பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.//

    ”பாக்யா” பத்திரிகையில் வெளியான சூழ்நிலைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  22. இராஜராஜேஸ்வரி March 3, 2013 at 6:19 AM

    வாங்கோ, வணக்கம்.

    *****”பாக்யா” என்ற பத்திரிகையில் என் பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.*****

    //”பாக்யா” பத்திரிகையில் வெளியான சூழ்நிலைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//

    ”பாக்யா” வில் வெளிவந்தது ஒரு புறம் இருக்கட்டும்.

    எந்த ’சூழ்நிலை’யில் தாங்கள் எழுதி நான் வெளியிட்டு, எங்கோ காணாமல் போய்விட்டது என நான் வருத்தப்பட்டு நினைத்திருந்த பின்னூட்டம் பத்திரமாக இங்கு வந்து சேர்ந்துள்ளது என்பதும், அதைத்தாங்களே இப்போது என் கவனத்திற்குக்கொண்டு வந்துள்ளதும் நான் செய்த ’பாக்யா’[ம்] அல்லவா! ;))))) மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    ReplyDelete
  23. மகாலிங்கத்தின் சமயோஜிதப் பேச்சு ஒரு காரியம் கெட்டுப்போகாமல் இருக்க உதவியது. இம்மாதி நமயோஜித புத்தி எல்லோருக்கும் சட்டென்று வராது.

    ReplyDelete
  24. குட்டிக்கதை ரொம்ப சுட்டிக்கதை.

    அந்த காலத்துல கதை விட்டதுக்கு இல்லை இல்லை கதை சொன்னதுகுக் காரணம் நம்பள நாமே திருத்திக்கத்தான்.

    ReplyDelete
  25. யதார்த்தமான நெகிழ்ச்சியான கதை.ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  26. இது நல்லாருக்கு யோசிச்சு பேசுரதுதான் சரிவரும்

    ReplyDelete
  27. பத்திரிகைகளிலும் எழுதி வருகிறீர்களா? பல குடும்பங்களிலும் இது போல புரிந்து கொள்ளாத நிலமை வந்திருக்கும்தான். பொறுமையா பேசி தீர்த்துக்கொள்ளலாம்




    ReplyDelete
  28. சூழ்நிலையின் இறுக்கத்தில் வார்த்தைகளை விட்டுவிடக்கூடாது...சூழ்நிலையை ஹாண்டில் செய்ய அனுபவம் வேண்டும்...சிறுகதை...பெரிய்ய மெஸேஜ்...

    ReplyDelete
  29. இடம் பொருள் அறிந்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்திய கதை அருமை!

    ReplyDelete
    Replies
    1. நல்ல கதை. பெண்ணின் திருமணப்பேச்சு நடந்து கொண்டிருக்கும் சமயம் மஹாலிங்கத்தால் இப்படித்தானே சொல்லியிருக்க முடியும். அப்படியும் உடனே கிளம்பிவந்து மாமனாருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளில் கலந்து கொண்டிருக்கிறாரே. ஆஸ்பிடலில் இருந்து பாடியை கொண்டுவருவதில் தொடங்கி எல்லாவற்றையும் குறைவில்லாமல்தானே செய்திருக்கார். அதுவும்தவிர மனைவியை அவங்க அம்மா வீட்டில் கூட கொஞ்ச நாட்கள் தங்க சொல்லி தேவையான பண உதவியும் செய்திருக்காரே. அவர் வீடு வந்து மனைவியிடம் விபரங்களை சொன்ன பிறகுதானே மனைவியாலே அவரை சரியா புரிந்து கொள்ள முடிந்தது. பாக்யா பத்திரிகையில் இந்த கதை வந்ததற்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்.

      Delete
    2. ஸ்ரத்தா, ஸபுரி... March 17, 2016 at 9:55 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்ல கதை. பெண்ணின் திருமணப்பேச்சு நடந்து கொண்டிருக்கும் சமயம் மஹாலிங்கத்தால் இப்படித்தானே சொல்லியிருக்க முடியும். அப்படியும் உடனே கிளம்பிவந்து மாமனாருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளில் கலந்து கொண்டிருக்கிறாரே. ஆஸ்பிடலில் இருந்து பாடியை கொண்டுவருவதில் தொடங்கி எல்லாவற்றையும் குறைவில்லாமல்தானே செய்திருக்கார். அதுவும்தவிர மனைவியை அவங்க அம்மா வீட்டில் கூட கொஞ்ச நாட்கள் தங்க சொல்லி தேவையான பண உதவியும் செய்திருக்காரே. அவர் வீடு வந்து மனைவியிடம் விபரங்களை சொன்ன பிறகுதானே மனைவியாலே அவரை சரியா புரிந்து கொள்ள முடிந்தது. பாக்யா பத்திரிகையில் இந்த கதை வந்ததற்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான, விரிவான, புரிதலுடன் கூடிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete