என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 30 ஜூலை, 2011

சிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 3 ]

சென்ற வாரம் கொடுக்கப்பட்ட கணக்குக்கான 
சரியான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்தக் கணக்குப் புதிருக்கும் மீண்டும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியுள்ள ஒரே ஒரு நபர் நம் அன்புக்குரிய

திரு கே.ஜி. கெளதமன் 

kggouthaman@gmail.com

அவர்கள் மட்டும் தான் என்பதை 
பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவருக்கு என் அன்பான 
பாராட்டுக்களும்! வாழ்த்துக்களும் !!


[வழக்கம்போல் திரு. அப்பாதுரை (மூன்றாம் சுழி) அவர்கள், சரியான விடை தெரிந்திருந்தும், திரு. கே.ஜி. கெளதமன் அவர்களே thumping Majority யுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துக்கொள்ளட்டும் என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளார் என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. அவரின் பெருந்தன்மைக்கும் என் பாராட்டுக்கள்]

-ooooOoooo-


10 பேப்பர் பைகள் ஒவ்வொன்றிலும் நிரப்ப வேண்டிய தொகைகள்:

01)  ரூபாய் 001

02)  ரூபாய் 002                               

03)  ரூபாய் 004

04)  ரூபாய் 008                     

05)  ரூபாய் 016

06)  ரூபாய் 032

07)  ரூபாய் 064                     

08)  ரூபாய் 128

09)  ரூபாய் 256                     

10)  ரூபாய் 489

==============
Total Rs.      1000
==============

1 ரூபாய் கேட்டால் Bag 1 only
2  ரூபாய் கேட்டால் Bag 2 only
3 ரூபாய் கேட்டால் Bag 1 + 2 only
4 ரூபாய் கேட்டால் Bag 3 only
5 ரூபாய் கேட்டால் Bag 1 + 3 only
6 ரூபாய் கேட்டால் Bag 2 + 3 only
7 ரூபாய் கேட்டால் Bag 1, 2 + 3 only
8 ரூபாய் கேட்டால் Bag 4 only
9 ரூபாய் கேட்டால் Bag  1 + 4 only
10 ரூபாய் கேட்டால் Bag 2 + 4 only

  99 ரூபாய் கேட்டால் Bag 1, 2, 6 + 7  
199 ரூபாய் கேட்டால் Bag 1, 2, 3, 7 + 8
299 ரூபாய் கேட்டால் Bag 1, 2, 4, 6 + 9
399 ரூபாய் கேட்டால் Bag  1 to 4, 8 + 9
499 ரூபாய் கேட்டால் Bag  2, 4 + 10
501 ரூபாய் கேட்டால் Bag 3, 4 + 10
601 ரூபாய் கேட்டால் Bag 5 to 7 + 10
701 ரூபாய் கேட்டால் Bag 3, 5, 7, 8 + 10
851 ரூபாய் கேட்டால் Bag 2, 4, 6, 7, 9 + 10
991 ரூபாய் கேட்டால் Bag 2, 3 + 5 to 10
999 ரூபாய் கேட்டால் Bag 2 to 10 only
1000  ரூபாய் கேட்டால் Bag 1 to 10 all

ரொம்பவும் சுலபம் தானேங்க!  
புரிந்து கொண்டால் சரிதான்!!

-=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=-


=========================================================
இந்த வாரத்திற்கான மேஜிக் கணக்கு 
நீங்கள் உங்கள் குழந்தையுடன் விளையாட.
=========================================================

உங்கள் வீட்டில் கூட்டல் கணக்குபோடத் தெரிந்த 
சிறிய குழந்தைகள் உண்டா?
அவர்களுடன் கணக்கில் ஒரு மேஜிக் செய்யலாம் நீங்க.

முதலில் துண்டு பேப்பர்களிலோ அல்லது ஸ்லேட்டிலோ அல்லது பழைய எழுதாத டயரிகளிலோ கீழ்க்கண்ட 
ஸ்டாண்டார்ட் சார்ட் போட்டுக்கொள்ளுங்கள்:

Operation No. 1     நீ YOU                      ........

Operation No. 3     நீ YOU                      ......... 

Operation No. 4      நான் I                     .........

Operation No. 5     நீ YOU                       ........

Operation No. 6       நான் I                    ........                           
======================================

Operation No. 2      நான் I  [Total]     .  ........

======================================

நீ ”YOU” என்றால் உங்கள் குழந்தை.    
நான் ” I”  என்றால் நீங்கள்.

Operation No. 1,  நீ ’YOU’ என்று இருப்பதால் முதலில் நம் குழந்தை நம்மிடம் ஏதாவது ஒரு நம்பர் சொல்ல வேண்டும். அது எவ்வளவு ஸ்தான (Digit) நம்பராக வேண்டுமானாலும் இருக்கலாம். 

[ஆனால் ஒரு கண்டிஷன் சொல்லி விடவும். அதாவது முதலில் 4 ஸ்தான நம்பர் சொன்னால், அதன் பிறகு அதற்கு மேற்பட்ட ஸ்தான நம்பர்கள் சொல்லக்கூடாது என்று சொல்லி விடவும்.] 

உதாரணமாக 1008 என்று குழந்தை முதன் முதலாகக் கூறுவதாக வைத்துக்கொள்வோம்.  அந்த 1008 என்ற நம்பரை Operation No.1 க்கு எதிராக குழந்தையை விட்டே எழுதச்சொல்லவும் / அல்லது நீங்களே எழுதவும். 

இவ்வாறு Operation No. 1 க்கான நம்பர் குழந்தை கூறியவுடன், Operatrion No. 2 என்ற இடத்தில் மொத்தக்கூட்டுத்தொகை [அதாவது Total Summation] இந்தக் கூட்டல் கணக்குக்கு எவ்வளவு வரும் என்று நீங்கள் போட்டுவிட வேண்டும். பிறகு கூட்டிப்பார்க்கும் போது அந்தக்குழந்தை மிகவும் ஆச்சர்யப்படும்.

1008 என்று சொன்னதும் நீங்கள் Operation No. 2  என்ற இடத்திற்கு நேராக 21006 என்று உடனே மின்னல் வேகத்தில் கூட்டுத்தொகையை எழுதிவிட வேண்டும்.  இது எப்படி என்றால்: குழந்தை சொன்ன 1008 minus 2 = 1006 அல்லவா?  இந்த 1006 க்கு முன்பாக அந்தக்கழித்த 2 என்ற எண்ணைப் போட்டால் என்ன வரும்?  21006 அல்லவா! இது தான் நாம் செய்ய வேண்டிய முதல் மேஜிக்.  

Examples::
Operation No. 1 = 9 என்றால் 
Operation No. 2  = (9-2 =7),  So we have to write 27

Operation No. 1 = 21 என்றால் 
Operation No. 2 = (21-2 =19), So we have to write 219

Operation No. 1 = 101 என்றால் 
Operation No. 2 = (101-2 =099), So we have to write 2099**

Operation No. 1 = 555 என்றால் 
Operation No. 2 = (555-2 =553), So we have to write 2553

If Operation No. 1 is in 1 digit, Operation No. 2 should be in 2 digit
If Operation No. 1 is in 2 digit, Operation No. 2 should be in 3 digit
If Operation No. 1 is in 3 digit, Operation No. 2 should be in 4 digit
If Operation No. 1 is in 4 digit, Operation No. 2 should be in 5 digit
If Operation No. 1 is in 5 digit, Operation No. 2 should be in 6 digit

For example, If Operation No. 1 is told by the child as 101 (3 digit), 
our Operation No. 2 should be in 4 digit as 2099 and  NOT to be written as 299. 
**We have to be very careful in this only one aspect.


சில குழந்தைகள் மிகவும் புத்திசாலித்தனமாகவோ அல்லது விளையாட்டாகவோ கூட, முதன் முதலாக Operation No. 1 க்கு அவர்கள் கூறும் எண்ணை 2 அல்லது 1 அல்லது 0 என்று கூறிவிடும். 

2 என்றால் அதிலிருந்து 2 ஐக்கழித்து 2ஐ முன்னால் போட்டு 20 என்று நீங்கள் விடையை Operation No. 2 க்கு எதிராக எழுதி விடுவீர்கள். 

1 என்றாலோ 0 என்றாலோ, அதிலிருந்து 2 ஐக்கழிக்க முடியாதே!என்னசெய்வது? என்று கவலைப்படாதீர்கள். 

1 என்றால் 19 என்றும்,
 0 என்றால் 18 என்றும் 
விடையை எழுதிவிடுங்கள்.  

இது வரை புரிந்து கொண்டீர்களா? 

-o-o-o-o-o-

OK  ...... NOW LET US GO TO THE NEXT STEP:

இப்போது Operation No. 3 என்ற இடத்திற்கு உங்கள் குழந்தை ஒரு நம்பர் சொல்ல வேண்டும். Suppose  5863 என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம்.

இப்போது Operation No. 4 க்கு எதிராக நீங்கள் மின்னல் வேகத்தில் ஒரு நம்பர் எழுத வேண்டும். குழந்தை சொன்ன 5863 க்கு நீங்கள் எழுத வேண்டிய மேஜிக் நம்பர் 4136.   

இதை எப்படிக்கொண்டு வருவது என்று நீங்கள் கேட்கலாம்.  4 ஸ்தான மிகப்பெரிய எண்ணான 9999 லிருந்து குழந்தை சொன்ன 5863 ஐ மனதால் கழித்து 4136 என்று எழுதிவிடணும். அது தான் இதில் உள்ள மேஜிக்.  

அதாவது குழந்தை சொல்லும் ஒவ்வொரு ஸ்தான எண்ணையும் 9 ஆல் மனதுக்குள் கழித்து, நாம் நம் நம்பரைப்போட வேண்டும்.

குழந்தை போட்டது 5555 என்றால் நாம் 4444 போடணும். 
அப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்.

குழந்தை போட்டது 1234 என்றால் நாம் 8765 போடணும்
அப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்

குழந்தை போட்டது 6633 என்றால் நாம் 3366 போடணும்
அப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்

குழந்தை போட்டது 4000 என்றால் நாம் 5999 போடணும்
அப்போ தான் அந்த இரண்டும் சேர்த்து 9999 வரும்

நீங்கள் குழந்தைக்கு நேரில் ஒவ்வொரு எண்ணாக 9 லிருந்து யோசித்துக் கழித்துக் கொண்டிருக்காமல், மனதாலே டக் டக்கென்று மின்னல் வேகத்தில் கழித்து எழுதிவிட வேண்டும். 

துவரை O K தானே?

இதே டெக்னிக் தாங்க குழந்தை சொல்லும் Operation No. 5 க்கும், நாம் எழுத வேண்டிய Operation No. 6 க்கும்.

Suppose குழந்தை Operation 5 க்கு 4849 என்று சொல்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் மின்னல் வேகத்தில் எழுத வேண்டிய Operation 6 க்கான எண் 5150 (அப்போ தானே 4849+5150=9999 வரும்) 

மேஜிக் ஓவர். இப்போ கூட்டிப்பாருங்கள். Operation No. 2 க்கு எதிராக நாம் ஏற்கனவே எழுதியுள்ள விடை மிகச்சரியாக வந்து நிற்கும்.

 1008
 5863
 4136
 4849
 5150
=====
21006
=====

முதலில் குழந்தை 1008 என்று சொன்னதுமே, நாம் விடை 21006 என்று எழுதி விட்டோம். 

பிறகு குழந்தை 5863 என்றது. நாம் 4136 என்று எழுதி விட்டோம்
பிறகு குழந்தை 4849 என்றது. நாம் 5150 என்று எழுதி விட்டோம்.

இப்போது கூட்டிப்பார்த்தால் நாம் முதலிலேயே எழுதி வைத்த விடை 21006 சரியாக வருகிறது பாருங்கள்.  உங்களில் சிலருக்கே இது என்ன மேஜிக் ஆக உள்ளதே என்று தோன்றும் போது உங்கள் குழந்தைக்கு எவ்வளவு ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்?

===================oOo====================

மிகவும் சின்னக்குழந்தைகளாக இருந்தால் ஒரு ஸ்தான நம்பர் சொல்லச்சொல்லுங்கள். அப்போது தான் அவர்களால் தவறேதும் இல்லாமல் விரல் விட்டுக் கூட்டி சரிபார்க்க முடியும்.


உதாரணமாக

7  (இது குழந்தையின் நம்பர் against Operation No. 1)
3  (இது குழந்தையின் நம்பர் against Operation No. 3)
6  (இது நாம் எழுதும் மேஜிக் நம்பர் against Operation No. 4) [ 9 minus 3 = 6 ] 
4  (இது குழந்தையின் நம்பர் against Operation No. 5)
5  (இது நாம் எழுதும் மேஜிக் நம்பர் against Operation No. 6) [ 9 minus 4 = 5 ] 
===
25 (இது நாம் எழுதும் விடை against Operation No. 2) 
     (7 minus 2 = 5;  So we write 25)
===
===================oOo====================

நீங்கள் முதலில் நன்றாகப்புரிந்து கொண்டு, குழந்தைகளுடன் விளையாடுங்கள்.  

இதனால் விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு!
கூட்டல் கணக்குக்குப் பாடம் கற்றுக்கொண்டதாகவும் ஆச்சு!!
நேரம் நல்ல பயனுள்ள முறையில்  செலவழிந்ததாகவும் ஆச்சு!!!

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும். 
ALL THE BEST.


-o-o-o-o-o-o-o-o-o-


ஒரு சிறிய அன்பான வேண்டுகோள்:

இந்த மேஜிக் கணக்கு உங்களுக்குப் புரிந்தாலோ, பிடித்திருந்தாலோ, உங்களையும் உங்கள் குழந்தையையும் வியப்பில் ஆழ்த்தி மகிழச்செய்திருந்தாலோ அது பற்றி சுவையாக பின்னூட்டம் இடுங்கள்.

அது எனக்கும் மகிழ்ச்சியைத் தருவதுடன், இதே போன்று குழந்தைகளுடன் நீங்க விளையாட, இன்னொரு சுவையான சுலபமான மேஜிக் கணக்கை அடுத்த பதிவிலும் வெளியிட எனக்கு உற்சாகம் அளிக்கும்.

கணிசமான வரவேற்பு இல்லாது போனால், என் கணக்கு வழக்குகளை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  

என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்

வியாழன், 28 ஜூலை, 2011

காது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவா சப்தம்!
2
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை
ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத 
ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வர ஸ்வாமி துணை


[தூய தமிழில்: ஸ்ரீ மட்டுவர்குழலம்மை உடனுறை தாயுமானவர் துணை]கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் ப்ரஸவம் ஏற்பட
சொல்லவேண்டிய ஸ்லோகம்:


ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத 
மன்னாத ஸாம்ப சசி சூட ஹர திரிசூலின் 
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே!இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப்பெண்கள் மூன்று முறை தினம் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்ரஸவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும். முன்னோர்கள் தொன்றுதொட்டு சொல்லிவந்த ஸம்பிரதாயமான ஸ்லோகம் இது. 

மேலும் கடவுள் க்ருபையால் சுகப்ரஸவம் ஆனபிறகு ஸ்ரீதாயுமான ஸ்வாமிக்கு தாரோடு வாழைப்பழமும், பசும்பாலும் அர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகும். 

மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதிக்கு அருகே உள்ள கடைகளில் வாழைத்தார் வேண்டுமென்று சொல்லி பணம் கொடுத்து விட்டால் அவர்களே ஆள் போட்டு வாழைத்தாரை மேலே உள்ள ஸ்ரீ தாயுமானவர் சந்நதி வரை கொண்டு வந்து நம்மிடம், உடனே ஒப்படைத்து விடுவார்கள்.  

உள்ளூர்காரர்கள் பிறந்த குழந்தையை ஸ்ரீ தாயுமானவர் சந்நதியில் சற்று நேரம் போட்டுவிட்டு, பிறகு அர்ச்சனை செய்து கொண்டு, நைவேத்யம் செய்து தரும் பிரசாதமான வாழைத்தாரில் உள்ள பழங்களை அங்கேயே தரிஸனம் செய்ய வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து விடுவது வழக்கம்.

வெளியூர்க்காரர்கள் கருவுற்றது முதல் பிரஸவம் ஆகும் வரை தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தாலே போதும்.


திருச்சி மலைக்கோட்டை கோயில் யானை

சுபம்

திங்கள், 25 ஜூலை, 2011

ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!!

என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது:இப்ப இந்த பதிவை தொடர 
          ரமா http://maduragavi.blogspot.com/
          அரசன் http://karaiseraaalai.blogspot.com
          இராஜராஜேஸ்வரி http://jaghamani.blogspot.com/
          வை .கோபாலக்ருஷ்ணன் http://gopu1949.blogspot.com/
          இவர்களையும் அழைக்கிறேன் .

angelin [காகிதப்பூக்கள்]

                   

அழைப்பிற்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன் vgk 

==========================================================திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலிலிருந்து 
உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதை
(அருகில் இருப்பது மணிக்கூண்டு)
மலைக்கோட்டை நகரமாம்

திருச்சிராப்பள்ளிதமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஊர். புண்ணிய நதியாம் காவிரி பாயும் ஊர். நான் ஊன்றிப் பார்த்துவரும் கடந்த ஐம்பது ஆண்டுகளில், நாளுக்கு நாள் நல்ல பல வளர்ச்சிகளைக் கண்டு வரும் ஊர். தமிழ்நாட்டின் சரித்திரம், கலை, கலாச்சாரம், ஆன்மீகம், ஆலயங்களுக்கு கீர்த்திமிக்க ஒரு மையமே திருச்சி எனப்படும் திருச்சிராப்பள்ளி நகரம்.

ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் கோயிலும், அதன் அழகிய தெப்பக்குளமும், அதன் மாபெரும் நந்தி கோயிலும், அடிவாரத்தில் படிவாசல் பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் சந்நதியும் மிகவும் பிரபலமானவை.  [இந்த சிவன்கோயிலை தூய தமிழில் “அருள்மிகு மட்டுவர் குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானவர் கோயில்” என்று அழைக்கிறார்கள்]


இந்த மலைக்கோட்டைக்கு அருகேயுள்ள சின்னக்கடைத்தெரு, பெரியகடை வீதி, NSB Road (நேதாஜி சுபாஷ் சந்த்ரபோஸ் ரோடு) ஆகியவற்றில் கிடைக்காத தங்கமோ, வைரமோ, வெள்ளியோ, பித்தளைப்பாத்திரங்களோ, வெங்கலப்பாத்திரங்களோ, அலுமினிய, எவர்சில்வர், பிளாஸ்டிக் சாமான்களோ, ஜவுளிகளோ, மருந்துகளோ, நாட்டு மருந்துகளோ, ஆயுர்வேத மருந்துகளோ, செயற்கை வைரங்களோ, இதர மளிகை காய்கறி, கனி வகைகளோ, சாப்பாடோ, டிபனோ, காஃபியோ, டீயோ. தீனியோ, கூல் டிரிங் ஐஸ்க்ரீமோ, பாய் படுக்கை தலையணி, மெத்தை, ஃபர்னிச்சர் சாமான்களோ உலகில் வேறு எங்குமே கிடைக்காது என்று தலையில் அடித்து சத்தியம் செய்யலாம்.  அந்த அளவுக்கு குடும்பத்திற்கு வேண்டிய அனைத்துப்பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் வணிக வளாகங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாகும்.


இந்த மலைக்கோட்டையின் உச்சியிலிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயிலிருந்து பார்த்தால் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருவானைக்காவல், காவிரி ஆறு, பசுமை வயல்கள், எழில்மிகு திருச்சி நகரம் ஆகியவை நம் கண்களுக்கு விருந்தாகும்.


மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சோழர்கள், பல்லவர், பாண்டியர், மராட்டியர், நாயக்கர் மன்னர்களின் கட்டடக்கலைத் திறனுக்குச் சான்று. மகேந்திரவர்மனால் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலும் இங்கே இருக்கிறது.


திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை பாறையின் வயது 3500 மில்லியன் (350 கோடி) ஆண்டுகள் ஆகும் என புவியியல் ஆய்வு மதிப்பிடுகிறது. தமிழக கட்டடக்கலையின் தனிச்சிறப்புக்குச் சான்றாக நிற்கும் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு கொடும்பலூரிலிருந்து கற்களைக் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.


இலங்கை மன்னன் இராவணனின் தம்பியான திரிசரன் ஆட்சி நடத்தி இந்த இறைவனை வழிபட்டு பேறுகளை அடைந்ததால் திருசிராமலை என்று பெயர் வந்ததாகவும், சிரா என்ற முனிவர் வாழ்ந்ததால் சிராப்பள்ளி எனப்பட்டதாகவும் பெயர்க்காரணங்கள் கூறப்படுகின்றன.


திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், தாயுமானவ அடிகள் என சைவசமயக்குரவர்கள் போற்றிப்பாடிய சிறப்புக்கு உரியது இந்தத் திருத்தலம்.


இரத்னாவதி என்ற வணிகர் குலப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அந்தப்பெண்ணின் தாயார் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து இங்கே வந்தபோது, காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால் திருச்சிராப்பள்ளிக்கு வர முடியவில்லை. பிரசவ வலியால் துடித்த இரத்னாவதிக்கு அவரது தாயைப்போல உருமாறிய மலைக்கோட்டை ஈசனே சென்று பிரசவம் பார்த்து உதவினார் என்பதால் தாயுமானவர் [தாயும் + ஆனவர்] என்று பெயர் பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.


இன்றும் தாய்மைப்பேறு அடைந்த பெண்மணிகள் தங்களின் பிரஸவம் அதிக சிரமம் இல்லாமல் இருக்க வேண்டி, இந்த இறைவனை மனதில் நினைத்து ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் தினமும் சொல்வது வழக்கம். அதை பிறகு தனியாக ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.   


இந்த மலைக்கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க சுமார் 200 படிகள் ஏறிப்போக வேண்டும். மலைமீது எல்லையில்லா ஆனந்தம் காத்திருக்கும் நமக்கு.  


பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் மலைக்கோட்டைப் பாறைகளுக்கு மத்தியில் இந்த சிவன் (தாயுமானவர்) கோயிலைக்கட்டியதாக தமிழக வரலாறு குறிப்பிடுகிறது. பிரிட்டிஷ் நூலகத்தில் திருச்சி மலைக்கோட்டை பற்றிய அரிய ஓவியங்களும், புகைப்படங்களும் கொண்ட நூல்கள் உள்ளன.


பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மதில் சுவர்களும், அகழிகளும், தர்பார் மண்டபங்களும், திருச்சி கோட்டையின் கண்கவர் கலை நுட்பங்களுக்குச் சான்றுகளாகும்.


திருச்சியின் மற்றுமொரு சிறப்பு கல்லணை. நதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே, அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன், இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்லணையின் அடிப்படைக் கட்டுமானம் அப்படியே இன்னும் நிலைத்திருக்கிறது.புதிப்பிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவ்வப்போது நடைபெறுகிறது. காலத்தால் அழியாத உறுதிமிக்க கல்லணையின் கட்டுமான தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் மணல் குறித்த அறிவியல் அறிவு, தமிழர் தம் திறனுக்கு வியப்பூட்டும் ஒரு அதிசய சான்றாகும். 

இராமாயண காவியத்தைக் கவிச்சக்கரவர்த்தியான கம்பர் அரங்கேற்றியது, திருச்சியின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கத்தில் தான்.

திருச்சி மாவட்டத்தின் திருவள்ளரை மொட்டை கோபுரமும், ’ஸ்வஸ்திக்’ கிணறும் அதிசயிக்கத்தக்கவை.
குணசீலம் பெருமாள்


மேற்படி குணசீலம் பெருமாளை ஓவியமாக வரைந்துள்ளவர் 
நம் நண்பர் திரு. பட்டாபி ராமன் அவர்கள்
E-mail ID : vijayakoti33@gmail.com
Blog: http://tamilbloggersunit.blogspot.in {RAMARASAM}


உத்தமர் கோயில் மும்மூர்த்தி ஸ்தலம். 
இங்கு ப்ரும்மா + சரஸ்வதிக்கு தனி சந்நதிகள் உண்டு என்பது சிறப்புதிருவானைக்காவல் கோபுரங்கள்


ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாதர், திரு ஆனைக்கா
பஞ்சபூதங்ளில் ஒன்றான நீருக்கான கடவுள்தூய தமிழில் திருவரங்கம் என அழைக்கப்படும் 
ஸ்ரீரங்கம் இராஜகோபுரம்சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் [ மஹமாயீ]


குமார வயலூர் ஸ்ரீ முருகன் கோயில் நுழைவாயில்திருச்சியிலுள்ள குணசீலம் [பெருமாள் கோயில்], உததமர்கோயில் [மும்மூர்த்தி ஸ்தலம்], சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் (பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று), ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், வயலூர் முருகன் முதலியன மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களாகும்.  


திருச்சி நீதி மன்றம் அருகே அமைந்துள்ள ஐயப்பன் ஆலயம் அனைவரும் அவசியம் போய் பார்க்க வேண்டிய ஒன்று.  கோயில் என்றால் எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும்; எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்று போதிக்கும் இடமாக உள்ளது. பல்வேறு சமுதாய நலப்பணிகளும் செய்து வருகிறார்கள். இங்கு ஒருமுறை சென்று வந்தால் மன அமைதி கிட்டுவது நிச்சயம். கையில் ஒரு பைசாகூட இல்லாமல் இறைவனை தரிஸித்து வரலாம். பணம் நாம் கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள். விருப்பம் உள்ளவர்கள் உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த முடியும்.  கண் தானம் உறுப்புகள் தானம் செய்ய விரும்புபவர்கள் இந்தக் கோயிலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். ஞாயிறு தோறும் குழந்தைகளுக்கு பாலவிஹார் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம் முதலியன சொல்லித்தரப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் முன்பே சுத்தம் .. சுத்தம் .. படுசுத்தம் ஆரம்பமாகிவிடுகிறது. கோயில் நிர்வாகமே சுத்தமாகப் பராமரித்து வருகிறது. மொத்தத்தில் திருச்சியிலேயே சபரிமலை .... ஆனால் படு சுத்தமாக .... சப்தம் ஏதும் இல்லாமல் ... பேரமைதியாக.


சிவன் தலைக்குமேல் வெய்யில் அடிக்காத வண்ணம் ஒரு சிலந்தி தினமும் வலைபிண்ணி அழகாக குடைபோல கூடு கட்டுமாம். அதே சிவனுக்கு அபிஷேகம் செய்ய நினைக்கும் ஒரு யானை தன் துதிக்கையில் நீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின் தலையில் ஊற்றும் போது அந்த சிலந்தி அரும்பாடுபட்டுச் செய்த வலை அறுந்து போகுமாம். கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து அதைக்கடித்துப் புண்ணாக்கி அந்த மிகப்பெரிய யானையையும் கொன்று தானும் இறந்ததாம்.


திருவானைக்கா சிவனை பூஜித்த யானையும் சிலந்தியும்தனக்கு சேவை செய்த இரு பக்தர்களையும் உயிர்பெறச்செய்து மோட்சம் அளித்தாராம் சிவபெருமான். இது திருச்சி ’திருவானைக்கா’ என்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான [ஜலத்திற்கான க்ஷேத்ரமான] ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாத ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றதாக ஒரு ஸ்தல புராண வரலாற்றுக்கதை கூறுகிறது. 


யானை போன்ற மிகப்பெரிய விலங்கு மட்டுமல்லாமல் சிலந்தி போன்ற சிறிய ஜந்துவையும் ஆட்கொண்ட ஈஸ்வரன், எறும்புகளுக்குக்கூட தனது மேனியில் ஊர்ந்து விளையாடி மகிழ வாய்ப்பளித்ததாக, திருச்சி-தஞ்சை சாலையில் திருச்சியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவெறும்பூர் அருகேயுள்ள எறும்பேஸ்வரர் மலைக்கோயில் வரலாறு கூறுகிறது.   


திருச்சி திருவெறும்பூர் எறும்பேஸ்வரர் மலைக்கோயில்

-o-oOo-o-

”மணப்பாறை மாடு கட்டி .... மாயவரம் ஏறு பூட்டி ....
வயக்காட்ட உழுது போடு ... செல்லக்கண்ணு .....”


என்ற சினிமாப்பாடல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! அந்த மணப்பாறையும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்ததுதாங்க. ஒவ்வொரு புதன் கிழமையும் இங்கு மாட்டுச்சந்தை கூடுகிறது.காளை மாடுகள்,கறவைப்பசுக்கள், கன்றுக்குட்டிகள், எருமைகள் என, பல ஊர்களிலிருந்து லாரிகளில் வந்திறங்கும் சுமார் 5000 மாடுகள் வாராவாரம் சந்தையில் விற்கப்படுகின்றன.அதுபோல திருச்சி-மணப்பாறை முறுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆனதுங்க! மணப்பாறையின் பல குடும்பங்கள் பாரம்பர்யமான இந்த முறுக்குத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.  இவை உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய், சவுதி அரேபியா, பிரான்ஸ், ரோம் போன்ற பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மணப்பாறை நிலத்தடி நீர் சற்று உப்புச்சுவை உள்ளது. அதனால் தான் எங்கள் மணப்பாறை முறுக்குகளுக்கு அவ்வளவு ருசி, என்கிறார், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறுக்குத் தயாரிப்பைக் குடும்பத் தொழிலாகவே செய்து வரும் துரைசாமி என்பவர். 


முக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரி நதிக்கரையோரமே கண்கொள்ளாக் காட்சிகள் கொண்ட சுற்றுலாப்பகுதியாகும். காவிரி ஆறு திருச்சிக்கு அழகும் வளமும் சேர்க்கிறது.

மேலணை எனப்படும் முக்கொம்பு [காவிரி நதி மூன்றாகப் பிரியுமிடம்]

-o-o-O-o-o-
வீரப்பூரும், வளநாடும், மணப்பாறையும், துறையூரும், திருப்பஞ்சீலியும், சமயபுரமும், திருவானைக்காவலும் நெடிய சமூக - வரலாறு - கலாச்சாரப் பண்புகளைக்கொண்ட பகுதிகளாகும்.திருச்சி மாவட்டத்தில் வழங்கப்படும் பொன்னர்-சங்கர் வரலாற்றுக் கூத்துகளும், பாட்டுக்களும், நாட்டுப்புறக்கலைகளின் மேன்மை மிகு வெளிப்பாடாகும். பல்வேறு வகையான கதை சொல்லும் விதங்களுக்கு பொன்னர்-சங்கர் வரலாறு ஒரு வியத்தகு சான்றாகும்.  


’மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர், ந.மு.வெங்கடசாமி நாட்டார், “கல்கி” கிருஷ்ணமூர்த்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, அகிலன், ‘திருவாசகமணி’ கே.எம். பாலசுப்ரமணியன், கி.வா. ஜகன்நாதன், புலவர் கீரன், ’கவிதாமணி’ அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன், பிரேமா நந்தகுமார், ஐராவதம் மஹாதேவன் போன்ற கீர்த்தி மிக்க அறிஞர்களுக்கு திருச்சிராப்பள்ளியுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.


இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த முதல் சினிமா படத்தில் அவருடன் சேர்ந்து கதாநாயகனாக நடித்த எப்.ஜி. நடேச அய்யர் திருச்சியைச் சேர்ந்தவர்.


திருச்சி மாவட்டத்தில் பரவியிருக்கும் தமிழ்ப்பண்பாட்டின், வாழ்க்கை முறைகளின், கலைகளின் வெளிப்பாடாகவே, பெண்களின் நிலாக்காலக் கும்மிப்பாட்டுகள், தாலாட்டுக்கள், ஒப்பாரிகள், வயல் பாட்டுக்கள், கிராமிய நடனங்கள், நாடகங்கள், கரகாட்டம், தேவர் ஆட்டம், மயில் ஆட்டம், ஒயில் ஆட்டம், சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டுகள் போன்ற வீர விளையாட்டுக்கள் முதலியன விளங்குகின்றன.

திருச்சி இதயப்பகுதியான மெயின்கார்ட்கேட் அருகே அமைந்துள்ள
  மிகப்பழமை வாய்ந்த மிக உயரமான கிறிஸ்தவ தேவாலயம்

திருச்சியில் மிகப்பரபரப்பான பெரியகடைவீதியில் உள்ள செளக் பகுதியில் அமைந்துள்ள முகமதியர்கள் தொழும் பழமையான மசூதி.


இந்துக்கோயில்கள் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ தேவாலயங்களும், முஸ்லீம் மசூதிகளும் நிறைந்து வலுவான மதப்பிண்ணனி கொண்ட திருச்சியில் மதக்கலவரங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. மத நல்லிணக்கமும், அமைதியும் தவழும் அழகிய நகரமே திருச்சி.


சர்வ தேச விமான நிலையம், ரயில் நிலையங்கள், 24 மணி நேர வெளியூர் மற்றும் உள்ளூர் டவுன்பஸ் வசதிகள், இரவு நேர உணவு விடுதிகள், டாக்ஸி, ஆட்டோ, தங்கும் வசதிகள் கொண்ட மிகச்சிறந்த லாட்ஜ்கள், பசிக்கும் ருசிக்கும் பல உணவகங்கள் என்று அனைத்து வசதிகளும் உள்ள ஊர் திருச்சி. 


தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர நாயகனான எம்.கே.தியாகராஜ பாகவதரை முதன் முதலாக நாடக மேடையில் ஏற்றியது (ஹரிச்சந்திரா) எங்கள் ஊரான திருச்சியே.


சிறந்த நடிகையும் முதல் பெண் இயக்குனருமான டி.பி.ராஜலட்சுமி, டி.ஏ. மதுரம் ஆகியோரும் திருச்சியில் வாழ்ந்தவர்களே. திருச்சி ஸ்ரீரங்கம் நவாப் இராஜ மாணிக்கம் நாடக மேடைகளில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
நடிகர் திலகம், நவரசத்திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, ஹேமமாலினி, அசோகன், ரவிச்சந்திரன், ப்ரஸன்னா, திருச்சி லோகநாதன், எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, எம்.எம்.மாரியப்பா, லால்குடி ஜயராமன், கவிஞர் வாலி போன்ற அநேக கலைஞர்களை கலைத்துறைக்குத் தந்தது திருச்சி மாவட்டம்.
Sir C V Raman, The Great Scientist of India


நோபல் பரிசுபெற்ற அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன், திருச்சி திருவானைக்காவலில் பிறந்தவர். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், எழுத்தாளர்கள் திருலோக சீதாராம், சுஜாதா, மணவை முஸ்தபா, ‘நாதஸ்வரச்சக்ரவர்த்தி’ ஷேக் சின்ன மெளலானா, தமிழ் மொழியில் தந்தியைக்கண்டறிந்த சிவலிங்கம், இசை மேதை ’சங்கீதக் கலாநிதி’ ஏ.கே.சி. நடராஜன், ‘கலைமாமணி’ ரேவதி முத்துசாமி, நாடக இயக்குனர் ‘கார்முகில்’ முத்துவேலழகன், நடிகை டி.என்.மங்களம், மிருதங்க வித்வான் தாயுமானவன், வாய்ப்பாட்டு சம்பா கல்குரா ஆகியோரும் திருச்சி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் அடையாளங்கள்.


ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்பாடல்களை இயற்றி சாதனை புரிந்த மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த ஊர் திருச்சி (அதவத்தூர்). சுதந்திரப்போராட்ட வீரரும், இராமாயணத்தை ஆங்கிலத்தில் தந்தவருமான வ.வே.சு. அய்யர் வாழ்ந்ததும் திருச்சி (வரகனேரி) தான்.


பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்திற்கு நிலம் வழங்கி, அடிக்கல் நாட்டி, 1961 இல் கட்டடத்தைத் திறந்து வைத்து ஆதரவு காட்டினார்.    


தந்தைப் பெரியாரின் சுயமரியாதை நிறுவனம் மையம் கொண்டிருப்பதும் திருச்சியில் தான்.


காவிரியும், மலைக்கோட்டையும் திருச்சிக்குப் புராதனப் பெருமை என்றால், உலகப்புகழ்பெற்ற பாரதமிகுமின் நிறுவனம் [BHEL], படைக்கலன் தொழிற்சாலை [Small Arms Project - Ordnance Factory] , பொன்மலை ரயில்வே பணிமனை [Golden Rock Railway Workshop] முதலியன நவீன வளர்ச்சிக்குச் சான்றாகும்.


அனல் மின் நிலையங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் யாவும் திருச்சி BHEL மூலம் செய்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலேயுள்ள படத்தில் இருப்பது High Pressure Boiler Drum எனப்படும் ஒரு பாகம் மட்டுமே. இதன் எடை மிகவும் அதிகம். இதை தரை வழியாகப் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல சுமார் 80 க்கும் மேற்பட்ட டயர்கள் உள்ள ட்ரைலர் லாரி தேவைப்படுகிறது. இது அனல் மின் நிலையம் அமைக்கத்  தேவைப்படும் பல்வேறு பொருட்களில் ஒரு மிகச்சிறிய Component மட்டுமே, என்றால் அதன் மற்ற அனைத்து பாகங்களையும் ஒட்டுமொத்தமாக நீங்களே கற்பனை செய்துகொள்ளவும்.


தமிழகத்தின் நான்கு வகை நிலப்பகுதிகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து வகை நிலப்பகுதிகளையும் கொண்ட இயற்கையின் அற்புதப் படைப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம்.


பல்வேறு புகழ்பெற்ற கல்வி ஸ்தாபனங்களையும், ஆண்கள் பெண்கள் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகள், சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மிகச்சிறந்த மருத்துவ மனைகள், நீதி மன்றம் போன்ற அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளது இந்தத் திருச்சி மாநகரில்.  
முன்னால் குடியரசுத்தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள் படித்த கல்லூரியான செயிண்ட் ஜோஸப் ஆண்கள் கல்லூரி,  தேசியக்கல்லூரி [National College] பிஷப் ஹீபர் ஆண்கள் கல்லூரி, ஜமால் முகமது ஆண்கள் கல்லூரி,  ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி, சீதாலட்சுமி ராமஸ்வாமி பெண்கள் கல்லூரி,  ஸ்ரீமதி இந்திராகாந்தி பெண்கள் கல்லூரி முதலியன திருச்சியில் பல்லாண்டுகளாக புகழ்பெற்று விளங்கி வருபவையாகும். 

Mrs. Jayashree Muralidharan, Hon'ble District Collector of Tiruchi


Mrs. S. Sujatha, Hon'ble Mayor of Tiruchirapalli Municipal CorporationDr. K. Meena, Hon'ble Vice-Chancellor of Bharathidasan University, Tiruchi 
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் (கலெக்டர்), திருச்சி மாநகர கார்ப்பரேஷன் மேயர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்துணை வேந்தர் முதலிய முக்கியப்பதவிகளை இன்று வகிப்பவர்கள் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல, சமீபத்திய தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ’அ.இ.அ.தி.மு.க.’ பொதுச்செயலாளரான செல்வி. ஜெயலலிதா அவர்கள், தன் கட்சியின் அமோக வெற்றியால் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது, திருச்சி வாழ் மக்களுக்கும், குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக உள்ளது.


-o-oOo-o-
திருச்சிராப்பள்ளி சந்திப்பு
புகைவண்டி நிலையம்வெள்ளைக்காரர் காலத்திலிருந்து இன்றுவரை திருச்சி ஜங்ஷன் புகைவண்டி நிலையம் தென்னிந்திய ரயில்வே நிலையங்களிலேயே மிகவும் தூய்மையானது, வசதிகள் நிறைந்தது, வெகு அழகாக வடிவமைக்கப்பட்டது என்ற பெருமைகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.


பிரதான சாலையிலிருந்து ரெயில் நிலையத்திற்குள் செல்லும் நுழைவாயிலில் உண்மையான ரயில் எஞ்ஜினையே நிறுத்தி வைத்து சமீபத்தில் சாதனை புரிந்துள்ளார்கள். இது இந்த ரெயில் நிலையத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதாக உள்ளது. 
The Train Engine displayed on the main road in between 
Tiruchi Railway Station and the Central Bus Stand.
திருச்சிக்கு வாருங்கள்!


அனைத்தையும்


திகட்டாமல் பாருங்கள்!!


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்