என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 31 ஜூலை, 2013

33] சொத்து உரிமை

2
ஸ்ரீராமஜயம்ஒவ்வொரு மதத்திலும் சின்னங்களும், மூர்த்திகளும், சடங்குகளும் வேறுபடலாம். ஆனால் அருள் தரும் பரமாத்மா மாறவில்லை.

எனவே எவரும் தங்கள் மதத்தைவிட்டு விட்டு இன்னொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. இப்படி மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.

நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை  நம் விருப்பப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா?

அப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.oooooOooooo


ஓர் சம்பவம்திருநெல்வேலி பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தரோட கதை இது. அவர் பேர் சிவன். அங்கிருந்து புறப்பட்டு மடத்துக்கு அடிக்கடி வந்து போவார்.


அவர் வீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்! அப்படி ஒரு கட்டுப்பாடு.சிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு!

காஞ்சிபுரம் வரும்போது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.

பெரியவாளோட சந்நிதானத்துல போய் உட்கார்ந்தார்னா, அவருக்கு நேரம்- காலம் போறதே தெரியாது. பத்து நாள் தரிசனம் பண்ணினாலும், அவருக்குப் போதாது.

சரி, பெரியவா கிட்டே பேசுவாரோ? .......... ஊஹூம். 

சந்தேகம் ஏதாவது கேட்பாரோ? .................. அதுவும் இல்லை.


”பெரியவர் எங்கிட்டே பேசணும்னு அவசியமே இல்லீங்க! அவர் மனசுல நான் நிறைஞ்சிருக்கேனா என்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார்.

வெளியிடத்துக்கு வந்தார்னா, கண்ட இடத்தில் போய்க் கண்டதை வாங்கிச்  சாப்பிட மாட்டார்; அவ்வளவு ஏன், ஒரு வாய் ஜலம்கூட வாங்கிக்குடிக்க மிகவும் தயங்குவார். அவ்வளவு ஒரு ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வந்தவர்.

ஒரு தடவை தரிசனம் எல்லாம் முடிஞ்சு, பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கப் போனார் சிவன்.வழக்கமா கை அசைச்சு ஆசீர்வதிச்சு அனுப்பி வைக்கிற பெரியவா அன்னிக்கு என்னவோ, ”கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண்ணுங்கோ!”ன்னு குறிப்பா சொல்லி விடை கொடுத்தார் பெரியவர்.


செங்கல்பட்டுலே பஸ் ஏறி, திருநெல்வேலிக்குப் புறப்பட்டுட்டார் சிவன். 

அதே பஸ்ஸூல நாலு பேர், வயசுப் பசங்க உட்கார்ந்திருந்தாங்க. 


பஸ்ஸூக்குள்ளே கத்தலும் கூச்சலுமா அவங்க பண்ணின அமர்க்களம் தாங்க முடியலை. ஆனா, அந்த முரட்டுப் பசங்களை யாரு கண்டிக்கிறது!

மதுரை நெருங்குறப்போ, ஒரு குக்கிராமத்துல பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியா பார்க்குறப்போ, அந்தப் பெட்டிக் கடையில சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருக்கிறது ... சிவன் கண்ணுல பட்டுடுத்து. 

உடனே, ”ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்க”ன்னு பெரியவா சொன்ன வார்த்தைகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்தது.

சிவனுக்குத் தண்ணீர் குடிக்கணும் போல தாகமாகவும் இருந்தது. அதே நேரம், பெரியவா உத்தரவை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சுன்னு கீழே இறங்கிப் போய், அந்தப் பெட்டிக் கடையில ஒரு சோடா வாங்கிக் குடிச்சுட்டு வந்தார் சிவன்.

பஸ்ஸூக்குள்ள வந்து தன் ஸீட்டைப் பார்த்தால், அவரோட மஞ்சள் பையைக் காணோம். அதுலே பெரிசா சாமானோ பணமோ இல்லேன்னாலும், அவரோட ஸீட்டுல இருந்ததாச்சே!

அப்போ அந்த நாலு முரட்டுப் பசங்களும், ”யோவ் பெரிசு! ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா? அதோ பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு!”ன்னு கேலியா சொன்னாங்க.

மஞ்சள் பை பத்திரமாக கடைசி ஸீட்டுக்கு முன் ஸீட்டுல இருந்துது. 

‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்!’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன்.

அந்த நாலு பசங்களில் ரெண்டு பேர், சிவன் இதுவரைக்கும் உட்கார்ந்து வந்த அந்த ஸீட்டுல போய் உக்கார்ந்துண்டாங்க.

ராத்திரி வேளை. பஸ் கிளம்பியாச்சு. பஸ் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சுன்னே தெரியலே, எதிரில அசுர வேகத்துல வந்த லாரி ஒண்ணு இந்த பஸ் மேல மோதிடுத்து.

சிவனோட இடத்துல அடமா போய் உட்கார்ந்துண்டு, ”யோவ் பெரிசு, பின்னால போய் உட்காரு”ன்னு எகத்தாளமா சொன்ன அந்த ரெண்டு இள வயசுப் பசங்களும், அங்கேயே ’ஆன் த ஸ்பாட்’ செத்துப் போயிட்டாங்க. பெரியவர் சிவன் சின்ன காயம்கூட இல்லாம தப்பிச்சுட்டார்!

‘ஒரு சோடாவாவது வாங்கிச் சாப்பிட்டுப் போங்க’ன்னு பெரியவா ஏன் சொன்னார்? மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார்? அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன்? 

பெரியவர் சொன்னாரேங்கிறதுக்காக ராத்திரி அகால வேளையில சோடா சாப்பிட பஸ்ஸை விட்டு சிவன் இறங்கிக்கொண்டதால்தானே, அவரோட உயிர் தப்பிச்சுது?

இதெல்லாம் எப்படி நடக்கிறது! யோசிக்க, யோசிக்க… சிவன் அப்படியே ஹோன்னு அழுதுட்டாராம். தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.

ஆனா, அவருக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. தனக்கும் இன்னிக்குக் கண்டம்தான். பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு. 

யோசிக்க யோசிக்க, அந்த மஹான், ‘ஒரு சோடாவானும் சாப்பிட்டுட்டுப் போங்கோ’னு சொன்னது, தெய்வமே நேர்ல வந்து சொன்ன குறிப்பு மாதிரி தோணுச்சு அவருக்கு.

1983-ல், மஹா பெரியவா யாத்திரை எல்லாம் போயிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினப்போ நடந்த சம்பவம் இது.

சிவனோடு நான் பேசிண்டிருந்தபோது, அவர் தான் தன் உடம்பெல்லாம் சிலிர்க்க இந்தச் சம்பவத்தை விவரிச்சு சொன்னார். அதை நான் பெரியவாகிட்டே வந்து சொன்னேன்.

”சிவன் சௌக்கியமா இருக்காரோ?”ன்னு விசாரிச்சார் பெரியவா. 

தொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! 

அசடு; நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!” என்றார் பெரியவா.

அதைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு![  இது அமிர்த வாஹினி 27.06.2013 இல் ஒரு பக்தர் எழுதியுள்ளது ]


oooooOooooo
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
[31.07.2013 புதன்கிழமை]

திங்கள், 29 ஜூலை, 2013

32] அர்ப்பணித்தல்

2
ஸ்ரீராமஜயம்

வாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும். 

பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும். 

தன் ஆத்மாவை உயர்த்திக்கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பதுதான். 

அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு செய்து. நாமும் நலம் பெறலாம்;  உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.


நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.
oooooOooooo

பதி-பக்தி

ஓர் அபூர்வ நிகழ்வு


ஹோசூர் அம்மன் ஆலயத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள்.

கோயிலுக்கு வெளியே ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு நாடோடி இனத்தைச் சார்ந்த பெண். அவள் புருஷனுக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, பேதி. அவனைத்தான், அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள். 

பெரியவா கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.

வண்டியில் படுத்திருந்த தன் புருஷனை, ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக்கொண்டுவந்து பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள். 

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு ’காரே-பூரே’ என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்.

பெரியவா உடன் இருந்த தொண்டர்களிடம் சொன்னார்கள்:

”இந்த நாடோடி இனப்பெண்ணுக்கு எவ்வளவு பதிபக்தி பாரு. 

ஒரு ஆண்பிள்ளையை - புருஷனை - தான் ஒன்றியாகவே தூக்கிக்கொண்டு வந்திருக்காளே! பகவான், இவளுக்கு அவ்வளவு சக்தியைக் கொடுத்திருக்கிறான் ...... “சத்யவான் - சாவித்ரி” கதை புராணத்தில் படிக்கிறோம். 

இவளும் சாவித்ரி தான். ஆனா, நான்......” என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெளிவாகவே ஊகிக்க முடிந்தது.

“...... எமன் இல்லே! ..... எமனுக்கு எமன் - காலகாலன்!” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.

பெரியவா மிக்க கனிவுடன் ஒரு ஆரஞ்சுக்கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.

மறுநாள் அந்த நாடோடி இனப்பெண்ணும், அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள் தரிஸனத்துக்கு.

முந்தய தினம் பார்த்தபோது ’அந்தப்புருஷன் பிழைப்பானா?’ என்ற கேள்விக்குறி  இருந்தது. ஆனால் இன்றைக்கோ, உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கிறான் அவன்!   

நாடோடி இனப்பெண்ணின் கண்களில் ஏராளமான நன்றிப்பெருக்கு. ”தேவுடு, தேவுடு” என்று சொல்லிச்சொல்லி விழுந்து விழுந்து வணங்கினாள்.

காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா?

அந்த நாடோடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்!

oooooOooooo

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்


இதன் தொடர்ச்சி நாளை மறுநாள் 
புதன்கிழமை வெளியாகும்

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

சனி, 27 ஜூலை, 2013

31] போதும் என்ற மனம் !

2
ஸ்ரீராமஜயம்

கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். 

இதற்கு பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும்,

வாழ்க்கைத்தரம் உயர்வது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால் வீண் ஆசை தான் அதிகமாகும். 

தேவைகளையும் வீண் ஆசைகளையும் அதிகரித்துக்கொண்டே போனோமானால், நாம் எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.

தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான். 

போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.


oooooOooooo
 சுவையானதோர் நிகழ்ச்சி


மலைபோன்ற பிரச்சனைகள் 

பனி போல விலகின. 


அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி. அவருக்குப் பிறந்த  பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள். 

இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்களின் பக்தர்.


"கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மஹானிடம்  ஒரு தடவை சென்று தரிசித்து, அவரது ஆசியைப்  பெற்றுக்கொண்டு வா... உன் சிரமங்கள் எல்லாம்  காற்றோடு போய்விடும்" ... என்று யோசனை சொன்னார்.

அப்போதிலிருந்து அவரது மனதில் "காஞ்சி மஹானைப் பார்க்க வேண்டும்" என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.


தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது, காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே, காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது.


’உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும்  இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது’ என்கிற  எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச்  சென்று கொண்டு இருந்தார்.


இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ.... ஆரவாரமோ  ஏதும் அங்கு தென்படவில்லை.


"அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது"  என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம்  பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது  கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.


யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று  அவரது கண்கள் தேடியபோது, ஒரு வயதானவர் மட்டும் அவரது  கண்களில் தென்பட்டார்.


அம்பத்தூர்க்காரர் அவரிடம் கேட்டார்.


"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே... அவர் எங்கே போயிருக்கார்?"


"அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?"


இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும்  வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின.


அதனால் அந்த அம்பத்தூர்க்காரர், தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி,  தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.


"அந்த சாமியார்கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?"  கேள்வி பிறந்தது, அம்பத்தூர்காரருக்கு.


வந்தவரோ, 'இந்த வயதானவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார்.


வயதானவர் மீண்டும் தொடர்ந்தார்.


"சிரமம்.. சிரமம்னு சொல்றியே.. அதை ஏன் நீ படறதா  நினைக்கிறே.. அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ  நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..."


இது எப்படி சாத்தியம் என்று அம்பத்தூர்காரருக்கு மனதில் சந்தேகம்.


"அது எப்படி சுவாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும்  தாங்கிக்க வேண்டிருக்கு.. என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?"


வயதானவர் சிரித்தபடியே சொன்னார்.


"இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க.. உங்களோட  பெட்டி, மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு  போய்த்தானே ஆகணும்? 

அப்போ நாம் என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? 


அது போலத்தான் நாம படற சிரமங்களை  நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி  
அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.."  


இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.


அவர் வயதானவரைப் பார்த்து,


"பெரியவரே, இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல  இருக்கு. என் பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே  சொல்லிடறது நல்லதுதான்.. நீங்கள் சொல்ற மாதிரி இந்த  சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப்  போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே.. 


எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்... காத்திருந்து  அவரைப் பார்க்க முடியாது. எனக்கு இன்னமும் நல்ல காலம்  வரலே போலத் தோணுது.


ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம்  இதமாக இருக்கு... ஆமா நீங்க யாரு? இதே ஊரா?" என்று கேட்டார்.


வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு.


"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.

வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்... மலைத்துப்போய் நின்றார்.


அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிஸிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.

இத்தனை நேரம் ஒரு மாபெரும் மஹானிடம் சர்வ சாதாரணமாகப் பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி  அந்தப் பக்தர் வியந்தார்.


"நமஸ்காரம் பண்ணிக்கிறேன்" என்ற பக்தரை, சட்டையை  கழற்றும்படி சொன்னார் மஹான். 

தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் [அம்பத்தூர்க்காரர்] யோசிக்க, மடத்து  சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மஹான்.


யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின.


oooooOooooo
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
29.07.2013 திங்கட்கிழமை வெளியாகும்

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

வியாழன், 25 ஜூலை, 2013

30] இந்தியப் பண்பாடு

2
ஸ்ரீராமஜயம்தன் உயிரே போவதாக இருந்தாலும், அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாதிரி தன் உயிரையே எடுக்கக் கூடியவனாக இருந்தாலும் தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது இதுதான் இந்தியப்பண்பாடு.

நம் வரையறைகளை [LIMITATIONS] புரிந்துகொண்டு, நம்முடைய அறிவுரை [ADVISE] எங்கே எடுபடுமோ, அங்கே மட்டும் நல்லது பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வது தான், நம்மாதிரி சாதாரண நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.

”அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் என்று இல்லை, அறிவுக்கும் அப்படியே என்பதே பாரதீயர்கள் கடைப்பிடித்த உன்னத நெறி.”

நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.oooooOooooo

அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?

மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.


[பகுதி-1  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html  ]

[பகுதி-2  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/22.html  ]     

[பகுதி-3  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/23.html  ]   

[பகுதி-4  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/24.html ]   

[பகுதி-5  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/26.html ] 

[பகுதி-6  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/27.html ]     

[பகுதி-7  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/28.html ] 

[பகுதி-8  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/29.html ]

பகுதி 9  of  9


”புரந்தரகேசவலு! ஒனக்கு இருக்கற பக்தி, சிரத்தை, ஞானத்துக்கு நீ க்ஷேமமா இருக்கணும். 

அது சரி ..... நா பொறப்படற அன்னிக்கு இன்னொரு ஆசைய சொல்றேன்’னு சொன்னயே! அது என்னப்பா?”

புரந்தரகேசவலு சொன்னான்: 

“எங்கப்பாவோட மாடு மேய்க்கிற நேரத்ல அவரு சொல்வாரு, சாமி! .... 


‘புரந்தரா ... கடவுள்ட்ட நாம என்ன வேண்டணும் தெரியுமா? கடவுளே, எனக்கு மறு பொறவி [பிறவி] வேண்டாம். நா மோட்சத்துக்கு போவணும். நீ அதற்குக் கருணை பண்ணுன்னு வேண்டிக்கணும். அதுக்கு நாம சத்தியம் தர்மத்தோடு வாழணும். 

நீ மஹானுங்க யாரையாச்சும் எப்பனா சந்திச்சேன்னா, அவங்க கிட்ட மோட்சத்த வாங்கிக் குடுங்கன்னு வேண்டிக்க’ ... அப்டீனு சொல்வாருங்க சாமி. 


எனக்கு அந்த மோட்சத்தை நீங்க வாங்கிக் கொடுக்கணும், சாமி!”

பன்னிரண்டு வயதுச் சிறுவனின் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டது அந்த பரப்பிரம்மம்.

பிறகு சிரித்தபடி, “கவலைப்படாதே. உரிய காலத்லே ஒனக்கு பகவான் அந்த மோக்ஷ பிராப்தியை அநுக்ரஹம் பண்ணுவார்!” என்று ஆசீர்வதித்து விட்டு, அந்த ஊர் ஜமீன்தாரைக் கூப்பிட்டு, ‘இந்த புரந்தரகேசவலுவைப் பற்றிய விஷயம் எதுவாக இருந்தாலும் அதை ஸ்ரீமடத்துக்கு உடனே தெரிவிக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார். 

அனைவரும் ஊர் எல்லைவரை வந்து ஸ்வாமிகளை வழியனுப்பி வைத்தனர்.

ooooo இடைவேளை ooooo

இது நடந்து பல வருஷங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மத்யானம் இரண்டு மணி இருக்கும். ஸ்ரீ காஞ்சி மடத்தில் பக்தர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்த ஆச்சார்யாள், திடீரென்று எழுந்து மடத்தை விட்டு வெளியே வந்து வேகமாக நடந்தார். அனைவரும் பின்தொடர்ந்தனர். 

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் புஷ்கரணிக்கு வந்தவர், ஸ்நானம் பண்ணினார். பிறகு, ஜலத்தில் நின்றபடியே கண்மூடி ஏதோ ஜபிக்க ஆரம்பித்தார். 

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை ஸ்நானம் பண்ணி ஜபம். வழக்கத்திற்கு மாறாக இப்படி மாலை ஆறு மணி வரை ஏழெட்டு தடவை ஸ்நானம் செய்து ஜபம் பண்ணினார் ஸ்வாமிகள். 

ஸ்வாமிகள் கரையேறி படிக்கட்டில் அமர்வதற்குள் மடத்தைச் சேர்ந்த ஒருவர் வேகமாக ஓடிவந்து நின்றார். 

’என்ன?’ என்பதுபோல அவரைப் பார்த்தார் ஆச்சார்யாள். 

உடனே அவர், “கர்னூல்லேந்து ஒரு தந்தி. ‘புரந்தரகேசவலு சீரியஸ்’னு இருக்கு! யாருன்னு தெரியல பெரியவா” என்றார்.

ஸ்வாமிகள் அங்கிருந்தவர்களிடம், “அந்தப் புரந்தரகேசவலு இப்போது இல்லை! சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான். 

நா அவா ஊர்ல போய்த்தங்கியிருந்து கிளம்பற அன்னிக்கு, ‘எனக்கு நீங்க மோக்ஷம் வாங்கிக் கொடுக்கணும்’னு கேட்டான். ‘சந்திரமெளலீஸ்வர ஸ்வாமி கிருபையால ஒனக்கு அது கெடைக்கும்’ன்னு நான் சொன்னேன். 

திடீர்னு அவனுக்கு ஏதோ விஷக்காச்சல் ஏற்பட்டிருக்கு. மோக்ஷத்தையே நெனச்சுண்டு அவதிப்பட்டிருக்கான். 

கிரமமா அவன் மோக்ஷத்துக்குப்போய்ச் சேரணும்னா, இன்னும் ஆறு ஜன்மா [பிறவி] எடுத்தாகணும்.   

எப்படியாவது அவன் மோக்ஷத்தை அடையணும் என்பதற்காகத்தான் நான் இப்போ ஜபம் பண்ணி பிரார்த்திச்சேன். 

புரந்தரகேசவலு ஒரு நல்ல ஆத்மா!” என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று ஸ்ரீமடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார் மஹா ஸ்வாமிகள்.

குளத்தின் படிக்கட்டில் நின்றிருந்த மடத்து ஆசாமிகள் பிரமித்துப் போயிருந்தனர். 

மறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹான்களின் தபோவலிமையினால் மட்டுமே முடியும்.

இந்த பூலோகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து, பிறவிப்பெருங்கடலை நீந்தாமலேயே [அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல - அடுத்தடுத்து ஆறு பிறவிகள் எடுக்காமலேயே] புரந்தரகேசவலு இறைவன் திருவடிகளை அடையுமாறு செய்தவர் நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள். 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால் செய்ய முடியாத அற்புதங்களும் உண்டோ?


[இந்தக்குறிப்பிட்ட 
அற்புத நிகழ்வு மட்டும் 
இத்துடன் நிறைவடைகிறது.] 

oooooOooooo

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
27.07.2013 சனிக்கிழமை வெளியாகும்

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்