என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 27 ஜூலை, 2013

31] போதும் என்ற மனம் !

2
ஸ்ரீராமஜயம்





கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். 

இதற்கு பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும்,

வாழ்க்கைத்தரம் உயர்வது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால் வீண் ஆசை தான் அதிகமாகும். 

தேவைகளையும் வீண் ஆசைகளையும் அதிகரித்துக்கொண்டே போனோமானால், நாம் எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.

தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான். 

போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.


oooooOooooo




 சுவையானதோர் நிகழ்ச்சி


மலைபோன்ற பிரச்சனைகள் 

பனி போல விலகின. 


அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி. அவருக்குப் பிறந்த  பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள். 

இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்களின் பக்தர்.


"கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மஹானிடம்  ஒரு தடவை சென்று தரிசித்து, அவரது ஆசியைப்  பெற்றுக்கொண்டு வா... உன் சிரமங்கள் எல்லாம்  காற்றோடு போய்விடும்" ... என்று யோசனை சொன்னார்.

அப்போதிலிருந்து அவரது மனதில் "காஞ்சி மஹானைப் பார்க்க வேண்டும்" என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.


தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது, காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே, காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது.


’உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும்  இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது’ என்கிற  எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச்  சென்று கொண்டு இருந்தார்.


இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ.... ஆரவாரமோ  ஏதும் அங்கு தென்படவில்லை.


"அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது"  என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம்  பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது  கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.


யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று  அவரது கண்கள் தேடியபோது, ஒரு வயதானவர் மட்டும் அவரது  கண்களில் தென்பட்டார்.


அம்பத்தூர்க்காரர் அவரிடம் கேட்டார்.


"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே... அவர் எங்கே போயிருக்கார்?"


"அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?"


இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும்  வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின.


அதனால் அந்த அம்பத்தூர்க்காரர், தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி,  தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.


"அந்த சாமியார்கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?"  கேள்வி பிறந்தது, அம்பத்தூர்காரருக்கு.


வந்தவரோ, 'இந்த வயதானவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார்.


வயதானவர் மீண்டும் தொடர்ந்தார்.


"சிரமம்.. சிரமம்னு சொல்றியே.. அதை ஏன் நீ படறதா  நினைக்கிறே.. அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ  நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..."


இது எப்படி சாத்தியம் என்று அம்பத்தூர்காரருக்கு மனதில் சந்தேகம்.


"அது எப்படி சுவாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும்  தாங்கிக்க வேண்டிருக்கு.. என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?"


வயதானவர் சிரித்தபடியே சொன்னார்.


"இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க.. உங்களோட  பெட்டி, மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு  போய்த்தானே ஆகணும்? 

அப்போ நாம் என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? 


அது போலத்தான் நாம படற சிரமங்களை  நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி  
அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.."  


இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.


அவர் வயதானவரைப் பார்த்து,


"பெரியவரே, இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல  இருக்கு. என் பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே  சொல்லிடறது நல்லதுதான்.. நீங்கள் சொல்ற மாதிரி இந்த  சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப்  போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே.. 


எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்... காத்திருந்து  அவரைப் பார்க்க முடியாது. எனக்கு இன்னமும் நல்ல காலம்  வரலே போலத் தோணுது.


ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம்  இதமாக இருக்கு... ஆமா நீங்க யாரு? இதே ஊரா?" என்று கேட்டார்.


வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு.


"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.

வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்... மலைத்துப்போய் நின்றார்.


அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிஸிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.

இத்தனை நேரம் ஒரு மாபெரும் மஹானிடம் சர்வ சாதாரணமாகப் பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி  அந்தப் பக்தர் வியந்தார்.


"நமஸ்காரம் பண்ணிக்கிறேன்" என்ற பக்தரை, சட்டையை  கழற்றும்படி சொன்னார் மஹான். 

தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் [அம்பத்தூர்க்காரர்] யோசிக்க, மடத்து  சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மஹான்.


யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின.


oooooOooooo




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
29.07.2013 திங்கட்கிழமை வெளியாகும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

53 கருத்துகள்:

  1. சுவையான அற்புத நிகழ்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியும் திருப்தியும் தந்தது... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அடக்கத்தின் உருவமாக பெரியவா காட்சி தந்து அருள் மழை பொழிந்துள்ளார்! தேவை என்ற ஒன்றை வளர்த்தால் தரித்திரமே மிஞ்சும் என்ற சிறப்பான பொன்மொழி தொகுப்புகளுடன் பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு

  3. கஷ்டம் துக்கம் சிரமம் வறுமை எல்லாம் இப்போதுதான் தெரிகிறது. சின்ன வயதில் இவை என்னவென்று தெரிந்திருக்கவில்லை. அதுதான் வாழ்க்கை என்று உணர்ந்த அந்த ஞானம் இப்போதில்லையே. திரும்பிப் பார்க்கும்போதுதான் எவ்வளவு சிரமங்கள் அனுபவித்து வந்திருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.பதிவுக்குப் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.//

    இந்த போதும் என்ற மனம் வந்து விட்டால் வாழ்வில் வேறு என்ன வேண்டும்!

    அது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.."//

    இறைவனிடம் சரணாகதி தான் நம்மை பாதுகாக்கும் உண்மை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவர் அவர்களின் அமுத மொழி பகிர்வை இறை நம்பிக்கை அளிக்கும் வண்ணம் அழகாய் பகிரும் உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சுவையான அற்புத நிகழ்ச்சி பற்றிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  6. அருமையான உவமை
    உங்கள் மூலம் எங்களுக்கும்
    பாரம் இறக்கும் ரகசியம் புரிந்தது
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான். //

    நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.." //

    ஆஹா!!

    அடியேனுக்கு ஒரு ஐயம்... பூணுல் போட்டுதான் பெரியவாளை நமஸ்கரிக்கனுமா?

    பதிலளிநீக்கு
  8. தொடர்பதிவு அழைப்பு :

    http://sivamgss.blogspot.in/2013/07/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  9. மஹாபெரியவாளைப் பற்றி எவ்வளவு கேட்டாலும் அலுப்பதில்லை;மாறாக பிரமிப்பே எற்படுகிறது

    பதிலளிநீக்கு
  10. தேவைகளையும் வீண் ஆசைகளையும் அதிகரித்துக்கொண்டே போனோமானால், நாம் எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.
    தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான். //

    பொருள் வேண்டும் உலகத்தில் அருள் வேண்அ அறிவுரை அற்புதம்!// நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான்.

    போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.

    பொன்னான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு

  12. யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ’அமுத மழை ’பொழிவில் நனைந்தபின் இன்னலகள் சூரியனைக்கண்ட பனியாய் நீங்கியிருக்கும்..!1

    பதிலளிநீக்கு
  13. "என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.

    வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்... மலைத்துப்போய் நின்றார்.

    எத்தனை எளிவந்த கருணை கொண்டு அருள் பொழிந்திருக்கிறார்.!

    பதிலளிநீக்கு
  14. "சிரமம்.. சிரமம்னு சொல்றியே.. அதை ஏன் நீ படறதா நினைக்கிறே.. அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..."

    எவ்வளவு பெரிய உண்மை, எளிமையான வார்த்தைகளில். நன்றி

    பதிலளிநீக்கு

  15. No end to worries in our Old Age. well said, Sir.

    பாலஸ்தாவத் க்ரீடாsஸக்த:
    தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
    வ்ருத்தஸ்தாவத் சிந்தாsஸக்த:
    பரமே ப்ருஹ்மணி கோsபினஸக்த:

    சிறு வயதில் விளையாட்டே மனசில் திளைத்து இருக்கிறது.
    யௌவனத்திலே யுவதிகளிடம் மனம் திளைத்திருக்க
    விருத்தப்ப்யாசத்தில் கவலை கவலை என்றே இருக்க
    என்று தான் மனம் அபாரத்தை ந்த பிரும்மனிடம் லயிக்குமோ
    என பஜ கோவிந்த வரிகள் நினைவுக்கு வராமல் இல்லை.

    வாழ்க்கையில் என்னதான் அறிவு, பொருள் பெற்று இருந்தாலும்,
    சில பிரச்னைகளை நாம் தீர்க்க இயலும். சில வற்றை நாம் தீர்க்க முடியாது. எதை தீர்க்க இயலும் எதை தீர்க்க இயலாது என தெரிந்திருந்து இருப்பது மட்டுமன்றி,இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் புரிந்து வைத்துகொள்வதால் மனம் ஓரளவுக்கு நிம்மதி பெற முடியும்.

    எல்லாமே பகவத் சங்கல்பம் என்று பாரத்தை அவன் மேல் போட்டு விடுவது தான் அல்டிமேட்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  16. திரு வை.கோ. அவர்களின் விளக்கம் மின்னஞ்சல் மூலமாக...


    //அடியேனுக்கு ஒரு ஐயம்... பூணுல் போட்டுதான் பெரியவாளை நமஸ்கரிக்கனுமா? //

    அப்படி எல்லோரும் செய்ய வேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ ஏதும் இல்லை, மேடம்.

    இருப்பினும் ஐயர், ஐயங்கார், ஒருசில செட்டியார்கள், க்ஷத்திரியர்கள் போன்றோர் பூணூல் போட்டுக்கொள்ள வேண்டியவர்களாகவும், அதற்கான தினசரி சந்தியாவந்தனம் போன்ற நீர்க்கடன் செலுத்த வேண்டியவர்களாகவும் சொல்லப்பட்டுள்ளது.

    அவர்கள் மட்டும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா போன்ற மஹான்களை தரிஸித்து நமஸ்கரிக்கும் போது, சட்டை, பனியன் போன்றவற்றை கழட்டிவிட்டு, திருமணம் ஆகாதவர் என்றால் ஒத்தை வேஷ்டியுடனும், திருமணம் ஆனவர் என்றால் மூன்று வஸ்திரங்களுடனும், நான்கு முறை நமஸ்கரிப்பது வழக்கம்.

    [3 வஸ்திரங்கள் = பஞ்சக்கச்ச வேஷ்டி, உத்ரீயம் + மூன்றாவதாக ஓர் துண்டு இவற்றை பெல்ட் போல இடுப்பில் சுற்றிக்கொள்ளணும் மேலே பூணூல் தவிர வேறு ஏதும் துணி மார்பு பக்கம் இருக்கக் கூடாது.]

    இந்த நிகழ்வில் தன் கஷ்டங்களை மஹானிடம் சொல்லிப்போக வந்தவர், பூணூல் அணிய வேண்டிய இனத்தைச் சார்ந்தவராகவே இருந்திருப்பார்.

    ஆனால் அவர் பூணூல் அணியாமல் இருக்கிறார்.

    அதுவே அவர்படும் கஷ்டங்களுக்கு மூலகாரணம் என ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும்.

    அதனாலேயே அவருக்கு மந்திரம் சொல்லி, பூணூல் அணிவித்துக் கூட்டிவருமாறு அனுக்கிரஹம் செய்துள்ளர்கள்.

    அதுபோல திருமணம் ஆன பிராமண ஸ்திரீகள் 9 கெஜம் மடிசார் புடவையுடன் போய், மஹான்களை நமஸ்கரித்தல் நல்லது. ஆனால் இதில் எந்தவித கட்டாயமும் அவர்கள் [ஸ்ரீ மடத்தில்] இப்போது செய்வது இல்லை.

    நேரிடையாக பாத பூஜை செய்ய விரும்புபவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது தலையில் குடுமி, மார்பில் பூணல், இடுப்பில் பஞ்சக்கச்சம் போன்ற 3 வஸ்திரங்கள் + மனைவிக்கு 9 கெஜம் மடிசார் புடவை அவசியம் இருக்க வேண்டும்.

    இதற்கெல்லாம் செளகர்யப்படாதவர்கள், பாதபூஜை செய்ய விரும்பினால், அவர்கள் கைப்பட புஷ்பத்தை வாங்கி, ஸ்ரீ மடத்தைச் சார்ந்த வேறொரு பெரியவர், அவர்கள் சார்பில் பாதபூஜை செய்து, பிரஸாதம் அளிப்பது வழக்கம்.

    பதிலளிநீக்கு
  17. "இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க.. உங்களோட பெட்டி, மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்?

    அப்போ நாம் என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா?

    அது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.."
    To give the mind to do Saranagathi is also blessed by the God no?
    viji

    பதிலளிநீக்கு
  18. உங்கள் பதிவு , பகவான் மேல் பாரத்தைப் போட்டால் வரும் பிணி எல்லாம் பனியாக கரைந்து விடும் என்று அசாத்திய தைரியத்தை தோற்றுவிக்கிறது.

    மேலே நீங்கள் நிலாமகளுக்கு கூறியிருக்கும் விளக்கம் என்னுடைய சந்தேகத்தையும் நிவர்த்தி செய்வதாய் அமைந்துள்ளது.
    நன்றி வைகோ சார்.

    பதிலளிநீக்கு
  19. //போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.//

    நல்ல கருத்து. ஆனால் நம்மில் பலர் போதும் என்ற எண்ணமே இல்லாது அலைந்து கொண்டு தான் இருக்கிறோம்....

    நல்ல பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  20. திரு. வை.கோ. சார் மின்னஞ்சல் மூலம் ....

    நமஸ்கரிப்பது பற்றி மேலும் சில விளக்கங்கள்:


    தங்கள் முன்னோர்களின் விருப்பப்படியும், வழக்கப்படியும், சம்ப்ரதாயங்கள்படியும், பூணூல் [புனிதமான நூல்] அணிந்து கொண்டுள்ளவர்கள், தங்களை விட வயதில் மூத்தவர்களை நமஸ்கரித்து எழுந்தபின் உடனடியாக ”அபிவாதயே” என்று ஒன்று சொல்லுவார்கள்.

    அப்போது தன் இரு கையின் விரல்களையும் தன் இரு பக்க காதுகளையும் அடைத்தவாறு குனிந்த நிலையில் இதைச் சொல்லுவார்கள்.

    அது தன்னைப்பற்றிய ஓர் மிகச்சிறிய அறிமுகமாகும். [INTRODUCTION]

    அதில் தான் எந்த கோத்ரத்தில் பிறந்தவன்,

    அந்த கோத்ரத்தில் முதன்முதலாக உதித்த 5 ரிஷிகளின் பெயர்கள் என்ன,

    தான் படித்த [அல்லது முறையாகப் படித்திருக்க வேண்டிய] வேதம் எது, சூத்ரம் எது,

    நமஸ்கரிக்கும் எனக்கு பூணூல் போடும் போது வைத்துள்ள பெயர் என்ன?

    என்பதெல்லாம் சொல்வது உண்டு.

    நான் இதுபோல என்னைவிடப் பெரியவர்களை நமஸ்கரிக்கும் போது சொல்லும் அபிவாதயே மந்திரம் இதோ:

    -=-=-=-=-

    அபிவாதயே,

    ஸாத்ய,
    சாங்கிருத்ய,
    கெளர்வீத,
    த்ரியா ரிஷேயப்
    பிரவரான்வீத

    சங்கிருதி கோத்ரஹா

    ஆபஸ்தம்ப சூத்ரஹா

    யஜுஷ் ஷ்யாஹா அத்யாயீ

    ஸ்ரீ கோபாலகிருஷ்ண சர்மா

    நாமா அஹம் அஸ்மிபோஹோ.

    -=-=-=-=-

    அதாவது ”ஸாத்ய, சாங்கிருத்ய, கெளர்வீத, திருயாரிஷேயப் பிரவரான்வீத என்ற திருநாமங்களை உடைய ரிஷிகளின் பரம்பரையான ”சங்கிருதி” என்ற கோத்ரத்தில் பிறந்தவனும், ஆபஸ்தம்ப சூத்ரத்தில் என் கர்மாக்களை செய்து வருபவனும், யஜுர் வேதத்தை முறைப்படி மாணவனாகக் கற்று அதையே பின்பற்றி வருபவனும் ஆகிய எனக்கு பூணூல் போடும் சமயம் என் முதல் குருவாகிய என் தகப்பனார் எனக்கு வைத்த பெயர் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் என்பது,

    நான் உங்களை நமஸ்கரிக்கிறேன், என்னை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்”

    என்பது இதன் பொருள்.

    ooooo

    இதை பூணூல் போடப்பட்ட ஒரு ஆண், தன்னைவிட வயதில் மூத்த ஆணுக்கு, நமஸ்காரம் செய்து விட்டுச் சொன்னால் போதுமானது.

    வயதில் மூத்த பெண்மணிகளை, மந்திரம் ஏதும் சொல்லாமல், வெறும் நமஸ்காரம் செய்தால் போதுமானது.

    ooooo

    அதுபோல துறவிகளை நமஸ்கரிக்கும் போது இந்த “அபிவாதயே” என்ற மந்திரம் சொல்லத் தேவையில்லை.

    நாம் யார் ? எந்த கோத்ரம், எந்த சூத்ரம், எந்த பரம்பரையில் வந்தவர், எந்த வேதம் படித்தவர் அல்லது படிக்காதவர் ;) என்பதெல்லாம் ஞானிகளுக்குத்தெரியும்.

    அவர்களிடம் நாம் ஏதும் சொல்ல வேண்டியது இல்லை.

    அவர்கள் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட, முக்காலமும் உணர்ந்த மஹான்கள்.

    ஆனால் மஹான்களை நமஸ்கரிக்கும் பூணூல் அணிந்த நபர்கள், நான்கு முறைகள் சாஷ்டாங்கமாக [தலையோடு கால் உடலின் அனைத்துப்பகுதிகளும் தரையில் படுமாறு] நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    இதில் முதல் நமஸ்காரம்

    அந்த குரு என்ற மஹானுக்கு

    மீதி மூன்று நமஸ்காரங்களும்

    குருவின் குருவான பரமகுரு,

    பரமகுரு அவர்களின் குருவான பரமேஷ்டிகுரு,

    பரமேஷ்டிகுரு அவர்களின் குருவான பராத்பரகுரு

    ஆகியவர்களுக்காக நாம் செய்வது.

    பதிலளிநீக்கு
  21. சில சமயம் இதுமாதிரி ஆகிவிடும். விலாசம் கேட்டுக் கொண்டு விலாசதாரரிடமே சென்று விடுவோம். அவர்களும் தங்களைக் காட்டிக் கொள்ளாமலேயே என்ன ஏதென்று நம்மை வினவுவார்கள்.

    // தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் [அம்பத்தூர்க்காரர்] யோசிக்க, மடத்து சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மஹான். //

    இந்த இடத்தில் சற்று நெருடல். பூணூல் அணிந்தவர்களை மட்டும்தான் பெரியவர் ஆசீர்வாதம் செய்வார் என்பது போல் உள்ளது. பின்னாளில் இது கடும் சர்ச்சையைக் கிளப்பலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே சொன்ன எனது கருத்துரையை நான் எழுதி இருக்கக் கூடாதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்தது. அதில் சொல்லப்பட்ட செய்தியை மேலே சொன்ன கருத்துரைக்கு நீங்கள் தந்த விளக்கமாகவே இங்கு பதிகின்றேன். இது பல சந்தேகங்களை நீக்கும்.

      // திரு VGK அவர்களிடமிருந்து எனக்கு மின்னஞ்சலில் வந்துள்ள ஓர் விளக்கம்:

      *****தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் [அம்பத்தூர்க்காரர்] யோசிக்க, மடத்து சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மஹான்.*****


      //இந்த இடத்தில் சற்று நெருடல். பூணூல் அணிந்தவர்களை மட்டும்தான் பெரியவர் ஆசீர்வாதம் செய்வார் என்பது போல் உள்ளது. பின்னாளில் இது கடும் சர்ச்சையைக் கிளப்பலாம்.//

      அன்புள்ள ஐயா, வணக்கம்.

      ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை தரிஸித்தவர்கள், அவருடன் பழகியவர்கள், பேசியவர்கள், இந்தியர்கள் மட்டுமல்ல, ஹிந்துக்கள் மட்டும் அல்ல.

      பல தேசங்களைச் சார்ந்த பல மதங்களையும், பல இனங்களையும், சேர்ந்தவர்கள் தரிஸித்து ஆசி பெற்றுச் சென்றுள்ளனர்.

      அதுபோல உலகின் பல இடங்களைச் சார்ந்தவகள், பல மொழிகளைப் பேசுபவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆறுதல் அளித்து அனுக்ரஹம் செய்து ஆசி அளித்துள்ளார்கள், இந்த மஹான்.

      அவர் ஸித்தி அடைந்த அன்று நான் காஞ்சீபுரத்தில் இருந்தேன். அந்த ஊர் பூராவும் ஒரே க்யூ வரிசை.

      நீண்ட க்யூ வரிசையில் இருந்த லக்ஷக்கணக்கான மக்களில், கைகளில் மலர் மாலைகளுடனும், கண்களில் கண்ணீருடனும் இருந்தவர்களில் பலர் முகமதிய + கிறிஸ்தவ மதத்தலைவர்கள்.

      இந்த உலகில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களிடமும், ஜீவராசிகளிடமும் பேரன்பு கொண்டிருந்தவர் நம் மஹா ஸ்வாமிகள்.

      அனைத்து மதத்தையும் ஆதரித்தவர். அனைவருக்கும் அருளாசி வழங்கியவர்.
      தன்னை தரிஸிக்க வந்த அனைவரையுமே சமமாக மதித்தவர்.

      இருப்பினும் பூணல் அணிந்து தரிஸிக்க வேண்டியவர்கள், அவ்வாறு மட்டுமே தரிஸிக்க வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்தவே அவ்வாறு செய்துள்ளார்கள்.

      அதாவது அவரவர்களின் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்துள்ள சம்ப்ரதாய வழக்கங்களை, இந்தக்கால இளைஞர்கள் மாற்றிக்கொள்ளக்கூடாது என்பது மட்டுமே, அவரின் இந்த செயலுக்கான விளக்கமாக நாம் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

      மற்றபடி யார் வேண்டுமானாலும் அவரை தரிஸிக்கலாம். அவரவர்களின் வழக்கப்படி எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிந்து, நமஸ்கரித்து ஆசிகள் பெற்றுக்கொள்ளலாம். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இதில் கிடையாது.

      நம் முன்னோர்கள் காட்டியுள்ள தர்ம வழிப்படி வாழாமல், நம் இஷ்டப்படியெல்லாம் மாற்றிக்கொண்டு வாழ்வதால் தான் இன்று பல்வேறு சோதனைகளுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது.

      அந்த கஷ்டப்படுவதாகச் சொல்லி வந்த அம்பத்தூர்க்காரரும், ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் தரிஸனத்தால் இதை நன்கு உணர்ந்திருப்பார்.

      அவரின் கஷ்டங்களுக்கெல்லாம் மூல காரணமே, அவர் தனது குல வழக்கங்கள்படி வாழாமல், தன் இஷ்டப்படி வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ள படியால் மட்டுமே.

      அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா ஸ்வாமிகளால், அவருக்கு இங்கு மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டு அனுக்ரஹம் செய்யப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோமாக.

      திருமதி நிலாமகள் அவர்களுக்கு நான் கொடுத்துள்ள விளக்கங்களையும் தயவுசெய்து பொறுமையாகப் படித்துப் பார்க்கவும்.

      அன்புடன் VGK //

      நீக்கு
  22. நாம் இறைவனை நோக்கி ஓரடி வைத்தால், இறைவன் நம்மை நோக்கி பத்தடி வருவான் என்பது போல தன்னை தேடி, நாடி வந்த அம்பத்தூர்காரருக்கு அந்த கருணைத் தெய்வம் முன் வந்து அருள் மழை பெய்துவிட்டார்!

    பதிலளிநீக்கு
  23. மிக அருமையான தொடக்கம் அண்ணா.. போதும் என்ற மனம் மனிதனுக்கு அவசியம்.... யாருக்கு அப்படி போதும்னு தோணுது?? ஹுஹும் வாய்ப்புகள் மிகக் குறைவே....

    குழந்தையில் இருந்து தொடங்கி வயசானவா வரைக்கும் போதும் என்ற மனசு ஏற்படறதே கிடையாது...

    பசிக்கு குழந்தை அழறது.. பால் கொடுக்கிறா அம்மா... அதே குழந்தை பொம்மையை பார்த்தாலும் கை நீட்டிக்காட்டி அழறது.. வேணுமாம் விளையாட.. மனிதனின் ஆசை குழந்தையில் இருந்தே இப்படித்தான் ஆரம்பிக்கிறது....

    வளர வளர புத்தியும் வளருகிறது... அதோடு ஆசைகளும்.... கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வேர் பரவி விழுது படரும் அளவுக்கு ஆசைகள் மனிதனின் மனதில்....

    வயசானவாளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிட ஆசை.. சுகர் பிபி கொலஸ்ட்ரால் இத்தனை இருந்தாலும் நாக்குக்கு ருசியா சாப்பிடாம என்ன? போறக்கட்டை தானே.. இப்பக்கூட நாக்குக்கு ருசியா சாப்பிடலன்னா எப்படி? அதாவது உயிர் வாழ்வதை விட... இருக்கும் வரைக்கும் நல்லா சாப்பிடனும்னு ஆசை....

    இப்படி மனிதனுக்கு பலவித ஆசைகள். ஒன்னு கிடைச்சா அதோடு திருப்தி அடையறது என்பது கிடையவே கிடையாது,இப்படி ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க... அங்கே தான் கோபம் துவேஷம் பொறாமை வெறி இப்படி எல்லா துர்குணங்களும் பிறக்க ஏதுவாகிறது... கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைந்துவிட்டால் உலகமே அமைதிப்பூங்காவாகிவிடும் தானே?

    மனிதன் மனதில் ஆசைகள் அதிகரிக்க... தேவைகள் அதிகமாகிறது.. தேவைகள் அதிகரிக்க... குற்றங்கள் அதிகமாகிறது... தப்பு செஞ்சுட்டோம்.. ஸ்வாமிக்கு லஞ்சம் கொடுத்து சமாளிச்சிருவோம்... கோயில்ல உண்டில காச போட்ருவோம்...

    இப்படி ஒவ்வொன்னா கிளம்பி கோயில்கள் அதிகமாகிவிட்டது....

    அருமையான பகிர்வு... அம்பத்தூர்க்காரர் தன் வறுமையை சொல்ல மஹாப்பெரியவாளை போய் பார்க்கச்சொன்னார் ஒரு நண்பர் சரி...

    மஹாப்பெரியவாளை போய் பார்க்குமுன்னரே மனசுலயே தியானம் பண்ணிட்டே இருந்தாலே அவரை நேரில் பார்ப்பதற்கு சமம் அல்லவா?

    ஆனாலும் ஆசை யாரை விட்டது... தேடிப்போறார் மனிதர்.. மஹாப்பெரியவா எப்படி இருப்பார்னு இவர் கற்பனை வெச்சிட்டு இருந்தார்னு தெரியல...

    ஆனா எளிமையான வயதானவர் அப்டின்னு படித்தபோதே இவர் தான் கண்டிப்பா மஹாப்பெரியவாளா இருக்கணும்னு எனக்கு தோணித்து..

    தோணின மாதிரியே பெரியவா அவரைப்பார்த்து கேட்ட கேள்வி ஒவ்வொன்னும் அற்புதம்...

    நம்முடைய பாரம் எல்லாம் பகவான் கிட்ட ஒப்படைச்சுட்டு நம்பிக்கையோடு அமைதியா இருக்கச்சொல்றார்....

    நல்லதை செய்துட்டு... பகவானை தியானிச்சுக்கிட்டே பொறுமையா இருந்தால் சகலமும் நன்மை பயக்கும்னு பெரியவா சொன்னதை படிக்கும்போதே உணரமுடிந்தது...

    எல்லா அபூர்வ சக்தி இருக்கும் மஹாப்பெரியவா எதற்கும் ஆசைப்படாம.... இத்தனை எளிமையா வாழறதைப்பார்த்தப்பின்னும் ஆசைகளை அடியோடு நிறுத்திக்கொள்ளவில்லை என்றாலும் குறைத்துக்கொள்ள தோன்றுகிறது...

    அன்பு நன்றிகள் அண்ணா அருமையான பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
  24. அபிவாதனம் என்பதே நம்மைப் பற்றிய ஒரு ORAL VISITING CARD! இந்த INTRUவை வைத்துக் கொண்டு, ஒரு FAMILY TREE ஐயே உருவாக்கி விட முடியும் என்பது அடியேனின் நம்பிக்கை!

    பதிலளிநீக்கு
  25. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அதனால் நான் வாழ்க்கையில் அடையும் நிம்மதி சொல்லில் அடங்காது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.//

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அந்த காலத்துல பழமொழி எல்லாம் சும்மா இல்ல, அனுபவிச்சு, அனுபவிச்சு ஏற்படுத்தி இருக்கா.

    திருப்தி வரணும்ங்கறதுக்காகத்தான் அன்னதானத்தை ஏற்படுத்தினா. வயிறு ரொம்பினா போதும்ன்னு சொல்லிடுவோமே. ஆனா பணமா கொடுத்தா இவ்வளவு வெச்சிருக்கா, இன்னும் கொஞ்சம் கொடுக்கக் கூடாதான்னு தோணுமே.

    //தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் [அம்பத்தூர்க்காரர்] யோசிக்க, மடத்து சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மஹான்.//

    மஹானல்லவா, பூணூல் அணியாததற்கு திட்டாமல், பூணூலை அணிவிக்கச் செய்து ஆசீர்வதித்தார். என்ன ஒரு கருணை

    பதிலளிநீக்கு
  27. மதி நாடுவது நிம்மதி
    அதுதான் அதற்க்கு
    கிடைக்கும் வெகுமதி

    இருப்பதைக் கொண்டு
    சிறப்புடன் வாழும் இலக்கணம்
    அறிந்துகொண்டால் பிலாக்கணம்
    பாடாமல் இன்பமாய் இருக்கலாம்
    எந்நிலையிலும்.

    பதிலளிநீக்கு
  28. "நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.."

    //போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.//
    இந்தமனம் இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  29. //அது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.." //

    ஆமாம், எல்லாரும் சொல்றது இது தான், பரிபூரணமாய் சரணாகதி அடைந்து விட வேணும். அவநம்பிக்கையே இருக்கக் கூடாது. ஆனால் இந்த முட்டாள் மனம் அதை எல்லாம் மதிக்காது. பிரச்னையே அங்கு தான். :(

    பதிலளிநீக்கு
  30. தேவைகள் பூர்த்தியான பிறகும் கூட அது இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்ற எண்ணமும் ஏற்பட்டு விடுகிறது. இன்னும் தேவைகளை அடைய ஆசைப்படுகிறோம். அதற்காக முயற்சிக்கிறோம். எவைகளுமே இல்லாது நம் முன்னோர்கள் வாழில்லையா என்றும் நினைக்கிறோம்.
    இதுவும் காலங்கடந்து ஏற்படும் எண்ணம்தான். ஓரளவு வயது முதிர்வும் இதற்குக் காரணமாகவும் இருக்கிறது. இதே பக்தி வழியில் முதிர்வு அடைய ஆசைப்பட்டால், அதுவும் பலனை எதிர்ப்பார்க்காது
    ஆசைப்பட்டால், கிடைக்கலாம் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்புள்ளது.
    குருவின் தரிசன மகிமையோ மகிமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  31. வாழ்க்கையின் துன்பங்களை சுமந்து சுமந்து சோர்ந்துபோகாமல் அதை ஏற்கும் பக்குவம் கொண்டிருக்கவேண்டும் அல்லது அதை பகவானிடம் ஒப்படைத்துவிட்டு காலத்தைக்கடத்தவேண்டும். பெரியவர் தக்க உதாரணத்துடன் விளக்கியது வியக்கவைத்தது. பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  32. மகா பெரியவரின் சிறப்புகளை மேலும் தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  33. எனக்கும் பூணூல் அணிவித்தது குறித்து சங்கடமே!பின்னூட்டத்தில் நீங்கள் விளக்கம் தெரிவித்திருந்தாலும்....சரி எதொ ஒன்னு போ! விடு,விடுனுதான் மனசு சொல்கின்றது

    பதிலளிநீக்கு
  34. //போதும் என்ற மனமே பொன்னான த்ருப்தியை தருவது// சிறப்பான வரிகள்.

    பதிலளிநீக்கு
  35. //கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். // மிகச் சரி.

    பதிவும் கருத்துக்களும் சுவை.

    பதிலளிநீக்கு
  36. அன்பின் வை.கோ - போதும் என்ற மனம் -= பதிவு அருமை - போதும் என்ற மனம் - விளக்கமும் அருமை.

    மலை போன்ற பிரச்னைகள் - பனி போல் விலகும் - கதை - விளக்கம் அருமை. ஒரு தொழிலாளிக்கு மனைவியோ நோயாளி - பிள்ளைக்ளோ பொறுப்பற்றவர்கள். இவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறவர். நணபர் ஒருவர் இவரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைச் சென்று தரிசிக்க ஆலோசனை கூறி - அதன் படி இவரும் காஞ்சி வருகிறார்.

    காஞ்சியில் பெரியவாளைச் சுற்றித் தரிசனத்திற்காகப் பக்தர் கூட்டமும் - பெரியவாளோ பரிவாரங்களுட்டன் அமர்ந்திர்ருப்பாரோ - எப்படி அவரைச் சென்று தரிசிப்பதென்று மனம் கலங்கி வரும் போது ஒரு பெரியவரைக் காண்கிறார்.

    அவரிடன் இவர் ~ சன்யாசி எங்கே எனக் கேட்க , அவர் இவரிடம் அவரைப் பார்க்கவா வந்தீர்கள் - யார் சொல்லி வந்தீர்கள் எனக் கேட்க, - இவர் தன் துய்ரக் கதையைச் சொல்லி - பெரியவாளைப் பார்க்க வந்த செய்தியினை விள்க்கினார்.

    சன்யாசியிடம் உன் துயரங்களைக் கூறினால் அவர் தீர்த்து வைப்பாரா எனக் கேட்க...இவரோ திக்கு முக்காடிப் போனார்.

    சிரமங்களை ந்மதாக நினைக்காமல் பகவானுடையது என நினைத்துப் பாரத்தினை அவர் மேல் போட்டால் எல்லாம் சரியாகி விடுமெனக் கூறினார்.

    இவர் சற்றே சிந்தித்து
    "பெரியவரே, இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு. என் பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான்.. நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே.." என்றார்.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைப் பார்க்க வந்தவருக்கு மனம் இதமானது. அவரை பார்த்து ஆமா நீங்க யாருன்னு கேட்க அவரோ என்னை சங்கராச்சார்யார் என அழைப்பார்கள் என்றார்.

    பிறகு பெரியவாளே வந்திருந்தவருக்கு மடத்துச் சிப்பந்தியிடம் இவருக்குப் பூணூல் அணிவிக்க ஏற்பாடு செய்து ஆசிர்வதித்தார்.

    பூணூல் அணிவிப்பதைப் பற்றிய பல ஐயங்கள் நிலாமகளும் தமிழ் இளங்கோ வும் எழுப்பி - வை.கோ சரியான விளக்கங்களைக் கூறி மறுமொழிகள் இட்ட்இருக்கின்றனர். கன்வின்ஸிங் ரிப்ளை.

    நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா



    பதிலளிநீக்கு
  37. //கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். //

    ஓம் ஓம் கரீட்டூ.. அதனால்தான் பிரித்தானியா நீதிமன்றத்தையும் திறந்தோம்:)).

    அவரின் இன்னல்கள் பனிபோல விலகின, நம் மனமும் பனிபோல குளிர்ந்தது கதை படிச்சு.

    பதிலளிநீக்கு
  38. பெரியவா நடத்தும் அற்புதங்கள் படிக்க படிக்க எழுந்து போகவே தொணல. உடம்ப படுக்க சொல்லி கெஞ்சுது இன்னும் ஒரு பதிவு மட்டும் இன்னும் ஒரு பதிவு மட்டும்னு ரொம்ப நேரமா உக்காந்துட்டேன் இனி தாங்காது

    பதிலளிநீக்கு
  39. அம்பத்தூரு ஆளு குருசாமி கிட்டனதா பேசிகிட்டிருக்கோமுனு தெரியாம பேசினாலும் குரு சரியான வளிகாட்டிட்டாங்கல.

    பதிலளிநீக்கு
  40. அம்பத்தூர்காரர் ஸ்வாமிகள் கூடத்தான் பேசிண்டு இருக்கோம்னு தெரியாமலேயே தன் குடும்ப கஷ்டங்களை யாரோ ஒரு பெரியவரிடம் சொல்வதாக எண்ணுகிறார். ஸ்வாமிகளும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  41. கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம்.

    இதற்கு பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும்,// அமுதத்துளிகள் இன்றைய நிலைக்கு பொருத்தமானவை...

    பதிலளிநீக்கு
  42. வயதில் மூத்த பெண்மணிகளை, மந்திரம் ஏதும் சொல்லாமல், வெறும் நமஸ்காரம் செய்தால் போதுமானது - ஒரு சந்தேகம் வைகோ சார். பெற்ற தாய்க்கு மட்டும் அபிவாதயே உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேனே...

    இரண்டாவது, மேல் உத்தீரியம் தரிப்பது, தன்னைப் பெரியவன் என்று காட்டிக்கொள்ளும் ஒரு முறை. வேத காலத்தில் வேதம் படித்தவர்கள் உத்திரீயத்தைத் தோளின் குறுக்காக அணிவார்கள் என்பதும், அதுவே அவர்கள் வேதத்தைப் படித்துத் துறைபோகியதற்கு அடையாளம்.. கொஞ்சம் கொஞ்சமாக, உத்திரியம் மறைந்து, அது வெறும் நூலாகவும், அடையாளமாகவும் ஆகிவிட்டதென்று. இது ஒரு புறம் இருக்க, பெரியவர்கள் முன்பு நாம் அடியவர்கள். அதனால்தான், கோவிலில் சட்டை போடக்கூடாது, ஞானிகளை வணங்கும்போது இடுப்புக்குமேல் எதுவும் அணியக்கூடாது என்பது. உங்கள் விளக்கத்தைப் பின்னூட்டம் மூலமாகப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் October 18, 2016 at 7:42 PM

      வாங்கோ, வணக்கம். தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், சந்தேகங்களுக்கும் என் நன்றிகள்.

      தங்களின் குறிப்பிட்ட சந்தேகம் பற்றி, அதற்கான மிகச் சரியான பதில் அளிக்கக்கூடிய Competent Authorities களில் யாரையாவது நான் சந்திக்க நேரும்போது விபரமாகக் கேட்டு அறிந்து தனியாக மெயில் மூலம் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

      நீக்கு
  43. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (08.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=410431212792912

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு