என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 31 ஜனவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 3 / 8 ]

முன்கதை......................... பகுதி - 1

மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.


“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.


பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.


எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.


வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.


குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.


தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.


புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.


“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.

“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.


முன்கதை....................... பகுதி 2
தொடர்ச்சி [ பகுதி 3 ] இப்போது .........................


”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

வண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.

ஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது, என்றும் சொல்லிக் கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

ஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.

ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.

அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம் ” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.

மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

வண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாடு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.

ஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளம்பி விட்டது, அவரின் பேச்சு.

பட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?
தொடரும்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

ப வ ழ ம்




”ஒரிஜினல் நற்பவழம், எங்க அண்ணன் வெளிநாட்டுக்குப் போய் வந்தபோது எனக்காகவே ஆசையாக வாங்கி வந்தது” என ராஜி வழக்கம் போல தன் பிறந்த வீட்டுப் பெருமையை, அக்கம் பக்கத்து வீட்டாரிடன் பீத்திக் கொண்டிருந்தாள்.

யார் போட்ட தூபமோ தெரியவில்லை. தலையணி மந்திரம் ஓதும் வேளையில், அந்தப் பவழத்தில் தங்கம் தோய்த்து, மாலையாக்கி கழுத்தில் போட்டுக் கொண்டால், தோஷங்கள் நிவர்த்தியாகி, ஒரு சில நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்குமாம், என்றாள்.

நானும் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு ஜோரிலோ அல்லது தூக்கக் கலக்கத்திலோ “அப்படியே செய்து விட்டால் போச்சு” என்று சொன்னதாக ஒரு ஸ்வப்ன ஞாபகம் மட்டுமே உள்ளது. 

மறுநாள் ஆபீஸ் சென்றதும் தான் கவனித்தேன். என் பர்ஸில் ஆயிரம் ரூபாய் குறைந்திருந்தது.

ராஜியைக் கூப்பிட்டுக் கேட்டதற்கு, ”நீங்கள் தான் நேத்து ராத்திரி ஆசையாகச் சொன்னேளே! பவழ மாலைக்கு ஆர்டர் கொடுத்து அட்வான்ஸ் கொடுத்து விட்டேன்” என்றாள். 

இந்த விஷயத்தில் மட்டும் , அவளின் சுறுசுறுப்பு என்னை மிகவும் பிரமிக்கச் செய்தது.

ஒரு வாரம் ஆனது, நானும் அந்த விஷயத்தை அத்தோடு மறந்து விட்டேன்.

“பவழ மாலை ரெடியாகி விட்டதாம்; கடைக்காரர் போன் செய்து சொன்னார்; ஆபீஸ் விட்டு வரும் போது மறக்காமல் வாங்கி வந்துடுங்க; என் அண்ணாவும் மன்னியும் (அண்ணனும் அண்ணியும்) இன்று இரவு நம் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்காங்க; அவர்கள் வந்ததும் அப்படியே அதையும் கழுத்தில் போட்டுக்காட்டி விடலாம்” என்று அன்புக்கட்டளை இட்டாள், என் அருமை ராஜி.

கடைக்குப் போனபின் தான் எனக்குத் தெரியும்,  பவழத்தின் மேல் மூனே முக்கால் பவுன் தங்கம் போடப்பட்டுள்ளது என்ற விஷயம். 

அட்வான்ஸ் பணம் ஆயிரம் போக, தங்கம் விலை, கூலி, சேதாரம், வரி, சேவை வரி அது இது என்று சுளையாக அறுபத்து இரண்டாயிரம் ரூபாய் தரணும் என்றார் அந்த நகைக் கடைக்காரர். 

நல்பவழம் வாங்கி வந்த மச்சானை மனதிற்குள் திட்டித்தீர்த்தேன். 

ரொக்கக் கையிருப்பு, ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என்ற எல்லாவற்றின் மூலமும் நகைக்கடைக்குத் தர வேண்டிய பணத்தைக் கட்டி விட்டு, ஒருவழியாக பவழ மாலையுடன் வீட்டுக்கு விரைந்தேன்.

ஆளுயரக் கண்ணாடி முன் நின்று பவழ மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, இப்படியும் அப்படியும் திரும்பித் திரும்பி, தன் உடலை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு, பிறகு என் தோளில் தன் தோளால் ஒரு இடி இடித்துவிட்டு, அக்கம்பக்கத்தவரிடம் அலட்டிக்கொள்ள ஆரம்பித்தாள் என்னவள்.

ஆபீஸ் விட்டு வந்ததும், வழக்கமாக எனக்குக் கிடைக்கும் டிபன் காஃபி கிடைக்காத கடுப்பை விட, அவள் மற்றவர்களிடம் போய், இந்தப் பவழ மாலை என் அண்ணன் வெளி நாட்டிலிருந்து, எனக்காகவே ஆசை ஆசையாக வாங்கி வந்தது என்று பெருமையாகச் சொன்னதில், சுளையாக அறுபத்து மூவாயிரம் ரூபாய் கொடுத்த எனக்கு மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியது.

ooooooooooo


இந்தச் சிறுகதை www.nilacharal.com என்ற இணைய தளத்தில் March 2007 க்கான மிகச்சிறந்த சிறுகதையாக தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

சனி, 29 ஜனவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 2 / 8 ]

முன்கதை......................... பகுதி - 1

மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.


“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.


பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.


எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.


வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.


குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.


தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.


புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.


“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.

“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.


தொடர்ச்சி [ பகுதி 2 ] இப்போது ..........................

வியாழன், 27 ஜனவரி, 2011

தை வெள்ளிக்கிழமை

ருக்குவுக்கு இடுப்புவலி எடுத்து விட்டது. ஸ்பெஷல் வார்டிலிருந்து தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறார்கள். பெற்ற தாய் போல பார்த்துக் கொள்ள டாக்டர் மரகதம் இருக்கிறார்கள். சுகப் பிரஸவமாகி சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை மட்டும் தான் ருக்குவுக்கு.

ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயான ருக்கு, இந்த ஐந்தாவது குழந்தை தேவையில்லை என்று சொல்லி டாக்டர் மரகதத்திடம் வந்தவள் தான், ஒரு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு.

“ஏம்மா .... சற்று முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாதா? இப்போது தான் எவ்வளவோ தடுப்பு முறைகள் இருக்கே! கருக்கலைப்பு செய்து உடம்பைக் கெடுத்துக்கணுமா?” என்றாள் டாக்டர்.

ருக்கு கடந்த இரண்டு வருடங்களாக, டாக்டர் மரகதம் வீட்டில் சமையல் வேலை செய்து வருபவள். அவள் கணவன் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்ப்பவர். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குள் இரண்டு பெண், இரண்டு பிள்ளையென நான்கு குழந்தைகள். இது ஐந்தாவது பிரஸவம்.

ஒரே ஒரு முறை ருக்குவின், தங்கவிக்ரஹம் போன்ற நான்கு குழந்தைகளையும் டாக்டர் மரகதம் பார்க்க நேர்ந்த போது, அவர்களின் அழகு, அடக்கம், அறிவு, ஆரோக்கியம் அனைத்தையும் கவனித்து தனக்குள் வியந்து போய் இருந்தார்கள்.

ஐந்தாவதாக இருப்பினும் நல்ல நிலையில் உருவாகியுள்ள இந்தக் குழந்தையை கருக்கலைப்பு செய்ய மனம் ஒப்பவில்லை, டாக்டர் மரகதத்திற்கு.

மேலும் டாக்டருக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டு, டாக்டரிடம் ஏதாவது நல்ல குழந்தையாக ஏற்பாடு செய்யச் சொல்லிக் கூறியிருந்தனர், அந்த தம்பதியினர்.

ருக்குவிடம், டாக்டர் மரகதம் இந்த விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்கள்.

“உனக்கு வேண்டாத இந்தக் குழந்தையை, இப்போது எதுவும் செய்யாமல், நீ பெற்றெடுத்த பிறகு என்னிடம் கொடுத்து விடேன். பிரஸவம் நல்லபடியாக நடக்கும் வரை, நானே உன்னையும் உனக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும், போஷாக்காக கவனித்துக்கொள்கிறேன்.” என்று கூறி ஒருவாறு ருக்குவையும், அவள் மூலமே அவள் கணவனையும், சம்மதிக்க வைத்து விட்டார், அந்த டாகடர்.

மேற்கொண்டு குழந்தை பிறக்காமல் இருக்க பிரஸவத்திற்குப் பின், கருத்தடை ஆபரேஷன் செய்வதாகவும், பேசித் தீர்மானித்து வைத்தனர்.

அன்று ருக்கு வேண்டாமென்று தீர்மானித்த குழந்தை பிறக்கும் நேரம், இப்போது நெருங்கி விட்டது.

ருக்கு பிரஸவ வலியின் உச்சக்கட்டத்தில் துள்ளித் துடிக்கிறாள். மிகப்பெரிய அலறல் சப்தம் கேட்கிறது.

பட்டு ரோஜாக்குவியல் போல பெண் குழந்தை பிறந்து விட்டது. தாயும் சேயும் நலம். டாக்டர் மரகதம் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் தன் கடமையைக் கச்சிதமாக முடித்ததும், கை கழுவச் செல்கிறார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் செல்கின்றனர். வாசலில் கவலையுடன் ருக்குவின் கணவர். டாக்டருக்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது.

“உங்கள் விருப்பப்படியே பெண் குழந்தை தான். யெஸ்...யெஸ், ஜோராயிருக்கு. ஷ்யூர், ஐ வில் டூ இட். இப்போதே கூட குழந்தையைப் பார்க்க வரலாம். வக்கீலுடன் பேசி லீகல் டாகுமெண்ட்ஸ் ரெடி செய்து வைச்சுடுங்கோ. நான் போன் செய்த பிறகு புறப்பட்டு வாங்கோ” என்றார் டாக்டர்.

ருக்குவை தியேட்டரிலிருந்து ஸ்பெஷல் ரூமுக்கு கூட்டி வந்து படுக்க வைத்து, அருகே தொட்டிலில் குழந்தையைப் போடுகிறார்கள்.

ருக்குவின் கணவரும் உள்ளே போகிறார். பெற்றோர்கள், பிறந்த குழந்தையுடன் கொஞ்ச நேரமாவது கொஞ்சட்டும். மனம் விட்டுப்பேசி, மனப்பூர்வமாக குழந்தையைத் தத்து கொடுக்கட்டும் என்று ஒரு மணி நேரம் வரை டாக்டர் அவகாசம் தந்திருந்தார்.

பிறகு டாக்டர் ருக்குவை நெருங்கி ஆறுதலாக அவள் தலையைக் கோதி விட்டார்.

“என்னம்மா, பரிபூரண சம்மதம் தானே. அவங்களை வரச் சொல்லவா? உன் வீட்டுக்காரர் என்ன சொல்கிறார்? உன் வீட்டுக்காரர் தனியே ஒரு ஹோட்டல் வைத்து, முதலாளி போல வாழவேண்டி, நியாயமாக எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அவர்கள் அதைத் தந்து விட நிச்சயம் சம்மதிப்பார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

மேலும் உனக்குப் பிறந்த இந்தக் குழந்தையை மிகவும் நன்றாக, வசதியாக வளர்த்து, படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

இன்றைக்கே இப்போதே உடனடியாக முடிவெடுத்து விட்டால் தான் உங்களுக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது ” என்றார் டாக்டர்.

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.

“எங்களை தயவுசெய்து மன்னிச்சுடுங்க டாக்டர். நாங்க இந்தக் குழந்தையை மட்டும் கொடுக்க விரும்பலை” என்றனர்.

சிரித்துக்கொண்ட டாகடர், ”அதனால் பரவாயில்லை. ஏற்கனவே நீங்க இரண்டு பேரும் ஒத்துக்கொண்ட விஷயம் தானே என்று தான் கேட்டேன். திடீரென்று ஏன் இப்படி மனசு மாறினீங்க? அதை மட்டும் தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்” என்றார் டாக்டர்.

ருக்கு வெட்கத்துடன் மெளனமாகத் தலையைக் குனிந்து கொள்ள, அவள் கணவன் பேச ஆரம்பித்தான்.

“இன்று ‘தை வெள்ளிக்கிழமை’ டாக்டர். அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்களது அஞ்சாம் பெண்ணை கொடுக்க மனசு வரலை, டாக்டர்” என்றார்.

இது போலவும் ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்த்த டாக்டர் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே போனார், தன் குடும்ப நண்பருக்குப் போன் செய்து, அவர்களை புறப்பட்டு வராமல் தடுக்க.

இனிய செய்தி

16.01.2011 தேதியிட்ட கல்கியில் அறிவித்திருந்த "டிஃப்ரண்டா யோசிச்சு எழுதுங்க" போட்டிக்கு, அதிக எண்ணிக்கையில் விடைகள் எழுதி அனுப்பியவர்கள் பட்டியலில், என் பெயர் முதலிடம் பெற்றுள்ளது என்ற அறிவிப்பை, புதிய 30.01.2011 தேதியிட்ட கல்கியின் 85 வது பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள், என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

வியாழன், 20 ஜனவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 1 of 8 ]

மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.

“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.

பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.

வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.

குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.

“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.

தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.



புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.

“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.

“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.



தொடரும்

திங்கள், 17 ஜனவரி, 2011

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் !

”ஏய் சீமாச்சூ! ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்டா. அந்தப் பிள்ளையார் கோயில் டெய்லரிடம் போய் இந்தப் புதுசா தைத்த ஜாக்கெட்டை கைப்பக்கம் கொஞ்சம் பிரிச்சு லூஸ் ஆக ஆக்கிக்கொண்டு வரணும்டா. விலை ஜாஸ்தியான ஒஸ்தித் துணிடா. ஜாக்பாட் நிகழ்ச்சியில் வந்த, குஷ்பு போல முதுகுப் பக்கம் பெரிய ஜன்னல் வைக்கச் சொன்னேன்டா. ஏதோ சுமாரான ஜன்னல் வைத்துவிட்டு கைகள் பக்கம் ரொம்பவும் டைட்டா தைத்துத் தொலைத்து விட்டாண்டா. அளவு ரவிக்கையைக் கொடுக்கும் போதே படித்துப் படித்து சொன்னேண்டா. பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிவிட்டு, வேணும்னே இப்படி டைட்டாகத் தைத்துத் தொலைத்திருக்கிறாண்டா. நானே போகலாம் தான் நினைச்சேண்டா. ஆனாக்க அவனையும் அவன் அசட்டுச் சிரிப்பையும், திருட்டு முழியையும் பார்க்கப் பிடிக்கலைடா”, என்றாள் என் பக்கத்து வீட்டு ஜிகினாஸ்ரீ.

அவள் உண்மைப் பெயர் என்னவோ ஜெயஸ்ரீ தான். இருந்தாலும் நான் அவளுக்கு என் மனதுக்குள் வைத்துள்ள பெயர் ஜிகினாஸ்ரீ.


நொடிக்கு நூறு தடவை என்னை “டா” போட்டு பேசி வருகிறாள். “ஸ்ரீனிவாசன்” என்கிற என் முழுப்பெயரைச் சுருக்கி “சீமாச்சூ” என்கிறாள். அதிலும் எனக்கென்னவோ ஒரு வித கிளுகிளுப்பு தான்.

சின்ன வயதிலிருந்தே எங்களுக்குள் மிகவும் பழக்கம். தாயக்கட்டம், பரமபத சோபான படம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பாண்டி, கோலிகுண்டு, சடுகுடு, பச்சைக்குதிரை தாண்டுதல் எனப் பல விளையாட்டுகள், நாங்கள் சேர்ந்தே விளையாடியதுண்டு.


என்னை விட இரண்டு வயது சிறியவள். விஞ்ஞான பாட நோட்டில் சயன்ஸ் டயக்கிராம் வரைய என் உதவியை நாடுவாள். அவளுக்கு சரியாக ஓவியம் வரைய வராது. இந்த வேலை, அந்த வேலை என்று பாகுபாடு இல்லாமல் என்னை நன்றாகப் பயன் படுத்திக் கொள்வாள்.

நானும் மகுடிக்கு மயங்கும் நாகம் போல அவள் எது சொன்னாலும், சின்ன வயதிலிருந்து என்னையுமறியாமல் தட்டாமல் செய்து கொடுத்துப் பழகி விட்டேன்.


என் தந்தையும் அவள் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வரும் நண்பர்கள். என் தாயும் அவள் தாயும் மிகவும் சிநேகிதிகள். அக்கம்பக்கத்திலேயே எங்கள் வீடுகள். நாங்கள் இவ்வாறு பழகுவதை யாருமே தவறாகவோ, வித்யாசமாகவோ நினைப்பதில்லை.


நான் படிப்பில் சுமார் தான். இப்போது பீ.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அவள் அப்படியில்லை. படிப்பில் படு சுட்டி. ப்ளஸ் டூ வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கிப் புகழ் பெற்றவள்.

படிப்பு மட்டும் அல்ல, அவள் அழகோ அழகு. அன்று சிறு வயதில் என்னைவிட நோஞ்சானாகத் தான் இருந்தாள்.
அவள் எட்டாவது படிக்கும் போது, அவர்கள் வீட்டில் திடீரென ஒரு விழா எடுத்தார்கள்.

காது, மூக்கு, கழுத்து, கைகள் என புதுப்புது நகைகள் அணிவித்திருந்தார்கள். இதுவரை கவுன், பாவாடை சட்டை, சுடிதார், நைட்டி என அணிந்திருந்தவளுக்கு பட்டுப்பாவாடை சட்டையுடன், நல்ல பளபளப்பான ஜிகினா ஜரிகைகளுடன் மின்னும் தாவணி அணிவித்திருந்தார்கள். தலை நிறைய பூச்சூடிக்கொண்டிருந்தாள். கழுத்தில் நெருக்கமாகத் தொடுத்த நறுமணம் கமழும் மல்லிகைப்பூ மாலை அணிவித்திருந்தனர். பூப்போட்ட தாவணியின் ஜரிகைகள் ஜிகினா போல மிகவும் பளபளப்பாக டால் அடித்துக் கண்ணைப் பறிப்பதாக இருந்தது. அதைப் பார்த்து திகைத்துப்போன நான், அவளை ஜிகினாஸ்ரீ என்று வாய் தவறி அழைத்தேன். விழா அமர்க்களத்தில் நான் சொன்னது அவள் காதில் சரியாக விழவில்லை போலும்.


அவள் வயதுக்கு வந்து விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். எங்கள் எல்லோருக்கும் இனிப்புப் புட்டு, எள்ளுப்பொடி என ஏதேதோ தின்பதற்கான பலகாரங்கள் கொடுத்தார்கள். பெண்களெல்லாம் என் ஜிகினாஸ்ரீயை ஒரு நாற்காலியில் பட்டுத்துணி போட்டு அமர வைத்து, கூடி நின்று பாட்டுப் பாடினார்கள்.

எனக்கு இந்த திடீர் விழாவைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. என் தாய் உள்பட எனக்குப் புரியும் படியாக யாரும் எதுவும் எடுத்துச் சொல்லவும் இல்லை.


பிறகு ஒரு நாள் இது பற்றி அவளிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவள் “மக்கு, மக்கு; பத்தாவது படிக்கிறாய்; உனக்கே உனக்காக ஒரு எழவும் புரியாது. என்னைக் கேட்டது போல வேறு யாரையும் கேட்டு வைக்காதே; உதை விழும். உனக்கு முரட்டு மீசை முளைக்கும் போது ஒரு பொண்டாட்டி வருவாள். அவளிடம் கேளு. அவ எல்லாம் விபரமா சொல்லுவா” என்றாள்.

இப்போது தான் அரும்பு மீசை முளைக்கலாமா என்று பார்த்துவரும் என் மேல் உதட்டுக்கும், நாசித் துவாரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தடவி பார்த்துக் கொண்டேன்.


அவளைவிட இரண்டு வயது பெரியவனாகிய எனக்கு, எங்கள் வீட்டில், வயது வந்து விட்டதாக விழா எதுவுமே எடுக்கவில்லை. இவளுக்கு மட்டும் என்ன திடீர் விழா ? என்பதே எனக்கான மிகப்பெரிய சந்தேகம்.


பள்ளியில் விசாரித்ததில் பருவம் அடைந்த வயதுப்பெண்களுக்கு நடைபெறும் விழாவென்றும், அதைப் பூப்பு நீராட்டு விழா என்று சொல்லுவார்கள் என்றும், ஏதேதோ தனக்குத் தெரிந்ததைச் சொன்னான் என் வயது நண்பன் ஒருவன்.

மொத்தத்தில் யாருக்கும் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லையோ அல்லது எனக்குப் புரியும்படியாகத்தான் சொல்லத் தெரியவில்லையோ! சரியென்று நானும் அதைப் பற்றி சந்தேகம் கேட்பதையே ஒரு வழியாக விட்டு விட்டேன்.


அந்த விழா நடைபெற்ற பிறகு, அவளின் நடை உடை பாவனை தோற்றம், எல்லாவற்றிலும் ஒரு வித திடீர் மாற்றங்கள். திடீரென கொஞ்ச நாளிலேயே நல்ல சதை பிடிப்புடன் மொழு மொழுவென்று தேக அமைப்பு மாறி விட்டது. ஆப்பிள் போன்ற செழுமையான கன்னங்கள், ஆங்காங்கே அசத்தலான மேடு பள்ளங்கள் என ஆளே முற்றிலும் மாறி விட்டாள்.


என்னை “டா” போட்டு அழைப்பதும், அதிகாரமாக வேலை ஏவுவதும் மட்டும் இப்பொதும் குறையவே இல்லை. அவள் எங்கு போனாலும் என்னையும் துணைக்கு அழைத்துப் போவதும், கடையில் வாங்கிய துணிமணிகள் போன்ற பொருட்களை என்னை விட்டு தூக்கி வரச்செய்வதுமாக, மொத்தத்தில் என்னை, ஒரு வேலையாள் போலவே நடத்தி வந்தாள்.


ஆனால் ஒன்று, ஹோட்டலில் வயிறு முட்ட டிபனும், ஐஸ் க்ரீம் போன்றவையும், அவள் செலவிலேயே, அவ்வப்போது வாங்கித் தரவும் தவற மாட்டாள். நானும் அவளுடன் சிறு வயதிலிருந்தே பழகிய தோஷமோ என்னவோ தெரியவில்லை, வாலிப வயதாகிய எனக்கு அவள் மேல் நாளுக்கு நாள் ஒரு வித ஈர்ப்பும் இனக் கவர்ச்சியுமாக, என்னை ஆட்டிப் படைத்து வந்த ஏதோவொன்று, அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்து வரச் செய்தது என்னை.


எனக்கு இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலோ, அவளுடன் பேசாவிட்டாலோ, ஏதோ பைத்தியம் பிடித்தாற்போல ஒரு உணர்வு ஏற்பட்டு வருகிறது.

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு போகும் போது, அவள் பொறியியற் கல்லூரியில் நுழைந்து படிக்க முயற்சித்து வருகிறாள். சிறந்த படிப்பாளியும், வருங்கால இஞ்ஜினியருமான அவளை, சாதாரணமானதொரு பட்டதாரியாகப் போகும் நான் என் சுமாரான நிறத்துடனும், மிகச் சாதாரணமான பெர்சனாலிடியுடனும், என்னுடைய வாழ்க்கைத் துணைவியாக அடைய முடியுமா?

அவளுக்கு என் மேல் ஒரு வித ஈர்ப்பும், ஈடுபாடும் ஏற்பட நான் என்ன செய்வது என்று யோசித்து, முடிவில் என்னுடைய ஓவியத் திறமைகளை முழுவதும் உபயோகித்து, என் மனதில் முழுவதுமாக நிறைந்துள்ள என் அன்புக்குரிய அவளை மிகப்பெரிய அளவில் ஓவியமாகத் தீட்டி வர்ணம் கொடுத்து வந்தேன்.

அவளின் அதே, ஆப்பிள் கன்னங்களுடன் படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அதை ப்ரேம் போட்டு அவளுக்குப் பரிசாக அளிக்க நினைத்துக் கொண்டிருந்தேன்.


நேற்று மாலை நல்ல ராயல் ஆப்பிள் பழமொன்று பெரியதாக வாங்கி வந்திருந்தேன். நான் வரைந்த அவளின் படத்தையும், படத்தில் நான் வரைந்துள்ள அவளின் ஆப்பிள் கன்னங்களையும், நான் வாங்கி வந்த ஆப்பிளையும் மாறி மாறிப் பார்த்து ரசித்தேன்.

பிறகு ஆப்பிள் பழத்தைக் கத்தியால் அழகாக வெட்டினேன். படத்திலிருந்த அவளின் கன்னத்தின் மேல் ஒரே ஒரு துண்டு ஆப்பிளை வைத்து குனிந்து என் வாயினால் கவ்வி ருசித்தேன். அவள் கன்னத்தையே லேசாகக் கடித்து விட்டது போன்ற ஒரு வித இன்பம் எனக்கு ஏற்பட்டது.


அந்த நேற்றைய நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்த என் கையில், இப்போது அவளின் ஜாக்கெட் டெய்லரிடம் சென்று ஆல்டர் செய்து வரக் கொடுக்கப்பட்டுள்ளது.


டைட்டான அவளின் ஜாக்கெட்டை லூஸாக்க, அவள் சொன்ன அந்த டெய்லரிடம் அமர்ந்திருந்தேன். ஜாக்கெட்டை மட்டுமில்லாமல் என்னையும் லூஸாக்கி விட்டது அந்த டெய்லர் சொன்ன சமாசாரம்.


“யாரு சாமி, அந்தப் புதுப் பையன்? அந்தப் பொண்ணு அடிக்கடி ஒரு வாட்டசாட்டமான, சிவத்த, வாலிபனுடன் பைக்கில் உட்கார்ந்து ரெளண்டு அடிக்குது !” என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்த டெய்லர்.


“யோவ் ! வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறாதே; அவள் அப்படிப் பட்ட பெண் இல்லை” என்றேன்.


“நான் இப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு நீங்க கோச்சுகிறீங்க? அந்தப் பையன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமோன்னு கேட்டேன். தெரிந்தா யாருன்னு சொல்லுங்க; இல்லாவிட்டால் தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்க !

அந்தப் பையன் ஏதாவது முறைப் பையனாக் கூட இருக்கலாம். அல்லது நண்பனாக இருக்கலாம். கூடவே அந்தப் பெண்ணுடன் காலேஜில் படிப்பவனாகக் கூட இருக்கலாம். கம்ப்யூட்டர் சாட்டிங் அல்லது செல் போன் தொடர்புன்னு ஏதேதோ நியூஸ் பேப்பர்களில் போடுறாங்களே அது போல கூட இருகலாம். ஏதோ பாய் ஃப்ரண்டுன்னு சொல்றாங்களே அதுவாகவும் கூட இருக்கலாம்.

அவன் யாராக இருந்தாலும் சரி; நமக்கு எதற்கு வீண் வம்பு” என்று சொல்லி, கைப்பக்கம் சற்று லூஸாக்கிய அந்த ஜாக்கெட்டை ஒரு பேப்பர் பையில் போட்டு என்னிடம் கொடுத்தான் அந்த டெய்லர்.


இதையெல்லாம் கேட்ட எனக்கு ஒரே பதட்டமாகிப் போனது. ஜிகினாஸ்ரீ ஒரு வேளை எனக்குக் கிடைக்காமல் போய் விடுவாளோ? இனியும் தாமதிக்காமல் அவளிடம் என் காதலைத் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேனே தவிர , அவளிடம் எப்படி ஆரம்பிப்பது, எப்படிப் பேசுவது என்பது ஒன்றும் புரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது.


தன் புது ஜாக்கெட்டை கையில் வாங்கிக் கொண்டவள், “தாங்க்யூடா சீமாச்சு” என்றாள்.


ஏதோ அவளிடம் கேட்க நினைத்த நான், சற்றே தயங்கினேன்.


“அந்த டெய்லர் உன்னிடம் ஏதாவது கேட்டானா” என்றாள் அவளாகவே.


“நீ யாருடனோ பைக்கில் சுற்றுகிறாயாமே; அதை அவன் பார்த்து விட்டதில் உனக்கு ஒரு குற்ற உணர்ச்சியோ! அதனால் தான் நீ டெய்லர் கடைக்குச் செல்லாமல் என்னை அனுப்பினாயோ?” கேட்டு விடலாமா என்று நினைத்தும் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.


“அந்த டெய்லர் என்னிடம் என்ன கேட்பான் என்று நீ நினைக்கிறாய்?” என்றேன், மிகவும் புத்திசாலித் தனமாக.

”நீ சுத்த ட்யூப் லைட்டுடா, சீமாச்சூ; ஜாக்கெட்டை லூஸாக்கிக் கொடுத்தற்கு ஏதாவது காசு கேட்டானா?” என்றாள் சர்வ அலட்சியமாக.


“அதெல்லாம் ஒண்ணும் கேட்கவில்லை. எல்லாமே அவன் செய்த கோளாறு தானே, எப்படி கேட்பான்” என்று மட்டும் சொல்லிவிட்டு என் வீடு நோக்கி சென்று விட்டேன்.

நான் வரைய ஆரம்பித்த அவளின் படத்தை பைனல் டச் அப் செய்து, கீழே ஜிகினாஸ்ரீ என்கிற ஜெயஸ்ரீ என்று எழுதி, என் கையொப்பமிட்டு, ப்ரேம் செய்து கொண்டு வந்து விட்டேன்.

என் தாயாரிடம் மட்டும் காட்டினேன்.
“சபாஷ்டா ஸ்ரீனிவாஸா, சூப்பரா வரைந்திருக்கிறாய். வரும் பதினெட்டாம் தேதி அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அப்போது கொண்டுபோய் அவளிடம் கொடு. ரொம்பவும் சந்தோஷப்படுவாள்” என்றாள்.

“தாங்க் யூம்மா” என்றேன். ஆனால் பதினெட்டாம் தேதிக்கு, முழுசா இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஒருவழியாக அந்தப் பதினெட்டாம் தேதியும் வந்தது. நானும் என் அம்மாவும் அவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டோம். ஞாபகமாக அழகிய பேப்பர் கலர் பேக்கிங்குடன் படத்தை ஒரு பையில் போட்டு கையில் எடுத்துச் சென்றேன்.

அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே, நிறைய ஜோடி காலணிகள் வீட்டு வாசலில் கிடந்ததைக் காண முடிந்தது. அங்கு யார் யாரோ புது முகங்களுடன், பழத்தட்டுகள் மற்றும் பரிசுப் பொருட்களுடன் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

எங்களை ஜிகினாஸ்ரீயின் பெற்றோர்கள் வரவேற்று அமரச் செய்தனர். அவர்களுக்கு எங்களையும், எங்களுக்கு அவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர்.


டெய்லர் சொன்ன அதே வாட்டசாட்டமான சிவத்த வாலிபன், என் கையைப் பிடித்து குலுக்கியவாறே “அயம்...சுரேஷ்...சாப்ட்வேர் எஞ்சினியர்....டி.ஸி.எஸ்; நெள அட் யுனைடெட் ஸ்டேட்ஸ்; ஜெயஸ்ரீயின் அத்தை பிள்ளை தான் நான்; கிளாட் டு மீட் யூ; ஜெயஸ்ரீ உங்களைப்பற்றி நிறைய என்னிடம் சொல்லியிருக்கிறாள்” என்றான்.


புத்தம் புதியதொரு பட்டுப்புடவையில், சர்வ அலங்காரங்களுடன், என் ஜிகினாஸ்ரீ, கையில் ஒரு ட்ரேயில் ஸ்வீட் காரம் முதலியன எடுத்து வந்து, மிகவும் நிதானமாக, முகத்தில் வெட்கத்துடன் கூடிய புன்னகையுடன், எல்லோருக்கும் விநியோகம் செய்தாள்.


என்னைப் பார்த்ததும் “வாடா சீமாச்சூ, நீ எப்போ வந்தாய்? என்னுடைய ’வுட் பீ’ சுரேஷைப் பார்த்தாயா, உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டாள்.

“பார்த்தேன், உனக்கு எல்லா விதத்திலும் மிகவும் பொருத்தமானவரே” என்றேன்.

என் கையிலிருந்த, நான் வரைந்துள்ள அவளின் படத்தை, அவளிடம் கொடுக்கத் தோன்றவில்லை எனக்கு. ஆனால் அவளாகவே என் கையிலிருந்து வெடுக்கென அதைப் பிடுங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்து, அசந்து போனாள்.

“யூ ஆர் ரியல்லி வெரி கிரேட்....டா..... சீமாச்சூ” என்று கூறி என் கையைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கி, விரல்களை முத்தமிட்டு, தன் கண்களில் ஒத்திக் கொண்டாள்.


பிறகு தன் வருங்காலக் கணவன் சுரேஷிடம் அந்தப் படத்தை நீட்டினாள். அவரும் அதை ரசித்துப் பார்த்து விட்டு, எழுந்து என்னிடம் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். என்னை மிகவும் புகழ்ந்து பாராட்டினார்.


“எப்படி ஸார், இவ்வளவு தத்ரூபமாக வரைய முடிகிறது உங்களால்?” என்றார் சுரேஷ்.

“எந்த உருவம் என் மனதில் ஆழமாகப் பதியுமோ, அதை என் கைகள் மிகச் சுலபமாக வரைந்து விடும்” என்று சொல்லத் துடித்தது, என் உதடுகள். ஆனால் நான் எதுவுமே சொல்லவில்லை.


“எங்க சீமாச்சூ சின்ன வயதிலிருந்து நன்றாக படங்கள் வரையுவான். எனக்கு சயன்ஸ் டயக்ராம் எல்லாம் இவன் தான் வரைந்து தந்து உதவுவான். படம் வரைவதில் எங்கள் சீமாச்சூ...சீமாச்சூ தான்” என்று பெருமையாகக் கூறினாள், ஜிகினாஸ்ரீ.


சுரேஷுக்கும் ஜெயஸ்ரீக்கும் வரும் தை பிறந்ததும் கல்யாணம் நடத்தலாம்னு இருக்கிறோம் என்று பொதுவாக அங்கு கூடியிருப்பவர்களுக்கும், எங்களுக்குமாக ஒரு தகவல் போல, ஜெயஸ்ரீயின் அப்பா மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

“டேய், சீமாச்சூ, இந்தக் கல்யாணம் முடியும் வரை நிறைய வேலைகள் இருக்கும். நீ தான் எனக்குக் கூடமாட இருந்து எல்லா உதவிகளும் செய்யணும். எனக்குக் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் யாரும் இல்லாத குறையை நீ தான் தீர்த்து வைக்கணும்” என்று உத்தரவு பிறப்பித்தாள், என் அன்புக்குரிய ஜிகினாஸ்ரீ.

நான் வரைந்த ஓவியம் அவர்கள் வீட்டுச் சுவரில் ஆணி அடித்து அப்போதே மாட்ட ஏற்பாடானது. சுத்தியலால் ஆணியை ஓங்கி அடிக்கும் போது ஒரு ஆணி பறந்து வந்து என் நெற்றிப் பொட்டில் வேகமாக மோதித் தெறித்து கீழே விழுந்தது. நல்ல வேளையாக, என் கண்ணில் படாமல் தப்பியது.

அதை யாரும் கவனிக்காத போதும், என்னால் மட்டுமே அந்த வலியை நன்கு உணர முடிந்தது. சிற்றுண்டி சாப்பிட்டிருந்த நான் எழுந்து அருகிலிருந்த, வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டேன்.
-ooooooooo-

[இந்தச் சிறுகதை 01.09.2010 தேதியிட்ட ’தேவி’ வார இதழில் பிரசுரிக்கப்பட்டது]

வெள்ளி, 14 ஜனவரி, 2011

அமுதைப் பொழியும் நிலவே ! [ பகுதி 2 of 2 ]

திடீரென குப்பென்று வியர்த்தது எனக்கு. யாரோ என் தோள்பட்டையைத் தட்டுவது போல உணர்ந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். எதிரில் பேருந்து நடத்துனர்,

“துவாக்குடி வந்திடுச்சு, சீக்கரம் இறங்குங்க” என்றார்.


பக்கத்து இருக்கையில் பார்த்தேன். என் அமுதாவைக் காணோம்.
அப்போ நான் கண்டதெல்லாம் பகல் கனவா?

தொடர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், நல்ல காற்று வீசியதில் சுகமாகத் தூங்கியுள்ளேன். அருமையான கனவில், அற்புதமான என் அமுதா என்னருகில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறாள்.


கண்களைக் கசக்கிக் கொண்டே, மீண்டும் துவாக்குடியிலிருந்து சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட்டுக்கு ஒரு பஸ் டிக்கெட் வாங்கிக்கொண்டு, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

“அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது.

பெரும்பாலும் காலியான இருக்கைகளுடன் இருந்த அந்தத் தொடர்ப் பேருந்தில், அடுத்த இரண்டாவது ஸ்டாப்பிங்கான திருவெறும்பூரில் பலர் முண்டியடித்து ஏறினர்.


“கொஞ்சம் நகர்ந்து உட்காரய்யா ..... சாமி” எனச் சொல்லி ஒரு காய்கறி வியாபாரக் கிழவி, தன் கூடை மற்றும் மூட்டை முடிச்சுக்களுடன் என் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அந்தக்கிழவி என்னைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தன் தலையை நீட்டி, வாயில் குதப்பிய வெற்றிலை பாக்குச் சாறை, சாலையில் உமிழ்ந்து விட்டு, என்னையும் ஒரு லுக் விட்டுவிட்டு, தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.


“அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.
oooooooo



[ இந்தச் சிறுகதை, சென்ற ஆண்டு “பொங்கல் திருநாள்” சமயம் 13.01.2010 தேதியிட்ட ”தேவி” வார இதழில் பிரசுரிக்கப்பட்டது ]

அமுதைப் பொழியும் நிலவே ! [ பகுதி 1 of 2 ]

என் அலுவலகத்திற்கு மட்டும் அன்று விடுமுறை. காலை சுமார் ஏழு மணி. வீட்டிலே மின் வெட்டு. காற்று வாங்க காலாற நடந்து கொண்டிருந்தேன்.

திருச்சிக்குப் புதியதாக, அரசால் ஒரு சில தொடர் பேருந்துகள் (மிக நீளமான ரயில் பெட்டிகள் போல இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு பஸ்கள்) விடப்பட்டுள்ளன. அதில் பயணிக்க வேண்டும் என்று எனக்கும் பல நாட்களாக ஒரு ஆசை உண்டு. நேற்று வரை அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.


அந்தத் தொடர் பேருந்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ விசித்திரமான ஒரு சில நினைவுகள் அடிக்கடி வருவதுண்டு. சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும். மேலும் என்றோ ஒரு நாள் தெருவில் வால் பக்கமாக இணைந்தபடி இரு பைரவர்கள் என் கண்களில் பட்டனர். அந்த இரு பைரவர்களைப் போலவே இந்த இரண்டு பேருந்துகளையும் மிகவும் கஷ்டப்பட்டு இணைத்துள்ளார்களே என்றும் நினைத்துக் கொள்வதுண்டு.

சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட் அருகே, இன்று ரோட்டில் நடந்து சென்ற என்னை உரசுவது போல என் அருகே தொடர்பேருந்து ஒன்று வந்து நினறது. கும்பல் அதிகமாக இல்லாததால், நானும் அதில் ஏறிக்கொண்டு, ஜன்னல் பக்கமாக ஒரு இருக்கையில் காற்று நன்றாக வரும்படி அமர்ந்து கொண்டேன்.

அந்தப் பேருந்து பொன்மலைப்பட்டியிலிருந்து துவாக்குடி வரை செல்வதாக அறிந்து கொண்டேன். காற்றாட துவாக்குடி வரை போய்விட்டு இதே பேருந்தில் திரும்ப வந்து விட்டால், வீட்டில் மின் தடையும் நீங்கி விடும். பாதி விடுமுறையை பஸ்ஸிலும், மீதியை வீட்டிலும் கழித்து விடலாம் என்று கணக்குப் போட்டு பஸ் டிக்கெட் வாங்கிக் கொண்டேன்.


வெறும் காற்று வாங்க வேண்டி, காசு கொடுத்துப் பயணமா, என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்வது? மின் வெட்டுச் சமயங்களில் சாமான்ய மனிதனின் பிழைப்பும் இன்று நாய்ப் பிழைப்பாகத்தானே உள்ளது.


வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது. அடுத்தப் பேருந்து நிறுத்தத்திலேயே இளம் வயதுப் பெண்கள் பலரும் ஏறிக் கொண்டு பேருந்தை கலகலப்பாக்கினர்.

ஒரே மல்லிகை மணம் கமழ ஆரம்பித்தது. எனது பக்கத்து இருக்கையில் ஒரு அழகு தேவதை வந்து அமர்ந்தாள்.


“எக்ஸ்க்யூஸ் மீ, ஸார், இந்த பஸ் பீ.ஹெச்.ஈ.எல். வழியாகத் தானே போகிறது?”


“ஆமாம், நீங்கள் எங்கே போகணும்?”

“ பீ.ஹெச்.ஈ.எல். இல் உள்ள ‘வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ க்கு எட்டு மணிக்குள் போய்ச் சேரணும், ஸார்; தயவுசெய்து ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கோ ஸார்” என்று குழைந்தாள்.

[குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியானேன்.

பல்வேறு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக, பல முறை இவள் போக வேண்டியதாகச் சொல்லும் இடத்திற்கு நான் சென்று வந்துள்ளதால், அது எனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக இருப்பதும், ஒரு விதத்தில் நல்லதாகப் போய் விட்டது]

“ஓ...கட்டாயமாகச் சொல்கிறேன். நானும் அங்கே தான் போகிறேன். நீங்கள் என்ன வேலையாக அங்கே போகிறீர்கள்?”

நான் பாலக்காட்டிலிருந்து வந்துள்ளேன். ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பயின்றுள்ளேன். உலோகப் பற்றவைப்பை சிறப்புப் பாடமாக கற்றுள்ளேன். வெல்டிங் சம்பந்தமாக உலகத்தரம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி எடுக்கப்போகிறேன். இதோ எனக்கு வந்துள்ள அழைப்புக் கடிதம். இன்று முதல் ஒரு மாதம் அந்த ட்ரைனிங் எடுக்கணும். தினமும் வரணும். இன்று முதன் முதலாகப் போவதால், பஸ் ரூட், வழி முதலியன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது”. என்றாள் மலையாளம் கலந்த பாலக்காட்டுத் தமிழில்.


அழைப்புக் கடிதத்தை நோட்டமிட்டேன். பெயர்: அமுதா. வயது: 19, கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை, வெல்டிங் சம்பந்தமாக ட்ரைனிங் எடுக்கப்போகிறாள்.

அவளின் ட்ரைனிங் முடியும் இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளுடன் என்னையும் நான் வெல்டிங் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? முயற்சிப்போம். என்னுள் பலவிதமான எண்ணங்கள் அலை மோதி, மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின.


“இந்த பஸ் நேராக நீங்கள் போக வேண்டிய இடத்துக்குப் போகாது. திருவெறும்பூர் தாண்டியதும் ஒரு மிகப்பெரிய ரவுண்டானா வரும். அதை ‘கணேசா பாயிண்ட்’ என்று சொல்லுவார்கள். அங்கே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து போய்விடலாம்” என்றேன்.

”ஓ. கே. ஸார், ஆட்டோவுக்கு எவ்வளவு பணம் தரும்படியாக இருக்கும்?” என்றாள்.

“நோ ப்ராப்ளம்; நானே ஆட்டோவில் கொண்டு போய் விடுகிறேன். எனக்கும் அந்தப் பக்கம் ஒரு வேலை உள்ளது. நீங்களும் எட்டு மணிக்குள் அங்கு போய்ச் சேர வேண்டுமே! ... அதிருக்கட்டும் ... திருச்சியில் மேலும் ஒரு மாதம் தாங்கள் தங்கி ட்ரைனிங் எடுக்கணுமே, யாராவது சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா? எங்கு தங்கப் போவதாக இருக்கிறீர்கள்?”


“நேற்று இரவு மட்டும் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ள என் சினேகிதியின் வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தங்கிக் கொண்டேன். இன்று மாலை அவளுடனேயே சென்று வேறு எங்காவது லேடீஸ் ஹாஸ்டல் போன்ற நல்ல பாதுகாப்பான செளகர்யமான இடமாகப் பார்க்கணும் என்று இருக்கிறேன்”. என்றாள்.


என்னுடைய விஸிடிங் கார்டு, வீட்டு விலாசம், செல்போன் நம்பர் முதலியன கொடுத்தேன்.

“எந்த உதவி எப்போது தேவைப் பட்டாலும், உடனே தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என்றேன்.

“தாங்க்யூ ஸார்” என்றபடியே அவற்றை தன் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.

என்னையே முழுவதுமாக அவள் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டது போல உணர்ந்து மகிழ்ந்தேன்.
ஞாபகமாக அந்த அமுதைப் பொழியும் நிலவின் செல்போன் நம்பரையும் வாங்கி என் செல்போனில் பதிவு செய்து, டெஸ்ட் கால் கொடுத்து, தொடர்பு எண்ணை உறுதிப் படுத்திக் கொண்டேன்.

இன்று இரவு அவளை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் தங்கச் செய்து, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, அசத்த வேண்டும் என மனதிற்குள் திட்டம் தீட்டினேன்.

“குமரிப்பெண்ணின் ... உள்ளத்திலே ... குடியிருக்க ... நான் வரவேண்டும் ... குடியிருக்க நான் வருவதென்றால் ... வாடகை என்ன தர வேண்டும் என்ற அழகான பாடல் பேருந்தில் அப்போது ஒலித்தது, நல்ல சகுனமாகத் தோன்றியது.

அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். என் இந்தக் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.



தொடரும்...

[ இதன் தொடர்ச்சி இதோ இப்போதே - பகுதி 2 இல்]


”நா” வினால் சுட்ட வடு [ பகுதி 2 of 2 ]


குழந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டதோ என்று பயந்து ஓடிப் போய்ப் பார்த்தோம்.

கட்டிலின் ஒரு ஓரமாக சுவற்றை ஒட்டி வைக்கப்பட்டிருந்த லாப்டாப் குழந்தையால் இழுத்து கீழே தள்ளிவிடப் பட்டிருந்தது.
சுளையாக நாற்பதாயிரம் ரூபாய் போட்டு புதிதாக அவர் சமீபத்தில் வாங்கியது. அவரைத் தவிர, வீட்டுக்கு வரும் யாரையும் தொடவிட மாட்டர். ஒரே ஒரு முறை என்னை விட்டு ஓபன் செய்யச் சொன்னார். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. டெஸ்க் டாபில் ஏதோ கொஞ்சம் பழக்கமுண்டு. அதுவும் மெயில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு சரி. அது கூட இவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது தான்.

இந்தப் பழக்கமில்லாத புது சமாச்சாரங்களில் நான் கையை வைத்து ஏதாவது கோளாறு ஆகிவிடுமோ என்ற பயத்தில், நான் அதிகமாக எதுவும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.


லாப்டாப்பை கீழே தள்ளிவிட்டு, கீழே விழுந்த அது என்னாச்சு !
என்ற மிகுந்த ஆவலுடன், தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, கட்டிலின் விளிம்பில் குனிந்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.

குழந்தையை ஓங்கி அடிப்பது போல, தன் கையை மட்டும் ஓங்கி விட்டு, கோபமாக இரண்டு திட்டு திட்டிவிட்டு என்னைப் பார்த்து “ஸாரிடி... உன் வீட்டுக்காரர் ஆபீஸ் விட்டு வரும் நேரமாச்சு, நான் புறப்பட்டுப் போகிறேன்”, என்றபடி நைஸாக கிளம்பி விட்டாள் ரேவதி.


என் வீட்டுக்காரரிடம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. கீழே விழுந்து கிடந்த லாப்டாப்பை பழையபடி கட்டிலில் சுவற்று ஓரமாக நகர்த்தி வைத்தேன். அதில் என்ன கோளாறு ஆகியுள்ளதோ, இனிமேல் அது வேலை செய்யுமோ செய்யாதோ, எல்லாம் அவர் வந்து பார்த்து சொன்னால் தான் உண்டு. நடந்தது நடந்து விட்டது, என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.


ஒரு அரை மணி நேரம் ஆனதும் என் வீட்டுக்காரரும் ஆபீஸிலிருந்து வந்து விட்டார். வழக்கம் போல பாத்ரூம் போய் ஒரு குளியல் போட்டுவிட்டு, சோபாவில் அமர்ந்தார்.

நான் சூடாக சுவையாக கொடுத்த காஃபியை அவர் ரசித்து ருசித்து குடிக்கும் போது, நானும் மெதுவாக அவர் அருகில் அமர்ந்து கொண்டேன்.


“ஏதோ சொல்லத் துடிக்கிறாயே! என்ன....சொல்லு” என்றார்.
“அடிக்கடி நம் ரேவதியின் நாத்தனார் குழந்தைகள், நம் வீட்டுக்கு வந்து பாடாய்ப் படுத்துகின்றன” என்று ஒரு பீடிகையுடன் ஆரம்பித்தேன்.

“ஒரு மூன்று மாதக் குழந்தைகளாக இருந்த போது, நானும் நீயும் ரேவதி வீட்டுக்குப் போய், குழந்தைகளின் விரல்களில் சின்ன தங்க மோதிரங்கள் போட்டு விட்டு வந்தோமே, அந்தக் குழந்தைகளா!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.
“ஆமாம் அதே குழந்தைகள் தான். இப்போது ஒரே ஓட்டமும் நடையுமாக ஒரு இடத்தில் நிற்காமல் லூட்டி அடிக்கின்றன. அன்று ஒரு நாள் ரிமோட்டை எடுத்து டி.வி. மேல் விட்டெறிந்து, மயிரிழையில் மானிட்டர் உடையாமல் தப்பியது. மற்றொரு நாள் பந்தை விட்டெறிந்ததில், ஷோகேஸ் கண்ணாடி உடையாமல் தப்பியது” என்றேன்.

”குழந்தைகள் என்றால் அப்படி இப்படித்தான். விஷமம் செய்வதாகத் தான் இருக்கும். அவ்வாறு விஷமத்தனம் இருந்தால் தான் அது குழந்தை. நல்லது கெட்டதோ, பொருட்களில் விலை ஜாஸ்தியானது விலை மலிவானது என்ற பாகுபாடோ, எதுவும் தெரியாத பச்சை மண்கள் அவை. பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே” என்றபடியே என்னை ஒரு மாதிரி பார்த்தவர், ஏதோ ஒரு குற்ற உணர்வில், பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டது போல முகத்தை வைத்துக் கொண்டு, நெற்றியைக் கைவிரல்களால் லேசாகத் தட்டிக் கொண்டார்.
இவருக்கு வாழ்க்கைப் பட்ட என்னை என் அக்கம்பக்கத்தாரும், ஒரு சில உறவினர்களும் கூட ஜாடை மாடையாக மலடி என்றும், தரிசு நிலம் என்றும் கூறக் கேட்டுள்ளேன்.

சென்ற மாதம் என் வீட்டுக்கு இவரின் ஒன்று விட்ட அத்தை என்று சொல்லி கொழுப்பெடுத்தவள் ஒருத்தி வந்திருந்தாள்.
காய்கறி நறுக்குகிறேன் என்று காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு, “கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்திருக்கு” என்று கூறிக்கொண்டே என் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
“பார்த்து நறுக்குங்க, பேசிக்கொண்டே நறுக்கினால் புதிதாக சாணைபிடித்த அந்த அருவாமனை, உங்கள் கையைப் பதம் பார்த்துவிடும்” என்று சொல்லி என் எரிச்சலைக் காட்டினேன்.

ஊர் வாயை மூடமுடியாது என்று எனக்கும் தெரியும்.
மற்றவர்கள் போல ஜாடைமாடையாக மறைமுகமாகப் பேசாமல், “குழந்தைகளின் மதிப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்” என்று நேரிடையாகவே, என் கணவர் இன்று என்னைப் பார்த்து கேட்டு விட்டார். இதை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டேன்.

“தயவு செய்து உங்கள் லாப்டாப் வேலை செய்கிறதா என்று பாருங்கள். இன்று நம் வீட்டுக்கு வந்த அந்தக் குழந்தை, கட்டிலிலிருந்து உங்கள் லாப்டாப்பைக் கீழே தள்ளி விட்டு விட்டது. உடைந்து போய் இருக்குமோ என்று நான் பதறிப்போய் விட்டேன். ரேவதியும், தான் ஏன் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வந்தோம், என்று மிகவும் வேதனைப் பட்டுப் போய் விட்டாள்” என்றேன்.


பெட் ரூமுக்குச் சென்றவர், லாப்டாப்பைத் தன் மடியில் ஒரு கைக்குழந்தை போல வைத்துக்கொண்டு, எல்லாப் பக்கமும் நன்கு தடவிப் பார்த்து விட்டு, ‘ஸ்விட்ச் ஆன்’ செய்தார். மானிடர் ஸ்க்ரீன் சேவரில் அந்தக் கஷ்குமுஷ்குக் குழந்தை தோன்றி சிரிக்கத் துவங்கியதும் தான், எனக்கு பாதி உயிர் வந்தது போலத் தோன்றியது.


நேராக பூஜா ரூமுக்குப் போய், விளக்கேற்றி நமஸ்கரித்து நான் திரும்பி வருவதற்குள், ஏதேதோ ப்ரொக்ராம்களில் புகுந்து விளையாடிப் பார்த்து விட்டு, ரேவதிக்கும் தானே போன் செய்து லாப்டாப்புக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருந்தார்.


ரேவதியுடன் பேசும் போது மட்டும் இவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல ஒரு வித பிரகாசம் அடைவதைக் கதவிடுக்கு வழியாக நான் சற்று நேரம் நின்று கவனித்துவிட்டு, பிறகு அவர்கள் பேசி முடிக்கும் சமயம், தொண்டையைக் கனைத்தபடி, பெட் ரூம் உள்ளே போனேன் .


என்னைப் பார்த்து விட்ட அவர் “கவலைப்படாதே ... லாப்டாப் உடையவில்லை” என்றார்.

“நல்ல வேளை, அதுவாவது உடையாமல் போனதே” என்றேன் மனம் உடைந்த நான்.


“உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு சின்ன கீறல் கூட இல்லை ... நன்றாக வேலை செய்கிறது” என்றார் மீண்டும் எனக்கு ஆறுதல் கூறுவது போல.

“உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு.


ooooooooooo


[இந்தச் சிறுகதை 22.12.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் பிரசுரமானது.]