என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 30 மே, 2013

2] ஆனந்த தத்துவம்

2
ஸ்ரீராமஜயம்




நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துகள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. 


 



இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். 

அதனால் தான் குழந்தை ஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும் படியாக  யானை உருவத்தோடு இருக்கிறார்.




அது ஆனந்த தத்துவம், ஆறாத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன யந்த்ரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது பரமேஸ்வரன் அம்பாளை ஆனந்தமாகப் பார்த்தபோது, அவளும் ஆனந்தமாக இந்தப்பிள்ளையைப் பெற்றாள்.




விநாயகர்  வின்யந்திரங்களை உடைத்து தன் அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

‘தோர்பி: கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. 

‘தோர்பி:’ என்றால் ’கைகளினால்’ என்று அர்த்தம்.

‘கர்ணம்’ என்றால் காது.

‘தோர்பி: கர்ணம்’  என்றால் கைகளினால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேஷ்வரருடைய அநுக்ரஹம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்ரஹம் செய்கிற அழகான குழந்தை தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக !







ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

செவ்வாய், 28 மே, 2013

1] வெயிட்லெஸ் விநாயகர்

2
ஸ்ரீராமஜயம்

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம். 

நவக்கிரஹங்களுக்குள் மந்திரங்கள், தெய்வ வழிபாடு ஆகியவற்றிற்கு அதிபதியாக உள்ள ஸ்ரீ குரு பகவான் [வியாழன் என்னும் கிரஹம்] திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 31.05.2013 வெள்ளிக்கிழமை காலை 06.49 மணிக்கும், வாக்கியப் பஞ்சாங்கப்படி  இன்று 28.05.2013 செவ்வாய்க்கிழமை இரவு 09.18 மணிக்கும்,  ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சியாகிறார்.

குழந்தைகள், வம்சவிருத்தி, ஸ்வர்ண [தங்க] இலாபம், பதவி உயர்வு ஆகியவற்றைத்தர சக்தியுள்ள குருபகவான் புதன் வீடான மிதுன ராசியில் நுழைவதால், தேசத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும். ஆஸ்திகம் வளர்ச்சியடையும்  எனக்கூறப்படுகிறது.

குருப்பெயர்ச்சி + அக்னி நக்ஷத்திர நிவர்த்தி நாளான இன்று, மிகச்சரியாக குருப்பெயர்ச்சி நேரத்தில் இந்தப்புதிய தொடரின் முதல் பகுதியினை வெளியிடும் பாக்யம், குருவருளால் கிடைத்துள்ளதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.  

உலக மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்தத் தொடரினை தொடர்ந்து படிக்கப்போகும் அனைவருக்கும் குருவருள் கிட்டி, எல்லோரும் வாழ்க்கையில், சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்




2
ஸ்ரீராமஜயம்



விநாயகரோ யானை மாதிரி இருக்கின்றார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தன் வாகனமாக வைத்துக்கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி என்று வாகனம் இருக்கிறது. 

இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக்கொண்டாலும், வாகனத்தினால் ஸ்வாமிக்கு கெளரவம் இல்லை. ஸ்வாமியால் தான் வாகனத்திற்கு கெளரவம். 

வாகனத்திற்கு கெளரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப்பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார், அதற்கு சிரமம் இல்லாமல். 





ஆனால் அதற்கு மரியாதை கெளரவம் எல்லாம் உண்டாகும்படியாக தம் உடம்பை வைத்துக்கொண்டிருக்கிறார், ஸ்தூலகாயரான போதிலும்.



‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.     




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
[ஒருநாள் விட்டு ஒருநாள்]
தொடர்ந்து பொழியும்.






ஞாயிறு, 19 மே, 2013

ஜயந்தி வரட்டும் ! ஜயம் தரட்டும் !!


By
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஜயந்தி
வரும் 25.05.2013 சனிக்கிழமை.

ஸ்திர வாரம், ஸித்த யோகம், 
பெளர்ணமி + வைகாசி அனுஷம்

பல ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் முதலிய மஹான்களை நாம் நமது கண்களால் கண்டதில்லை. ஏனெனில் இவர்கள் நாம் பிறப்பதற்கு வெகு காலம் முன்பாகவே பிறந்தவர்கள்.

ஆனால் ஏராளமான தபஸ்ஸுடன் அனுக்ரஹ சக்தியுடன், இந்திரியங்களுக்குக் கட்டுப்படாதவராக, தேசத்தையும் தேச மக்களின் நலனையுமே கருத்தில் கொண்டு, வேத சாஸ்திர வழிமுறையிலிருந்து சிறிதும் நழுவாதவராக, நூறு வருடங்கள் வாழ்ந்த மஹான்தான் நமது காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாள். 

இவரை நாம் கண்ணால் தரிஸனம் செய்துள்ளோம். இவருக்கு நமஸ்காரம் செய்துள்ளோம். இவர் நம்மை தனது கண்களாலும் கைகளாலும் அனுக்கிரஹித்து உள்ளார். அதற்கும் மேலாக நாம் இவருடன் பேசும் பாக்யத்தைப் பெற்றுள்ளோம்**. 

மேலும் இவரின் கட்டளையை ஏற்று அதற்குத் தக்க செயல்படும் பாக்யத்தையும் பெற்றுள்ளோம், என எண்ணும்போதே நமது உள்ளம் பூரிப்படைகிறது. என்னே இவரின் தபஸ் சக்தி! அனுக்ரஹ சக்தி!!

ஒவ்வொருவரையும் அவரது கடமையில் ஈடுபடுத்திய மஹான். பதவி, பொருள், புகழ், இந்திரிய சுகம், அனைத்தையும் துறந்து வாழ்ந்த சிறந்த துறவி. வேதம், சாஸ்திரம், கலைகள், புராணம், கலாசாரம், பண்பாடு ஆகியவைகளைப் புதுப்பித்து நிலை நாட்டிய மஹான்.

ஒரு நாள்கூட தனது கைகளால் செல்வத்தை [பணம்] தொடாமல் நூறு வயது வாழ்ந்தவர். பஸ், ரயில், கார், விமானம் போன்ற வாகனங்களின்றி காஷ்மீர் முதல் கன்யாக்குமரி வரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை , பாத யாத்திரையாகவே சென்று ஆங்காங்கேயுள்ள பாமர ஜனங்களுக்கும் அருள் வழங்கிய அருளாளர்.

இவரைப்பற்றிய சரித்திரத்தை உள்ளத்தில் நினைத்து ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அவதரித்த [பிறந்த] தினமான வைகாசி அனுஷ நக்ஷத்ரமான வரும் சனிக்கிழமை [25.05.2013] ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஜயந்தியன்று இவர்களை தியானித்து நாமும் நம் அன்றாட வாழ்க்கையில் ஜயமும், சந்தோஷமும்  அடைவோமாக!



-oooOooo-

-

    
ஸ்ரீ மஹாபெரியவா பற்றி 
சமீபத்தில் படித்ததில் பிடித்தது

 HIS HOLINESS MAHAPERIYAVA
MIRACLE INCIDENT -2 

[ LINK FOR MIRACLE - INCIDENT-1 : 


பல வருடங்களுக்கு முன்பு, கரூரைப் பூர்வீகமாகக் கொண்ட ராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார். 

[கனபாடிகள் = ரிக் அல்லது யஜுர்வேதம் + சாஸ்திரங்களை நன்கு முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களுக்கு, அவர்களின் பெயர்களுக்குப்பின் கொடுக்கப்படும் ஒரு மரியாதைச்சொல். 

அதுபோல ஸாமவேதம் முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களை அவர்களின் பெயருக்குப்பின் ‘சிரெளதிகள்’ என்ற மரியாதைச்சொல் சேர்த்து அழைப்பதுண்டு]

ராமநாத கனபாடிகள் அவர்களின் மனைவி பெயர் தர்மாம்பாள். அவர்களுக்கு ஒரே மகள். அவள் பெயர் காமாக்ஷி.

ராமநாத கனபாடிகள் அவர்கள் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தை வயிற்றுப் பிழைப்புக்காகக் கொள்ளவில்லை.  உபன்யாஸம் பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில் அவர்களாகப் பார்த்து அளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்வார். 

ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகளிடம் மிகுந்த விஸ்வாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.

இருபத்திரண்டு வயதான அவர்களின் மகள் காமாக்ஷிக்குத் திடீரென ஒரு மாதத்தில் திருமணம் என்று நிச்சயம் ஆனது.  மணமகன் ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர்.

தர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள், “பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்து .....கையிலே எவ்வளவு பணம் சேர்த்து வெச்சிண்டிருக்கேள்?” 

கனபாடிகள் பவ்யமாக, “தர்மு, ஒனக்குத் தெரியாதா என்ன? இதுவரைக்கும் அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்.  சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே” என்று சொல்ல, தர்மாம்பாளுக்கு கோபம் வந்து விட்டது.

“அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப்பண்ண முடியும்? நகைநட்டு, சீர்செனத்தி, பொடவை, துணிமணி வாங்கி, சாப்பாடு போட்டு,  எப்படிக் கல்யாணத்தை நடத்த முடியும்? இன்னும் பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும்.  ஏற்பாடு பண்ணுங்கோ!” இது தர்மாம்பாள். 

இடிந்து போய் நின்றார், ராமாநாத கனபாடிகள்.

உடனே தர்மாம்பாள், “ஒரு வழி இருக்கு. சொல்றேன். கேளுங்கோ! கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ; கொஞ்சம் பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ. அங்கே ஸ்ரீ மடத்துக்குப்போய், ஒரு தட்டிலே பழங்களை வெச்சு கல்யாணப் பத்திரிகையையும் வெச்சு, மஹா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்கோ; பதினைந்தாயிரம் பண ஒத்தாசை கேளுங்கோ ... ஒங்களுக்கு ‘இல்லே’ன்னு சொல்லமாட்டா பெரியவா” என்றாள் நம்பிக்கையுடன்.   

அவ்வளவு தான் ..... ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்து விட்டது. 

“என்ன சொன்னே .... என்ன சொன்னே ... பெரியவாளைப்பார்த்துப் பணம் கேக்கறதாவது .... என்ன வார்த்த பேசறே நீ ...” என்று கனபாடிகள் முடிப்பதற்குள் ..... 

”ஏன்? என்ன தப்பு? பெரியவா நமக்கெல்லாம் குரு தானே? குருவிடம் போய் யாசகம் கேட்டால் என்ன தப்பு?” என்று கேட்டாள், தர்மாம்பாள்.

“என்ன பேசறே தர்மு? அவர் ஜகத்குரு. குருவிடம் நாம ’ஞான’த்தைத்தான் யாசிக்கலாமே தவிர, ’தான’த்தை [பணத்தை] யாசிக்கப்படாது” என்று சொல்லிப்பார்த்தார் கனபாடிகள்.  பயனில்லை./

அடுத்தநாள் ’மடிசஞ்சி’யில் [மடிசஞ்சி = ஆச்சாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளிப்பை] தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டு விட்டார், கனபாடிகள்.

ஸ்ரீமடத்தில் அன்று மஹா பெரியவாளைத் தரிஸனம் பண்ண ஏகக்கூட்டம்.  ஒரு மூங்கில் தட்டில் பழம், பத்திரிகையோடு வரிசையில் நின்று கொண்டிருந்தார், ராமநாத கனபாடிகள். நின்றிருந்த அனைவரின் கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும் அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாக வாங்கி, பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள், “ஐயா ... ஐயா ... அந்தத்தட்டிலே என் பெண்ணின் கல்யாணப் பத்திரிகைகள்  வெச்சிருக்கேன். பெரியவாளிடம் சமர்ப்பிச்சு ஆசீர்வாதம் வாங்கணும். அதை இப்படிக்கொடுங்கோ” என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் அது யார் காதிலும் விழவில்லை.

அதற்குள் மஹா ஸ்வாமிகள், கனபாடிகளைப் பார்த்து விட்டார்கள். ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன், “அடடே! நம்ம கரூர் ராமநாத கனபாடிகளா? வரணும் ... வரணும்.  ஸ்ரீரங்கத்தில் எல்லோரும் செளக்யமா? க்ஷேமமா? உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா?” என்று விசாரித்துக்கொண்டே போனார். 

”எல்லாம் பெரியவா அனுக்கிரஹத்திலே நன்னா நடக்கிறது” என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணி எழுந்தார். 

உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே “ஆத்திலே .... பேரு என்ன ... ம்... தர்மாம்பாள்தானே? செளக்யமா? ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள்; அவரோட அப்பா சுப்ரமணிய கனபாடிகள் ... என்ன நான் சொல்ற பேரெல்லாம் சரி தானே? என்று கேட்டு முடிப்பதற்குள், ராமநாத கனபாடிகள்,”எல்லாமே சரி தான் பெரியவா, என் ஆம்படையா [மனைவி] தர்முதான் பெரியவாளைப் பார்த்துட்டு வரச்சொன்னா...”என்று குழறினார். 

“அப்போ ... நீயா வரல்லே?” இது பெரியவா. 

“அப்படி இல்லே பெரியவா. பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கு.  தர்மு தான் பெரியவாளை தரிஸனம் பண்ணிட்டு .... பத்திரிகைகளை சமர்பிச்சுட்டு .....  என்று கனபாடிகள் முடிப்பதற்குள், “ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச்சொல்லியிருப்பா”  என்று பூர்த்தி செய்து விட்டார், ஸ்வாமிகள். 

பதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் குழம்பினார் கனபாடிகள். இந்நிலையில் பெரியவா, “உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன்; நடத்திக்கொடுப்பியா? என்று கேட்டார். 

”அஸைன்மெண்டுன்னா ..... பெரியவா?” இது கனபாடிகள்.

“செய்து முடிக்க வேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம். எனக்காக நீ பண்ணுவியா?” 

பெரியவா திடீரென்று இப்படிக்கேட்டவுடன், வந்த விஷயத்தை விட்டுவிட்டார் கனபாடிகள். குதூகலத்தோடு, “சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கேன்” என்றார்.

உடனே பெரியவா, “ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட் கொடுக்கப்போறேன்? உபன்யாஸம் பண்றது தான். திருநெல்வேலி கடைய நல்லூர் பக்கத்திலே ஒரு அக்ரஹாரம். ரொம்ப மோசமான நிலையில் இருக்காம். பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாம செத்துப் போய்டறதாம்.  கேரள நம்பூத்ரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுல, பெருமாள் கோயில்ல ’பாகவத உபன்யாஸம்’ பண்ணச்சொன்னாளாம். ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் இங்கே வந்தார். விஷயத்தைச்சொல்லிட்டு, ”நீங்கதான் ஸ்வாமி, பாகவத உபன்யாஸம் பண்ண ஒருத்தரை அனுப்பி வைத்து உபகாரம் பண்ணனும்” ன்னு பொறுப்பை என் தலையிலே கட்டிட்டுப் போய்ட்டார். நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணிட்டு வரணும். மற்ற விபரமெல்லாம் மடத்து மேனேஜருக்குத் தெரியும்.  கேட்டுக்கோ. சிலவுக்கு மடத்துல பணம் வாங்கிக்கோ. இன்னிக்கு ராத்திரியே விழுப்புரத்தில் ரயில் ஏறிடு. சம்பாவணை [வெகுமானம்] அவா பார்த்துப் பண்ணுவா. போ.. போ.. போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு பக்தரிடம் பேச ஆரம்பித்து விட்டார் ஸ்வாமிகள்.

அன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள் மத்யானம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார். பெருமாள் கோயில் பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அழைத்துச் சென்றார்.

ஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள் கோயில்.  கோயில் பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார் கனபாடிகள். ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் ஈ காக்காக்கூட கனபாடிகளை வந்து பார்க்கவில்லை. ‘உபன்யாஸத்தின் போது எல்லோரும் வருவா’ என அவரே தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டார்.

மாலைவேளை. வரதராஜப்பெருமாள் சந்நதி முன் அமர்ந்து பாகவத உபன்யாஸத்தைக் காஞ்சி பரமாச்சார்யாளை மனதில் நினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள். எதிரே எதிரே ஸ்ரீ வரதராஜப்பெருமாள், பெருமாள் கோயில் பட்டர், கோயில் மெய்க்காவல்காரர் ... இவ்வளவு பேர்தான்.

உபன்யாஸம் முடிந்ததும், ”ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமே வரல்லே?” என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார் கனபாடிகள்.

அதற்கு பட்டர், “ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டு பட்டுக்கிடக்குது! இந்தக்கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவது என்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை. அதை முடிவு கட்டிண்டுதான் “கோயிலுக்குள்ளே நுழைவோம்”ன்னு சொல்லிட்டா. உபன்யாஸத்திற்கு நீங்க வந்திருக்கிற சமயத்துல ஊர் இப்படி ஆயிருக்கேன்னு ரொம்ப வருத்தப்படறேன்” என்று கனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கினார் பட்டர்.

பட்டரும், மெய்க்காவலரும். பெருமாளும் மாத்திரம் கேட்க பாகவத உபன்யாஸத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார், ராமநாத கனபாடிகள். 

பட்டாச்சாரியார் பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணி பிரஸாதத்தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயை வைத்தார். மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம் சில்லரையை எடுத்து அந்தத்தட்டில் போட்டார். 

பட்டர்ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச்சொல்லி, சம்பாவணைத் தட்டை கனபாடிகளிடம் அளித்து, “ஏதோ இந்த சந்தர்ப்பம் இதுபோல ஆயிடுத்து. மன்னிக்கணும். ரொம்ப நன்னா ஏழு நாளும் பாகவதக்கதை சொன்னேள். எந்தனைரூவா வேணும்னாலும் சம்பாவணை பண்ணலாம். பொறுத்துக்கணும். டிக்கெட் வாங்கி ரயில் ஏத்தி விட்டுடறேன்” என கண்களில் நீர்மல்க உருகினார்.

திருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும், மெய்க்காவலருமாக வந்து ரயிலில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். விழுப்புரத்துக்கு ரயிலேறி, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார், கனபாடிகள்.

அன்றும் மடத்தில் பரமாச்சார்யாளை தரிஸிக்க ஏகக்கூட்டம். அனைவரும் நகரும்வரைக் காத்திருந்தார் கனபாடிகள்.

“வா ராமநாதா! உபன்யாஸம் முடிச்சுட்டு இப்பதான் வரயா? பேஷ் ... பேஷ். உபன்யாஸத்துக்கு நல்ல கூட்டமோ? சுத்துவட்டாரமே திரண்டு வந்ததோ?” என்று உற்சாகமாகக் கேட்டார், ஸ்வாமிகள்.

கனபாடிகளின் கண்களில் நீர் முட்டியது. தழுதழுக்கும் குரலில் பெரியவாளிடம், “இல்லே பெரியவா. அப்படி எல்லாம் கூட்டம் வரல்லே. அந்த ஊர்லே ரெண்டு கோஷ்டிக்குள்ளே ஏதோ பிரச்சனையாம், பெரியவா. அதனாலே கோயில் பக்கம் ஏழு நாளும் யாருமே வரல்லே” என்று ஆதங்கப்பட்டார் கனபாடிகள்.

”சரி... பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா?”

“ரெண்டே .. ரெண்டு பேர் தான் பெரியவா. அதுதான் வருத்தமா இருக்கு” இது கனபாடிகள்.

உடனே பெரியவா, “இதுக்காகக் கண் கலங்கப்படாது. யார் அந்த ரெண்டு பாக்யசாலிகள்? சொல்லேன், கேட்போம்” என்றார்.  

”வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா. ஒண்ணு, அந்தக்கோயில் பட்டர். இன்னொன்ணு அந்தக்கோயில் மெய்க்காவலர்” என்று சொல்லி முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடி இடியென்று வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

”ராமநாதா, நீ பெரிய பாக்யசாலிடா! தேரிலே ஒக்காந்து கிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன் ஒருத்தன் தான் கேட்டான். ஒனக்குப்பாரு .... ரெண்டு பேர்வழிகள் கேட்டிருக்கா! கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி” என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.




“அப்படின்னா பெரிய சம்பாவணை கெடச்சிருக்க வாய்ப்பில்லை ... என்ன?” என்றார் பெரியவா.

”அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும், மெய்க்காவலர் ஒரு ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து, மொத்தம் முப்பத்திரெண்டே கால் ரூவா கெடச்சது பெரியவா” கனபாடிகள் தெரிவித்தார்.

“ராமநாதா, நான் சொன்னதுக்காக நீ அங்கே போயிட்டு வந்தே. உன்னோட வேதப்புலமைக்கு நெறயப் பண்ணனும். இந்த சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு” என்று கூறி, காரியஸ்தரைக் கூப்பிட்டார் ஸ்வாமிகள். அவரிடம், கனபாடிகளுக்குச் சால்வை போர்த்தி ஆயிரம் ரூபாயை பழத்தட்டில் வைத்துக்கொடுக்கச் சொன்னார்.

“இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு, நீயும் ஒன் குடும்பமும்  பரம செளக்யமா இருப்பேள்” என்று உத்தரவும் கொடுத்து விட்டார், ஸ்வாமிகள்.

கண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த கனபாடிகளுக்கு, தான் ஸ்வாமிகளைப்பார்க்க எதற்காக வந்தோம் என்ற விஷயம் அப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது.

“பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை ... பெண் கல்யாணம் நல்லபடி நடக்கணும்..... ‘அதுக்கு .... அதுக்கு ....” என்று அவர் தயங்கவும், “என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு. விவாஹத்தை சந்திர மெளலீஸ்வரர் ஜாம்ஜாம்ன்னு நடத்தி வைப்பார். ஜாக்கிரதையா ஊருக்குப் போய்ட்டு வா” என்று விடை கொடுத்தார், பரமாச்சாரியாள். 

ரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டுவாசலை அடையும் தனக்கு, மனைவியின் வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார் ராமநாத கனபாடிகள்.

”இருங்கோ.... இருங்கோ .... வந்துட்டேன் ....” உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக்குரல்.

வாசலுக்கு வந்து, கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர் கொடுத்தாள். ஹாரத்தி எடுத்து உள்ளே அழைத்துப்போனாள். காஃபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு, “இங்கே பூஜை ரூமுக்கு வந்து பாருங்கோ” என்று கனபாடிகளை அழைத்துப்போனாள்.

பூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள். அங்கே ஸ்வாமிக்குமுன்பாக ஒரு பெரிய மூங்கில் தட்டில், பழ வகைகளுடன் புடவை, வேஷ்டி, இரண்டு திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், புஷ்பம் இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது.  

”தர்மு.... இதெல்லாம்.....” என்று அவர் முடிப்பதற்குள், “காஞ்சிபுரத்துலேந்து பெரியவா கொடுத்துட்டு வரச்சொன்னதா” இன்னிக்குக் கார்த்தால மடத்தை சேர்ந்தவா இருவர் கொண்டு வந்து வெச்சுட்டுப்போறா. ”எதுக்கு?” ன்னு நானும் கேட்டேன். 

“ஒங்காத்துப்பொண்ணு கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னா”ன்னு சொன்னார்கள்” என்று முடித்தாள் அவர் மனைவி.

கனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது. பெரியவாளுடைய கருணையே கருணை. நான் வாயத்திறந்து ஒண்ணுமே கேட்கலே. அப்படி இருந்தும் அந்தத் தெய்வம் இதையெல்லாம் அன்ப்பியிருக்கு பாரு” என்று நா தழுதழுக்க ”அந்தக் கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ” என்று கேட்டார்.

”நான் எண்ணிப்பார்க்கலே” என்றாள் அவர் மனைவி.


கீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள்.


மிகச்சரியாக பதினைந்தாயிரம் ரூபாய்!

அந்ததீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து ”ஹோ”வெனக் கதறி அழுதார் ராமநாத கனபாடிகள்.


oooooOooooo

சுபம்

oooooOooooo




** ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பேச்சுக்களை நேரில் கேட்கும் பாக்யம் கிடைக்காதவர்களுக்கு பயன்படும் விதமாக, அவர்கள் பேசி அருளியுள்ள அனுக்ரஹ வார்த்தைகளை [நான் பல்வேறு புத்தகங்களில் படித்தவற்றை] அவ்வப்போது சிறுசிறு பகுதிகளாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தைப் பிரார்த்தித்து வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.**



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்


வியாழன், 9 மே, 2013

சித்திரை மாதம்.... பெளர்ணமி நேரம் .... முத்து ரதங்கள் .... ஊர்வலம் போகும் ... !



By 
வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-

திருச்சி மாநகரில் 25.03.2013 திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மலைக்கோட்டை ஸ்ரீ மட்டுவர் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமிக்கு தெப்ப உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.   

அப்போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் இதோ தங்கள் பார்வைக்காக.

இந்தத் திருக்குளம் கி.பி. 1ம் நூற்றாண்டில் கரிகால் சோழன் அவர்களால் கட்டப்பட்டது. பிரம்ம தீர்த்தம் என்றும் சோமரோகணி என்றும் அழைக்கப்பட்டது. 

611 அடி நீளமும், 330 அடி அகலமும், 30 அடி ஆழமும் கொண்ட இந்த தெப்பக்குளம், திருச்சி மாநகருக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது.



இந்தத்தெப்பக்குளத்தின் மையத்தில் நிரந்தரமாக அமைந்துள்ள நீராழி மண்டபம் கி.பி. 16ம் நூற்றாண்டில், விஸ்வநாத நாயக்கர் அவர்களால் கட்டப்பட்டது.  



தெப்பத்திருவிழாவின்போது மட்டும் தற்காலிகமாக மிதக்கும் தெப்பம் உருவாக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மையத்தில் நிரந்தரமாக அமைந்துள்ள நீராழி மண்டபத்தை பிரதக்ஷணமாகச் சுற்றி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  





தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள தெப்பத்தில் ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் எனவும் அழைக்கப்படும் ஸ்ரீ மட்டுவர் குழலம்மை ஸமேத ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமி, சோமாஸ்கந்த மூர்த்தியாக எழுந்தருளியுள்ள அற்புதமான காட்சிகள் இவை.








மையப்பகுதியில் உள்ள நிரந்தரமான நீராழி மண்டபத்தை, ஸ்வாமியும் அம்பாளும் எழுந்தருளியுள்ள தற்காலிகத்தெப்பம், இன்னிசைக் கச்சேரிகளுடன் சுற்றி வரும் அற்புதமான அழகியக்காட்சி.



திருச்சி உச்சிப்பிள்ளையார் + 
ஸ்ரீ தாயுமானவர் கோயில்





திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் பற்றிய பெயர்காரணம் முதலிய தகவல்கள் மேலும் அறிய இதோ இணைப்பு:

 http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_27.html

தலைப்பு: 

காது கொடுத்துக் கேட்டேன் ..... 
ஆஹா ........ குவா குவா சப்தம்!









24.04.2013 புதன்கிழமை நடைபெற்ற
திருச்சி மலைக்கோட்டைத் 
தேர்த்திருவிழாவில்
எடுக்கப்பட்ட படங்கள் இதோ




பிள்ளையார் தேர்
மேலே உள்ள படம்





ஸ்ரீ தாயுமானவர் ஸ்வாமி தேர்
மேலும் கீழும் உள்ள படங்கள்








ஸ்ரீ மட்டுவர் குழலம்மை 
அம்பாள் தேர்
மேலும் கீழும் உள்ள படங்கள்












அன்றாடம் பல பயனுள்ள ஸத் விஷயங்களை தன் பிரபல வலைத்தளமான http://tamilbloggersunit.blogspot.in மூலம் வெளியிட்டு வருபவரான  திரு. பட்டாபிராமன் அவர்கள், அன்புடன் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள படம்:


திரு. பட்டாபிராமன் அவர்களுக்கு அடியேனின் மனமார்ந்த இனிய நன்றிகள் / நமஸ்காரங்கள்.
 

 Mr. Pattabi Raman Sir.






என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்