என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

காலம் மாறிப்போச்சு ! சிறுகதை பகுதி 1 of 2





காலம் மாறிப்போச்சு !

[ சிறுகதை பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்




விநாயகர் தான் என் இஷ்ட தெய்வம். எனக்கு இப்போது 60 வயதுகள் முடிந்து விட்டது. அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். என் வீட்டருகில் களிமண்ணைக் குழைத்து விநாயகர் சிலைகளை அச்சில் வடித்து விநாயக சதுர்த்திக்கு ஒரு வாரம் முன்பே விற்பனைக்குத் தயாராக வைப்பார்கள்.  நிறைய கலைஞர்கள் மலைமலையாக குழைத்த களிமண்ணுடன் வரிசையாக தெருவோரம் அமர்ந்திருப்பார்கள். மிகவும் கலை நுணுக்கத்துடன் பல சைஸ்களில் விநாயகரை வடிவமைத்து வரிசையாக அடுக்கிக்கொண்டே போவார்கள்.  

ஒரு அணா முதல் நான்கு அணா வரை (ஒரு ரூபாய்க்கு 16 அணா - ஒரு அணா என்பது ஆறேகால் பைசாவுக்கு சமம் - நான்கு அணா என்றால் 25 பைசா) பலவித சைஸ்களில் விநாயகர் கிடைப்பார். மிகச்சிறிய பிள்ளையார் ஒரு அணா. முரட்டு சைஸ் பிள்ளையார் நாலு அணா. ’விலை மதிப்பில்லாத அந்த பிள்ளையாருக்கு ஒரு விலையா’ என நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. 

நாம் தரும் அந்த விலை, அந்த விநாயகருக்கு இல்லை என்பதையும், அதை நமக்காக வடிவமைத்துத்தரும் ஏழைத்தொழிலாளிகளின் உற்சாகமான உழைப்பிற்கே அந்த விலை என்பதையும் எனக்கு வயதாக வயதாக உணர்ந்து கொள்ள முடிந்தது. 

என் அந்த சிறிய வயதில், களிமண்ணை வைத்து அழகாக அச்சில் விநாயகரை வரவழைக்கும் அவர்களின் திறமையைப் பல மணி நேரம் அவர்கள் அருகிலேயே நின்று பார்த்து நான் வியந்ததுண்டு. 

என் அப்பா சாங்ஷன் செய்யும் ஒரணா அல்லது ஒண்ணரை அணா நாணயத்தை எடுத்துக்கொண்டு என் வீட்டு பூஜைக்குப் பிள்ளையார் வாங்க கோலம் போடப்பட்ட ஒரு பலகையை எடுத்துக்கொண்டு, சேதாரம் எதுவும் இல்லாத ஓரளவு நல்ல பினிஷிங் உள்ள சற்று நிதான சைஸ் விநாயகரை பேரம் பேசி சர்வ ஜாக்கிரதையாக உடையாமல் வாங்கி வருவேன். 


அப்போதெல்லாம் எந்த சாமான்கள் வாங்கினாலும், கொசுறு கொஞ்சம் வாங்கி வருவோம். மளிகைக்கடைகளில் சாமான்கள் வாங்கும் போது கடைக்காரரே பொட்டுக்கடலை கொஞ்சம் கொசுறாக (இன்றைய இலவச இணைப்பு போல) தருவார். 


அதுபோலவே விநாயகர் வாங்கிவரும்போது கொசுறாக கொஞ்சம் ஈரப்பதமுள்ள களிமண் கேட்டு வாங்கி வருவதுண்டு. பலகையில் அமர்ந்துள்ள விநாயகர் ஆடாமல் அசையாமல் இருக்க அந்த ஈரக்களிமண்ணை (கொசுறை) அண்டக்கொடுப்பதுண்டு. அச்சில் வார்த்த விநாயகர் சிலையில் ஏதும் விரிசலோ வெடிப்போ ஏற்பட்டால் அந்தக் கொசுறுக் களிமண்ணை தண்ணீர் கலந்து ஆங்காங்கே ‘டச்-அப்’ செய்யவும் அது உதவும். 


பூஜை முடிந்த ஓரிரு நாட்களில் அந்த விநாயகரை நதியிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போட்டுவிடச் சொல்லுவார்கள். எனக்கு அழுகையே வந்துவிடும். நம்மைக்காக்கும் கடவுளை நாம் காக்க வேண்டாமா? அவரை நீரில் மூழ்கடிக்கலாமா? என்பது என் சந்தேகம். ஆனால் யாரும் என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்காமல் “அது தான் சாஸ்திரம், அது தான் சம்ப்ரதாயம். நீ நாங்கள் சொன்னதை மட்டும் செய்” என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார்கள். 


நாளடைவில் கலர் கலராக விநாயகர் சிலைகள் வரத்தொடங்கின. ஆரம்ப காலத்தில் ஒரே கலராக நீலம் அல்லது ரோஸ் கலரில் விநாயகர் விற்பனைக்கு வந்தார். அதன் பிறகு மல்டி கலர்களில் ஆயில் பெயிண்ட் அடித்து அழகிய பட்டுப்புடவைகள் போல ஜொலிக்கும் விநாயகர்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.


பார்க்கவே வெகு அழகாக இருக்கும். எனக்கு அந்த மல்டி கலர் பிள்ளையாரில் ஒன்று வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை இருந்தது. களிமண் பிள்ளையாரைவிட கலர் பிள்ளையார் பல மடங்கு விலை அதிகம் இருந்ததாலும், அதனை வாங்கித்தர என் தந்தைக்கு பட்ஜெட் பற்றாக்குறையாக இருந்ததாலும், என் ஆசை அந்த நாட்களில் நிராசையாகவே போய் விட்டது. 


ஆயிரம் கலர் பிள்ளையார்கள் விற்பனைக்கு வந்தாலும், களிமண்ணால் வடித்த (ப்ளாக் + ஒயிட்) பிள்ளையார் தான் அபிஷேகத்திற்கும் பூஜைக்கும் வைத்து வழிபட சாஸ்திரப்படி சிறந்தது என ஒரே போடாகப் போட்டு, என்னை சமாதானப் படுத்தி விட்டனர், என் பெற்றோர்கள்.


ஆனால் வசதியுள்ள என் வயது சிறுவர்களும் நண்பர்களும் விதவிதமான கலர் பிள்ளையார்களுடன் விளையாட வந்தபோது என் மனம் மட்டும் வருந்தியது உண்டு.


ஒரு நாள் விநாயகச் சதுர்த்திக்கு முதல் நாளே என் மாமனார் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. அது ஒரு குக்கிராமம். அருகில் விநாயகர் சிலை செய்து விற்கும் எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. அவ்வாறு எதுவும் வாங்கி வர வேண்டுமென்றால் பல மைல் தொலைவில் உள்ள தாலூகா பஜாருக்குப்போய் வரவேண்டுமாம். 


விநாயகர் பொம்மை இல்லாமல் எப்படி பூஜை செய்வீர்கள் என்று என் மனைவியிடம் வினா எழுப்பினேன். “அதெல்லாம், வாய்க்காலுக்கு குளிக்கப் போயிருக்கும் உங்கள் மாமனார் வரும்போது களிமண்ணுடன் தான் வருவார்; வந்ததும் அவரே ஜோராகப் பிள்ளையார் பிடித்து விடுவார், பாருங்கள்” என்றாள்.


இதைக்கேட்டதும் எனக்கு மிகவும் ஆச்சார்யமாகப்போய் விட்டது. ”பிள்ளையார் செய்யும் அச்சு உங்கள் வீட்டிலேயே உள்ளதா” என அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன். இதைக்கேட்ட அவள் களுக்கென்று சிரித்து விட்டாள்.


அதற்குள் என் மாமனார் தன் ஈர காசித்துண்டில் களிமண்ணுடன் வாசலில் வந்து நின்று, தொப்பென்று அதை வாசல் திண்ணையில் வீசிவிட்டு, தானும் திண்ணையில் அமர்ந்தார். வேறு ஒரு ஈர வஸ்த்திரத்தில் அருகம்புல்லும், வெள்ளெருக்குப்பூக்களும், மாவிலையும் வேறு சில புஷ்பங்களும் பறித்து வந்திருந்தார். 


நான் அவர் பிள்ளையார் பிடிக்கப்போவதை ஆவலுடன் காண அவர் அருகில் அமரப்போனேன்.  


“மாப்பிள்ளை!  நீர் பல் துலக்கினீரா, ஸ்நானம் செய்தீரா, மடியா, விழுப்பா; எப்படியிருந்தாலும் என் மீது பட்டு விடாதீர்கள்” என்று சொல்லி என்னை  ஒரு விதக்கடுப்புடன் முறைத்துப்பார்த்தார்.


வாய்க்கால் வரை நடந்தே போய், ஸ்நானம் செய்துவிட்டு, உடம்பு பூராவும் பட்டைபட்டையாக விபூதியை குழைத்து இட்டுக்கொண்டு சிவப்பழமாக, ஈர வஸ்த்திரங்களுடன் பிள்ளையார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யப்போகும் அவர் சொல்லுவதும் நியாயம் தான் என்று உணர்ந்த நான், குளியல் முடித்துவிட்டு வர கொல்லைப்புற கிணற்றடிக்குக் கிளம்பினேன்.


கொல்லைப்புற கோட்டை அடுப்பில் குப்பை சத்தைகளையும், மரக்குச்சிகளையும் திணித்து ஒரே புகையுடன் வெந்நீர் போட்டுக்கொண்டிருந்த என் மாமியார், என்னவளிடம் “மாப்பிள்ளை குளிக்க சூடாக ஒரு அடுக்கு வெந்நீர் கொண்டுபோய்க் கொடுடீ” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.


குளித்து முடித்து விபூதிப்பட்டைகளுடன் நான் வாசலுக்கு வருவதற்குள், என் மாமனார், அந்தக் கிராமத்து வீட்டு நடு ஹாலில் ஒரு ஓரமாக அமர்ந்து பூஜை செய்யத் தயாராகிவிட்டார்.


மாமனாரால் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை ஆவலுடன் நோக்கினேன். அதில் ஒரு அழகு இல்லை. ஆனால் ஒரு வித அமைப்பு மட்டுமே இருந்தது.


சாத்துக்குடி அளவுக்கு ஒரு களிமண் உருண்டை. அது தான் தொந்தியாம். அதன் மேல் எலுமிச்சம்பழம் அளவுக்கு ஒரு சிறிய உருண்டை. அதுதான் முகமாம். அதன் மேல் தீபாவளிக்கலசம் போன்று முக்கோண வடிவில் ஒரு களிமண் அமைப்பு. அது தான் கிரீடமாம். தொந்திக்குக்கீழே இருபுறமும் ஓவல் ஷேப்பில் இரு உருண்டைகள். அவை இரண்டும் கால்களாம். எலுமிச்சை உருண்டை முகத்திலிருந்து தொந்தி முடிவு வரை மண்புழு போல ஒரு களிமண் படரவிடப்பட்டிருந்தது. அது தும்பிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இருபுறமும் அதுபோல கைகளுக்கும், காதுகளுக்கும் ஏதேதோ அட்டாச்மெண்ட் கொடுத்திருந்தார். மொத்தத்தில் நான் எதிர்பார்த்த அழகான பிள்ளையாரை அங்கு காணோம்.


“என்ன மாமா! சொல்லியிருந்தால், ஊரிலிருந்து வரும்போது, நானே அழகாகஒரு பிள்ளையார் பொம்மை வாங்கி வந்திருப்பேனே” என்றேன். 


என்னைப்பார்த்து முறைத்த அவர், ”மாப்பிள்ளை, அனாவஸ்யமாகக் காசைக் களிமண்ணாக ஆக்கக்கூடாது. குளத்தில் ஸ்நானம் செய்துவிட்டு, மடியாக சுத்தமான ஈரக்களிமண் எடுத்து வந்து, அதில் நாமே விநாயகரை வடித்து பூஜிப்பதே சாஸ்திரப்படி சாலச் சிறந்தது” என்றார்.


என் இந்த மாமனாரை விட என் அப்பா எவ்வளவோ மேல் என்று நினைத்துக்கொண்டேன்.


தொடரும்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஏழைப் பிள்ளையார்


2
=




ஏழைப்பிள்ளையார் கோயிலின் மேற்கூரை






சிறிய அந்தக்கோயிலின் முழுத்தோற்றம்






ஏழைப்பிள்ளையார் அபிஷேகத்திற்கு ஆயத்தம் ஆகியுள்ளார்



மக்களுக்குள் தான் ஏழை பணக்காரர் என்ற வித்யாசங்கள் உண்டு என்றால் கடவுளுக்குள்ளும் ஏழை பணக்காரர் என்ற வித்யாசங்கள் உண்டா? என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் எழுவது நியாயமே!



நான் பொய் சொல்லவில்லை. ஏழைப் பிள்ளையார் என்று ஒருவர் இருக்கிறார். ஏழைப்பிள்ளையார் கோயில் என்று ஒரு கோவிலும் உள்ளது. சந்தேகம் உள்ளவர்கள் எங்கள் திருச்சிக்கு வாருங்கள். 


திருச்சியில் மிகப்பிரபலமான உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் மலையைச்சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் உண்டு. உச்சிப்பிள்ளையார் மற்றும் தாயுமானவர் கோயிலின் பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். 

அந்த பிரதான நுழைவாயில், அந்த மிகப்பெரிய தெருவின் மத்தியில் அமைந்திருப்பதால், நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் வலதுகைப்பக்கத்தை [கிழக்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் சின்னக்கடை வீதி என்று அழைப்பார்கள், இன்று அங்கு சின்னக்கடைகளே ஏதும் கிடையாது என்பது போல உலக அளவில் பிரபலமான ஆலுக்காஸ் நகைக்கடையும், மற்றும் கோபால்தாஸ் போன்ற தங்க வைர நகைக்கடைகளும், ஜவுளிக்கடைகளுமாக மாறிவிட்டது.. 

அதேபோல கோயிலின் பிரதான நுழைவாயிலை நோக்கி நின்றால் நம் இடது பக்கத்தை [மேற்குப்பக்கத்தை] அந்தக்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் (NSB) ரோடு என்று அழைப்பார்கள். இன்று அந்தத்தலைவரின் பெயர் சொல்லி யாராவது வெளியூர் ஆசாமிகள் விசாரித்தால், அந்தத்தெருவை அடையாளம் காட்டுபவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 

அந்த அளவுக்கு “சாரதாஸ்” என்ற ஜவுளிக்கடலும், மங்கள் and  மங்கள் என்ற நகை மற்றும் பாத்திரங்கள் கடலும், ரத்னா ஸ்டோர்ஸ் என்ற மிகப்பெரிய பாத்திர வியாபாரக்கடலும் தங்கள் கடல் அலைகளை தொடர்ந்து மோதிமோதி, கடற்கரை போல மக்களைக் கவர்ந்து இழுத்து வருகின்றன.

தேரோடும் தெற்கு வீதி [சின்னக்கடை வீதி மற்றும் NSB Road]

(1) உச்சிப்பிள்ளையார் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
(2) கீழே ஸ்ரீ மாணிக்க விநாயகர் [கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]
(3) கிரிப்பிரதக்ஷணமாக வந்தால் வட மேற்கு மூலையில் ஸ்ரீ சங்கடஹர கணபதி [தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்]

தேரோடும் மேற்குவீதி 

இந்த மேற்கு வீதி நந்தி கோயில் தெரு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் தாயுமானவர் கோயிலுக்குச் சொந்தமான பிரும்மாண்ட நந்தியும், அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. பிரபலமான ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் ஸ்வாமி கோயிலின் ஒரு நுழைவாயிலும் இதே தெருவில் அமைந்துள்ளது.  இந்தத்தெருவினில் நிறைய வணிக வளாகங்களும், வங்கிகளும் அமைந்துள்ளன.

(4) இந்த பிரும்மாண்ட நந்தி கிழக்கு முகமாக அமைந்திருக்க, அதன் வால்புறம் மேற்கு நோக்கி உள்ளது. இதன் அருகிலேயே   ஹனுமனுக்கும், பிள்ளையாருக்குமாக இரண்டு தனித்தனி கோயில்கள் அருகருகே மேற்கு நோக்கி அமைந்துள்ளன. இது தான் நாலாவது பிள்ளையார்.

தேரோடும் வடக்கு வீதி

இது “வடக்கு ஆண்டார் தெரு” என்று அழைக்கப்படுகிறது.  பெரும்பாலும் குடியிருப்புகள் உள்ள பகுதி. இந்தத்தெருவில் மட்டும் நான்கு பிள்ளையார் கோயில்கள் உள்ளன. எல்லாமே தெற்கு நோக்கியுள்ள பிள்ளையார்கள்.

(5) வடமேற்கு மூலையில் அரசமரத்தடியில் உள்ள வரஸித்தி விநாயகர் 

(6) செல்வ விநாயகர்

(7)  ஏழைப்பிள்ளையார் எனப்படும் ஸப்தபுரீஸ்வரர்

(8) ஸ்ரீ நிர்தானந்த விநாயகர்

தேரோடும் கிழக்கு வீதி

இது கீழாண்டார் தெரு (அல்லது கிழக்கு ஆண்டார் தெரு) என்று அழைக்கப்படுகிறது. இங்கும் குடியிருப்புகள், கடைகள் மற்றும் கோயிலின் இரண்டு மிகப்பெரிய தேர்கள் நிறுத்துமிடம் முதலியன உள்ளன.

  (9) வடகிழக்கு மூலை அரசமர ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கி உள்ளார்)

(10) ஸ்ரீ முத்தாளம்மன் திருக்கோயில் வாசல் பிள்ளையார் 
        (கிழக்கு நோக்கியபடி)

(11) மேற்படி பிள்ளையாரைப் பார்த்தபடி இன்னொரு பிள்ளையார்
       (மேற்கு நோக்கியபடி)

(12) தென் கிழக்கு மூலையில் ஸ்ரீ ஸித்தி விநாயகர் (கிழக்கு நோக்கியபடி)

இவ்வாறாக திருச்சி உச்சிப்பிள்ளையார் மலையையும், மலையைச்சுற்றியுள்ள தேரோடும் நான்கு வீதிகளிலுமாகச் சேர்த்து மொத்தம் 12 விநாயகர்கள் மிகவும் பிரபலமாக, சிறிய கோயில்கள் கொண்டு உள்ளனர். தினமும் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை எல்லாம் நடைபெறுகின்றன. சங்கடஹரசதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றில் எண்ணிக்கையில் ஏழாவதான [வடக்கு ஆண்டார் தெருவில் அமைந்துள்ள] ஏழைப்பிள்ளையார் என்னும் ஸப்தபுரீஸ்வரர் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகிறேன்.

சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்களை ஸப்த ஸ்வரங்கள் என்போம். ஸப்தகிரி என்றால் ஏழுமலை என்று பொருள்.  ஸப்தரிஷி என்றால் ஏழு முனிவர்கள் என்று அர்த்தம். “ஸப்த” என்ற வடமொழிச்சொல்லுக்கு ஏழு என்று பொருள். ஏழு என்பது முழுமையைக் குறிப்பதாகும்.  உச்சிப்பிள்ளையாரிலிருந்து ஆரம்பித்து மலையைப் பிரதக்ஷணமாக வரும்போது ஏழாவதாக உள்ள இவர் ’ஏழாவது பிள்ளையார்’ என்று தான் இருந்திருக்க வேண்டும். நாளடைவில் இந்த ‘ஏழாவது பிள்ளையார்’ சொல்வழக்கில் ”ஏழைப்பிள்ளையார்” ஆகி இருப்பார் என்பது எனது ஆராய்ச்சியாகும்.  

ஏழை மக்களுக்கு அருள் பாலிப்பவராக இருப்பதனாலும் அவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்.  ஸப்தபுரீஸ்வரர் என்ற திருநாமமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையேறி உச்சிப்பிள்ளையாரை தரிஸிக்க இயலாதவர்கள் இந்த ஏழைப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டாலே அது உச்சிபிள்ளையாரை தரிஸித்ததற்கு சமமாகும் என்றும் சொல்லுகிறார்கள். பக்தர்கள் முழுத்தேங்காய்களின் குடுமிப்பகுதிகளை கயிற்றால் கோத்து மாலையாக இந்த ஏழைப்பிள்ளையாருக்கு அணிவித்து மகிழ்கிறார்கள்.  

இந்த ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்து பார்த்தாலே அந்த பணக்கார உச்சிப்பிள்ளையார் கோயில் அழகாகத்தெரியும்படி அமைந்துள்ளது இந்தக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். 





ஏழைப்பிள்ளையார் கோயில் வாசலிலிருந்தே
பணக்கார உச்சிப்பிள்ளையார் கோயிலையும் பார்க்கும் வசதி

-o-o-o-o-o-o-o-o-





[ இந்த ஏழைப் பிள்ளையார், தான் குடிகொண்டிருக்கும் அதே திருச்சி வடக்கு ஆண்டார் தெருவில் தான், இந்த ஏழை எளிய அந்தணனாகிய அடியேனையும் [வை. கோபாலகிருஷ்ணனையும்] குடி அமர்த்தியுள்ளார், என்பதை நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.]








இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.








”பெருமை வாய்ந்த பிள்ளையார்”
என்ற தலைப்பில் நம் அன்புக்குரிய 
கொங்கு நாட்டுத்தங்கம்
கோவை திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
 வெளியிட்டுள்ள பதிவினைக்காணத் தவறாதீர்கள்.
http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_28.html








என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்




-oOo-







வியாழன், 25 ஆகஸ்ட், 2011

மலரே.............குறிஞ்சி மலரே ! [இறுதிப்பகுதி 3 of 3]





மலரே........குறிஞ்சி மலரே ! 

[சிறுகதை - சிறு தொடர்கதை 
 இறுதிப்பகுதி 3 of 3]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
முன்கதை முடிந்த இடம்:



இந்த அஃபிஷியல் ட்யூர் முடிந்ததும், அடுத்தவாரம் ஜாலியாக கல்பனாவுடன் ஊட்டி மலர் கண்காட்சிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். சிறுவயது முதலே அபூர்வமாகப்பூக்கும் குறிஞ்சி மலரைக்காண வேண்டும் என்ற ஒரு ஆவல், சிவராமனுக்கு. இன்றுவரை அது நிறைவேறாத ஒரு ஆசையாகவே உள்ளது. இந்த ஆண்டும் தனது நெடுநாளைய ஆசை நிறைவேறாதபடி இந்த மன உளைச்சலுடன் கூடிய எதிர்பாராத சிறைவாசம்.

சிவராமனைப் பொருத்தவரை இந்தச் சிறைவாசமும், குறிஞ்சி மலரைப்போலவே இதுவரைப் பார்த்தறியாத ஒரு புது அனுபவம் தான்.  


============oOo============  
   

வக்கீல் நந்தினி மறுநாள் சனிக்கிழமை தன்னுடைய வருங்காலக் கணவரும், சீனியர் வக்கீலுமான வஸந்த் இடம் எல்லா விஷயங்களையும் கூறி, மேற்கொண்டு என்ன செய்து, தன் சினேகிதியின் கணவரை மீட்கலாம் என்று ஆலோசித்தாள்.

வக்கீல் வஸந்த் தனக்குத்தெரிந்த ஒரு போலீஸ் ஆபீஸர் மூலம், சிவராமனை அடைத்து வைத்துள்ள சிறைச்சாலையைப் பற்றிய விவரம் தெரிந்து கொண்டு, திங்கட்கிழமை காலையில் சிவராமனை ஜாமீனில் எடுக்க, முயற்சிகள் மேற்கொண்டார்.

ஜாமீனில் எடுக்கப்பட்ட சிவராமனிடம் நந்தினியும், வஸந்தும் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, நந்தினியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைப்பற்றி, வக்கீல்களின் ஆலோசனைப்படி, சிவராமனால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. 

நந்தினி வீட்டுக்குச்சென்ற சிவராமனுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் நந்தினியால் செய்து கொடுக்கப்பட்டன.  சிவராமனை கல்பனாவுடன் போனில் பேசச்சொல்லி தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தாள் நந்தினி.


நடந்த கதைகளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை முழுவதுமாகக் கூறி, ஆபத்தான நெருக்கடியான சூழ்நிலையில் மிகவும் அன்பாகவும், பண்பாகவும், தனக்கு பல்வேறு உதவிகள் செய்து கொடுத்து, போலீஸ் காவலிலிருந்து தன்னை விடுவித்த, நந்தினியைப்பற்றி, கல்பனாவிடம் வானளாவப் புகழ்ந்து தள்ளினான், சிவராமன்.


இரண்டு முழுநாட்களும், மூன்று முழு இரவுகளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுபவம் அவனை முற்றிலும் ஒரு புது மனிதனாகவே மாற்றியிருந்தது. மிகவும் சங்கோஜியானவன் இப்போது மிகவும் சகஜமாகப்பழக ஆரம்பித்தான்.


படித்த பெண்கள் எவ்வளவு அறிவாளிகள் என்றும், முற்போக்கானவர்கள் என்றும், அவர்களின் விவேகமான, தைர்யமான செயல்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வளவு தேவைப்படுகிறது என்றும் நந்தினி மூலம் உணர்ந்து கொண்டான். அவளின் சமயோஜித புத்தியால் மட்டுமே, தன் கன்னத்து மச்சம் மூலம், தான் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, பிறகு சிறையிலிருந்து மீண்டு வர முடிந்ததை அறிந்து, நந்தினிக்கு தன் மனமார்ந்த நன்றிகளை வார்த்தைக்கு வார்த்தை தெரிவித்து கொண்டான். 


தான் இதுவரை ஹிந்தி மொழியைக் கற்காததை நினைத்தும், ஹிந்தி பேசத்தெரியாமல் தலைநகருக்கு புறப்பட்டு வந்ததை நினைத்தும், கவனக்குறைவாக இருந்து தன் உடமைகளைப் பறிகொடுத்ததை நினைத்தும், மிகவும் துரதிஷ்டவசமாக போலீஸில் மாட்டியதை நினைத்தும், மிகவும் வருந்தினான்.


அவனுக்கு ஆறுதல் சொல்லிய நந்தினி “தங்கள் மனைவி கல்பனாவுடன் பழகியதால் தான், இன்று நான் இந்தப்பரபரப்பான டெல்லியில் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும், அச்சமின்றியும் வாழ முடிகிறது; 


தங்கள் கல்பனா என்னைவிட எல்லாவிதத்திலும் மிகச்சிறந்த ஒரு உன்னதமான பெண். அவளுக்கு மட்டும் முழுச் சுதந்திரமும், வாய்ப்பும் அளிக்கப்பட்டால், இந்த நம் நாட்டையே ஆளக்கூடிய அளவுக்கு எல்லாத் திறமைகளும், அசாத்ய துணிச்சலும் அவளுக்கு உண்டு; 


அவளுடைய அன்பான அணுகுமுறை, மனோதைர்யம், பொதுஅறிவு, பேச்சாற்றல் மற்றும் ஆளுமைத்திறனால் நல்லதொரு சமுதாய மாற்றத்தைக் கல்பனாவால் கொண்டு வர முடியும்; 


கல்லூரியில் படிக்கும்போது எங்களுக்கெல்லாம் கல்பனா தான்  ரோல்மாடலாக இருந்து வந்தாள். எதிலும் தனித்தன்மையும், முழுத்திறமையும் ஒருங்கே வாய்ந்த உங்கள் மனைவியால் உங்களுக்கே கூட சமூகத்தில் மிகவும் புகழும், பெருமையும் அதிகரிக்க வாய்ப்புண்டு; 


உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அடுத்தமுறை நீங்கள் டெல்லி வரும்போது, கட்டாயம் சரளமாக ஹிந்திமொழி பேசத்தெரிந்தவளான என் உயிர்த்தோழி கல்பனாவுடன் தான் வரவேண்டும்” என்று நந்தினி தன் விருப்பத்தைக் கூறினாள்.


எப்போதுமே எந்தவிதமான அலட்டலோ, ஆரவாரமோ இன்றி அன்புடனும், அமைதியுடனும் இருந்து வரும் தன் மனைவிக்குள் இவ்வளவு நல்ல விஷயங்களா! சிவராமனுக்கே மிகவும் ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது.


ஒரு புதிய சூட்கேஸில் பயணத்திற்கு வேண்டிய அவசியமான துணிமணிகள், புதியதாக வஸந்த் ஆல் வாங்கிவரப்பட்ட ரெடிமேட் பேண்ட்கள், டீ ஷர்ட்கள், புதியதோர் செல் போன், சிம்கார்ட், ரொக்கப்பணம் முதலியவற்றைக்கொடுத்து, தன் வீட்டில் நல்ல விருந்தும் அளித்து, சிவராமனை ஹரித்வாருக்கு வழியனுப்ப ஸ்டேஷன் வ்ரை தன் காதலன் வஸந்துடன் காரில் சென்று வந்தாள் நந்தினி..


அலுவலக வேலை முடிந்து தன் ஊருக்கும் வீட்டுக்கும் திரும்பிய சிவராமன், கல்பனாவுக்கு மிகவும் பிடித்தமான, பால் ஸ்வீட்ஸ் டப்பாக்களை திறந்து நீட்டினான். தாய்மைப்பேறு பெறப்போகும் கல்பனாவுக்கு ஒரே மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்குக் காரணம் பால் ஸ்வீட் மட்டுமல்ல, அந்த ஸ்வீட் டப்பாவின் மேல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் வெகு அழகாக எழுதப்பட்டிருந்த “நந்தினி” என்ற தன் ஆருயிர்த் தோழியின் பெயர். அதைத்தன் கணவனிடம் சுட்டிக்காட்டி மகிழ்ந்தாள். 


அப்போது தான் அதை கவனித்த சிவராமனும், ”உன் தோழி ’நந்தினி’ பெயர் போட்டிருந்ததால் தான் நானும் இதை வாங்கி வந்தேன்; நமக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்குமானால் “நந்தினி”  என்று தான் நாம் பெயர் வைக்க வேண்டும்” என்று சொல்லி சமாளித்தான்.


தன் கணவனிடம் புதிதாக, இதுவரை இல்லாத ஏதோவொரு கலகலப்பும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடுவதை கல்பனா கவனிக்கத் தவறவில்லை.


முதல் வேலையாக கூண்டில் அடைபட்டிருந்த கிளிகள் இரண்டையும், கல்பனா கையால் சுதந்திரமாக பறக்க விடச்சொன்னான், சிறையில் இருப்பது எவ்வளவு கொடுமை என்பதைத் தன் சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டு வந்துள்ள சிவராமன். 


அந்தக்கிளிகள் இரண்டும் மிகவும் மகிழ்ச்சியுடன் கல்பனாவின் தோளில் உரசியவாறே கத்திக்கொண்டே பறந்து சென்றன. அவைகள் இரண்டும் மிகவும் நன்றியுடனும், பிரியா விடையுடனும் தனக்கு டாட்டா சொல்லிப்போவது போல இருந்தது கல்பனாவுக்கு. 








           

கிளிகளைச் சுதந்திரமாகப் பறக்க விட்ட கல்பனா மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவனை நோக்கினாள்.



”கல்பனா, உன்னைப்பற்றி நந்தினி மிகவும் உயர்வாகப் புகழ்ந்து பாராட்டிப் பேசினாள். கல்லூரி நாட்களில் பல்வேறு திறமைகள் படைத்தவளாமே நீ! அது பற்றியெல்லாம் நீயாகவும் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. நானாகவும் உன்னிடம் கேட்டுக்கொள்ளவும் இல்லை. இதுவரை உன் விருப்பு வெறுப்புக்களைத் தெரிந்து கொள்ள நான் தவறிவிட்டேன். உன் திறமைகளை நீ வெளிக்காட்ட நான் இதுவரை ஏதும் சந்தர்ப்பமே கொடுக்காமல் இருந்து விட்டேன். என் மீதும் தப்பு தான். அதற்காக நான் இப்போது மிகவும் வருந்துகிறேன், கல்பனா” என்று தன் மனம் திறந்து தொடர்ந்து பேசலானான் சிவராமன்.


”இவ்வளவு நல்ல குணங்களையும், திறமைகளையும் உன்னிடத்தே வைத்துக்கொண்டு, குடத்திலிட்ட விளக்காக இருந்துவிடுவது நல்லதல்ல, கல்பனா.  குன்றிலிட்ட விளக்காக நீ மாறி, சமுதாய நலனுக்கு நீ உன்னுடைய படிப்பையும் திறமைகளையும் பயன்படுத்தி புகழோடு நீ விளங்க வேண்டும். அதைக் கண்குளிர நானும் கண்டு பெருமையடைய வேண்டும்; 


நீ ஏற்கனவே பார்த்து வந்த பேங்க் வேலையில் மறுபடியும் நாளை முதல் சேர்ந்து பணியாற்று. பேங்க்குக்கு வரும் பொது மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உன்னால் முடிந்த சிறந்த சேவையை, உன் தனித்திறமையுடன் சிறப்பாக செய்து கொண்டு இரு” என்றான் சிவராமன்.


சிவராமனைப் புது மனிதனாகக் கண்ட கல்பனாவுக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது. நாலு நாள் சிறைவாசமும், நந்தினியிடம் பழகியதும் தான் ஆளை அடியோடு மாற்றியிருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.


”என்ன கல்பனா யோசனை? நான் சொல்வதற்கெல்லாம் எதுவும் பதில் சொல்லாமல் ஏதோ யோசனையில் இருக்கிறாயே?” என்றான் சிவராமன். 


கல்பனா தன் மெல்லிய மென்மையான விரல்களால், சிவராமன் கன்னத்தில் இருந்த, அதிர்ஷ்டம் வாய்ந்த அந்த மச்சத்தை, அன்புடன் வருடிக்கொடுத்தாள். 


தான் நேரில் பார்க்க விரும்பிய குறிஞ்சிமலரே தன் அருகில் வந்து தன்னைத் தழுவிய உணர்வு ஏற்பட்டது சிவராமனுக்கு.     











-o-o-o-o-o-o-o-

முற்றும்

-o-o-o-o-o-o-o-

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

மலரே.............குறிஞ்சி மலரே ! [ பகுதி 2 of 3 ]







மலரே........குறிஞ்சி மலரே ! 

[சிறுகதை - சிறு தொடர்கதை - பகுதி 2 of 3]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

முன்கதை முடிந்த இடம்:


தனக்கு என்று தனியாக செல்போன் எதுவும் கிடையாது என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் கல்பனா கூறும்போதே அவளுக்கு கண் கலங்கி தொண்டையை அடைத்தது. தன் கணவரின் செல் நம்பரை மட்டும் நந்தினியிடம் கொடுத்தாள்.    


“ஏய் .. நீ என்னடி சொல்றே? இந்த நவீன யுகத்தில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதிக்கீட்டு மஸோதா பாராளுமன்றத்தில் நிறைவேற இருக்கும் நேரத்தில், செல்போன் வைத்துக்கொள்ள உனக்கு அவசியம் இல்லையா?   கல்லூரி நாட்களில் புரட்சிகரமாக,பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக விளங்கி, எங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்த நீயா, இப்படிப் பட்டிக்காட்டுப்பாட்டி மாதிரி பேசுகிறாய்? என்னால் நம்பவே முடியவில்லை” என்றாள் நந்தினி.


கூண்டில் அடைக்கப்பட்டு வீட்டினுள் தொங்கிக்கொண்டிருந்த ஒரு ஜோடி பச்சைக்கிளிகள் கீ..கீ.. எனக்கத்தின. 

“ஒன் மினிட் நந்தினி” என்று கூறிவிட்டு, கிளிகளின் பசிக்கு பழங்கள், கொட்டைகள் என கூண்டினுள் போட்டுவிட்டு, குடிக்க நீரும் ஊற்றினாள், கல்பனா.









“கிளிகள் வளர்க்கிறோம் நந்தினி; இரண்டு பச்சைக்கிளிகள். கோவைப்பழச் சிவப்புடன் வளைந்த மூக்குடன், பார்க்க வெகு அழகாக உள்ளன. அவைகள் தான் இப்போது கத்தின. ஸாரிடீ...அவைகளுக்கு ஆகாரம் கொடுத்து விட்டு வந்தேன்” என்றாள் கல்பனா.

“பெண்கள் சுதந்திரத்தைப்பற்றி அனல் பறக்கும் விதமாக கல்லூரி விழாவில் அருமையான சொற்பொழிவு ஆற்றி, பலரின் கைத்தட்டல்களைப் பெற்று, எங்கள் அனைவருக்குமே ஒருவித விழிப்புணர்வு ஏற்படுத்திய நீ போய், சுதந்திரமாகப் பறக்க வேண்டிய கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்கிறாயா? என்னால் நம்பவே முடியவில்லையேடி, கல்பனா” என்றாள் நந்தினி.

“நான் என்ன செய்வது நந்தினி? நானும் முன்புபோல் சுதந்திரப்பறவை இல்லையே இன்றைக்கு; திருமணத்திற்குப்பிறகு நானும் இந்தக்கிளிகள் போல ஒரு கூண்டுக்கிளியாகவே தானே இருந்து வருகிறேன். தயவுசெய்து புரிந்து கொள்ளுடி” என்றாள் கல்பனா.

“ஏன் நீ இப்போது அந்த பேங்க் வேலையைத் தொடரவில்லையா? ராஜிநாமா செய்து விட்டாயா? உன் கணவர் உன்னுடன் அன்புடன் தானே இருக்கிறார்? என்று வினவினாள் நந்தினி.

”ரொம்ப ரொம்ப அன்புடன் இருக்கிறார். அது தான் பிரச்சனையே. ஒருவித வித்யாசமான பொஸஸிவ்நெஸ். வீட்டைவிட்டு எங்குமே நான் தனியாகப் போகக்கூடாது. வேலைக்கும் போகக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது. ஜன்னலிலோ, பால்கனியிலோ நின்று வெளியில் வேடிக்கைகூட பார்க்கக்கூடாது. 

வீட்டு வேலைகள் செய்ய, சமையல் செய்ய, துணிதுவைக்க, இஸ்திரி போட்டுவர, கடைக்குப்போய் காய்கறி மளிகை சாமான்கள் வாங்கிவர என அனைத்து வேலைகளையும் கவனிக்க தனியாக இரண்டு வேலைக்காரப் பெண்களை வேறு நியமித்துள்ளார். 

மகாராணி போல் ஓய்வெடுப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், டீ.வி. பார்ப்பதும், செய்தித்தாள்கள் வார மாத இதழ்கள் படிப்பதும் மட்டுமே எனக்கு வேலை. என் பொழுதுபோக்கிற்கு என்னைப்போலவே வீட்டினுள் சிறைப்பறவைகளாக இருக்கும் இந்த இரண்டு கிளிகள் மட்டுமே.

எப்போதாவது வாரம் ஒருநாள் வெள்ளிக்கிழமை மட்டும் அருகில் உள்ள ஒரு கோயிலுக்குப் போய்வருவேன். இன்று கூட வெள்ளிக்கிழமையானதால் போய் வந்தேன், அதுவும் பாதுகாவலர் போல கூடவரும் என் மாமியாருடன்.

என் பேங்க் வேலையை இன்னும் நான் ராஜிநாமா செய்யவில்லையே தவிர, ராஜிநாமா செய்துவிட்டது போலத்தான். கல்யாணம் ஆனதிலிருந்து லாங்க் லீவில் இருக்கிறேன்” என்றாள் கல்பனா.       



"ஓ.கே. கல்பனா, நேரம் ஆகிறது. உன் வீட்டுக்காரர் பெயரும், அவர் வேலை பார்க்கும் அலுவலகப்பெயரும், அவர் டூட்டி விஷயமாக ஹரித்வார் செல்லும் இடத்தின் விலாசமும் சொல்லு, குறித்துக்கொள்கிறேன்.  மற்ற விஷயங்கள் நாளைக்கு பகலில் பேசிக்கொள்ளலாம்” என்றாள் நந்தினி.


அவள் கேட்ட தகவல்களையெல்லாம் கொடுத்துவிட்டு “நீ அவரை உன் வீட்டுக்கு வரச்சொல்லி இப்போது கூப்பிட வேண்டாம். அவர் மிகவும் சங்கோஜப்பேர்வழி. நீ கூப்பிட்டால் உடனே புறப்பட்டு வந்து விடவும் மாட்டார். பிறகு உன் கல்யாணத்திற்கு நானே அவரை வற்புருத்தி கட்டாயம் அழைத்து வருகிறேன்” என்றாள் கல்பனா.


“ஓ.கே. ..... பை ..... குட் நைட்” தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டனர்.




தான் போலீஸ் ஜீப்பில் கண்ட காட்சியை கல்பனாவிடம் சொல்லாமல் இருந்து விட்ட நந்தினிக்கும் தூக்கமில்லை.  கணவனைடமிருந்து எந்தத்தகவலும் வராத கவலையில் கல்பனாவுக்கும் தூக்கம் வரவில்லை.


இனிமையான கல்லூரி நாட்களையும், தன்னை மறக்காமல் இன்று தன்னுடன் போன் செய்து பேசிய நந்தினியையும் நினைத்து மகிழ்ந்து கொண்டாள் கல்பனா.


முதன் முதலாக, நாட்டின் தலைநகரில், ஏதோவொரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட சிவராமனுக்கும் தூக்கம் வராமல், துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டது. 


தன்னுடைய உடமைகளான சூட்கேஸ், மணிபர்ஸ், ஏ.டி.எம். கார்டு, செல்போன், ஐடெண்டிஃபிகேஷன் கார்டு, டிரெயின் டிக்கெட் என எல்லாமே கொள்ளையடிக்கப்பட்டு, தானும் ஏமாற்றப்பட்டு, நிர்கதியாக நின்ற தன்னை, தீவிரவாதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து உள்ளே தள்ளியுள்ள போலீஸ்காரர்களின் கெடுபிடிகளும், மனிதாபிமானமற்ற முறையில் தான் நடத்தப்படுவதையும் நினைத்து, வருந்த மட்டுமே முடிந்ததே தவிர வேறு எதுவுமே செய்ய இயலவில்லை.




டெல்லியில், தனக்கு உதவிட யாருமே இல்லையே; மேற்கொண்டு என்ன நடக்குமோ; கல்பனாவுடன் கூட தன் நிலைமையைச்சொல்லி பேச முடியவில்லையே என வருந்திக்கொண்டிருந்தான்.




இந்த அஃபிஷியல் ட்யூர் முடிந்ததும், அடுத்தவாரம் ஜாலியாக கல்பனாவுடன் ஊட்டி மலர் கண்காட்சிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். சிறுவயது முதலே அபூர்வமாகப்பூக்கும் குறிஞ்சி மலரைக்காண வேண்டும் என்ற ஒரு ஆவல், சிவராமனுக்கு. இன்றுவரை அது நிறைவேறாத ஒரு ஆசையாகவே உள்ளது. இந்த ஆண்டும் தனது நெடுநாளைய ஆசை நிறைவேறாதபடி இந்த மன உளைச்சலுடன் கூடிய எதிர்பாராத சிறைவாசம்.


சிவராமனைப் பொருத்தவரை இந்தச் சிறைவாசமும், குறிஞ்சி மலரைப்போலவே இதுவரைப் பார்த்தறியாத ஒரு புது அனுபவம் தான்.    
   




தொடரும்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

வ ர ம்





வரம்

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-ooOoo-


அவர்கள் இருவரும் அறுபது வயதைத் தாண்டிய, ஆனால் ஆரோக்கியமான தம்பதி. அந்த ஜோடி தங்களது நாற்பதாவது திருமண நாளை, ஒரு சிறிய தேனீர் விடுதியில், மிகுந்த அன்புடனும், எளிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடியது.

அவர்களின் பாசத்தையும், நேசத்தையும், பிரியத்தையும், காதலையும் உணர்ந்த தேவதை ஒன்று, அவர்கள் முன்பு தோன்றி, திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி, ஆளுக்கு ஒரு வரம் வீதம் கேட்டால் அளிப்பதாகச் சொன்னது.

இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த மனைவி, “ஆஹா, நான் என் பிரியமுள்ள கணவருடன் இந்த உலகைச் சுற்றி வர விரும்புகிறேன்” என்றாள்.

உடனே அதற்கான பெரிய பயணத்திட்டம், விமானப் பயண முன் பதிவுக்கான சீட்டுகள், மற்றும் ஆங்காங்கே தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவுகள், உணவு வசதிகள், வெவ்வேறு நாட்டு பணக்கட்டுகள், ஒவ்வொரு இடத்திலும் உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாடகைக்காருக்கான முன் பதிவுகள், தொலைபேசி எண்கள், புத்தாடைகள் மற்றும் பயணத்திற்கான அனைத்துப் பொருட்களும் அவள் முன், தேவதையால் அளிக்கப் பட்டன. இதைப் பார்த்து வியந்து போனார்கள், அவர்கள் இருவரும். 


இதைக் கண்ட கணவர் ஒரு நொடி சிந்தித்தார் . நல்லதொரு அரிய வாய்ப்பு இது. இதைத் தவற விட்டால் மீண்டும் கிடைக்கக் கூடியது அல்ல, என்று எண்ணினார்.

மனைவியைப் பார்த்து, “நான் கேட்கப் போகும் இந்த வரத்திற்காக என்னை நீ மன்னிக்க வேண்டும்” என்று கூறி விட்டு, தேவதையிடம் ஒரு விசித்திரமான வரம் கேட்கலானார்.

”என் மனைவி, என்னை விட 30 வயது சிறியவளாக இருக்க விரும்புகிறேன். இது தான் எனக்குத் தேவையான வரம்” என்றார்.

இதைக்கேட்டதும், அவர் மனைவி மட்டுமல்லாமல், அந்த தேவதையும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.

ஓரளவு வயதாகியும், ஆண்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இது போன்ற சபல புத்தியை எண்ணி வியந்தனர், அவர் மனைவியும் அந்த தேவதையும்.

இருப்பினும், தேவதை தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி, உடனே அவரின் வரத்தையும் நிறைவேற்றிக் கொடுத்து விட்டு, மறைந்து விட்டது.
.....
...........
..................
.........................
................................
.......................................


நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.
...

......

.........
....................

பாவம் ...... அவர், இப்போது 94 வயதுக் குடுகுடுக் கிழவராக தேவதையால் மாற்றப்பட்டிருந்தார். 








வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மலரே.............குறிஞ்சி மலரே ! [ பகுதி 1 of 3 ]






மலரே . . . . . குறிஞ்சி மலரே!


[ சிறுகதைத்தொடர் ]


By வை. கோபாலகிருஷ்ணன்


-oOo-

டெல்லியின் அந்தப்பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்தப் பகுதியில், சிக்னல் சிவப்பு விளக்காக மாறியதால் நந்தினியின் கார் நிறுத்தப்பட்டது. அவளின் காரை உரசுவது போல நெருக்கமாக அந்த போலீஸ் ஜீப்பும் சடர்ன் ப்ரேக்கிடப்பட்டு டயர்கள் தேயும்படி ஒரு சப்தம் எழுப்பியபடி நின்றது.

அதனுள் கைகளில் விலங்கிடப்பட்டபடி ஒரு இளைஞன். நந்தினிக்கு அவனை எங்கேயோ எப்போதோ பார்த்துப் பரிச்சியப்பட்ட ஒரு முகமாகத் தோன்றியும் சரிவர ஞாபகம் வரவில்லை. சிவந்த நிறம். வயது 25க்கு மேல் 30க்குள் இருக்கும். கர்லிங் சுருள் முடி நெற்றியில் விழுந்தபடி.

வேறு ஏதோ ஒருபுறம் திரும்பியபடி இருந்த அந்த வாலிபன், நந்தினியின் பக்கமாக தன் முகத்தைத் திருப்பியதும் வலது கன்னத்தின் மூக்கின் அருகில் இருந்த காய்ந்த திராட்சை போன்ற அந்த சிறிய மச்சம் நந்தியின் கண்ணில் பட்டதும், ஒரு சிறு பொறி தட்டியது அவள் நினைவுக்கு.

அதற்குள் சிக்னல் மாறி அந்த ஜீப் சீறிப்பாய்ந்து வலது புறமாகத் திரும்ப, இவள் வண்டி நேராக சென்று கொண்டிருந்தது. சுமார் ஆறு மாதங்கள் முன்பு அவளின் கல்லூரித்தோழி கல்பனாவின் கல்யாணத்திற்கு சேலம் சென்று வந்தது, மனதில் ஓடத்துவங்கியது.

”திருஷ்டிப்பொட்டுபோல, உன் வீட்டுக்காரரின் கன்னத்தில் என்னடி காயம்?”  என்று தான் கல்பனாவிடம் கிசுகிசுக்க, தன் அருகில் இருந்த மைதிலி, “இந்த வண்ணக்கிளி செய்த மாயம்!” என்று கல்பனாவைச் சுட்டிக்காட்டியபடி சொல்ல, தாங்கள் மூன்று பேருமே கொல்லென்று சிரித்தது பசுமையாக நினைவில் வந்தது.


அப்படியென்றால் இந்த விலங்கிடப்பட்ட இளைஞன் ஒருவேளை நம் கல்பனாவின் கணவராக இருக்குமோ! மனதில் ஒரு சிறு சந்தேகம் எழுந்தது. கல்பனாவின் செல் நம்பர் கைவசம் உள்ள போனின் பதிவு செய்யப்படவில்லை. சேலத்தில் தன்னுடன் படித்த ஒரு சில தோழிகளை விசாரித்து கல்பனாவின் லேண்ட்லைன் போன் நம்பர் மட்டுமே கிடைப்பதற்குள், ஒரு வழியாக நந்தினியின் கார் அவளின் வீட்டு போர்ட்டிகோவுக்குள் நுழைந்து நின்றதும், இறங்கி வீட்டினுள் சென்றாள்.


கல்பனாவைத் தொடர்ந்து தொடர்பு கொண்டும், ரிங் போய்க்கொண்டே இருந்தும், யாரும் போனை எடுப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை விஷயம் கேள்விப்பட்டு டெல்லிக்கே புறப்பட்டு வந்து கொண்டிருப்பாளோ? பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியவாறு உணவருந்த உட்கார்ந்தும் சாப்பிட முடியாமல் ஒருவித சங்கடமாக உணர்ந்தாள்.


வெள்ளிக்கிழமை கோயிலுக்குப்போய்விட்டு, வீட்டுக்கு வந்த கல்பனா டெலிபோன் அருகிலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தும் தன் கணவரிடமிருந்து அழைப்பு வராததில் மிகவும் கவலை கொண்டாள்.


இவள் அவரின் செல் போனுக்கு முயற்சித்தும், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தகவல் வந்த வண்ணமே இருந்தது. கல்பனா சாப்பிட்டு இரவு படுக்கப்போகும் முன், டெலிபோன் மணி ஒலித்தது. கல்பனா பாய்ந்து வந்து போன் ரிஸீவரை கையில் எடுத்து “ஹலோ கல்பனா ஹியர்” என்றாள்.


”ஹலோ, கல்பனா, நான் நந்தினி பேசறேன். நீ எப்படி இருக்கே! உன் கணவர் எப்படி இருக்கிறார்!  ஏதும் விசேஷம் க்ளாட் நியூஸ் உண்டா?” என்றாள்.


“ஹலோ, நந்தினி; நான் நல்லா இருக்கேன். இந்த மாதம் தான் எனக்கு பீரியட்ஸ் தள்ளிப்போய், கன்பாஃர்ம் செய்திருக்கிறார்கள்”.


“கன்க்ராஜுலேஷன்ஸ் கல்பனா; உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோ..!


“தாங்க் யூ டீ; நீ எப்படி இருக்க! என்ன ராத்திரி திடீர்ன்னு அண்டைம்ல இப்படி கூப்பிட்டு அசத்துகிறாய்! உன்னிடமிருந்து போன் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடீ. டெல்லியிலிருந்தா பேசுகிறாய்? என் வீட்டுக்காரர் கூட ஏதோ டூட்டி விஷயமா டெல்லியில் இறங்கி இப்போது ஹரித்வார் போய்க்கொண்டு இருப்பார்ன்னு நினைக்கிறேன். H.நிஜாமுதீன் ஸ்டேஷன் நெருங்குவதாக ஐந்து மணி சுமாருக்கு போன் செய்து சொன்னார். அவர் டெல்லிப்பக்கம் போவது இது தான் முதல் தடவை. அவரிடமிருந்து தான் போன் வருகிறது என்று நினைத்து போனை எடுத்தேன். ஆனால் உன்னுடைய போன்; வாட் ய வெரி சர்ப்ரைஸ் டு மீ” என்றாள் கல்பனா.


நந்தினிக்கு எப்படி மேற்கொண்டு இவளிடம் அந்த விஷயத்தைப்பற்றிச் சொல்வது என்று மிகவும் சங்கடமாக இருந்தது. சொல்லவும் விரும்பவில்லை. தனக்கே சந்தேகமாக உள்ள ஒரு விஷயம். இவளிடம் சொல்லி இவளையும் நிம்மதியாகத் தூங்க விடாமல் செய்வதில் விருப்பமில்லை.


“சும்மாதாண்டி போன் செய்தேன். எனக்கும் கல்யாணம் நிச்சயமாக உள்ளது. டெல்லி மாப்பிள்ளை தான்” என்றாள்.


“அப்படியா! ஆல் தெ பெஸ்ட். ரொம்ப ரொம்ப சந்தோஷம்டீ. உன் வுட் பீ என்ன பண்ணுகிறார்? எப்போ கல்யாணம்? எங்கே கல்யாணம்?” வியப்புடன் வினவினாள் கல்பனா.


“அவரும் என்னைப்போலவே இங்கு வக்கீலாகவே பிராக்டீஸ் செய்து வருகிறார்.  டெல்லியில் தான் கல்யாணம். இன்னும் கல்யாண தேதி முடிவாகவில்லை. பிறகு சொல்கிறேன். நீயும் உன் கணவரும் கட்டாயம் என் கல்யாணத்திற்கு டெல்லி வரணும். உன் வீட்டுக்காரர் செல்போன் நம்பரும், உன் செல்போன் நம்பரும், எனக்குக்கொடு. அவர் வந்துள்ள இந்த டிரிப்பிலேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டுப்போகட்டும். நானும் அவருடன் பேசுகிறேன். நீயும் அவரிடம் சொல்லு” என்றாள் நந்தினி.


தனக்கு என்று தனியாக செல்போன் எதுவும் கிடையாது என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் கல்பனா கூறும்போதே அவளுக்கு கண் கலங்கி தொண்டையை அடைத்தது. தன் கணவரின் செல் நம்பரை மட்டும் நந்தினியிடம் கொடுத்தாள்.    


தொடரும் 

   

தங்கமே தங்கம் !




தங்கமே தங்கம் !

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்



தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில்,  ரோட்டு ஓரமாக செருப்புத் தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம்.  ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப் பணம் சேர்ந்து விட்டால் போதும்.  யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து  எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டான்.

தங்கம் விலை நாளுக்குநாள் ஏறி வருவதோடு மட்டுமின்றி, இவன் தொழிலுக்குப் போட்டியாக ரோட்டின் எதிர்புறம் ஒரு கிழவர் தொழில் தொடங்கியதிலிருந்து அவனின் அன்றாட வருமானமும் குறைய ஆரம்பித்தது.

கிழவருக்கு அன்று பெய்த மழையிலும், குளிரிலும், கபம் கட்டி, இருமல் ஜாஸ்தியாகி, கடுமையான ஜுரமும் கண்டது.  இறந்து போன தன் தந்தை போலத் தோன்றும் கிழவர் மேல் இரக்கம் கொண்டு, அவரை அரசாங்க ஆஸ்பத்தரிக்கு அழைத்துப்போய், மருந்து வாங்கிக்கொடுத்து, அவரது குடிசையில் கொண்டு போய் விட்டான், சங்கலியாண்டி.  

நன்றி கூறிய கிழவரும்,  “தம்பி உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா” என்று கேட்டார்.

”என் மனைவியாக வரப் போகிறவளுக்குப் போட ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு புதுச் சேலையும் வாங்க பணம் சேர வேண்டும்.  அதற்காகத் தான் காத்திருக்கிறேன்” என்றான்.

”உனக்கு அந்தக் கவலையே வேண்டாம், நான் தருகிறேன்” என்றார் கிழவர்.

அதே சமயம், சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலை பார்க்கும் கிழவரின் மகள் தன் குடிசைவீட்டுக்குத் திரும்பினாள்.  அவள் சங்கிலியாண்டியை நோக்க, சங்கிலியாண்டியும் அவளை நோக்கினான்.  கண்கள் கலந்தன.  இருவரும் தங்கள் வயதுக்கேற்ற காந்த சக்தியை உணர்ந்தனர்.

இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்த அந்தக் கிழவர், இருவரையும் கை கோர்த்து விட்டு வாழ்த்தினார். 

“அரைப் பவுன் தங்கம் சேர்க்க அல்லல் படுகிறாயே; இந்த என் மகள் பெயரும் “தங்கம்” தான்.  ஐம்பது  கிலோ தங்கம்.  சுத்தத்தங்கம்” என்றார் கிழவர்.

இதைக்கேட்ட தங்கமும், சங்கிலியாண்டியும் சேர்ந்து வெட்கத்துடன் சிரித்தனர்.  தங்கம் போல ஜொலித்தனர். 

அதே நேரம் ” ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் .... எனக்கே எனக்காக ” என்ற சினிமாப் படப்பாடல் எங்கோ பக்கத்துக் குடிசையின் டி..வி. யில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.





-o-o-o-o-o-o-o-o-o-