About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, August 2, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ நெடுங்கதை ]



அன்புடையீர்,

வணக்கம்.

இந்த நெடுங்கதை 8 சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. 

அந்தக் காலக்கட்டத்தில் நான் வலைப்பூவுக்கு மிகவும் புதியவனாக இருந்ததால் என்னைப் பின்தொடர்பவர்கள் சுமார் 10 பேர்கள் மட்டுமே இருந்தனர். அதனால் இந்தக் கதை பெரும்பாலான வாசகர்களைச் சென்றடையாமல் போனது. 

தற்போது என்னை பின் தொடர்பவர்கள் 100 க்கும் மேற்பட்டு இருப்பதாலும், அவர்களில் பலரும் இந்தக்கதையை ஆர்வத்துடன் வாசிக்க விரும்புவார்கள் என்ற நம்பிக்கையிலும், இந்த நெடுங்கதையை ஒரே பகுதியாக இன்று மீண்டும் வெளியிட்டுள்ளேன். 

தங்களின் கருத்துக்களை அன்புடனும், ஆவலுடனும் எதிர்பார்க்கிறேன்.

என்றும் தங்கள் அன்புள்ள,
வை. கோபாலகிருஷ்ணன்

=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=o=    


உடம்பெல்லாம் உப்புச்சீடை

நெடுங்கதை





[1]
மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது. 


தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.


“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.


பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். 


எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும். 


வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம். 


குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி. 


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.
கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். 

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.


தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.


புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள். 


“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.
“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும். 

[2]
”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.

வண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.

ஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது, என்றும் சொல்லிக் கொண்டார்.

வெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.

“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.

ஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.

ரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.

அவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம் ” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.

“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.

“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே படாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.

மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.

வண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.

"சாப்பாடு மூட்டையைப் பிரிச்சுடலாமா?" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.

“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.

ஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.

இதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளம்பி விட்டது, அவரின் பேச்சு.

பட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா?


[4]
”யோவ் .. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள் தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்ய காசிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச் சாப்பிடக் கூடாது.

நிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதிக்காதீங்க; ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில், முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப் படறோம்.

வேறு எங்காவது ஒத்தை சீட்டு இருந்தா, நீர், டீ.டீ.ஆர். இடம் சொல்லி மாத்திண்டு போய்ட்டாக் கூட உமக்குப் புண்ணியமாப் போகும்” என்று பட்டாஸ் கட்டைப் பற்ற வைத்தது போல வெடிக்க ஆரம்பித்தார், பட்டாபி.

இதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.

வெகு நேரம் ஆகியும், அந்த ஆசாமியைக் காணாததால், சற்று நிம்மதி அடைந்திருந்தனர், பட்டாபியின் குடும்பத்தினர்.

“ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில், அந்த மனுஷன் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ?” பங்கஜம் தன் கணவனிடம் சிரித்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள்.

“அப்படியெல்லாம் இருக்காது; அவனைப் பார்த்தால், நீ சொல்வது போல ஓடும் ரயிலிலிருந்து குதித்து உயிரை விடும் அளவுக்கு மானஸ்தனாகத் தெரியவில்லை. பரதேசிப்பயல் ... இங்கு எங்காவது தான் கழிவறைக்குப் போய் இருப்பான். வந்துடுவான்” என்றார் பட்டாபி.

“இப்போது சாப்பாட்டு மூட்டையைப் அவிழ்த்தால், உடனே அவன் வந்து, அது என்ன? இது என்ன? என்று கேட்டுக் கேட்டே கழுத்தை அறுத்து நம்மைச் சாப்பிட விடாமல் சங்கடப் படுத்தி விடுவான். என்ன பண்ணித் தொலைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைந்தானோ? நாம் பண்ணின பாபம் நம்மைக் காசி வரை துரத்தி வருகிறது” பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.

சற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல், நிற்க ஆயத்தமாகி, இஞ்ஜின் பெருமூச்சு வாங்குவது போல சத்தம் கேட்டது.

அந்த ஆசாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தார். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்துக்கொண்டு, ”தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா” என்பது போல, இவர்களை ஒரு பார்வை பார்த்தார். அவர்கள் அவரைக் கொஞ்சமும் கவனிக்காதது போலவும், வேறு எங்கோ பார்ப்பது போலவும், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பாசாங்கு செய்தனர்.

ஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு, “தம்பீ .... நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா?” என்றார். கணவனும் மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க, “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டாம், நீங்களே சாப்பிடுங்க” எனப் பட்டென்றுச் சொல்லி விட்டான், ரவி.

நான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்தார். பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.

பிறகு அவர் அந்தப் பொடியன் ரவியைப் பார்த்து, “ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக ரயில் பயணத்தை அனுபவியுங்கள். நீ எனக்கான லோயர் பெர்த்தில் படுத்துக்கோ; நான் உனக்கான அப்பர் பெர்த்தில் போய் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன்னுடைய எல்லா சாமான்களுடனும், குடிபெயர்ந்து மேலே ஏறி விட்டார் அந்த ஆசாமி.

கீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.

இதுதான் நல்ல சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து, இரவு சாப்பாட்டை திருப்தியுடன் முடித்துக் கொண்டது, பட்டாபி கோஷ்டி.

“நாளைய ஒரு நாள் முழுவதும், நாம் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காமல், மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்” என்று இவர்களுக்குள் நினைத்துக் கொண்டனர்.

[5]

அதன்படியே மறுநாள் ‘பல்ஹர்ஷா’ வில் காலை டிபனும்; ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ’இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, கடலை உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.

அந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும், மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு, காலாற நடந்து, கதவு வரை சென்று, எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறைக் காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார்.

நாக்பூரில் மட்டும், அப்பர் பெர்த்தில் அமர்ந்தபடியே அவர், மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல, கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.

நிறைய பச்சை வாழைப்பழங்கள் போட்டுத் தொங்க விடப்பட்டிருந்த அவரின் ’கேரி பேக்’ ஒன்று இப்போது, மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக் கொண்டு பரிதாபமாக காட்சியளித்தது.

அவர் இரண்டொரு முறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி கவனித்திருந்தார்.
மொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.

இரவு மணி 10.45 க்கு, ‘கட்னி’ என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். அந்த ஆசாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.

பட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தை [இப்போது போல செல்போன் பிரபலமாகாத காலம் அது] சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். பட்டாபி கோஷ்டி விடியற்காலம் 4.50 க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும்.
குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.

மறு நாள் அதிகாலை, அலாரம் அடித்ததும் அலறி எழுந்த பட்டாபி, அதை மேலும் தொடர்ந்து அடிக்க விடாமல், அதன் தலையில் ஒரு குட்டு குட்டி, அதை ஊமையாக்கினார்.

லைட்டைப் போட்டால் ஒருவேளை அந்த ஆசாமியும் தூக்கம் கலைந்து எழுந்து விடக்கூடும் என்ற பயத்திலும், காலை வேளையில் அதன் முகத்தில் மீண்டும் முழிக்க விருப்பமின்றியும், மங்கலான நைட் லாம்ப் வெளிச்சத்திலேயே, தன்னுடைய ஒவ்வொரு சாமான்களையும் விமலா+  பங்கஜம் உதவியுடன், ரயில் பெட்டியிலிருந்து இறங்க வேண்டிய கதவுப் பகுதி அருகில், அவர்கள் தாமதமின்றி உடனே இறங்குவதற்கு வசதியாக வைத்துக் கொண்டார். விமலாவை விட்டு ஒருமுறை சாமான்களை எண்ணச் சொல்லி பன்னிரண்டு உருப்படிகள் என்பதை உறுதி செய்து கொண்டார், பட்டாபி.

குழந்தைகள் ரவியையும், கமலாவையும் மெதுவாக எழுப்பி, அவர்கள் முகத்தை வாஷ் பேசினில் அலம்பித் துடைக்கவும், வண்டி அலஹாபாத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.

மூட்டை முடிச்சுக்களுடன் கீழே இறங்கிய அவர்களை டாக்ஸி வாலாக்களும், போர்ட்டர்களும் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி முதலியவற்றைக் குழைத்த ஒரு புது மொழியில் சங்கரமடம் செல்ல பேரம் பேசி முடித்து, ஒருவழியாக டாக்ஸியில் ஏறி அமர்ந்தது அந்தக் குடும்பம்.

[6]
சற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.

சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது
அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்” 


VARANASI  ஸ்நான கட்டம் - காசி கங்கைக்கரை


கங்கா யமுனா சரஸ்வதி நதிகள் கலக்கும் 
 திரிவேணி சங்கமம் அருகே - அலஹாபாத்


g


G H A Y A
கயா ஸ்ரார்த்தம் செய்து காசியாத்திரை முடிக்குமிடம்



ஸ்ரீ காசி விஸ்வநாதர். ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ விசாலாக்ஷி 


ஸ்ரீ காசி விஸ்வநாதர் - சிவலிங்கம்


காசி மாநகரைக்காக்கும் 
காவல் தெய்வம் காலபைரவர்.
கையில் ரக்ஷையாகக் கட்டும் காசிக்கயிறுகள் 
மந்திரம் சொல்லி கொடுக்கப்படும் கோயில்.



புனித கங்கா ஜலம் உள்ள 
கங்கைச்சொம்பு


[காசி கங்கைக்கரையின் பல்வேறு ஸ்நான கட்டங்கள்]


என்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.  

அவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும் ,பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.

சென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.

அதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.

கொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.

பெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.

இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ? பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.

எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.

எப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.
“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.



[7]

தன் நித்யப்படி பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சங்கரமடத்து சாஸ்திரிகளிடம் விவரம் சொல்ல பட்டாபியும், பங்கஜமும் நெருங்கவும், மடத்து வாசலில் யாரோ ஆட்டோவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

சங்கர மடத்து வாசலில் புல்வெளிகளில் படுத்திருந்த பசுமாடுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரவி & கமலா வின், கவனம் தங்கள் அருகில், படபடவென்ற சப்தத்துடன் வந்து நின்ற ஆட்டோ பக்கம் திரும்பியது.
“கோன் ஐஸ் வாங்கித் தந்த, ‘உடம்பெல்லாம் உப்புச் சீடை’ த் தாத்தா இங்கேயும் வந்துட்டார்டீ” எனக் கத்திக்கொண்டே, ரவியும் கமலாவும், சங்கர மடத்தின் உள்பக்கம் இருந்த விமலாவிடம் சொல்ல வேகமாக ஓடி வந்தனர்.
“வாங்கோ, வாங்கோ, வரணும்! தங்கள் வரவு நல்வரவு ஆகணும்., உட்காருங்கோ! என நாற்காலியைப் போட்டு, மின் விசிறியைத் தட்டி விட்டு, தன் மேல் அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு, மிகவும் பெளவ்யமாக, வந்தவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.
வந்தவர் வேறு யாருமில்லை. இவர்களுடன் கூடவே ரயிலில் வந்த பயணி (பிராணி) தான். அவர் கையில் அஸ்திக்கலசம் வைத்துக் கட்டப்பட்ட இவர்களின் அட்டைப்பெட்டி பார்ஸல், இருந்தது. 

இதைப் பார்த்த பட்டாபிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இருக்காதா பின்னே! அவருடைய தந்தையின் உயிர் அல்லவா அடங்கி ஒடுங்கி அதனுள் சாம்பலாக உள்ளது! 


அந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது, பட்டாபிக்கு.
 

“இந்த அட்டைப்பெட்டியை மறந்து போய் ரயிலிலேயே வைச்சுட்டு, நீங்கள் எல்லோரும் அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கிட்டேள் போலிருக்கு. நான் என் பாத ரக்ஷைகளை (செருப்புகளை) எடுக்கக் குனிந்த போது தான் இது என் கண்ணில் பட்டது.

உங்களுடையாகத் தான் இருக்கும்; இங்கு எங்காவது தான் தங்கியிருப்பேள்னு யூகித்துக் கொண்டு வந்தேன்.

நான் வாராணசி வரை போக வேண்டியவன். ரயில் கிளம்பாததால், இந்த அட்டைப் பெட்டியை உத்தேசித்து, நானும் அலஹாபாத்திலேயே இறங்கி விட்டேன்.

நல்லவேளையாக உங்களையும் மறுபடியும் பார்த்து விட்டேன். இந்தாங்கோ ஜாக்கிரதை” என்று சொல்லி பட்டாபியிடம் நீட்டினார். 


கைகள் நடுங்க நன்றியுடன் வாங்கிக்கொண்டார் பட்டாபி. 


அட்டைப் பெட்டியில் உள்ள பொருள் அஸ்திக்கலசம் என்பதை சங்கர மடத்து சாஸ்திரிகள் மூலம் கேள்விப்பட்ட அந்தப் பெரியவர், அதைத் தான் தூக்கி வந்ததால் ஏற்பட்ட தீட்டுக்கழிய, சாஸ்திரப்படி ஸ்நானம் செய்ய மடத்தின் கொல்லைப்புறம் இருந்த கிணற்றடிக்கு விரைந்தார். 


அதற்குள், அந்தப் பெரியவரின் அருமை பெருமைகளை சங்கர மடத்து சாஸ்திரிகள், பட்டாபி தம்பதிக்கு விளக்க ஆரம்பித்தார். 


“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தான் குருநாதர்.

அவா விளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.

அவாளுக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி பக்கம், காவேரிக்கரை ஓரம் ஏதோ ஒரு கிராமம். ஏழு தலைமுறைகளா வேதம் படித்து வரும் குடும்பம். வேதத்தை ரக்ஷிக்கும் பரம்பரையில் வந்தவா !
சங்கர மடத்து ஆச்சார்யாள், ஜகத்குரு மஹாபெரியவா ஆக்ஞைப்படி, கடந்த பல வருஷங்களாக இந்தப் பக்கமே தங்கி விட்டார்கள். இந்த கங்கைக் கரைப் பக்கம், இவாளைத் தெரியாதவாளே கிடையாது. 

வேதம் படிச்சு முடிச்சவாளுக்கெல்லாம் “வித்வத் சதஸ்” ன்னு, ஒரு பெரிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பரீட்சை மாதிரி நடக்கும். அதில் இவா தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி உட்கார்ந்து, தப்பாச் சொல்றவாளை டக்குனு பிடிச்சுத் திருத்திக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு ரொம்ப பாண்டித்யம் உள்ளவா !

ஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டார்கள். லோகத்திலே உள்ள எல்லா ஜனங்களும் எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாய் இருக்கணும்னு எப்போதுமே பிரார்த்திப்பவர்கள். 


இந்த மஹான் உங்களுடன் ஒரே ரயிலில், ஒரே கம்பார்ட்மெண்டில், பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது நீங்கள் செய்த ஒரு பெரிய பாக்யம்தான்னு சொல்லணும்.

நீங்களோ அல்லது உங்களின் அப்பாவோ செய்த புண்ணியம் தான், நீங்கள் ரயிலில் தவற விட்ட உங்க அப்பாவின் அஸ்திக்கலசத்தை, இந்த வேதவித்தாகிய ஒரு பெரிய மஹான், தன் கைப்படவே தூக்கி வரும்படி நேர்ந்துள்ளது.

கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது, பாருங்கோ !

அந்த அட்டைப்பெட்டியில் உள்ளே உள்ளது என்ன ஏது என்றே தெரியாமல், பத்திரமாக உங்களிடம் சேர்த்திருக்கிறா பாருங்கோ! ; எல்லாம் பகவத் சங்கல்ப்பம்.

நீங்கள் மிகவும் ஸ்ரத்தையாக காசிக்கு வந்து கங்கையில் உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கணும்னு வந்த காரியம் வீண் போகவில்லை, பாருங்கோ !

நான் அவாள்ட்ட வேதம் படிக்கும் போது, மிகவும் தேஜஸுடன் அழகாக மினுமினுப்பாக இருந்தவர் தான் இந்த என் குருநாதராகிய மஹான்” எனச் சொல்லி, தான் அவரிடம் பாடசாலையில் படிக்கும்போது எடுக்கப் பட்ட (கருப்பு வெள்ளை) க்ரூப் போட்டோ ஒன்றைக் காட்டினார்.
“ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பாவம்; கடந்த ரெண்டு வருஷமாத்தான் இதுபோல அவருடைய வெளித் தோற்றத்தை இப்படி ஆக்கியுள்ளது” என மிகவும் வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.

சங்கர மடத்து சாஸ்திரிகள் வாயால், ரயிலில் தன்னுடன் கூடவே பயணித்தவரின் மஹிமைகள் பற்றிச் சொல்லுவதை உன்னிப்பாகக் கேட்டதும், 
யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.

[8]
சமையல் கட்டுக்குள் நுழைந்த சங்கர மடத்து சாஸ்திரிகள், தன் தர்ம பத்னியிடம் “என் குருஜி - பாடசாலை வாத்யார் - பெரியவர் வந்திருக்கார். ஸ்நானம் பண்ண கொல்லைப்பக்கம் கிணற்றடிக்குப் போயிருக்கார். இப்போ வந்துடுவார்.

அவர் வந்ததும் சாப்பிட சூடா கோக்ஷீரம் (பசும்பால்) பனங்கல்கண்டு போட்டு, வெள்ளி டவரா டம்ளரில் கொடுத்துடு.

பிறகு நம் ஆத்திலேயே சாப்பிடச்சொல்லி அவாளை நாம் வேண்டிக் கேட்டுக்கொள்வோம். பாயஸம் பச்சிடியோட சாப்பாடு தயார் செய்துடு. நுனி இலை நேத்திக்கு வாங்கி வந்ததே இருக்கும்னு நினைக்கிறேன்; முடிஞ்சாக் கொத்துமல்லித் தொகையல் கொஞ்சம் அரைச்சுடு. அதுனா அவா கொஞ்சம் இஷ்டமாச் சாப்பிடுவான்னு எனக்கு ஏற்கனவே நன்னாத் தெரியும்
” என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

ஸ்நானம் செய்துவிட்டு மடி வஸ்திரம் அணிந்து கொண்டு வந்து அமர்ந்த பெரியவரின் கைகளில் இருந்த கொப்புளத்தில் ஒன்றை மீண்டும் திருகி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான், ரவி. 

அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்த, பட்டாபி பங்கஜம் தம்பதியின் கண்ணீர் அவரின் பாதங்களை நனைத்துக் கொண்டிருந்தது. 


“மாமா ... என்னை நீங்கள் தயவு செய்து க்ஷமித்துக் கொள்ளணும் (மன்னித்துக் கொள்ளணும்).

ரயிலிலே வரும்போது, தாங்கள் யார், தங்கள் மஹத்துவம் என்ன என்று தெரியாமல், அடியேன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டேன்.

பாவத்தைப் போக்க வந்த இடத்தில், பல்வேறு பாபங்களை மேலும் சம்பாதித்து விட்டேன். இப்பொது நான் மஹாபாவியாகி விட்டேன்.


தயவுசெய்து இந்த மிகச்சிறிய தொகையான இருபதாயிரம் ரூபாயை தங்களுக்கு நான் தரும் வித்வத் ஸம்பாவனையாக தாங்கள் ஏற்றுக்கொண்டு, எங்களை மனப்பூர்வமாக மன்னித்து ஆசீர்வதிக்கணும். அப்போது தான் குற்ற உணர்வு நீங்கி என் மனம் கொஞ்சமாவது சற்று ஸாந்தி அடையும். தயவு செய்து மறுக்காமல் ஏத்துக்கோங்கோ” என்று சொல்லி ஒரு தட்டில் வெற்றிலை பாக்குப் பழங்களுடன், அந்தப் பணம் ரூ. 20000 த்தையும் அவர் முன்பாக வைத்து சமர்ப்பித்து விட்டு, பிறகு தன் இரு கன்னங்களிலும், தன் கைகளால், நல்ல வலி ஏற்படும்படி பளார் பளாரென்று, அறைந்து கொண்டார், கண்ணீருடன் பட்டாபி. 


இதைக் கேட்ட அந்தப் பெரியவர் ஒரு குழந்தை போல சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார்:

“நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவே இல்லையே. நான் அவற்றையெல்லாம் அவ்வப்போதே மறந்தும் மன்னித்தும் விடுவது தான் என் வழக்கம்.

கோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும்.

ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.

கோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும். 

அந்த ஞானம் என்பதும் பகவத் க்ருபை இருந்தால் மட்டுமே ஏற்படுவது. தொடர்ந்து பக்தி செய்யச்செய்ய அந்த மனப் பக்குவம் தங்களுக்கும் சீக்கரமாகவே ஏற்பட்டுவிடும்.

அடுத்த க்ஷணம் யாருக்கு என்ன நடக்கும் என்பது, நம் பூர்வ ஜன்மத்து பாவ புண்ணியச் செயல்களால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.

அதனால் நீங்கள் என்னை ரயிலில் மரியாதைக் குறைவாகப் பேசியதாகச் சொல்லுவதோ, நான் அதற்காக வருத்தப்பட்டதாக தாங்கள் நினைத்துக்கொண்டு வருந்துவதோ முற்றிலும் தவறான ஒரு அபிப்ராயமே.

நடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்.

உங்களிடம் உண்மையாகவே கோபப்பட்டவனாக நான் இருந்திருந்தால், நீங்கள் மறந்து போய் ரயிலில் விட்டுச்சென்ற இந்தப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் உங்களை சந்திக்க விரும்பியிருக்குமா என் மனஸு? 

எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.

நமது வேத சாஸ்திரங்கள் படித்தவாளுக்குத் தான் இந்த உண்மைகள் ஓரளவுக்குத் தெரிந்து, அந்த மாதிரியான மனப் பக்குவம் ஏற்படும்.

அது போன்ற மனப் பக்குவம் வந்து விட்டால், எந்த வயதை எட்டினாலும், நாமும் தங்கள் குழந்தை ரவி போல, கள்ளங்கபட மில்லாத, எதற்கும் பயம் என்பதே இல்லாத, தெளிவான மன நிலையை அடைந்து, பிரகலாதன் போல மாறி, நடப்பதெல்லாம் அந்த நாராயணன் செயல் என்பதை சுலபமாக உணர்ந்து விட முடியும்.

நீங்கள் எனக்கு ஸம்பாவனையாகக் கொடுக்க நினைக்கும் இந்தப் பணம் எதுவும் எனக்குத் தேவையே இல்லை. அதை எடுத்து முதலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கோ!

அதற்கு பதிலாக, ஒரு வேளை நீங்களும் விருப்பப் பட்டால், நான் சொல்லுவதைச் செய்யுங்கோ!

இங்கு பக்கத்திலேயே ஒரு வேத பாடசாலையில் சுமார் அறுபது வித்யார்த்திகள் (வேதம் பயின்று வரும் ஏழைக் குழந்தைகள்) படிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரமும் (நாலு முழம் வேஷ்டியும் துண்டும்), குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் வாங்கிக் கொடுத்துடுங்கோ;
தங்கள் குழந்தை ரவி கையால் அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட பிஸ்கட் பாக்கெட்டோ, சாக்லேட்களோ அல்லது பழங்களோ விநியோகம் செய்யச் சொல்லுங்கோ. நம் ரவிப்பயல் போலவே அந்தக் குழந்தைகளும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

நாளைக்கு இங்குள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தால், எல்லா பாபமும் விலகி விடும். உங்களுக்கு சகல க்ஷேமமும் ஏற்படும்” என மனதார வாழ்த்தி கை தூக்கி ஆசீர்வதித்தார், அந்த வேத வித்தான பெரியவர்.
அந்தப் பெரியவரை உற்று நோக்கினார் பட்டாபி. அவர் இருந்த இடத்தில் “நடமாடும் தெய்வமாய், கருணைக் கடலாய் இன்றும் நம்மில் பலரின் உணர்வுகளில் வாழும் ஜகத்குரு காஞ்சீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்” 



ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது பட்டாபியை மெய்சிலிர்க்க வைத்தது.







அழகிய உடலோ
அருவருப்பான உடலோ
உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய, 
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய   
பொருளாகி விடுகிறது.

அதை எரிக்க வேண்டிய 
அவசரமும், அவசியமும், நிர்பந்தமும் 
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்
அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.

சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!


பெரியவர் சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது, பட்டாபிக்கு.

-oooooooooo-

முற்றும்   

-oooooooooo-





இந்த நெடுங்கதை, மார்ச் 2006 “மங்கையர் மலர்” தமிழ் மாத இதழின் பக்கம் எண்கள்: 98 முதல் 112 வரை, என் அன்பு மனைவி திருமதி: வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில், முதன் முதலாக வெளியிடப்பட்டது.

இந்தக் கதையைப் படித்து மகிழ்ந்த, தமிழ் மொழி தெரிந்த கன்னட பெண் எழுத்தாளர் ஒருவர், மங்கையர் மலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, எங்கள் விலாசம் பெற்று, பிறகு எங்களுடனும் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், எங்கள் அனுமதியுடன், இந்தக் கதையை, கன்னடத்தில் மொழிபெயர்த்து, கன்னடப் பத்திரிகையான ”கஸ்தூரி” யில், “மையெல்லாக் கண்டு” என்ற தலைப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.


-oooOooo-


48 comments:

  1. முதலில் பதிவிட்டபோதும் படித்திருக்கிறேன். இப்போதும் ஒரே மூச்சில் படித்தேன். கண்ணில் நீர் வரவழைக்கும் அனுபவக்கதை. எல்லோரும் படித்து ஞானம் பெறவேண்டும்.

    ReplyDelete
  2. நல்ல வேளை மறுபடி பதிவு செய்தீர்கள்...தவற விட்டிருப்பேன்..
    மறுபடி படிக்க தூண்டியது...பகிர்ந்ததற்கு நன்றி..

    ReplyDelete
  3. அந்த உன்னத கங்கையின் நீரோட்டம் போன்றதொரு இயல்பான போக்கை கொண்ட நல்லதொரு படைப்பு...
    தங்கள் கதையில் படித்தெளுந்தேன் கங்கையில் குளித்தெளுந்தேன்....
    தொடரட்டும் படைப்புகள்....வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  4. முதலில் பதிவிட்டபோதே படித்து நெகிழ்ந்திருக்கிறேன். மறுபடியும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  5. அழகான எழுத்து நடை

    ReplyDelete
  6. நல்ல கதை கண்ணில் நீர் வரவழைக்கும் அனுபவக்கதை. எல்லோரும் படித்து ஞானம் பெறவேண்டும்.

    ReplyDelete
  7. நீண்ட கதை. பூராவும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்...பத்மாசூரி

    ReplyDelete
  8. மிக அருமையான படைப்பு சார். மொழிபெயர்க்கப்பட்டதுதான் சிறப்பு.. :))

    ReplyDelete
  9. அருமையான கதைக்கு பாராட்டுக்கள். மங்கையர் மலரில் வெளியாகி, சிறந்த அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! இந்த கதையை சில பகுதிகளாக பிரித்து - சில பதிவுகளாக போட்டு இருந்தால் இன்னும் நிறைய பேர் வாசிப்பார்களே.

    ReplyDelete
  10. நல்ல வேளை இன்று உங்கள் பதிவை பார்த்தேன் .இல்லையென்றால் மிஸ் பண்ணியிருப்பேன் .நெகிழ வைத்த கதை .ஒரே மூச்சில் படித்து முடித்தேன் .
    அருமை அருமை .

    ReplyDelete
  11. முன்னர் படித்த நினைவு நிழலாடுகிறது. அருமை வை.கோ சார்!

    ReplyDelete
  12. அன்பின் வை.கோ - படித்து விடுகிறேன் - கருத்தும் கூறி விடுகிறேன். கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்கிறேன். சரியா

    ReplyDelete
  13. தன் செயலால் சிறியோரையும் பெரியோர் ஆக்குபவர்கள்தான் பெரியோர்கள் என்ற அருமையான தத்துவத்தை புரிய வைக்கிறது. அருமையான உண்ர்வுபூர்வமான பதிவு.

    ReplyDelete
  14. உணர்ந்து எழுதப்பட்ட அருமையான கதை. மோகன் ஜியின் பதிவொன்றுக்கு பின்னூட்டம் எழுதும்போது புறத்தோற்றம் காட்டும் கண்ணாடி அகத் தோற்றம் காட்ட முடிந்தால்... என்று கேள்வியாக எழுதினேன். அம்மாதிரி கண்ணாடி பெரியவரை இங்கே காண்பித்திருக்கும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    நான் உங்கள் பதிவுகளை தொடருபவனாக இருந்தும், இந்த பதிவு என் டாஷ் போர்டில் காணவில்லை. உங்கள் மின் அஞ்சல் மூலம் அறிந்து படித்தேன்.

    ReplyDelete
  15. முதலில் பதிவிட்டபோது பலமுறைபடித்து வியந்த் கதை இது.
    இப்போதும் பல முறை படிக்க்கவைத்துவிட்ட ஆழ்ந்த கருத்துள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  16. ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.//

    படங்கள் சிறப்பாக பொருத்தமாக அமைந்திருக்கின்றன. பாராட்டுக்கள்.

    மீண்டும் படங்களுடன் பதிவிட்டிருக்கிறீகள் என நினைக்கிறேன்.
    111 - பின்தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நெடுங்கதையை ஒரே பகுதியாக இன்று மீண்டும் வெளியிட்டுள்ளேன்.//

    ஒரே பகுதியாக படங்களுடன் படிக்கும் போது சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  18. மங்கையர் மலரில் படித்தபோதே உடம்பெல்லாம் உப்புச்சீடை மனதெல்லாம் வெல்லச்சீடையாக ரசித்ததே.

    ReplyDelete
  19. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.//

    வேதசாம்ராட்டின் ஸ்பர்சம் கிடைக்க அஸ்தி கொடுத்துவைத்திருந்ததே.

    ReplyDelete
  20. ஐயா!

    தொடக்க முதலாய் முடிவு வரை வரிவிடாமல் படித்தேன்

    இது கதையல்ல காவியம்!
    அருமை அருமை அருமை
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.//

    அருமை அருமை .

    //எரிந்த அதன் சாம்பலில்அழகும் இல்லைஅருவருப்பும் இல்லை.//வாஸ்த்த‌வ‌மான‌ பேச்சு.

    வாழ்த்துக‌ளும் ந‌ன்றிக‌ளும்!

    மொழிபெய‌ர்த்த‌வ‌ரின் பெய‌ரையும் நாங்க‌ள் தெரிந்து கொள்ள‌லாமா?

    ReplyDelete
  22. நிலாமகள் said...

    அருமை அருமை .

    //எரிந்த அதன் சாம்பலில்அழகும் இல்லைஅருவருப்பும் இல்லை.//வாஸ்த்த‌வ‌மான‌ பேச்சு.

    வாழ்த்துக‌ளும் ந‌ன்றிக‌ளும்!

    //மொழிபெய‌ர்த்த‌வ‌ரின் பெய‌ரையும் நாங்க‌ள் தெரிந்து கொள்ள‌லாமா?//

    அவர்கள் ஒரு பிரபலமான கர்னாடக் சங்கீத இசைக்கலைஞர்:

    பெயர்:
    SANGEETHA VIDUSHI
    SMT. S. BRAMARA SUBBA RAMOO
    BANGALORE - 76

    ReplyDelete
  23. ஐயா களைத்தே போயிட்டேன்...
    ஒரு காப்பி வரட்டும்,,,,,
    hahaha...


    ஆகா அருமையான கதை..
    மனதை சில்லிடவைக்கிறது உங்கள் எழுத்துநடையுடன் கதையும்...
    அருமை...

    ReplyDelete
  24. முன்பே படித்து, மனம் நிறைவடைந்த கதை தான்! திரும்பவும் படித்த போது அருமையாக இருந்தது!
    ஓவிய‌மும் அருமை! யார் வரைந்த‌‌து என்று தெரிய‌வில்லை!

    ReplyDelete
  25. மிக்க‌ ந‌ன்றி ஐயா.. பின்னொரு முறை த‌ங்க‌ளை அவ‌சிய‌ம் தொட‌ர்பு கொள்வேன்.

    ReplyDelete
  26. தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
    எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
    தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
    வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  27. ஐயா
    மீண்டும் இன்று படித்தேன்
    கதை என் மனதை விட்டு அகல
    வில்லை
    மேலும் சென்ற ஆண்டுதான
    காசிக்குச் சென்று வந்தேன்
    இப்பதிவு அதை அப்படியே நினை
    வுக்குக் கொண்டு சென்றது
    வலைவந்து வாழ்த்தினீர்
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. அன்புடைய ரமணி சார்,

    தங்களால் இன்று நான் வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதை என் வாழ்நாளில் நான் செய்த மிகவும் ஒரு பாக்யமாகக் கருதி மகிழ்கிறேன்.

    மிக்க நன்றி.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  29. நான் இப்பதான் முதல் முறையாக இந்தக்கதை படிச்சேன். மனசைத்தொட்ட அருமையான கதை. நீங்கள் கதை சொல்லும் பாணி நாமே அந்த இடத்தில் உக்காந்து இருப்பதுபோல உணர முடிகிரது
    கோபால் சார் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.

    ReplyDelete
  30. நெகிழ வைத்த கதை. ஒன்றைப் பற்றிய எண்ணம் மாறுவதற்கு இன்னொரு தீவிர நிகழ்வு நேர வேண்டுமென்பது இயற்கையின் நியதி போலும்.

    ரயில் பயண நினைவுகளைக் கிளறி, முன் அறிந்திராத பல காசி விவரங்களையும் அறிய வைத்தீர்கள். நன்றி.

    ReplyDelete
  31. இந்தக்கதைக்கு அன்புடன் வருகை தந்து, ஆதரவாக பல கருத்துக்கள் கூறி,என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    ReplyDelete
  32. மெய் சிலிர்த்துப் போனேன் வை.கோ.சார்.
    அருமை அருமை அருமை
    தங்களின் பன்முகத் திறமை கண்டு வியந்து போகிறேன்.

    ReplyDelete
  33. என் காசிக் கனவை மீண்டும் கிளறி விட்டீர்கள்.

    ReplyDelete
  34. Finished reading with a heavy heart - in tamil, 'manasu ganathu poittudhu' - tears threatening to roll out of my eyes. What a moving story! 'Manidha neyam' can't be defined any better.

    By the way, it was "Maha Periaval", (camping in 'Sri Ramasamudram' - a village in Trichy District), who suggested my name to my grand father, when I was born.

    ReplyDelete
  35. Chandramouli said...
    //Finished reading with a heavy heart - in tamil, 'manasu ganathu poittudhu' - tears threatening to roll out of my eyes. What a moving story! 'Manidha neyam' can't be defined any better.

    By the way, it was "Maha Periaval", (camping in 'Sri Ramasamudram' - a village in Trichy District), who suggested my name to my grand father, when I was born.//

    அன்புள்ள ஐயா, நமஸ்காரங்கள்.

    தங்களின் அன்பான முதல் வருகைக்கும், கதை பற்றிய (படித்ததும் கண்ணீர் வந்தது; மனம் கனத்துப்போனது, மனித நேயத்தை இதைவிட சிறப்பாக எடுத்துரைக்க முடியாது போன்ற) உருக்கமான கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    எல்லாவற்றையும் விட திருச்சி ஜில்லா இராமசமுத்ரம் கிராமத்தில் ஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டிருந்தபோது தாங்கள் பிறந்ததாகவும், தங்களுக்கு சந்த்ரமெளலி என்ற பெயர் வைக்கச்சொல்லி தங்கள் தாத்தாவிடம் ஸ்ரீ மஹாபெரியவாளே அருள் வாக்கு அருளியதாகவும் எழுதியிருப்பது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாள் அவர்களால், ஸ்ரீமடத்திற்கு விக்ரஹமாக வழங்கப்பட்டு, பல்வேறு ஸ்ரீமடத்தின் பீடாதிபதிகளால் பல்லாண்டுகளாக,காலம்காலமாக நித்யப்படி பூஜைகள் செய்யப்பட்டு வரும் பகவானின் திருநாமம் அல்லவா ஸ்ரீசந்த்ரமெளலிஸ்வரர் என்பது.

    ஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள சொந்த அனுபவங்கள் / விசித்ர விசேஷ அனுக்கிரஹங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்துபவர் மஹாஸ்வாமிகள் அவர்களே என்பதை நாங்கள் அனுதினமும் உணர்ந்து வருகிறோம்.

    தங்களின் இன்றைய அறிமுகம் கிடைக்கப் பெற்றதையும், ஸ்ரீ மஹா பெரியவாளின் கருணை மழையினால் தான் என்று நினைத்து மகிழ்கிறேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  36. முதல் முதலாக ஏற்கெனவே நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஆனால் அதில் பெயர் மாறுபட்டிருக்கிறது. அந்த மாதிரி பின்னூட்டங்களையும் என்கணக்கில் சேர்த்துக்கொள்வீர்களா?

    ReplyDelete
  37. பழனி. கந்தசாமி April 22, 2015 at 5:48 PM

    வாங்கோ, வணக்கம்.

    //முதல் முதலாக ஏற்கெனவே நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஆனால் அதில் பெயர் மாறுபட்டிருக்கிறது. அந்த மாதிரி பின்னூட்டங்களையும் என்கணக்கில் சேர்த்துக்கொள்வீர்களா?//

    ’DrPKandaswamyPhD’ மற்றும் ’பழனி. கந்தசாமி’ ஆகிய இருவரும் ஒருவரே என எனக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அதுபோன்ற பெயரில் தாங்கள் ஏற்கனவே பின்னூட்டம் கொடுத்திருந்தால் மீண்டும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

    அதுபோன்ற பதிவுகளில் மட்டும், முடிந்தால் ஜஸ்ட் :) ஒரு குறிமட்டும் போட்டுவிட்டு அடுத்தப்பதிவுக்குச் செல்லுங்கள்.

    :) குறியே போடாவிட்டாலும்கூட நான் ஆராய்ச்சிசெய்து பார்த்து, தங்கள் கணக்கில் உடனடியாக வரவு வைத்துக்கொள்வேன். Attendance Register இல் Present போட்டுக்கொள்வேன். தாங்கள் இதுவிஷயமாக கவலையே படவேண்டாம்.

    ஆர்வத்துடனும் பேரெழுச்சியுடனும் கூடிய தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

    அன்புடன் + நன்றியுடன் VGK

    ReplyDelete
  38. இந்த பதிவுக்கு ஐந்து முறை பின்னூட்டம் போட்டேன். ஏன் போகலன்னு தெரில

    ReplyDelete
  39. உங்கள் சிறுகதைகள் எல்லாமே முத்திரைக் (எங்கள் நெஞ்சில் முத்திரை பதித்த) கதைகள்.

    ReplyDelete
  40. மொதகவே ஒருவாட்டி படிச்சுபோட்டனே. மறுக்கா படிச்சுபோட்டன் நல்ல கத.

    ReplyDelete
  41. எத்தனை தரம் படித்தாலும் ரசித்து வியக்க வைத்த கதை. ஒரு குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பும்போது என்ன நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் என்று கண்முன்னாடியே உணரமுடிகிறது. அந்த பெரயவரின் உருவம் கண்டு அருவருப்பு அடைவது. குழந்தைகள் சகஜமாக அவருடன் பழகுவது இவர்களின் முகச்சுளிப்பை எல்லாம் பெரிது படுத்தாத பெருந்தன்மை கடைசியில் அஸ்தி கலசத்தை இவரே அவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்று ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கி சொன்ன விதம் அருமை. பலரையும் இந்த எழுத்து கவர்ந்ததாலதானே வேற்று மொழியிலும் பிரசுரம் பண்ண ஆசைப்பட்டாங்க. இந்த முறை படங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

    ReplyDelete
  42. யவன ராணியை ஏக் தம் படிக்கிறமாதிரிதான்...சுவாரசியம்...

    ReplyDelete
  43. திரும்பப் படித்தாலும் திகட்டவில்லை ஐயா!

    ReplyDelete
  44. கதை போலவே நினைக்க முடியல. நம்ம கண்ணுக்கு எதிராப்ல நடக்குற சம்பவங்களை உடனிருந்து பார்க்கும் அநுபவம் கிடைக்கிறது. உங்க நகைச்சுவை கதைகள் படிக்கும்போது பக்கத்துல யாரும் இருந்தாகூட வாய்விட்டு சிரித்து ரசிக்க முடியும். அதுபோல இந்தக்கதை மனதை கனக்கசெய்யுது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... March 8, 2017 at 1:53 PM

      வாங்கோ ... வணக்கம்.

      //கதை போலவே நினைக்க முடியல. நம்ம கண்ணுக்கு எதிராப்ல நடக்குற சம்பவங்களை உடனிருந்து பார்க்கும் அநுபவம் கிடைக்கிறது. உங்க நகைச்சுவை கதைகள் படிக்கும்போது பக்கத்துல யாரும் இருந்தாகூட வாய்விட்டு சிரித்து ரசிக்க முடியும்.//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //அதுபோல இந்தக்கதை மனதை கனக்கசெய்யுது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான வாசிப்புகளுக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

      Delete