என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இனி துயரம் இல்லை




இனி துயரம் இல்லை





[சிறுகதை ]


By வை.கோபாலகிருஷ்ணன்


தன்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தன் தாய் மரணப்படுக்கையில் அவஸ்தைப் படுவதைப் பார்க்க சகிக்காமல் மிகவும் வருந்தினான் ராஜேஷ். 

தாயின் கைகளை தன் கைகளால் ஆதரவுடன் பற்றினான். ஏதோ சொல்ல வருகிறாள். தொண்டையிலிருந்து குரல் வெளிவரவில்லை. அருகிலேயே அவன் தந்தை மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்துள்ளார். 

தலையணிக்கு அடியிலிருந்து ஒரு பதிவு செய்த ஒலிநாடாவை எடுத்து ராஜேஷிடம் கொடுத்து, போட்டு கேட்கச் சொல்லுகிறாள், அந்தத் தாய். ஒலி நாடாவில் அவன் தாயின் குரல் மிகத் தெளிவாக ஒலிக்க ஆரம்பிக்கிறது.

அன்புள்ள ராஜேஷ்,

“எரியும் விளக்கில் திரி முந்தியோ அல்லது எண்ணெய் முந்தியோ” என்பது போல உன் அப்பாவுக்கு முன்பாக நான் இந்த உலகை விட்டு இன்னும் சில நாட்களுக்குள் போய் விடுவேன் என்று தோன்றுகிறது. என்னால் இப்போது சுத்தமாகப் பேச முடியவில்லை. இதுபோல ஒரு நாள் என் நிலைமை முற்றிவிடும் என்று எதிர்பார்த்த நான், இதுவரை உன்னிடம் நேரடியாக பேசத்தயங்கிய பல விஷயங்களை, மனம் விட்டுப் பேசி பதிவு செய்திருக்கிறேன்.

நான் சுமங்கலியாக பூவுடனும், பொட்டுடனும் போய்ச் சேர்ந்து விட்டதாக இந்த உலகம் நாளை பேசும். ஆனால் சூதுவாது தெரியாத அப்பாவியான குழந்தை மனம் கொண்ட உன் அப்பாவைத் தவிக்க விட்டுச்செல்கிறேனே என்ற ஒரே கவலை தான் என் மனதை வாட்டி வருகிறது.

எங்களின் ஒரே பிள்ளையான நீ, வயதான எங்களுக்கு எல்லா வித வசதிகளும் செய்து கொடுத்துள்ளாய். நிறைமாத கர்ப்பிணியாகிய உன் மனைவியும் எங்களின் சொந்த மகளைப்போலவே, எங்களிடம் அன்பு செலுத்தி வருகிறாள்.

இருப்பினும், வயதான எங்களிடம் நீ சில சமயங்களில் கடுகடுத்த முகத்துடன், எரிந்து விழுந்து, கோபமாக பேசிவிடுகிறாய். உன் சுபாவம் தெரிந்த நான் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுவேன். ஆனால் அது போன்ற சமயங்களில் உன் அப்பாவின் குழந்தை மனம் உடைந்து நொறுங்கிப் போனது உண்டு. இதை பலமுறை உணர்ந்த நான் அவருடன் ஆறுதலாகப் பேசி சமாதானம் செய்துள்ளேன்.

உன் கடமைகளைச் செவ்வனே செய்துவரும் நீ, உன் அப்பாவின் உண்மையான, நியாயமான எதிர்பார்ப்புகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை உனக்கு எடுத்துச் சொல்வதே இந்த ஒலிநாடாவின் நோக்கம்.

செல்போன், கம்ப்யூட்டர், இண்டெர்நெட், வாஷிங் மெஷின், ஏ.ஸி போன்ற நவீன தொழில் நுட்ப சாதனங்களைப் பற்றி புரிந்து கொண்டு இயக்கத் தெரியவில்லை என்று எங்களிடம் கோபப்படுகிறாய். வயதான எங்களுக்குப் புரியும் படியாக விளக்க உனக்குக் கொஞ்சமும் பொறுமை இருப்பதில்லை.

நீ சின்னக் குழந்தையாய் இருந்தபோது உன் அப்பா உன் பாடங்களில் உனக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களை உன் மனதில் பதியும் வரை எவ்வளவு பொறுமையாக, அழகான கதைகள் மூலமும், படங்கள் மூலமும் தகுந்த உதாரணங்களுடன் விளக்கிப் புரிய வைத்தார் என்பது எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.

வயதான அவரைப்போய், உங்கள் சாப்பிடும் கைகள் அழுக்காக உள்ளன; சுத்தமான சுகாதாரமான நாகரீக உடைகள் அணிவதில்லை; யாராவது வீட்டுக்கு வந்தால் அமைதியாக இருப்பதோ, நாகரீகமாக ஒரு சில வார்த்தைகளுடன் பேசி முடித்துக் கொள்வதோ இல்லை என்றெல்லாம் குறை கூறுகிறாய்.

உன் குழந்தைப் பருவத்தில், குளிக்க வரவே, அடம் பிடித்த உன்னைத் தாஜா செய்து, பாத் ரூம் அழைத்துப்போய், சோப்புப் போட்டுத் தேய்த்து குளிப்பாட்டி, நீயாகவே எப்படி தினமும் ஆசையாகக் குளிக்க வேண்டும், எப்படி அழகாக உடை அணிய வேண்டும், எப்படி தலைக்கு எண்ணெய் தடவி சீப்பினால் சீவி அலங்கரித்துக்கொள்ள வேண்டும், பிறரிடம் எப்படி நாகரீகமாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் எதிர்பாராத பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று உனக்கு எல்லாம் கற்றுக் கொடுத்தவரே உன் அப்பா தானே! என்பதை மறந்து விட்டு, இன்று அவரின் முடியாத வயோதிக நிலைமையில், அவரை உன் விருப்பதிற்கு கட்டுப்படுத்த முயல்வது எப்படி நியாயமாகும்? அடிக்கும் காற்றில், மரத்திலிருந்து விழப்போகும் பழுத்த இலையைப் பார்த்து, துளிர் விடும் பச்சை இலை கேலி செய்யலாமா?





வயதாக வயதாக ஐம்புலன்களும், உடலும், உள்ளமும் சோர்வடைந்து எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றன. ஞாபக மறதி ஏற்படுகிறது. காது சரிவர கேட்பதில்லை. கண்களில் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எதையுமே மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஞாபகப் படுத்திக்கொள்ள நீண்ட நேரம் ஆகின்றது. கால்களில் உறுதி குறைந்து நடக்கவே கஷ்டமாக உள்ளது. தடிக்குச்சி ஊன்றி நடக்க வேண்டியுள்ள எங்களை நீ புரிந்து கொள்ள வேண்டும்.




நீ, குப்பறித்து நீந்தி, தவழ்ந்து, பிறகு பிடித்துக்கொண்டு நிற்க ஆரம்பித்து, அதன் பின் ஒரு நாள் திடீரென்று தத்தித்தத்தி முதல் அடி எடுத்து வைத்த அந்த பொன்னான நாட்களில், நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் உன்னைக்கீழே விழாமல் தாங்கித் தடுத்திருப்போம். வயதான நாங்களும் இன்று அது போன்ற ஒரு குழந்தையே என்பதை நீ உணர வேண்டும், ராஜேஷ்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வயதான பழமான நாங்களும், மேலும் மேலும் வாழ விரும்புவதில்லை. ஏதோ இறுதி மூச்சை எதிர்பார்த்து, நாட்களைக் கடத்தி வருபவர்களே, நாங்கள். 

எங்களையும் அறியாமல், நாங்களும் தலைமுறை இடைவெளியால் உங்களுடன் ஒத்துப்போக முடியாமல், ஏதாவது தவறாகவே கூட நடந்து கொண்டாலும், நீ என்றும் நன்றாக இருக்க வேண்டும், என்பதே எங்களின் மனப்பூர்வமான விருப்பமும், வேண்டுதலும் ஆகும்.

எங்கள் மரணம் கூட, உன் பார்வையிலேயே, நீ எங்கள் அருகில் இருக்கும் போதே, உன் மடியிலேயே நிகழ வேண்டும் என்பதே எங்களின் ப்ரார்த்தனை.

உனக்கு ஒரு மகனோ அல்லது மகளோ பிறந்த பின்பு தான், அதாவது நீயும் ஒரு அப்பா ஆன பிறகுதான், உனக்கு உன் அப்பா அம்மாவின் அருமையும், பெருமையும், பொறுமையும் விளங்கி புரிய ஆரம்பிக்கும், ராஜேஷ்.

எங்களுக்கு எப்போதும் உன் அன்பு வேண்டும்; உன் ஆதரவு வேண்டும்; உன் கனிவான பேச்சு வேண்டும். எங்களின் ஒரே மகனான உன்னிடம் பேசாமல் நாங்கள் வேறு யாரிடம் பேசி, அந்த உண்மையான அன்பை உரிமையுடன் பெற முடியும்? புரிந்து கொள்.....ராஜேஷ்.

இறுதி வரை புன் சிரிப்புடன் நீ எங்கள் மேல் அன்பு செலுத்தி, எங்களின் மன அமைதியுடன் கூடிய இறுதிப்பயணத்திற்கு உதவி செய். முதலில் நான் புறப்படுகிறேன். உன் அப்பாவாவது தன் பேரனையோ பேத்தியையோ ஆசை தீரக் கொஞ்சி விட்டு வேறு ஒரு நாள், என்னிடம் பத்திரமாக வந்து சேர உதவி செய். செய்வாயா? ............ ராஜேஷ்.”

ஒலி நாடா இத்துடன் ஒலித்து ஓயந்தது.







மகனிடம் பேச வேண்டியதெல்லாம் தயக்கம் இன்றி பேசிவிட்டோம் ‘இனி துயரம் இல்லை’ என்று நினைத்தபடி, அந்தத் தாயின் உயிரும் பிரிந்திருக்கும் அல்லவா?

-o-o-o-o-o-o-o-
முற்றும்
                                                               -o-o-o-o-o-o-o-

48 கருத்துகள்:

  1. என்ன சொல்வது என்று புரியவில்லை. மனதினை அழுத்தியது இக்கதையில் சொல்லப்பட்ட உண்மை. பலவிதங்களில் இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறோம்/இருக்கிறார்கள்.

    நல்லதோர் சிறுகதையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. வயதாக வயதாக ஐம்புலன்களும், உடலும், உள்ளமும் சோர்வடைந்து எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றன. ஞாபக மறதி ஏற்படுகிறது. காது சரிவர கேட்பதில்லை. கண்களில் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எதையுமே மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஞாபகப் படுத்திக்கொள்ள நீண்ட நேரம் ஆகின்றது. கால்களில் உறுதி குறைந்து நடக்கவே கஷ்டமாக உள்ளது. தடிக்குச்சி ஊன்றி நடக்க வேண்டியுள்ள எங்களை நீ புரிந்து கொள்ள வேண்டும்.


    உண்மையின் தரிசனம் கதையினில் அழகாக வெளிக்காட்டி உள்ளீர்கள்.மனதை நெருடும் அழகிய கதை!!!........பகிர்ந்தமைக்கு நன்றி சார்......

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை
    நெகிழ்ச்சியான சிறுகதை.

    அந்த தாய் கண் முன் நிக்கிறார்.

    உங்கள் சிறுகதைகள் மூலம்
    எங்களை உருக வைத்துவிடுகிறீர்கள்.

    ^_^

    பதிலளிநீக்கு
  4. பல இடங்களில் நிலவும் நிதரிசனங்களை கதையாகப் பகிர்ந்துள்ளீர்கள் . பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல மெசேஜ். எங்கேயோ நாம் சந்திக்கும் அனுபவங்கள் கதைகளாகி பல சமயம் பாடமாகின்றன.

    பதிலளிநீக்கு
  6. மிக மிக அருமை
    கதையில் மகனுக்கு கூறுவதுபோல் உள்ளது
    இளைஞர்கள் எல்லோருக்கும் கூறுவதுபோல
    மிக அழகாக பொதுமைப் படித்தி இருக்கிறீர்கள்
    தரமான பதிவு
    அப்படி ஒரு பொதுவான கேசட் போட்டு
    விற்பனைக்கு விட்டால் கூட நல்லதோ எனப் படுகிறது
    பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. உருக்கமான கதை!
    நெஞ்சை கனமாக்கியது!
    ஐயா!
    வலைப் பக்கம் வரவில்லை..!
    தாங்கள் மட்டுமல்ல தவறாமல்
    வரும் பலரும் காணவில்லை
    காரணம் தெரியவில்லை
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  8. அந்த கேஸட் எங்கே கிடைக்கும் ஸார்?
    கதை மிக மிக அருமை என்று சொன்னால் ரொம்ப ஃபார்மலாகத் தெரிவதால் சொல்கிறேன்..
    ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,

    ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,

    ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,

    ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,

    ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,

    ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,
    அருமையாக இருந்தது!!

    பதிலளிநீக்கு
  9. நிதரிசனங்களைத் தரிசனப்படுத்திய கனக்கவைத்த கதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. வயதான எங்களுக்குப் புரியும் படியாக விளக்க உனக்குக் கொஞ்சமும் பொறுமை இருப்பதில்லை.//

    வேகமான காலக்க்ட்டத்தில் அவர்களின் பொறுமையை எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
  11. “எரியும் விளக்கில் திரி முந்தியோ அல்லது எண்ணெய் முந்தியோ” //

    கனக்கும் உணர்வுகள்.

    பதிலளிநீக்கு
  12. அடிக்கும் காற்றில், மரத்திலிருந்து விழப்போகும் பழுத்த இலையைப் பார்த்து, துளிர் விடும் பச்சை இலை கேலி செய்யலாமா?

    பதிலளிநீக்கு
  13. மிக மிக அருமை...நெகிழ்ச்சியான சிறுகதை...

    பதிலளிநீக்கு
  14. அடிக்கும் காற்றில், மரத்திலிருந்து விழப்போகும் பழுத்த இலையைப் பார்த்து, துளிர் விடும் பச்சை இலை கேலி செய்யலாமா?


    ..... சரியான கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன், வயோதிகரையும் குறிப்பாக வயதான பெற்றோரையும் மதித்து நடக்கும் வழிமுறைகள் மாறி கொண்டு வரும் வேதனையான சூழ்நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டுமே. :-(

    பதிலளிநீக்கு
  15. மனதினை மிகவும் நெகிழவைத்து விட்டது. அருமையான கதை ஐயா.

    பதிலளிநீக்கு
  16. மனதை உருக்கும் கதை.பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  17. உள்ளத்தில் வேதனை குடிகொண்ட சிறந்த சிறுகதை உள்ளத்தை கனக்க செய்ததது பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டும் படியாக சிந்திக்க வைத்ததது உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி .

    பதிலளிநீக்கு
  18. அற்புதமான கதை சார். இன்றைய இளைஞர்களின் நிலையையும், மூத்தோரின் நிலையையும் அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. மனதை நெகிழவைத்த கதை. எண்ணை முந்தியா, திரி முந்தியா. என்ன ஒரு வர்ணனை. கதை சொல்லும் பாணி
    ரொம்ப நல்லா இருக்கு. தமிழ் விரும்பி பக்கம் உங்களைத்தேடினேனே.

    பதிலளிநீக்கு
  20. நல்லா இருந்துச்சு ,நெகிழ வைத்த கதை.........

    பதிலளிநீக்கு
  21. மனதை கலங்கவைக்கும் கதை...
    அருமை......
    பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  22. முன்னரேயே படித்தும் பாராட்டியுமிருக்கிறேன் என்றாலும் மறுபடியும் மனதை கனமாக்கியது இந்த சிறுகதை!

    பதிலளிநீக்கு
  23. அருமையான கதை. இப்போ தான் வாசித்தேன்.

    பதிலளிநீக்கு
  24. எங்களுக்கு எப்போதும் உன் அன்பு வேண்டும்; உன் ஆதரவு வேண்டும்; உன் கனிவான பேச்சு வேண்டும். எங்களின் ஒரே மகனான உன்னிடம் பேசாமல் நாங்கள் வேறு யாரிடம் பேசி, அந்த உண்மையான அன்பை உரிமையுடன் பெற முடியும்? புரிந்து கொள்.....ராஜேஷ்.

    அப்படியே மனதை உலுக்கியது.. தீனமான குரல் செவிகளில் ஒலிக்கிறது..

    பதிலளிநீக்கு
  25. இந்தச்சிறுகதைக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய கருத்துக்களைக்கூறி, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கியுள்ள என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  26. அருமை. சில சமயங்களில் எனக்கும் நேர்வதுண்டு. பெத்தமனம் பித்து. பிள்ளைமனம் கல்லு என்று சமாதானம் அடைய வேண்டியதுதான். நானும் என் தாய் தந்தையரிடம் இவ்வாறு இருந்துள்ளேன். பட்டால்தானே புத்தி வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //viswam August 28, 2011 4:07 AM
      அருமை. சில சமயங்களில் எனக்கும் நேர்வதுண்டு. பெத்தமனம் பித்து. பிள்ளைமனம் கல்லு என்று சமாதானம் அடைய வேண்டியதுதான். நானும் என் தாய் தந்தையரிடம் இவ்வாறு இருந்துள்ளேன். பட்டால்தானே புத்தி வருகிறது.//

      தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான அனுபவபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  27. ஐயா! இன்றைய காலத்திற்கு ஏற்ற நல்லதொரு கதை.
    கதை அல்ல எத்தனையோ வீடுகளில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் கசப்பான நிஜம்.

    வயதான காலத்தில் ஏற்படும் நோய், மறதி, ஏக்கம், கவலை, இளையோருக்கு இடைஞ்சலாக இருக்கிறோமோ என்கிற பதட்டம், தடுமாற்றம், எதையும் இலகுவில் கிரகித்துக்கொள்ள முடியாததன்மை, இளயோரின் கோபத்துக்குள்ளாகும் போது ஏற்படும் அவஸ்தை இப்படி அருமையாக, அவர்களின் உணர்வுகளை மிகத்தெளிவாக ஆங்காங்கே எடுத்துக்கூறி கதையை நகர்த்தியுள்ளவிதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பல இடங்களில் கண்ணீரை வரவைத்துவிட்டது.

    சமயத்தில் நானே அந்த வயதான தாய் இடத்தில் இருப்பதாய் கதையோடு ஒன்றிப்போனேன். அதற்காக நானும் அந்த வயதானவளென்றோ இல்லை என்வீட்டிலும் இப்படித்தான் இளையோர் இருக்கின்றனர் என்றோ அர்த்தம் கொள்ளவேண்டாம்.
    உங்களின் அத்தனை உணர்ச்சிப்பிரவாக வசனங்கள் என்னை அப்படி எண்ண வைத்தது.

    “எரியும் விளக்கில் திரி முந்தியோ அல்லது எண்ணெய் முந்தியோ”
    என் மனதை நெருடிய வாக்கியம்.

    அருமையான கதை. வைகோ ஐயா! வாழ்த்துக்கள்.
    இதுபோல் மிக மிக அவசியமான நல்ல நல்ல ஆக்கங்களை தொடர்ந்து தரவேண்டுகிறேன். தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இளமதி, வாருங்கள், வணக்கம். நலமா?

      //ஐயா! இன்றைய காலத்திற்கு ஏற்ற நல்லதொரு கதை.
      கதை அல்ல எத்தனையோ வீடுகளில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் கசப்பான நிஜம். //

      ஆம். உண்மை தான். கசப்பான நிஜம் தான்.
      என்ன செய்வது?

      //.......இப்படி அருமையாக, அவர்களின் உணர்வுகளை மிகத்தெளிவாக ஆங்காங்கே எடுத்துக்கூறி கதையை நகர்த்தியுள்ளவிதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பல இடங்களில் கண்ணீரை வரவைத்துவிட்டது.//

      கவர்ந்துள்ளதா? அடடா,கண்ணீரையும் வரவைத்து விட்டதா?
      Very Sorry ங்க .... ;(

      தொடரும்......


      நீக்கு
    2. 2

      VGK to இளமதி.....

      //சமயத்தில் நானே அந்த வயதான தாய் இடத்தில் இருப்பதாய் கதையோடு ஒன்றிப்போனேன்.//

      ஹைய்யோ! தங்கள் தாயுள்ளம் என்னை மெய்சிலிரிக்க வைத்து விட்டது.

      //அதற்காக நானும் அந்த வயதானவளென்றோ இல்லை//

      இதை நீங்க சொல்லணுமா என்ன? நீங்கள் நிச்சயம் நல்ல இளமையாகத்தான் இருக்க வேண்டும்.

      பெயரைப் பார்த்தாலே தெரிகிறதே. இளமதி ! பெயரிலேயே எவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்.;)))))

      மேலும் நம் அஞ்சு வேறு தன்னுடைய “வற்றல் குழம்பு” பதிவிலும் பின்னூட்டத்திற்கான பதிலில் சொல்லியிருக்காங்க. அதனால் எனக்கு இது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ;)

      ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேனுங்க ... அதாவது நம் இளமை, அழகு, தேக ஆரோக்யம் இவையெல்லாம் நிரந்தரமே இல்லை. ஒரு நாள் எல்லாமே மாறி விடும். மாற்றத்தை ஏற்றுக்கொண்டே தான் ஆக வேண்டும். கொஞ்சம் மறைக்கலாமே தவிர, முற்றிலும் மறுக்க முடியாது. இதைத்தான் “இளமையில் நடை அழகு; முதுமையில் நரை அழகு” என்பார்கள்.

      மனதில் எப்போதும் அழகான நல்ல சிந்தனைகளுடன், ஆரோக்யமாக இருக்க நாம் கொஞ்சம் முயற்சி செய்யலாம். அது மட்டுமே நம்மால் கொஞ்சம் முயற்சித்தால் முடியக்கூடியது. பொதுவாக யாருக்கும் எந்தக்கெடுதலும் நினைக்காமல் இருந்தாலே போதுங்க! அதுவே நல்ல அழகுதாங்க.

      //என்வீட்டிலும் இப்படித்தான் இளையோர் இருக்கின்றனர் என்றோ அர்த்தம் கொள்ளவேண்டாம்.//

      அடடா அப்படி அர்த்தம் கொள்வோமா என்ன?

      இளமதி என்றால் YOUNG MOON அல்லவா? இளமதியின் வாரிசுகள் என்றால் ‘மூன்றாம் பிறை’ச்சந்திரனாக அல்லவா இருக்க முடியும் !

      //உங்களின் அத்தனை உணர்ச்சிப்பிரவாக வசனங்கள் என்னை அப்படி எண்ண வைத்தது.//

      அது சரி. உங்களின் கருத்துக்கள் அனைத்தும் கூட உணர்ச்சிபிரவாக வசனங்களாகவே என்னையும் எண்ண வைக்கிறது.

      தொடரும் ....

      நீக்கு
    3. 3]

      VGK to இளமதி....


      //“எரியும் விளக்கில் திரி முந்தியோ அல்லது எண்ணெய் முந்தியோ” என் மனதை நெருடிய வாக்கியம்.//

      என்னைப்போன்ற மூத்த குடிமகன் + குடிமகள் எல்லோரையும் மிகவும் அச்சுறுத்தும் வாக்கியம், தான்.

      //அருமையான கதை. வைகோ ஐயா! வாழ்த்துக்கள்.
      இதுபோல் மிக மிக அவசியமான நல்ல நல்ல ஆக்கங்களை தொடர்ந்து தரவேண்டுகிறேன். தொடரட்டும் உங்கள் பணி.//

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இளமதி. தொடரட்டும் தங்களின் கருத்தளிக்கும் பணிகளும்.

      அன்புடன்,
      VGK

      நீக்கு
  28. முதலில் இந்த கதையை நான் எப்படி மிஸ் செய்தேன் ?
    வெளியிட்ட தேதியை பார்க்கும்போது சென்ற வருடம் நான் இந்தியாவில் இருந்தேன்என நினைக்கிறேன் ..
    மஞ்சுவுக்கு நன்றி ..லிங்க் தந்ததற்கு .
    .மனதை நெகிழ வைத்தது அந்த தாயாரின் உருக்கமான பேச்சு ..சில பிள்ளைகளுக்கு இப்படி சொல்லிக்காட்டினாதான் புரியும் போல இருக்கு :(..
    மிக அருமையான கதை கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. angelin October 3, 2012 2:30 AM
      முதலில் இந்த கதையை நான் எப்படி மிஸ் செய்தேன் ?
      வெளியிட்ட தேதியை பார்க்கும்போது சென்ற வருடம் நான் இந்தியாவில் இருந்தேன்என நினைக்கிறேன் ..//

      இருக்கலாம் நிர்மலா. இதே கதையை படங்களெல்லாம் இணைக்காமல் என் முதல் பதிவாக 02.01.2011 அன்று கொடுத்திருந்தேன். இது ஓர் மீள் பதிவு.

      //மஞ்சுவுக்கு நன்றி ..லிங்க் தந்ததற்கு//

      பஞ்சுமிட்டாய்க்கு ...... ஸாரி ...
      மஞ்சு மிட்டாய்க்கு என் நன்றிகளும்.

      //மனதை நெகிழ வைத்தது அந்த தாயாரின் உருக்கமான பேச்சு ..சில பிள்ளைகளுக்கு இப்படி சொல்லிக் காட்டினாதான் புரியும் போல இருக்கு :(..//

      ஆமாம் அப்படித்தான் உள்ளன, இந்தக்காலப் பிள்ளைகள்.

      //மிக அருமையான கதை கோபு அண்ணா//

      மிகவும் சந்தோஷம், நிர்மலா. நன்றி, நன்றி, நன்றி.

      நீக்கு
  29. சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊப்பர் சார்!.

    எவ்வளவு மெல்லிய உணர்வுகள் உங்களுக்கு இருந்தால் , இந்த மாதிரி எழுத முடியும்!

    மனசு கலங்கினாலும், யதார்த்தமான அறிவாளி தாயை சித்தரித்து இருக்கிறீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  30. Pattu Raj October 4, 2012 1:53 AM
    //சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊப்பர் சார்!.//

    அன்பின் பட்டு, வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

    செளக்யமாக இருக்கீங்களா? பட்டுவைப்பார்த்து பல யுகங்கள் ஆனதுபோல ஒரு ஏக்கம் என்னுள் ஏற்பட்டது. பட்டென்று வலைச்சரத்தின் 02 10 2012 பதிவுக்கு வருகை தந்து நான்கு வரிகள் நச்சென்று எழுதியிருந்தீர்கள். என் ஏக்கமெல்லாம் பட் பட்டென உடைந்து போய் எவ்ளோ மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமோ?

    இங்கு வந்தும் //சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊப்பர் சார்!.//
    என நீட்டி முழங்கி அசத்திப்புட்டீங்களே ! ;)))))

    //எவ்வளவு மெல்லிய உணர்வுகள் உங்களுக்கு இருந்தால் , இந்த மாதிரி எழுத முடியும்!//

    பட்டு என்றால் SILK. SILK என்றால் மெல்லியது. அதே பட்டுப்போன்ற மெல்லிய உணர்வுகள், தான் பட்டு என்னை இதுபோல எழுத வைத்தது. போதுமா?

    //மனசு கலங்கினாலும், யதார்த்தமான அறிவாளி தாயை சித்தரித்து இருக்கிறீர்கள். அருமை.//

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் பட்டு. உங்களுக்கும் எனக்கும் தான் இதுபோன்ற யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும். தங்களின் கருத்துக்களும் அருமை. நன்றியோ நன்றிகள்.

    பிரியமுள்ள
    கோபு

    பதிலளிநீக்கு
  31. ஓர் மகிழ்ச்சியான செய்தி:

    நான் எழுதியுள்ள இந்த என் சிறுகதை நேற்று 10.08.2014 தேதியிட்ட ‘ஹம் லோக்’ என்ற பிரபல ஹிந்தி இதழில் எட்டாம் பக்கத்தில், ‘அப் துக் நஹி ஹை’ என்ற தலைப்பினில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுபோல என் தமிழ் கதைகள் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது, எனக்குத் தெரிந்து மூன்றாவது முறையாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மொழியாக்கம் செய்துள்ளவர்: திருமதி. பாக்யம் ஷர்மா அவர்கள்.
    இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளவர். இவர் தமிழும், ஹிந்தியும் தெரிந்த ஓர் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  32. நல்ல சிந்தனைகள். இளைய சமுதாயம் இதைக்கேட்டுப் பயன்பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  33. ரொம்ப உருட்கமான கதை ஹிந்தியில் எப்படி மொழியாக்கம் செய்திருட்காங்கன்னு படிக்க ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 15, 2015 at 7:39 PM

      வாங்கோ சிவகாமி, வணக்கம்.

      //ரொம்ப உருக்கமான கதை. ஹிந்தியில் எப்படி
      மொழியாக்கம் செய்திருக்காங்கன்னு படிக்க ஆசை.//

      ஹிந்தி நன்கு படிக்கத் தெரிந்த தங்களை இன்று நான் என் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். :)

      தங்களின் ஆசையை நிறைவேற்றவேண்டி இதுவரை எனக்குத்தெரிந்து ஹிந்தியில் மொழியாக்கம் செய்து, ஹிந்தி இதழ்களில் வெளியாகியுள்ள கீழ்க்கண்ட என் மூன்று சிறுகதைகளை ... அப்படியே அந்த வெளியான இதழ்களின் பக்கங்களுடன் PDF DOCUMENTS ஆக மெயிலில் அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கோ.

      1) இனி துயரம் இல்லை
      http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_15.html
      ஹிந்தியில்: ’அப் நஹி துக் ஹை’
      ஹம் லோக் இதழ் 10.08.2014

      2] அவன் போட்ட கணக்கு
      http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html
      ஹிந்தியில்: ’உஸ்கா கிதாப்’
      Health - body.mind.soul இதழ் 28.01.2014

      3] கொட்டாவி
      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
      ஹிந்தியில்: ‘படே லேகக்’
      டைனிக் பாஸ்கர் இதழ் 20.07.2014

      அன்புடன் கோபு

      நீக்கு
  34. மனம் கனக்கிறது.

    முன்பெல்லாம் FINANCIALLY பிள்ளைகளும் பெற்றோரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்தனர். ஆனால் இன்று பெற்றோரிடமும் பணம் இருக்கிறது. ஆனால் சுற்றி நிற்க சுற்றம்தான் இல்லை.

    அருமையான கதை

    பதிலளிநீக்கு
  35. ஹிந்திலயும் வந்திருக்குதா. பள்ளியோடம் படிக்கேல ஹிந்தி எடுத்துடிட்டேன் எளுத்து படிப்பெல்லா தெரியும். நா படிக்க கெடக்குமா?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 12, 2015 at 9:46 AM

      //ஹிந்திலயும் வந்திருக்குதா. பள்ளியோடம் படிக்கேல ஹிந்தி எடுத்துடிட்டேன் எளுத்து படிப்பெல்லா தெரியும். நா படிக்க கெடக்குமா?//

      அவை PDF Doc. ஆக என்னிடம் உள்ளன. பிறகு மெயிலில் அனுப்பி வைக்கிறேன். இருப்பினும் இதுபோல என்னிடம் ஆவலுடன் விரும்பிக்கேட்டு, நானும் அனுப்பிவைத்தும், சிலர் அவற்றை ஓபன் செய்து படிக்க முடியாமல் உள்ளது என்று என்னிடம் பதில் சொல்லியுள்ளனர். உங்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது. இருப்பினும் நான் கட்டாயமாக மெயில் மூலம் அனுப்பி வைப்பேன்.

      தங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள்.

      அன்புடன் குருஜி கோபு

      நீக்கு
  36. வயதான பெரியவர்களின் மன உணர்வுகளை ரொம்ப கனமாக மனதை கலங்கடிக்கும் விதமாக சொல்லி இருக்கிறீர்கள் கலங்க வைத்தாலும் யதார்த்தம் இதுதான் என்று இருக்கே மறுக்க முடியாத உண்மை.

    பதிலளிநீக்கு
  37. இதற்கு படங்கள் இன்னும் அழகாக பொருத்தமாக உள்ளன...பேக் கிரவுண்ல சோகமா ஒரு ஷெனாய் பிட் ஓடுறமாதிரி இருக்கு... ;-(((

    பதிலளிநீக்கு