About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, August 11, 2011

அமுதைப் பொழியும் நிலவே !


அமுதைப்பொழியும் நிலவே !

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்
என் அலுவலகத்திற்கு மட்டும் அன்று விடுமுறை. காலை சுமார் ஏழு மணி. வீட்டிலே மின் வெட்டு. காற்று வாங்க காலாற நடந்து கொண்டிருந்தேன்.


திருச்சிக்குப் புதியதாக, அரசால் ஒரு சில தொடர் பேருந்துகள் (மிக நீளமான ரயில் பெட்டிகள் போல இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு பஸ்கள்) விடப்பட்டுள்ளன. அதில் பயணிக்க வேண்டும் என்று எனக்கும் பல நாட்களாக ஒரு ஆசை உண்டு. நேற்று வரை அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. 


அந்தத் தொடர் பேருந்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ விசித்திரமான ஒரு சில நினைவுகள் அடிக்கடி வருவதுண்டு. சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும். மேலும் என்றோ ஒரு நாள் தெருவில் வால் பக்கமாக இணைந்தபடி இரு பைரவர்கள் என் கண்களில் பட்டனர். அந்த இரு பைரவர்களைப் போலவே இந்த இரண்டு பேருந்துகளையும் மிகவும் கஷ்டப்பட்டு இணைத்துள்ளார்களே என்றும் நினைத்துக் கொள்வதுண்டு.


சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட் அருகே, இன்று ரோட்டில் நடந்து சென்ற என்னை உரசுவது போல என் அருகே தொடர்பேருந்து ஒன்று வந்து நினறது. கும்பல் அதிகமாக இல்லாததால், நானும் அதில் ஏறிக்கொண்டு, ஜன்னல் பக்கமாக ஒரு இருக்கையில் காற்று நன்றாக வரும்படி அமர்ந்து கொண்டேன்.

அந்தப் பேருந்து பொன்மலைப்பட்டியிலிருந்து துவாக்குடி வரை செல்வதாக அறிந்து கொண்டேன். காற்றாட துவாக்குடி வரை போய்விட்டு இதே பேருந்தில் திரும்ப வந்து விட்டால், வீட்டில் மின் தடையும் நீங்கி விடும். பாதி விடுமுறையை பஸ்ஸிலும், மீதியை வீட்டிலும் கழித்து விடலாம் என்று கணக்குப் போட்டு பஸ் டிக்கெட் வாங்கிக் கொண்டேன். 

வெறும் காற்று வாங்க வேண்டி, காசு கொடுத்துப் பயணமா, என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்வது? மின் வெட்டுச் சமயங்களில் சாமான்ய மனிதனின் பிழைப்பும் இன்று நாய்ப் பிழைப்பாகத்தானே உள்ளது. 

வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது. அடுத்தப் பேருந்து நிறுத்தத்திலேயே இளம் வயதுப் பெண்கள் பலரும் ஏறிக் கொண்டு பேருந்தை கலகலப்பாக்கினர்.

ஒரே மல்லிகை மணம் கமழ ஆரம்பித்தது. எனது பக்கத்து இருக்கையில் ஒரு அழகு தேவதை வந்து அமர்ந்தாள்.
 

“எக்ஸ்க்யூஸ் மீ, ஸார், இந்த பஸ் பீ.ஹெச்.ஈ.எல். வழியாகத் தானே போகிறது?” 

“ஆமாம், நீங்கள் எங்கே போகணும்?”

“ பீ.ஹெச்.ஈ.எல். இல் உள்ள ‘வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ க்கு எட்டு மணிக்குள் போய்ச் சேரணும், ஸார்; தயவுசெய்து ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கோ ஸார்” என்று குழைந்தாள்.

[குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியானேன்.

பல்வேறு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக, பல முறை இவள் போக வேண்டியதாகச் சொல்லும் இடத்திற்கு நான் சென்று வந்துள்ளதால், அது எனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக இருப்பதும், ஒரு விதத்தில் நல்லதாகப் போய் விட்டது]“ஓ...கட்டாயமாகச் சொல்கிறேன். நானும் அங்கே தான் போகிறேன். நீங்கள் என்ன வேலையாக அங்கே போகிறீர்கள்?” 

நான் பாலக்காட்டிலிருந்து வந்துள்ளேன். ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பயின்றுள்ளேன். உலோகப் பற்றவைப்பை சிறப்புப் பாடமாக கற்றுள்ளேன். வெல்டிங் சம்பந்தமாக உலகத்தரம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி எடுக்கப்போகிறேன். இதோ எனக்கு வந்துள்ள அழைப்புக் கடிதம். இன்று முதல் ஒரு மாதம் அந்த ட்ரைனிங் எடுக்கணும். தினமும் வரணும். இன்று முதன் முதலாகப் போவதால், பஸ் ரூட், வழி முதலியன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது”. என்றாள் மலையாளம் கலந்த பாலக்காட்டுத் தமிழில். 

அழைப்புக் கடிதத்தை நோட்டமிட்டேன். பெயர்: அமுதா. வயது: 19, கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை, வெல்டிங் சம்பந்தமாக ட்ரைனிங் எடுக்கப்போகிறாள்.

அவளின் ட்ரைனிங் முடியும் இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளுடன் என்னையும் நான் வெல்டிங் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? முயற்சிப்போம். என்னுள் பலவிதமான எண்ணங்கள் அலை மோதி, மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின.

“இந்த பஸ் நேராக நீங்கள் போக வேண்டிய இடத்துக்குப் போகாது. திருவெறும்பூர் தாண்டியதும் ஒரு மிகப்பெரிய ரவுண்டானா வரும். அதை ‘கணேசா பாயிண்ட்’ என்று சொல்லுவார்கள். அங்கே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து போய்விடலாம்” என்றேன்.

”ஓ. கே. ஸார், ஆட்டோவுக்கு எவ்வளவு பணம் தரும்படியாக இருக்கும்?” என்றாள். 

“நோ ப்ராப்ளம்; நானே ஆட்டோவில் கொண்டு போய் விடுகிறேன். எனக்கும் அந்தப் பக்கம் ஒரு வேலை உள்ளது. நீங்களும் எட்டு மணிக்குள் அங்கு போய்ச் சேர வேண்டுமே! ... அதிருக்கட்டும் ... திருச்சியில் மேலும் ஒரு மாதம் தாங்கள் தங்கி ட்ரைனிங் எடுக்கணுமே, யாராவது சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா? எங்கு தங்கப் போவதாக இருக்கிறீர்கள்?” 

“நேற்று இரவு மட்டும் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ள என் சினேகிதியின் வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தங்கிக் கொண்டேன். இன்று மாலை அவளுடனேயே சென்று வேறு எங்காவது லேடீஸ் ஹாஸ்டல் போன்ற நல்ல பாதுகாப்பான செளகர்யமான இடமாகப் பார்க்கணும் என்று இருக்கிறேன்”. என்றாள்.

என்னுடைய விஸிடிங் கார்டு, வீட்டு விலாசம், செல்போன் நம்பர் முதலியன கொடுத்தேன்.

“எந்த உதவி எப்போது தேவைப் பட்டாலும், உடனே தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என்றேன். 

“தாங்க்யூ ஸார்” என்றபடியே அவற்றை தன் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.

என்னையே முழுவதுமாக அவள் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டது போல உணர்ந்து மகிழ்ந்தேன். ஞாபகமாக அந்த அமுதைப் பொழியும் நிலவின் செல்போன் நம்பரையும் வாங்கி என் செல்போனில் பதிவு செய்து, டெஸ்ட் கால் கொடுத்து, தொடர்பு எண்ணை உறுதிப் படுத்திக் கொண்டேன். 

இன்று இரவு அவளை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் தங்கச் செய்து, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, அசத்த வேண்டும் என மனதிற்குள் திட்டம் தீட்டினேன்.“குமரிப்பெண்ணின் ... உள்ளத்திலே ... குடியிருக்க ... நான் வரவேண்டும் ... குடியிருக்க நான் வருவதென்றால் ... வாடகை என்ன தர வேண்டும்” என்ற அழகான பாடல் பேருந்தில் அப்போது ஒலித்தது, நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது.

அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். என் இந்தக் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன். 

திடீரென குப்பென்று வியர்த்தது எனக்கு. யாரோ என் தோள்பட்டையைத் தட்டுவது போல உணர்ந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். எதிரில் பேருந்து நடத்துனர்,

“துவாக்குடி வந்திடுச்சு, சீக்கரம் இறங்குங்க” என்றார். 

பக்கத்து இருக்கையில் பார்த்தேன். என் அமுதாவைக் காணோம். அப்போ நான் கண்டதெல்லாம் பகல் கனவா? 

தொடர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், நல்ல காற்று வீசியதில் சுகமாகத் தூங்கியுள்ளேன். அருமையான கனவில், அற்புதமான என் அமுதா என்னருகில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறாள். 

கண்களைக் கசக்கிக் கொண்டே, மீண்டும் துவாக்குடியிலிருந்து சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட்டுக்கு ஒரு பஸ் டிக்கெட் வாங்கிக்கொண்டு, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

\
“அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது. 

பெரும்பாலும் காலியான இருக்கைகளுடன் இருந்த அந்தத் தொடர்ப் பேருந்தில், அடுத்த இரண்டாவது ஸ்டாப்பிங்கான திருவெறும்பூரில் பலர் முண்டியடித்து ஏறினர். 

“கொஞ்சம் நகர்ந்து உட்காரய்யா ..... சாமி” எனச் சொல்லி ஒரு காய்கறி வியாபாரக் கிழவி, தன் கூடை மற்றும் மூட்டை முடிச்சுக்களுடன் என் அருகில் அமர்ந்து கொண்டாள். 

அந்தக்கிழவி என்னைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தன் தலையை நீட்டி, வாயில் குதப்பிய வெற்றிலை பாக்குச் சாறை, சாலையில் உமிழ்ந்து விட்டு, என்னையும் ஒரு லுக் விட்டுவிட்டு, தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.

 

“அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.


oooooooo
முற்றும்
ooooooooஇளைஞர்களே!


வாழ்க்கையில் எப்போதுமே கனவு காணுங்கள்.


சிறந்த கல்வி கற்கவும், உயர்ந்த உன்னதமான நிலையை வாழ்க்கையில் அடையவும் எப்போதும் கனவு காணுங்கள்.

இளைஞர்களின் கனவுகள் நனவாகும்போது தான் நம் நாடு வல்லரசாகும்.

இந்தக்கதையில் வரும் இளைஞன் போல் பேருந்தில் தூங்கி பகல் கனவு காணாதீர்கள்.

உங்களின் மிகச்சிறந்த நியாயமான கனவுகளுக்கும், மிகச்சிறப்பான வாழ்க்கைக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.


அன்புடன் vgk

41 comments:

 1. நல்ல கனவு தான் ,ஆனா எனக்கு இப்பிடியான கனவுகள் வருதில்லையே .கனவு காண்பதற்கும் அதிஸ்ரம் வேண்டுமோ )

  ReplyDelete
 2. இப்படி ஒரு கனவு வந்தா நல்லாத்தான் இருக்கும்
  ஆனால் வரணுமே ??
  இதுகெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் போல்
  சூப்பர் கனவு சாரி பதிவு ;)

  ReplyDelete
 3. மீள்பதிவா..ஏற்கெனவே படித்த ஞாபகமும் 'கனவின் மாயா லோகத்திலே' பாடல் போடவில்லையா என்று கமெண்ட் அடித்த நினைவும் இருக்கிறது!

  ReplyDelete
 4. இளைஞர்களின் கனவுகள் நனவாகும்போது தான் நம் நாடு வல்லரசாகும்.


  உண்மைதான் ஐயா.

  ReplyDelete
 5. ஹிஹி.. எல்லாமே தேவை. கனவுகள் இல்லேன்னா கஷ்டம்னு தோணுதே? தூங்காம கனவும் வராதுனு தோணுதே?..:) நல்ல வேளை இளைஞர்களைத் தூங்காதேனு சொன்னீங்க.. எங்கிட்டே இருக்குறதே அது ஒண்ணுதாங்க..

  ReplyDelete
 6. A good story with a message. Very nice, கோபு மாமா.

  ReplyDelete
 7. //சிறந்த கல்வி கற்கவும், உயர்ந்த உன்னதமான நிலையை வாழ்க்கையில் அடையவும் எப்போதும் கனவு காணுங்கள்.இளைஞர்களின் கனவுகள் நனவாகும்போது தான் நம் நாடு வல்லரசாகும்.//
  இளைஞர்களுக்கு மிகச்சிறந்த புத்திமதி ஐயா.

  ReplyDelete
 8. இந்த மாதிரி கனவெல்லாம் வராதே..

  அருமையான கதை

  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 9. //“அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு”// சூப்பர் ;))

  ReplyDelete
 10. நல்லாயிருக்கு கதை.
  ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் போதும் சுவை கூட்டுகிறது.
  பகிர்வுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 11. கனவே ஒரு சிறுகதையாகிப் போனது! யதார்த்தத்தை வழக்கம்போல வழங்கியிருக்கிறீர்கள்!! இனிய பாராட்டுக்கள்!

  ReplyDelete
 12. தமிழ் மணத்தின் எட்டாவது ஓட்டு நானே.

  கொஞ்சநாட்களாகத்தான் ஓட்டுப்போடத்தெரிகிறது.

  நிறைய ஓட்டுப் போட்டுவருகிறேன் தங்களுக்கும். நன்றி.

  ReplyDelete
 13. கனவுகாணுங்கள் என்பதை எப்படி பயனுள்ளதாக்குவது என்று அருமையாய் இனிய கதையில் பொதித்துக்கொடுத்த திறமைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும். //

  அருமையான உவமை. வேடிக்கையான பூச்சி. ஊர்ந்துசெல்வதைப் பார்க்க அலுக்காது.

  ReplyDelete
 15. அழகான பாடல் பேருந்தில் அப்போது ஒலித்தது, நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது.அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். //

  பாட்டு தேர்ந்தெடுத்த ரசனைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. சிறந்த கல்வி கற்கவும், உயர்ந்த உன்னதமான நிலையை வாழ்க்கையில் அடையவும் எப்போதும் கனவு காணுங்கள்.
  இளைஞர்களின் கனவுகள் நனவாகும்போது தான் நம் நாடு வல்லரசாகும்.//

  வல்லரசாக இளைஞர்கள் பங்கேற்கட்டும் திறமையாக்.

  ReplyDelete
 17. கோவைக்கும் இதுபோல பேருந்து விட்டுள்ளனர், ஆனால் சாலைவசதி சரிவர இல்லாததினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்படுகிறது,


  அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  ReplyDelete
 18. :) கதையின் நடை சிறிதும் அயர்ச்சி ஏற்படுத்தாமல் செல்கிறது... இந்த கனவை வச்சி கவிதைகளும், கதைகளும் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன..

  கடைசியில்

  ////அந்தக்கிழவி என்னைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தன் தலையை நீட்டி, வாயில் குதப்பிய வெற்றிலை பாக்குச் சாறை, சாலையில் உமிழ்ந்து விட்டு, என்னையும் ஒரு லுக் விட்டுவிட்டு, தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.///

  அந்த நேரத்தில் அவன் முகம் எப்படி இருக்கும் என்று யோசித்தால் சிரிப்புத்தான் வருகிறது..

  அருமையான கதை வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. கனவு கலைந்தது கூட எனக்கு
  கஷ்டமாய் தெரியவில்லை
  நாகேஷை எதிர்பார்த்திருக்க
  புளிமூட்டை ராமசாமி வந்த கதையாய்
  அந்த கிழவி வந்து உட்கார்ந்ததுதான்
  அதிக சிரிப்பை வரவழைத்துவிட்டது
  பஸ் குறித்த வர்ணிப்பு மிக மிக அருமை
  மிக நல்ல படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. கதையும் நன்று!
  கதையின் கருவும் நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. பகல் கனவை அழகாய்க் கதையாக்கி.. நிஜ தரிசனமும் கொடுத்து விட்டீர்கள்..

  சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும்.

  தொடர் பேருந்தில் பின் பகுதியில் நின்றால் பேருந்துக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பிரமை வரும்.

  ReplyDelete
 22. நல்ல வேளை தூக்கத்தில் கனவு. விழித்து இருக்கும்போதே சிலர் கனவு காண்பதால் விளைவுகள் சிலசமயம் எதிர்மறையாக மாறுவது உண்டு. கனவிலிருந்து ஒரு கதை என்பதைவிட ஒரு படிப்பினை என்பதே சரி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. சிந்து நதியின் மிசை நிலவினிலே,
  சேர நன்நாட்டிளம்பெண்களுடனே....'
  பாரதியின் கனவுகூட ஞாபகம் வருது சார். கதையின் ஓட்டம் மிகச்சிறப்பாக இருக்கிறது. கனவு மெய்ப்பட்டு வெல்டிங் வெட்டிங் ஆக வேண்டும்.
  அதற்கு ஹீரோவிற்கு அதிர்ஷ்டம் வேண்டும்.

  ReplyDelete
 24. ஆண்டிக்ளைமாக்ஸ் மாதிரி இது பாட்டிக்ளைமாக்ஸ். வழக்கம்போலவே சிரிப்பிற்கு கியாரண்டி. நல்ல கதை சார்.

  ReplyDelete
 25. இந்தக் கனவுக் காதல் கதைக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய கருத்துக்களைக்கூறி, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கியுள்ள என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 26. கனவே சிறுகதையா? அதுவும் நல்லாதானிருக்கு.

  ReplyDelete
 27. அட பாவமே! அமுதா கனவுளதான் வந்தாளா?
  கடைசியில் பாட்டி வந்த நிலையில் கதாநாயகனின் நிலை சிரிப்பிற்குரிய பரிதவிப்புதான்.

  திருச்சியின் பஸ் ஸ்டாப்புகளையும் வரிசையாக சொல்லிவிட்டீர்கள்.

  கதையும் கருத்தும் அருமை

  ReplyDelete
 28. கனவு வந்தாலும் இப்படிப்பட்ட கனவு வரவேணும்.

  ReplyDelete
 29. இனெ அடிக்கடி கனவு காணுங்க. எங்களுக்கும் சுவையான கதைகள் கிடைக்கும்

  ReplyDelete
 30. இளவட்டங்களுக்கு இப்படித்தான் கனவு வரும்.

  நல்லவேளை தமிழ் சினிமா மாதிரி மரத்தை சுத்தி டூயட் பாடாம இருந்தாங்களே.

  ReplyDelete
 31. ஏனுங்க ஒருக்கா போட்ட கதய மருக்கா மருக்கா போடுறீங்க. ஒன்னியுமே வெளங்கிகிட ஏலலை.

  ReplyDelete
 32. ஏனுங்க ஒருக்கா போட்ட கதய மருக்கா மருக்கா போடுறீங்க. ஒன்னியுமே வெளங்கிகிட ஏலலை.

  ReplyDelete
  Replies
  1. mru October 12, 2015 at 9:42 AM

   //ஏனுங்க ஒருக்கா போட்ட கதய மருக்கா மருக்கா போடுறீங்க. ஒன்னியுமே வெளங்கிகிட ஏலலை.//

   ஒருசில குறிப்பிட்ட காரணங்களால் சில பதிவுகள் மட்டும் மீள் பதிவுகளாக மீண்டும் வெளியிடப்பட்டிருக்கும். மொத்தமுள்ள 750 பதிவுகளில் சுமார் 100 பதிவுகள் வரை இதுபோல மீண்டும் வெளியிடப்பட்டிருக்கும்.

   விளங்காவிட்டாலும், இதையெல்லாம் கண்டுக்காம, கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்காமல், பேசாமல் ஒவ்வொரு பதிவுக்கும், பதிவுக்கு சம்பந்தமுள்ளதாக, சற்றே வித்யாசமாக, ஏதேனும் சில வரிகள் பின்னூட்டமாகக் கொடுத்துக்கொண்டே போய்க்கிட்டு இருக்கவும். :)

   அன்புடன் குருஜி.

   Delete
 33. பகல்ல தூங்கினா அமுதைப்பொழிய அமுதா பாட்டிதான் வருவாங்க. நல்ல எழுத்தாக்கம்

  ReplyDelete
 34. நெற்றிக் கண் படத்துல ரஜினிய தேடி வந்த 'மிஸ் ஆஷா" மாதிரி இருக்கே...பாவம் நம்ப ஹீரோ..

  ReplyDelete
 35. பகல் கனவு ப்லிக்கவில்லையோ?

  ReplyDelete
 36. அடடா என்ன சுவாரசியமான பகல் கனவு.. கரண்ட் கட் டயத்துல இதுபோல பேரூந்து பயணம் சுகம்தான் இலவச இணைப்பாக பகல் கனவு வேற. ஆனா அமுதா பாட்டிதானே பக்கத்துல வறாங்க.. இது கொடுமை...

  ReplyDelete