என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 7 ஜனவரி, 2011

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா ? [பகுதி 1]

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். நமக்குப் பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும், அதன் கஷ்டம்?

பற்களினால் படாதபாடுபட்ட பஞ்சாமியை உங்களுக்குத் தெரியுமா? தெரியா விட்டாலும் பரவாயில்லை. இந்தக்கதையைப் படித்து முடிக்கும் போது ஓரளவுக்குக்காவது தெரிந்து கொண்டு விடுவீர்கள். இதைப்படிக்கும் உங்களில் எவ்வளவோ பஞ்சாமிகள் பஞ்சமின்றி இருக்கக்கூடும். உங்களைப் பற்றிய உண்மைக் கதையை எழுதிவிட்டதாக யாரும் கோபப்பட வேண்டாம்.

பஞ்சாமிக்கு ஆஜானுபாகுவான உடம்பு. நல்ல உயரம், தடிமனான உடல்வாகு, அதற்கேற்றபடி, கைகள், கால்கள், முகம், வாய் மட்டுமல்ல, நல்ல எடுப்பான பற்களும் கூட. அவர் வாயைத் திறக்காமலேயே கூட நாம் அவரின் பற்களை தரிஸிக்க முடியும். பற்களின் வளர்ச்சியில் அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம். அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்.

அவருடைய மிகப்பெரிய பற்கள் சில துணி துவைக்கும் பாறாங்கற்களை நினைவு படுத்தும். ஒன்றில் துணியைக் கசக்கிப்பிழிந்து வைக்கலாம். மற்றொன்றில் துணியையே அடித்துத் துவைக்கலாம் போல அருமையாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும்.

ஆலங்குச்சி, வேலம் குச்சி, அடுப்புச் சாம்பல் முதலியவற்றில் ஆரம்பித்து பயோரியா, நஞ்சன்கூடு, கருவேலப்பட்டை, ’பாடாவதி பல்பொடி’ என்றும் ஒன்று உண்டு - அது வரையிலும் அனைத்தையும் உபயோகித்து, பிறகு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய எல்லா நாட்டு மக்களும் தேய்ப்பதாக பிரபலபமாக விளம்பரப்படுத்திய அந்தத் தித்தித்து வழியும் ரோஸ் கலர் பற்பொடி வரை உபயோகித்து ஓய்ந்தவர் தான் நம் பஞ்சாமி. ஒரு காலக்கட்டத்தில் நெல் உமியுடன் உப்பு, கிராம்பு, கற்பூரம் முதலியன போட்டு வறுத்து அரைத்து உமிக்கரிப் பல்பொடி என்ற தன் சொந்தத் தயாரிப்பிலும் தேய்த்துப் பார்த்தவர்.

வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் ஆசாமியானதால் பற்கள் யாவும் பழுப்பேறி ஒரு வித ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிக்கும். டீ.வி. விளம்பரங்களில் வரும் அந்த முத்துப்பல்லழகி போல ஆக வேண்டும் என்று விரும்பி பஞ்சாமியும் இதுவரை தேய்த்துப் பார்க்காத பற்பசைகளே இல்லையெனச் சொல்லலாம்.

சொட்டுத்தண்ணி விட்டால் சட்டிச்சாந்து வழிக்கலாம் போல அட்டைக் கருப்பாக இருக்கும் நானே, அந்தக் காலத்தில் டீ.வி. விளம்பரத்தைப் பார்த்து, இண்டர் நேஷனல் லக்ஸ் தேய்த்துப் பார்த்தவன் தான், சினிமா நடிகை ஸ்ரீதேவி போல அழகாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில்.

விளம்பரத்தில் வருவதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதைப் புரிந்து கொள்வதற்குள் நானே நூற்றுக்கணக்கான சோப்புகள் வாங்கி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவ்வாறு ஆலங்குச்சியில் ஆரம்பித்து, நவ நாகரீகப் பற்பசைகள் வரை அனைத்தையும் உபயோகித்துப் பார்த்து விட்ட பஞ்சாமியின் முப்பத்திரண்டு பற்களும் நேற்று வரை ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் ஒரேயடியாக பாசம் பிடித்து ஒன்றுடன் ஒன்று மிகவும் ஒட்டுறவாகத் தான் இருந்து வந்தன.

அவருடன் நெருக்கமாகப் பழகிய ஒரு சிலர் அவர் வாயிலிருந்து ஒரு வித துர் நாற்றம் அடிப்பதாகச் சொன்னதும் அவரால் அதை நம்பவே முடியவில்லை. (சாக்கடை நாற்றம் அந்த சாக்கடைக்குத் தெரியாது என்பது போல).

பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே அவர் வாயில் அடித்த நாற்றத்தில், ஒரு நாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து, பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கண்டிப்புடன் சொல்லி விட்டாள்: “இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”.

பல்லு போய் தாத்தாவான பிறகு உன் பக்கத்தில் வந்து தான் என்ன லாபம், வராமல் இருந்து தான் என்ன நஷ்டம் எனக் கேட்க வேண்டும் போலத் தொன்றியது பஞ்சாமிக்கு. இருந்தும் வாயை மூடி மெளனமாக இருந்து விட்டார். பிரச்சனைக்குரிய வாய் துர்நாற்றம் மேலும் பரவாமல் இருக்கவோ என்னவோ!

தொடரும்

29 கருத்துகள்:

 1. வாயைத் திறந்து பதில் சொல்லவே பயமாயிருக்கு கோபு சார்.

  நல்ல ஹாஸ்யம் கலந்த சரள்மான நடை.

  வலைப்பூவை ஒரு கலக்குக் கலக்குங்க.

  பதிலளிநீக்கு
 2. நகைச்சுவை போல ஒன்று இல்லாவிட்டால்.. நினைக்கவே பயமா இருக்கு.
  அடுத்த பார்ட் எப்ப?

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள சுந்தர்ஜி சார்,
  தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

  கைவசம் இருக்கும் சரக்குகளை சந்தைக்குக் கொண்டு வர ஏனோ ஒரு தயக்கம் இருந்தது.

  தங்களின் பாராட்டு என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தியுள்ளது. இனி கலக்கிடுவேன்.

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள ரிஷபன் சார்,

  தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  இதன் தொடர்ச்சி அடுத்த ஒரு வாரத்திற்கு தினமும் வெளியிட முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. இதைப்படிக்கும் உங்களில் எவ்வளவோ பஞ்சாமிகள் பஞ்சமின்றி இருக்கக்கூடும். உங்களைப் பற்றிய உண்மைக் கதையை எழுதிவிட்டதாக யாரும் கோபப்பட வேண்டாம்./

  எங்களைப்பற்றிய ஏராளமான உண்மைகளை தாராளமாக
  பல் .. பல்..பல்கலைக்கழகமாக வெளிப்படுத்தியதற்குக் கடுமையான கண்டங்கள்..

  இப்படிக்கு

  பல்லைக்கடித்தவாறு ..
  பஞ்சாமியின் உறவினர்கள்..

  பதிலளிநீக்கு
 6. நல்ல எடுப்பான பற்களும் கூட. அவர் வாயைத் திறக்காமலேயே கூட நாம் அவரின் பற்களை தரிஸிக்க முடியும். பற்களின் வளர்ச்சியில் அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம். அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்./

  எத்தனை வசதியான , பொறாமைப்படும் வகையில் , எடுப்பாய் ,பயனுள்ள வகையில் பல்..பல்.. அமைப்பு !

  பதிலளிநீக்கு
 7. நல்ல எடுப்பான பற்களும் கூட. அவர் வாயைத் திறக்காமலேயே கூட நாம் அவரின் பற்களை தரிஸிக்க முடியும். பற்களின் வளர்ச்சியில் அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம். அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்./

  எத்தனை வசதியான , பொறாமைப்படும் வகையில் , எடுப்பாய் ,பயனுள்ள வகையில் பல்..பல்.. அமைப்பு !

  பதிலளிநீக்கு
 8. இராஜராஜேஸ்வரி said...
  இதைப்படிக்கும் உங்களில் எவ்வளவோ பஞ்சாமிகள் பஞ்சமின்றி இருக்கக்கூடும். உங்களைப் பற்றிய உண்மைக் கதையை எழுதிவிட்டதாக யாரும் கோபப்பட வேண்டாம்./

  எங்களைப்பற்றிய ஏராளமான உண்மைகளை தாராளமாக
  பல் .. பல்..பல்கலைக்கழகமாக வெளிப்படுத்தியதற்குக் கடுமையான கண்டங்கள்..

  இப்படிக்கு

  பல்லைக்கடித்தவாறு ..
  பஞ்சாமியின் உறவினர்கள்..//

  ஆஹா!

  அருமையான கருத்துக்கள் ஆவேசத்துடன் எழுதியுள்ள மகிழ்ச்சியளிக்கிறது.

  இருந்தாலும் இவ்வளவு ருத்ர கோபம் கூடாது உங்களுக்கு.

  அன்பான வருகைக்கும், ‘பல்’வேறு சிறப்பான கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 9. இராஜராஜேஸ்வரி said...
  நல்ல எடுப்பான பற்களும் கூட. அவர் வாயைத் திறக்காமலேயே கூட நாம் அவரின் பற்களை தரிஸிக்க முடியும். பற்களின் வளர்ச்சியில் அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம். அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்./

  எத்தனை வசதியான , பொறாமைப்படும் வகையில் , எடுப்பாய் ,பயனுள்ள வகையில் பல்..பல்.. அமைப்பு !//

  மீள் வருகைக்கு மீண்டும் நன்றிங்கோ! :))))) vgk

  பதிலளிநீக்கு
 10. ஆரம்பத்திலேயே சிரித்த சிரிப்பில் எனக்கு வயிற்று வலியே வந்துவிட்டது.

  //பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே அவர் வாயில் அடித்த நாற்றத்தில், ஒரு நாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து, பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கண்டிப்புடன் சொல்லி விட்டாள்: “இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”//மைகோட் என்னா ஒரு நகைச்சுவை அண்ணா.அடுத்த தொடர் படிக்கலாமா என யோசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. //ஆரம்பத்திலேயே சிரித்த சிரிப்பில் எனக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. //

  அடடா, அப்படியா! சாரீங்க.... தங்களின் வயிற்றுவலிக்கு நான் ஒரு காரணமாகி விட்டேனே!! ;)))))

  ****”இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”****

  //ஓ .. மைகாட் .... என்னா ஒரு நகைச்சுவை அண்ணா.//

  எழுதும் போது என்னையே மிகவும் சிரிக்க வைத்த வரிகளைத் தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளது, எனக்கும் மகிழ்வளிக்கிறது, சகோதரி.

  நன்றி.... நன்றி.....

  //அடுத்த தொடர் படிக்கலாமா என யோசிக்கிறேன்.//

  இந்தத்தொடரில் நடுவில் ஓர் பகுதி மட்டும் எங்கோ காணாமல் போய் உள்ளது. அதை தாங்கள் என் மீள் பதிவுக்குப்போய் படியுங்கோ, ப்ளீஸ்.

  இணைப்பு இதோ:
  http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html

  அன்புடன்,
  VGK

  பதிலளிநீக்கு
 12. அன்பின் வை.கோ

  அருமையான கதை - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா - கதை நன்று - எட்டு பகுதிகளா ? பிரமிக்க வைக்கிறது - தங்களீன் வலைத்தளத்தில் முதல் பதிவா ? நம்ப முடியவில்லையே ! தூள் கெளப்பிட்டீங்க போங்க - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. பல் புராணம் மகாபாரதமாய் நீளும் போல் இருக்கே. ஆனாலும் பல் நாற்றம் அளவிற்கு நீளாது என்று நம்புகிறேன். பல் பஞ்சாமி வாழ்க.

  பதிலளிநீக்கு
 14. //சொட்டுத்தண்ணி விட்டால் சட்டிச்சாந்து வழிக்கலாம் போல அட்டைக் கருப்பாக இருக்கும் நானே,//

  அட, அட, அட என்ன ஒரு உதாரணம். ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் கோபு அண்ணா. இனிமேல் என் பேத்தியுடன் படிக்கும் சித்தார்த்தின் அம்மா, அப்பா (இருவரும் பல் டாக்டர்கள்) இருவரையும் பார்க்கும் போது அசம்பாவிதமாக இந்தக் கதை ஞாபகம் வந்து சிரித்து விட்டு, அவர்கள் என்ன என்று கேட்கும் போது அசட்டு சிரிப்பு தான் சிரிக்கப் போகிறேன்.

  பதிலளிநீக்கு
 15. ஹஹஹஹ் பஞ்சாமி பல் வைச்செ தில்லா ஓட்டிடுவார் போல......

  பதிலளிநீக்கு
 16. எப்படி இதற்கான பின்னூட்டம் வராமல் போனது என்று தெரியவில்லை சார்....

  அழகான உதாரணங்கள்....பல் வலி நீள்வது போல்.....பஞ்சாமியின் பல் புராணம்!! நல்ல நகைச்சுவை தொடர்....

  பதிலளிநீக்கு
 17. பற்கள் நமக்கு எவ்ளவு முக்கியமான உறுப்பு. அதுக்கு ஒரு பிரச்சினைனா ரொம்ப கஷ்டம்தான். இப் ப இந்த கதை படிச்சு சிரிச்சு சிரிச்சு என் பல் எல்லாம் சுளிக்கிடுச்சே.

  பதிலளிநீக்கு
 18. அன்பின் அருமை வை.கோ

  ஏற்கனவே ஒரு மறுமொழி உள்ளது ,

  பாராட்டுகள்
  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 19. பஞ்சாமியின் அறிமுகமே அசத்தல். அவருடைய மிகப்பெரிய பற்களுக்கு துணி துவைக்கும் கல்லைக் குறிப்பிடுவது வஞ்சப்புகழ்ச்சியணி போல் ரசிக்கவைக்கிறது.

  பல வருடங்களுக்கு முன் வானொலிப்பெட்டிகள் வாயிலாய்க் கேட்டு ரசித்த கோபால் பல்பொடி விளம்பரத்தை கதையில் நுழைத்திருப்பது ரசனை. விக்கோ வஜ்ரதந்தி, கோபால் பல்பொடி என்று பெயரைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

  கிராமங்களில் பற்பசை பயன்படுத்தாதவர்கள் பல் துலக்க சாம்பல் தவிர வேறு என்னென்ன பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று தங்கள் மூலம்தான் அறிந்து வியந்தேன்.

  கதைக்குள் விளம்பரம் குறித்த விழிப்புணர்வை நகைச்சுவை மூலமாகப் புகுத்தியிருப்பது சிறப்பு.

  தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும், சொட்டுத் தண்ணீர் விட்டால் சட்டிச்சாந்து வழிக்கலாம், சாக்கடை நாற்றம் அந்த சாக்கடைக்குத் தெரியாது போன்ற சொலவடைகளைப் பயன்படுத்தியமையும் ரசிப்புக்குரியது. மொத்தத்தில் ஆரம்பமே அமர்க்களம். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 20. அம்மி சிரிச்சுபோட்டு. தேங்கா துருவர மாதிரி பல்ல நெனச்சு ஒரே சிரிப்பாணி பொத்துகிச்சு
  எங்கூடல நெதக்கும் உமிகரி போட்டுதா பல்லு வெளக்குவோம். அதப்பத்திலா கூட சொல்லிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 21. உள்ளத்தை உருக வைக்கும்
  முன் கதைக்கு நேர் எதிரான கதை
  இயல்பாக சொல்லிப் போவது
  கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 22. போனகதை படிச்சு கனத்துபோன மனதை ரிலாக்ஸ் பண்ணிக்கற மாதிரி நகைச்சுவை கதையா. துணி தவைக்குர கல்லு தேங்கா துருவி ....பாவம் பஞ்சாமியின் மனைவி எப்படித்தான் ( வாசனைய) பொறுத்துக்கறாங்களோ? வேர வழி? விட்டுட்டு ஓடவா முடியும். (ப) கல்லானாலும் கணவனாச்சே.

  பதிலளிநீக்கு
 23. பில்ட் அப்புடன் ஆரம்பிக்கிறப்பவே பஞ்சாமி காமெடி ஹீரோன்னு சொல்லாம சொல்லிடுறீங்களே...அவர் ஒரு பஞ்ச்-ஆசாமின்னு போகப்போக தெரியுமோ...

  பதிலளிநீக்கு
 24. //சொட்டுத்தண்ணி விட்டால் சட்டிச்சாந்து வழிக்கலாம் போல அட்டைக் கருப்பாக இருக்கும் நானே, அந்தக் காலத்தில் டீ.வி. விளம்பரத்தைப் பார்த்து, இண்டர் நேஷனல் லக்ஸ் தேய்த்துப் பார்த்தவன் தான், சினிமா நடிகை ஸ்ரீதேவி போல அழகாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில்.

  விளம்பரத்தில் வருவதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதைப் புரிந்து கொள்வதற்குள் நானே நூற்றுக்கணக்கான சோப்புகள் வாங்கி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
  // இரசித்தேன்! அருமை!

  பதிலளிநீக்கு
 25. கதைக்கு தலைப்பு எங்கேந்து பிடிக்கறீங்க. தலைப்பே சிரிக்க சொல்லுது. வர்ணனைகள் உங்க கற்பனையில் அபாரமா இருக்கு. தேங்கா துருவி. துணி துவைக்கிற கல் என்று உதாரணம் காட்டி அசத்துறீங்க. பல்பொடி உமிகரி பேஸ்ட் என்று எதையுமே விட்டு வைக்கலியே. ஹைலைட் என்னதுன்னா பஞ்சாமியின் மனைவி போட்ட கண்டிஷன்தான. பல் இருக்கும்வரை பக்கத்துலயே வரக்கூடாதுன்னு. பல்லு போன பிறகு பக்கத்தில் வந்தா தான் என்ன வராட்டிதான் என்ன???? போன பதிவு மனதை கலங்க வைத்த சோக கதையென்றால் இந்த பதிவு பல் சுளுக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கும் நகைச்சுவை பதிவு. நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 10, 2016 at 10:21 AM

   //கதைக்கு தலைப்பு எங்கேந்து பிடிக்கறீங்க. தலைப்பே சிரிக்க சொல்லுது.//

   ’ஆலயமணி’ என்ற சினிமாவில் ....

   ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா ..
   கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா ..
   சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா ..
   சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?’

   என்று ஒரு இனிமையான எனக்கு மிகவும் பிடித்த பாடல் உண்டு. அதிலிருந்து, அதே போன்ற சாயலில் இந்தத் தலைப்பை நான் தேர்ந்தெடுத்தேன்.

   //வர்ணனைகள் உங்க கற்பனையில் அபாரமா இருக்கு. தேங்கா துருவி. துணி துவைக்கிற கல் என்று உதாரணம் காட்டி அசத்துறீங்க. பல்பொடி உமிகரி பேஸ்ட் என்று எதையுமே விட்டு வைக்கலியே.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //ஹைலைட் என்னதுன்னா பஞ்சாமியின் மனைவி போட்ட கண்டிஷன்தான. பல் இருக்கும்வரை பக்கத்துலயே வரக்கூடாதுன்னு. பல்லு போன பிறகு பக்கத்தில் வந்தா தான் என்ன வராட்டிதான் என்ன????//

   தங்களின் இந்த தனி ரசிப்புக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். :)))))

   //போன பதிவு மனதை கலங்க வைத்த சோக கதையென்றால் இந்த பதிவு பல் சுளுக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கும் நகைச்சுவை பதிவு. நல்லா இருக்கு.//

   என்னுடைய பெரும்பாலான கதைகளில் நகைச்சுவை கலந்துதான் இருக்கும். தொடர்ந்து படியுங்கோ. மிக்க நன்றி. அன்புடன் VGK

   நீக்கு
 26. //அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்.//

  //அவருடைய மிகப்பெரிய பற்கள் சில துணி துவைக்கும் பாறாங்கற்களை நினைவு படுத்தும். ஒன்றில் துணியைக் கசக்கிப்பிழிந்து வைக்கலாம். மற்றொன்றில் துணியையே அடித்துத் துவைக்கலாம் போல அருமையாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும்.

  கோபூஜி... எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறீங்க. சிரிப்பாணி பொத்துகிச்சி..)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. June 9, 2016 at 1:35 PM

   வாங்கோ முன்னாக்குட்டி, வணக்கம்மா.

   **அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்.**

   **அவருடைய மிகப்பெரிய பற்கள் சில துணி துவைக்கும் பாறாங்கற்களை நினைவு படுத்தும். ஒன்றில் துணியைக் கசக்கிப்பிழிந்து வைக்கலாம். மற்றொன்றில் துணியையே அடித்துத் துவைக்கலாம் போல அருமையாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும்.
   **

   //கோபூஜி... எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறீங்க. சிரிப்பாணி பொத்துகிச்சி..)))//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... உங்களுக்கும் அது இப்போ பொத்துக்கிச்சா .... சந்தோஷம். நன்றி. :)

   நீக்கு