About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, June 21, 2011

மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 2 of 4]

முன்கதை முடிந்த இடம்


நான் உண்டு என் வேலையுண்டு என்று மிகவும் சங்கோஜியான என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்கள். ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.

=========================

என்னை விரும்பியவள் சராசரி அழகென்றோ, சுமாரான நிறமென்றோ கூட சொல்லமுடியாதவள். இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள்.  எப்போதும் சிரித்த முகம் அவளுக்கு.  அவள் சிரிக்கும் போது மேல் வரிசைப்பற்கள் அனைத்தும் சற்று தூக்கலாகத் தெரியும். எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப்பழகும் பெண் அவள்.  

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வலுவில் வந்து பேசிப்பழகி, என் கூச்ச சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, எப்படிப்பழக வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என எனக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தவளும் கூட.. 

என் வாலிப வயதில், முதன்முதலாக என்னுடன் மிகவும் உரிமையுடன் பழக ஆரம்பித்தவள் என்பதால், அவளுடன் கடைசிவரை நல்லதொரு நட்புடன் பழகவே, நானும் ஆசைப்பட்டேன் என்பதையும் மறுப்பதற்கில்லை. 

அன்று ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்தவர்களுடன் ஆறு மாத குழந்தையொன்று கொழுகொழுவென்று வந்திருந்தது. நான் என் மடியில் வைத்து அதைக்கொஞ்சிக் கொண்டிருந்த போது, அவள் அதை என்னிடமிருந்து வெடுக்கென்று தூக்கிச்சென்று கொஞ்சுவதும், அதை என் எதிரிலேயே பலவிதமாக முத்தம் கொடுப்பதும், பிறகு அந்தக்குழந்தையை என்னிடம் திரும்பத்தருவது போல என்னையே உரசுவதுமாக ஏதேதோ கிளுகிளுப்பை ஏற்படுத்தி வந்தாள். 

நான் என் உணர்ச்சிகளை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு, அவளிடம் மிகவும் உஷாராகவே பழகி வந்தேன். அவள் ஒரு வெகுளிப்பெண் என்று நினைத்து அவள் செயல்களை கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் விட்டு வரலானேன்.

நான் என் கற்பனையில் விரும்பிய பெண் பக்கத்துத் தெருவிலிருந்து, என் பக்கத்து வீட்டுக்கு ஏதோ உறவென்று சொல்லி அவ்வப்போது வந்து செல்பவள். கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம்.

அவளைப் பார்க்கும் யாருக்குமே பார்த்துக் கொண்டே இருக்கத்தோன்றும். ஆனால் அவள் யாரையும் லட்சியம் செய்து பார்க்கவோ, பேசவோ நேரமற்றவள் போல அலட்சியமாகத்தோன்றி மறைந்து விடுவாள். அவள் நன்றாக சைக்கிள் ஓட்டுவாள்.

ஒரு நாள் அவள் ஸ்கூட்டர் ஓட்டியும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது. மற்றொரு நாள் ‘L' போர்டு போட்ட ஹெரால்ட் காரை ரோட்டில் மிகவும் மெதுவாக ஓட்டிச்சென்று கொண்டிருந்தாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே அவள் எனக்குக் காட்சி அளித்து வந்தாள். தினமும் ஒரு கார் வீதம் ஓட்டிப்பழகிய அவள், கார் புரோக்கர் ஒருவரின் மகள் என்று, பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன்.

இத்தகைய அழகான, அறிவாளியான, துணிச்சலான பெண் மனைவியாக அமைந்தால் எப்படி இருக்கும் என அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன். 

இந்தக்காலம் போல அவளிடம் நேரிடையாகவே பேசவோ அல்லது நண்பர்கள் உறவினர்கள் மூலம் முயற்சிசெய்து பார்க்கவோ, அன்று எனக்கு ஏதோ ஒருவிதத்தயக்கம்.  

எனக்கு மட்டுமல்ல, அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்த இளம் வயதினர் எல்லோருக்குமே அநேகமாக இப்படித்தான். சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம். நம் இஷ்டப்படியெல்லாம் சுதந்திரமாக செயல்பட்டு விட முடியாது. 

பெரும்பாலும் பெரியோர்களாகப் பார்த்து செய்து வைக்கும் Arranged Marriages மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நம் விருப்பத்தைக் கேட்கவும் மாட்டார்கள். சொல்லவும் நமக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். 

ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது.

ஒரு நாள் தீபாவளிப்பண்டிகையன்று, கோயிலுக்குச்சென்று நான் திரும்பி வரும்போது, தெருவில் சிறுவர்கள், தொடர்ச்சியாக நிறைய பட்டாசுச்சரத்தை கொளுத்தியிருந்ததால், அங்கு அருகிலேயே கதவு திறந்திருந்த ஒரு வீட்டு வாசலில் சற்றே ஒதுங்கி நின்றேன்.  அந்த வீட்டின் உள்ளிருந்து, என்னை உள்ளே வரச்சொல்லி அழைப்பு வந்தது. உள்ளே போன பிறகு தான் தெரிந்தது, அது அந்த அழகுப்பதுமையின் [கொலுசு+ஜிமிக்கியின்] வீடு என்பது. என்னை உள்ளே அழைத்தது அவளின் அப்பாவும், அம்மாவும் தான். 

என் வீட்டுக்கு பக்கத்து வீட்டின் உறவினர் என்பதால் எனக்கு அவர்களையும், அவர்களுக்கு என்னையும் ஒருவரையொருவர் ஏற்கனவே பார்த்துள்ள அனுபவம் உண்டு. ஆனால் அதிகம் பேசிக்கொண்டது இல்லை.

உள்ளிருந்து எட்டிப்பார்த்த அழகுப்பதுமையிடம், அவள் அம்மா தன் கையை உருட்டி ஏதோ ஜாடை காட்ட, அந்த அழகுப்பதுமை காலில் கொலுசு ஒலிக்க, காதில் எனக்கு மிகவும் பிடித்த ஜிமிக்கி தொங்க, என்னிடம் நெருங்கி வந்து, ரவாலாடு ஒன்றை என் கையில் கொடுத்துப்போனது. இருகரங்களையும் ஒன்றாகக்குவித்து நீட்டி மிகவும் பெளவ்யமாக கோவில் பிரஸாதம் போல வாங்கிக்கொண்டேன்.

எப்போதும் அவளை பாவாடை, சட்டை, தாவணியில் மட்டுமே பார்த்திருந்த நான், இன்று தீபாவளிக்காக அணிந்திருக்கும் புத்தம் புதிய புடவையில் பார்க்க நேர்ந்தது.  கிளிப்பச்சைக்கலரில், உடலெங்கும் மின்னும் ஏதொவொரு புது டிசைனில், டிவிங்கிள் நைலான் என்ற பெயரில் அந்தக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புடவையில் ஜொலிக்கக்கண்டேன்.  பைங்கிளி ஒன்றை அதன் கூட்டுக்குள் நானும்  புகுந்து பார்த்தப் பரவசம் எனக்குள் ஏற்பட்டது. 

சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது. 

அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது.  

துளித்துளியாகப்புட்டு, ரஸித்து, ருசித்து கீழே சிந்தாமல் சிதறாமல் டேஸ்ட் செய்ய வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அந்த அழகுச்சிலை மீண்டும் என்னருகில் வந்து ஒரு எவர்சில்வர் தட்டில் மிக்ஸரும், அருகேயிருந்த ஸ்டூலில் குடிக்கத் தண்ணீரும், வைத்து விட்டு நகர்ந்த போது, நான் “ரொம்ப தாங்க்ஸ்” என்று கூட்டிமுழுங்கி வார்த்தைகளை வெளிக்கொணர்ந்து, மென்மையாகச் சொன்னேன். 

நான் அவளுடன் முதன் முதலாகப்பேசிய “ரொம்ப தாங்க்ஸ்” என்ற இரண்டே இரண்டு வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததோ விழவில்லையோ என சந்தேகம் ஏற்படும்படி, வாசலில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர சப்தம் என்னை மிகவும் வெறுப்பேற்றியது. 

தின்ன ரவாலாடும் மிக்ஸரும், குடிக்கத்தண்ணீர் ஒரு மாம்பழச்சொம்பில் கொடுத்ததுடன், தன் கடமை முடிந்து விட்டதாக நினைத்த, அந்த தங்கப்பதுமை எங்கோ உள்ளே போய் மறைந்து விட்டது. 

என்னுடைய உத்யோகம், சம்பள விபரங்கள், ஆபீஸ் வேலைகள், வேலை நேரங்கள், கேண்டீன் வசதிகள், போக்குவரத்து பஸ் வசதிகள் முதலியனவற்றை பற்றிய பல கேள்விகளை எழுப்பி, அந்த அவளின் தாய் தந்தையர்கள் என்னிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தனர். எதற்காக இதெல்லாம் என்னிடம் இவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்கிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. 

ஒரு வேளை என் வீட்டுக்கு சம்பந்தம் பேச வரலாம் என்று நினைக்கிறார்களோ என்ற சபலமும் ஏற்பட்டது. என் மனதில் தோன்றும் இந்தச் சபலத்தையும், ஆவலையும்,  இனிய கனவுகளையும் தூள் தூளாக உடைப்பது போல வாசலில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.  

அன்று தீபாவளிப் பண்டிகையாகவும், நான் அணிந்திருப்பது புது பேண்ட், சட்டை என்பதாலும், வயதில் பெரியவர்களான அவர்களை நமஸ்கரித்தேன். (தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இதுபோல பெரியோர்கள் காலில் விழுந்து கும்பிட்டு நமஸ்கரிப்பது அப்போதெல்லாம் மிகச்சாதாரண வழக்கம் தான்) 

“அதி சீக்ரமேவ விவாஹப்ப்ராப்திரஸ்து” (கூடிய சீக்கரத்தில் உனக்கு கல்யாணம் ஆகும்படியான சந்தர்ப்பம் அமையட்டும்) என்று அவரும், “அடுத்த தீபாவளி தலைதீபாவளியாக இருக்கட்டும்” என்று அந்த அம்மாவும் என்னை ஆசீர்வதித்தனர். 

இதைக்கேட்ட என் மனதில் மீண்டும் ஒரு ஜிலுஜிலுப்பும், பரவசமும் ஏற்பட்டது.  பதிலுக்கு நீயும் அவரிடம் “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது.

அவர்களிடம் விடைபெற்று, ஒரு வழியாக  என் வீட்டுக்குப் புறப்படலானேன்.  நான் அவர்கள் வீட்டை விட்டுப் புறப்படும் வரை அந்த என் கற்பனைக் கதாநாயகி , கொஞ்சமும் காட்சி தரவே இல்லை.

அதன் பிறகும், பல மாதங்களுக்கு, அந்த தங்கச்சிலையை நான் அதிகமாகப் பார்க்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. அவள் கையால் அன்று என் கையில் கொடுத்த ரவாலாடு மட்டும் என் நினைவுகளில் எப்போதும் இருந்து வந்து, மனதுக்கு இதமான இனிமையைக் கொடுத்து வந்தது.

இதற்கிடையில், தூரத்துச் சொந்தம் என்று சொல்லி, எனக்குப் பெண் கொடுக்க பலரும் என் தந்தையை முற்றுகையிட்டு வந்தனர். எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்ற பெண்ணாகப் பார்த்து, எனக்கு 21 முடிந்து 22 வயதாகும் போதே அவசரமாக மணம் முடித்து வைத்தனர் என் பெற்றோர்கள். 

நாம் என்ன அழகில் பெரிய மன்மதனா! அல்லது செல்வச்செழுப்பில் தான் பெரிய குபேரனா! நம் இஷ்டம் போல பெண் தேட! என்று என் மனதை நானே சமாதானம் செய்து கொள்ள மட்டுமே முடிந்தது அன்று.  

”இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற பாடல் ஒலிக்கும் போதெல்லாம் என்னை அந்த வரிகள் என்னென்னவோ சிந்திக்க வைக்கும்.

எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.

ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. 


தொடரும்   

64 comments:

  1. அடடா கதையின் இரண்டாம் பகுதியும் மிகவும் சுவாரசியமாகவும், அடுத்தப் பகுதிக்கான ஆவலைத் தூண்டும் விதமாய் அமைந்துவிட்டது.

    கதை நடந்த காலகட்டத்திற்கும் இப்போதுள்ள நிலைக்கும் இருக்கும் வித்தியாசத்தினை அவ்வப்போது சொல்லிப் போகும் கதையின் பாங்கு அமர்க்களம்.

    தொடருங்கள்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே அவள் எனக்குக் காட்சி அளித்து வந்தாள்.//

    அப்படிப்பட்ட பெண்ணை மனம் மறக்கக் கூடாதுதானே.

    ReplyDelete
  3. “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது.//

    உள்மனம் சொன்னதைக் கேட்டிருந்தால் ......

    ReplyDelete
  4. கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம்.//

    என்ன ரசனை. என்ன கவனிப்பு. அருமை. அருமை

    ReplyDelete
  5. பைங்கிளி ஒன்றை அதன் கூட்டுக்குள் நானும் புகுந்து பார்த்தப் பரவசம் எனக்குள் ஏற்பட்டது. //

    கதையில் புகுந்து பார்த்த பரவசம் எங்களுக்கு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. ஐயா... கதை ரொம்ப சுவாரஸ்யம்... சூப்பர்.

    ReplyDelete
  7. எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.//

    வாழ்த்துக்கள் அய்யா.....

    ReplyDelete
  8. ம்ம்ம்ம் உங்க கூடவே நடந்து வந்துட்டு இருக்கிற ஒரு ஃபீலிங்.....!!!

    ReplyDelete
  9. இந்த இரண்டாவது பாகம் மிக மிக அருமை ஐயா! மிகவும் சுவையாக எழுதியிருக்கிறீர்கள்! ஒரு கிராமத்து வாழ்வியல் அப்படியே மனக்கண்ணில் வந்து , இதயத்தில் பதிந்து விட்டது!

    நீங்கள் நேசித்த அந்த கார் ப்ரோக்கரின் மகள் பற்றிய வருணிப்பு, ஒருபக்கம் சுவையாக இருந்தாலும், மறுபக்கம் உங்கள் மனதில் தோன்றிய காதலும், அதன் ஆழமும், அது கைகூடாமல் போய்விட்டதே என எண்ணும் போது, உங்கள் மீதான எனது அன்பு மேலும் அதிகரிக்கிறது!

    உங்கள் மீது ஒரு பரிவும் ஏற்படுகிறது!னீங்கள் அவர்களது வீட்டுக்குப் போயிருந்த போது, அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, வாசலில் வெடித்த பட்டாசு, உங்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் எங்களுக்கும் கடுப்பை ஏற்படுத்துகிறது!

    மனசு நிறைய அவ்வளவு ஆசைகளை வைத்துக்கொண்டு ஏன் சொல்லாமல் விட்டீர்கள்? அந்தக் காலத்து சூழ்நிலை அப்படியா?

    நான் பல பெரியவர்களுடன் பழகி இருக்கிறேன்! ஒவ்வொருவருக்குள்ளும், நிறைவேறாத ஒரு க்காதலின் வலி இருந்துகொண்டே இருக்கிறது!

    இப்படி மனிதர்களை, காலம்பூராகவும் வலியுடன் வாழ வைக்கவா எமது சமூகக் கட்டமைப்பு, வழி சமைக்கிறது?

    இவற்றை எண்ணும் போது எமது சமூகக் கட்டமைப்பு மீது கோபம் வருகிறது!

    மேலும் இச்சிறுகதை, எவரெல்லாம் காதலினால் காயமுற்றனரோ அவர்களுக்கெல்லாம் மருந்தாக அமைந்து, மிக அழகிய சமூகவியல் சிறுகதையாக தோற்றம் பெற்று, எம மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது!

    ReplyDelete
  10. ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது. அடுத்த பகுதியை மிக ஆவலோட எதிர்ப்பார்கிறேன்.

    ReplyDelete
  11. கதையின் இரண்டாம் பகுதியும் மிகவும் சுவாரசியமாகவும், அடுத்தப் பகுதிக்கான ஆவலைத் தூண்டும் விதமாய் உள்ளது..
    நன்றி//..

    ReplyDelete
  12. நல்ல விவரணையுடன் அருமையான
    எழுத்து நடை. படிக்கிறவர்களையும் கூடவே அழைத்துச்செல்லும் தோழமை
    நல்லா இருக்கு. அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  13. மிகவும் அருமையான நடை. கதையை விட்டு கொஞ்சமும் வெளிவர முடியாதபடி செய்துவிட்டது. நன்றி ஐயா

    ReplyDelete
  14. //நாம் என்ன அழகில் பெரிய மன்மதனா! அல்லது செல்வச்செழுப்பில் தான் பெரிய குபேரனா! நம் இஷ்டம் போல பெண் தேட! என்று என் மனதை நானே சமாதானம் செய்து கொள்ள மட்டுமே முடிந்தது அன்று. //

    இன்றும் பலருக்கு தொடரும் யதார்த்தம் ஐயா இது ..
    உங்கள் அந்த கால நண்பர்களில் ஒருவனாய் இருந்த சந்தோசம் தந்தது உங்கள் எழுத்து நன்றி ஐயா

    ReplyDelete
  15. அபிராமியிடம் லட்டு வாங்கிய
    கமலஹாசனைப் போல் உங்கள்
    கதா நாயகன் எனக்கு காட்சி தந்தான்
    வர்ணிப்பு பிரமாதம்

    ReplyDelete
  16. படித்து வருகிறேன் கோபு சார். நன்றாகப் போகிறது.

    ReplyDelete
  17. என்னத்தப் புதுசா சொல்லப் போறேன் கோபு சார்?

    உங்க விரல்ல சரஸ்வதி இஸ் ப்ளேயிங்.

    பசி நேரத்துல ரவாலாடு-பலாச்சுளை-மிக்ஸர்-மாம்பழச் சொம்பு இதெல்லாம் சீக்கிரமா வீட்டுக்குக் கிளப்பி விட்டது.

    அடுத்த பாகத்துல என்னென்ன தாக்குதலோ?

    ReplyDelete
  18. tamail manam 6 to 7
    indli 6 to 7

    //என்னை விரும்பியவள் சராசரி அழகென்றோ, சுமாரான நிறமென்றோ கூட சொல்லமுடியாதவள். இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள்.//

    காதலுக்கு கண்ணில்லை என இதைத்தான் சொல்லுவார்களோ

    ReplyDelete
  19. ///கால்களில் கொலுசுகளும், காதுகளில் ஜிமிக்கிகளுமாக வயது 16 அல்லது 17 இருக்கும் தேவதை. அழகோ அழகு. பளிச்சென்று வசீகரத் தோற்றம். பலாச்சுளை நிறம்.
    அவளைப் பார்க்கும் யாருக்குமே பார்த்துக் கொண்டே இருக்கத்தோன்றும். ///

    வளமான
    வர்ணனையில்
    வசீகரமாய்
    வந்து
    விழும்
    வார்த்தைகள்
    அமர்க்களம் ஐயா

    ReplyDelete
  20. ///சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வலுவில் வந்து பேசிப்பழகி, என் கூச்ச சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, எப்படிப்பழக வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என எனக்கு நாகரீகம் சொல்லிக் கொடுத்தவளும் கூட.. /// கொடுத்து வச்சனீங்க...)))

    ReplyDelete
  21. தொடருறேன்...

    ReplyDelete
  22. //" இருப்பினும் பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாகவே தோற்றம் அளித்தவள்."//

    :))

    //"பலாச்சுளை நிறம்."//

    புதிய வர்ணனை.

    //"டிவிங்கிள் நைலான் என்ற பெயரில் அந்தக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புடவையில் ஜொலிக்கக்கண்டேன்"//

    கேள்விப் பாடாத வகை. புடைவை பெயர் எல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் பல படைப்புகளிலும் அவற்றைப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  23. //இதைக்கேட்ட என் மனதில் மீண்டும் ஒரு ஜிலுஜிலுப்பும், பரவசமும் ஏற்பட்டது. பதிலுக்கு நீயும் அவரிடம் “அதி சீக்கரமேவ நீங்களே எனக்கு மாமனார் மாமியாராகப் பிராப்திரஸ்து” என்று சொல்லச்சொல்லி என் உள்மனம் என்னை நச்சரித்தது.///


    இளமை கொஞ்சி விளையாண்ட காலங்களை கண்முன்னே நிறுத்திய விதம் அருமை ஐயா

    ReplyDelete
  24. ///ஓடி வருகிறது.
    ஓரிரு வருடங்கள் முன்பு திருச்சி மலைவாசல் கடைவீதியில், அந்த நாட்களில் ஓயாமல் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தவளை, நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. ///


    ஆவலை அதிகரிக்க செய்த இடத்தில் இப்படி தொடரும் என்று போட்டுவிட்டிர்களே ஐயா
    சீக்கரமாய் அடுத்த பாகத்தை பதிவிடுங்கள்
    காத்திருக்கிறேன்

    ReplyDelete
  25. "சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது. "

    அட்ட‌காச‌மான‌ வர்ண‌‌னை! பெண்கள்கூட இப்படி கண்டுபிடிப்பார்களா என்பது சந்தேகமே!

    இள‌மையின் வசந்த கால நினைவலைகள் என்றுமே மனதுக்கு ரம்யமானவைதான்!!

    ReplyDelete
  26. இரண்டு பகுதிகளையும் இப்போது தான் வாசித்தேன். பிரமாதமாக செல்கிறது. அந்த கால வாழ்க்கையும் அழகாக விவரித்துள்ளீர்கள்.
    ரவா லாடும், மிக்ஸரும் இப்போதே சாப்பிடும் ஆசையை ஏற்படுத்தியது.
    தொடர்கிறேன் சார்.

    ReplyDelete
  27. இரண்டு பகுதியும் படித்துவிட்டேன் . என்ன ஒரு சுவாரஸ்யம் [பின்ன இருகாத மத்தவா கதையாச்சே ஹா ஹா] அச்சோ அப்புறம் என்னாச்சி. முன்னே நின்ற அம்மணியின் முகம் தங்களின் பக்கம் நின்ற அம்மாவின் முகமும் என் மனக்கண்களில் நிழலாடுகிறது. சீகிரம் அடுத்த கட்டத்தை சொல்லிங்கோ அய்யா..

    ReplyDelete
  28. அருமையான வர்ணனை அய்யா !!
    படிக்கும்போது அப்படியே அந்த தீபாவளி நேரத்தில் /பட்டாசு /ரவ லாடு எல்லாம் அப்படியே live telecast பார்த்த மாதிரி இருக்கு ,
    அந்த twinkle நைலக்ஸ் எங்கம்மா கூட ஆகாய வர்ணத்தில் வச்சிருந்தாங்க .
    எப்ப அடுத்த பார்ட் வரும்னு ஆவலா இருக்கு .

    ReplyDelete
  29. சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், - தற்காலத்தில் இவ்வாறு பார்த்து கல்யாணம் நடந்தால் எப்படியிருக்கும். குடும்ப கோர்ட்டுகள் எதற்கு? நன்றாக சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. ரொம்ப சுவாரசியமாகப் போகிறது கதை!

    முன்னாளில் விரும்பிய பெண்ணை இப்போது பார்த்தபின் அவளை மணம் செய்து கொள்ளாதது எவ்வளவு நல்லது என்று தோன்றும்படி நடந்து கொண்டாளா?!!

    ReplyDelete
  31. பேச்சே இல்லாமல் அப்படியே விவரங்களாய்க் கொண்டு போவது எத்தனை சிரமம்.. அதுவும் சுவை குன்றாமல் வாசிப்பின் சுவாரசியம் குறையாமல்..
    கையைக் கொடுங்க.. கோபால்ஜி..

    ReplyDelete
  32. நல்லா எழுதி இருக்கீங்க sir... சொந்த கதையா? சுவாரஷ்யம் தான்... ரவாலாடு, ஜிமிக்கி, கால் கொலுசு... கலக்கல்... தொடருங்க... :)

    ReplyDelete
  33. கதை இடையில் தரிக்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. டப்பென்று நின்றுவிட்டதே. தொடரட்டும் என் விழி காத்திருக்கிறது.

    ReplyDelete
  34. ஒருவரியில் சொல்லிவிடுகிறேன்
    சூப்பர்
    உங்கள் கதையுடன் தொடர்ந்து வருகுறேன் பாஸ்

    ReplyDelete
  35. ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது.


    /// சரியா சொன்னீங்க :)

    அடடா சரியான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே சார்.. அடுத்தது எப்ப.?

    ReplyDelete
  36. ம் ம் பதிவு செம கில்மாவாத்தான் போகுது

    ReplyDelete
  37. அவங்களையும் பார்த்துட்டீங்களா... சார் லேபல் சிறுகதைத்தொடர் என்று போட்டுள்ளீர்கள்.. இது அனுபவமா? கதையா? ;-))

    ReplyDelete
  38. ஐயா... கதை ரொம்ப சுவாரஸ்யம்... சூப்பர்..அற்புதம்.......
    தொடருங்கள். காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  39. தித்திக்கும் நினைவலைகள்.... அப்புறம்.....

    ReplyDelete
  40. ஆளை அப்பிடியே அடிச்சுப் போட்டுட்டீங்க வை.கோ சார்! இரண்டு பதிவுகளையும் ஒருசேரப் பார்த்து உங்கள் அனாயாசமான எழுத்தொட்டத்தில் சொக்கி நிற்கிறேன்.
    எனக்கு உடனே ஒரு ரவாலாடு வேணும்!

    ReplyDelete
  41. இப்படி ஒரு கதையா வாசிக்க கொடுத்து வைக்கணும்

    ReplyDelete
  42. இந்தக் கதையின் இரண்டாம் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    தொடர்ந்து வாருங்கள்.

    உற்சாகம் தாருங்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  43. இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  44. அந்தப் பெண்ணைப் பற்றிய வர்ணனைகளை வாசிக்கும்போது, ஒரு வேளை அவளது புகைப்படத்தை எதிரில் வைத்துக்கொண்டு, பார்த்துப் பார்த்து எழுதியிருப்பீர்களோ என்று கூட தோன்றுகிறது. அவ்வளவு சிரத்தை தெரிகிறது.

    பொதுவாக, வார்த்தைப் பரிமாற்றங்கள் கதையெழுதுபவர்களுக்குக் கைகொடுக்கும். அதுவுமின்றி, சுவாரசியமாகக் கொண்டுபோயிருப்பதிலிருந்து நீங்கள் எழுதுவதில் படா கில்லாடி என்று புரிகிறது. :-)

    //அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது. //

    எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது ஒரு அழகான பெண்ணின் அருகாமை? சூப்பர்!

    அடுத்த பகுதியை வாசிக்க அப்பாலிக்கா வர்றேன்.

    ReplyDelete
  45. // பெரும்பாலும் பெரியோர்களாகப் பார்த்து செய்து வைக்கும் Arranged Marriages மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நம் விருப்பத்தைக் கேட்கவும் மாட்டார்கள். சொல்லவும் நமக்கு மிகவும் கூச்சமாக இருக்கும்.

    ஒரு ஆணும் பெண்ணும் தனியாக சந்திப்பது, பேசுவது, நட்புடன் பழகுவது என்பதெல்லாம் நடக்காத காரியங்கள். அவை ஏதோ கொலைக்குற்றம் போல கருதப்பட்ட காலம் அது. //

    ஏதாவது புத்தகம் அல்லது நோட்ஸ் வாங்க வேண்டுமென்றாலும் யாரேனும் ஒரு பெரியவர் துணையோடுதான் செய்ய வேண்டும். இப்போது செல் போனிலேயே முடித்து விடுகிறார்கள்.

    ReplyDelete
  46. வாங்க திரு. தி. தமிழ் இளங்கோ,ஐயா; வணக்கம்.

    //ஏதாவது புத்தகம் அல்லது நோட்ஸ் வாங்க வேண்டுமென்றாலும் யாரேனும் ஒரு பெரியவர் துணையோடுதான் செய்ய வேண்டும். இப்போது செல் போனிலேயே முடித்து விடுகிறார்கள்.//

    ஆம் ஐயா, எவ்வளவு கட்டுப்பாடுகள் வைத்து பாடாய் படுத்தி விட்டனர், நம்மையும், நம் இளமைக் காலத்தையும்.

    ஆனால் ஒன்று சார், கட்டுப்பாட்டுடன் வளந்த நாம் இன்று எதிலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல தானே!

    இன்றைய செல்ஃபோன் போன்ற எந்த வசதி வாய்ப்புகள் அதிகம் நமக்கு அன்று இல்லாததே, நம்மை நன்கு செம்மைப்படுத்தி, நம் வாழ்க்கையில் நம்மை, பட்டைதீட்டிய வைரமாக இன்று ஜொலிக்க வைத்திருக்கிறதோ, என்று நான் அடிக்கடி எண்ணிப்பார்த்து மகிழ்வதுண்டு.

    ReplyDelete
  47. இரண்டாவது பாகமும் சுவாரஸ்யம் குறையாமல் உள்ளது. உங்கள் கற்பனைக் காதலி பற்றிய வர்ணனை (கொலுசு ஜிமிக்கி) அற்புதம். உங்கள் எழுத்தை படித்துக் கொண்டு வந்தால் ஒரு நல்ல ஓவியர் அப்படியே ஓவியம் வடித்து விடுவார். அந்த அளவுக்கு வர்ணனைகளில் கலக்குகிறீர்கள். உங்கள் கையில் ரவா லாடு, பக்கத்து ஸ்டூலில் மாம்பழ சொம்பில் நீர்...கண் முன்னே காட்சிகள் விரிகின்றன.
    அற்புதம்!

    ReplyDelete
    Replies
    1. Ranjani Narayanan December 15, 2012 12:30 AM

      வாங்கோ ரஞ்ஜு மேடம், வணக்கம்.

      //இரண்டாவது பாகமும் சுவாரஸ்யம் குறையாமல் உள்ளது.//

      ஆஹா, கேட்கவே சுவாரஸ்யமாக உள்ளது. ;) மகிழ்ச்சி.

      //உங்கள் கற்பனைக் காதலி பற்றிய வர்ணனை (கொலுசு ஜிமிக்கி) அற்புதம். உங்கள் எழுத்தை படித்துக் கொண்டு வந்தால் ஒரு நல்ல ஓவியர் அப்படியே ஓவியம் வடித்து விடுவார். அந்த அளவுக்கு வர்ணனைகளில் கலக்குகிறீர்கள்.//

      ஆஹா! தன்யனானேன். என் வர்ணனைகளை நன்கு ஊன்றிப் படித்து, ரஸித்து, ஓவியத்திற்கு பதில் காவியமாக இங்கு பின்னூட்டம் கொடுத்துள்ளது எனக்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்வளிக்கிறது.

      //உங்கள் கையில் ரவா லாடு, பக்கத்து ஸ்டூலில் மாம்பழ சொம்பில் நீர்...கண் முன்னே காட்சிகள் விரிகின்றன.
      அற்புதம்!//

      ஹைய்யா! ரவாலாடு போன்ற இனிமையான கருத்துக்கள்.
      நன்றியோ நன்றிகள்.

      அன்புடன்,
      VGK

      Delete
  48. அன்பின் வை.கோ - தாங்கள் காதலித்த பெண்ணின் பெற்றோர் தங்களைப் பற்றி விசாரித்து - மாப்பிள்ளையாக்கலாமா எனச் சிந்திக்கும் போதே - சுப விவாகப் பிராப்தி ரஸ்து பலிக்காமல் - தங்கள் சொந்தத்தில் பெண் எடுக்க முடிவு செய்த தங்கள் பெற்றோர் - திருமணம் உடனே நடந்து 40 ஆண்டுகள் நலமுடனும் வளமுடனும் இல்லற வாழ்க்கை - பேரன் பேத்திகளோடு மகிழ்வாக வாழும் வாழ்க்கை - அனைத்துச் செயல்களுமே நன்றுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா)January 8, 2013 6:27 AM

      //அன்பின் வை.கோ - தாங்கள் காதலித்த பெண்ணின் பெற்றோர் தங்களைப் பற்றி விசாரித்து - மாப்பிள்ளையாக்கலாமா எனச் சிந்திக்கும் போதே//

      ஆமாம் ஐயா, நிஜமாகவே சிந்தித்து தான் இருந்திருக்கிறார்கள். சிந்தித்தபின் செயல்படவே சற்றே தாமதம் செய்திருக்கிறார்கள்.

      // - சுப விவாகப் பிராப்திரஸ்து பலிக்காமல் -//

      அவர்கள் சொன்ன அது மட்டும் உடனே பலித்து விட்டது ஐயா.... ஆனாலும் அவர்கள் பெற்ற பைங்கிளியுடன் அல்ல.

      //தங்கள் சொந்தத்தில் பெண் எடுக்க முடிவு செய்த தங்கள் பெற்றோர் - திருமணம் உடனே நடந்து//

      எல்லாம் இறைவன் செயல். இன்னாருக்கு இன்னார் என ப்ராப்தம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்களே, அதுவே தான், ஐயா.

      //40 ஆண்டுகள் நலமுடனும் வளமுடனும் இல்லற வாழ்க்கை - பேரன் பேத்திகளோடு மகிழ்வாக வாழும் வாழ்க்கை - அனைத்துச் செயல்களுமே நன்றுதான்//

      எல்லாம் தங்களைப்போன்ற நலம் விரும்பிகளின் வாழ்த்துகளே காரணம் ஐயா.

      //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      இந்த இரண்டாவது பகுதிக்கு தாங்கள் அன்புடன் வருகை தந்து ஏதேதோ அழகான சமாதான வார்த்தைகள் சொல்லியிருப்பினும், ’மறக்க மனம் கூடுதில்லையே’! ;))

      என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  49. என்ன்மோ தனக்கு நடந்தவற்றை ஒருவர் அனுபவித்து அழகாக, எழுதியது போலவே இருக்கிறது.

    //சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது.//

    நாங்கள்ளாம் பிச்சை வாங்கணும்.

    //எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.//

    நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. JAYANTHI RAMANI January 9, 2013 2:22 AM

      வாங்கோ, திருமதி. ஜெயந்தி மேடம்.

      //என்னமோ தனக்கு நடந்தவற்றை ஒருவர் அனுபவித்து அழகாக, எழுதியது போலவே இருக்கிறது.//

      புரிதலுக்கும், விசேஷ ரஸிப்புக்கு நன்றியோ நன்றிகள். ;)

      *****சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது.*****

      //நாங்கள்ளாம் பிச்சை வாங்கணும்.//

      அச்சச்சோ அப்படியெல்லாம் சொல்லக்கூடாதூஊஊஊஊ.

      என் அன்புக்குரிய சகோதரி திருமதி மனோ சுவாமிநாதன் [அடுத்தவாரம் 14.01.2013 முதல் இவர்கள் ஒருவேளை மீண்டும் வலைச்சர ஆசிரியராக வலம் வரக்கூடும்] அவர்களும், தாங்களுமே இந்த இடத்தினை வெகுவாக ரஸித்துப்பாராட்டியுள்ளீர்கள்.

      அதே ரவாலாட்டினை அதே பக்குவத்தில் இப்போது நான் ஒரு டஜன் சாப்பிட்டது போல சந்தோஷமாக உள்ளேன்.

      அதற்கு தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      >>>>>>

      Delete
    2. *****எனக்கு மனைவியாக அமைந்தவள் என்னை விட சற்று கூடுதல் நிறம் என்றும், குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்கு என்றும், கை நிறைய காரியம், வாய் நிறையப் பாட்டு, தலை நிறைய நீண்ட முடி, கிராமத்தில் வளர்ந்த பெண், தூரத்து சொந்தம் வேறு என, என் வீட்டார் பாராட்டி மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இன்று வரை எந்தக்குறையுமின்றி, எங்கள் இல்வாழ்க்கையும் இன்பமாகவே ஓடி வருகிறது.*****

      //நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.//

      மனமார்ந்த வாழ்த்துகளுக்கு எங்கள் இருவரின் நன்றிகளும்.

      பிரியமுள்ள
      கோபு +
      Mrs. கோபு

      Delete
  50. இளமைக் கனவுகள் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் இனிமையானவையே.

    ReplyDelete
  51. என்ன அற்புதமான ரசனையான எழுத்து.படிக்கறவஙகளை கவனம் சிதர விடாம கட்டிப் போடுரீங்க..

    ReplyDelete
  52. மலரும் நினைவுகள் சூப்பரா இருக்கு. அந்த பொண்ணுகலாம் எங்க போனாக என்ன ஆனாக.

    ReplyDelete
  53. அந்தக்கால கட்டுப்பாடுகளே நம்மை செம்மைப்படுத்திஉள்ளன. உண்மைதான். அதுவுமில்லாமல் இப்ப உள்ளது போல பொழுது போக்கு அம்சங்களோ ஃ பலவித ஃபோன் வசதிகளோ இல்லாத காலம். மனதில் ஆசைகள் இருந்தாலும் வெளியே சொல்ல இயலாத தயக்கம். வெளியே தான் சொல்லமுடியாது மனது நினைக்காமலா இருக்கும். அந்த மன உணர்வுகளை எழுத்தில் கொண்டுவருவது உங்களால் மட்டுமே முடியும். இப்ப பாருங்களேன். எதுமே எழுத தெரியாத என்னைப்போனுற பலரையும் இப்படில்லாம் பின்னூட்டம் போடுமளவிற்கு எழுத வச்சுட்டீங்களே.

    ReplyDelete
  54. அந்த காலத்திற்கே கொண்டுசென்று காதலில் திளைக்க வைத்து...மாறிப்போச்சே...அடுத்த திருப்பம்...பொறுப்போம்...

    ReplyDelete
  55. பின்னிட்டீங்க சார்! அருமையான நடை! தொடர்கிறேன்!

    ReplyDelete
  56. சூடான சுவையான நெய் மணக்கும் ரவா லட்டின் இனிமையை நாங்களும் அனுபவிக்க முடிந்தது.... நாம் விரும்பும் பெண்ணைவிட.....நம்மை விரும்பும் பெண் வாழ்க்கை துணைவியாக அமைந்தால். எல்லாம் சுகமே.இளவயதில் மனதில் தோன்றும் உணர்வுகளை நன்றாக விவரித்துள்ளிர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் நிறைவேறாத காதல் என்று ஒன்று இருக்கும்போல. விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்ப வேண்டியதுதான்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... October 19, 2016 at 10:04 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சூடான சுவையான நெய் மணக்கும் ரவா லட்டின் இனிமையை நாங்களும் அனுபவிக்க முடிந்தது....//

      ஆஹா, அதனை இப்போது மீண்டும், அதுவும் தீபாவளி நேரம் நினைவு ப-டு-த்-தி விட்டீர்களே ! :)

      //நாம் விரும்பும் பெண்ணைவிட..... நம்மை விரும்பும் பெண் வாழ்க்கை துணைவியாக அமைந்தால். எல்லாம் சுகமே.//

      மிகவும் கரெக்ட் ! :) அது இப்போது மிகவும் லேட்டாக நமக்குப் புரிந்து என்ன லாபம்? :(

      //இளவயதில் மனதில் தோன்றும் உணர்வுகளை நன்றாக விவரித்துள்ளிர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      //ஒவ்வொருவருக்குள்ளும் நிறைவேறாத காதல் என்று ஒன்று இருக்கும்போல. //

      ஆம். வெளியே சொல்லிக்கொள்ளாவிட்டாலும்கூட, பெரும்பாலானவர்களுக்கு இது மனதின் ஆழத்தில் ஒருபக்கம் பத்திரமாக என்றும் இருக்கத்தான் செய்யும்.

      //விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்ப வேண்டியதுதான்...//

      அதுதான் மிகவும் நல்லது. வேறு வழியே இல்லையே :)

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான நியாயமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  57. Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட அநேக இளைஞர்களின் மனதை படம் எடுத்து காட்டுகிறது.👍👃✌

    - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour in that Store Life during 1965 to 1980)

    Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

    ReplyDelete
  58. Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.
    =====================================================

    அன்பின் கோபு ஸார்,

    சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும்.

    சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..."

    கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன்

    இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
    பரம ரஸிகை

    ReplyDelete
  59. இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

    அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:
    http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete