About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, October 25, 2013

70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... !

2
ஸ்ரீராமஜயம்


 

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. 

மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. 

அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. 

மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் ’டி’ சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.

அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.


 குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயன் படுத்தக்கூடாது. கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. 

வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

oooooOooooo

[குங்குமம் என்ற பெயரில் கடைகளில் விற்பதெல்லாம் குங்குமமே அல்ல. அவைகளெல்லாம் கலப்படம் செய்த சாயப்பவுடர்கள். நெற்றியில் இட்டுக்கொண்டால், அரிப்பும் சரும நோய்களும் ஏற்படக்கூடும். 

காஞ்சி காமாக்ஷி அம்மன் தேவஸ்தானத்தில் ஒரு கிலோ, அரை கிலோ, கால் கிலோ, 100 கிராம், 50 கிராம் அளவுகளில் கெட்டியான ப்ளாஸ்டிக் பாக்கெட்களில் சீல் செய்து ஸ்பெஷல் குங்குமம் விற்கிறார்கள். அவைகள் தான் உண்மையான மஞ்சளில் செய்யப்பட்ட அஸல் குங்குமம். நல்ல திக்கான அரக்குக்கலரில் இருக்கும். தனியாக ஃபாக்டரி வைத்து முறைப்படி தயாரிக்கிறார்கள்.

அதைப்பிரித்து ஒவ்வொரு சிமிட்டா வீதம் அம்பாளுக்கு ஓர் அஷ்டோத்ரம் [108 அர்ச்சனைகள்] செய்தால் போதும். அடுத்த மூன்று நாட்களுக்கு நம் விரல்களும் உள்ளங்கையும் மஞ்சளாகவே இருக்கும்.  

காஞ்சிபுரம் செல்ல வாய்ப்புக் கிடைப்பவர்கள் இந்தக்குங்குமத்தை மறக்காமல் வாங்கி உபயோகித்துக்கொள்ளவும். இது என் சொந்த அனுபவம். - vgk] 


oooooOooooo

வாழை இலையில் உணவு உண்பவர்கள், தங்கள் இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். 

வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாக்ஷம் பெறுவர் என்பது திண்ணம். 

அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. உணவு உண்ணும் போது கிழக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறைகளில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதையும், வடக்கே தலை வைத்துப் படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

oooooOooooo

ஒருசில சம்பவங்கள்.


காஞ்சிப்பெரியவர் புனே அருகில், ஒரு மலையடிவார கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அங்கு திருவெண்காட்டைச் சேர்ந்த ஜெயராமன் வந்தார். 

அவரிடம் பரிவுடன், “இந்த சின்ன கிராமத்திற்கு கூட வந்திருக்கியே. பரம சந்தோஷம்! ஒவ்வொரு நாள் காலை பூஜையின்போது நீ தீட்சிதர் கீர்த்தனைகளைப் பாடு.  நாங்கள் எல்லோரும் கேட்கவேண்டும்” என்றார்.

ஜெயராமனுக்கு பூரிப்பு. 

ஒருநாள் வெள்ளிக் கிழமை பூஜை… பூஜை முடிந்ததும் சுக்கிரவார கீர்த்தனையைப் பாடத்தொடங்கினார் ஜெயராமன். 

அன்று யாருக்கும் பெரியவர் பிரசாதம் கொடுக்கவில்லை. ஜெயராமனுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து சென்னைக்கு கிளம்பிச் செல்ல உத்தரவிட்டார்.

பெரியவர் கண்டிப்பாக சொன்னதும் ஜெயராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரியவர் சொல்வதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் என்று மனதிற்கு தோன்றியது. மறுவார்த்தை பேசாமல் சென்னை சென்றுவிட்டார். 

வீட்டுக்கு வந்ததும் அவரது குருநாதர் மதுரை மணி ஐயர் வீட்டிலிருந்து உடனே வரும்படி அழைப்பு வந்தது.

குருநாதருக்கு ஏதோ அவசரம் என்பதை உணர்ந்த ஜெயராமன் அவரது வீட்டுக்குக்குச் சென்றார். இரண்டு நாட்கள் இரவும் பகலும் குருநாதர் அருகில் இருந்து சேவை செய்தார். மதுரை மணி ஐயர் இறைவனடி சேர்ந்தார். 

தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப்பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது.

[Thanks to  Varagooraan. -  Sage of Kanchi 26/07/13 ]

oooooOoooooகேட்டை-மூட்டை-செவ்வாய்


ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம்.


ஒரு அமாவாஸ்யை திதியன்று, செவ்வாய் கிழமையும், கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. "இன்னைக்கு கேட்டை,மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு, அதை ஒரு தோஷம் என்பார்கள், பரிகாரம் செய்யணும்" என்றார்கள்.


பெரியவா, "அப்பா குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு. லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச்சொல்லு..." என்றார்கள்.


பரிகார ஹோமம் நடந்து கொண்டிருந்தபோது பெரியவா அங்கே வந்து பார்த்தார்கள். 


"கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம், செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?" என்று கேட்டார்கள். எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.


பெரியவாளே சொன்னார்கள்:"அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை, பேச்சு வழக்கில் மூட்டை, மூட்டை என்று மோனை முறியாமல் வந்துடுத்து"தொண்டர்களுக்கெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. "பெரியவா இம்மாதிரி நுட்பமான விஷயங்களை எங்கிருந்து தெரிந்துகொண்டார்கள்?"

[Thanks to Amrutha Vahini 11.09.2013]


oooooOooooo


அம்பாளின் திருவடி தூசு போதும்!

[ மஹாபெரியவா சொன்னது ]சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதையெல்லாம் கொடுக்கும் தெய்வாம்சமுள்ள மணி. 

எதைச் சிந்தித்தாலும் தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர். 


"பிலாஸபர்'ஸ் ஸ்டோன்' என்று வெள்ளைக்கார்கள் ஒன்றைச் சொல்கிறார்கள். அது வேறு. இந்த சிந்தாமணி வேறு. அம்பாளின் பாதத்தூளி (திருவடி தூசு) தரித்திரர்களுக்கு இஷ்டப்பட்ட செல்வத்தையெல்லாம் தருவதில் சிந்தாமணியாக இருக்கிறது. 

ஒரு சிந்தாமணியே, கேட்டதையெல்லாம் கொடுத்துவிடும். கேட்டதற்கும் மேலே எத்தனையோ மடங்கு அம்பாள் பாதத்தூளி கொடுக்குமாதலால், அவளது திருவடியைப் பல சிந்தாமணி கோத்த மாலையாக, செளந்தர்ய லஹரியில் ஆச்சார்யாள் [ஆதி சங்கரர்] அம்பாளைச் சொல்லியிருக்கிறார்.


பிறவியை "ஜன்ம ஜலதி' என்பார்கள். "பிறவிப்பெருங்கடல்' என்று திருவள்ளுவர் சொல்கிறாரே அது தான். "பொய் மாயப் பெருங்கடல்' என்று அப்பர் சுவாமிகள் சொல்கிற சம்ஸார சாகரமும் அது தான். 

அதிலே நாம் முழுகிப் போயிருக்கிறோம். சம்ஸார சாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் நம்மையெல்லாம் வெளியிலே கொண்டுவந்து தூக்கி விடுவதாகவும் அம்பாளின் பாதத்தூளி இருக்கிறது. 

சாதாரண லோக ஜனங்களுக்கு வேண்டிய அறிவு, செல்வம் கொடுப்பது மட்டுமில்லாமல் சம்சார நிவர்த்தியையும் அந்த பாதத்தூளியே கொடுக்கிறது.
oooooOooooo


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

74 comments:

 1. குங்குமம் விளக்கம் மிகவும் அருமை...

  நுட்பமான விஷயம் வியக்க வைத்தது ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. இன்று பெரியவாளின் வாய்மொழியில் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

  குங்குமம் பற்றிய தகவல்கள் அருமை. நான் எப்போதுமே சுகந்தாவின் 4ம் நம்பர் மெரூன் குங்குமம் தான் பயன்படுத்துவதுண்டு...

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட்.. இதுதான் அனைத்திலும் சூப்பர்ர்.. நானும் அதைத்தான் தேடி வாங்குவேன்ன்ன்.

   Delete
 3. பெண்களின் மங்கலப்பொருளான குங்குமம் பற்றி பெண்களே அசந்து போகும் வண்ண‌ம் எழுதி விட்டீர்கள்!

  வாழையிலையின் சிற‌ப்பு, அமர்ந்து எப்படி சாப்பிடுவது நல்லது போன்ற விளக்கவுரைகள் அருமை!

  தங்களுக்கு மனங்கனிந்த நன்றி!!

  ReplyDelete
 4. இனிய வணக்கம் ஐயா..
  குங்குமம் பற்றிய விளக்கம்
  மிகவும் அழகு.
  இவ்வளவு நற்குணம் வாய்ந்த குங்குமத்தை
  நிச்சயம் இட்டுக்கொள்ளவேண்டும்..
  அழகான பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...

  ReplyDelete
 5. அன்புடன் வணக்கங்கள் பல
  உங்கள் ப்ளோக்குக்கு வந்தோம் போனோம் என்பதே இல்லை.
  மேலே பெரியவா படம் ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு
  புதுபுது படங்களாக போடுகிறீர்.நின்று நிதானமாகபார்த்து குருவந்தனம் சொல்லிவிட்டு பிறகு தான் பதிவை படிக்க செல்லவேண்டியுள்ளது
  பதிவிலோ விஷயம்ஏராளம்
  தெரிந்து கொள்ள எராளமான சங்கதிகள்
  நெகிழ்த்து,மகிழ்ந்து,பிறகுதான்வெளியே வரவேண்டியுள்ளது.
  அதுதான் கமெண்ட் போடுவதில் தாமதமாகிறது..
  மீண்டும் என்ன சொல்ல நன்றி என்ற வார்த்தகளை தவிர
  அமாம் நல்ல பதிவுக்கு நன்றி பல.
  அடுத்த பதிவை எதிர் பார்த்தபடி
  விஜி

  ReplyDelete
 6. அன்பின் வை.கோ

  குங்குமப் பொட்டின் மங்கலம் அருமை அருமை. நல்லதொரு பதிவு. குங்குமம் தயாரிக்கும் முறை - எவ்வாறு நெற்றியில் எங்கு இட வேண்டும் என்ற விளக்கம், குங்குமம் இடுவதால் என்ன பலன் - அனைத்தும் அருமையான விளக்கங்களுடன் பதிவில் எழுதப்பட்டது நன்ற், பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
 7. அன்பின் வை.கோ

  உணவு உண்பது எப்படி - எங்கு எவ்வாறு அமர வேண்டும் - இலை எப்படி இடப்பட வேண்டும் - வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் - அனைத்தும் அழகாக விளக்கப் பட்ட பதிவு. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 8. அன்பின் வை.கோ

  மதுரை மணீ ஐயரின் சிஷ்யன் ஜெயராமனை அவசர அவசரமாக் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவா பூனாவில் இருந்து சென்னைக்கு அனுப்பிய காரணம் அருமை. ஜெயராமன் சென்னை சென்று மணீ ஐயரின் இறுதிக் காலத்தில் சேவை செய்வதற்காகவே அனுப்பப்பட்டார் என்பது மனதை நெகிழ வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. அன்பின் வை.கோ

  அம்பாளீன் பாதத்துளி சிந்தாமணியாக விளங்கி = கேட்டது மட்டுமல்ல - அதற்கு மேலும் வழங்கும் சக்தி கொண்டது என்பது விளக்கமாக் எழுதப்பட்ட பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயன் படுத்தக்கூடாது.  கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. ///// மீ த 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:))

  மிக அருமையான தகவல்...

  ReplyDelete
 11. //[குங்குமம் என்ற பெயரில் கடைகளில் விற்பதெல்லாம் குங்குமமே அல்ல. அவைகளெல்லாம் கலப்படம் செய்த சாயப்பவுடர்கள். நெற்றியில் இட்டுக்கொண்டால், அரிப்பும் சரும நோய்களும் ஏற்படக்கூடும். // இது உண்மையிலும் உண்மை.. ஆனா காஞ்சி காமாட்சி அம்மனுக்கு வெளிநாட்டிலிருப்போர் என்ன பண்ணுவதாம்ம்ம்.. குங்குமத்திலும் கலப்படமோ.. ஆண்டவா...

  ReplyDelete
 12. //அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. // என்ன கொடுமை சாமி.

  இன்னுமொன்று அறிந்திருக்கிறேன், வாழை இலையில் சாப்பிட்டு முடித்ததும், இலையை மேல் பக்கத்தை தூக்கி கீழ் பக்கமாக மூடி விட்டு எழுந்தால்ல்.. வயிறு நிரம்பி விட்டது, போதும் என அர்த்தமாம், கீழ் பக்கத்தை தூக்கி மேல் பக்கமாக மூடி விட்டு எழுந்தால், உணவு போதவில்லை எனும் அர்த்தம் வருமாமே...

  ReplyDelete
 13. கேட்டை மூட்டை நல்ல விளக்கம்.. இன்று பதிவு வித்தியாசமான சுவையுடையதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கு. நானும் நிறையத் தகவல் அறிந்து கொண்டேன். வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்பது தெரியும்... ஆனா சாப்பிடக்கூடாதென்பது தெரியாது. இன்னுமொன்று தெற்கே தலைவைத்துப் படுப்பதில் ஏதும் ஆட்சேபனை இருக்கோ கோபு அண்ணன்?. சிலர் அதில் தப்பில்லை என்கினம், சிலர் இல்லை அது காலமானபிந்தான் அப்படி படுக்க வைப்பது என்கினம், எனக்கு ஒரே குழப்பம் இதில்.
  நன்றி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. athira October 25, 2013 at 2:22 AM

   அன்புள்ள அதிரா, வாங்கோ, வணக்கம்.

   //கேட்டை மூட்டை நல்ல விளக்கம்.. இன்று பதிவு வித்தியாசமான சுவையுடையதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கு. நானும் நிறையத் தகவல் அறிந்து கொண்டேன். //

   மிக்க மகிழ்ச்சி அதிரா.

   //வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது என்பது தெரியும்... ஆனா சாப்பிடக்கூடாதென்பது தெரியாது. இன்னுமொன்று தெற்கே தலைவைத்துப் படுப்பதில் ஏதும் ஆட்சேபனை இருக்கோ கோபு அண்ணன்?. சிலர் அதில் தப்பில்லை என்கினம்//

   In fact தெற்கே மட்டுமே தலை வைத்துப்படுப்பது நம் தேக ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது.

   நம் பழமையான சாஸ்திரங்களில் எப்போதோ பலயுகங்களுக்கு முன் சொல்லியுள்ள இந்த விஷயம் விஞ்ஞான-மருத்துவபூர்வமாகவே இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

   கிழக்கேயோ மேற்கேயோ தலை வைத்துப்படுத்தலும் தவறு இல்லை.

   வடக்கே தலை வைத்துப்படுத்தால் BP போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லுகிறார்கள்.

   இன்னும் எவ்வளவோ செயல்கள் கிழக்கு + மேற்கு நோக்கி செய்யக்கூடாதவைகளாக சொல்லப்பட்டுள்ளன.

   இதற்கு மேல் விலாவரியாக இவ்விடத்தில் சிலவற்றை என்னால் சொல்ல இயலாது, அதிரா.

   //சிலர் இல்லை அது காலமானபிந்தான் அப்படி படுக்க வைப்பது என்கினம், எனக்கு ஒரே குழப்பம் இதில். //

   உயிரோடு இருந்தாலும், உயிர்போன சடலமாகவே இருந்தாலும் தெற்கு திசையில் மட்டுமே தலையை வைக்க வேண்டும்.

   உயிரோடு இருந்தாலாவது தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற மூன்று ALTERNATIVE DIRECTIONS உள்ளன.

   ஆனால் உயிர் பிரிந்தபின் கட்டாயமாக உடனடியாக தெற்கு நோக்கி மட்டுமே தலை இருக்குமாறு மாற்றிவிட வேண்டும்.

   Delete
  2. உடன் பதிலுக்கு மிக்க நன்றி. வெளிநாட்டு வீடுகளில் திசைகளே கண்டு பிடிக்க முடியாது. நம் வீட்டில் சூரியன் ஒரு மூலையில் உதித்து எதிர் மூலையில் மறையும்... அப்போ எதைக் கிழக்கு என்பதில் குழப்பம். ஆனா யூலை ஆகஸ்ட் மாத்தத்தில் மட்டும் கொஞ்சம் இடம் மாறி உதிக்கும்.. அதை வைத்தே கணக்கெடுப்போம். இருப்பினும் எல்லாம் ஒரு அண்ணளவுக் கணக்குத்தான்.

   Delete
  3. காந்த ஊசி எப்போதும் வடக்கு தெற்காகவே காட்டும்..
   காந்தப்புலம் வடதிசையில் அதிகம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படவும் ,துர்கனவுகள் வந்தும் உடல் நலனை சீர்குலைத்துவிடும் எனவே வடக்கே தலை வைக்க வேண்டாம் என்பார்கள்..
   விநாயகர் வடக்கே தலை வைத்ததால் தலையையே இழந்து ஆனைதலை பொருத்தியதாக புராணம் சொல்லும்..!

   Delete
 14. வாழை இலை எப்படி போடுவது எப்படி என்பது தெரியாம கேட்டு கேட்டுதான் போடுவேன்... இப்ப புரிஞ்சிகிட்டேன்.
  " குங்கும பொட்டின் மங்கலம்.." - சிறப்பான தகவல்கள்..! நன்றி!

  ReplyDelete
 15. Very informative post about kungumam,divine read

  ReplyDelete
 16. குங்குமத்தின் மகிமை,பெருமைகள் விளக்கமாகவும் அழகாகவும் அமைந்திருக்கிரது.
  பெரியவாளின் விளக்கம் கேட்டை,மூட்டை,செவ்வாய்க் கிழமை.
  மூட்டம் என்பது அமாவாஸை..
  சிந்தாமணியின் பெயர் விளக்கம்..
  வாழை இலையின் சிறப்பு.
  பலவிஷயங்கள் அடங்கிய சிறப்புப் பதிவாகத் தோன்றியதெனக்கு. அன்புடன்

  ReplyDelete
 17. கும்குமத்தின் மகிமை
  மிக அருமை
  M.S அம்மாவின் மங்கள கும்குமம் திகழும் உருவமும், மங்கள விளக்கு ஏற்றும் நளினமும் இன்று முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
  அப்புறம் வாழை இலை விருந்து., சாப்பிடாமல் போக மனம் வரவில்லை.
  நிறைவான மங்கலமான பதிவு
  நன்றி
  விஜி

  ReplyDelete
 18. குங்குமம் எப்படி நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும் என்றும்..
  எதனால் இடுகிறோம் என்றும்... குங்குமம் நெற்றியில் இட்டுக்கொள்வதால் என்ன நன்மை என்றும் மிக அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா.

  மதுரைக்கு எப்ப சென்றாலும் அங்கு கோயிலில் இருந்து பெறும் குங்குமத்தை நாங்கள் அனைவருமே விரும்பி இட்டுக்கொள்வோம்.

  ஸ்டிக்கர் பொட்டு சருமத்தை அரித்துவிடும், ஆமாம். நெற்றியில் சிறிது நேரம் தான் இருக்கும் ஒட்டும் தன்மை இருக்கும் வரை.

  வாழை இலை எப்படி எந்த பக்கமாக வைத்து உண்ண வேண்டும் என்றும், எதற்காக என்பதையும் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்பதும் மிக அருமையாக விளக்கி சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா. அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 19. மஹா பெரியவா அறியாத சூக்‌ஷுமம் உண்டோ? இறுதி காலத்தில் குருநாதர் உடன் இருந்து சேவைப்புரியும் அற்புதமான பாக்கியத்தை அருளத்தான் உடனே செல்லச்சொல்லி இருக்கிறார். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர..

  ReplyDelete
 20. கேட்டை மூட்டை செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யனும்.

  பெரியவா மிக அருமையாக மூட்டை இல்லை மூட்டம் என்றுச்சொல்லி அதற்கான விளக்கமும் பிரமாதமாக சொல்லி இருக்கிறார். அன்பு நன்றிகள் அண்ணா பகிர்வுக்கு. அரிய தகவல்கள் தரீங்க.

  ReplyDelete
 21. சிந்தாமணி கேட்பதெல்லாம் கொடுக்கும் அற்புதம் என்றுச்சொல்லி. அம்பாளின் பாதத்தூளியோ நமக்கெல்லாம் கிடைத்த அற்புதமான செல்வம் என்றுச்சொல்லி பகிர்ந்த அத்தனையும் மிக அருமை அண்ணா.. பகிர்வுக்கு அன்பு நன்றிகள். அறியாத நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் பகிர்வில் அறிய முடிகிறது.

  ReplyDelete
 22. மங்கல குங்கும பொட்டின் குணநலன்கள், அணிந்து கொண்டால் கிடைக்கும் நன்மைகள் விளக்கம் அருமை.
  வாழை இலையில் தினம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், அவை எப்படி போடுவது போன்ற விளக்கங்கள் அருமை.
  எந்த திசையில் அமர்ந்து உணவு உண்பது என்றும், படுக்கும் போது எந்த திசையில் படுப்பது என்ற முறைகளும் அழகான விளக்கங்கள்.
  //தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப்பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது.//

  குருவின் தீர்க்க தரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  //கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்?
  குருவின் அற்புத விளக்கம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

  //அம்பாளின் பாதத்தூளி (திருவடி தூசு) தரித்திரர்களுக்கு இஷ்டப்பட்ட செல்வத்தையெல்லாம் தருவதில் சிந்தாமணியாக இருக்கிறது.

  ஒரு சிந்தாமணியே, கேட்டதையெல்லாம் கொடுத்துவிடும்.//
  அம்பாளின் பாதத்துளி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும்!
  அற்புதமான பதிவு.
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
  நன்றிகள்.
  ReplyDelete

 23. மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.

  வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மங்களகரமான குங்மப் பகிர்வுகள்..

  ReplyDelete
 24. ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம்.
  அருமையான அனுபவப்பகிர்வுகள்.. தினமும் காலண்டரைப்பார்த்து நாள், கிழமை ,திதி யோகம் கரணம் போன்றவற்றை அறியும் பழ்க்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் ..!

  ReplyDelete
 25. பிறவியை "ஜன்ம ஜலதி' என்பார்கள். "பிறவிப்பெருங்கடல்' என்று திருவள்ளுவர் சொல்கிறாரே அது தான். "பொய் மாயப் பெருங்கடல்' என்று அப்பர் சுவாமிகள் சொல்கிற சம்ஸார சாகரமும் அது தான்.

  அம்பாளின் பாதத்துளிகளே தோணியாகி சம்சார சாகரத்தை கடக்க துணைபுரிவதை அருமையாக விளக்கிய அமுதப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 26. சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதையெல்லாம் கொடுக்கும் தெய்வாம்சமுள்ள மணி.

  எதைச் சிந்தித்தாலும் தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர்.

  கற்பக விருட்சமாக , காம தேனுவாக சிந்திப்பதை சித்திக்கின்ற சிந்தாமணி பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 27. வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதையும், வடக்கே தலை வைத்துப் படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

  முற்காலத்தில் உயிர் துறக்க எண்ணுபவர்கள் வடக்கிருத்தல் என்னும் முறையில் பிராணத்தியாகம் செய்வார்கள்..!
  வடக்கு நோக்கி உன்ணும் உணவு உடலுக்கு போஷாக்கு தராமல் க்ஷீணிக்கச்செய்யும் ..!

  ReplyDelete
 28. "அது மூட்டை இல்லை; மூட்டம். மூட்டம் என்றால் அமாவாஸ்யை, பேச்சு வழக்கில் மூட்டை, மூட்டை என்று மோனை முறியாமல் வந்துடுத்து"

  நுட்பமான விஷயங்களை தெளிவாக்கிய அருமையான பகிர்வுகள்..!

  ReplyDelete
 29. குங்குமத்தை வலது கையில் வாங்கி கை மாற்றாமல் வலது மோதிர விரலால் நெற்றியில் இட்டுக் கொள்வது -----சற்று சிரமமாக இருக்கும்போல் இருக்கே. மதுரை தாழம்பூ குங்குமம் பெயர் பெற்றது. இப்போதெல்லாம் பெண்கள் மாடர்ன் ட்ரெஸ் அணிந்தால் குங்குமமோ அல்லது வேறெதுவோ நெற்றிக்கு இட்டுக் கொள்வதில்லையே.

  ReplyDelete
 30. அய்யாவிற்கு வணக்கம்..
  காஞ்சி காமாட்சி குங்குமம், வாலை இலை போடும் முறை, காஞ்சி பெரியாவாவின் அற்புதம் என அனைத்தையும் கதம்பமாகக் கொடுத்து கலக்கி விட்டீர்கள் அய்யா. நல்ல பகிர்வுக்கு நன்றிகள் அய்யா...

  ReplyDelete
 31. எத்தனை எத்தனை விஷயங்கள்...... நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.....

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 32. குங்குமம் மகிமையும் விளக்கமும்... மிகவும் சிறப்பான, உதவியான விஷயம்!

  ReplyDelete
 33. ஒவ்வொன்றையும் நுணுக்கமாய் சொல்லித் தரும் பெரியவாளின் கருணை மழையில் உங்களால் ஆனந்தமாய் நனைகிறோம்

  ReplyDelete
 34. குங்குமம் பற்றிய செய்திகள் அருமை. காஞ்சிபுரம் குங்கும மகிமை கேள்விப்பட்டிருக்கிறேன்.
  வாழை இலையில் சாப்பிடுவதும் ரொம்பவும் நல்லது. (தலைமுடி கருப்பாகவே இருக்கும் என்று சொல்லி பெண்மணிகளைக் கவர்ந்து விட்டீர்கள் :)

  குருநாதரின் சேவையை சிஷ்யனுக்கு கிடைக்க வைத்தவரை என்ன சொல்லி புகழ முடியும்? சின்ன சின்ன விஷயங்களும் தெரிந்து வைத்திருப்பதால் தான் அவர் மஹா பெரியவராக இருக்கிறார்!

  ReplyDelete
 35. wow.. super.. great informations.. thxs for sharing..

  ReplyDelete

 36. // குங்குமம் என்ற பெயரில் கடைகளில் விற்பதெல்லாம் குங்குமமே அல்ல. அவைகளெல்லாம் கலப்படம் செய்த சாயப்பவுடர்கள். நெற்றியில் இட்டுக்கொண்டால், அரிப்பும் சரும நோய்களும் ஏற்படக்கூடும். //

  குங்குமத்திலும் கலப்படம் செய்யும் அந்த புண்ணியவான்களை என்னவென்று சொல்வது?

  தலை வாழை இலை போட்டு சாப்பிடுவதே மனதிற்குள் ஒருவித மகிழ்ச்சிதான். வாழையிலையில் சாப்பிடும் .முறையை நன்றாகவே விளக்கம் தந்தீர்கள்.

  திருவெண்காடு ஜெயராமன், கேட்டை முட்டை செவ்வாய், பிறவிப் பெருங்கடல் – என்று நிறைய சுவையான தகவல்கள்.

  ReplyDelete
 37. மாகாபெரியவர் பற்றிய அழகிய முத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா.

  ReplyDelete
 38. குங்குமத்தின் அருமை பெருமைகளை
  அழகாக விளக்கியுள்ளீர்கள். அனைவரும்
  அறிந்து பயன்படும் பொருட்டு.

  திசைகளின் முக்கியத்துவத்தையும்.
  வாழ்வில் அவைகள் நம்மை பாதிக்கும்
  விஷயங்களையும் தெளிவாக கூறியுள்ளீர்கள்.

  வழக்கம்போல் பெரியவாவின் அறிவுரைகள்
  நம் மனதில் உள்ள அனேக ஐயங்களை
  தீர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது

  தேர்ந்தெடுத்து படங்களை இடையிடையே
  பொருத்தியுள்ளது நன்றாக உள்ளது

  பதிவிற்கு நன்றிvgk

  ReplyDelete
 39. குங்குமத்தின் மகிமையும்,வாழையிலையின் மகத்துவத்தையும்
  மிக அழகாக எடுத்து சொல்லியிருக்கிரீர்கள். பற்பல விஷயங்கள்
  தெரிந்து கொண்டேன். . மஹா பெரியவரின் எண்ணத்தை நாம் அவ்வளவு எளிதாக தெரிந்து கொள்ள முடியாது ஆனால் எல்லாவற்றிற்கும் அர்த்தம் உண்டு என்பது விளக்கமானது.
  அருமையான பகிர்வு.
  வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 40. சிறப்பான ஆக்கத்தைக் கண்டும் மகிழ்ந்தேன்
  என் தளத்தில் இட்ட கருத்துக்கள் கண்டும்
  பேரானந்தம் அடைந்தேன் ஐயா .........

  வேருக்கேற்ற ஊட்டமளித்து
  விரும்பும் வகையில் காற்றில் கலந்து
  தூறும் மழையே உனைக் கண்டும்
  துளிர்க்காதிருந்தால் நான் மரமோ ...!!!!!

  ஏழைக் குடிசையை வாழவைக்கும்
  இதயம் தொட்ட மழையேயுன்
  பாசப் பரப்பில் மிதக்கயிலே
  பகிரும் நற் பொருளுக்கிணை ஏது ?...

  வாச மலர்கள் நிதம் பூக்கும் உன்றன்
  வாழ்த்தே அதற்கும் உரமாகும்
  நேசக் கரத்தால் உன் கருத்தை
  நித்தம் அளித்தால் அது போதும் ....

  காசும் பொருளும் கவிதைக்குக்
  கண்ணாய் என்றும் அமர்வதில்லை
  இது போல் பேசும் வார்த்தைகள் அது தானே
  பெரிதும் துணையாய் நிற்கிறது .

  கோபால கிருஷ்ணன் ஐயா இதை விட
  நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
  இன்று என்னிடத்தில் .மிகவும் நான் இன்று
  உங்களால் மகிழ்ச்சியடைந்தேன் .

  ReplyDelete
 41. விபூதியே கலப்படம் ஆகிப்போனது. தவிரவும் இன்றைய பெண்கள் பெரும்பாலானோர் - மஞ்சளையும் குங்குமத்தையும் கூந்தலுக்கு மலர் சூடுவதையும் கூட - தவிர்த்து விட்டார்கள். ஆனால் மங்கலத்தை மட்டும் விரும்புகின்றார்கள்.

  இந்நிலையில் - காஞ்சியில் தரமான குங்குமம் கிடைக்கும் விவரத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!.. இதேபோல மதுரை மீனாட்சியம்மன் சந்நிதியிலும் தரமான குங்குமமே!..

  பரமாச்சார்ய ஸ்வாமிகளின் திருவடிகள் போற்றி!..

  ReplyDelete
 42. பல நல்ல தகவல்களை அருமையாக விளக்கமாக பகிர்ந்ததற்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 43. குங்குமம், வாழையிலை,
  குருநாதர் இறுதிக்காலச் சேவை,
  கேட்டை முட்டம், சிந்தாமணி,
  அம்பாள் பாதத்துளி என்று
  பல விடயங்கள் தொட்டுள்ளீர்களய்யா.
  மிக்க நன்றி.
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 44. பிரமாதம்! அமுத மழையில் நனைந்தேன்!!

  ReplyDelete
 45. எப்போதும்போல் பெரியவா பற்றிப் படித்ததும் சிலிர்த்துப் போச்சு.

  ReplyDelete
 46. குங்குமம் பற்றிய தகவல்களுக்கு நன்றி. மதுரை மீனாக்ஷி கோயிலிலும், திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலிலும் இதே போல் குங்குமம் தான் பிரசாதமாகத் தரப்படும். மதுரைக் குங்குமத்துக்குத் தாழம்பூ வாசனை தனியாகச் சேர்க்கப்பட்டிருக்கும். தாழம்பூக் குங்குமம் என்றே பெயர்.

  ஶ்ரீரங்கம் வந்ததிலே இருந்து வாழை இலைச் சாப்பாடு தான் அநேகமாய். என்றாவது ஒரு நாள் சாப்பாடுத் தட்டு! :))))

  திருவெண்காடு ஜெயராமன் பற்றிய செய்தி படிச்சிருக்கேன். கேட்டை, மூட்டை படிச்சதில்லை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 47. திரு துரை செல்வராஜு சொல்லி இருப்பது சரியே. இப்போதெல்லாம் பெண்கள் தலைக்குப் பூச்சூடுவதையும் விட்டு விட்டார்கள். சில நாட்கள் முன்னர் நவராத்திரியில் எங்க வீட்டுக்கு வந்த ஒரு நாற்பது வயதுப் பெண்ணிற்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுத்த போது அந்தப் பெண்மணி பூவைத் தவிர்க்கச் சொன்னதோடு குங்குமத்தை விரலால் எடுத்துக் கொண்டு உள்ளங்கையில் தடவி விட்டுக் கையைத் தட்டி விட்டுக் கொண்டார். வெற்றிலை, பாக்கையும் நாசூக்காக விரல் நுனிகளால் எடுத்துக் கொண்டார். :(((( பார்க்கவே வேடிக்கையாக இருந்தது.

  ReplyDelete
 48. குங்குமம் குறித்த தகவல்கள்! வாழையிலையில் எப்படி சாப்பிட வேண்டும் சிந்தாமணியின் பலன்கள்! பெரியவாளின் ஞான திருஷ்டி! அனைத்தும் சிறப்பு! மிக்க நன்றி!

  ReplyDelete
 49. குங்குமம் நல்லவிஷயம் ஆனால் இப்போதெல்லாம் ஸ்டிக்கர் ஆனாலும் உச்சிவகிட்டிற்க்கு இட்டுகொள்வது சில்பெண்மணிகள் அனேகமாக பொட்டுவைப்பதும் குறைந்துகொண்டே வருவதோடு பின்னல்கலையே காணோம் எல்லாம் தலைவிரிகோலம் வாழைஇலை சின்னவயசுலேஇருந்து சாப்பிட்டுஇருக்கனும் தலை நரைத்தபின் சாப்பிடாஆரம்பித்தால்கருக்காது

  ReplyDelete
 50. வழக்கம்போல் மஹாபெரியவாளின் கருத்துக்கள் விளக்கங்கள் மிகப்பிரமாதம் பகிர்வுக்கு நன்றி வழக்கம்போல்

  ReplyDelete
 51. குங்குமம் பற்றிய செய்திகள் , வாழை இலைச் செய்திகள் அனைத்தும் அருமை ஐயா

  ReplyDelete
 52. நுட்பமான விஷயங்களுடன் கூடிய அருமையான பதிவு! பகிர்விற்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 53. குங்குமம் பற்றிய மங்கல பொருளுக்கும்+வாழையிலை பற்றிய விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா!!

  ReplyDelete
 54. பல புதிய தகவல்கள். குங்குமம் வைக்கும் முறை, கேட்டை, மூட்டையில் வரும் மூட்டையின் விளக்கம், சிந்தாமணியின் குணம் போன்ற பல இதுவரை அறியாதவை. பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 55. குங்குமம், வாழையிலை உணவு பற்றிய அருமையான விளக்கங்கள். .

  ReplyDelete
 56. Very useful information on Kungumam and Banana leaf. Thanks a lot for sharing this with us. Awaiting for more of your blogs.

  ReplyDelete
 57. vazaillai usefulmessage tamil cultural tradision

  ReplyDelete
 58. vazaillai usefulmessage tamil cultural tradision

  ReplyDelete
 59. சாப்பிடும் சமாச்சாரத்தில் இவ்வளவு இருக்கிறதா?

  ReplyDelete
 60. //தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப்பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது.//

  பெரியவா முக்காலமும் அறிந்த ஞானியாயிற்றே.

  ReplyDelete
 61. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. - இது பழமொழி.

  ஆனா கோபு அண்ணா ஒரே பதிவிலே ஏகப்பட்ட விஷயத்தை கொடுத்திருக்கார்.

  //[குங்குமம் என்ற பெயரில் கடைகளில் விற்பதெல்லாம் குங்குமமே அல்ல. அவைகளெல்லாம் கலப்படம் செய்த சாயப்பவுடர்கள். நெற்றியில் இட்டுக்கொண்டால், அரிப்பும் சரும நோய்களும் ஏற்படக்கூடும். //

  சின்ன வயசுல மைலாப்பூர் வித்யா மஞ்சள் குங்குமம் தயாரிக்கறவா வீட்டுலதான் நாங்க விளையாடுவோம். அவா எங்க குடும்ப நண்பர். அவங்க வீட்டுக்குள்ள நுழைந்ததுமே மஞ்சள், குங்குமத்தின் வாசனை மூக்கைத் துளைக்கும்.

  ம். இப்ப அதெல்லாம் கனவா போயிடுத்து.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //சின்ன வயசுல மைலாப்பூர் வித்யா மஞ்சள் குங்குமம் தயாரிக்கறவா வீட்டுலதான் நாங்க விளையாடுவோம்.//

   ஆஹா, சின்னக்குழந்தையாக விளையாடும் ஜெயந்தியைக் கற்பனை செய்து பார்த்தேன். :)

   //அவா எங்க குடும்ப நண்பர். அவங்க வீட்டுக்குள்ள நுழைந்ததுமே மஞ்சள், குங்குமத்தின் வாசனை மூக்கைத் துளைக்கும். //

   தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும்கூட மிகவும் வாசனையுடன் மூக்கைத் துளைப்பதாகவே உள்ளது, இங்கே. :)

   >>>>>

   Delete
 62. // தன் குருநாதரின் இறுதிக்காலத்தில், அவருக்கு சேவை செய்யும் பாக்கியத்தை அளிப்பதற்காகவே பெரியவர் தன்னை சென்னை அனுப்பினார் என்பதை அறிந்த ஜெயராமனின் உள்ளம் உருகியது.//

  உருகாதா உள்ளம் உருகாதா
  மகா பெரியவா கருணையால் உள்ளம் உருகாதா

  // தொண்டர்களுக்கெல்லாமே ஆச்சரியமாக இருந்தது. "பெரியவா இம்மாதிரி நுட்பமான விஷயங்களை எங்கிருந்து தெரிந்துகொண்டார்கள்?"//

  அவருக்குத் தெரியாதது எதுவும் இல்லை.

  // சாதாரண லோக ஜனங்களுக்கு வேண்டிய அறிவு, செல்வம் கொடுப்பது மட்டுமில்லாமல் சம்சார நிவர்த்தியையும் அந்த பாதத்தூளியே கொடுக்கிறது.//

  அம்பாளின் பாதார விந்தமே சரணம், சரணம்.

  நன்றியுடனும்,
  நெகிழ்ச்சியுடனும்

  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   அம்பாளின் பாதார விந்தமே சரணம், சரணம். :)))))

   பிரியமுள்ள கோபு

   Delete
 63. தன்னோட குருநாதரோட கடசி நேரத்துல அவங்க பக்கத்தால இருந்துகிடதா அனுப்பிச்சாங்களா.

  ReplyDelete
 64. குங்கும பொட்டின் மங்கலம் ஒவ்வொருவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் குரு நாதரின் கடைசி நேரத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும் என்ற தீர்க்க தரிசனம். பெரியவா முக்காலமும் அறிந்த ஞானி ஆயிற்றே.

  ReplyDelete
 65. குங்குமத்தின் சிறப்பு...அதனை வைத்துக்கொள்ள வேண்டிய முறை. பயனுள்ள பதிவு..ஆனால் பல நேரங்களில் ஒரிஜினல் குங்கும கிடைப்பதில்லை. பலபெண்கள் நெற்றியில் ஸ்டிக்கர்..மாற்றிக்கொள்பவர்களுக்கு நலம்,

  ReplyDelete
 66. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (15.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/443091772860189/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 67. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (16.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=444205526082147

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 68. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (17.07.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=445192592650107

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete